Skip to content
Post Views: 23,396
இலக்கணம் பெண்மையே!…
எப்பிலாக்
அன்று கடையில் கூட்டம் ஓய்ந்த நிலையில் சாலா கொஞ்சம் ஓய்வாக அமர்ந்து இருந்தாள். வெளியில் தெரியும் நடமாட்டங்களை பார்வையிட, ஒரு வயதான தாத்தா. நல்ல முதிர்ந்த வயது தான் முதுகு கூன் விழுந்து இருந்தது. சாலையை கடக்க அவரின் அருகில் நின்று இருந்த தன் மனைவியின் கையை பிடித்து, மெதுவாக மிக மெதுவாக நடந்து சாலையை கடந்தார்கள். மிகுந்த பரபரப்பு மிக்க சாலை அது ஓட்டமும், நடையுமாக மக்கள் ஓடி கொண்டு இருக்க, சுற்றி இருக்கும் யாரையும் கவனத்தில் கொள்ளாமல் முதிர்ந்த இரு ஜோடிகள் மட்டும் தங்களுக்குள் ஏதோ பேசிய படி பிடித்த கையை விடாமல் மெல்ல நடையை தொடர்ந்தார்கள்.
சாலா, அவர்கள் கண் விட்டு மறையும் பார்த்து நின்றாள். என்னவோ ஒரு வலி நெஞ்சில். குடும்பம், பிள்ளைகள், பொருளாதாரம், கடமை என்று ஓடும் வாழ்க்கையில் ஆற அமர நிற்பது என்னவோ முதுமையில் தான். பெற்றவர்கள் ஓய்வாக அமரும் போது பிள்ளைகள் தங்கள் ஓட்டத்தை தொடங்கி இருப்பார்கள். இள வயதில் பிள்ளைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பெற்றவர்கள் ஓட, முதுமையில் பெற்றவர்களுக்கு ஈடு கொடுத்து பேச நேரமில்லாமல் பிள்ளைகள் ஓடுவார்கள். காலார அமர்ந்து கடந்த கால கதையை பேச அருகில் தன் துணை இருப்பது இவ்வளவு சுகம். தம்பதிகளுக்குள் நடந்த காரசார சண்டையை கூட முதுமையில் இனிமையான நிகழ்வாக அசை போடலாம். ஒரு பெருமூச்சு விட்டு சாலா திரும்ப, தயங்கி தயங்கி நின்றாள் ஷாலினி.
Advertisement
சாலா ஒரு கூர் பார்வையோடு அளவிட,
“சாலா அ…”
“நிறுத்து… நீ பேச வந்தது முக்கோண பிரச்சனையை பத்தியா?…” என்று சாலா கேட்க.
Advertisement
தயங்கியே தலையை ஆம் என்று ஷாலினி ஆட்ட,
Advertisement
“அப்படின்னா அது சம்பந்தம்மா நமக்குள்ள பேச ஒன்னும் இல்லை…” சாலா தீர்க்கமாக சொல்ல,
“இல்லை. அது வந்து…” என்று மீண்டும் தொடங்கும் போதே,
“எனக்கு தேவையே இல்லைங்க. உங்களோட வார்த்தை, விளக்கம், பேச்சு எதுவும் எனக்கு தேவையே இல்லை. நீங்க யாரு எனக்கு?… என் கழுத்துல தாலி கட்டுன மனுசன் கூட நான் வாழ்ந்து இருக்கேன். அவரும் எனக்கு புருசனா இருந்துருக்கார். அப்படி இருக்க அவர் கூட சண்டை போடவும், கேள்வி கேட்கவும் எனக்கு உரிமை இருக்கு. உங்களை எல்லாம் நான் பார்க்க கூட விரும்ப மாட்டேன். உங்க விளக்கம் எனக்கு அனாவசியம். உங்க வாழ்க்கை, கொள்ளை, கோட்பாடு என்னவோ அத உங்களோடவே வச்சுகோங்க…” சாலா வார்த்தை தீர்க்கமாக வந்து விழ,
Advertisement
மேற்கொண்டு ஷாலினிக்கு பேச வர வில்லை. அவள் எதிர்பார்த்தது வேறு, சண்டை வரும், வார்த்தை தடிக்கும், நன்றி கெட்டவள், குடும்பத்தை கெடுத்தவள் என்று ஊரே சொல்லும் போது நேரடியாக பாதிக்க பட்ட விசாலாட்சியிடம் அதிகமாக எதிர்பார்த்து இருக்க, அவ்வாறு இல்லாமல் நீ யார் என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டாள் விசாலாட்சி.
“என் மேல உங்களுக்கு கோபம் வரல. கண்டபடி பேச தோணல?…” ஷாலினி கேள்வி கேட்க.
“ஏன் பேசணும். எனக்கு உண்மையா, நேர்மையா இருக்க வேண்டியது என் புருசன் மட்டும் தான். நீ யாரோ ஒருத்தி. உன்னை ஏன் நான் பேசணும். உனக்கு நான் போட்ட சோறுக்கும், இருக்க கொடுத்த இடத்துக்கும் நியாயம் கேட்கணுமா?… தேவையில்லை செஞ்சது விசாலாட்சி தான். வாங்கினது ஷாலினி தான். உன்னை தரம் இறக்கி பேசி, என் தரத்தை நான் குறைக்க மாட்டேன்…” என்றவள்,
“ஒருத்தன் நிறைய பேருக்கு நல்லது செஞ்சு புண்ணியம் சேர்த்து வச்சான். எதுக்கு சிவபாதம் சேரணுமாம். ஆனா, அவன் கிட்டையும் ஒரு குறை இருக்கு. அது நாவடக்கம் கிடையாது. அவன் கையால கொடுத்து சேர்த்து வச்ச புண்ணியம் எல்லாம் வாயால பேசி கெடுத்துட்டான். சிவபாதம் சேரும் போது அவன் கையில ஒன்னுமே இல்லை. அதனால சிவனை தரிசிக்கவும் முடியலை. நாவடக்கம் இல்லாதவனே கடவுளை தரிசிக்க முடியாது எனும் போது, நீ மன அடக்கம் இல்லாதவ? உன் விதி என்னன்னு கடவுளே சொல்லட்டும். தண்டனை கடவுளுக்கு உரியது. எனக்கு உன்னோடு ஒன்னுமே கிடையாது. இனி என்னை தேடி வராத. நீ என்ன சொல்ல வந்தேன்னு கூட எனக்கு தேவையில்லாதது. அவசியமும் இல்லை. அதனால், நீ …” கதவை நோக்கி கை காட்டி விட்டாள்.
விபச்சாரம் செய்பவர்களை கூட முகத்திற்கு நேர வேசி என்று சொல்ல கூடாது. அது நியதி. சாலா அந்த நியதியை கடை பிடித்தாள்.
சாலா முன் அமர்ந்து இருந்தாள் சாரு பாலா. அவள் கையில் இருந்தது பாதிக்கபட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இயக்கத்தின் நகல்.
“ நானா? நான் எப்படி? எனக்கு என்ன தெரியும் சாரு…”
“நீ தான். உனக்கு எல்லாம் தெரியும். எங்களோடு சேர்ந்து நில்லு சாலா…”
“இது பெரிய பொறுப்பு சாரு. நான் அதுக்கு சரி கிடையாது…”
“ நீ தான் சரியான ஆளு சாலா. இந்தியன் கிரிக்கெட் டீம்ல முன்னாடி ஒரு கேப்டன் இருந்தார். நல்ல பேர், புகழ் இருக்கும் போதே அவர் தான் கேப்டன், அவரை தாண்டி யாமில்லைன்னு சொல்லும் போதே, வேற ஒரு கேப்டனை அவர் இடத்துக்கு கொண்டு வந்தாரு. அது ஒரு நல்ல தலைவனுக்கான பண்பு. நம்மோடு சேர்த்து சுத்தி இருக்கவங்களும் முன் வரணும் தான… தேவிக்கு நீ செஞ்சது ரொம்ப பெரிய விசயம் சாலா…”
“ஆனா சாரு, தேவி என் மதினி. அவங்களுக்கு நான் செய்வேன் தான்…” சாலா விளக்கம் கொடுக்க,
“அது தான் மாற்றம் சாலா. ஒரு நாத்துனாருக்கும், அண்ணிக்கும் எங்கேயாவது ஒத்து போகுமா… அதுவும் நீ உங்க அண்ணானவே எதிர்த்து நின்னு தேவிக்கு ஆதரவு கொடுத்த பாரு. கிரேட் சாலா. மாற்றம் வேணும்ன்னு மைக் பிடிக்கிற யாரும் அவங்க வீட்டுல மாற்றம் கொண்டு வர மாட்டாங்க. நீ உன்னை மாத்தி, உங்க வீட்டுலயும் மாற்றம் கொண்டு வந்துருக்க. நிச்சயம் நீ தான் வேணும்…”
ஆனாலும் சாலா தயங்க,
“இங்க பாதிக்கபட்டவங்க, பாதுகாக்க பட வேண்டியவன்ற இடத்துல இருக்குறது பெண்களும், குந்தைகளும் தான். அவங்களுக்கு பணம், காசு தேவையில்லை. நல்ல சிந்தனை, ஒரு வழிகாட்டி அவ்வளவு தான். உன் சிந்தனை நல்லா இருக்கு, உன் யோசனை மத்தவங்களையும் யோசிக்க வைக்குது…” சாரு திடபடுத்த, சாலா இணைந்து கொண்டாள்.
காலம் நில்லாமல் ஓட தொடங்கியது. விசாலாட்சிக்கு பொறுப்புகள் கூடி போனது. பிள்ளைகள் அவர்வரருக்கு என்ற பாதையில் ஓட தொடங்கி விட்டார்கள். அஜய் தன் படிப்பை முடித்து வேலையில் சேர, அஞ்சு தன் படிப்புக்காக வெளிநாடு சென்று விட்டாள்.
தேவியோடு மகன் பிரபாகரன் கடைக்கு வந்து விட்டான். அடுத்த தலைமுறை மாற்றம் தொடங்கியது. மணிமாறன் வெறும் பேச்சாக இல்லாமல் முழுதாக மகனை விட்டு கொடுத்தார். தேவிக்கு மகன், வீடு, கடை என்று நாள் நன்றாக சென்றது. கவலை இன்றி நன்றாக உறங்க முடிந்தது. அங்கு இருக்கும் எல்லோருக்கும் பிரபா, தேவியின் மகனாக தான் நின்றான்.
அருண் திருமணம் முடித்து சென்னையில் இருக்க, மணிமாறன் தன் கூட்டை விட்டு நகல வில்லை. மகன்கள் நன்றாக இருந்த போதும் தன் வாழ்க்கையில் எந்த வசதியும் செய்து கொள்ள வில்லை. மீனாட்சி இருக்கும் போது என்ன இருந்ததோ, அதுவே தான் இப்போதும்…
சிலர் சொன்னார்கள். “ உங்க அப்பன் தன்னாலே பேசி, சிரிக்கிறான். எதுவும் புத்தி பிசகி போச்சா, பாருங்க…” என்று சொல்ல,
அருண் பயந்து போய் தந்தையை கேட்க.
“அது உங்க அம்மாடா, மீனாட்சி. என்னை விட்டு எங்கும் போக மாட்டா. காத்தா என் கூட தான் இருக்கா. அவ கூட பேசி தான் பொழுது விடியுது…” என்று சாதாரணமாக சொன்னார் மணிமாறன்.
இளமையில் தாயையும், முதுமையில் தாரத்தையும் இழக்க கூடாதாம். அதை முழுமையாக அனுபவித்தார் மணிமாறன். என்னவோ மருமகளோடு ஒட்டவில்லை. மகன்களும் வேலை என்று வெளி ஊரில் தான். அவரின் ஒரே துணை காத்தோடு கலந்த மீனாட்சி தான்.
“மீனாட்சி தக்காளி விலை கூடி போச்சு, நமக்கு நல்ல லாபம். சின்ன மாடு பொட்டை கண்ணு போட்டு இருக்கு. பெரியவனுக்கு நல்ல இடம் வந்து இருக்கு, பேசலாம்ன்னு பாக்குறேன். கடமையை முடிச்சா நானும் உன் பின்ன வருவேன் பாரு…” என்று கண்ணில் அகப்படாத மனைவியோடு குடும்பம் நடத்தி கொண்டு இருந்தார்.
சித்ரா தன் வீட்டை ஒரு ஒழுங்கமைப்புக்கு கொண்டு வந்து விட்டாள். பாண்டியம்மாள் முன் போல அதிகாரம் செய்ய வில்லை. முதுமை நிறைய கற்று கொடுத்தது போல, மகன் வீடு, மகள் வீடு, தேவி வீடு என்று மாறி மாறி நாட்களை கழிக்க, சித்ரா தன் வீட்டை கட்டி கொண்டாள்.
பெரிய மகள் திருமண வயதில் நிற்க, கொஞ்சம் மாறினான் குமரன். தன் குடும்பத்தோடு ஒட்டி நின்றான். பிள்ளைகள் கடமை முன் நிற்க வைத்தது. ஆனாலும், அவன் மனதில் முதல் என்றும் தேவி தான். தற்போதும் ஒரே குடும்பம் என்பதால் விசேஷம், கோவில் என்று எங்க பார்க்க நேர்ந்தாலும் அவன் பார்வை தேவியை மட்டும் தான் சுற்றி வரும். அதை சித்ரா அறிந்தாலும் கடக்க கற்று கொண்டாள்.
எந்த மாற்றமும் இல்லாமல் சென்றது பிரகாஷ் வாழ்க்கை தான். ஆனால் அவன் உடம்பில் நிறைய மாற்றம். நல்ல உணவு, ஓய்வு, பிள்ளைகள் முன்னேற்றம் என்று வாழ்க்கை நன்றாக இருந்தாலும், மனம் முழுக்க அமைதி இன்றி தான் இருந்தது.
அவனே எழுந்து, அவன் வேலைகளை முடித்து, காபி, உணவு தயாராக தான் இருக்கும், தானே போட்டு உண்டு கொள்ள வேண்டும். அவன் சம்பளத்தை கேட்க ஆள் இல்லை தான். அதே போல செலவு செய்யவும் ஆள் இல்லை.
முதல் எல்லாம் போன், சினிமா, மால், நண்பர்கள் என்று எப்படியோ ஓடியது. தற்போது எல்லாம் சலிப்பாக இருந்தது. பிள்ளைகள் பேசுவார்கள் தான், வாரத்தில் மூன்று தரம். என்ன? ஏது? உடல் நலம்? உணவு என்று பொதுவான விசாரிப்பில் நேரம் முடிந்து விடும். அவர்களுக்குக் வேலை இருக்கும் அல்லவா…
விரக்தி சிரிப்பு சிரித்து கொண்டான் பிரகாஷ். பிள்ளைகள் நன்றாக பேசினாலும் என்னவோ தள்ளி நிற்பதாக எண்ணம். உண்மை தான், வளர்ந்த பிள்ளைகள் சுயமாக நின்றார்கள். பிரகாஷ் என்ன சொல்ல போனாலும்,
“ஐ நோப்பா…” என்று மகன் முடித்து விடுவான்.
மகளுக்கு அட்வைஸ் பிடிக்காது. சாலா சொன்னா கேட்டு கொள்வாள். பிள்ளைகளிடம் பெற்றவளுக்கென்று ஒரு மரியாதை இருக்கும். அவள் முடிவே இறுதியானது.
வருடத்தில் நான்கு முறை மட்டுமே மகன் வருவான். அப்படி அவன் வந்தால் மட்டும் தான் மனைவி அருகாமை, அவள் கை உணவு என்று கிடைக்கும். அஜய் வந்த உடன் தாயை தோல் சேர்த்து அனைத்து கொள்வான். தகப்பனிடம் ஒரு சிரிப்பும், நல விசாரிப்பும் தான்.
அதுவும் போன வருடம் பிரகாஷ் பிறந்த நாளை பிள்ளைகள் மறந்து விட்டு மறுநாள் லேட் விஸ் செய்தார்கள். ஆனால், சாலா பிறந்த நாளை ஒரு நாலும் பிள்ளைகள் மறந்ததில்லை. அஜய் எங்கு இருந்தாலும், சாலாக்கு புடவை வந்து விடும். ஏதோ ஒரு இடைவெளி பிள்ளைகள் இடம் இருந்தது.
காலையில் விழிப்பு தட்டியும் பிரகாஷ் எழுந்து கொள்ளவே இல்லை. இன்று சனி கிழமை, சென்னையில் இருக்கும் போது வீக் எண்ட் அவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும். அதுவும் முதல் நாள் வெள்ளி இரவு தம்பதிகளுக்கு அவ்வளவு ஸ்பெஷல்.
குளுகுளுவென சேலையும், தலை நிறைந்த மல்லிகை பூ என்று சாலா காத்து கிடப்பாள். இரவு உணவு அவனுக்கு பிடித்த ஐடம் தான். பிள்ளைகள் உடன் ஆட்டம் போட்ட பின், தங்களுக்கான தனிமைக்கு வந்து விடுவார்கள்.
அதுவும் பயந்து பயந்து பிள்ளைகள் முழித்து விடுவார்களோ, அஞ்சு தாயை தேடுமோ?, அஜய் பாத்ரூம் போக எழுவானா? என்று பார்த்து பின் தான் தங்களுக்கான நேரமும், தனிமையும் கிட்டும்.
அது ரொம்ப அலாதியானது. பக்கத்து அறையில் பாய் விரித்து சிரிப்பும், கொஞ்சலும், ஆசையும், மோகமும் என்று எவ்வளவு இனிமையான வாழ்க்கை அது!… மற்ற நாளில் கூடல் இல்லாவிட்டாலும் காதல் கொட்டி கிடக்கும். காலை ஆறு மணிக்கே பால் கனி கதவை திறந்து வெளி புறம் ரசிக்க, மணக்க மணக்க காபியோடு மனைவி வந்து விடுவாள். இருவரும் சந்தோசமாக எதிர்காலத்தை பற்றி நிறைய கற்பனை செய்து பேசுவார்கள். பிள்ளைகள் எழாமல் இருக்க, அவர்களுக்கு நேரம் இனிமை தான். லீவு நாளில் டிவி பார்த்து கொண்டே ஹாலில் சேர்த்து தான் உணவு எடுத்து கொள்வார்கள். அஜய்க்கு தந்தை நெஞ்சில் தான் உறக்கம் இருக்கும்.
எவ்வளவு நல்ல, அழகான வாழ்க்கை. என்ன தவம் செய்தும் திரும்ப கிடைக்காது. எல்லாம் கை விட்டு போய் தனிமை தான் மிச்சம். ஆசைப்பட்டு உணவு கூட அதிகமாக உட்கொள்ள முடியவில்லை. உறக்கம் சுத்தம் கிடையாது.
மெல்ல எழுத்து வெளியே வர, மேசையில் காபி இருந்தது. சாலா அறையில் விளக்கு ஒளிர முழித்து விட்டாள் என்று கண்டு கொள்வான். ஒரு பிடுப்பில்லாத வாழ்க்கை வாழ கற்று கொள்கிறான், என்றாவது மாறும் என்ற நம்பிக்கையில்.
விசாலாட்சி தன்னோடு தேவியையும் கூட்டி கொண்டாள். பொதுவாக நடுத்தர வயது, அதையும் கடந்த வயதில் துணை இழந்து நின்றால் தனிமை மட்டும் தான் துணை. மேற்கொண்டு வேற ஒன்றை பெண்கள் நாட மாட்டார்கள். அந்த ஒன்று வாழ்க்கை துணையாக தான் இருக்க வேண்டுமா? வேற ஒன்றை துணையாக்கி கொள்ளலாம் அல்லவா!…
குழந்தைகள் காப்பகத்தில் தேவி தன்னை சேர்த்து கொண்டாள். விசாலாட்சி பெண்கள் அமைப்பில் இனைந்து கொண்டாள். மலடி என்ற பட்டம் பெற்றவள், இன்று ஆயிரம் பிள்ளைகளுக்கு தாயாகி நின்றாள். அங்கு எல்லோரும் அம்மா என்று தான் அழைப்பது.
தேவி நெகிழ்ந்து போய் சொல்லுவாள், “இது எல்லாம் உன்னால தான் சாலா. உன்னை பார்த்து தான் நான் என்னை யோசிச்சேன். உனக்காக நீ நியாயம் கேட்ட பின்னாடி தான் எனக்காக கேட்க தோணுச்சு… உனக்கு நான் நன்றி கடன் பட்டு இருக்கேன்…”
“ என்னால உங்களை புரிஞ்சுக்க முடியும் மதினி. அதான் துணை நின்னேன். இது பெரிய விசயம் அல்ல…” என்று சாலா சொல்ல,
“ஆனாலும் சொல்லுவேன். பெண்ணுக்கு பெண் எதிரி எல்லாம் கிடையாது. என் வலி, வேதனை உனக்கு புரியுது தான. யாரோ ஒருத்தருக்கு அநியாயம் நடந்தா நியாயம் பேசும் மனசு, தன் வீட்டுல நடக்கும் போது சுயநலமாக தான் யோசிக்கும். நீ எனக்காக யோசிச்சா சாலா…” தற்போது தேவி வாழும் நிறைவான வாழ்க்கை அப்படி பேச வைத்தது.
“நிஜம் தான். மாற்றம்ன்ற ஒன்னு தொடங்கினா, அது மொதல்ல நம்ம வீட்டுல இருந்து தான் தொடங்கணும். ஒரு பொண்ணா குடும்பம்ன்ற நம்ம மரப நாம உடைக்க மாட்டோம். அதுக்காக அதிலே விழவும் கூடாது. வெளியில நின்னு தான் புரட்சி செய்யணும்ன்னு கிடையாது. இலக்கணம்ன்றது ஒரு வழி முறை. நமக்கான வழிமுறையை நாம தேர்வு செய்யலாம். இப்படி தான் இருக்கும் வாழ்க்கை, இதையும் தாண்டி தான் நாம நிக்கணும்..”
“ஓ… அப்ப மாற்றம் வருமா சாலா?…” தேவி கேட்க.
“உடனே மாறாது மதினி. ஆனா மாற்றம் அப்படின்னா ஒன்னு தொடங்கியாச்சு. மெல்ல தான் நடக்கும். ஆனா, மாறும்…” என்று சிரித்த முகமாக சொல்லி முடித்தாள் விசாலாட்சி.
“ இடை வரும் பல வித
தடைகளை தகர்ந்து இங்கு
வாழ்ந்து காட்ட வேண்டும்.
இலக்கிய பெண்மைக்கு
இலக்கணம் நீயென யாரும்
போற்ற வேண்டும் 🙏🙏🙏”
error: Content is protected !!