Skip to content
Post Views: 3,022

அகம் 7
மதியத்துக்கு மேல் மாப்பிள்ளை வீட்டில் சிலபேர் ராகவியை பார்க்க அறைக்கு வந்தவர்கள், அவளோடு பேசிக் கொண்டிருக்க, அங்கே அவர்களுடன் இருக்க விரும்பாமல் நயந்தினி அங்கிருந்து வந்துவிட்டாள். அதற்கு முன்பே நிகர்வேலனை ரோஹன் அழைத்து சென்றுவிட்டான்.
அங்கிருந்து தனதறைக்கு நயந்தினி வரும்போது அன்னையோ தங்கைகளோ அறையில் இல்லை. சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டு மாலை பார்ட்டிக்கு கிளம்ப சரியாக இருக்குமென்று நினைத்து தான் வந்தாள். ஆனால் தனியாக இருப்பதும் ஒருமாதிரி இருந்தது.
‘பேசாமல் விக்கியிடம் பேசலாமா?’ என்று முதலில் நினைத்தவள்,
‘நான் இங்க வந்ததே விக்கிக்கு பிடிக்கல, இப்போ போன் பேசினா அதைப்பத்திய பேச்சு தான் விக்கிக்கிட்ட இருந்து வரும், இங்க இருக்கவரை விக்கியிடம் அடிக்கடி பேச வேண்டாம்,’ என்று நினைத்து அமைதியாகிவிட்டாள்.
பின் அறையிலேயே நடை பயின்றவள், பின் பால்கனியில் கடற்கறையை பார்த்தப்படி சிறிதுநேரம் நிற்கலாம் என்று சென்றாள். ஆனால் அங்கு போனதும் அவள் பார்வை தானாகவே பக்கத்து பால்கனிக்கு போக, அந்தநேரம் நிகர்வேலனும் பால்கனிக்கு வந்தவன், அவளைப் பார்த்துவிட்டான்.
‘என்ன இவனும் இங்க வந்து நிற்கிறான்? இவனை விட்டு விலகியிருக்கணும்னு தானே நினைச்சோம்,’ என்று நினைத்து பதறியவள், மீண்டும் அறைக்குள் போக முயற்சிக்க,
“நயனி, கொஞ்சம் நில்லு,” என்று அவன் அழைக்கவும், தயங்கி நின்றவள், அவனைப் பார்க்கவும்,
“எனக்கு உன்னிடம் கொஞ்சம் பேசணும் நயனி,” என்றான்.
அதற்கு அவளோ, “சாரி, தெரியாத ஆளிடம் உங்களுக்கு என்ன பேச வேண்டியிருக்கு? அதேபோல எனக்கும் தெரியாத ஆளிடம் எதுவும் பேச வேண்டாம்,” என்று கோபத் தோணியில் அவள் கூற,
“அய்யோ சாரி, தெரியாம அப்படி சொல்லிட்டேன். உன்னை எனக்கு நல்லாவே தெரியும், ஆனா நீ என்னை ஞாபகம் வச்சிருக்கீயான்னு எனக்கு எப்படி தெரியும், அதான் அப்படி நடந்துக்கிட்டேன்.” என்றான்.
“மறக்க கூடிய சம்பவமா அது.” என்று அவள் அதற்கு பதில் கூற,
“ஆமாம் மறக்க தான் முடியல,” என்று அவனும் கூறவே,
“எதை மறக்க முடியல?” என்று புரியாமல் கேட்டாள்.
‘வேற என்ன? உன் முகத்தை தான்,’ என்று மனதில் சொல்லிக் கொண்டவன்,
“அந்த சம்பவத்தை தான் சொல்றேன். அன்னைக்கு நான் அப்படி பேசியிருக்கக் கூடாது தான், கண்டிப்பா ஸ்டேடஸ் பார்த்து நான் அப்படி பேசல, அந்த வேல் டாலர் ரொம்ப ஸ்பெஷல். அதில் டைமண்ட் இருக்கு என்பதுக்காக இல்ல, அது எங்க குடும்பத்து மெம்பர்ஸ்க்காக ஸ்பெஷலா செய்தது. நாங்க எல்லோருமே அதை போட்ருப்போம்,” என்று தன் சட்டையின் ஒரு பட்டனை கழட்டி அவன் கழுத்தில் உள்ள தங்க சங்கிலியையும் அதில் மாட்டியிருந்த வேல் டாலரையும் காட்டினான்.
பின், “எங்களுக்கு திருச்செந்தூர் முருகன் தான் இஷ்டதெய்வம். அதனால் எல்லோருக்கும் அப்பா ஸ்பெஷலா இந்த வேல் டாலர் செய்தாரு, அதை ராகவி உன்னோட கழுத்தில் போடவும் எனக்கு கொஞ்சம் டென்ஷன் ஆகிடுச்சு, ராகவிக்கு நீ ஸ்பெஷலா இருக்கலாம், ஆனா எனக்கு அப்போ நீ யாரோ தானே, அதான் அப்படி பேசிட்டேன்.
ஆனா அப்படி பேசியிருக்கக் கூடாதுன்னு லேட்டா தான் புரிஞ்சிக்கிட்டேன். நீ திரும்ப வந்தா சாரி கேட்கணும்னு நினைச்சேன். ஆனா நீ வரவேயில்லை. நானும் உடனே லண்டன் கிளம்பி போயிட்டேன். இப்போ அதுக்காகவும் நேத்து நடந்ததுக்கும் சாரி, சாரி, சாரி.” என்று அவன் பலமுறை மன்னிப்பு கேட்கவும், ஏனோ நெடுநாள் பாரம் தீர்ந்தார் போல் இலகுவாக உணர்ந்தவள்,
“சரி அதை இத்தோட விட்ருவோம், இதை பேசத்தான் என்னை கூப்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.
“இதுவும் தான், நேத்து நடந்ததை பத்தி பேசவும் தான், இந்த ரெசார்ட் முழுக்க முழுக்க என் பொறுப்பில் தான் இருக்கு, அதேபோல நடக்கப் போறது எங்க வீட்டு கல்யாணம். வந்தவங்களை நல்லவிதமா கவனிச்சு அனுப்பறதும் எங்க பொறுப்பு தான், நேத்து நீ நடந்துக்கிட்டது சரியா? நைட் டைம்ல பக்கத்து பால்கனி ஏறி குதிச்சு வந்து போன் பேசிட்டு இருக்க, நேத்து அங்க நானா இருக்கவே போச்சு, இதுவே வேற யாராவது அங்க இருந்தா என்ன ஆகியிருக்கும்?” என்று கேட்க, அவளும் அதை யோசித்ததால்,
“நான் அந்த ரூம்ல யாருமில்லன்னு நினைச்சு தான் பேச வந்தேன். ஆனா அது தப்பு தான் சாரி.” என்று மன்னிப்பு கேட்டாள்.
“நீ மன்னிப்பு கேட்கணும்னு எதிர்பார்த்து இதை சொல்லல, உன்மேல இருக்க அக்கறையில் தான் சொல்றேன். அப்படி நைட் டைம்ல வந்து பேசற அளவுக்கு அப்படி முக்கியமான விஷயம் ஏதாவதா?” என்று அவன் கேட்க,
“அப்படியெல்லாம் இல்லை. சாதாரணமா தான் ஃப்ரண்ட்க்கிட்ட பேசிட்டு இருந்தேன். பகலில் ராகவி அக்காவோட இருந்ததில் ஃப்ரண்டோட பேச முடியறதில்ல, அதில்லாம ரொம்ப நேரம் போன் பேசினா அம்மாக்கு பிடிக்காது. சாதாரணமா சேட் செய்தாலே கோபப்படுவாங்க, அதான் அம்மாவும் தங்கைகளும் தூங்கினதும் பேசலாம்னு பால்கனிக்கு வந்தேன். ஆனா அங்க இருந்து பேசினாலும் அவங்களுக்கு கேட்கும்னு அப்படி ஒரு ஐடியா தோனுச்சு,” என்று அவள் விளக்கமாக கூற,
“இனி இதுபோல கிறுக்குத்தனமான ஐடியால்லாம் யோசிக்காத, அம்மான்னா அப்படித்தான் திட்டுவாங்க, ஆனா ஃப்ரண்டோட சாதாரணமா தான் பேசறேன்னு அவங்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கலாம் தானே,” என்று கேட்க, அவளும் கடமைக்கு தலையாட்டிக் கொண்டவள்,
“இனி அப்படி செய்யமாட்டேன். போதும் விட்ருங்க,” என்று பாவமாக கூற, அதில் புன்னகைத்துக் கொண்டவன்,
“அதானே இந்த காலத்துக்கு பசங்களுக்கு அட்வைஸ்னாலே கசப்பா இருக்குமே,” என்றான்.
அதற்கு சிரித்தவள், “அப்புறம் உங்களிடம் ஒன்னு கேட்கணும், நேத்து நைட் என்னை பார்த்ததும், நயா நீயான்னு தானே கேட்டீங்க, பொய் சொல்லாம சொல்லணும்,” என்று அவள் கேட்க,
“அப்படியா சொன்னேன். நயனி நீயான்னு கேட்டேன். அதில் ஒரு னி விட்டுப் போச்சுப் போல,” என்ற அவனது பதிலில்,
‘தங்கை சொன்னது போல எல்லாம் இல்லை’ என்று நிம்மதியடைந்தவள்,
“அப்புறம் ஏன் யார் நீ என்று மாத்தி கேட்டீங்க?” என்று கேட்க,
“அதுவா, அதான் முதலிலேயே சொன்னேனே, என்னை நீ மறந்திருந்தா, யாரிவன்? என் பேரைச் சொல்லி கூப்பிட்றான்னு நீ நினைச்சிட்டா, அதான் உடனே உன்னை தெரியாத மாதிரி காட்டிக்கிட்டேன்.” என்ற அவனது பதில் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தது.
“அப்புறம் இப்போ தான் எனக்கு ஒன்னு தோனுது. நீ சொன்னீயே நயா. அதுவே அழகா இருக்கு, உன் பேரை சுருக்கி அப்படியே கூப்பிடவா?” என்று அவன் கேட்க, அதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் எல்லா பக்கமும் அவள் தலையை ஆட்டி வைக்க,
“இது என்ன ரியாக்ஷன்? இதை நான் எப்படி எடுத்துக்கிறது? ஓகேன்னா இல்லை இல்லன்னா,” என்று அவன் கேட்கவும்,
“நீங்க இந்த ரெசார்ட்க்கு நயாஸ் பீச் ரெசார்ட்னு ஏன் பேர் வச்சிருக்கீங்க?” என்று கேட்டாள்.
‘ரொம்ப ஷார்ப்போ இவ, நயந்தினியோட ஷார்ட் ஃபார்ம் தான் நயான்னு மாத்தி அதை எங்க புது ஷோரூம்ஸ்க்கும் இந்த ரெசார்ட்க்கும் வச்சிருப்பதை கண்டுப்பிடிச்சிட்டாளா?’ என்று கொஞ்சம் பதட்டமானவன், அவளிடம் இதற்கு என்ன சொல்வதென்று யோசிக்க,
“நீங்க வேற ஏதோ அர்த்தத்தில் வச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியும், ஆனா இங்க வந்த முதல்நாள் என் தங்கைங்க இதை வச்சு கேலி செய்தாங்க,” என்று வந்த முதல் நாள் நடந்த பேச்சு வார்த்தையை அவனிடம் கூற,
‘அப்போ மேடமோட தங்கைங்க தான் ஷார்ப்பா, அவங்களிடம் தான் கொஞ்சம் கவனமா இருக்கணும் போல,” என்று நினைத்துக் கொண்டவன்,
“சரி அவங்கல்லாம் இல்லாம நாம மட்டும் இருக்கும்போது அப்படி கூப்பிட்றேன்.” என்றான்.
அதற்கு என்ன பதில் சொல்வதென்று அவள் விழிக்கவும், அதில் புன்னகைத்துக் கொண்டவன், “ஆமாம், தங்கைங்க இருக்காங்கன்னு சொன்ன, எத்தனை தங்கைங்க உனக்கு?” என்று பேச்சை மாற்றினான்.
“ரெண்டுப்பேர். அதுவும் ட்வின்ஸ்.” என்றாள் அவள்,
“ட்வின்ஸா? ஒரே ஜாடையா? நான் அவங்களை பார்த்ததே இல்லை. அவங்களும் தானே இந்த கல்யாணத்துக்கு வந்திருக்காங்க, எங்க காணோம்,” என்று கேள்விகள் எழுப்ப,
“ஆமாம் ஒரே ஜாடை தான், ஒருத்தி நன்மதி. ஒருத்தி நன்மொழி. அவங்களும் பங்ஷனுக்கு வந்திருக்காங்க, காலையில் ரெடியாகி போனா நைட் தான் ரூம்க்கு வருவாங்க, இங்க அவங்களுக்கு தோதா ஃப்ரண்ட்ஸ் கிடைச்சிட்டாங்கல்ல, இன்னைக்கு ஈவ்னிங் பார்ட்டியில் அவங்களை அறிமுகப்படுத்தறேன்.”என்றாள்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, நளினி அறைக் கதவை திறந்து அப்போது உள்ளே வந்தார். காலையில் மகள் தான் கடைசியாக அறையை பூட்டிக் கொண்டு சென்றதால், அவளை தேடி ராகவியின் அறைக்கு சென்று பார்க்க அங்கு மகள் இல்லை என்றதும் நேராக இங்கு அறைக்கு வந்தார்.
அப்போது மகள் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது கேட்டு அவர் முதலில் அலைபேசியில் பேசுகிறாள் என்று நினைத்து வந்தவர் உடன் ஆண் குரல் கேட்கவும், யாராக இருக்கும் என்ற பதட்டத்துடன், “நயனி, யாரோட பேசிட்டு இருக்க?” என்று கேட்டப்படியே அங்கு வர, அவரின் குரல் கேட்டு நயந்தினி பயந்துவிட்டாள்.
அதற்குள் அங்கு வந்த நளினி, நிகர்வேலனை இதுவரை நேரில் பார்க்காததால் யார் என்பதுபோல் பார்க்க, நயந்தினியோ என்ன சொல்வது என்பது போல் ஒரு பதட்டத்துடன் இருந்தாள்.
ஆனால் நிகர்வேலனோ சாதாரணமாக, “ஹலோ ஆன்ட்டி, எப்படி இருக்கீங்க? நான் நிகர்வேலன். ராகவியோட கஸின். சேகரன் அவரோட மகன். நான் இந்த ரூம்ல தான் தங்கியிருக்கேன்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள,
“உன்னை பார்த்ததில் சந்தோஷம் ப்பா, இப்போ தான் சாகரி நீ வந்திருக்க விஷயத்தை சொன்னா, உன்னை நேரில் பார்த்தது இல்லை இல்லையா? அதான் எனக்கு தெரியல ப்பா,” என்ற நளினி,
“ஆமாம், உனக்கு எப்படி தம்பியை தெரியும் நயனி,” என்று மகளிடம் கேட்க,
அவள் அதற்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க, “முன்ன ஒருமுறை அத்தை வீட்டில் நயனியை பார்த்திக்கிருக்கேன் ஆன்ட்டி. இப்போ ராகவி ரூம்ல் பார்த்து பேசினோம், திடீர்னு பால்கனி பக்கம் வந்தா, நம்ம நயனி நின்னுட்டுருக்கா, நீங்க என் பக்கத்து ரூம்ல தங்கியிருப்பீங்கன்னு நினைக்கவேயில்லை.” என்றவன், நளினி பார்க்காத நொடியில் நயந்தினியை பார்த்து கண்ணடித்தான்.
அதை கண்டவளோ, ‘அடப்பாவி, நேத்து நைட்டே நாங்க இந்த ரூம்ல இருக்கோம்னு தெரியும், அப்படியும் என்னமா பொய் சொல்றான்.’ என்று அவனை பார்த்திருந்தாள்.
“இப்போ தான் உங்க அம்மா, தங்கையெல்லாம் எங்கன்னு நயனியிடம் கேட்டுட்டு இருந்தேன். நீங்க வந்துட்டீங்க,” என்று அவன் மேலும் பேச,
“நீயும் இங்க இல்ல, எல்லாம் சரியா இருக்கணுமேன்னு சாகரிக்கு டென்ஷன். அதான் அவளுக்கு கொஞ்சம் உதவியா இருக்கலாம்னு போனேன்.” என்று நளினி அதற்கு விளக்கம் கொடுக்கவும்,
“அய்யோ ஆன்ட்டி, நீங்க எங்களோட கெஸ்ட். நீங்க இங்க வேலையெல்லாம் செய்துக்கிட்டு, இனி அப்படியெல்லாம் செய்யாதீங்க ஆன்ட்டி. இனி எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்.” என்று நிகர்வேலன் கூறினான்.
“கூடமாட உதவறதில் என்னப்பா இருக்கு, என்னை யாரோவா நினைக்காத, உங்க அப்பாவை என்னோட கூடப் பிறக்காத அண்ணனா தான் நினைக்கிறேன். சாகரியும் அப்படித்தான், இது நம்ம வீட்டு கல்யாணம். அதுக்கு நான் எதுவும் செய்யக் கூடாதா என்ன?” என்று நளினி கேட்க,
“இதுக்குப்பிறகு நான் என்ன சொல்றது, ரொம்ப சந்தோஷம் ஆன்ட்டி.” என்றான் நிகர்வேலன்.
நயந்தினி அதை வியப்பாக பார்த்துக் கொண்டிருக்க, அதற்குள் நளினிக்கு அலைபேசி அழைப்பு வரவும், அதை ஏற்றப்படி அவர் அறைக்குள் போக, நயந்தினி ஒரு பெருமூச்சு விட்டாள்.
“ஆமாம், ஆன்ட்டி வந்ததும் எதுக்கு பயந்த,” என்று நிகர் கேட்க,
“அது அம்மா என்ன சொல்வாங்களோன்னு கொஞ்சம் பயமாகிடுச்சு,” என்று நயந்தினி அதற்கு பதில் கூறவும்,
“தப்பு செய்றவங்க தான் பயப்படணும், நாம சாதாரணமா தானே பேசிட்டு இருந்தோம், அப்புறம் என்ன பயம்?” என்று நிகர் கேட்டது, அழைப்பை ஏற்றாலும் இங்கே மறுமுனையில் யாரும் எதுவும் பேசாமல் இருந்ததால் நளினி காதில் விழுந்தது.
“நீ அனாவசியமா உன்னோட அம்மாக்கு பயப்பட்றியோன்னு தோனுது. நார்மலா இரு. சரி ஈவ்னிங் பார்டியில் பார்க்கலாம்,” என்று சொல்லிவிட்டு அவன் அறைக்குள் போய்விட, அவளும் ஒரு தலையசைப்புடன் அறைக்குள் வந்தாள்.
அப்போதும் நளினியும் அலைபேசியில் பேசி முடித்தவர், “நிகர் ரொம்ப நல்ல பையனா இருக்கான் இல்ல, சாகரி சொல்லும்போது கூட கொஞ்சம் பெருமை பேசறது போல தோனுச்சு, ஆனா நேரில் பார்க்கும்போது தான் அது எத்தனை உண்மைன்னு தெரியுது. அவங்க அப்பா மாதிரியே தான் மகனும்,” என்று பெருமையாக கூறியவர்,
“சரி மதியம் சாப்பிட்டீயா? என்னன்னு தெரிஞ்சிட்டு போகத்தான் வந்தேன். மத்த ரெண்டும் நேரத்துக்கு சாப்பிடுச்சா, இல்லை விளையாட்டு கவனத்தில் சாப்பிடாம இருக்கான்னு தெரியல, நான் போய் ரெண்டுப்பேரையும் கூட்டிட்டு வரேன். ஈவ்னிங் பார்டிக்கு வேற கிளம்பணுமில்ல,” என்று சொல்லியப்படி நளினி அங்கிருந்து கிளம்ப, போகும் அன்னையை அதிசயமாக பார்த்திருந்தாள் நயந்தினி.
எப்படியோ உள்ளே வந்ததும் வயசு பையன் கூட என்ன பேச்சு? என்று ஏதாவது கேட்பார் என்று தான் நினைத்தாள். ஆனால் அவர் அப்படி எதுவும் கேட்காததே அதிசயம் தான், ‘அப்படின்னா அம்மாக்கு நான் விக்கியோட பேசறது மட்டும் தான் பிடிக்கலையா?’ என்று தன்னை தானே கேட்டுக் கொண்டாள்.
ஏனென்றால் விக்கியோடு போனில் பேசினாளோ குறுந்தகவல் அனுப்பி பேசினாளோ சதா ஏதாவது திட்டிக் கொண்டே இருப்பார். அதில் அன்னையைப் பற்றி அவளுக்கு ஒரு தவறான புரிதல் எப்போதும் உண்டு. அதனாலேயே அவர் முன் விக்கியிடம் பேசவே யோசிப்பாள். ஆனால் இன்று நிகரோடு நின்று பேசிக் கொண்டிருந்ததை ஒன்றுமே சொல்லவில்லையே என்று யோசித்து அவரை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பினாள்.
நளினி வேலைக்கு செல்லும் பெண்மணி. அங்கே ஆண்கள் பெண்கள் என்று அனைவருடனும் பழகுபவர். தன் பிள்ளைகளையும் இருபாலர் படிக்கும் பள்ளி, கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தவர், அவர் தன் பிள்ளைகள் ஆண்களுடன் பேசி பழகக் கூடாது என்று செல்லும் பிற்போக்குவாதி அல்ல,
ஆனால் விக்கியிடம் ஏதோ சரியில்லை என்பதை நளினி நன்றாகவே உணர்ந்து இருந்தார். அதனால் மகள் விக்கியிடமிருந்து விலகி இருக்க வேண்டுமென்ற கவலையில் மகளிடம் கடினமாக நடந்து கொள்கிறார். ஆனால் இந்த கால பிள்ளைகள் நாம் சொல்வதற்கு எதிராக தான் நடந்து கொள்கிறார்கள். அதிலும் விக்கியின் சில போதனைகள் நயந்தினியை மாற்றியிருந்தது. அதை புரிந்து அவள் மாற வேண்டுமென்ற நளினியின் எண்ணம் நிறைவேறுமா? காலம் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்
அகம் சேர்வான்…
error: Content is protected !!