Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 8.1

எப்படியோ அவனோடு பிடிவாதம் பிடித்து வேறொரு அறையை வாங்கி வந்தாயிற்று. ஒரு வாரம் பொறுத்திருக்குமாறு கூறியவன், அதற்குள் அந்த அறையை அவள் விருப்பத்திற்கிணங்க மாற்றி தருவதாக, உறுதி கூறி வேறொரு அறையைக் காட்டினான்.

அவன் முன்பு காட்டியதை விட, மிகவும் சிறிய அறைதான் அது. ஆனாலும் ஒரு இதம் அவ்விடத்தில். கூட்டத்தினோடே இருந்து பழகி விட்டவளுக்கு, அமைதி கசந்தாலும் உறவென கூற சில மனிதர்கள்.

அறையின் ஜன்னல் கதவைத் திறந்து வைத்து, காற்றோட்டமாய் நின்று கண்களை மூடினாள். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அப்படியே ஏற்றுக்கொண்டாலும் அந்த சூழலில் பொருந்தி வாழ்வது சவாலான காரியம்.

அதே நிலைதான் ஆரோஹிக்கும். அனைத்து சூழலிலும் பொருந்தி போனாலும், ஒரு மாதம் கூட பழகியிராத மக்களோடு ஒன்றிவிட்டது போல் நடிக்கதான் முடிந்தது.



Advertisement

ஆனால் ஏனோ திருமணம் முடிந்தபிறகு ஒரு மகிழ்ச்சி ஊற்று உள்ளத்தினுள். அந்நியமாய் தெரிந்த மக்கள் உறவாய், உயிராய் ஆன ஆர்ப்பரிப்பு.

அதிலும் அண்ணி, அண்ணி என அவளை பெரிய பெண்ணாய், உயர்ந்த பதவியில் வைத்திருக்கும் சித்தார்த், ரோஹி என மகளை போல் உரிமையாய் விரட்டி கெஞ்சி கொஞ்சும் மாமியார், அக்கறையை பார்வையாலே வழி நெடுக தொடர விடும் மாமனார், அனைத்திற்கும் மேல் எந்நேரமும் சிரிப்போடு ரசிப்பைக் கலந்து, அவளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்து கொடுத்து, அதில் நிம்மதியடையும் அவளவன், வாழ்க்கை இனித்தது…

புதிய உறவாக மூன்று மனிதர்களை சம்பாதித்துவிட்டேன் என்கிற பேரின்பம் அவளுள். சுவற்றில் கண் மூடி சாய்ந்து மகிழ்ந்தவள் கண்களில் மகிழ்ச்சியின் துளிகள். இந்த அன்பு நிலைக்க வேண்டும் என்கிற வேண்டுதல், கண்ணீர் முத்துக்களாய் கன்னம் வருடியது.

Advertisement

நேற்று மனைவி உணவை ஊட்ட ஏங்கிய காரணத்தினால், அதற்கும் சேர்த்து ஒரு மணி நேரம் கூடுதலாக உடற்பயிற்சி செய்ய வேண்டிய சூழல் அஸ்வினுக்கு.

Advertisement

அவன் எப்பொழுதும் செல்லும் ஜிம் சென்று வந்தவன், வீட்டின் வெளியே சகோதரன் வாகனம் நிற்பதைக் கவனித்து உள்ளே வந்தவன், அங்கு நிலவிய அசாத்திய அமைதியில் சித்தார்த்தை அழைத்துப் பார்த்து பதில் வராமல் போக, முதலில் குளித்து வந்து ஆரோஹியை அவள் அறையில் தேடினான்.

எங்கும் இல்லாது போக தோட்டத்திற்கு வந்து பார்க்க, முன் வாயிலின் பக்கம் சிரிப்பு சத்தம் கேட்க, அங்கே நடந்தவன் காதில் ஆரோஹி, சித்தார்த் பேசியது கேட்டது.

ஏதோ தீவிரமாக மிதிவண்டியைப் பற்றி பேசினர், இல்லை இல்லை வாக்குவாதம் நடந்தது. பேசிக்கொண்டே தெருவில் நின்று பேச வாக்குவாதம் முத்தியது.

Advertisement

“ஆரோஹி…” அஸ்வின் குரல் கேட்டு இருவரும் திரும்ப, கடுகடுவென நின்றிருந்தான் அவன்.

“எதுக்குப்பா இவர் இப்படி முறைக்கிறார்?” சித்தார்த்திடம் கிசுகிசுப்பாக கேட்டாள்.

“அவன் முகமே அப்படி தான்…” சித்தார்த் பதிலில் ஆரோஹிக்கு சிரிப்பு வர, வாயை மூடி அவனைப் பார்த்து சிரித்தாள்.

“ரொம்ப சிரிக்காத, உள்ள வா.” அவளை அஸ்வின் அழைத்த தொனியில் பயந்து இருவரும் உள்ளே வர, சித்தார்த்தை புடிபுடி என புடித்துவிட்டான்.

அவன் திட்டியதில் ஆரோஹி அமைதியாக வீட்டினுள் சென்று ஒளிந்துகொண்டாள்.

“ஏன்டா வெளிய கூட்டிட்டு போன? அதுவும் நீயும் அவ கூடயே நின்னு… வெளிய மட்டும் விஷயம் தெரிஞ்சது அவ்ளோ தான். உன்னை உண்டில்லைனு பண்ணிடுவேன்டா.” அழுத்தமான எச்சரிக்கை கொடுத்தே, அஸ்வின் சிறியவனோடு வீட்டிற்கு கிளம்பினான்.

திவ்யாதான் விருந்து கொடுப்பதாக இருக்க, அவள் வீட்டிற்கு அஸ்வின் வர முடியாத காரணத்தால், அனைத்தையும் அஸ்வின் பெற்றோர் வீட்டில் ஏற்பாடாகியது.

எல்லாமே திவ்யாவின் பார்வையில் தயாராக, மதிய உணவு தன்னுடைய டயட்டிற்கு தீங்கு விளைவித்தாலும், அவளது உழைப்பிற்கு தலைவணங்கி அனைத்திலும் சிறிதளவு எடுத்துக்கொண்டான். அவனுக்கு மாறாக அவன் மனைவியோ எதையும் விட்டு வைக்கவில்லை.

போதாததிற்கு எதை எதோடு வைத்து சாப்பிட வேண்டுமென, சித்தார்த்துக்கு வகுப்பு வேறு. உணவிற்கு பிறகு அரட்டை களைகட்ட, இரவானது கூட எவர் கண்ணிலும் படவில்லை. அந்நாள் மிகவும் இனிமையாக ஓடியது.

வீட்டை நெருங்கிய சமயம், “அச்சோ! சொல்லவே மறந்துட்டேன், என்னோட ஸ்கூட்டியை எடுத்துட்டு வந்துடலாமா?”

“ஏன் கார் இருக்கே வீட்டுல?”

“ஓட்ட தெரியாதே…”

“சைக்கிள் வாங்கி தரவா?” உடனே முகம் பிரகாசிக்க சரி என்றாள் தலையை ஆட்டி.

“தெரியல, அந்த சைக்கிள் மேல ஒரு பேராசை. ஸ்கூல் படிக்கிறப்போ எல்லாரும் சைக்கிள்ல வர்றத பாக்க ஆசையா இருக்கும், நாமளும் ஓட்டணும்னு. அப்புறம் காலேஜ், ஹாஸ்டல் வாழ்க்கை. இப்ப வேலைக்கு போய் கைல காசு இருந்தாலும் இதுல போக முடியாதுல? ஆசை ஆசையாவே போய்டுச்சு.” சிரிப்போடு தோளை உலுக்கி அவள் கூறிவிட்டாள்.

அஸ்வினால் தான் அவளது அந்த சிறு வருத்தத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை. சைக்கிள் எல்லாம் அவனும் சிறிய வயதில் அதிகம் பயன்படுத்தியதில்லை. இருசக்கர வாகனத்தின் மீதே ஈர்ப்பு அவனுக்கு.

அதுவும் வேகமாக கிடைத்துவிட, சைக்கிள் என்ற ஒன்றை அதிகம் யோசித்தது கூட இல்லை. இதெல்லாம் கூடவா சிலருக்கு கனவாக இருக்கும்? இருக்கிறதே!

எது எது கிடைக்க வேண்டிய வயதில் கிடைக்க வேண்டுமோ, அப்பொழுது அது கிடைத்தால் தான் அதனை முழுதாக அனுபவிக்கவும் முடியும். வயதிருந்த நேரத்தில் பணம் இல்லை, பணமிருக்கும் நேரத்தில் வயதில்லை.

சிந்தனைகளுக்கு கடிவாளம் போட்டு, “குழந்தையா இருக்க போ…”அவளைப் பார்த்தவன், வாகனத்தை வீட்டினுள் நிறுத்தி அவள் தலையில் கை வைத்து மெல்ல ஆட்டிவிட்டு, வாகனத்திலிருந்து கீழே இறங்க, அவனது அச்செயலில் சின்ன சிரிப்போடு அவனையே தொடர்ந்தது அவள் விழிகள்.

‘என்ன இவன் இத்தனை இலகுவாக தன்னோடு பழகுகிறான்? இவனுக்கு காதல் அது இது என தோழி கூறினாளே…’ யோசனையோடு மதிவர்தினி கொடுத்த உணவை எடுத்து, குளிர்சாதன பெட்டியில் வைத்து உறங்க சென்றுவிட்டாள்.

மறுநாள் வீட்டையே சுற்றி காட்டிய அஸ்வின், இறுதியாக மனைவியிடம் திட்டு வாங்கியது தான் மிச்சம்.

எந்த பொருளைத் தொட்டாலும் இதன் மதிப்பு இத்தனை லட்சம், இத்தனை ஆயிரங்கள், இத்தனை கோடி என அடுக்குபவனிடம், வறுமையின் அறிக்கையையே வாசித்துவிடுவாள்.

“எம்மா கேப்டன், போதும் ம்மா!” கை எடுத்து கும்பிட்டும் விமோச்சனம் தான் அவனுக்கு கிடைத்தபாடில்லை.

“அது எப்படி விட முடியும்? இதுக்கெல்லாம் இவ்ளோ காசு தேவையா? இந்த டைனிங் டேபிள்க்கு எதுக்கு அஞ்சு லட்சம்? அவ்ளோ காசுக்கு இதுல என்ன இருக்கு? எப்பேற்பட்ட தேக்கு மரமா இருந்தாலும், இவ்ளோ காசெல்லாம் வராது. உங்களை எவனோ ஏமாத்திட்டான்.”

அந்த பர்மா தேக்கு மர டைனிங் டேபிளை அவள் கைகள் வருட, அதன் அனைத்து பக்கமும் போடப்பட்டிருந்த நாற்காலியில் ஒன்றை இழுத்துப்போட்டு அமர்ந்தவளுக்கு, ஏதோ பஞ்சு பொதியின் மீது அமர்ந்த அனுபவம். மெல்ல உதடுகளில் சிரிப்பு மலர அவள் கைகள், அந்த மர நாற்காலியின் கம்பீரத்தை உரசி ஆராய்ந்து.

“ஆனா நல்லா தானே இருக்கு?” என கேட்டவளிடம் சிரிப்பை மறைக்க முடியவில்லை.

“சரி வா, முக்கியமானத காட்ட மறந்துட்டேன்.” வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்தவன், வீட்டின் பின்புறம் அவளை அழைத்து சென்றான்.

பின்கதவின் வழியே மணல் லாரி ஒன்று வந்து செல்ல, “இங்க பார்க்கிங் கொஞ்சம் வேலை போய்கிட்டு இருக்கு. முழுசா செட் பண்ணினதும் காட்டுறேன் உனக்கு.”

அந்த கட்டிட வேலையைத் தாண்டி ஒரு சிறிய வீடு போல் தெரிய, அதனைப் பார்த்ததும் ஆரோஹியின் கைகள் நடுங்கியது.

“நாராயணா…” பயத்தில் பிதற்றியவள் அவன் கையைப் பிடிக்க பார்க்க, அவனோ துள்ளலோடு நடந்தான்.

அந்த நாராயணாவும் அவனுக்கு கேட்டாலும் தனக்கான அழைப்பு என தெரியவில்லை. அவள் நின்றது கூட தெரியாமல் சென்றவன், ஏதோ நினைத்து திரும்பி பார்த்து அவள் கை பிடித்து உரிமையாய், வலிக்காமல் இழுத்துச் சென்றான்.

தரதரவென அவளை அந்த இடத்திற்கு அழைத்து வந்தவன், அவள் ஒரு கையை இறுக்கமாய் பற்றி விசிலடிக்க, உள்ளிருந்து மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்தது, இரண்டு சிப்பிபாறை வகை நாய்கள். அதன் முகத்தையும் கம்பீரத்தையும் பார்த்த ஆரோஹிக்கு மொத்த உடலும் ஆட்டம் கண்டது.

எப்பொழுதாவது தான் பிஸ்கட் போடும் தெருநாய் தன்னை, வாலை ஆட்டி பார்த்தாலே ஓடிவிடும் ரகம் அவள். இதில் வேட்டைக்கு, காவலுக்கு பயன்படுத்தும் நாட்டு நாயைப் பார்த்தவள் இதயம் மத்தளம் அடித்து அலறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!