Skip to content
Post Views: 5,590
அத்தியாயம் – 3
“பொண்ணு பேர் மான்சி. வயசு இருபத்தஞ்சு. மான் ஹார்வெஸ்ட்ஸ் (Maan Harvests) அப்டீங்குற பேர்ல ஆர்கானிக் ஃபார்மிங் பண்ணி, ஆப் மூலமா அதை மார்க்கெட்ல விக்குறாங்க. சொந்த ஊர் பாம்பே ஆனா பொறந்து வளந்தது எல்லாம் சென்னை தான். அப்பா பிஸ்னஸ் பண்றார். பொண்ணை காணும்னு இன்னைக்கு மார்னிங் கம்ப்ளைன்ட பண்ணவும் மார்ச்சுவரி கூட்டிட்டு போய் கன்பார்ம் பண்ணிட்டோம் மேம்.” என்ற பரிதியை யோசனையாக பார்த்த அதிரா தன் இருக்கையில் நன்றாக சாய்ந்தமர்ந்தாள்.
“பொண்ணோட உடல் பாதி எரிஞ்சிருச்சு கரெக்டா ஐடெண்டிபை பண்ண முடிஞ்சுதா? பின்னாடி எதுவும் பிராப்ளம் வராதே?”
“ஒரு பக்க முகம் ஓரளவு தெரிஞ்சது மேடம். நானும் போட்டோஸ் எல்லாம் பாத்தேன். அது மான்சியோட நல்லா ஒத்துப்போகுது. கன்பர்மேஷன் வேணும்னா ஒரு டீ.என்.ஏ எடுத்துறலா மேடம்?”
Advertisement
“டீ.என்.ஏ எடுக்க கோர்ட்டுல ஆர்டர் வாங்கி அதை பிராசஸ் பண்றது எல்லாம் ரொம்ப டைம் எடுக்கும் பரிதி. கேஸோட வேகம் குறைஞ்சிடும். டென்டல் ரெகார்ட்ஸ் செக் பண்ணி ஒத்து போச்சுன்னா அதுவே போதும்.”
“அது செக் பண்ணியாச்சு மேம். மான்சியோடதும் நமக்கு கிடைச்சிருக்குற பாடியோட டென்டல் ரெகார்ட்ஸ்சும் ஒத்து போகுது.”
“ஃபைன். எதுக்காக கொலை நடந்திருக்கும்னு சந்தேகப்படுற மாதிரி ஏதாவது சிக்கியிருக்கா?”
Advertisement
“இதுவரைக்கும் ஐடியா இல்லை மேம். எப்.ஐ.ஆர் போட்டாச்சு. இனிமே தான் ப்ரொசீட் பண்ணனும்.”
Advertisement
“இந்த கேஸை மீடியா பெருசாக்க வாய்ப்பிருக்கு. தேவையில்லாம யாரும் பேட்டி கொடுக்கக்கூடாதுனு சொல்லிடுங்க.”
“ஓகே மேம். பேசிக் டீடைல்ஸ் மட்டும்தான் இப்போ கலெக்ட் பண்ணியிருக்கோம். அவங்களோட டே டு டே ஆக்டிவிட்டிஸ், அவங்களோட பிரெண்ட்ஸ் அன்ட் பிஸ்னஸ் சர்க்கிள் எல்லாம் விசாரிக்க ஆள் அனுப்பி இருக்காரு இன்ஸ்பெக்ட்டர்.”
“கேஸ்ல இம்ப்ரூவ்மென்ட் வரும்போதெல்லாம் அப்டேட் பண்ணுங்க. யு கேன் லீவ் நவ்.” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தவள் கோப்புகளில் மூழ்கிவிட்டாள்.
Advertisement
சற்று நேரத்திற்கெல்லாம் ஐ.ஜியிடமிருந்து அழைப்பு வந்தது.
“சென்ஷேஷனா மாறிட்டு இருக்குற அந்த பொண்ணு கேஸ் என்ன அதிரா?” என்று எடுத்ததும் அவர் கேட்க, அதிரா அதுவரை அவர்கள் சேகரித்ததாய் அவள் செவி அடைந்த தகவலை பகிர்ந்தாள்.
“அந்த பொண்ணு மான்சி கேஸை பெர்ஸ்னலா பாத்து முடிச்சுவுடுங்க. பொண்ணோட அப்பா நேஷனல் பார்ட்டிக்கு நெருக்கமாம், பிரஷர் வருது.” என்று அவர் சொல்ல, கண்களை மூடித்திறந்தாள் அதிரா.
இதுபோன்ற பரிந்துரைகள் அவ்வப்போது வருவதுண்டு என்றாலும் வசதி, செல்வாக்கு போன்றவற்றை முன்னிறுத்தி ஒரு தனிப்பட்ட வழக்குக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது ஏனைய குற்ற வழக்குகளுக்கு இழைக்கும் அநீதி என்பது அவள் எண்ணம். ஆனால் அவள் எண்ணுவதையெல்லாம் செயல்படுத்த முடியாது என்று நாட்டின் சட்டமும் அதில் இருக்கும் ஓட்டையும் அவ்வப்போது அவளுக்கு உணர்த்திவிடும்.
“அதிரா ஆர் யூ தேர்(there)?”
“எஸ் சார், நான் பாத்துட்டு அப்டேட் பண்றேன்.” என்று அழைப்பை துண்டித்தவள், பெல் அடிக்க, கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்த பரிதி சல்யூட் வைத்தான்.
“உக்காருங்க பரிதி. அந்த குப்பை மேடு எப்படி இருக்கு இப்போ? யாரெல்லாம் அந்த இடத்தை ஆக்ஸஸ் பண்றா?”
“பாடி கிடைச்சதால அந்த இடம் புல்லா நம்ம கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தாச்சு மேம். டிபார்ட்மென்ட் ஆளுங்க தவிர வேற யாரையும் அலோ பண்ணல.”
“குட். அங்க ஏதாவது தடயம் கிடைச்சிதா? ஃபாரென்சிக் ரிப்போர்ட் வந்துடுச்சா?”
“நோ மேம். ஒன் வீக் ஆகும்னு சொல்லி இருக்காங்க. எல்லாமே தீயில எரிஞ்சதால நமக்கு அதிலேந்து சாலிட் எவிடென்ஸ் கிடைக்குமாங்குறது சந்தேகம்தான்.” என்று இழுத்தான் பரிதி.
புரிகிறது என்பது போல் தலையசைத்தவள், “க்ரைம் ஸ்பாட்லேந்து எவிடென்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டா அந்த பிளேசை க்ளியர் பண்ண ஏற்பாடு பண்ணுங்க.”
“மேம்! அது ரெவன்யூ டிபார்ட்மென்ட் வேலை. நாம எப்படி?” என்று சங்கடமாய் பார்த்தான் பரிதி.
“நாம எப்படின்னா? இப்போ இடம் நம்ம கண்ட்ரோல்ல தான இருக்கு? இன்னொரு முறை இதுமாதிரி எதுவும் நடக்க இடம் கொடுக்கக்கூடாது. பேசுறபடி பேசி க்ளியர் பண்ணுங்க. ரொம்ப முறுக்குனாங்கன்னா ஐ.ஜி நேம் யூஸ் பண்ணிக்கோங்க, நான் பாத்துக்குறேன்.” என்று அவள் இயல்பாய் சொல்லவும் அதிர்ந்து பார்த்தான் பரிதி.
இவள் பெயரை உபயோகித்து செய்யச் சொன்னால் பரவாயில்லை ஐ.ஜியை இழுக்கிறார்கள் என்று பார்க்க, மெலிதாய் சிரித்தவள்,
“இந்த கேஸை பர்சனலா ஹேண்டில் பண்ண சொல்லியிருக்கார். சோ, ஒரு நல்ல விஷயம் நடக்க அவர் பேரை யூஸ் பண்ணிக்கலாம் தப்பில்லை.”
“ஓகே மேம்.” என்று அவன் எழுந்துகொள்ள, அந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரை வர சொல்ல சொல்லி செய்தி அனுப்பினாள்.
அவரும் அதுவரை அவர்கள் சேகரித்த தகவலை எடுத்து வந்தார். ஏற்கனவே பரிதி சொன்ன தகவல்கள் தான் எழுத்து வடிவம் பெற்று அந்த கோப்பில் இருக்க, அதை படித்து மூடி வைத்தவள்,
“சோ, நல்ல வசதியான இடத்து பொண்ணு இந்த மான்சி. பணத்துக்காக கொலை நடக்க வாய்ப்பில்லை.” என்றவளை குறுக்கிட்டார் இன்ஸ்பெக்டர்.
“நோ மேம், கண்டிப்பா பணத்துக்காக கொலை நடக்க வாய்ப்பு அதிகம் இருக்கு. நாம இந்த கோணத்தை அப்படியே ஒதுக்குறது கேஸ் மிஸ்லீட் ஆக வாய்ப்பிருக்கு.”
“பணத்துக்காக கொலை பண்ணிருந்தா கொலையாளிக்கு அவ உயிரோட மதிப்பு தெரிஞ்சிருக்கும். கடத்தி வச்சிருந்தாலே அவங்க குடும்பம் லட்ச கணக்கில கொட்டி கொடுத்திருக்கும். கொலை பண்ணனும்னு அவசியமே இல்லை.”
“…”
தன் கருத்துக்கு எதிர் கருத்து வருவதை இருவருமே விரும்பாது தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாய் இருக்க, அதிரா பேச்சை தொடர்ந்தாள்.
“பலாத்காரம் நடந்திருக்க வாய்ப்பிருக்கானு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தாதான் தெரியும். ஃபாரென்சிக் அண்ட் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வர்றவரைக்கும் வெய்ட் பண்ணாம அந்த பொண்ணோட ஆக்டிவிடீஸ் எப்படி என்னனு விசாரிச்சு க்ளூ கிடைக்குதான்னு பாருங்க. சுத்தி இருக்குற சிசிடிவி பூட்டேஜ் எல்லாம் பாத்தாச்சா?”
“கிடைச்ச வரைக்கும் பூட்டேஜ் கலெக்ட் பண்ணிட்டோம் மேம். என்ட்ரன்ஸ் அண்ட் லெப்ட் சைட் மட்டும்தான் பதிவாகி இருக்கு. அதுல எதுவும் சந்தேகம்படும்படியா இல்லை மேம்.” என்று சொல்ல, புருவம் சுருக்கியவள்,
“இப்போ கையில பூட்டேஜ் இருக்கா?” என்று கேட்டு பென்டிரைவை வாங்கிக்கொண்டவள் அதனை தன் மடிக்கணினியில் ஓடவிட்டாள்.
குப்பை மேட்டின் முன்புறமும் இடப்பக்கமும் மட்டும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்க, அதில் லாரிகளும் டிராக்டர்களும் தானியங்கி மூலம் கழுவுகளை கொட்டிவிட்டு செல்வது தெரிந்தது. சந்தேகம் கொள்ளும்படியாக டிரைவர்கள் கூட வண்டியிலிருந்து கீழ் இறங்கவில்லை.
“இது கொஞ்சம் ட்ரிக்கிதான். ஒன்னு உயிரோட இருக்கும் போதே குப்பை மேடுல பொண்ணை போட்டுட்டு தீ வச்சிருக்கலாம் இல்லை வேறெங்காவது கொலை பண்ணிட்டு சடலத்தை கொண்டு வந்து குப்பை மேடுல போட்டிருக்கணும் இது ரெண்டும் இல்லாம இந்த லாரி, டிராக்டர்ல கூட சடலத்தை தூக்கி போட்டுட்டு போய் இருக்கலாம்.
இந்த லாரி, டிராக்டர் எங்கெல்லாம் குப்பை கலெக்ட் பண்ணி இங்க வந்து கொட்றாங்கனு டீடெயில்ஸ் எடுங்க. அந்த டிரைவர்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு விசாரிங்க.” தன் யூகங்களை முன்வைத்து அதிரா கட்டளைகள் பிறப்பிக்க,
“அவங்க எல்லாரும் கான்ட்ராக்ட் ஒர்க்கர்ஸ் மேம். ஒரு பிரைவேட் கம்பெனி கவர்மெண்ட் கூட ஒப்பந்தம் போட்டு மாவட்டம் முழுசும் சேர்ற குப்பையை கலெக்ட் பண்ணி டிஸ்போஸ் பண்றாங்க.”
“அவங்க டிஸ்போஸ் பண்ற லட்சணம் தான் பாத்தாலே தெரியுதே. யார்கூட வேணும்னாலும் ஒப்பந்தம் இருக்கட்டும் நீங்க தயங்காம விசாரணையை ஸ்டார்ட் பண்ணுங்க.” என்று நம்பிக்கை கொடுத்த அதிரா,
“அந்த பொண்ணோட போன்?” என்று நிமிர்ந்து பார்க்க,
“இன்னும் கிடைக்கல மேம். அந்த பொண்ணோட சேர்ந்து ஃபோனும் எரிஞ்சிருக்கும்னு சந்தேகப்படுறோம்.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் பரிதி.
“மான்சியோட அம்மா நேத்தி காலையில மான்சி பிரெண்ட பார்க்க போறேன்னு சொன்னதாகவும் வீட்ல அந்த நேரம் கார் இல்லைனு மான்சி கேப் புக் பண்ணி போனதா சொல்றாங்க. அதுக்கு அப்புறம்தான் கான்டெக்ட் மிஸ் ஆகி, நைட் வீட்டுக்கு வரலைன்னதும் சந்தேகப்பட்டு இன்னைக்கு விடியல்காலையில கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காங்க.”
“அவங்க சொன்ன பிரென்ட்கிட்ட விசாரிச்சீங்களா?” பரிதியை உட்காரும்படி சைகை காட்டிவிட்டு கேள்வி எழுப்பினாள்.
“நோ மேம், இப்போ தான் அவங்க அம்மா நம்ம கான்ஸ்டபில்கிட்ட இந்த விஷயம் சொல்லி இருக்காங்க. நீங்க அப்டேட்ஸ் கேட்டதால் உங்ககிட்ட சொல்லிட்டு அடுத்தடுத்து பாக்கலாம்னு இருந்தோம்.” என்ற பரிதி அங்கிருந்த இன்ஸ்பெக்டரையும் பார்த்தான்.
“நேர்ல போய் விசாரிச்சிட்டு என்னனு சொல்றேன் மேம்.” என்று எழுந்தார் இன்ஸ்பெக்டர்.
அவரை அழுத்தமாய் பார்த்தவள், “நான் உங்களை இன்னும் கிளம்ப சொல்லல, வெளில வெயிட் பண்ணுங்க.” என்றதும் விறைப்பாய் சல்யூட் வைத்தவர் வெளியேறிவிட,
“மான்சி வீட்ல ரொம்ப ஆவேசமா இருக்காங்க மேம். கொலையாளியை கண்டுபுடிச்சு வெட்டணும் குத்தணும்னு குதிச்சிட்டு இருக்காங்க.”
“இட்ஸ் நேச்சுரல். நானே நாளைக்கு நேர்ல வந்து விசாரிக்குறேன்.” என்று மணிக்கட்டை பார்க்க, முன்னிரவு கடந்துகொண்டிருந்தது.
“நான் ரவுண்ட்ஸ் போறேன், வர்றீங்களா?” கோப்புகளை அடுக்கி மேசையில் ஓரமாய் வைத்தபடி எழுந்தவள் கேள்வியாய் அவனைப் பார்க்க, எழுந்துகொண்ட பரிதி,
“வரணும்னா வரேன் மேம், டியூட்டி முடிஞ்சிச்சு.”
அவனின் பதிலில் புருவம் உயர்த்தியவள், “சிலருக்கு கட்டம் கட்ட வேண்டியதிருக்கு. போய் பூஜை போடலாம்னு இருக்கேன்.” என்றவள் அலுவலக பையை எடுத்துக்கொண்டு கிளம்ப, இப்போது உடன் வர சொன்னாளா இல்லை வேண்டாம் என்றாளா என்று புரியாது நின்ற பரிதி வேக எட்டுக்கள் வைத்து அவள் வண்டியில் ஏறவும் உடன் ஏறிக்கொண்டான்.
“அந்த இன்ஸ்பெக்டரை வெளில வெயிட் பண்ண சொல்லியிருந்தேன், அவரை கிளம்ப சொல்லிடுங்க.” என்று அவனைப் பார்த்து சொல்ல, வேகமாய் இறங்கி இன்ஸ்பெக்டரை அனுப்பிவிட்டு வந்தான் பரிதி.
சீரான வேகத்தில் வாகனம் இலக்கை நோக்கி பயணிக்க, சைரனை அணைக்கச் சொன்னவள் வழியில் ஆங்காங்கே ரோந்து பணியில் இருந்த காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு நிலவரம் அறிந்து வண்ணம் அடுத்தடுத்து என்று பயணத்தை தொடர்ந்து வண்டியை நிறுத்திச் சொல்லிய இடம் கும்மிருட்டாய் இருந்தது.
“இது ஆளுங்கட்சி ஏரியா மேம்.” என்று இறங்கினான் பரிதி.
“தெரியும். அந்த ரெவன்யூ டிபார்ட்மென்ட் ரமேஷ் ரொம்ப துள்ளுறாரு, விசாரிச்சா இங்கிருந்துதான் அவருக்கு வகைதொகையா எல்லாம் சப்ளை ஆகுதாம்.”
“ஓ! இங்க தட்டுனா அங்க அடங்கும் அதுதானே மேம்?” என்று பரிதி நக்கலாய் இதழ் வளைக்க, மெலிதாய் சிரித்தவள்,
“இங்கிருந்து பத்தாவதா ரெட் கலர் பெயிண்ட் அடிச்சிருக்குற வீட்டுல இருக்குறவங்களை போய் கொத்தா தூக்கிட்டு வாங்க. தனியா வேணாம் டிரைவரையும் கூட்டிட்டு போங்க.” என்று சொல்லிவிட்டு காரில் சாய்ந்து கைகட்டி நிற்க, சற்று நேரத்தில் ஐவரை அழைத்து வந்தான் பரிதி.
“ஆள் தெரியாம கை வைக்காதீங்க, எதா இருந்தாலும் காத்தால ஸ்டேஷனுக்கு வரோம், பேசிக்கலாம்.” ஐவரில் கழுத்து வரை முடி வைத்து முகத்தில் கண், மூக்கு, வாயை தவிர்த்து ஏனைய இடத்தையெல்லாம் தாடிக்குள் மறைத்து வைத்திருந்த அந்த வாட்டசாட்டமான ஆள் துள்ள, அவனை அலட்சியமாய் பார்த்த அதிரா,
“பேரு கட்டர் பிரபா. ஆளுங்கட்சி எம்.எல்.ஏவோட வலது கை. கொலை கேஸை தவிர கை, கால் வெட்டுன கேஸ், கஞ்சா, பிட்பாக்கெட், ஈவ்டீஸிங் கேஸ்னு உன் பேருல இல்லாத கேஸே கிடையாது. இந்த மாவட்டத்துக்குள்ள உன்னை மீறிதான் கருப்பு பணம் உள்ள நுழைய முடியும், வெளில போகவும் முடியும். பெரிய தலைங்ககிட்ட இருபது பெர்சென்ட் வாங்கிட்டு அதுல அஞ்சு பெர்சென்ட் போலீஸ் டிபார்ட்மென்ட், அஞ்சு பெர்சென்ட் ரெவன்யூ டிபார்ட்மெண்ட்க்கு தண்டம் அழற.
ஆனா பாரேன், நீ வசமா சிக்குற மாதிரி என்னால ஒரு கேஸ்ல உன்னை இழுத்து விடமுடியும். அந்த குப்பை அள்ளுற கான்ட்ராக்ட் கம்பெனி உன்னோடதுனு எனக்குத் தெரியும். இப்போ அங்க செத்துச்சே ஒரு பொண்ணு அவங்க குடும்பத்துக்கு நேஷனல் லெவல்ல பவர் இருக்கு. உங்க எம்.எல்.ஏ கட்சியோட கூட்டணி கட்சி ஆள்தான் அவரு.
ம்னா போதும் உன் எம்.எல்.ஏ கூட கட்சி கூட்டணிக்காக உன்னை காட்டி கொடுக்க சொன்னா, காட்டி கொடுத்துட்டு போயிட்டே இருப்பாரு. எப்படி வசதி?”
அதிகார வர்க்கங்களுக்கு நடுவே தாங்கள் பந்தாடப்படுவது மிகச் சாதாரணம். தங்களை உரு தெரியாது உருக்கிப்போட்டால் கூட அதை எப்படி மூடி மறைக்க வேண்டும் என்று அதிகார மையத்திற்கு தெரியும். என்றைக்கு வேண்டுமென்றாலும் அந்த அதிகார மையம் மாறும் என்று அறியாதவன் அல்ல கட்டர் பிரபா. அதனால் எப்போதுமே தட்ட வேண்டிய இடத்தில் தட்டி அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி செல்வான். இன்றும் அதிராவின் நோக்கத்தை அறிந்துகொள்ள வேண்டி தணிந்து போனான்.
“நான் என்ன செய்யணும் மேடம்?”
“எடுத்த கான்ட்ராக்ட்டை ஒழுங்கா பண்ணு. குப்பையெல்லாம் க்ளியர் பண்ணி பப்லிக்கு இஸ்யூ வராம பாத்துக்கோ. இல்லைனா உன் பேரையும் எப்.ஐ.ஆர்ல சேர்க்க மட்டுமில்லை, நீதான் முதல் குற்றவாளின்னு உள்ள தள்ளி திகாருக்கு மாத்தவும் முடியும்.”
அவளின் அலட்சியத் தொனி கட்டர் பிரபாவை எரிச்சல் படுத்தினாலும் விரைவில் வரவிருக்கும் தேர்தலில் பல உட்கட்சி வேலைகள் செய்ய வேண்டிவரும் என்பதால் எதையும் காட்டிக்கொள்ளாது ஜகா வாங்கினான்.
“இவன் அமைதியா தலையாட்டிட்டு போறதை பாத்தா சரியாப்படலையே.” என்று பரிதி சந்தேகமாய் அதிராவை பார்க்க,
“சந்தேகமே வேண்டாம். ஒரு வருஷத்துல எலெக்ஷன் வரப்போகுது இப்போ இவன் சிக்குன்னா நஷ்டம் இவனுக்கும் இவனை சார்ந்திருக்கிற ஆளுங்கட்சி எம்.எல்.ஏ’வுக்கும்தான். அதான் அடங்கி போறான். எலெக்ஷன் முடிஞ்சதும் திரும்ப வாலாட்டுவான் அப்போ பாத்துக்கலாம்.” என்றவள் காரில் ஏறிக்கொள்ள,
“அடுத்து எங்க மேம்?”
“மான்சி வீட்டுக்கு.”
“இப்போவா?” அதிர்ந்து மணியை பார்த்தான் பரிதி. அது பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது.
“ஏறுங்க பரிதி.” என்றாளே ஒழிய காரணம் சொல்லாது, மான்சி வீடு இருக்கும் தெருவுக்கு வண்டியை விடச் சொன்னாள்.
தலைநகர் சென்னையின் நகர நெரிசலை வெறுத்து அமைதியை தேடி செங்கல்பட்டு எல்லைக்கு உட்பட்டிருக்கும் ஊர்களில் பங்களாக்கள் கட்டி வந்துவிட்டிருந்தனர் பல முக்கிய புள்ளிகள். அப்படியான முக்கியஸ்தர்கள் வசிக்கும் தெருவில்தான் மான்சி வீடும் இருந்தது.
பெரிய கதவுகளுக்கு பின் பிரம்மாண்டமாய் வீற்றிருக்கும் வீடுகளை காணுகையில் அவர்களின் செல்வ செழிப்பு அப்பட்டமாக புலப்பட, பணத்திற்காக என இந்த பெண்ணை கொலை செய்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்ற எண்ணம் வராது இல்லை. ஆனால் அதிராவின் உள்ளுர்ணர்வு நிச்சயம் இந்த கொலை பணத்திற்காக அல்ல என்று அடித்துக்கூற, உள்ளுணர்வின் உந்துதலுக்கு செவி மடுத்தாள்.
“போஸ்ட் மார்ட்டம் வர்றப்போ வரட்டும். நீங்க மான்சி எங்கெல்லாம் போனாங்கன்னு விசாரிச்சு எல்லா பூடேஜையும் கலெக்ட் பண்ணுங்க.”
“கடைசி மூணு மாச கால் ஹிஸ்டரி எடுக்க சொல்லியாச்சு மேம்.” என்ற பரிதியை எங்கு இறங்க வேண்டும் என்று கேட்டு வீட்டிற்கு திரும்புகையில் அவனை இறக்கிவிட்டு கிளம்ப, அங்கிருந்த சிறிய பொட்டிக்கடை வாயிலில் ஒரு கையில் மதுபாட்டிலுமாய் மறு கையில் சிகரெட் துண்டுமாய் கண்ணில் பட்டான் அவன். அகிலன். நேற்றிரவு அவனை சந்தித்த நினைவு எழ, முகம் தன்னால் அதிருப்தி காட்டியது.
வண்டியை நிறுத்தச் சொன்னவள், இறங்கி அவன் பெயர் சொல்லி அழைக்க, காது கேளாதது போல் தம்மடித்துக்கொண்டிருந்தான் அகிலன்.
அவனின் அலட்சியத்தில் பல்லைக் கடித்தவள் தன் டிரைவரிடம் சொல்லி அவனை அழைத்து வரச்சொன்னாள்.
“மேடம் கூப்பிடுறாங்க சார்.” என்று டிரைவர் அகிலனிடம் சொல்ல, தெனாவட்டாய் பார்த்த அகிலன்,
“மேடமா? எந்த மேடம்? நீங்க கூப்பிட்டா நான் உடனே வரணுமா?” என்று பார்வையை சுழற்ற, சற்று தொலைவில் அந்த தெரு முனையில் காரில் சாய்ந்து அவனை முறைத்தபடி காக்கி உடையில் இருந்த அதிரா தென்பட்டாள்.
புருவம் நெறுக்கி அவளை பார்த்தவன் அலட்சியமாய் தோள் குலுக்கி சிகரெட்டை காலுக்கடியில் போட்டு நசுக்கிவிட்டு அதிராவை நெருங்கினான்.
“பொதுல எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா?” என்று எடுத்தவுடன் அதிரா எகிற, விறைப்பானது அவன் உடல்.
“டியூட்டி முடிஞ்சிடுச்சு மேடம்.” என்ற அகிலன் தான் காவலர் உடையில் இல்லையென்பதை கண்களால் சுட்டிக்காட்டுவது போல் குனிந்து தன்னை பார்த்துவிட்டு அவளைப் பார்த்தான்.
“டியூட்டி முடிஞ்சா எப்படி வேணும்னாலும் இருக்கலாம்னு நினைப்போ. மத்தவங்களுக்கு உதாரணமா இருக்க வேண்டிய வேலையில இருந்துகிட்டு இந்த நேரத்துல இப்படி பொது இடத்துல சரக்கு பாட்டிலோட இருக்கிறது நாட் அக்சப்டபில். கண்ணியமா இருங்க.” என்று அவள் வார்த்தையில் கடுமை ஏற்றாது பேச, அது அவன் மண்டையில் ஏறினால் தானே.
தன் பேச்சிற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாது அழுத்தமாய் நிற்பவன் மீது அளவுக்கதிகமாய் கோபம் வர, சட்டென அவன் கையில் இருந்த பாட்டிலை பிடுங்கி தூர வீசினாள். சுக்கு நூறாய் தெறித்து உடைந்து விழுந்தது அந்த விஸ்கி பாட்டில்.
“நான் இப்போ டியூட்டில இல்லை. என்னோட தனிப்பட்ட விஷயத்துல நீங்க தலையிடுறது சரியில்லை மேம்.” சரக்கு வீணாய் கீழே போன ஆத்திரத்தில் வார்த்தைகளை கடித்துத் துப்பினான் அகிலன்.
“டியூட்டில இருந்தாதான் கேள்வி கேக்கணும்னு இல்லை. யார் இந்த நேரத்துல குடிச்சிட்டு சுத்துனாலும் அதை தட்டி கேட்க எனக்கு ரைட்ஸ் இருக்கு மிஸ்டர். அகிலன்.”
“ரோட்டுல நின்னு குடிச்சிட்டு கும்மாளம் அடிக்கல நான். யாருக்கும் தொந்தரவு கொடுக்காம நான்பாட்டுக்கு வாங்கிட்டு என் ரூமுக்கு போய்ட்டு இருக்கேன்.” அவன் அழுத்தமாய் பேச, ஏனோ அவன் மீது தோன்றிய அதிருப்தி குறையவில்லை.
“மார்னிங் என் ஆபிஸ் வந்து பாருங்க.” என்றுவிட்டு அவள் வண்டியில் ஏறிக்கொள்ள, டிரைவர் வேகமாய் வண்டியை கிளப்பினார்.
செல்லும் அவளையே கடுப்புடன் பார்த்து நின்றவன் விரல்களை மடக்கி கை முஷ்டியால் காற்றில் குத்து விட்டு, தரையை காலால் உதைத்து நின்றான். அனைத்து கடைகளும் பூட்டியிருக்க இனி எங்கு சென்று மதுபானம் வாங்குவது என்று தலைகோதியவன் வேறு வழியின்றி தன் அறைக்குச் சென்று தூங்கிவிட்டு மறுநாள் சந்துருவிடம் நடந்ததை சொல்ல, வற்புறுத்தி அதிரா அலுவலகத்திற்கு அகிலனை அனுப்பி வைத்தான் சந்துரு.
காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சொன்ன வேலையெல்லாம் முடித்துவிட்டு அதிராவை சந்திக்க வேண்டி அவள் அலுவலகத்திற்கு வெளியே அவன் காத்திருக்க, அவனை உள்ளே அழைத்து அவனுக்கு அதிர்ச்சி கொடுக்க இருந்தாள் அதிரா.
error: Content is protected !!