Skip to content
Post Views: 12,229
இரவு மனதில் சூழ்ந்த எரிச்சல் கொஞ்சமும் குறையாமலே குளித்துத் தயாராகி ஹாலில் வந்து அமர்ந்திருந்தான் சேனாபதி, குளிருக்கு இதமாகச் சூடான காப்பியை அவன் கைகளில் வைத்தார் பவுனு, அனைவரின் கவனமும் அவன்மீது இருந்தாலும் யாரும் ஒன்றும் பேசிவிடவில்லை.
“காசில்லைனு சொன்னா என்ன அர்த்தம் கட்டிக்குடுக்குறதுக்கு முன்னாடியே நல்லா விசாரிச்சுருக்க வேண்டியதுதானே, அவர் வேணும்னு சொல்வார் நீங்கத் தர மாட்டோம்னு சொல்லுவீங்க நடுவுல நான்தானே அல்லாடுறேன்”.
“இந்தப் பிரச்னையில அவர் என்னை இங்கேயே இருக்க சொல்லிட்டா நான் வாழாவெட்டியா இங்கேயே இருந்துட்டா பரவாயில்லையா உங்களுக்கு, ஊர் உலகத்துல அவ அவ எப்படி எல்லாமோ கல்யாணம் பன்றாளுங்க ஓடிப்போய்… குடும்ப மானத்தை வாங்கி இப்படி எல்லாம், நான் ஒழுக்கமா இருந்து நீங்கச் சொன்னவனை கட்டிக்கிட்டேன்ல அதான் என்னை இப்படி அல்லாட வைக்குறீங்க” என்று எப்பொழுதும் போலத் தாயிடம் கண்ணைக் கசக்கி தன் நாடகத்தைத் தொடங்கி வைத்தாள் கார்த்திகா.
அவளைத் திருமணம் முடித்துக் கொடுத்த இந்த எட்டு வருடமாக இது பதிவாக நடந்து வருகிறது, கார்த்திகா பிரபுத் திருமணம் நடக்கும்போது தேவசேனாபதிக்கு பத்தொன்பது வயது அப்பொழுதே தந்தை மற்றும் சிறிய தந்தையிடம் கூறினான் “இது என்னவோ சரியாகப் படவில்லை வேறிடம் பார்க்கலாம்” என்று.
Advertisement
‘கார்த்திகாவுக்கு மாப்பிள்ளையை மிகவும் பிடித்துவிட்டதோடு உறவுகளிடமும் சொல்லியாகிவிட்டது ஒன்றும் பிரச்சனையில்லை நன்றாக விசாரித்துவிட்டோம் நல்ல இடம்’ என்று நடத்திவிட்டனர்.
திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்குள் அவர்களின் சாயம் வெளுத்துவிட்டது, அடுத்த இரண்டு வருடத்தில் மொத்தமாகக் குடும்பத்தின் பொறுப்பு சேனாபதியிடம் வந்துவிட்டது.
முதல் இரண்டு முறை நம்முடைய பெண் என்று எண்ணி உடனே செய்துவிட்டனர், மூன்றாம் முறையும் பெரிய ஒரு தொகையைக் கேட்கச் சேனாபதி விழித்துக்கொண்டான்.
Advertisement
“யோச்சித்து செய்யலாம்” என்றவன் கூற கண்ணீரோடு தாயிடம் முறையிட்டுக் கனகத்தின் மனதை மாற்றி அவர் “என் மகளின் வாழ்வு” என்று குடும்பத்தாரிடம் சண்டை வளர்க்க அதன் பிறகு கார்த்திகாவின் விஷயத்தில் அவன் தலையிடுவதில்லை.
Advertisement
இப்பொழுது இரண்டு வருடமாகப் பிரபு கேட்க்கும் தொகை இவன் கைகளில் இருந்தே கொடுக்கப்படுகிறது வீட்டின் மூத்த ஆண்கள் இருவரும் வெறும் மேற்பார்வை மட்டுமே, மூப்பின் காரணமாக அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை உழைப்பவன் அவன் ஒருவனே இப்பொழுது அந்த உழைப்பை மருமகன் என்ற போர்வையில் ஒருவன் சுரண்டுகிறான்.
மகளின் கூற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு கணவனிடம் பேசவந்தார் கனகம்.
“ஏங்க பொண்ண நம்ப கூடவே வெச்சுக்கவா கல்யாணம் செஞ்சு கொடுத்தோம் அவ சொல்றதும் சரிதானே மாப்ள செய்யறதுக்கு அவ என்ன பண்ணுவா” என்றவரை நிதானமாகப் பார்த்த செந்தில் அறையிலிருந்து வெளியில் வரக் கூடத்தில் இருந்த அனைவரும் அவர்கள் பேச்சைக் கேட்டிருந்தனர்.
Advertisement
சேனாபதியின் முகத்தைப் பார்க்கவே சங்கடமாகி விட்டது செந்திலுக்கு நேரே அண்ணனிடம் சென்றவர் “அண்ணா எங்க பங்க குடுத்துடுங்க நாங்க தனியா போயிடுறோம் இங்கேயே இருந்தா ஆத்தாளும் மகளுமா மொத்த சொத்தையும் சொரண்டி எடுத்துருவாளுங்க”.
“நான் பெத்த ரெண்டு பிள்ளைகளுக்கு மட்டும் இல்லையே இந்தக் குடும்பத்துக்காக ஓடி ஓடி ஒழைக்குறானே நம்ம புள்ள அவனுக்கும் சேரவேண்டிய சொத்து, இப்போவே மூத்தவ பேரைச்சொல்லி பாதியை புடுங்கியாச்சு, வயசான காலத்துல என்னால தனியா தோட்டத்தைப் பாத்துக்க முடியாது சின்னவ படிக்கப் போக வேண்டாம் அம்மாவும் பொண்ணும் என்கூட வந்து வேலை செய்யட்டும் இதைத் தவிர வேற எதுவும் சரியா வரும்னு எனக்குத் தோணல” என்றவர் தளர்ந்து போய் அமர்ந்துவிட.
சேனாபதி ஒன்றும் சொல்லாமல் வெளியில் சென்றுவிட்டான் கனகம் பதறிவிட்டார் ‘தனியாகப் போவதா?’ அப்படியெல்லாம் இதுவரை கனவு கூடக் கண்டதில்லையே, இந்தக் குடும்பம் தானே எல்லாமே தடுமாற்றத்தோடு மாமியாரையும் பவுனையும் நோக்க அவரை நிமிர்ந்தும் பார்க்காமல் பவுனு அடுப்படிக்குள் நுழைந்துகொண்டார் மாமியார் மட்டும் கனகத்தை முறைத்துநின்றார்.
“டேய் என்ன பேசுற!” என்ற கந்தவேலுவை பார்த்த செந்தில் “நான் வேற என்னனா செய்ய இன்னும் எத்தனை வருஷத்துக்கு இப்படியே” என்றார் சோர்வாக.
மெல்ல அடுக்கலைக்குள் சென்ற கனகம் மூத்தவரின் கையைப் பிடித்துக்கொண்டு “அக்கா நா அப்படிலாம் யோசிச்சு சொல்லல இவ அழுததும் மனசு கேக்காம சொல்லிட்டேன்” என்றார் தவிப்பாக.
“போதும் உன் புருஷன் சொல்றதுதான் சரி நீங்கத் தனியா போய்டுங்க, உன் பொண்ணுங்க வாழ்க்கையவே பாத்துட்டு இருந்தா என் பேரன் வாழ்க்கையை எப்போ பாக்க உனக்கு அந்த நெனப்பு இல்லையே நீயும் உன் பொண்ணும் சுயநலமால இருக்கீங்க இனிமே என் ராசாவும் அப்படியே இருக்கட்டும்” என்றார் கோசலை மருமகளிடம்.
அங்கிருந்து கூடத்திற்கு வந்தவர் “இந்தாயா செந்திலு தனியா வாடகை வீடு பாத்து போய்க்கோ இந்த வீட்ல யாருக்கும் பங்கு இல்ல, இது எனக்கு நெய் பந்தம் புடிக்க போற என் பேரனுக்காக என் புருஷன் எழுதி வெச்ச வீடு, எய்யா கந்தா உன் தம்பிக்குச் சேரவேண்டியதை பிரிச்சு குடுத்து அனுப்பு போய் அவங்க அவங்க குடும்பத்தைப் பாத்துக்கட்டும்” என்றார்.
“மா என்னமா நீங்களும்… அவன்தான் அப்படி பேசுறான்னா நீங்களுமா” என்றார் கந்தவேலு.
“அத்த தப்புதான் புத்திகெட்டு போய் எதோ பேசிட்டேன் மன்னிச்சுடுங்க இனிமே இப்படி நடக்காது, சேனா என்ன சொல்றானோ அப்படியே இருக்கட்டும் நான் எதுவும் பேசல” என்ற கனகம் உண்மையில் கண்ணீர் சிந்தினார்.
மகளின் கண்ணீரை பார்க்கும்போது புத்தி பிசகி விடுகிறது அவருக்குப் பாவம் என்ன செய்ய, அவரை அனைத்துக்கொண்ட பவுனு “அத்த போதும் பாவம் அவ வருத்தப்படுறா” என்றார் மாமியாரிடம்.
“பாருடி பாத்து தெரிஞ்சிக்கோ இப்போவும் அவ உன்கூட நிக்குறா” என்ற கோசலை “உனக்கும் உன் மகளுங்களுகும் குடுக்காம இங்க யாரும் எதையும் எடுத்துட்டு போகல அத நல்லா புத்தில பதிய வை”.
“போங்க போய் வேலையைப் பாருங்க காலைல யாரும் சாப்பிடல ராசா வரதுக்குள்ள ஏதாவது சமைச்சு வைங்க” என்றவர் பின்னில் தோட்டத்திற்கு நடந்தார் பேரனுக்குக் குழப்பு வைக்க நாட்டுக்கோழியை பிடிக்க.
கோசலை முருகன் தம்பதிக்கு மூன்று மக்கள் மூத்தவர் கந்தவேலு, இரண்டாவது செந்தில் அவருடைய பிள்ளைகளே கார்த்திகா மற்றும் வேல்விழி.
மூன்றாமவர் தெய்வானை அத்தை மகன் ராஜேந்திரனை கல்யாணம் முடித்துக் குன்னூரில் வசிக்கிறார், அவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள் பூஜா மற்றும் பூர்விகா.
மொத்தத்தில் அந்தக் குடும்பத்தின் ஒற்றை ஆண் வாரிசு தேவசேனாபதி, கந்தவேலு பவுனு தம்பதிக்குத் திருமணம் முடிந்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு கிடைத்த வரம் அவன்.
இன்று கார்த்திகாவின் கணவன் பிரபு இவர்களிடம் சுரண்டுவதை போல இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்பே இவர்களின் சொத்துக்கள் சிலதை வஞ்சகமாகக் கைப்பற்றி வைத்திருக்கிறான் சேனாவின் மாமா ராஜேந்திரன்.
அவனிடம் வாங்கிய கடனுக்காகச் சொத்தையும் எடுத்துக்கொண்டு சேனாவின் லட்சியத்தை அடையவிடாமல் முட்டைக்கட்டைபோட்டு அவனைத் தன்னுடைய அடிமையாக வைக்கக் காய் நகர்த்துகிறான் ராஜேந்திரன்.
யூகலிப்டஸ் காடு… மேலேயும் கீழேயும் மரங்கள் வானுயர வளர்ந்து நிற்க வரைந்து வைத்த நேர்கோடு போல நீண்டு கிடந்த தார்சாலையில் பறந்தது அவன் ஜீப், என்றும் மனதை நிறைக்கும் யூகலிப்டஸ் வாசம் இன்று மனதிற்கு சுகம் தரவில்லை.
அவன் நினைத்திருந்தால் அவனுடைய கனவுக்காக இவர்களை எல்லாம் உதறிவிட்டு சென்றிருக்கலாம் இங்கு இருக்கும் வரையே ராஜேந்திரனின் கட்டுப்பாடுகள் வெளியேறிவிட்டால் அவரால் ஒன்றும் செய்ய முடியாது.
குடும்பத்தை விட்டுச் செல்ல முடியாமல்தான் தன்னுடைய ஆசையை மனதிற்குள்ளே அடக்கிவைத்து ஓடிக்கொண்டிருக்கிறான், ஒவ்வொரு முறையும் கார்த்திகாவும் கனகமும் இப்படி செய்கையில் அவனுக்கு மொத்தமாக வெறுத்துவிடும்.
யூகலிப்டஸ் மரங்களைக் கடந்த பிறகு செபாஸ்டியனின் தேயிலை தோட்டம் அதன் இடப்புறம் விரியும் சாலையில் ஐந்து நிமிடம் பயணம் அங்குத் தொடங்குகிறது அவனின் சொர்க பூமி, ஆம் அவர்களின் பூத்தோட்டம் டாலியா, ஹீலியோட்ரோப், நர்கிஸ், ஜெர்பரா என்று விரிந்துகிடக்கும் நந்தவனம்.
முதலில் காய்கறி மற்றும் பூக்கள் அவர்கள் நிலத்திலிருந்து மொத்த விற்பனையாகச் சென்றுகொண்டிருந்தது ராஜேந்திரனின் சூழ்ச்சியால் பத்து ஏக்கர் காய்கறித்தோட்டம் அப்படியே அவனிடம் போய் விட்டது பூந்தோட்டம் மட்டுமே இவர்களுக்கு மிஞ்சியது.
சேனாபதி பொறுப்பை எடுத்துக்கொண்டபிறகு தனியாகத் தேயிலை தோட்டத்தின் நடுவே சிறிய மலை குன்றில் அழகான குடில் அமைப்பில் ஒரு கடையைத் தொடங்கிவிட்டான்.
அனைத்துவிதமான விசேஷங்களுக்கும் மலர் மாலைகள், மேடை அலங்கார ஆர்டர்கள் மற்றும் பிரத்யேக மலர்கொத்துக்களுக்கு இவர்கள் கடையை அதிகம் பேர் நாடினர் சில பூக்களை ஓசூரிலிருந்து வாங்கிக்கொள்வான்.
முன்பில் இருந்த சிறிய கொட்டகையில் வண்டியை நிறுத்தியவன் இறங்கி நடக்க, பெரியசாமி தாத்தாவின் ரேடியோ பெட்டியிலிருந்து பாடல் ஒழுகி வந்தது
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
ஒரு அச்சாரம் தான் வைக்காமலே
ஹோய் ..
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான்
ஹோய்..
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…
எஸ்.பி.பி.யுடன் மல்லுக்கட்டிப் பாடிக்கொண்டிருந்த சாமி தாத்தா அவர் மனைவி பவளத்தின் கையைப் பிடித்து வம்புசெய்துகொண்டிருந்தார், பவளம் நாணத்தில் முகத்தைத் திருப்பினார்.
அதைப் பார்த்தவன் இதழ்கள் தன்னாலே விரிந்துகொண்டது, அறுபது வயதை கடந்த அந்தக் காதல் தம்பதிகள்தான் தோட்டத்தின் காவல், அவனைக் கண்டுவிட்ட பவளம் “அச்சோ தம்பி வந்துருச்சுங்க” என்று கணவன் பின்னே ஒளிந்துகொள்ள சத்தமாகவே சிரித்துவிட்டான்.
காற்றோடு கதை பேசிக்கொண்டிருந்த பூவின் இதழ்களில் ஒன்று அவன் கன்னக்குழியில் வந்து முத்தமிட்டது.
கன்னத்தில் ஒட்டியிருந்த பூவின் இதழைக் கையில் எடுக்க “பொண்ண வெக்குற எடத்துல பூவ வைனு சொல்லுவாங்க அதுக்காக அப்படியே இருக்க முடியுமா ஒரு ராணியை கட்டிக்கிட்டா பூவுக்குப் பதிலா பொண்டாட்டிகிட்ட முத்தம் கெடச்சிருக்கும்” என்றார் சாமி தாத்தா.
அவரைத் திரும்பிப் பார்த்தவன் ஒன்றும் பேசாமல் முன்னே நடந்தான், பூக்கள் பறிக்கப்பட்டு சாக்குகளில் கட்டிவைக்கப்பட்டுக் கொண்டிருந்தது, கடைக்கு என்ன என்ன பூக்கள் எவ்வளவு வேண்டும் என்று சாமி தாத்தாவிடம் கூறிவிட்டால் அவர் அதைத் தனியே எடுத்து வைத்துவிடுவார்.
அனைத்தையும் பார்வையிட்டவன் மதியம் இரண்டுமணிவரை அங்கேயே இருந்தான் ஏனோ வீட்டிற்கு போகத் தோன்றவில்லை, அதற்குமேல் அங்கிருக்க முடியாது அவன் இல்லாமல் யாரும் சாப்பிட்டுருக்க மாட்டார்கள் என்பதால் வீட்டிற்கு புறப்பட்டான்.
கேட்டின் அருகில் செல்லும்போதே தெரிந்துவிட்டது வீட்டின் மாப்பிளை வந்திருப்பது பிரபுவின் வண்டி வெளியில் நின்றது அந்த வண்டி கூட இவர்கள் சீதனமாகக் கொடுத்ததுதான்.
“வாங்க” என்றான் பிரபுவைப் பார்த்து ‘மாமா’ என்ற அழைப்பெல்லாம் முதலில் இருந்தே அவனுக்கு வராது, கனகம் தயக்கமாக அவனைப் பார்த்துக்கொண்டே “வந்து சாப்பிடு சேனா” என்க.
“வரேன் சித்தி எடுத்துவைங்க” என்றவன் அறைக்குள் சென்று கைக்கால் முகம் கழுகி வந்தான், பாத்திரங்களின் ஓசையின்றி வேறொன்றுமில்லை அங்கே, ஆண்கள் அமைதியாக உணவருந்த பெண்கள் அதிலும் அமைதியாகப் பரிமாறிக்கொண்டிருந்தனர்.
உணவிற்காக மட்டும் வாயைத் திறந்துகொண்டிருந்தவன் அந்த வேலை முடிந்ததும் “என்ன கார்த்திகா கிளம்பலாமா” என்றான் அதிகாரமாக.
அவள் அமைதியாக நின்றிருக்க “என்னடி?” என்றான்.
“காசு இல்லனு சொல்லிட்டான் சேனா” என்றாள்.
“என்ன மாமா என்ன நெனச்சுட்டு இருக்கீங்க?” என்றவனை பார்த்த செந்தில் “எங்களுக்கு வயசாயிடுச்சு மாப்பிள வீடு தொழில் எல்லாத்தயும் சேனாதான் பாத்துக்குறான் தம்பிகிட்ட பேசிக்கோங்க” என்றுவிட்டார்.
சேனா அமைதியாகவே அமர்ந்திருந்தான் ‘நீயாக என்னிடம் பேசு பிறகு பார்க்கலாமென்று”.
“என்ன சேனா குடுக்கமுடியாதுன்னு சொன்னியா”.
“குடுக்கமுடியாதுன்னு சொல்லலையே காசு இல்லன்னு சொன்னேன்”.
“ரெண்டும் ஒண்ணுதான்”.
“அதெப்படி ரெண்டும் ஒண்ணாகும் வெச்சுக்கிட்டே குடுக்காம இருந்தா அதுவேற நான் இல்லனு சொல்றேன்”.
“உன்கிட்ட காசு இருக்கு உன் பிசினஸ் நல்லாவே நடக்குது எனக்குத் தெரியும்” என்றான் பிரபு.
“இருக்கட்டும்… இருக்குற எல்லாத்தயும் உங்களுக்குக் கொடுக்கணும்னு சட்டம் இல்லையே” என்றான் இவனும் சூடாக.
“குடுக்க முடியாதுன்னா கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கணும், உன் வீட்டு பொண்ண கட்டியிருக்க மாட்டேன்”.
“கல்யாணத்துக்கு அப்புறமும் மாமனார் வீட்லதான் செலவுக்குக் காசு கொடுக்கணும்னு நீங்களும் சொல்லியிருக்கணும் உங்களுக்கு எங்க பொண்ண குடுத்துருக்கமாட்டோம்” என்றவனின் பொறுமை எல்லாம் பறந்திருந்தது.
கோபத்தில் பெரிய மூச்சுக்களாக விட்ட பிரபு கொஞ்சம் நிதானமானான் “சரி நீ எனக்கு ஏதும் குடுக்க வேண்டாம் நான் சொன்னமாதிரி என் தங்கச்சியை கட்டிக்கோ, நீ உன் அக்காவுக்குக் குடுக்க வேண்டியதுக்கு பதிலா என் தங்கச்சியை வரதட்சிணை வாங்காம கல்யாணம் செஞ்சுக்கோ அதுக்கப்பறம் நீயும் எனக்குக் கொடுக்க வேண்டாம் நானும் உனக்குக் கொடுக்க வேண்டாம்” என்றான்.
எத்தனை கேவலமானவன் மனைவியை நிறைய சீரோடு கல்யாணம் செய்துகொண்டு தங்கையை வெறும்கையோடு அனுப்ப திட்டம் தீட்டுகிறான், யார் தலையில் கட்டுவது என்று யோசித்திருந்தவனுக்கு சேனாவை விடச் சிறந்ததாக யாரும் தெரியவில்லை.
“முடியாது இதுக்கு பதிலை முன்னாடியே சொல்லிட்டேன் இந்தக் கல்யாணம் நடக்காது” என்றான் சேனா.
“அப்போ நானும் விட முடியாது உங்க வீட்டு பொண்ணுதானே அப்போ நீங்கதான் பாத்துக்கணும், அவளுக்கு நீங்கச் செஞ்சுதான் ஆகணும்” என்றான் பிரபு.
சில நொடிகள் விழிமூடி நின்ற தேவசேனாபதி “சித்தி அவர் பொண்ணுங்க ரெண்டையும் ரெடி பண்ணி அவரோட அனுப்பி விடுங்க, நம்ம பொண்ண நாம பாத்துக்கலாம் அவர் பொண்ணுங்களை அவரே பாத்துக்கட்டும்” என்றவன் புயல்வேகத்தில் வெளியேறிவிட்டான்.
அவன் சொன்னதை உள்வாங்கவே நொடிகள் பிடித்தது பிரபுவிற்கு கார்த்திகா ஒரு பக்கம் அழுதுகொண்டிருக்க கனகத்தை கைபிடித்து உள்ளே அழைத்துச்சென்றார் கோசலை.
“இங்கபாரு கனகா கசப்பு மருந்து குடிக்க கஷ்டமாத்தான் இருக்கும் உள்ள போனவுடனே வேலை செய்யும் சீக்கிரம் வியாதியும் சரி ஆகும், அப்படிதான் இப்போ உன் மருமகனுக்கு குடுத்த வைத்தியம்”.
“கொஞ்சம் பொறு யோசிப்பான் மறுபடியும் ஏதாவது என் பொண்ணு வாழ்க்கைனு ஆரம்பிச்ச இன்னையோட நீயும் உன் புருஷனும் இங்கேயிருந்து போகத் தயார் ஆயிக்கோங்க இதுக்கு அப்புறம் நாங்க யாரும் தலையிடமாட்டோம்” என்றுவிட்டார்.
வீட்டிலிருந்து வெளியேறியவன் நேரே கடைக்குச் சென்றுவிட்டான் பச்சை பசேலென்று குளிர்ந்துகிடக்கும் தேயிலை தோட்டம் அதன் நடுவே கற்படிகள் ஏறினால் சிறிய குடில் அமைப்பில் கடை.
பூமாலைகள் கட்டப்பட்டுக்கொண்டிருக்க இவனும் ஒரு பக்கம் வேலை செய்துகொண்டிருந்தான், மெல்ல இருட்ட தொடங்கியது அலைபேசி அழைப்பில் யோசனையிலிருந்து மீண்டவன் எடுத்துப்பார்க்க பவுனு அழைத்திருந்தார்.
“என்னமா” என்க.
“தம்பி… மாப்ள கார்த்தியையும் பிள்ளைகளையும் கூட்டிட்டு போய்ட்டார் கொஞ்சம் நேரம் சத்தம் போட்டார், இனிமே அம்மா வீட்டுக்கு அனுப்பமாட்டேன் அப்படிலாம் கத்தினார் அப்புறம் கிளம்பிட்டாங்க” என்க.
பெருமூச்சொன்று எழுந்தது “நல்லது… கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் நீங்கச் சித்தியைப் பாருங்கம்மா” என்றவன் தளர்வாக அமர்ந்தான்.
நேரம் இரவு எட்டுமணி கடந்திருக்க பங்களா வீட்டின் அம்பாசிடர் அவன் கடை முன்பு வந்து நின்றது எழுபது வயதை கடந்த ஒஸ்கர் கைத்தடியை ஊன்றி மெல்ல கற்படிகள் ஏறினார்.
அவரைப் பார்த்தவன் வேகமாகக் கீழிறங்கி “என்ன கிரான்ப்பா நீங்க ஏன் வந்தீங்க சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே” என்று அங்கேயே ஒரு கல்லில் அமரவைத்தான்.
ஒஸ்கர் ஒரு ஆங்கிலோ இந்தியன், அவரின் பாட்டியைப் பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் திருமணம் செய்துகொண்டார், குன்னூரின் அழகுக்கும் காலநிலைக்கும் அதிகளவில் பிரிட்டிஷார் அங்கே குடியிருந்தனர் சுதந்திரத்திற்கு முன்பு, அவர்கள் இந்திய பெண்களை மணந்துகொண்டனர் சுதந்திரத்திற்கு பின்னும் அவர்களுடைய வம்சா வழியினர் இங்கேயே தங்கிவிட்டனர்.
அப்படியொரு ஆங்கிலோ இந்தியர் ஒஸ்கர், சிறு வயதிலிருந்தே நல்ல பழக்கம் ஒஸ்கர் மற்றும் சேனாவின் குடும்பம், நல்ல ரோஸ் நிறம் ஒஸ்கருக்கு வெள்ளிக்கம்பிகள் போல முடி, நல்ல கம்பீரமான மனிதர்.
“என்ன கிரான்ப்பா சொல்லுங்க” என்றவனின் கையைப் பிடித்துக்கொண்டவர் “ஐரிஸ் வரா சேனா இன்னைக்கு நைட் பத்துமணிக்கு குன்னூர் ஸ்டேஷன் வந்துடுவா” என்றதும் அவர் அருகில் அமர்ந்துகொண்டான்.
“நல்ல விஷயம்தானே ஏன் டென்ஷனா இருக்கீங்க பேத்தியை ரொம்ப வருஷமா பிரிஞ்சு இருக்கீங்க இனிமே உங்ககூடவே இருப்பால்ல” என்றான்.
“வேண்டாம்… அவ என்கூட இருக்க வேண்டாம் அவ இங்க இருக்கவே கூடாது அவளை இந்தத்தடவ ஸ்பெய்ன் அனுப்பலாம்னு இருக்கேன்” என்றார் பதட்டத்தோடு.
“எப்போவோ நடந்ததை நினச்சு இப்போவும் பயந்தா எப்படி அவளுக்கு ஒன்னும் ஆகாது” என்றவனை பார்த்து ‘இல்லை’ என்று மறுப்பாகத் தலை அசைத்தவர்.
“எனக்குன்னு யார் இருக்கா அவ ஒருத்தியை மட்டும்தான் என்னால காப்பாத்திக்க முடிஞ்சது அவளுக்கு ஏதாவது ஆயிட்டா என் வம்சமே இல்லாம போய்டும் சேனா… தூரமா இருந்தாலும் பரவாயில்ல அவ நல்லா இருக்கணும், நான் உன்னைத் தேடி வந்தது… நீ போய் அவளைக் கூட்டிட்டு வரியா வேற யாரையும் என்னால நம்ப முடியாது உன்கூடனா எனக்குத் தைரியமா இருக்கும்” என்றார்.
அந்த வயதான மனிதரைப் பார்க்கவே மனதை பிசைந்தது எப்படி வாழ்ந்தவர், எத்தனை பேரின் வாழ்க்கையை உயர்த்தியவர் இன்று தனிமையில் இப்படி…
“போய்க் கூட்டிட்டு வான்னு உரிமையா சொல்லுங்க அதுக்கு இவ்ளோ தூரம் வரணுமா, நான் பத்திரமா கூட்டிட்டு வந்து உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் நீங்கத் தைரியமா வீட்டுக்குப் போங்க” என்றான், மனதில் புது தெம்பு பிறக்கப் படிகள் இறங்கினார் ஒஸ்கர்.
நேரத்தோடு ரெயில்வே ஸ்டேஷன் சென்று சேர்ந்துவிட்டான், சீசன் என்பதால் சுற்றுலா பயணிகளால் நிரம்பி இருந்தது குன்னூர்.
ஸ்டேஷனிலும் நல்ல கூட்டம் இருக்க கடைசியில் இருந்த பெஞ்சில் அமர்ந்துவிட்டான், குன்னூரின் குளிர் எலும்புவரை ஊடுருவியது வின்டர் ஜாக்கெட்டின் ஜிப்பை நன்றாக இழுத்துவிட்டவன் கைகளைத் தேய்த்து கன்னத்தில் வைத்துச் சுற்றிலும் பார்வையை ஓட்டினான்.
பனிமூட்டம் காரணமாக ரெயில் தாமதமாக வந்துகொண்டிருந்தது, அலைபேசி எடுத்து இளையராஜா பாடலை வைத்தவன் இயர் போனை பொருத்திக்கொண்டு விழிகள் மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
ஒளிவெள்ளத்தை பாய்ச்சிக்கொண்டு காதை அடைக்கும் விசில் சத்தத்தோடு ஊர்ந்து வந்தது தொடர்வண்டி, மக்கள் இறங்கி செல்வதை பார்த்து அமைதியாக அமர்ந்திருந்தான் சிறிது நேரம்.
மெல்ல எழுந்து முன்னே சென்று பார்க்கத் தன்னை அழைத்துச்செல்ல யாரும் வரவில்லையோ என்ற பதட்டத்தோடு சுற்றிலும் பார்த்திருந்தாள் அந்த நங்கை.
“மயூரி” என்றவன் குரலில் அதிர்ந்து திரும்பியவள் சத்தியமாக அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்றது விரிந்து நின்ற அவளின் மரகத நிற விழிகள்.
தூய பாலின் நிறம், இயற்கையாகவே சுருண்டு கிடக்கும் கருங்கூந்தல், ஒளிவீசும் அடர் பச்சை நிற விழிகள் என்று மேலூர் வாசிகள் வியந்து பேசும் ஓவிய சிலை நீண்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு அவன் கண்முன்னில்.
error: Content is protected !!