Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedமிஸஸ் மிஸ்ஸிங் !

மிஸஸ் மிஸ்ஸிங் – 5

ஹரிதாஸ் மற்றும் நரேஷ் இருவரும் அமைதியாய் உட்கார்ந்திருந்த இடம், ஊர் மத்தியில் அமைந்திருந்த ஒரு பூங்கா. கடவுளாய் இருந்தாலும் கூட சில சட்ட திட்டங்கள் இருக்கும். அதற்குக் கட்டுப்பட்டுத் தான் அவர்கள் வாழ்க்கையும் கூட இருக்கிறது என்று பெருமாள் முன்பே பேசியதைக் கேட்டிருப்போம்.



Advertisement

அதுபோலவே அவர்கள் இந்தப் பூலோகத்தில் வாழச் சில வரைமுறைகளை அவர்களுக்கே வகுத்துக் கொண்டார்கள். மானிடனாய் பிறந்தால் எப்படி இருப்பார்களோ அப்படிதான் இருக்க வேண்டும். பிற மனிதர்கள் முன்பு அவர்கள் கடவுள் என்பதைக் காட்டிக்கொள்ளக் கூடாது. எக்காரணம் கொண்டும் இந்த உண்மை வெளியே கசியக் கூடாது. லட்சுமி தேவியைக் கண்டு பிடித்தாலும், அவளைப் பற்றிய உண்மைகளை அவளுக்கு உரைக்கக் கூடாது. இப்படிப் பல விதிமுறைகள் அவர்களுக்கு அவர்களே வகுத்துக்கொள்ள, அதில் முக்கியமாய் இந்த விதிமுறைகளை மீறக் கூடாது என்று நினைத்திருந்தார்கள்.

Advertisement

Advertisement

மீறினால்..!

Advertisement

மீறினால்?

மீறினால் ஒன்றும் ஆகி விடாது, பெரிய குழறுபடி உண்டாக வாய்ப்புகள் அதிகம். அவ்வளவே. அதைத் தவிர்க்க எண்ணினார்கள். அதைத் தாண்டி வானம் இடிந்து விழும், பூமி உடைந்து பிளக்கும், எரிமலை வெடித்துச் சிதறும், உலகம் அழிந்துவிடும், உயிர் பறிபோய்விடும், குருதிப் புனல் கொப்பளிக்கும் என்ற அதிகபட்சக் கற்பனைகளுக்கு இங்கே இடமில்லை.

நெஞ்சத்தில் குடி கொண்டு, கற்பனையில் தங்க விக்ரகமாக ஜொலிக்கும் பெருமானை இப்படி ஜீன்ஸ் பேண்ட் சகிதம் கண் முன் பார்த்தால், எவனுக்குத் தான் உலகம் ஸ்தம்பித்துப் போகாது. அவரவர் வாழ்க்கை தங்கு தடையின்றிச் செல்ல வேண்டுமானால், இவர்கள் எவர் வாழ்க்கையிலும் நுழைந்து விளையாடாமல் சமநிலை ஸ்தாபிப்பதே நன்மை பயக்கும் என்பது உண்மை. அதைத் தாண்டி இவை எதுவும் அம்மஞ்சல்லிக்கு உபயோகப்படாது.

இப்படி அவர்களே அவர்களுக்கு விதிமுறை வகுத்துக்கொண்டு இருக்க, அப்பொழுது தான் அந்தப் பூங்காவிற்கு வைஷ்ணவியும் அவளுக்குப் பேசி முடித்த மாப்பிள்ளை ரிஷியும் கைகள் கோர்த்துக்கொண்டு நடந்துவந்தார்கள்.

அதை கண்ட நரேஷ், “ பாஸ், அங்க பாருங்களேன். நம்ம லட்சுமி தேவி போலவே இல்ல?” என்று அவன் கூறியதைக் கேட்ட ஹரியும் திரும்பிப் பார்த்துவிட்டு,

“இல்ல” என்றான் சற்றும் யோசிக்காமல்.

நம்மாளுக்கு அவ்ளோ கான்பிடன்ஸ். அவரு பொண்டாட்டி அவருக்கு தெரியாமையா?

இருந்தும் ஹரி கூறியதைச் சற்றும் மதியாமல், மீண்டும் நரேஷ், “பாஸ், நீங்க பாருங்க அங்க… ஒழுங்கா பாருங்க. பாத்துட்டு சொல்லுங்க. பாக்க லட்சுமி தேவி போலத்தான் இருக்காங்க. ஏனோ தானோன்னு பாக்காதீங்க!” என்று அவன் கூறவும் ஹரி பல்லைக் கடித்துக்கொண்டு அவனைத் தான் முறைத்திருந்தான்.

நரேஷ் குழம்புவதிலும் தவறில்லை. வைஷ்ணவி மனோவை அப்படியே உரித்து வைத்திருப்பாள். அக்கா தங்கைகள் அப்படித் தானே இருப்பார்கள். அதிலும் தவறில்லை தானே.

“நான் சொன்னா கேளு… என் பொண்டாட்டியை எனக்குத் தெரியாதா? “

“அதில்ல பாஸ்!”

“எதில்ல?!”

“அட ஒரு நிமிஷம் என்ன பேச விடுங்க பாஸ்!”

“மொதல்ல இந்தக் கொல்லக் கூட்டத் தலைவனை கூப்புட்ற மாதிரி பாஸ் பாஸ்ன்னு கூப்புட்றதை நிறுத்து!”

“அதுதான் நல்லாருக்கு. டாபிக் மாத்தாம இப்போ அந்த பொண்ணை பாருங்க…”

“நான்தான் சொல்லிகிட்டே இருக்கேன், இல்லைன்னு…” என்று ஹரி பல்லைக் கடிக்க,

“அதெப்படி அவ்ளோ கான்பிடன்ட் அஹ் சொல்லுறீங்க? அவங்களுக்கு இருவத்தி அஞ்சு வயசு இன்னும் ஆரம்பிக்கலைன்னா, அவங்கள அடையாளம் கண்டுபிடிக்க முடியாம கூட நீங்க முழிக்குலாம்ல?” சரியாகக் கேட்டான் கேள்வியை.

அவன் கேள்வியில் புருவங்கள் முடிச்சிட, “இவ கண்டிப்பா என் லச்சு கிடையாது அது பக்கா. ஆனா நீ சொன்னது போல அவ ஜாடை இந்த பொண்ணுக்கு இருக்கு… என்னனு பாலோ பண்ணி பாத்துருவோமா? “ என்றான் ஹரி யோசனையாய்.

“பாஸ்… ஆனா ஒன்னு. இங்க வந்தது தான் வந்திங்க, அக்மார்க் லவர் பாய் மாதிரியே நடந்துக்க ஆரம்பிச்சுட்டீங்க. சூப்பர் பாஸ்!”

“இப்போ நான் அந்த பொண்ணை பாலோ பண்ணலாம் சொன்னதுல என்ன டா லவர் பாய பாத்த? போய் பாத்தாதான விவரம் தெரியும்!”

“சரி விடுங்க, உங்களுக்கு சொன்னா புரியாது!”

“எதே? எனக்குப் புரியாதா?”

“இப்டியே பேசிகிட்டு தான் இருக்க போறோமா இல்லை அந்த பொண்ணு பின்னாடி போக போறோமா?”

“அந்த பொண்ணு கூட இன்னொருத்தன் வேற ரொம்ப க்ளோஸ் அஹ் நிக்கிறான். என்ன மேட்டர் அஹ் இருக்கும்?”

“பாய்ப்ரெண்ட் அஹ் இருக்கும் பாஸ்!”

“அடேய் நரேஷு, என்னடா இப்டி சொல்ற? அப்போ ஒரு வேல நீ சொன்ன மாதிரி அவ என் பொண்டாட்டி அஹ் இருந்து தொலைஞ்சுட்டா? என் நிலைமை?”

“திண்டாட்டம் தான்!” என்று வயிற்றைப் பிடித்துச் சிரித்தவனை எரித்துவிடும் பார்வை ஹரியிடம்.

“பாஸ், நீங்க ஏதும் கவலை படாதீங்க. இப்போ இருக்குற பொண்ணுங்க எல்லாம் பாய்ப்ப்ரெண்ட் அஹ் கல்யாணம் பண்ணிக்குறது ரேர். வெள்ளை காக்கா மல்லாக்க பறக்குற மாதிரி நடக்காது. அப்டியே நடந்தாலும் அது ஒரு பேரதிசயம். சோ நீங்க ஒர்ரி பண்ணாதீங்க பாஸ். இடைல பூந்து களைச்சு விட்ருவோம்!”

“இடைல பூந்து களைச்சு விட அதென்ன பரமபதமா?”

“பாருங்க விளையாட்டுல கூட நீங்க பழைய பஞ்சாங்கமா தான் இருக்கீங்க. கேரம் போர்ட்ன்னு கூட சொல்லலாம். உங்களுக்கு எதுவுமே தெரியல பாஸ். அதான் நான் இருக்கேன்ல. பாத்துக்குறேன் விடுங்க!”

“ஆனா நரேஷு, என் நிலைமை எப்படி ஆகிருச்சு பாத்தியா? உன்னையெல்லாம் பேச விட்டு வேடிக்கை பாக்குறேன் பாரேன்!”

“ஹீஹீஹீஹீஹீ”

அவர்கள் பேசி முடிப்பதற்குள் அங்கே வைஷ்ணவியும் ரிஷியும் ஓர் ஓரமாய் உட்கார்ந்து அவர்கள் காதலைத் தண்ணீர் ஊற்றி வளர்த்துக்கொண்டு இருந்தார்கள்.

பாவம் அவர்கள் அவர்களின் உலகில் சஞ்சரிக்க, இங்கே இவர்கள் இருவரும் அதை காணச் சகிக்காது காதிலும் மூக்கிலும் புகை விட்டுக்கொண்டிருந்தார்கள்.

“என் வயிறு எரியுது. அங்க பாருடா எப்படி உரசிகிட்டு உக்காந்துருக்காங்கன்னு!”

“அட, இன்னும் அது நம்ம மேடம் அஹ்ன்னு கான்பார்ம் பண்ணல. அதுக்குள்ள குதிக்காதீங்க பாஸ். ஏதாச்சும் பண்ணுவோம். கெரக்கத்தை நீங்கத் தேவையான எடத்துல எல்லாம் உங்க பவர்ஸ் யூஸ் பண்ண மாட்டீங்க. திங்கறதுக்கும் தூங்கறதுக்கும் மட்டும்…..” என்று அவன் முடிப்பதற்குள் ஹரி அவனை ஒரு பார்வை பார்க்க,

அந்தப் பார்வை ‘இனி உனக்குச் சோறு கிடையாது’ என்பதைச் சொல்லாமல் சொல்லியது.

“தேவை இல்லாம பேசாம எப்படி இந்த பொண்ணைப் பத்தி கண்டுபிடிக்கிறது சொல்லு மேன்!”

“இந்தா இருக்குல்ல! இதை வச்சு தான்” என்று ஒரு தொடு திரை கைப்பேசியை எடுத்து நீட்ட, ஹரிக்குக் குழப்பம் மேலோங்கியது.

“இது எப்டிடா கெடச்சுது?”

“அதெல்லாம் அப்டித்தான்… நீங்க மொதல்ல இதுல அந்த புள்ளைய போட்டோ எடுங்க. அப்றம் நம்ம ஷேசா குட்டிய கூப்டு, அவன்கிட்ட ஹெல்ப் கேப்போம். ஏதோ பெரிய ஆளா தான் இருப்பான் போல. அப்பளம் மாதிரி நொறுங்கிப் போன காரே பல கோடி தேறும் போல பாஸ்…!”

“எல்லாம் சரி தான். ஆனா நீ போடற பிளான் அஹ் பாலோ பண்ணனும் நெனச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு”

“என்ன பாத்து இப்டி சொல்லிட்டீங்களே ப்ரபு!” என்று நரேஷ் முகத்தைப் பாவமாக வைத்துக்கொள்ள,

“மூடிட்டு போன்னு சொன்னாதான் மூடுவியா!”

“அப்படியே ஆகட்டும் பாஸ்!” என்று வாயை மூடிக்கொண்டான்.

அங்கே வைஷ்ணவியும் ரிஷியும் காதல் புறாக்கள் போல் கொஞ்சிக்கொண்டு இருப்பதை ஹரியின் கையில் இருந்த போன் அழகாக படமாக்கிக்கொண்டு இருந்தது.

“எக்ஸ்க்யூஸ் மீ!..”

“டேய் நரேஷு, இரு அதான் போட்டோ எடுக்குறேன்ல. கிளியர் அஹ் எடுக்க விடு!”

“ஹெலோ மிஸ்டர்!”

“என்ன மிஸ்டர்ன்னு கூப்புட்ற, பாஸ் மறந்துருச்சா இப்போ?”

“ஹலோ, திரும்பி பாருங்க சார். பாத்தா தானே தெரியும் பேசுறது நரேஷா சுரேஷா ரமேஷான்னு” என்று நடுவயதை ஒத்த ஒருவர் இவன் தோள்களைக் குலுக்கி கேட்க, அப்பொழுது தான் திரும்பிப் பார்க்கிறான் ஹரி.

.

.

.

ஒரு மணி நேரம் கழித்து…

கே 4 போலீஸ் ஸ்டேஷனில் ஹரியும் நரேஷும் மேல் சட்டை இல்லாமல் அங்க வஸ்திரத்தில் அமர்ந்திருக்கிறார்கள்…

ஆண்டவா…

இது என்ன கூத்து?

ஹரி ஓர் ஓரமாய் அமர்ந்து நரேஷை முறைத்துக்கொண்டு இருக்க, நரேஷ் ஒன்றும் சொல்லாமல் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு இருந்தான்.

“உன்ன நம்பி கூட்டிட்டு வந்ததுக்கு, உன்னால என்ன பண்ண முடியுமோ அதை சிறப்பா பண்ணிட்டல்ல!”

“அதில்ல பாஸ்… நான் ஏதோ நல்லது செய்யப் போய்… இப்டி..”

“இப்டி ஜட்டியோட உக்கார வச்சுருக்க! அதான!”

“அவ்வ்வ்வ்… சாரி பாஸ்!”

அதாகப்பட்டது என்ன ஆச்சுன்னா, நரேஷ் டக்குனு ஒரு போனை தூக்கி ஏதோ கர்ண மகாராசா மாதிரி நீட்டினாரே… அது அவங்க நடந்து வந்துட்டு இருக்கப்ப எதுக்க வந்த ஒரு ஆளுடைய பேண்ட்ல இருந்து சுடச் சுட சுட்டது தான். அவங்க நேரமோ என்ன கெரகமோ அந்த போனை பறிகொடுத்தது மப்டீல வந்த போலீஸ்கார்.

அந்த போலீஸ்கார் யூ டர்ன் எடுத்து இவங்கள புடிக்க போனப்போ, இதுங்க ரெண்டும் வைஷ்ணவி ரிஷியை சின்சியர் அஹ் போட்டோ புடிச்சுட்டு இருந்துதுங்க. போனை புடிக்க போனவர் அப்டியே இதுங்க ரெண்டையும் லபக்குனு புடிச்சுட்டு வந்துட்டாரு. இப்போ ரெண்டு பேரும் மூலையில மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு இருக்காங்க.

இதுதான் நடந்தது.

அதேநேரம் அந்த போலீஸ்கார் இவர்களைப் பார்த்துவிட்டு லத்தியோடு வருகிறார்.

“ஏன்டா பொறுக்கி பசங்களா! பார்க்ல நின்னு என் போனை எடுத்ததும் இல்லாம, கொஞ்சம் கூட பயமே இல்லாம என் போன் வச்சே அந்த பொண்ணை போட்டோ எடுத்துட்டு இருக்கீங்க… எவ்ளோ தைரியம்…!”

அவர் பேசிக்கொண்டே போக நரேஷ் படபடத்து,

“சார், தப்பா பேசாதீங்க. எங்க பாஸ் எவ்ளோ பெரிய ஆள்னு தெரியாம வார்த்தையை விடாதீங்க. அப்றம் யாருனு தெரிஞ்சா உங்க குடும்பமே பீல் பண்ணும்!”

“எடு செருப்ப… என்ன மெரட்டுறியா? என் குடும்பத்து மேலையே கை வச்சுருவியா நீயு. பாப்போம்டா என்ன கிளிக்குறேன்னு”

“நான் எப்போ அப்டி சொன்னேன்?”

“வாய மூடு. நீங்க ரெண்டு பேரும் எப்படி இந்த லாக்கப் விட்டு வெளிய போறிங்கன்னு பாக்குறேன் டா… ரெண்டு நாள் சோறு தண்ணி இல்லாம கிடைந்து சாவுங்க…!”

“சார், என்னை என்ன வேணும்னாலும் சொல்லுங்க. என் பாஸ் அஹ் பத்தி எதுவும் பேசாதீங்க!”

“ஏன்? உன் பாஸ் வாயில கொழுக்கட்டை வச்சிருக்கானா? நீ என்ன அவனுக்கு சொம்பு தூக்குற?”

அவர் இப்படிக் கூறியதும் ஹரிக்கு ஹைய்யோ என்றானது.

‘நாம்பாட்டுக்கு சிவனேனு தான இருந்தேன்! என்னையும் ஏன்டா கோத்துவிட்டு வெடிக்க பாக்குற?’ என்று நரேஷை பார்த்து மனதில் அர்ச்சித்த ஹரி, அந்த போலீஸிடம் திரும்பி,

“சார், நாங்க ஏதோ தெரியாம பண்ணிட்டோம்!”

“பண்ணது பிராடுத்தனம், இதை தெரியாம பண்ணீங்களோ. வாயில விரல் வச்சா கடிக்கத் தெரியாது பாவம்..”

அந்த போலீஸ்கார் சற்றும் இறங்குவதாய் இல்லை. இவர்களின் நிலையும் கொஞ்சம் கவலைக்கிடமாகி இருந்தது. சரியாக யுகாவின் ஆக்சிடென்ட் கேஸில் விசாரணைக்காக வந்த காவலரே இந்த ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டராக வந்தார்.

இருவரையும் அடையாளம் கண்டுகொண்டவர்,

“என்ன தம்பி, நீங்க ரெண்டு பேரும் இப்படி வந்து உக்காந்துருக்கீங்க? என்னாச்சு?” என்று உண்மையாய் அதிர்ந்து கேட்டார். அவருக்கு ஹரி மீதும் நரேஷ் மீதும் நன்மதிப்பு இருந்தது போலும்.

ரோட்டில் அடிபட்டுக் கிடந்தவனை இப்பொழுது உயிரோடு மீட்டிருக்கிறார்களே. அந்த நல்லெண்ணம் தான்.

“இல்லை, சார்… அது வந்து…” என்று சொல்லத் தயங்கியே ஹரி நரேஷை முறையோ முறையென்று முறைக்க,

நரேஷ் தான் நடந்ததைக் கூறினான். ஆனால் வைஷ்ணவியைச் சொந்தக்கார பெண் என்பது போல் திரித்துக் கூறினான்.

அதைப் பொறுமையாகக் கேட்டவர்,

“சரி தம்பி, இப்போ உங்கள வெளிய எடுக்க யாராச்சும் இருக்காங்களா? என்னால அப்டியே உங்கள வெளிய விட முடியாதுல்ல. யார்கிட்ட இன்பார்ம் பண்ணனும் சொல்லுங்க, நான் அந்த ஹெல்ப் பண்றேன்!” என்று உதவ முன்வந்தார்.

அந்த நொடி அந்த இன்ஸ்பெக்டர் கடவுளுக்கே கடவுளாகத் தெரிந்தார் என்றால் மிகையல்ல. இந்தக் காதல் இருக்கிறதே… எத்தனை பெரிய வலியோனையும் எளிமையாக வலிமை இழக்கச் செய்கிறது.

“முதலில் அவள் உன்னை மெட்டி போட வைப்பாள்,

பின்னால் முட்டி போட வைப்பாள்!

அவள் ஜெட்டி போட வைத்தாலும் பரவால்ல குருஜி” என்ற நகைச்சுவை வசனம் தான் இங்கு எவ்வளவு பொருந்திப் போகிறது! விதி யாரை விட்டது, இவரை விட.

அப்படி அவர்களுக்கு இன்ஸ்பெக்டர் மூலம் உதவ வந்தவன் தான் யுகபாரதி. அவர்களைக் காப்பது தன் கடமையென நினைத்து, இருவரும் ஊருக்கு புதிது என்பதைத் தெரிந்து அவன் கெஸ்ட் ஹவுஸிலேயே இடமும் கொடுத்துவிட்டான்.

இவர்களின் சில்மிஷங்கள் இனிதே துவங்க இருந்தது…

பிரிவோம் சந்திப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!