Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 6

கள்வன் – 6

 

உச்சி வெயில் தன் ஆங்காரத்தை பூமித்தாயின் மீது கொட்டிக்கொண்டிருக்க, அவளது தலைக்கவசம் அவள் சிரத்தை வெயிலிலிருந்து பாதுகாத்தது. சீரான வேகத்தில் வாகனம் ஆள் அரவம் குறைவாக இருக்கும் அவர்கள் தெருவை நோக்கிச் செல்ல, வீட்டை நெருங்கும் தருவாயில் அவள் சென்று கொண்டிருந்த தெருவில் சற்று தொலைவில் இடப்புறத்தை ஒட்டி கால் மடங்கி நழுங்கி டொம்மென்று பெண் ஒருவர் நடைபாதையில் விழுவது கண்ணில்பட்டது. பதறியவள் அவர் அருகே வண்டியை நிறுத்தித் தன் பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அந்த பெண்மணியை நெருங்கி அவர் முகத்தில் தண்ணீரை விசிறியடித்தாள்.

 



Advertisement

மூடியிருந்த கண்களுக்குள் விழி மணிகள் அசைவு கொடுக்கவும் அவர் கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றாள், “ஆன்ட்டி… ஆன்ட்டி… இங்க பாருங்க…”

 

அவளின் குரல் செவியில் எட்ட, முயன்று கண்ணைக் கசக்கியவர் இமைகள், அரும்பாடுபட்டு பிரிபட இனியா துரிதமாய் அவரை தண்ணீர் பருக வைத்தாள்.

Advertisement

 

Advertisement

திரவம் சற்று உள்ளே சென்றதும் தெம்பாய் உணர்ந்தவர் கண்கள் இன்னமும் கலக்கமாய் இருப்பது போன்றே தோன்றியது இனியாவிற்கு. தாமதியாமல் தன் கைப்பையை திறந்தவள் வரும் வழியில் வாங்கிய ப்ரட்டை பிரித்து அவர் வாயிற்கு கொண்டு செல்ல எங்கிருந்து தான் அந்த பெண்மணிக்கு அவ்வளவு வேகம் வந்ததோ ஆக்ரோஷமாய் அவள் கையை தட்டி விட்டார். 

 

‛அட… என்னடா இது… உதவி செய்தால் இப்படி தட்டி விடுகிறார்கள். வர வர உதவி செய்வதற்கே யோசிக்க வேண்டும் போலிருக்கு…’ என்று மனதிற்குள் இனியா சலித்துக் கொள்ள, அந்த பெண்மணியின் இதழ்கள் அசைந்தது. அவர் ஏதோ சொல்வது போல் தெரிய, அவர் வாயருகே குனிந்து காதை தீட்டினாள்.

Advertisement

 

“விரதம் மா…” 

 

‘ஓ…’ அவளின் வாய்மொழியற்ற கேள்விக்கு அவர் பதில் சொல்ல மனதிற்குள்ளே அவரை மெச்சிக்கொண்டு தெளிந்தவள் அந்த பெண்மணி பருக ஏதுவாய் தண்ணீர் பாட்டிலை மெல்ல அவர் இதழ்களுக்கு இடையில் சாய்த்தாள். சிறிது பருகியவர் அவள் கைபிடித்து நிறுத்தி, எழுந்திரிக்க முற்பட்டார்.

[the_ad id=”6605″]

“ஆன்ட்டி உங்கள் வீடு எங்கே இருக்கு? நான் வேண்டுமென்றால் உங்கள் வீடு வரை துணைக்கு வரவா? இல்லை ஜூஸ் வேண்டுமென்றால் வாங்கி வந்து தரவா?” அவரின் தடுமாற்றத்தைக் கண்டு வினா எழுப்பினாள் இனியா.

 

“உன் உதவிக்கு ரொம்ப நன்றிமா. இங்கே பக்கத்தில் தான் வீடு மா… நீ போ நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று அவளின் உதவியை நாசுக்காக மறுத்தவர் குனிந்து பூஜைக் கூடையை எடுக்க முயல மீண்டும் தலை சுற்றியது போல் இருந்தது அவருக்கு.

 

“ஆன்ட்டி… பரவாயில்லை எனக்கு எதுவும் சிரமம் இல்லை. நான் உங்களை வேண்டுமென்றால் வீட்டில் விடுகிறேன்.” துணிந்து சொன்னாள் பெண்ணவள். ஓரிரு முறை அப்பெண்மணியை ஆஃபீஸ் போகும் வழியில் அந்த சாலையில் பார்த்திருக்கிறாள், அது கொடுத்தத் தைரியம் தான் அவர் வீடு வரை செல்ல அவள் முற்பட்டது.

 

உடல் ஒத்துழைப்பு தர மறுக்க, அவரும் அவளுடன் வர சம்மதித்தார். ஒரு புன்னகையுடன் கீழே சிதறி இருந்த பூஜைக் கூடையை எடுத்தவள் அதை தன் வண்டியின் முன்கொக்கியில் மாட்டிவிட்டு அப்பெண்மணியை பின்னால் உட்கார வைத்து, அவர் வழி கூற அந்த பெண்ணின் வீட்டிற்கு பத்திரமாய் வந்து சேர்ந்தனர்.

 

“உள்ளே வாமா…”

 

“இல்லை ஆன்ட்டி… நான் கிளம்புறேன். நீங்கள் ஏதாவது சாப்பிடுங்கள் ஆன்ட்டி.”

 

“எனக்கு உதவி செஞ்சிட்டு இப்படி வாசலோடு போறதா? இங்கே பாரு எனக்கே முடியல நீ வேறு கெஞ்ச வைக்காதமா…” காப்பாற்றிய நன்றியில் உரிமையாய் இனியாவை கூப்பிட, இனியாவிற்கு மறுக்க முடியவில்லை. அதோடு அவள் வீடும் அடுத்த தெருவிலே இருப்பதால் எவ்வித பதற்றமும் இன்றி அவருடன் வீட்டிற்குள் நுழைந்தாள். புது இடத்திற்கு செல்லும் போது ஏற்படும் ஆர்வம் அவளுள்ளும் ஏற்பட, அவள் விழிகள் அங்கிருந்த ஒவ்வொன்றையும் ஒருவித ஆர்வத்துடன் பார்த்தது.

 

அழகிய தோட்டமாக மாற அனைத்து வசதிகளும் அவ்வீட்டின் முன் பகுதியில் இருந்தும், வெறிச்சோடி இருந்தது அவ்வீட்டின் முன் பகுதி. உள்ளேயும் பொலிவின்றி நிர்மலமாய் இருந்தது. நிசப்தமாய் இருந்தது.

 

“உட்காருமா வந்துறேன்…” என்றுவிட்டு அப்பெண்மணி உள்ளே சென்றுவிட இனியா தன் விழிகளை சூழவிட்டு அவ்வீட்டை ஆராய்ந்தாள்.

 

வீட்டின் கூடத்தில் ஒரே ஒரு சோபா மட்டுமே ஆக்கிரமித்திருக்க, ஒரு பழைய பிட்சர் டியூப் தொலைக்காட்சி மூலையில் இருந்தது. பக்கவாட்டில் இரு அறைகள் இருக்க, அதைத் தொடர்ந்து ஒரு டைனிங் அறை மற்றும் எதிர்புறம் சமையலறை. அதுவரை மட்டுமே அவளுக்குத் தெரிந்தது. சமயலறை ஒட்டியே சிறியதாய் ஒரு பூஜை அறை மட்டுமே அவள் பார்க்காமல் விட்டது.

 

அதற்குள் அந்த பெண்மணி தண்ணீர் கொண்டு வந்திருக்க, “தண்ணீர் குடிமா… காபி போட்டு இருக்கிறேன். குடித்து விட்டுத் தான் செல்ல வேண்டும்.”

[the_ad id=”6605″]

“ஐயோ ஆன்ட்டி உங்களுக்கே உடல்நிலை சரியில்லை. நீங்கள் எதற்கு காபி எல்லாம் போடுகிறீர்கள்?”

 

“அதனால் ஒன்றும் இல்லமா… இப்போது தான் நீர் மோர் குடித்தேன். கொஞ்சம் தெம்பு வந்த மாதிரி இருக்கிறது. ஆமாம் உன் பெயர் என்ன?”

 

“இனியா ஆன்ட்டி…” தண்ணீர் பருகிவிட்டு பதில் கூறினாள்.

 

அதைக் கேட்டதும் அப்பெண்ணின் கண்ணில் ஒரு ஒளி வந்து மறைந்தது.

 

“வீடு எங்கிருக்குமா? வேலை செய்கிறாயா?”

 

“இங்கே பக்கத்து தெரு தான் ஆன்ட்டி. ஐ.டி பீல்டில் வொர்க் பண்றேன்…”

 

“ஓ… என் ரெண்டாவது பையன் கூட ஐ.டியில் தான் இருக்கான்மா. சோழிங்கநல்லூர் ஹ.சி.எல்ல வேலை செய்கிறான்.”

 

“நானும் அங்கே தான் ஆன்ட்டி வேலை செய்கிறேன். உங்க பையன் பெயர் என்ன?” எதிர்பார்ப்புடன் கேள்வி எழுப்பியது இனியாவின் குரல்.

 

அவள் கேள்வி அவர் காதை எட்டும் முன் ஏதோ நினைவு வந்தவராய், “ஒரு ஐந்து நிமிடம்மா… அடுப்பில் பால் காய்கிறது. எடுத்து வந்துவிடுகிறேன்.” என்று அவசரமாய் உள்ளே ஓடினார்.

 

இனியா அமைதியாய் தான் விட்ட இடத்திலிருந்து பார்வையை சுழற்ற யாரோ தன்னை பார்ப்பது போல் உள்ளுணர்வு… 

 

‘என்னடா இது… வீட்டில் யாரும் இருப்பது போல் தெரியவில்லை ஆனால் யாரோ நம்மை பார்ப்பது போல் இருக்கிறதே.’ என்று மனதுடன் பேசியவாறே பார்வையை நாலாபுறமும் விரட்டினாள்.

 

உள்ளுணர்வு உந்த அங்கு திறந்திருந்த முதல் அறைக்கு கால்கள் தன்னாலே சென்றது. உள்ளே நடுநாயகமாய் போடப்பட்டிருந்த கட்டிலில் தொய்ந்த உருவம் ஒன்று வீற்றிருக்க, அந்த உருவத்தின் கண்களோ அவ்வறையின் மூலையில் நாற்காலியில் உறங்கிக் கொண்டிருந்த செவிலி உடை அணிந்தவரிடம் இருந்தது. 

 

இனியா இதை கவனித்துக் கொண்டே கட்டிலை நெருங்கினாள், “உங்களுக்கு எதுவும் வேண்டுமா?” 

 

அந்த ஒளியற்ற விழிகளோ அவளை ஆராய்ச்சியுடன் நோக்கியது. அதை சடுதியில் புரிந்து கொண்டவள், “நான் ஆன்ட்டி கூட வந்தேன். அவர்கள் சாலையில் மயங்கி விழுந்துட்டாங்க.”

 

ஒரு பரபரப்பு அக்கண்ணில் குடிகொள்ள… 

 

“பயப்படாதீங்க… விரதம் இருக்காங்கல்ல ஆன்ட்டி, அதனால் மயங்கி விழுந்துட்டாங்க…”

 

அவளின் பதிலைக் கேட்டு அவ்விழிகளில் ஒரு ஆச்சர்யம் இப்போது… 

 

“நான் உதவி தாங்க செய்தேன். நீங்கள் ஏன் இவ்வளவு ஆச்சரியப் படுகிறீர்கள்?”

 

மீண்டும் அந்த வெள்ளை விண்வெளிக்குள் அதீத பிரமிப்பு… 

 

“ஐயோ… என்னங்க நீங்க… உதவி செய்ததற்கு இப்படி வேற்றுக் கிரகவாசியைப்  பார்ப்பது போல் பிரமிப்புடன் பார்க்கிறீர்கள் ?” என்று சிணுங்கினாள் இனியா. ஒருவித கூச்சம் வந்து ஒட்டிக்கொண்டது அவ்விழிகளின் விழிவீச்சில். ஆனால் எதிர் இருந்தவனுக்கு,

 

தெரித்து வெளியில் விழுந்துவிடும் அளவிற்கு விரிந்தது அவ்விழிகள்…

 

“என் முகத்தில் எதுவும் விசித்திரமாக இருக்கிறதா என்ன? இப்படி பார்க்கிறீர்கள்?” என்று கேள்வி ஏவி அவளே தன் முகத்தை தடவி பார்த்துக் கொண்டு அங்கு அருகிலேயே வார்டோப் கதவு கண்ணாடியிலும் பார்த்துக் கொண்டாள்.

[the_ad id=”6605″]

அதற்குள், “என்னமா இங்கிருக்கிறாயா? நீ சென்று விட்டாயே என்று தேடினேன்…” என்றபடியே காபியுடன் உள்ளே நுழைந்தார் அப்பெண்மணி. 

 

“இங்கு யாரோ கூப்பிடுவது போல் இருந்தது ஆன்ட்டி அதனால் வந்தேன்…” என்றவள் காபி கப்பை வாங்கிக்கொண்டாள்.

 

“அப்படியா…” என்றதொரு ஆராய்ச்சியுடன் செவிலியை நோக்கினார்.

 

செவிலி தான் தூங்கிக் கொண்டிருக்கிறாரே…

 

“ஏய் செல்வி எழுந்திரு… என் பையனை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு கோவிலுக்கு சென்றால் நீ என்ன தூங்கிக் கொண்டிருக்கிறாய். இதற்கு தான் உனக்கு சம்பளம் கொடுக்கிறோமா?” என்று கடிந்து கொண்டார்.

 

‛ஓ… இவர் தான் இவங்களோடே முதல் பையனா… ஏதோ உடல்நிலை சரியில்லை போலிருக்கு…’ மனதில் குறித்துக் கொண்டாள் இனியா. 

 

“சும்மா அமைதியாகவே எவ்வளவு நேரம் தான் இவரையே பார்த்துக் கொண்டிருப்பது. அதனால் கொஞ்சம் அசந்துட்டேன்மா.” என்று செவிலி செல்வி தலையை சொரிந்தாள். 

 

அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியாகிவிட்டார் அத்தாய். ஏனெனில் அவரே பல முறை மகனை பார்த்துக் கொண்டே உறங்கி விடுவார். என்றுமே எதிராளியோ இல்லை எதிர் இருப்பவரோ துடிப்பாய் இருந்தால் தான் நாமும் துள்ளலாய் ஓட முடியும். இல்லையென்றால் நம்மை அறியாமலேயே சோர்வு தொற்றிக் கொள்ளும். 

 

“ஆன்ட்டி… அவங்க ஏதோ கேட்ட மாதிரி இருந்தது…” அவர்கள் உரையாடலை குறுக்கிட்டு கட்டிலில் படுத்திருந்தவனை கைக்காட்டி கூறினாள் இனியா.

 

விருட்டென மகனை நெருங்கினார் அத்தாய், “என்ன வேணும் இதயா?”

 

பதிலாய் கண்களை உருட்டினான் மகன்.

 

“பசிக்கிறதாபா? இல்லை உடம்பு எதுவும் செய்கிறதா?” எப்போதும் போல் அவனின் விழிமொழி புரியாமல் கேட்டார் அவனின் அன்னை.

 

“ஆன்ட்டி தண்ணீர் கேட்கிறாங்க…” அவனின் ஒவ்வொரு விழி வீச்சையும் அவளையும் அறியாமல் கண்டுகொண்டதன் விளைவு, அவனின் மொழியற்ற வேண்டலுக்கு மொழி கொடுத்தாள். 

 

தாயும் இப்போது அவள் மேல் அதிசயப் பார்வை வீசினார். இருக்காதா பின்னே… அவன் கண் அசைவுகள் அன்னைக்கே புலப்படாத போது வெளிநபரான அவளுக்குப் புரிவது விந்தையே… 

 

இதயா என்கிற இதயன் வியப்பு கலந்த மெச்சுதலாய் அவள் புறம் பார்வை வீசினான்.

 

அவன் விழிகளில் தனக்காக வெளிப்பட்ட பிரமிப்பு, ஆவல், மெச்சுதல் அனைத்தும் அவளை திக்குமுக்காடச் செய்தன. இதுவரை இவள் தான் பலரை வியந்து பார்த்திருக்கிறாள். இன்று இவளையே ஒருவன் வியப்பாய் நோக்க நெஞ்சம் குறுகுறுவென்றது. ஏதோ சாதித்து விட்ட ஒரு உணர்வு. மனநிறைவு. 

 

சுதாரித்த செவிலி ஒரு தம்ளர் தண்ணீர் எடுத்து அவன் வாய் வழியே சிறுகச் சிறுக ஊற்ற கொஞ்சமே கொஞ்சமாய் சிரமப்பட்டு உள் விழுங்கினான் அவன். 

 

அவன் பருகியதும் அன்னை அவன் தாடையை தன் முந்தானையால் துடைத்து விட, நன்றியாய் இனியாவைப் பார்த்து வசீகரமாய் ஒரு புன்னகை சிந்தினான் இதயன். புன்னகை வசீகரமாய் இருந்ததா இல்லை அவளை அப்புன்னகை வசீகரித்ததா என்பது எவரும் அறியமுடியாத ஒரு விடையற்ற வினா. இதழ்கள் புன்னகையில் விரிந்திருக்க, அவன் கண்களும் சேர்ந்து ஜொலிக்க, வதனத்தில் ஒரு பிரகாசம். அது முதன்முதலாய் தன்னை ஒருவர் புரிந்து கொண்டுவிட்டார் என்கின்ற பெருமிதம் தந்த உணர்வு. அந்தக் கணம், 

 

அவள் அறியாமலேயே… கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி, வலியின்றி அவள் இதயத்தின் திசுக்களை கிழித்துக் கொண்டு அவள் இதயத்தினுள் புகுந்தான் அந்தக் கள்வன், இதயன்! 

 

*^*^*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!