Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் ஹைக்கூ காதல்

என் ஹைக்கூ காதல் 2

அத்தியாயம் 2

ஸ்பெயின் நகர வீதிகளில் கால்ப்போன போக்கில் நடந்தாள் வாணிலா. அன்றோடு அந்த நாட்டுக்கு புலம் பெயர்ந்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தது.  காலை தொடங்கி மாலை வரை வேலை செய்தாலும், வீட்டுக்கு சென்று இளைப்பாற வேண்டும் என்ற எண்ணம் வருவதே இல்லை அவளுக்கு. வீட்டின் வெறுமை அவளை என்னென்னவோ எண்ண சொல்லி தூண்டுகிறது.



Advertisement

பெங்களூரில் இருந்தபோது கூட இதே நிலை தான் எனினும், வேலை நேரம் முடிந்தும் அலுவலகத்தில் இருந்து இன்னும் சற்று நேரம் உழைத்தாலும் ‘வீட்டுக்கு போ’ என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

இங்கோ, வேலை நேரம் முடிந்து சில மணித்துளிகள் தாமத்தித்தாலும், ‘இன்னும் போகலையா?’ என்ற கேள்வியோடு அனைவரும் அவளை விநோதமாய் பார்க்க, சமீப காலமாய் இப்படி கால் நோக நடப்பதை வாடிக்கையாக்கி இருந்தாள். இந்த வலியோடு வீடு சென்று சேர்ந்தால், தூக்கம் அனுமதியின்றி வந்துடும். அதோடு, மறுநாள் ஓட்டம்!

Advertisement

Advertisement

பழைய வாணிலாவாய் இருந்திருந்தால் இந்நேரம் குறைந்தது நூறு நண்பர்களை சேகரித்திருப்பாள்.  இப்படி, ஒரு வீட்டில் ஒற்றை ஆளாய் இருந்திடாமல் நான்கைந்து பேரோடு ஒன்றாக பேசி சிரித்து சண்டையிட்டு என நாட்களை வண்ணமயமாய் ஓட்டியிருப்பாள்.

அவள் வண்ணங்கள் எல்லாம் என்றோ மறைந்து போனது. வெள்ளை காகிதத்தில் தீட்டிய நிறமற்ற ஓவியமாய் அவள்! வண்ணம் தீட்ட ஒருவன் வருவான் என்ற எண்ணம் துளியும் இன்றி அவள் நடக்க, அலுத்து ஓரிடம் அமரும்போது அவள் கண்ணில் சிக்கியது அந்த விளம்பர பலகை!

Advertisement

ஸ்பெயின் நாடு எதற்கு பெயர் போனதோ இல்லையோ!? இசை மற்றும் நடனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரும் நாடு! கேளிக்கை விருந்துகள் எந்நேரமும் நடந்தபடியே இருக்கும்.  இங்கு வந்த நாள் தொட்டு இதெல்லாம் அவள் கண்ணில் பட்டாலும், கருத்தில் ஏறவில்லை.

அவள் இயல்பை தொலைத்த நிலை அவளுக்கே இப்போதெல்லாம் ஒருவித வெறுப்பை உண்டாக்கியிருக்க, அதை மீட்டெடுக்க ஏதேனும் வழி இருக்குமா என்று அவ்வப்போது சிந்தனை எழும். இந்த க்ஷணம் அந்த போஸ்டர் அவள் கண்ணில் பட்டு, கருத்தை கவர்ந்தது.

அதில் குறிப்பிட்ட இடமும் சற்று அருகாமையிலேயே இருக்க, வரப்போகும் தொடர் பத்து நாட்களுக்கான இரவு நேர விருந்தின் அழைப்பை பார்த்தபடி யோசித்தாள், ‘போகலாமா?’ என்று! முன்பதிவு அவசியம் என்றிருக்க, உடனே அந்த எண்ணுக்கு தொடர்புக்கொண்டாள்.

குறிப்பிட்ட தொகையை இணைய வழியில் அனுப்பியவளுக்கு, அப்போதும் முழு மனதாய் செல்ல விருப்பம் வரவில்லை.  சிந்தனையில் இருந்தவளை கலைத்தது அலைபேசி. பெற்றவரிடம் இருந்து அழைப்பு, இந்நேரம் இந்தியாவில் இரவு பத்தை தாண்டியிருக்கும் என்று உணர்ந்து, “ஏதாவது முக்கியமான விஷயமா?” என்றாள் வாணிலா.

“ஏன்டி? முக்கியம்ன்னா தான் பேசணுமா? பெத்த அம்மாக்கிட்ட கூட சொல்லாம கொள்ளாம ஓடிட்டீள்ள?” காஞ்சனா கோபமும் ஆதங்கமுமாய் பேச, அவரிடம் இருந்து அலைபேசியை வாங்கிய ஜெயமோகன், “அம்மாடி, வாணி! இங்க வாடா… உன் இஷ்டம் போல இரு, நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம் உன்னை. நீயும் எங்களை தனியா விட்டா எப்படிடா?” என்றார் கமறிய குரலில்.

அவர்கள் வருத்தம் எல்லாம் அவளை அசைக்கவில்லை. ‘தான் அத்தனை சொன்னபோது கேட்டீர்களா? இல்லையே!? அக்கா இருந்தபோது அவளை மீட்டெடுக்கவும் கைக்கொடுக்கவில்லை, இறந்தபின் அதன் பின்னான காரணம் அறிய அவள் முயன்றபோதும் தோள் குடுக்கவில்லையே!? அனாவசியமாய் இவர்கள் அலட்சியத்தில் ஒரு உயிர் போயிருக்க, அடுத்ததாய் தன்னையும் பலிக்கொடுக்க தான் இந்த பாச போராட்டமா? என்ற வெறுப்பு அவளிடம்.

“அம்மாடி பேசும்மா!” ஜெயமோகன் கெஞ்ச, “எதுக்குப்பா? என்னையும் ஒருத்தனுக்கு கட்டி வச்சு உங்க கடமையை முடிச்சுட்டு, அதுக்கு பிறகு நான் செத்தாலும் கண்டுக்காம போறதுக்கா?” அவள் வெகு நிதானமாய் கேட்க, “என்னம்மா இப்டி பேசுற?” என்ற தந்தையின் குரல் தடுமாறியது.

“என்னை கட்டி குடுத்துட்டதா நினைச்சுக்கோங்க, இல்லன்னா அக்கா மாறி நானும் செத்துட்டேன்னே நினைச்சுக்கோங்க!” இரக்கமின்றி சொன்னவள் போனை வைத்துவிட்டாள்.

பெற்றவரிடம் இப்படி பேசுகிறோமே என்ற குற்ற குறுகுறுப்பு எல்லாம் இல்லை அவளிடம். தேனிலா மரணிக்க மறைமுக காரணங்கள் பல இருக்க, அதில் கண்டிப்பாக இவர்கள் பங்கும் உண்டு என்ற எண்ணம் அவளுக்கு.

ரயில்பெட்டியாய் நினைவுகள் நீள, கண்டத்தையும் நினைத்தபடி நடந்தே வீடு சென்று சேர்ந்தவள் சுடுநீரில் அலுப்பு தீர குளியல் போட்டாள்.  பாத்ரோபுடன்  கிட்சேன் சென்றவள் பாலை சூடு செய்து, கெலாக்ஸ் போட்டு வேண்டாவெறுப்பாய் உண்டாள். உண்டு முடிக்கும்போது அவள் மொபைலில் அலாரம் சத்தம்.

‘எதுக்கு இது?’ என்ற யோசனையோடு எடுத்து பார்த்தவள், ‘பார்ட்டி’ என்ற ரிமைன்டர் ஒலிக்க, அப்போது தான் கேளிக்கை விருந்துக்கு பணம் கட்டியதே நியாபகம் வந்தது. ஏதோ ஒரு எண்ணத்தில் பணத்தை கட்டிவிட்டாள். இப்போது அங்கே போகும் எண்ணமெல்லாம் இல்லவே இல்லை.

‘போனால் போகிறது!’ என்று விட்டுவிடலாமா என்றும் தோன்ற, நூறு யூரோக்களை கட்டிவிட்டு அப்படியே விடுவதா என்றும் தோன்ற, சில நொடிகள் தான் சிந்தனை.

வேகமாய் க்ளாசெட் சென்றவள் கைக்கு வந்த ஒரு ஆடையை அவசரகதியில் அணிந்துவிட்டு முடியை அள்ளி குதிரை வால் இட்டவள், முகத்துக்கு எந்த அலங்காரமும் செய்ய விருப்பமின்றி அப்படியே கிளம்பிவிட்டாள்.

பத்து நிமிட நடை தூரம் தான்!  வண்டி புக் செய்து அது வரும் வரை காத்திருக்க எல்லாம் அவளுக்கு பொறுமையில்லை.  சொந்தமாய் கார் வாங்கலாம் என்றால், அதற்கு முதல் லைசன்ஸ் வாங்க வேண்டும். அது வேறு பெரும் கெடுபிடியாய் இருந்தது அங்கே!

சரியான விலாசத்துக்கு வந்துவிட்டோமா என்றெல்லாம் யோசிக்கவே அவசியம் இல்லாதபடி பல வண்ண விளக்குகளில் பளபளத்துக்கொண்டிருந்தது அந்த கட்டடம்.

சிறு தயக்கம் இருந்தாலும், வெளியில் காட்டிக்கொள்ளாமல் உள்ளே சென்றாள். அவளது நுழைவு சீட்டை பரிசோதித்துவிட்டு கையில் ஒரு ஸ்ட்ராப் ஒன்றை ஒட்டிவிட்டனர். இதை காட்டி ‘ஸ்கேன்’ செய்து என்ன வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் அருந்தலாம் என்று!

உள்ளே போக வழி காட்டினார்கள். ஏதோ குகைக்குள் போவதை போல குறுகிய கம்மிய வெளிச்சப்பாதை. ஆங்காங்கே சிலர் புகைத்துக்கொண்டிருக்க, அவர்களின் வித்தியாச பார்வையோடு எதிர்க்கொண்டு முன்னேறினாள்.

அந்த குறுகிய பாதைக்கும் அது முடியும் இடத்துக்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லாதபடி அகண்டு விரித்திருந்த இடத்தில்  வண்ண வண்ண விளக்குகள் அலங்கரிக்க, டிஜே’வின் சத்தம் காதை பிளக்க, அதற்கேற்ற கடலலை போல ஆடிக்கொண்டு குமிந்திருந்தது ஒரு கூட்டமே!!!

‘அம்மாடி!’ லேசாக வாயை பிளந்தாள் வாணிலா.

இந்த மாதிரி இடத்திற்க்கெல்லாம் இதற்கு முன்பு வந்ததே இல்லை அவள். இது தான் முதல் முறை. என்னதான், ‘நுடிட்டி இஸ் லீகல் இன் ஸ்பெயின்’ (nudity is legal in Spain)  என்று தெரிந்தாலும், கடற்கரை ஓரங்களில் ஒட்டு துணியில்லாமல் சூரிய குளியல் எடுக்கும் ஆட்களை கண்டும் காணாமல் கடந்திருந்தாலும் இப்படி இங்கே இத்தனை பேருக்கு மத்தியில், பேருக்கு இரண்டு துணிகளை உடலில் ஒட்டிக்கொண்டு சுதந்திரமாய் ஆடும் ஆட்களை காண வெகு கூச்சம் வந்தது.

‘முழு நிர்வாணத்தை விட அரை நிர்வாணம் பேரழகு’ என்று எங்கோ எதிலோ படித்த நியாபகம் வந்தது. ‘சரிதான்’ என்று நினைத்தபடி இந்த கூட்டத்தில் இருந்து தப்பித்து ஓரமாய், அரை முட்டை வடிவில் ஆட்களின்றி  மேசை நாற்காலிகளோடு இருந்த இடம் தேடி சென்று அவள் அமர, டிஜே’வின் இசைக்கூட சுருதி குறைவாய் தான் கேட்டது அங்கே.

தன்னையறியாமல், ‘உப்ப்’ என்ற ஆசுவாச மூச்சு.

ஆண் பெண் பேதமின்றி இசையிலும் மதுவிலும் லயித்து ஆடிக்கொண்டிருப்பவர்களை பார்க்கவே சற்று சிரிப்பாகவும், மனதுக்கு இதமாகவும் இருந்தது.

வந்து இரண்டு மாதங்கள் தான் ஆனது என்பதால் ‘ஸ்பானிஷ்’ மொழி பெரிதாக தெரியாது அவளுக்கு. தலைநகரம் ‘மேட்ரிட்’ரில் வசிப்பதாலும், அவள் அலுவலகத்தில் முதன்மை மொழி ‘ஆங்கிலம்’ என்பதாலும், எல்லாவற்றையும் விட இவள் யாருடனும் பேசுவதே இல்லை என்பதாலும் ‘ஸ்பானிஷ்’ மொழியின் அவசியம் அதுவரை அவளுக்கு ஏற்ப்படவில்லை.

ஆனால் அங்கிருந்த கூட்டத்தின் பெரும்பான்மையான ஒலி, ‘ஸ்பானிஷில்’ தான் ஒலித்தது. மொழி புரியாத படத்தை பார்ப்பதை போல அவள் பார்த்துக்கொண்டிருக்க, அந்த கூட்டத்தில் இருந்து ஒரு உருவம் மட்டும் பிரிந்து வந்தது. இயல்பாக தனித்துப்போகும் அந்த உருவத்திடம் கவனம் போக,  அதுவோ, கையில் ஏந்திய குவளையோடு லேசாக ஆடிக்கொண்டே இவள் இருக்கும் இடம் நோக்கி வர, பெண்ணின் அவயங்கள் சுறுசுறுப்பாகின.

‘மேட்ரிட்’ சிட்டியில் க்ரைம் ரேட் குறைவு தான். பாதுகாப்புக்கு பஞ்சமில்லை. இப்போது கூட எதாவது என்றால், ஆங்காங்கே தென்படும் ‘பவுன்சர்ஸ்’யிடம் கையசைத்தால் கூட போதும். எல்லாம் தெரிந்தும் இயல்பான ஒரு மிரட்சி எழுவதை அடக்க முடிவதில்லை.

இன்னும் சற்று ஓரமாய் நகர்ந்து அமர்ந்துக்கொண்டாள். அந்த உருவம் சொல்லி வைத்தார்ப்போல இவள் இருக்கும் இடம் நோக்கி தான் வந்தது.  ஒரு மேசை தள்ளி இருந்த சோபாவில் பொத்தென விழுக, எழுந்து போய்விடலாமா என்ற எண்ணம் அவளுள்.  அதே எண்ணத்தோடே அவள் இருக்க, அந்த உருவமோ இவள் இருந்த திசைக்கு கூட திரும்பவில்லை. கையில் இருந்த குவளையில் இருந்து மிடறு மிடறாய் பருகுவதும், ஆடும் கூட்டத்தை இமைக்காமல் பார்ப்பதுமாய் இருந்த அந்த உருவம் அவளை சீண்டவில்லை.

சில நிமிடங்களுக்கு இதே நிலை தொடர, இப்போது வாணிலா தெளிந்திருந்தாள். எந்த அளவுக்கு தெளிவென்றால், அருகே இருப்பவன் எந்த ஊர்க்காரனாய் இருப்பான்? என அவன் சாயலை வைத்து ஆராயும் அளவுக்கு. அவனிடம் அப்பட்டமான இந்திய சாயல்.  வெளிர் நிறம் கண்டு  ஐயம் கிளம்பினாலும், அவன் முக அமைப்பு அவனை ஒரு தென்னிந்தியன் போல அவளுக்கு ஜாடைக்காட்ட, அவளுக்குள் ஒரு உந்துதல்.

இங்கு வந்த இத்தனை நாட்களில் இப்போது தான் ஒரு இந்திய வாலிபனை காண்கிறாள்.  பேச வேண்டும் என்ற உந்துதல் கிளம்ப, மெல்ல எழுந்து அவனுக்கு சற்றே அருகே, பேசினால் கேட்கும் தொலைவில் சென்று அமர்ந்தாள்.

“எக்ஸ்க்யூ…” அவள் தொடங்கும்போது, “நாட்டு சரக்கு நச்சுன்னு தான் இருக்கு… கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுன்னு தான் இருக்கு” அவன் வாயில் இருந்து இந்த வரிகள் வர, கண்களோ சற்று தொலைவில் தன்னை மறந்து அரைகுறையாய் ஆடிக்கொண்டிருந்த பெண்ணின் மீது மையம் கொண்டிருக்க, பேச வந்த வாணிலாவின் வார்த்தைகள் தொண்டை விட்டு வெளிவரவில்லை.

பேச வந்த உற்சாகம் கூட வடிய, ‘ஹும்… ஊரு விட்டு ஊரு வந்தாலும் இவனுங்க ஊத்துற ஜொள்ளு மட்டும் மாறவே மாட்டேங்குது’ என்ற எண்ணத்தோடு மீண்டும் பழைய இடத்துக்கே அவள் எழுந்துபோகப்போக, அப்போது தான் அந்த உருவத்துக்கு தன் அருகே அசைவு தெரிவதே உரைத்தது.

‘யார் அது?’ என்பது போல ஒரு பார்வை!

அவள் தள்ளி சென்று அமர்ந்துவிட்டு அவனைப்பார்க்க, அவனும் தன்னை பார்ப்பதை கண்டதும் வேறுபுறம் திரும்பிக்கொண்டாள். ஆனால் அவனோ உற்சாகமாய், “ஹே ஹாய்! ஆர் யூ ப்ரம் இந்தியா?” என்று கையசைக்க, அவளுக்கோ பேசியாக வேண்டிய கட்டாயம்.

‘ம்ம்ம்’ என்றாள் அளவாக சிரித்தபடி. அவ்வளவு தான், வடதுருவம் தேடும் தென்துருவமாய் ‘சர்ர்ர்’ரென அந்த சோபாவில் வழுக்கிக்கொண்டு அவளருகே வந்து அமர்ந்தான் அவன்.

அவள் திடுக்கிட்டு சுவரோடு ஒண்ட, “ஹாய், ஐ’ம் கோவர்த்தன். பீபில் கால் மீ ‘கோ’” என்றான் சிநேகமாய் கைநீட்டி.

அவன் கரத்தை ஒரு நொடி யோசனையாய் பார்த்துவிட்டு பின் கை குலுக்கியவள், “ஐ’ம் வாணிலா” என்று சொல்ல, அந்த பேரை கேட்டதும் இன்னுமே குஷியாகி போனான் அவன்.

“அட, தமிழா நீங்க?” அவனிடம் சிநேக பாவம் அதிகரித்தது.

“ஆமாங்க!” சுருக்கமாக முடித்தாள் அவள்.

“நானும் தமிழ் தாங்க… காரைக்குடி பக்கம்… நீங்க?” அடுத்து அவன் கேட்க, “பொள்ளாச்சி” அவள் சொல்ல, “கிரேட்! ஸ்பெயின் வந்து கொஞ்ச நாள் தான் ஆகுதோ?” லேசான சிரிப்போடு அவன் கேட்டதும், புருவம் சுருங்க, “ஏன் அப்டி கேக்குறீங்க?” என்றாள்.

“இல்ல, இன்னும் இப்படி தலை முதல் கால் வரை கவர் பண்ணிட்டு இருக்கீங்களே… அதான் கேட்டேன்” சொல்லிவிட்டு சிரித்தவனை ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் தவிர்த்தாள் வாணிலா.

மீதமிருந்த ட்ரிங்கை குடித்து முடித்தவன், காலி குவளையை தலைகீழாய் ஆட்டி, “காலி” என்றான் பாவமாய்.  அவள் ஒன்றுமே சொல்லவில்லை.

அவள் புறம் திரும்பியவன், “நீங்க ட்ரிங்க்ஸ் எடுத்துக்கலையா?” என்று கேட்க, “நோ நோ” சற்றே பதட்டமாய் சொன்னாள் அவள்.

மெலிதாய் சிரித்தவன், “அப்புறம் எதுக்கு இந்த ஸ்ட்ராப் கைல?” என்று சுட்டிக்காட்டி கேட்டிட, “குடுத்தாங்க, போட்ருக்கேன்!” என்றவளிடம், “தென் வொய் டோன்ட் யூ ஹெல்ப் மீ? ஐ லாஸ்ட் மை ஸ்ட்ராப், இன் தி கிரவுண்ட் வொய்ல் டேன்சிங்” என்றான் தயங்காமல்.

(அப்போ நீங்க ஏன் எனக்கு உதவக்கூடாது? நான் என்னோட ஸ்ட்ராப்பை ஆடும்போது தொலைச்சுட்டேன்”)

“நான் என்ன பண்ணனும்?” அவள் கேட்க, “என் கூட வந்து உங்க ஸ்ட்ராப்பை ஸ்கேன் பண்ணா போதும்!” அவன் சொன்னதும், அவன் காட்டிய இடத்தை பார்த்துவிட்டு சில நொடி தயக்கத்தில் ‘சரி’ என்பதாய் தலையாட்டினாள் அவள்.

“கூல்… லெட்ஸ் கோ!” முந்திக்கொண்டு சென்றவனை பின்தொடர்ந்தாள்.

டிஜெயின் சத்தம் காதை பிளந்தது அங்கே. எல்லோரும் சத்தமாக தான் பேசிக்கொண்டார்கள்.

குதி உயர்ந்த சேரில் அமர்ந்து வெய்டரிடம், “வன் கவா” என்றவன் ஆட்டத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டான். அவனுக்காக ஸ்ட்ராபை ஸ்கேன் செய்தவளுக்கு நாக்கு வரண்டதை போல தோன்ற, அங்கே அடுக்கி வைத்திருந்த பாட்டில்களை வெறித்தாள்.

‘நான் ஆல்கஹாலிக் எதுவும் இருக்காது போலவே!’ என்று தோன்ற, அங்கே நின்றவனிடம், “வாட்டர் ப்ளீஸ்” என்றாள். அவன் புரியாமல் மீண்டும் கேட்க, சத்தமாய், “வோட்டர்” என்று அழுத்தி சொல்ல, தலையாட்டியவன், சின்ன கண்ணாடி டம்ளர் ஒன்றை கொண்டு வந்து இவளிடம் வைக்க, ‘ஒரு வாய் கூட காணாதே!’ என்ற அலுப்போடு, அப்படியே எடுத்து வாயில் சரித்தாள்.

தண்ணீர் உப்பு கரித்தது. தாகமும் அடங்கவில்லை. என்ன செய்வதென தெரியாமல் அவள் அமர்ந்திருக்க, மற்றொருக்க ட்ரின்க் வாங்க வேண்டி திரும்பியவன், இவளை ஆச்சர்யமாய் நோக்கி, “ஹே… குட்” என்றான்.

“என்ன?”

“குடிக்க மாட்டேன்னு நினைச்சேன்!” சொன்னவன், மற்றொரு ட்ரின்க் வாங்கி அருந்த, “தாகமா இருந்துச்சு, அதான்!” என்றவளை, “தாகமா இருக்குன்னு ‘வோட்கா’வா? நைஸ் நைஸ்” என்றவன் பேச்சு, பெண்ணவளை திகிலடைய செய்ய, “வோட்கா’வா? நான் வோட்டர் தானே கேட்டேன்” என்றாள் பீதியுடன்.

குடித்துக்கொண்டிருந்த ட்ரின்க் புரை ஏற, “வாட்?” என சிரித்தவன், “ஹோ… நீங்க வோட்டர்’ன்னு சொன்னது, ‘வோட்கா’ன்னு கேட்ருக்கும்…” என்று இன்னும் சிரித்தான்.

அதில் முகம் இன்னும் கலவரம் பூச, பெரிய பெரிய மூச்சுகளை இழுத்துவிட்டவள், திடீரென அமர்ந்தவாக்கிலேயே தடுமாற, “ஹே, நிலா! ஆர் யூ ஓகே?” என்று அவன் கேட்டு முடிக்கும் முன்னே, மயங்கி சரிந்தவளை, அவசரமாய் வந்து தாங்கினான் கோவர்த்தன், நிலவை சுமக்கும் மலையென!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!