Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இமை மூடும் விழியும் நீ

இமை மூடும் விழியும் நீ -1

இமை மூடும் விழியும் நீ -1

“அல்லாஹூ அக்பர் அல்லா
அல்லாஹூ அக்பர் அல்லா
அஷ்ஷஹது அன்ன முஹம்மதன்
ரசூலுல்லாஹ்….”

ஃபஜர் (காலை வேளை) தொழுகைக்கான பாங்கு சத்தம் கேட்க அந்த வீட்டில் ஆட்கள் நடமாட்டம் தென்பட்டது.

இரவு முழுவதும் உறக்கமில்லை அவர்களுக்கு.மனமெங்கும் இனம் புரியா பதட்டமும்,பயமும் மட்டுமே.



Advertisement

யாரிடம் என்ன பேசி ஆறுதல் பெற முடியும்?அதனால் இறைவனை சரணடைந்தனர் தொழுகையின் வாயிலாக.

அந்த வீட்டின் பெண்கள் அனைவரும் ஒரே வரிசையில் நின்று தொழுக துவங்கினர்.

தொழுகை முடித்து இறைவனிடம் தங்கள் மனக்குறையை இறக்கி வைத்து மீண்டும் அவரவர் ஒரு மூலையில் முடங்கிக் கொண்டனர்.

Advertisement

“ராபியா நதீரா வந்துட்டாளா?” மெல்லிய குரல் ஒன்று அறையில் இருந்து வெளிவர யாரும் பதிலே சொல்லவில்லை.

Advertisement

“ராபியா நதீரா வந்துட்டாளான்னு கேட்டேனே” மீண்டும் வந்தது அந்த முதிய பெண்மணியின் குரல்.

அவரின் கேள்விக்கு பதிலுக்கு மாறாக கேவல் வந்தது ராபியாவிடம்.

“அழாத ராபியா‌.அழுது மட்டும் என்னாக போகுது.இருக்குற தெம்பை அழுதே கரைச்சுட்டேன்னா அடுத்து உன் புருசனை சமாளிக்க தெம்பு வேணாமா?” ஹமீதாவின் பேச்சில் உடல் நடுங்கத் தொடங்கியது ராபியாவிற்கு கணவனின் கோபத்தை எண்ணி.

Advertisement

“ராபியா”

மீண்டும் அந்த முதியவர் குரல் கொடுக்க விரைந்து அந்த அறைக்குள் சென்றாள் அவள்.

“தாதிமா (பாட்டிமா) நீங்க தூங்குங்க.நதீரா வந்தா நான் உங்களை எழுப்புறேன்” என்றாள் அவள்.

“நதீரா வந்துடுவாளா?” கவலையும் ஆவலுமாய் கேட்ட அந்த முதியவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை அவளுக்கு.

“ வந்தா நேரா உங்க கிட்ட கூட்டிட்டு வரேன்,சரியா.இப்போ தூங்குங்க பார்ப்போம்” சிறு பிள்ளைக்கு சொல்லுவது போல் சொல்லி அவரின் நெஞ்சில் மெல்ல தட்டிக் கொடுத்து,தலை கோதி தூங்க வைத்தாள்.

‘ஏன்டி நதீரா இப்படி பண்ணின.எல்லாரும் எவ்வளோ கஷ்டப்படுறோம்.தயவு செஞ்சு வந்துடுடி ‘மனதில் எண்ணியவளை அவளின் அன்னையின் குரல் கலைத்தது.

“ஆஷியா தாய்மா (பெரியம்மா)க்கு டீ கொண்டு வந்து கொடு”

ஹமீதாவின் சொல்படி டீ போட்டுக் கொடுத்து விட்டு அவர்களின் எதிரே சோபாவின் கீழ் அமர்ந்து அதில் தலைசாய்த்து அமர்ந்தாள்.

ஹமீதா ராபியாவை கட்டாயப்படுத்தி அந்த டீயை பருக வைத்தார்.

“என்ன குறை வச்சேன் அவளுக்கு? ஆசைப்பட்ட படிப்பு,வேலை அவ ஆசைப்பட்ட துணி,நகைன்னு எல்லாம் வாங்கி கொடுத்தோமே!இப்படி மூஞ்சில கரி அள்ளி பூசிட்டாளே” நெஞ்சில் அடித்து அழுதார் ராபியா.

‘அவ ஆசைப்பட்ட துணி வாங்கிக் கொடுத்த நீங்க அவ ஆசைப்பட்டவனோட வாழ்க்கையை அமைச்சு தர மாட்டீங்கன்னு தான் போய்ட்டா’ மனதில் எண்ணிய ஆஷியா அதை வெளியில் சொல்லவே இல்லை.

இரண்டு நாட்களாக நதீரா செய்ததற்கு இவளையும் போட்டு வாட்டி எடுத்தவர்கள் இப்பொழுது தான் அமைதி காக்கிறார்கள்.

அதை தானே ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் நினைத்ததை மனதோடு வைத்துக் கொண்டாள்.

“ம்மா அப்பா வந்துட்டு இருக்காராம்” ரியாஸ் சொல்லியபடியே உள்ளே வர பெண்கள் படக்கென்று நிமிர்ந்து அமர்ந்தனர்.

“அப்பா வேற எதுவும் சொன்னாராடா?” ஹமீதாவின் கேள்விக்கு இல்லை என்று தலையசைத்தான் அவரின் மகன்.

“என்ன ஏதுன்னு ஒன்னும் சொல்லாம நம்மளை பதற வச்சுட்டே இருக்கனும் இவங்களுக்கு.இனி வந்து என்ன ஆட்டம் ஆட போறாங்களோ!” புலம்பியபடி ஹமீதா எழுந்து சென்றார்.

“ஏய் கூட்டுக் களவாணி,அப்பா வந்ததும் இருக்குடி உனக்கு” என்ற தம்பி ரியாசின் மேல் குஷனை தூக்கி எறிந்தாள் ஆஷியா.

“பிசாசு,பொண்ணு மாதிரி இருடி.ஆம்பிளை பிள்ளை மேல கை வைக்கிற” என்று கத்தியவனை ஹமீதா சத்தம் போட்டார்.

“ஏன்டா காலையிலேயே ஆரம்பிக்கிற.அவ பேசாம தானேடா இருந்தா.நீ தேவையில்லாம பேச போய் தான் அவ அப்படி செஞ்சா.ஏற்கனவே எல்லாரும் பதறி போய் இருக்கோம்‌.நீ வேற ஏன்டா”

“நீ என்னமா அவளுக்கு சப்போர்ட் பண்ற.பாத்துட்டே இரு!இவளும் நதீரா மாதிரி எவனையாவது இழுத்துட்டு ஓட போறா.அப்புறம் நீயும் தாய்மா மாதிரி மூலையில உட்கார்ந்து அழுதுட்டு இருக்க போற” என்றவனின் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள் ஆஷியா.

“யாரை பேசறோம்,என்ன பேசறோம்னு வார்த்தைல கவனம் வச்சு பேசி பழகு.மீசை மொளச்சதும் வாய் காது வரை நீளுது.கிழிச்சு விட்ருவேன்” குரலை உயர்த்தாமல் அவனை அதட்டியவள்

“ஒன் மோர் திங்.எனக்கு ஒருத்தனை பிடிச்சா,அவனை நான் காதலிச்சா ஓடிலாம் போக மாட்டேன்‌.அவன் கைப்பிடிச்சுட்டே அப்பா முன்னாடி நின்னு எனக்கு இவனை தான் பிடிச்சுருக்கு.இவனை தான் கல்யாணம் பண்ணுவேன்.நீங்க தான் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு சொல்லுவேன்.அந்த தைரியம் எனக்கு இருக்கு,ஆனா இனி என்னை இப்படி பேசற தைரியம் உனக்கு இருக்க கூடாது “ சீறலாய் பேசியவள் தன்னை முறைத்தவனை கண்டு கொள்ளாமல் தாதிமாவின் அறைக்குள் சென்றாள்.

நெஞ்சம் நெருப்பாய் கனன்றது.எப்படியெல்லாம் பேசுகிறான் என கோபமாய் வந்தது.

இவனே இப்படி என்றால் அடுத்து வீட்டின் மூத்த ஆண்கள் வந்து செய்யப்போகும் அலப்பறைகளை நினைத்து இப்பொழுதே கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.

மதுரையின் கோமதி புரத்தில் வழக்கறிஞர்கள் குடும்பம் அவர்களுடையது.

அவளுடைய தாத்தா நசீர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்.மனைவி மும்தாஜ் இல்லத்தரசி.

இவர்களுக்கு இரண்டு மகன்கள்.மூத்தவர் அப்துல் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.அவரது மனைவி ராபியா.மூத்த மகன் ஹைதர்.அவனும் வழக்கறிஞராக இருக்கிறான்.மகள் நதீரா.கணிணி‌ அறிவியலில் முதுகலை பட்டம் முடித்து சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறாள்.

இரண்டாமவர் சையத்.இவரும் அவர் அண்ணனைப் போல் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார்.மனைவி ஹமீதா.மூத்த மகள் ஆஷியா.நதீராவைப் போல கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்று வீட்டிலிருந்த படியே ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாள்.தம்பி ரியாஸ்.பொறியியல் மூன்றாம் வருடத்தில் இருக்கிறான்.

அண்ணன் தம்பி இருவரும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள்.உருது முஸ்லீம் குடும்பம் தான் அவர்களுடையது என்றாலும் பெரும்பாலும் பேச்சு மொழி தமிழ் தான்.

மும்தாஜ் வயது மூப்பு காரணமாக படுத்த படுக்கையாகி விட,அவரின் ஆசைப் பேத்தி நதீரா வீட்டை விட்டு சென்ற விசயத்தால் அவரின் உடல்நிலை இன்னும் நலிவடைந்தது.

நதீரா தான் வேலை செய்யும் மென்பொருள் நிறுவனத்தில் உடன் பணிபுரியும் ஆகாஷை விரும்பி வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவனுடன் சென்று விட்டாள்.

அதனால் தான் இத்தனை களேபரம்.இரண்டு நாட்களாக அவளை தேடும் பணி தீவிரமடைந்து நேற்று தான் அவள் இருக்கும் இடம் அறிந்து வீட்டின் ஆண்மக்கள் அனைவரும் சென்று இருக்கிறார்கள்.

இதில் நதீரா விரும்பியது முதல் அவள் ஆகாஷூடன் சென்றது வரை அத்தனையும் அவளுடனே சுற்றும் ஆஷியாவிற்கு தெரிந்திருந்தும் அதை தங்களிடம் சொல்லவில்லை என்று வீட்டினர் இவள் மீது தங்கள் கோபத்தை காட்டிவிட்டனர்.

உண்மையில் ஆஷியாவிற்கு நதீராவின் காதல் விசயம் பற்றி ஒன்றும் தெரியாது.

ஆஷியா தற்போது தான் வேலையில் சேர்ந்திருப்பதால் அது தொடர்பான பயிற்சியிலேயே அவளின் நேரம் செல்ல முன்பை போல நதீராவிடம் பேசுவது குறைந்தது.

தன் காதலை பற்றி நதீராவும் ஆஷியாவிடம் எதுவும் பகிரவில்லை.அப்படியிருக்கையில் இவளை எல்லாரும் குற்றம் சொல்ல இவளுக்கு அவர்கள் மேல் கோபமாய் வந்தது.

நதீரா தோழிகளுடன் சென்னையில் அறை எடுத்து தங்கி தான் வேலை பார்த்து வந்தாள்.தினமும் அவள் தாய் ராபியாவுடன் போனில் பேசுபவள் ஒருநாள் பேசவே இல்லை.

வேலை அதிகமாக இருந்திருக்கும்,உறங்கியிருப்பாள் என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்ட ராபியா அடுத்த நாளும் மகள் அழைக்காதிருக்கவே கணவனிடம் சொல்லி கவலைப்பட்டதோடு அவளுடன் தங்கியிருக்கும் தோழிகளுக்கும் அழைக்க அப்பொழுது தான் விசயமே தெரிந்து.

தோழிகளுக்கு நதீரா ஆகாஷூடன் சென்ற விவரம் தெரிந்தே தான் இருந்தது.இருந்தும் அவள் வீட்டினர் கேட்கும் பொழுது ஊருக்கு செல்கிறேன் என்று சொல்லி சென்றாள் என்றே கூறினர்.

பிறகு அப்துல் தான் காவல்துறையிடம் புகார் அளிப்பேன்.அவர்கள் வந்து விசாரிக்கும் விதத்தில் விசாரிப்பார்கள் என்று சற்று மிரட்டிய பின்னே தான் விசயம் வெளிவந்தது.

நதீரா சென்று சரியாக இரண்டு நாட்களுக்குப் பின் இவர்களுக்கு விசயம் தெரிய,தங்கள் வீட்டுப் பெண்ணின் நம்பிக்கை துரோகத்தில் உடைந்து போனவர்கள் பின்பு அவளை தேட துவங்கினர்.

நேற்று தான் அவள் ஆகாஷின் ஊரான மன்னார்குடியில் இருப்பது தெரிய வர அவளை அழைத்து வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் சென்று இருக்கின்றனர்.

‘அவள் வருவாளா?’ ஆஷியா மனதில் கேள்வியுடனே தாதிமாவின் கட்டிலில் தலை சாய வெளியே சத்தமாக பேச்சுக்குரல் கேட்டது.

விரைந்து வெளியில் சென்ற ஆஷியா அப்துல் ராபியாவை அறைவதைக் கண்டாள்.

“என்னடி பிள்ளை பெத்து வளர்த்து வச்சிருக்க? தீராத அவமானத்தை தேடி தந்துட்டு போய்ட்டா.வெளில தலைகாட்ட முடியாம பண்ணிட்டா.அவளை நம்பி வெளியூருக்கு வேலைக்கு அனுப்பினேன் டி.என்னை நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டா.பொண்ணு என்ன பண்றா எவன் கூட பேசுறான்னு தெரியாம,அவளை கண்காணிக்காம என்ன கிழிச்ச நீ” என்று மீண்டும் அறைய போனவரின் கைப்பிடித்து தடுத்தாள் ஆஷியா.

“இன்னும் எவ்ளோ நாளைக்கு பொண்ணு ஓடிப்போனா அம்மாவோட வளர்ப்பு சரியில்லைன்னு சொல்லி அவங்களை காயப்படுத்திட்டே இருக்க போறீங்க.அம்மா தான் பொண்ணை சரியா வளர்க்கனும்னா அப்போ அப்பாங்குற மனுஷன் என்ன தான் செய்வாரு?சொல்ல போனா ஒரு பொண்ணை வளர்க்குறதுல அப்பாவோட பங்கும் தான் ரொம்ப முக்கியம்.அந்த அம்மாவுக்கு பொண்ணை பார்த்திட்டே இருக்குறது மட்டும் வேலை கிடையாது.வீட்டை பார்க்கனும்,மாமனார் மாமியாரை பார்க்கனும்,அடுத்து உள்ள பிள்ளைங்களை பார்க்கனும்,புருஷனை பார்க்கனும்,வீட்டு கரண்ட் பில்ல இருந்து அடுப்புல கரண்டி பிடிச்சு சமைக்குற வரை எல்லாமே அவங்க தான் பார்க்கனும்.ஆனா அந்த பொண்ணோட அப்பா வெளில வேலையை மட்டும் பார்த்தா போதும் இல்ல?தாய்மாவை நதீராவை சரியா வளர்க்கலைன்னு திட்டுறீங்களே!அவ வளர்ப்புல உங்களோட பங்கு என்ன?நீங்க அவளை கண்காணிக்காம என்ன பண்ணீங்க?நீங்க தாய்மாவை அடிச்ச மாதிரி அவங்களும் உங்களை அடிச்சு இதே கேள்வியை கேட்டா என்ன பண்ணுவீங்க?”

சிறியவளின் பேச்சு பெரியவரின் கோபத்தீயில் எண்ணெய் ஊற்றியது போலானது.

“என்ன பேச்சு பேசுற நீ?இவ என்னை அடிச்சு கேள்வி கேட்பாளா?என்கிட்டயே இப்படி பேசுறதுக்கு எவ்ளோ தைரியம் உனக்கு?” உறுமினார் அப்துல்.

“தைரியம் என்கிட்ட நிறையவே இருக்கு.அதோட உங்க பொண்ணோட வளர்ப்பை பத்தி நீங்க தானே பேசுறீங்க.அதான் உங்களை கேள்வி கேட்குறேன்.சொல்லுங்க! உங்க பொண்ணோட வளர்ப்புல உங்களோட பங்கு என்ன?” இன்னும் அவரின் கையை தடுத்து பிடித்தவாறே கேள்விகளை அடுக்கினாள் ஆஷியா.

“விடு ஆஷி‌.உன் மேலயும் நான் கோபமா இருக்கேன்‌.இன்னொரு வீட்டுக்கு போற பிள்ளை மேல கை வைக்க கூடாதுன்னு இருக்கேன்.நீயே அதை மீற வச்சுடாத” கோபத்துடன் கத்தினார் அப்துல்.

“என் மேல நீங்க கோபப்படுறதுக்கு நான் என்ன தப்பு பண்ணினேன் தாய்பா (பெரியப்பா)?”

“நீயும் அவ ஓடிப்போனதுக்கு உடந்தை தானே.எல்லாம் தெரிஞ்சுருந்தும் நீயும் சேர்ந்து கழுத்தை அறுத்துட்டீல்ல”

“எனக்கு எல்லாம் தெரியும்னு உங்களுக்கு தெரியுமா?உங்க கிட்ட ஆதாரம் இருக்கா?ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்தக் கூடாதுன்னு உங்க சட்டபுத்தகத்துல எந்த பக்கத்துலயும் எழுதி இல்லையா?”

“ஆஷி போதும்.நீ உள்ளே போ” அவளின் தந்தை சையத் சொல்ல அவரிடம் வந்தாள் ஆஷியா.

“போதும்னு உங்க அண்ணன்கிட்ட சொல்லுங்கபா.எந்த தப்பும் செய்யாத என்மேல பழி போடுறாங்க.என்னைத் திட்டுறாங்க.நீங்க என்னன்னு கேட்க மாட்டீங்களா?” மூக்கு விடைக்க தந்தையிடம் தனக்கான நியாயம் கேட்டாள் ஆஷியா.

அவள் அப்படித்தான்.தன் மேல் தவறே இல்லாத பட்சத்தில் மற்றவர் தன் மீது குற்றம் சொன்னால் அவளால் தாங்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!