Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 9

கள்வன் – 9

 

ஒரு வாரம்… இன்பனும், யுக்தாவும் தங்கள் வாழ்க்கையைப் பற்றிய முடிவை எடுத்து ஏழு நாட்கள் கண்மூடி கண் திறப்பதற்குள் ஓடியிருந்தது. அதே வேகத்துடன் சில முடிவுகளும் சூட்டோடு சூடாய் எடுக்கப்பட்டு இன்று நிச்சயதார்தத்தில் வந்து நிற்கிறது.

 



Advertisement

இன்பன் வீட்டில் சிறியதாய் வைத்துக் கொள்ள பிரியப்பட்டாலும் யுக்தா வீட்டில் ஒரே பெண் என்பதால் அனைத்தையும் விமர்சையாகவே செய்ய எண்ணி, நிச்சயத்தை மண்டபத்தில் வைத்திருந்தனர்.

 

மேளதாள ஓசைகளால் அந்த மண்டபம் நிறைந்திருக்க, அவ்விழாவின் நாயகி அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தயாராகிக் கொண்டிருந்தாள். அவளை முறைத்தபடியே இனியா அங்குமிங்கும் அவ்வறையை சுற்றி சுற்றி வந்தாள்.

Advertisement

 

Advertisement

“இப்போதாவது சொல்லுடி… எனக்குத் தெரியாமல் எப்போது நீ காதலித்தாய்?” கடுப்புடன் கேட்டாள் இனியா.

 

“இரண்டு வருடம் முன்னால் நான் வேறு டீமில் இருந்தேனே… அப்போது பேபி… நான் மட்டும் தான் காதல் செய்தேன். அவருக்கு அப்போதிருந்த சூழலில் என்னை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.”

Advertisement

 

தான் ஒளிவு மறைவு இல்லாமல் இருப்பது போல் அவள் இல்லையே என்ற கடுப்பில் வசை மொழிகள் சரளமாய் வந்தது இனியாவிற்கு, “நான் உன்னிடம் எல்லாவற்றையும் சொல்றேனேடி… நீ ஒரு வார்த்தை இதைப் பற்றி வாய் திறந்திருக்கிறாயா? கல்லூலி மங்கி, நீ முன்னர் இருந்த டீம் மேட்ஸை வேண்டுமென்றே எனக்கு அறிமுகப்படுத்தாமல் விட்டுவிட்டாய்… நானும் யார் இருக்கா இல்லைனு கண்டுக்காம விட்டுட்டேன்.” 

 

[the_ad id=”6605″]

 

புருவத்தின் நிறத்தை கருமையாக்கிக் கொண்டிருந்தவள் தன் வேலையயை நிறுத்தி இனியாவை ஏறிட்டு, “தோல்வியை பொதுவெளியில் ஒத்துக்கொள்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும் பேபி. என் மனம் கவர்ந்தவர் என் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று எப்படி உன்னிடம் வந்து சொல்வது. என் தோல்வி என்னோடே போகட்டும் என்று தான் உன்னிடம் சொல்லவில்லை. மற்றபடி உன்னிடம் வேண்டுமென்றே மறைக்கவில்லைடி. ஹோப் யூ கேட்ச் மை பாயிண்ட்.”

 

“என்னவோ பேசி என் வாயை அடைத்து விட்டாய். அட்லீஸ்ட் அவர் யாரென்றாவது சொல்லேன். நானும் ஒரு வாரமாய் உன்னிடம் கேட்கிறேன், பசை போட்டது போல் வாயை திறக்கவே மாட்டேன் என்கிறாய்.”

 

“உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று நினைத்தேன் பேபி… நிச்சயம் செய்யும் போது பார்த்துக் கொள்.” என்றுவிட்டு தன் கண் மையை சரி செய்தாள் யுக்தா.

 

அவளின் பதிலைக் கேட்டு உதட்டை சுழித்தவள், “ப்ச்… போடி… உனக்கு நான் முக்கியம் இல்லை அதனால் தான் தட்டிக் கழிக்கிறாய்…” 

 

“போடி லூசு… என்கிட்ட அவர் போட்டோ கூட இல்லைடி, பிறகு எப்படி காண்பிப்பதாம்? அவர் பெயர் வேண்டுமானால் சொல்கிறேன்… இன்பன்.” 

 

“ஒரு போட்டோ கூடவா இல்லை. நம்பும்படியாய் இல்லையே…” சந்தேகத்தோடு வினவினாள் இனியா.

 

“சத்தியமாக இல்லைடி பேபி… இந்த வாரம் முழுதும் வீட்டில் பேசி சம்மதம் வாங்கவே கழிந்து விட்டது. நானே இன்னும் அவருடன் சரியாக பேசக்கூட ஆரம்பிக்கவில்லை. வேண்டுமென்றால் நம் கம்பெனி பேஸ்புக் பேஜை பாரேன். ஏதாவது மீட்டிங்கின் போது எடுத்த புகைப்படத்தில் அவர் இருக்க வாய்ப்புள்ளது.”

 

“புடலங்கா ஐடியா… போடி… இதற்கு நான் நேராக மாப்பிள்ளை அறைக்கே சென்று பார்த்துவிட்டு வந்து விடுவேன்…” வீரவசனம் பேசினாள் இனியா. 

 

இனியா வெற்றுப் பேச்சு பேசுகிறாள் என்றெண்ணி சவால் விட்டாள் தோழி, “போய் பாருங்க மேடம். யார் வேண்டாம் என்றது?”

 

“நான் போகமாட்டேன் என்கிற தைரியத்தில் சவடால் விடுகிறாயா? இதற்காகவே நான் போய் பார்க்கப் போகிறேன்.” என்றவள் தன் சேலையை ஒருமுறை சரி செய்து கொண்டு வெளியேற முற்பட்டாள்.

 

“ஹேய் நில்லு பேபி… அவர்கள் குடும்பத்தில் யாராவது தப்பாக நினைக்கப் போகிறார்கள்…” பதறிப் போய் தடுத்தாள் யுக்தா. எங்கே தோழியை யாரும் தவறாக எண்ணி விடுவார்களோ என்ற பயம் அப்பட்டமாய் வெளிப்பட்டது.

 

“ஏய்… நான் என்ன எனக்கா மாப்பிள்ளை பார்க்கப் போகிறேன். உன் மாப்பிள்ளையை தான் பார்க்கப் போகிறேன். யார் என்ன சொல்லிவிட முடியும்…” என்று தோள்களை குளுக்கிக் கொண்டு யுக்தாவின் மறுப்பை சட்டை செய்யாமல் வெளியேறினாள்.

 

கால்கள் மணமகன் அறை நோக்கி நடை போட கண்கள் தூரத்தில் அமர்ந்து பேச்சு சுவாரசியத்தில் மூழ்கி இருக்கும் பெற்றோரிடம் சென்று மீண்டது. என்னவோ வீரவசனம் பேசி வெளியே வந்துவிட்டாள் தான் ஆனால் இப்போது பெற்றோரை பார்த்ததும் மனதில் குழப்ப மேகங்கள். என்ன சொல்லி அங்கு செல்வது என்று சட்டென ஒரு எண்ணம் எழ அறைக்கு செல்லாமல் அப்படியே திரும்பி விடலாமா என்று கூட தோன்ற,

 

“இனியா…” என்ற சிவகாமியின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது. 

 

நடையை நிறுத்தி குரல் வந்த திசை நோக்கி திரும்ப அங்கு சிவகாமி நின்று கொண்டிருந்தார்.

 

“ஆன்ட்டி… நீங்கள் இங்கே?” அவரைப் பார்த்ததும் அவளுக்கு களிப்பு கூடியதோ என்னவோ… அவருக்கும் முகம் கொள்ளா சிரிப்பு. அவள் பெயர் ஏற்படுத்திய தாக்கமோ அல்லது உதவி செய்த நன்றியோ… 

 

“அதை நான் கேட்க வேண்டும்மா? நீ எப்படி இங்கு?”

 

[the_ad id=”6605″]

 

“என் தோழிக்கு தான் நிச்சயதார்த்தம் ஆன்ட்டி. நீங்கள்?” என்று இனியா வாய்மொழியாய் வினவினாலும் அவள் மனம் என்னவோ இதயன் நினைவாய் அலறியது. அவன் வந்திருப்பானோ என்று கடைக்கண் பார்வை அம்மண்டபத்தை மீண்டும் ஒரு முறை சுற்றி வந்தது. 

 

“என் சின்ன பையனும் உன் தோழி யுக்தாவும் தான் விரும்புறாங்கமா…” மகனுக்கு தான் நிச்சயம் நடக்கிறது என்னும் செய்தி தாங்கி வந்த அவரது வார்த்தைகளில் வருத்தம் இருந்ததற்கான சுவடை இருவருமே அறியவில்லை. சிவகாமிக்கு இத்திருமணத்தில் முழு சம்மதம் என்றாலும் ஏனோ சுணக்கம் இருந்தது உண்மை. தன் உள்ளுணர்வு பொய்யானதால் வந்த நெருடல் அது…

 

அதற்கு நேர்மாறாய் ஆச்சர்யத்தில் விக்கித்துப் போனாள் இனியா. இனி இதயனை பார்க்க வாய்ப்புக் கிடைக்கப்போவதில்லை என்றெண்ணி அவன் நிலை குறித்து அறிய எழுந்த ஆவலை தனக்குள்ளே அடக்கி வெளிகாட்டிக் கொள்ளாமல் இருந்தவளுக்கு ஜாக்பாட் அடித்தது போல் இருந்தது. இனி அவள் காட்டில் வசந்த காலம் தானோ…! 

 

“பிளசண்ட் சர்பிரைஸ் ஆன்ட்டி. யுக்தா உங்கள் வீட்டிற்கு தான் வரப்போகிறாளா…

 

ஆனால் நான் இன்னும் உங்கள் பையனை பார்க்கவில்லை ஆன்ட்டி. இந்த யுக்தா கண்ணாம்பூச்சி காட்டிட்டு இருக்கா.” என்று குற்றம் வாசித்தவளுக்கு அவருடன் பேச தயக்கமேதுமில்லை.

 

“அதற்கென்னமா… இப்போது தான் வரிசையோட புது துணி கொடுத்தாங்க மாற்றிக் கொண்டு இருக்கிறான்மா… தயாரானதும் இங்கே தானே வரப்போகிறான், அப்போது பார்த்துக் கொள்.” என்றுவிட, இனியா ஏதோ கேட்க நினைத்து பின் தயங்கி நின்றாள்.

 

சிவகாமி என்னவென்று கேட்பதற்குள் யுக்தாவை கூட்டி வந்து சபையில் அமரவைக்க இனியா அவளிடம் சென்று ஒட்டிக் கொண்டாள். சடங்கு சம்பிரதாயங்கள் மடமடவென்று நடக்க யுக்தா இன்பன் வீட்டிலிருந்து எடுத்துக் கொடுத்த உடுப்பை மாற்றிக் கொண்டு வர, அவளைப் பார்த்து விழிகள் பளிச்சிட இதழ் மலர்ந்தான் இன்பன்.

 

அவனின் மலர்ச்சி அவனது சரிபாதியையும் தொற்றிக் கொள்ள அழகாய் விரிந்தது யுக்தாவின் அதரங்கள். இதை அருகில் இருந்து கண்டு கொண்டிருந்த இனியாவினுள் நினைவு அலைகள். இன்பனின் புன்முறுவல் அவனின் தமையனை நினைவுபடுத்த தான் எதற்காக இப்படியெல்லாம் நினைக்கிறோம் என்று சிந்தியாமல் மனம் செலுத்திய பாதையில் இதயனைத் தேடியது அவளின் இதயம்.

 

அடுத்து வந்த இரண்டாவது மாதத்தில் ஒரு நல்ல திருமணத் தேதி குறிக்கப்பட்டு நிச்சயப் பத்திரிக்கை வாசித்து யுக்தாவையும், இன்பனையும் ஒன்றாய் நிற்க வைக்க, இனியா யுக்தாவின் கையை சுரண்டினாள், “ஏய் யுக்தா இவங்க தாண்டி அவங்க…” மெல்லமாய் கிசுகிசுத்தாள்.

 

“என்னடி சொல்ற?”

 

“அதான் நான் சொன்னேனே சென்ற வாரம் ஒரு ஆன்ட்டிக்கு உதவி செய்தேன்னு… அவர்கள் மகன் கூட படுக்கையில் இருக்கிறார் என்று சொன்னேனே…” 

 

“அதுக்கென்னடி இப்போ? முக்கியமில்லாத விஷயத்தை முக்கியமான நேரத்தில சொல்லிட்டு இருக்க…” சபையில் நின்றுகொண்டு இனியாவை முறைக்க முடியாமல் அவஸ்தையுடன் வார்த்தைகளை துப்பினாள் யுக்தா.

 

“ச்சு… உன் ஆள்கிட்ட அவர் அண்ணன் வரவில்லையான்னு கேட்டு சொல்லுடி…” யுக்தாவை லேசாய் தன் புறமிழுத்து காதை கடித்தாள் இனியா.

 

“கடுப்பாக்காத இனியா. நான் ஏற்கனவே சொல்லிட்டேன் அதைப் பற்றி அதிகமாக ஆராயாதே என்று…”

 

“ஏய் லூசு உன் அவரோட அண்ணன்தான்டி அவரு… அவர் வந்திருக்கிறாரா? அவருக்கு என்ன ஆச்சுனு கேட்டு சொல்லுடி…” என்று யுக்தாவை உசுப்ப, அதுவரை அசுவாரஸ்யமாய் கேட்டுக் கொண்டிருந்தவள் விலுக்கென இனியா புறம் திரும்பினாள்.

 

“என்னடி சொல்ற? இவர் அண்ணனைத் தான் சைட் அடிச்சிட்டு வந்து என்னிடம் புலம்பினாயா?”  

 

“ஸ்ஸ்… சைட் எல்லாம் அடிக்கவில்லை. இன்று ஆன்ட்டியைப் பார்த்தேனா அவர் நினைவு வந்தது. உனக்கு நெருங்கிய சொந்தமாகப் போகிறவர் அதனால் உன்னவரிடம் கேட்டால் விபரம் தெரிந்து கொள்ளலாமே என்று கேட்டேன். பொது அறிவும் வளரும்ல…” ஒரு வாரமாகவே அவ்வப்போது அவன் நினைவு வந்து போனதெல்லாம் இரகசியம் காத்த பெண்ணவள் சப்பைக்கட்டு கட்டினாள்.

 

“எனக்கு நெருங்கிய சொந்தம் என்பதோடு நிறுத்திக்கோ பேபி… நீ சொந்தமாக முயற்சி செய்யாதே, அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தோன்றவில்லை…” தோழியைப் படித்த தோழியாய் எச்சரித்தாள் யுக்தா.

 

யுக்தாவிடம் கேட்டால் அறிவுரையைத் தவிர தகவல் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்பதை நன்கு உணர்ந்த இனியா லாவகமாக அவளை திசை திருப்பினாள், “நீ முதலில் பேபியை இந்த பக்கம் கட் பண்ணிட்டு அந்தப் பக்கம் போடுடி…” என்று சைகையுடன் யுக்தாவின் மறுபுறம் கை காட்டினாள்.

 

அவளுடன் பேச்சு சுவாரஸ்யத்தில் எங்கிருக்கிறோம் என்பதைக் கூட ஒரு நொடி மறந்து இனியா கூறியதை செயல்படுத்த பேபி என்று மொழியெடுத்து அவளின் இடப்புறம் திரும்பினாள் யுக்தா.

 

அவளை விட்டு நூலளவே தள்ளி நின்ற இன்பனுக்கு அவளின் இந்த அழைப்பில் ஏக குஷி.

 

“இப்போதாவது இந்தப் பக்கம் திரும்பணும்னு தோணுச்சே உனக்கு… அந்தப் பொண்ணுகிட்ட பேசிட்டே எங்கே என்னை மறந்திட்டாயோனு நினைச்சேன். ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது உன் பேபி அழைப்பு கூட கிக்கா தான் இருக்கு பேபி…” என்று அவன் விழிகள் பளிச்சிட கண் சிமிட்ட,   

 

[the_ad id=”6605″]

 

“அச்சோ… இந்த லூசுகூட சேர்ந்து என்ன வேலை செஞ்சி வச்சிருக்கேன்…” என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் யுக்தா. 

 

“நோ ரெகிரிட்ஸ் பேபி…” அவளின் மனதை படித்தவன் போல் இன்பன் சொல்ல, யுக்தா உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி புகைப்படம் எடுக்க ஏதுவாய் அமைதியாக நின்று கொண்டாள்.

 

“அன்லிமிடெட் பீரியட் முடியப்போகிறது பேபி…” அவளின் நிசப்தத்தை உடைக்க  அவனே சீண்டலைத் துவங்கினான்.

 

அவன் வார்த்தைகளின் பொருள் உணர்ந்த யுக்தாவின் தேகம் சிலிர்த்து அடங்க,  மத்தாப்பு மழை அவள் அகத்தினுள். காதலிக்கப்படுகிறோம் என்று வாய் மொழியால் கேட்கும் போது ஏற்படப் போகும் அதீத களிப்பைவிட காதல் கைகூடும் நிலையில் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது என்பதை உணர்த்தும் அவனின் வார்த்தைகள் அவளை ஒரு இன்ப அவஸ்தைக்குள் இழுத்துச் சென்றன. சபை நாகரிகம் கருதி தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தப் பேச்சை மாற்றினாள் யுக்தா.

 

“இவள் என் பெஸ்டி, இனியா. நம்ம கூட தான் வேலைப் பார்க்கிறாள்.” என்று இனியாவை அவனுக்கு அறிமுகப்படுத்த, “ஓ… இவங்க தான் இனியாவா? பார்த்திருக்கிறேன் ஆனால் பெயரெல்லாம் தெரியாது.” என்று அவன் சொல்லிய நேரம் அவர்களின் உரையாடலை கலைக்கவென குரல் கொடுத்தார் புகைப்படக் கலைஞர்.

 

*^*^*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!