Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kaathal Theeyum Kaanal Neerum

அத்தியாயம் 10.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம் 10

கண் சிமிட்டிச் செல்லும்

விண்மீன் நீ என்று எண்ணினேன்

பின் தான் தெரிந்தது



Advertisement

என்னை எரிக்கும்

சூரியன் நீ என்று!!!

 

Advertisement

“ஒரு அம்மாவா, நான் உன்னை ரொம்ப காயப் படுத்திட்டேன் தேனு. நம்ம குடும்பத்துக்கும் என் அண்ணன் குடும்பத்துக்கும் பேச்சு வார்த்தை இல்லாத நேரத்துல நீ எப்படி கதிரை கட்டிக்கிறேன்னு சொன்னன்னு நான் யோசிச்சிருக்கணும். உன் மனசை புரிஞ்சிக்காம போயிட்டேன் தங்கம். இந்த அம்மாவை மன்னிச்சிரு டா”, என்று கதறி அழுதாள் சகுந்தலா.

Advertisement

 

தேன்மொழிக்கும் அழுகை வந்தது. “எனக்கு அவனை சுத்தமா பிடிக்காது மா. அவன் என்ன செஞ்சான் தெரியுமா?”, என்று அழுது கொண்டே கேட்டாள்.

 

Advertisement

மகள் கண்களில் இருந்து வந்த கண்ணீர் சகுந்தலாவைக் கரைக்க “இப்போது இவளை தேற்றுவது தான் முக்கியம். அவ மனசுல இருக்குற கவலை வெளியே வந்தா தான் அவ சகஜமா இருப்பா”, என்று எண்ணி அவள் அருகில் சென்று அமர்ந்தாள்.

 

“இப்ப சொல்லு கண்ணு. கதிர் என்ன செஞ்சான்?”

 

“யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொன்ன?”, என்று முறைப்புடன் கேட்டாள் தேன்மொழி.

 

“என்கிட்ட சொன்னா உன் மனசு பாரம் குறையும்னு எனக்கு தோணுது. இல்லை இப்பவே உன் புருஷனை என்கிட்ட விட்டுக் கொடுக்க கூடாதுன்னு நினைச்சா சொல்லாத”, என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் சகுந்தலா.

 

“சரி நான் யார் கிட்டயும் சொல்லலை. உன் கிட்டயும் சொல்ல மாட்டேன்”

 

“ரொம்ப சந்தோஷம். இப்படியே எப்பவும் இரு. புருஷன் பொண்டாட்டி சண்டை அடுத்தவங்களுக்கு தெரியக் கூடாது கண்ணு. யார் கிட்டயும் சொல்லாத. உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்”

 

“ஆனா அம்மா?”

 

“என்ன ஆனா? சரி நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு. கதிர் அழகா இல்லையா?”

 

“அதெல்லாம் உன் அண்ணன் மகன் அழகு தான்.  அவனை மாதிரி இந்த ஊர்ல வேற யாருமே இல்லை. என் கூட சுத்துற பிள்ளைகள் எல்லாம் அவனைக் கண்டாலே ஆன்னு வாயை பிளந்துட்டு நிப்பாளுக”

 

தேன்மொழி அப்படி சொன்னதும் அவளைப் பார்த்து சிரித்த சகுந்தலா “சரி அவன் கிட்ட ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கா?”, என்று கேட்டாள்.

 

“யாருக்கு தெரியும்?”, என்று சிரிப்புடன் கேட்டாள் தேன்மொழி.

 

சகுந்தலா பேசாதது தேன்மொழிக்கு மிகவும் வலித்தது. இப்போது அவள் பேசவும் பாதி பாரம் குறைந்தது போல இருந்தது. அதனால் இப்போது அழாமல் இயல்பாக இருந்தாள்.

 

தேன்மொழி கண்ணீரை நிறுத்தியது புரிந்தும் சகுந்தலா மேலும் மகளிடம் பேச ஆரம்பித்தாள். “ஏய், எங்க அண்ணன் அண்ணியைப் பத்தி என்னன்னு நினைச்ச? அவங்க வளப்பு ஒண்ணும் தப்பாகாது. கதிர் குணத்துலயும் ஒழுக்கத்துலயும் தங்கம். எத்தனை பேர் அவனுக்கு பொண்ணு கொடுக்க காத்திருக்காங்க தெரியுமா? என்கிட்டயே சொல்லுவாங்க, உன் அண்ணன் மகனை பேசலாம்னு இருக்கோம்னு. எனக்கு அப்ப எல்லாம் என் மகளை கதிர் கட்டிக்க மாட்டானான்னு ஏக்கமா இருக்கும்”

 

“போதும் போதும் உன் மருமகன் பெருமை. அவன் கிட்ட கெட்ட குணம் எதுவும் இல்லைன்னு ஒத்துக்குறேன். போதுமா?”

 

“ஹ்ம் சரி. அழகா இருக்கான். கெட்ட பழக்கம் இல்லை. நல்லா படிச்சிருக்கான். திறமையா சம்பாதிக்கிறான். அது மட்டுமில்லாம உன்னை வேற வீட்லயா கட்டிக் கொடுத்துருக்கேன்? என் பிறந்த வீட்ல தான?”

 

“ஆனா அவன் எப்பவும் என்கிட்ட வம்பிழுத்துட்டே இருப்பான் மா”

 

“அவன் வம்பிழுத்தா நீ சும்மா வந்திருக்க மாட்ட. பதிலடி கொடுத்துட்டு தான் வந்திருப்ப?”, என்று சொன்ன சகுந்தலாவுக்கு “இது வரை எதுக்கு அவன் இவ கிட்ட வம்பிழுத்ததை வீட்ல சொல்லலை?”, என்ற கேள்வி மனதில் பிறந்தது.

 

“அதெல்லாம் திட்டி விட்டுருவேன். ஆனா அவன் என்னை அடிமை மாதிரி நடத்துவானாம்”

 

“அடிமையா இருந்தா தான் என்னவாம் கண்ணு. உன் புருசனுக்கு தான அடிமையா இருக்க போற? நீ ஒரு விசயத்துல அவனுக்கு அடிமையா இருந்தா, அந்த அன்பு அவனை உன்கிட்ட ஆயிரம் விசயத்துல அடிமையா மாத்தும்”

 

“கல்யாணம் முடிஞ்சு சந்தோஷமா தான மா இருக்கணும்? அவன் சண்டை போட்டா என்ன செய்ய?”

 

“முடிஞ்ச அளவு பொறுமையா இரு. முடியலைன்னா பதிலடி கொடு. இனி காலம் முழுக்க அவன் கூட தான் உன் வாழ்க்கை. உன் வாழ்க்கையை உன்னால எப்படின்னாலும் மாத்தி அமைச்சிக்க முடியும் தேனு. உன் வயசை கடந்து வந்தவ தான நானு? புருஷன் உன் மேல அன்பா இருக்கணும்னு உனக்கு எதிர்பார்ப்பு இருக்கு. அது இல்லாம போயிருமோன்னு பயப்படுற. அதான் உனக்கு இவ்வளவு கவலை. எல்லாம் சரியாகிரும் செல்லம். கதிர் உன்னை நல்லா பாத்துக்குவான். இது வரைக்கும் நீ இந்த வீட்டு ராஜகுமாரி. அந்த வீட்ல இனி நீ தான் மகாராணி. அது உன் வீடு மா. என் மக வாழப் போற வாழ்க்கையை பார்த்து நாங்க எல்லாம் பூரிச்சு போகணும் சரியா?”

 

[the_ad id=”6605″]

 

“ஹ்ம்”

 

“என்ன டா அம்மா அவனுக்கே சப்போர்ட் பண்ணி பேசுறான்னு நினைக்காத. உனக்கு அங்க இருக்க மனசு ஒப்பலைன்னா அடுத்த நிமிஷம் இங்க வந்துரு கண்ணு. உனக்காக இந்த மொத்த குடும்பமும் இருக்கு. அந்த அளவுக்கு நடக்காது. ஆனா என் பொண்ணு எப்பவும் எனக்கு யாரும் இல்லையேன்னு மறுக கூடாது.  சரியா டா?”

 

“சரி மா”

 

“அம்மா மேல கோபம் இருந்தா மன்னிச்சிரு டா”

 

“நீ பேசுன உடனே என் கோபம் போயிருச்சு மா”

 

“சரி சரி, முகத்தை கழுவு. நான் உன் நகையை எல்லாம் எடுத்து வைக்கணும். அக்கா வேற உனக்காக நிறைய நகை செஞ்சு வச்சிருக்காங்க”

 

“அது எதுக்கு மா? என்கிட்டயே நிறைய இருக்கே. பெரியம்மா கிட்டயே இருக்கட்டுமே”

 

“அப்படி சொல்லாத தேனு. அவங்க உன்னை மகளா தான் பாக்குறாங்க. இப்ப வேண்டாம்னு சொன்னா மனசு வருத்த படுவாங்க”

 

“அம்மா, நான் அப்படி சொல்லலை. பெரியம்மாவும் எனக்கு அம்மா தான். அந்த நகை நாளைக்கு அண்ணன்களுக்கு பொண்டாட்டியா வரவங்களுக்கு ஆகட்டுமேன்னு சொன்னேன். சரி எல்லாம் எடுத்து வைங்க”

 

“சரி டா, கவனமா இரு. எதுக்கும் கலங்க கூடாது. பொறுப்பா இருக்கணும். அம்மா வளர்ப்பை அடுத்தவங்க குறை சொல்ற மாதிரி வச்சிராத டா”

 

“சரி சரி”

 

இன்னும் பல அறிவுரைகளை சொல்லிக் கொண்டே தான் அனைத்தையும் எடுத்து வைத்தாள் சகுந்தலா.

 

“தப்பு பண்ணிட்டேனோ? கதிரை கட்டிக்கிறேன்னு சொன்னதுக்கு என்ன காரணம்னு நான் விசாரிச்சிருக்கணுமோ? கதிர் என்னன்னு பிள்ளையை மிரட்டிருப்பான்னு தெரியலையே. கடவுளே ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்”, என்று கடவுளிடம் பாரத்தைப் போட்டாள் சகுந்தலா.

 

அனைவரும் கிளம்பும் போது ஒரு கண்ணீர் படலம் அங்கே அரங்கேறியது. அனைவரும் கதிர் வீட்டுக்கு சென்று பொருள்கள் அனைத்தையும் இறக்கி வைத்து விட்டு அனைவரிடமும் சொல்லி விட்டு தங்கள் வீட்டுக்கு வந்தார்கள்.

 

செல்வா, தினேஷ், கதிர் மூவரும் அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.

 

[the_ad id=”6605″]

 

அன்று இரவு, அன்னம் உதவியுடன் தயாராகி கதிரின் அறைக்குள் நுழைந்தாள் தேன்மொழி. இரவு நேரத்தின் குளுமை, ஜன்னல் வழியே வந்த காற்று அவள் மனதை அமைதிப் படுத்த முயன்றது. ஏற்கனவே அவளுடைய பொருள்கள் அந்த அறையில் வைக்க பட்டிருந்தது.

 

இந்த அமைதிக்கு சகுந்தலாவின் அறிவுரையும் ஒரு காரணம். கழுத்தில் கிடந்த தாலியை எடுத்துப் பார்த்தாள்.

 

இப்போதும் அவளால் நம்ப முடிய வில்லை தனக்கும் கதிருக்கும் திருமணமானதை. இரண்டு குடும்பத்துக்கும் பகை. கண்டிப்பாக கல்யாணம் நடக்காது என்று அவள் நம்பி இருக்க, அன்னம் உடல் நிலை காரணமாக நடந்தே விட்டது.

 

அந்த அறையை நோட்டம் விட்டாள் தேன்மொழி.

மல்லிகை சரமும் பிச்சிப்பூ சரமும் ஆங்காங்கே தொங்க விடப் பட்டிருந்தது. கட்டிலில் உதிரிப்பூக்கள் சிதறி இருந்தது. ரம்மியமான வாசனையை பூக்கள் தந்து கொண்டிருந்தது.

 

அங்கிருந்த டேபிளில் வேணி கொடுத்த டம்பளரை வைத்தவள் கட்டிலில் அமர்ந்தாள். சிறு வயதில் இந்த அறைக்கு வந்த நினைவுகள் இன்று மேலே எழுந்தது.

 

டேபிளில் ஜாங்கிரி, லட்டு, பழங்கள் அனைத்தும் அணி வகுத்திருந்தன. மற்ற நேரமாக இருந்திருந்தால் அதை உண்டு விட்டு தான் மறுவேலை என்றிருப்பாள்.

 

இன்றோ அது எதுவும் அவள் மனதில் பதியவில்லை. சகுந்தலா சொன்ன அறிவுரையையே நினைத்துக் கொண்டிருந்தாள். “கடவுளே இவன் கூட தான் வாழ்க்கைன்னு ஆகிருச்சு. இனி எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியா இருக்கணும் பா”, என்று வேண்டிக் கொண்டாள்.

 

அப்போது அவள் கண்ணில் பட்டது அங்கிருந்த கதிரின் போட்டோ. ஒரு நொடி அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் பட்டது அவன் கழுத்தில் இருந்த செயின். அடுத்த நொடி கோபத்துடன் எழுந்தவள் கட்டிலில் தொங்கிக் கொண்டிருந்த பூச்சரத்தை பிய்த்து எறிந்தாள்.

 

[the_ad id=”6605″]

 

தட்டில் இருந்த அனைத்தையும் அந்த அறைக்குள் விசிறி அடித்தாள். கதிரை பிடிக்காததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவன் கழுத்தில் இருந்த புலி நகம் டாலர். அதைப் பார்த்தாலே அவளுக்கு எரிச்சல் வரும்.

 

சகுந்தலா சொல்லிய அறிவுரை அனைத்தும் மறந்து போய் “என்னையா அடிமையா ஆக்குவ? நான் உன்னை என்ன செய்றேன்னு பாரு டா”, என்று மனதுக்குள் கருவிக் கொண்டாள்.

 

காலையில் இருந்து ஒழுங்காக சாப்பிடாத வயிறு பசியில் உறுமியது.”இந்த வயிருக்கு எப்ப பசிக்கணும்ன்னு அறிவே கிடையாது?”, என்று எண்ணிக் கொண்டே தூக்கி எறிந்த ஆப்பிள் பழத்தை எடுத்து தின்றவள் மீதி குப்பையை அந்த அறைக்குள்ளே எறிந்தாள். அங்கு இருந்த பாலையும் ஒரே மூச்சாக குடித்து விட்டு அதையும் தூக்கி எறிந்திருந்தாள்.

 

அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் அமைதியாக அமர்ந்து விட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!