Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Neeyindri Vaazhveno

Neeyindri Vaazhvaeno 18 2

“சரி மா போறோம். நீங்களே அவளுக்குப் போன் பண்ணி சொல்லிடுங்க. நாங்க வரவேண்டிய இடம் வந்திடுச்சு வச்சிடுறேன்.” என ரிஷி போன்னை வைக்க…. அப்போது தான் சாதனாவிற்கு  லேசான பதட்டம் ஆரம்பித்தது.

அவள் இதுவரை மறந்து இருந்தது எல்லாம் இப்போது நினைவுக்கு வந்தது. யாரெல்லாம் வருவாங்க, எப்படிப் பேசணும்? ரிஷி, நேகாவை பத்தி அவங்களுக்குத் தெரிஞ்சிருக்குமா… அதைப் பத்தி எதாவது பேசுவாங்களா… இப்படி நிறையக் கேள்விகள் அவளுக்குள் இருந்தது.

இதுவரை புன்னகை இளவரசியாக இருந்தவள், இப்போது பதட்டபடுவது ரிஷிக்கும் புரிய… “நீ எப்பவும் எப்படி இருப்பியோ அப்படியே இரு.” என்று மட்டும் சொன்னான். அதுவே சாதனாவின் பதற்றத்தை குறைத்தது.

அப்படி நடந்துக்கோ இப்படி நடந்துக்கோ என்றால்… உண்மையில் இன்னும் பதட்டம் அதிகரித்து இருக்கும்.



Advertisement

இவர்கள் சென்றது கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் ஒரு ரெசார்ட்டிற்கு. இவர்கள் காரில் இருந்து இறங்கியதும், ஹோட்டல் சிப்பந்தி வந்து காரை பார்கிங்கில் விட எடுத்து சென்றார்.

பார்ட்டிக்கு என்று தனியாக முன் பதிவு செய்த ஹாலுக்குள் இருவரும் நுழைந்த போது… இவர்களைப் பார்த்ததும் அனைவரும் கைதட்டி வரவேற்றனர். அந்தச் சூழலே மனதிற்கு உற்சாகத்தைத் தந்தது.

இவர்களைப் பார்த்ததும் துள்ளிக்கொண்டு ஒரு பெண் வந்தாள். வந்த வேகத்தில் ரிஷியை லேசாக அனைத்து விடுவித்தவள், அதே வேகத்தில் சாதனாவையும் அனைத்து கன்னத்தோடு கன்னம் வைத்து இழைந்தாள். சாதனாவிற்கு இது புது அனுபவம். அவள் திகைத்துப் போய்ப் பார்க்கும் போதே… ரிஷி அவளை அறிமுகம் செய்தான்.

Advertisement

“இவ கீர்த்தி என் ப்ரண்ட்.”

Advertisement

“ஹாய்…”

“ஹாய் சாதனா…ரொம்ப அழகா இருக்கீங்க வாங்க.” எதோ நன்றாகத் தெரிந்தவரிடம் பேசுவது போல் பேசிவிட்டு கீர்த்தி முன்னே செல்ல….

“அவங்க யாரு?” சாதனா ரிஷியிடம் கேட்க….

Advertisement

“அவ எத்தனை படத்தில நடிச்சிருக்கா அவளைப் போய்த் தெரியாதுன்னு சொல்ற… இது மட்டும் அவளுக்குத் தெரிஞ்சா ரொம்ப மூட் அவுட் ஆகிடுவா….” ரிஷி சிரிக்க…. சாதனாவும் புன்னகைத்தாள்.

பேசிக்கொண்டே இருவரும் மற்றவர்கள் இருக்கும் இடம் வந்திருந்தனர்.

[the_ad id=”6605″]

ஒவ்வொருவராக வந்து அறிமுகம் செய்து கொள்ள…. பெண்களை மட்டும் கட்டிக்கொள்ள அனுமதித்த சாதனா… ஆண்கள் அவளை நெருங்கும் முன்னரே கரம் குவித்து விடுவாள். அதனால் அவர்களும் புன்னகையுடன் விலகி சென்றனர்.

இதெல்லாம் சின்னத் திரையும் பெரிய திரையும் கற்றுக்கொடுத்த கலாச்சாரம். அன்பை காட்ட அனைத்துக் கொள்கின்றனர். ஏன் எட்ட நின்று அன்பை காட்ட முடியாதா… ஏனோ இதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இதெல்லம் ரிஷிக்கு எதுவும் இல்லை… அவன் ஒவ்வொருவரிடமும் கட்டி பிடி வைத்தியம் நடத்திக்கொண்டு இருந்தான்.

ரொம்ப நிறையப் பேர் எல்லாம் இல்லை… கொஞ்சம் பேர் தான். சில நடிகர், நடிகைகள். அதோடு ரிஷியோடு இணைந்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள். சின்னத்திரை பிரபலங்கள் சில பேர் இருந்தனர்.

எல்லோரின் அறிமுகமும் முடிந்து, ரிஷி அவளைக் கடைசியாக அஷோக்கிடம் அழைத்துச் சென்றான். இதுவரை அஷோக் சாதனாவையே கவனித்துக்கொண்டு இருந்திருப்பான் போல… அவனே முதலில் கரம் குவிக்க… ஏற்கனவே புன்னகை முகமாக இருந்த சாதனாவின் முகம் மேலும் மலர்ந்தது. அவளும் பதிலுக்குக் கரம் குவித்தாள்.

“ஹாய் பிரின்சஸ் வெல்கம்.”

“எல்லோரும் ஹோம்லியான பொண்ணு வேணும்னு தான் ஆசை படுவாங்க. ஆனா அப்படிக் கிடைக்கிறது கஷ்ட்டம். நீ ரொம்ப லக்கி டா ரிஷி…” அஷோக் ரிஷியை வாழ்த்துவது போலச் சாதனாவை புகழ…. அதைக் கேட்டவளுக்கோ உச்சி குளிர்ந்து.

“ஏன் டா இன்னைக்கு வந்ததுல இருந்து பொய் தான் சொல்லனும்னு முடிவு பண்ணி இருக்கியா…” ரிஷி இருவரையும் வார… அப்போது கூடச் சாதனா புன்னகையுடன் தான் இருந்தாள்.

“சிஸ்டர் இவன் சொல்றதை கேட்காதீங்க. நான் பொய்யே சொல்ல மாட்டேன்.”

அப்போது கீர்த்தி அழைக்க… எல்லோரும் அங்கே சென்றனர். இருவரையும் சேர்த்து கேக் வெட்ட வைத்து… பிறகு ஊட்டி விட்டு அடுத்து என்ன வழக்கம் போல் ட்ரிங்க்ஸ் தான்.

ஆண்கள் எல்லோரும் எடுத்துக்கொள்ள… “இல்லை நான் தான் டிரைவ் பண்ணனும். அதனால வேண்டாம்.” என ரிஷி மறுத்து விட்டான்.

அங்கங்கே ஒரு குழுவாக அமர்ந்து பேச… பெண்கள் பக்கமும் குடிக்கப் பானங்கள் வந்தது. சிலர் எடுத்துக்கொள்ள… சிலர் குளிர்பானம் மட்டும் எடுத்துக்கொண்டனர்.

முதலில் ஸ்டார்ட்டர் வகைகள் பரிமாறப்பட…. ஒரு சிலரை தவிர யாருமே அதைத் தொடவில்லை…. அவர்களுமே கொஞ்சமாகத்தான் எடுத்துக்கொண்டனர்.

நம்மோடு இருப்பவர்கள் நன்றாகச் சாப்பிட்டால் தானே நமக்கும் சாப்பிட தோன்றும். எல்லோரும் பேருக்கு கொறிப்பதை பார்த்த சாதனா அவளுமே பேருக்கு தான் கொறித்தாள்.

இதாவது பரவாயில்லை… முக்கிய உணவு வகைகள் வந்த போது… யாருமே தொடவில்லை…. எல்லோரும் சாலட் மற்றும் பழக் கலவைகளை மட்டும் தான் எடுத்தனர்.

பெண்களில் மட்டும் இல்லை ஆண்களில் கூடச் சிலர் அப்படித்தான் சாப்பிட்டனர். நாம எடுத்து சாப்பிட்டா எதாவது நினைப்பார்களோ… இப்ப என்ன செய்வது? என்பது போல் அவள் யோசிக்க… அந்நேரம் சரியாகச் சிமியும், அவள் கணவர் மேத்யுவும் வந்தனர்.

சாதனாவிற்கு ச் சிமியை மட்டும் முன்பே தெரியும் என்பதால்… அவளிடம் இயல்பாகப் பேசினாள்.

“டிரஸ் ரொம்ப நல்லா டிஸைன் பண்ணி இருக்கீங்க சிமி.”

“நானே சொல்லனும்னு இருந்தேன். சூப்பரா இருக்கீங்க சாதனா. உங்களுக்குப் பிடிச்சுதா…. ரொம்பத் தேங்க்ஸ்.” என்றவள் சாதனாவோடு சாப்பிட சென்றாள்.

சாதனாவின் தட்டில் இருப்பதைப் பார்த்த சிமி “என்ன இவ்வளவு கொஞ்சமா எடுத்திருக்கீங்க?”

“அவங்க எல்லாம் இது கூட எடுக்கலை…. அப்ப நான் மட்டும் எப்படிச் சாப்பிடுறது?”

“அவங்க எல்லாம் சினி பீல்ட் இல்லையா…. உடம்பு வெயிட் போடாம இருக்கணும். அதனால டயட். நமக்கு என்ன? வாங்க நாம நல்லா சாப்பிடுவோம்.” என்றாள் சிமி.

இருவரும் சேர்ந்து உணவு வகைகளை எடுத்துக் கொண்டு. வேறு பக்கம் சென்றனர்.

“ஒரு நாள் சாப்பிட்டா கூடவா வெயிட் போடும்.”

“ஒருநாள் சாப்பிட ஆரம்பிச்சா… தினமும் சாப்பிட ஆசை வரும் அப்புறம் கண்ட்ரோல் போகிடும். அதனால தான்.”

இது என்ன டா வாழ்க்கை நினைச்சதை சாப்பிட கூட முடியாம எனச் சாதனா நினைக்க… அதை உணர்ந்தவள் போல் சிமி தொடர்ந்தாள்.

“அவங்களுக்காகப் பீல் பண்ணாதீங்க சாதனா… அழகா இருந்தா தான சான்ஸ் வரும். எவ்வளவு பணம் வாங்கிறாங்க? அப்புறம் இருக்க வேண்டியது தான்.”
“இதைப் போய் அவங்ககிட்ட நீங்க சொன்னீங்கன்னு வச்சுகோங்க. இதெல்லாம் பிடிக்காத மாதிரி பில்ட்அப் கொடுப்பாங்க. நமக்கு இந்த ஜீரோ சைஸ் எல்லாம் ஒத்துவராது. நல்லா சாப்பிடனும் அதுக்கு ஏத்த மாதிரி நல்லா வேலை செய்யணும் அதுதான் என்னோட பாலிசி.” என்றவள் சாப்பிட துவங்க… சாதனாவும் சாப்பிட ஆரம்பித்தாள்.

ரிஷியும் அஷோக்கும் தனியாகப் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அஷோக்கே சாதனாவை பற்றி ஆரம்பித்தான்.

 

[the_ad id=”6605″]

“சாதனா வெரி சாப்ட்.”

“பார்க்கத்தான். ஆனா உள்ளுக்குள்ள ஷி இஸ் வெரி ஸ்டாரங்.”

“ஹாஹா அதுக்குள்ள உன் பொண்டாட்டி பத்தி இவ்வளவு தெரியுமா….”

“நேஹா என்னோட ரிஷப்ஷன் வந்திருந்தா… அப்புறம் நேத்து என் ரூமுக்கே பேசனும்னு சொல்லிட்டு வந்தா… சாதனா இப்ப வரை அதைப் பத்தி ஒரு வார்த்தை கேட்கலை…யாரோ என் ப்ரண்ட் வந்திட்டு போன மாதிரி அமைதியா இருக்கா…”

“அவ கேட்டிருந்தா நீ அவளை டென்ஷன் பண்ணலாம்னு பார்த்திருப்ப…. இப்ப அவ உன்னை மண்டை காய விட்டாளா… உனக்கு ஏத்த ஆளுதான்.” அஷோக் மேலும் சிரிக்க….

“நீ வேற கடுப்பை கிளப்பாத…” என்றான் ரிஷி.

“ரிஷி, நீ ரொம்ப அதிர்ஷ்ட்டம் பண்ணி இருக்க…. அதனால தான் எங்கேயோ மாட்ட வேண்டிய நீ, தப்பிச்சு சாதனாவை கல்யாணம் பண்ணி இருக்க…”

“இங்க பாரு நீயும் என் அப்பா மாதிரி பேசாத…”

“ரிஷி, நிஜமாவே உனக்குப் புரியலை… நேகா நீ நினைக்கிற மாதிரி இல்லை. நாம அறிமுகம் ஆகும் போதே…அவ உன் லவ்வர். அதனால என்னால எதுவும் சொல்ல முடியலை…. உன்னைப் பார்கிறதுக்கு முன்னாடி அவ என்ன பண்ணிட்டு இருந்தா தெரியுமா…”

“வேண்டாம்.” என்ற ரிஷி எழுந்து விட்டான்.

“ஐ கேன் ப்ரூவ் இட் ரிஷி.”

“நீ ஒன்னும் பண்ண வேண்டாம். அவ கொஞ்சம் சுயநலவாதி எனக்குத் தெரியும். ஆனா அவளைப் பத்தி என்னால தப்பா நினைக்க முடியாது. இனி அவளைப் பத்தி தப்பா பேசாத….”

“அப்ப நீ அவளோட இனியும் பேசுவ…”

“இல்லை… ஷி இஸ் நாட் இன் மை லைப் எனிமோர்.”

“இதுல நீ உறுதியா இருந்தா போதும் ரிஷி.” அஷோக் புன்னகைக்க…

“நான் போய் மத்தவங்களைப் பார்கிறேன்.” என்றபடி ரிஷி எழுந்து கொண்டான்.

சாதனா சிமி கீர்த்தியோடு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தாள். அப்போது அங்கே வந்த அஷோக் “ஐஸ்கிரீம் சாப்பிடலையா சாதனா…” எனக் கேட்க…

யாரும் எடுக்காததால் சாதனா தானும் எடுக்காமல் இருந்தாள். அஷோக் வந்து கேட்டதும் என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் பார்க்க…

“வாங்க நாம ரெண்டு பேரும் போய் எடுத்திட்டு வரலாம்.” என அவன் அழைக்க… அவன் தன்னோடு எதோ பேச விரும்புகிறான் எனச் சாதனா புரிந்து கொண்டாள்.

சாதனா எழுந்து அவனோடு செல்லும் போது… ரிஷி அவர்களைப் பார்த்தாலும் எழுந்து வரவில்லை…. அவன் பார்வையில் கூட வித்தியாசமாக எதுவும் இல்லை… இருவரும் சென்று ஐஸ்கிரீம் எடுத்ததும், அங்கேயே சற்று தள்ளி நின்றனர்.

“சொல்லுங்க அஷோக், உங்களுக்கு என்கிட்டே எதோ சொல்லணும் இல்லையா…”

சாதனா நேரடியாகக் கேட்க…. சிரித்துச் சமாளித்தாலும் அஷோக் மறுக்காமல் ஆமாம் என்றான்.

“அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட சில கேள்விகள் கேட்டுகிறேன். நீங்களும் ரிஷியும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்ஸ் இல்லையா… அப்புறம் ஏன் எங்க கல்யாணத்துக்கும் வரலை ரிஷப்ஷனுக்கும் வரலை?….”

“நான் இந்தியவில இல்லை சாதனா… என்னோட வீடு அமெரிக்காவில் இருக்கு. இன்னைக்குக் காலையில தான் இந்தியா வந்தேன். நான் ஜப்பான் போய் இருந்ததுனால என்னால உங்க கல்யாணத்துக்கு வர முடியலை.”

“நான் பிஸ்னஸ்க்காக இந்திய வந்து போவேன். வந்த இடத்தில தான் ரிஷியோட பழக்கம். அப்புறம் சேர்ந்து படம் தயாரிச்சோம். ரொம்ப நெருக்கமும் ஆனோம். நான் அவன்கிட்ட மட்டும் தான் ப்ரீயா பேசுவேன். அவனும் அப்படித்தான். எங்களைத் தாண்டி விஷயம் வெளிய போகாது.”

“ஓ அப்படியா… சரி நீங்க என்கிட்ட என்ன சொல்லணும்?”

“சாதனா, உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்னு தெரியலை… இருந்தாலும் சொல்றேன். ரிஷி ரொம்ப நல்லவன். அவன் செஞ்ச ஒரே தப்பு தகுதி இல்லாதவளை காதலிச்சது தான். ரிஷி நேகாவை விட்டு விலகிட்டான். ஆனா அவளை வெறுக்களை… நான் சொல்ல வர்றதையும் கேட்க மாட்டேங்கிறான். அதனால அவனுக்குப் பின்னால பிரச்சனை வரலாம். அப்பவும் நீங்க அவனோட இருக்கணும் சாதனா…”

என்னவோ சொல்லப்போகிறான் எனப் பயந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்த சாதனாவின் முகம் அஷோக் சொன்னதை முழுவதும் கேட்டதும் புன்னகையில் விரிந்தது.

அஷோக்கிற்குச் சாதனாவை பற்றித் தெரியாது இல்லையா… அவளாவது ரிஷியை விடுவதாவது. ஆனால் அவள் அதைப் பற்றி ஒன்றும் அஷோகிடம் சொல்லவில்லை….மேற்கொண்டு அவன் சொல்வதைக் கவனித்தாள்.

“நீங்க ரிஷியை படம் எடுக்க விடக்கூடாது சாதனா. அவன் இந்தப் பீல்ட்ல இருக்கக் கூடாது.”

“ஏன் அஷோக் அப்படிச் சொல்றீங்க. அவரு இந்தப் பீல்ட்ல இருந்தா என்ன ஆகும் ? இன்னைக்குக் கூட இங்க யாருமே நேகாவை பத்தி பேசலையே…”

“யாரும் பேச மாட்டங்க. ஏன்னா அவங்களுக்கு ரிஷியோட தயவு வேண்ணும். அவனுக்குக் கோபம் வர்ற மாதிரி நடந்துக்க மாட்டாங்க. அதோட ரிஷி அவனா யார்கிட்டயும் நேகாவை விரும்புறேன்னு சொன்னதே இல்லை…. அதனால யாராலையும் கேட்கவும் முடியாது.”

“ஓ… இப்படி வேற இருக்கா….”

“அவன் இந்தப் பீல்ட்ல இருந்தா…. என்னைக்காவது ஒருநாள் நேகா திரும்ப உங்க வாழ்க்கையில வர வாய்ப்பு இருக்கும்.”

“அஷோக் நீங்க ஒன்னு புரிஞ்சிக்கணும். ரிஷி இந்தப் பீல்ட்ல இல்லைனாலும், அவர் நேகாவை பார்க்கனும்னு நினைச்சா அவரை யாரால தடுக்க முடியும்.”

 

[the_ad id=”6605″]

“நீங்க ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க சாதனா…. உங்களுக்கு நேகாவை பத்தி தெரியாது. அவ அமைதியா விலகி போற டைப் கிடையாது.”

“எனக்கு நேகாவை பத்தி எந்தப் பயமும் இல்லை…. ரிஷி எனக்குத் துரோகம் பண்ண மாட்டார்.” சாதனா நம்பிக்கையாகச் சொல்ல…

“உங்க நம்பிக்கை பலிக்கட்டும் சாதனா.” அதோடு அஷோக் பேச்சை முடித்துக்கொள்ள இருவரும் திரும்பி சென்றனர்.

பதினோரு மணிக்கு மேல் தான் அங்கிருந்து கிளம்பினர். வரும் வழியில் இருவருமே பேசிக்கொள்ளவில்லை… அமைதியாக வந்தனர். அஷோக்கோடு என்ன பேசினாள் என்று ரிஷி அவளிடம் கேட்கவில்லை.

அஷோக் நேகாவை பற்றிச் சொல்ல வந்தது ரிஷிக்குப் புரியாமல் இல்லை…. அதை அவனால் ஜீரணிக்கத் தான் முடியவில்லை…. தன்னை எப்படி ஏமாற்றி இருக்கிறாள் என மனதிற்குள் கொதித்துப் போய் இருந்தான்.

நேகாவை பற்றி அஷோக் தவிர வேறு யார் சொல்லி இருந்தாலும் ரிஷி நம்பியிருக்கவே மாட்டான். அஷோக் மீது அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை.

ரிஷி நினைத்திருந்தால் அவனால் நேகாவை பற்றி அக்குவேர் ஆணிவேராகக் கண்டு பிடித்திருக்க முடியும். ஆனால் அவன் அவள் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் அவனை அப்படி எல்லாம் யோசிக்க வைத்தது இல்லை… தன்னையும் ஒரு பெண் முட்டாள் ஆக்கி இருக்கிறாள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் கஷ்ட்டமாக இருந்தது. உண்மை சில நேரங்களில் கசக்கத்தான் செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!