இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 3
இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 3
“உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சி அவங்களே சரின்னு வரப்ப, நீ ஏன் மறுக்கற?”
படிச்ச பொண்ணே வேணான்றேன், நீ ஏன் ம்மா…? திரும்ப திரும்ப அதையே பேசிட்டிருக்கே. அதெல்லாம் சரி வராதும்மா….. படிச்ச பொண்ணு, அதை மாதிரியே தான எதிர்பார்க்கும். ‘’கல்யாணத்துக்கு பின்ன டீசன்டா டிரஸ் பண்ணனும், வெளிய போகனும்னா… எனக்கு ஒத்து வருமா….? எனக்கேத்த மாதிரி, என்னை அனுசரிக்கிற மாதிரி பொண்ணா வேணும்னா, படிக்காதவளா, வீட்டோட இருக்கறவளா இருந்தா தான் ஒத்து வரும்.’’
Advertisement
நானும் நீ சொல்றது போல மூனு வருஷமா பார்த்துகிட்டு தான் இருக்கேன், ஒன்னும் தகையலையே என்றார்.
இல்ல “தங்கச்சிக்கு முடிச்சிட்டு நான் பண்ணிக்கறேன்.”
‘’எதே? அண்ணே உங்க விளையாட்டுல என்னை இழுக்காதீங்க…….. நான் படிச்சு முடிச்சிட்டு இரண்டு வருஷமாவது வேலைக்கு போயிட்டு தான் கல்யாணம் பண்ணிப்பேன்.’’
Advertisement
ஹம்ம்…….. ‘’இப்படியே அண்ணனும் தங்கச்சியுமா…. போட்டா போட்டி போட்டுட்டு இருங்க, சீக்கிரம் இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிடலாம்.’’
Advertisement
மதுசூதனன் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவன் எழுந்து சென்று முகம் கைகால் கழுவி வந்து, தலை சீவி பைக் கீயை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
நான் பாட்டுக்கு பேசிட்டிருக்கேன் எனக்கென்னன்னு போறான் பாரு.
அம்மா விடும்மா, அண்ணன் ஏதாவது முக்கியமான வேலையா போகும், இல்லைனா உன்கிட்ட பதில் சொல்லாம போகுமா….. என சமாதானப் படுத்தினாள்.
Advertisement
வாங்க தம்பி…….. உங்களுக்காகத் தான், வெளியே போகாம உட்கார்ந்திருக்கேன்.
வணக்கம் ண்ணே……, என அவரைப் பார்த்து வணங்கிய மதுசூதனன், அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.
இதுவரைக்கும் வாங்கின தொகை எல்லாம் சின்னது. ஆனால் இப்ப நீங்க கேட்கற அமௌன்ட் கொஞ்சம் பெரிசு தம்பி, அதான் யோசனையா இருக்கு என்று இழுத்தார்.
‘’கரெக்டா சொன்ன மாதிரி குடுத்துருவேன் ண்ணே. கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் ஏமாத்தல்லாம் மாட்டேன். இவ்வளவு நாள் உங்ககிட்ட வாங்கின கடனை எல்லாம் சரியா வட்டியோட திருப்பி குடுக்கலையா…. நம்பிக்கையா குடுங்க’’.
நீங்க சொல்றது எல்லாம் புரியுது தம்பி, நீங்க கேட்கறது பெரிய தொகை, எந்த சுயூரிட்டியும் இல்லாம எப்படி குடுக்க முடியும்? இதுவரைக்கும் யாருக்கும் அவ்வளவு பெரிய தொகை எல்லாம் சுயூரிட்டி இல்லாம குடுத்தது இல்ல. உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது, உங்களுக்காக சுயூரிட்டி கொடுத்தா சொல்லுங்க…..
ஏன்? ண்ணே. என் மேல நம்பிக்கை இல்லையா….? பிறந்து வளர்ந்ததிலிருந்து பார்க்கறீங்க. எங்க கடை வீடுன்னு எல்லாமே உங்களுக்கு தெரியும். இதுவரைக்கும் உங்க கிட்ட தான் வியாபாரத்துக்குன்னு கடன் வாங்கி திருப்பிக் குடுத்திட்டிருக்கேன். நீங்களே நம்பலைன்னா எப்படி ண்ணே…..?
தொழில்ல வெறும் நம்பிக்கைய மட்டும் வச்சு ஒன்னும் பண்ண முடியாதுப்பா. யாராவது உனக்கு சுயூரிட்டி குடுக்கறாங்கன்னா சொல்லு நான் தரேன். மத்தபடி என்னால ஒன்னும் பண்ண முடியாதுப்பா, ஸாரி… தப்பா நினைச்சுக்காத, நீ எப்பவும் போல வாங்கற மாதிரி சின்ன தொகை வேணும்னா சொல்லு, நான் குடுக்கறேன் என்று விட்டார்.
அதற்குமேல் அவரிடம் கெஞ்சுவதற்கு அவனுக்கு விருப்பமில்லை, எழுந்து வந்துவிட்டான். சிதம்பரத்தில் மெயின் இடத்தில் சின்னதாக ஹோட்டல் ஒன்று லீசுக்கு வந்திருந்தது, அதற்காகத்தான் அவரிடம் பத்து இலட்சம் பணம் கேட்டிருந்தான்.
தொழிலுக்காக அவ்வப்போது அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி திருப்பி தருவதுண்டு. அந்த பழக்கத்தில் தான் அவரிடம் நம்பிக்கையாகக் கேட்டிருந்தான். அவர் சுயூரிட்டி எதுவும் இல்லாமல் முடியாது என மறுத்துவிட்டார்.
வேறு எங்கு வாங்கினாலும் வட்டி அதிகமாக இருக்கும், சரிவராது என நினைத்தான். ஏற்கனவே அந்த இடத்தில் ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்தவர், அங்கிருந்த உபகரணங்களோடே லீசுக்கு குடுப்பதால், எல்லாவற்றிற்கும் சேர்த்து பத்து இலட்சமாக கேட்டிருந்தார்.
இவன் நேரிலே சென்று பார்த்து, எல்லாம் ஒத்து வந்து பிடித்திருந்ததால் தான், எடுத்து நடத்தலாம் என எண்ணினான். இன்னும் எவ்வளவு காலம்தான் இந்த டீக்கடையிலேயே பொழப்பை ஓட்டுவது, வேறு ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என மனதில் நினைத்திருந்தவனுக்கு, இந்த ஓட்டலைப் பற்றி கேட்டதிலிருந்து, எப்படியாவது இதை லீசுக்கு எடுத்து நடத்த வேண்டும் என ஆசைப்பட்டான். ஆனால் பணத்திற்கு என்ன செய்வது….. என தெரியவில்லை.
கையில் கொஞ்சம் சேமிப்பு இருக்கும். அது அந்த அளவு காணாது. லீசுக்கான பணத்தை கடன் வாங்கி கொடுத்தாலும், அங்கே ஓட்டலுக்கான மூலப் பொருட்கள் வாங்கி, ஆட்கள் வைத்து தொழில் நடத்த வேண்டுமே. அதற்காக கையில் இருந்த இருப்பை நம்பியிருந்தான். யோசனையாகவே கடைக்குச் சென்றுவிட்டான்.
பூர்ணிமா ஸ்டாஃப் ரூமில் மாணவர்களின் கிளாஸ் வொர்க் நோட்டை கரெக்ஷன் செய்து கொண்டிருந்தாள். அவளின் பக்கத்தில் நேயா வந்து உட்கார்ந்தாள்.
ஆனாலும் நீ ரொம்ப இடம் குடுக்கற பூர்ணி சுமதி மிஸ்சுக்கு. அவங்க என்ன சொன்னாலும் தலையாட்டுவியா…. இதான் சாக்குன்னு எல்லா வேலையையும் உன் தலையில கட்டுது அது என குறை படித்தாள்.
பூர்ணிமா, விடு ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் ப்ரோகிராம்றதால அவங்களும் பிஸியா தான இருக்காங்க என்றாள் சமாதானமாக.
நேயா, அதுக்காக அதோட வேலையை எல்லாம் உன் தலையில கட்டுமா……? ஸ்போர்ட்ஸ் வேலைய பார்த்தா, அதுக்கான கிரெடிட்ஸ் எல்லாம் அதுக்கு தான போகுது. இப்படி சத்தமே இல்லாம அதோட கிளாஸ் வேலையை உன்கிட்ட தள்ளிட்டு, அது வெளியில பிஸியா இருக்கற மாதிரி ஆக்டிங் குடுக்குது.
அதுக்கு மட்டுமா ஸ்போரட்ஸ் ப்ரோகிராம் வேலை இருக்கு? நமக்கு கூடதான் இருக்கு. நாம கிளாஸ் வொர்க்கு ஸ்போர்ட்ஸ் வொர்க்குன்னு இரண்டையும் சேர்த்துதான பார்க்கிறோம், அந்த மிஸ்சுக்கு மட்டும் என்ன?
நீ ஆரம்பத்திலிருந்தே அதுக்கு இடம் கொடுத்து, கெடுத்து விட்டுட்ட. அது சொல்லும் போதெல்லாம் மறுக்காம செஞ்சதால, அதுக்கு ரொம்ப அட்வான்டேஜா போயிடுச்சு. என்கிட்டலாம் அது வேலைய காட்டுதா…? உன்னை மாதிரி ஆளுங்ககிட்ட தான் அதோட தில்லாலங்கடி எல்லாம் நடக்கும்.
விடு நேயா எப்பவோ ஒரு தரம் தான பண்றேன், இதைப் போய் பெருசா பேசிட்டு இருக்கயே?
என்ன எப்பவோ ஒரு தரம் தானா……? ஸ்போர்ட்ஸ், டே முடிஞ்சதும் அடுத்து கிறிஸ்துமஸ் ஃபெஸ்டிவல், அடுத்து பொங்கல் செலிபரேஷன் இப்படி ஒரு ஒரு செலிபரேஷனுக்கும் அந்த மிஸ் உன்கிட்ட அவங்க வேலைய தள்ளிட்டு, வெளி வேலைய பார்க்க போயிடறாங்க. உனக்கு ஒரு தடவை தானா என முறைத்தாள் பூர்ணிமாவைப் பார்த்து.
நேயாவைப் பார்த்து சிரித்த பூர்ணிமா, உனக்கு பசி வந்திடுச்சுன்னு நினைக்கறேன், அதான் இவ்வளவு கோவம் வருது என்றாள்.
ஹ்ம்ம்…… ஆமாம், பசி தான்……. என அசடு வழிந்தவள், எங்க…….? நீ பிரியா…….. இருப்பே, உன்னை அழைச்சிட்டு கேன்டீனுக்கு போயிட்டு வரலாம்னு பார்த்தேன்.
அவ்வளவு தான இதை முதல்லேயே கேட்கறதுக்கு என்ன? வா….. போலாம் என எழுந்தாள், கையில் இருந்த பேனாவை மூடி வைத்துவிட்டு.
ஹேய் என்ன கேட்டதும் வந்துட்ட? உன் வேலை முடிஞ்சதா……?
அதை நான் வந்து பார்த்துக்கறேன்…..? இன்னும் நான் உன்னை விட்டேனா……. பசியில என்னை கடிக்க ஆரம்பிச்சுடுவ, வா….. என தனது ஹேன்ட் பேக்கை எடுத்துக் கொண்டு கேன்டீனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
இருவரும் கேன்டீன் சென்று, காப்பியும் சமோசாவும் வாங்கி சாப்பிட்டு விட்டு தங்களது வகுப்பை நோக்கிச் நடந்தனர்.
பள்ளி முடிந்து பூர்ணிமா நேயாவுடன் பேசிக் கொண்டே வீட்டிற்கு செல்வதற்காக பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்தாள். அங்கே இவளை எதிர்பார்த்து செந்தில் நின்று கொண்டிருந்தான்.
பூர்ணிமா அவனை கவனிக்கவில்லை. நேயாதான் ஹேய் யார் அந்த ஹேன்ட்சம்? உன்னையே பார்த்துட்டு இருக்கார் ரொம்ப நேரமா என கைக்காட்டினாள்.
நேயா சொன்ன பிறகு தான் அவனைப் பார்த்தாள். அவனை அங்கு எதிர்பாராதவள் திகைத்து நின்றாள். இதுவரை அவன் இதுமாதிரி அவளைத் தேடியெல்லாம் வந்தது இல்லை. செந்திலைப் பார்த்ததும் உறவினன் என்ற முறையில் அருகே செல்ல வேண்டுமா….? இல்லை கண்டுக்காமல் சென்று விடலாமா…. என மனதிலேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை. இவளைப் பார்த்தவுடன் நேராக இவளிடம் வந்து நின்றான். நேயா திரும்பி கேள்வியாக பூர்ணிமாவைத் திரும்பி பார்த்தாள். பூர்ணிமா தயக்கமாக என்னோட ரிலேட்டிவ் என்றாள் முனகலாக.
நேயா, ஓஹ்…… என தலையசைத்தவள், பாய்…….. என கிளம்பிவிட்டாள் இவளை விட்டு.
செந்தில், எப்படியிருக்க பூர்ணி…….?
பூர்ணிமா, ஹ்ம்……… நல்லாயிருக்கேன். நீங்க எங்க இங்க……..?
ஹா…… ஹா…… என்னை, நீ இங்க எதிர்பார்க்கல இல்ல? உன்னை பார்க்கதான் வந்தேன்.
பூர்ணிமா புருவம் சுருங்க…….. என்னைப் பார்க்கவா, அப்படின்னா…. நீங்க வீட்டுக்கு வந்திருக்கலாமே? இங்க எதுக்கு………?
இங்க எதுக்கு வந்தீங்கன்னு கேட்கறீயா……? வீட்டுக்கு வந்தா உன்னைப் பார்த்து பேச உங்க அக்கா விட்டுடுவாங்களா….. என்னை? அதான் இங்கேயே வந்துட்டேன்.
சரி வா…, இங்கேயே எவ்வளவு நேரம் நின்னு பேச முடியும்….? எங்கயாவது காப்பி ஷாப்புக்கு போகலாம்.
இல்ல எனக்கு நேரமாயிடுச்சி, லேட்டானா அக்கா தேடுவாங்க….. என்னன்னு இங்கேயே சொல்லுங்க என்றாள்.
ஓகே… என தோளை குலுக்கியவன், உனக்கே தெரியும் நான் எதுக்காக வந்திருக்கேன்னு, என் வாயால சொல்லனும்னாலும் சொல்றேன். ‘’எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வைங்கன்னு எத்தனையோ தடவை உங்க வீட்டுல கேட்டுட்டேன், ஆனால் அவங்க உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறதா இல்ல’’. அதான் உன்னையே நேர்ல பார்த்து பேசிடலாம்னு கிளம்பி வந்துட்டேன். ‘’எனக்கு உன்னோட சம்மதம் போதும், நீ ஓகேன்னு சொன்னா, நாம கல்யாணம் பண்ணிக்கலாம்’’.
”அவங்களோட விருப்பம் இருக்கனும்னு அவசியம் இல்ல. நீ என்ன சொல்ற……?”
‘’இதுல நான் சொல்ல ஒன்னும் இல்ல. பெரியவங்க என்ன சொல்றாங்களோ அதுதான் என் விருப்பமும். அவங்க யாரை சொல்றாங்களோ அவங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன். என் முடிவுன்னு தனியா எதுவும் கிடையாது.’’
நீ என்ன? சின்ன குழந்தையா…..? அவங்க சொன்னாதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றதுக்கு. உனக்குன்னு எந்த விருப்பமும் இல்லையா…..? உன்னை பெத்தவங்களா இருந்தா கூட நீ சொல்றதுல அர்த்தம் இருக்கு, அவங்க யாரு உன்னை வளர்த்தவங்க தான……. அவங்களுக்கு நீ இவ்வளவு இம்பார்ட்டன்ஸ் குடுக்கனும்னு இல்லை.
‘’என்னைப் பொருத்தவரை, என்னை பெத்தவங்களும் அவங்கதான், வளர்த்தவங்களும் அவங்கதான். இவ்வளவு நாள் என்னோட நல்லது கெட்டது பார்த்தவங்களுக்கு, என்னோட கல்யாணத்தையும் எப்படி பண்ணனும்னு தெரியும். சோ எல்லாமே அவங்க விருப்பம்தான்.’’ நீங்க எது பேசறதாயிருந்தாலும் வீட்டுல பேசுங்க என நடக்க ஆரம்பித்தாள் பஸ் ஸ்டான்டை நோக்கி.
அவளைப் பொறுத்தவரை அவள் அப்பா அம்மாவை போட்டோவில்தான் பார்த்திருக்கிறாள். நினைவு தெரிந்த நாளிலிருந்து அவளுக்கு எல்லாமே செல்விதான். அந்த அர்த்தத்தில்தான் அவள் அப்படி பேசினாள்.
ஹம்ம்…… நான் கூட உன்னை என்னவோன்னு நினைச்சேன், தெளிவாதான் இருக்கே. என்னைப் பத்தி உனக்கு நல்லாவே தெரியும். யாரோ தெரியாதவன்னு இல்ல. உன் அண்ணியோட கூடப் பிறந்த தம்பி நான். என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா….? உன்னை நான் நல்லா வச்சிக்க மாட்டேனா…….?
அண்ணியோட தம்பின்றதால தான் உங்க கூட இவ்வளவு நேரம் நின்னு மரியாதையா, நீங்க கேட்கறதுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டிருக்கேன். தெரியாதவரா இருந்தா போயிட்டே இருந்திருப்பேன். நான் உங்களுக்கு பதில் சொல்லிட்டேன்னு நினைக்கறேன், இதுக்கு மேல எது பேசறதா இருந்தாலும் வீட்டுல பெரியவங்க கிட்ட பேசுங்க. எனக்கு நேரமாயிடுச்சு என நில்லாமல் நடக்க ஆரம்பித்தாள்.
அவளுடனேயே நடந்தவன், உங்க வீட்டு பெரியவங்கதான் என்னோட பேசவே மாட்டேன்றாங்களே? ஒன்னு மட்டும் உறுதியா சொல்லுவேன் நான் இல்லாம வேற யாரும் உன் கழுத்துல தாலி கட்ட முடியாது.
என்னை மீறி கல்யாணம் பண்ணனும்னு நினைச்சா நேத்து நடந்த மாதிரிதான் நடக்கும். என்ன பார்க்குற? எனக்கு தெரியாம உனக்கு வேற ஒருத்தனோட கல்யாணம் பண்ணிடலாம்னு பார்த்தாங்க இல்ல உங்க அக்கா…….. நான் நடக்க விட்டுடுவேனா…….?
நீங்க இரகசியமா செஞ்சா எனக்கு தெரியாதா…..? நான் எங்க இருந்தாலும் உன்னை வாட்ச் பண்ணிட்டேதான் இருப்பேன். நான் தான் உனக்கு புருஷன். என்னை மீறி யாரையும் உன்னை கல்யாணம் பண்ண அனுமதிக்க மாட்டேன் என்றான் தலையசைத்து.
அவன் வார்த்தைகளில் அவளுக்கும் உஷ்ணம் வந்தது. உன்னால முடிஞ்சது பார்த்துக்கோடா என கத்த வேண்டும் போல ஆத்திரம் வந்தது. ஆனால் எல்லாம் மனதில் மட்டுமே.
அவள் ஊருக்கான பஸ் வரவும் அதில் ஏறிக் கொண்டாள். அவளைத் தொடர்ந்து அவனும் அதில் ஏறி அவள் அருகில் வந்து நின்றான்.
நீ என்னதான் என்னை விலகி போகனும்னு நினைச்சாலும் நான் உன்னை விலக விடமாட்டேன். நீயே என்கிட்ட உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்கப் போற பாரு………
அப்படி என்ன உங்களுக்கு பிடிவாதம். நேத்து வந்த மாப்பிள்ளை என்னை விட எந்த விதத்துல உசத்தி. ஏன்…, நான் அழகாயில்லையா…? நல்ல வேலையில இல்லையா…? வருமானம் தான் இல்லையா…..? எந்த விதத்துல நான் குறைஞ்சு போயிட்டேன், உங்க வீட்டை விட……?
நான் எடுத்து சொன்னா நீ புரிஞ்சுப்பேன்னு தான் சென்னையில இருந்து உன்னை பார்க்க வந்தேன். நீயும் புரிஞ்சுக்காம பிடிவாதமா பேசறே. நேத்து நடந்ததுலேயே நீ என்னைப் புரிஞ்சிகிட்டிருப்பேன்னு நினைச்சேன்.
ஒன்னு மட்டும் நினைவில வச்சுக்கோ. நீ எந்த ஊருக்குப் போனாலும், எவ்வளவு விலகனாலும் உன்னை விடமாட்டேன்.
அதற்குள் அவள் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்ததும், அவனைத் திரும்பி கூடப் பார்க்காமல் வேகவேகமாக இறங்கி விட்டாள் பஸ்ஸிலிருந்து.
அவள் ஏதும் அவனிடம் பேசாமல் சென்றது அவனுக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது. போடி போ…… எங்க போயிடப் போற…… இதுக்கு எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் நீ படப் போற பாரு என மனதினுள் கறுவிக் கொண்டான்.
பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்ததும் தான் அவளுக்கு மூச்சே சீரானது.
அவன் பேச பேச பயமும் அழுகையும் ஒருசேர உள்ளுக்குள்ளே, அவளை வாட்ட தொடங்கியது. அதனை வெளியே முகத்தில் தெரியாமல் கட்டுப்படுத்த முயன்றதில்… நெஞ்சில் படபடப்பும், சீரற்ற சுவாசமும் ஏற்பட்டது. அவனை விலகி வந்ததும் தான் நிம்மதியான சுவாசமே வந்தது அவளுக்கு.
வீட்டுக்கு வந்தவள் ஹேண்ட் பேக்கை போட்டு விட்டு, சோபாவில் தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடி சரிந்தவாக்கில் அமர்ந்து கொண்டாள். இவளைப் பார்த்த மாதவி பூர்ணிமாவின் அருகில் வந்தமர்ந்தவள், பூர்ணிமாவின் தோளைத் தட்டி ‘’ என்னடா தலையை வலிக்குதா’’ என கேட்டாள்.
எப்பொழுதும் வீட்டிற்குள் வரும் பொழுது சிரித்தவாறே மாதவியை தேடி வருபவள், இன்று வந்ததும் சோபாவில் கண்களை மூடி உட்கார்ந்ததும் கேள்வியாக, பூர்ணிமாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து அன்பாக விசாரித்தாள். நேற்று நடந்ததை நினைத்து இன்னும் வருந்துகிறாளோ என மனம் தவித்தது மாதவிக்கு.
மாதவியைக் கண்திறந்து பார்த்தவள், ஸ்கூல் விட்டு வரும்பொழுது செந்திலைப் பார்த்தேன் க்கா……….. என்று கூறினாள்.
மாதவிக்கு அதிர்ச்சி, ‘’என்னடி சொல்ற, அவன் எங்க அங்க வந்தான்…?’’
என்னைப் பார்த்து பேசனும்னு வந்ததா சொன்னார் க்கா…………
என்ன சொன்னான்? உன்னை எதுவும் மிரட்டுனானா……….? எனக்கு அங்கயிருந்தே ஒரு போன் பண்ணிருக்க வேண்டியது தான.. என்றாள் பதற்றத்துடன்.
மிரட்டலாம் இல்லக்கா………, அவரைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லிக் கேட்டார். நேத்து நிச்சயத்தை நிறுத்தினது அவர்தான்னு அவரே சொல்றார், என செந்தில் பேசியது முழுவதையும் மாதவியிடம் கூறினாள்.
என்ன நெஞ்சழுத்தம் பார்த்தியா… அவனுக்கு? இங்கேயே தேடி வந்து உன்கிட்ட பேசியிருக்கான். இவ்வளவு துணிஞ்சவன் இன்னும் என்ன செய்யமாட்டான், என அவனை திட்டித் தீர்த்தாள்.
அந்த பயம்தான் பூர்ணிமாவுக்கும், இதுவரை தன்னிடம் நேரிடையாக திருமணம் செய்து கொள்ளச் சொல்லி எல்லாம் பேசினதில்லை. வீட்டில் பெரியவர்கள் மூலம் பேசியவன், இப்பொழுது அவளை நேரிடையாகவே அணுக ஆரம்பித்திருந்தது பயத்தைக் கொடுத்தது. இதுவும் மறைமுகமான மிரட்டல்தானே என யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவளை எண்ணி அவளுக்கே ஆயாசமாக இருந்தது, தன்னை பெற்றவர்கள் இப்படி தன்னை நிர்கதியாக தவிக்க விட்டுச் சென்றதை எண்ணி உள்ளுக்குள்ளேயே மருகினாள். போனவர்கள் தன்னையும் அழைத்துச் சென்றிருக்கக் கூடாதா……?
இன்னும் எவ்வளவு நாள் இப்படி அடுத்தவர்களை பார்த்தே, அவர்களுக்கு பயந்தே காலத்தை ஓட்டுவது. யாரையும் சாராமல் சுதந்திரமாக வாழ முடியாதா எனக் குமைந்தாள்.
இதுவரை அவளுக்கான எந்த விருப்பத்தையும், ஆசையையும் வெளியில் வாய்விட்டு சொல்லியது இல்லை. அவளது பெரியம்மா செல்வி என்ன சொன்னாலும் சரி என்று விடுவாள். படித்த படிப்பிலிருந்து, போடுகிற துணிவரை எல்லாம் அவர் சொல்வதுதான். பசித்தால் கூட வெளியே சொல்லமாட்டாள்.
அவர் எதற்கும் இவளைக் கட்டாயப்படுத்தியதில்லை. அவருடைய பிள்ளைகளுக்கு செய்வது போலதான் இவளுக்கும் செய்வார். இருந்தாலும் பூர்ணிமா வாய் திறந்து தனக்கு பிடித்தமான எதையும் சொல்லவும் மாட்டாள், செய்யவும் மாட்டாள்.
செல்வியின் கண் பார்த்தே, அவர் விருப்பத்திற்கு இணங்கவே நடப்பாள். தன்னால் இவர்களுக்கு எந்த விதமான இடையூரும் தொந்தரவும் ஏற்படக் கூடாது என அவளது மனதில் ஆழப்பதிந்திருந்தது.
அவளது சின்ன வயதில் செல்வியின் வீட்டிற்கு வரும் உறவினர்கள், அவளை அக்கறையாக நலம் விசாரிப்பது போல, அவளது நிலையை அழுந்த அவள் மனதில் பதிய வைத்திருந்தார்கள்.
அவர்களது பேச்சு எல்லாம், கூடப் பிறந்தவளா இருந்தாலும் யார் செய்வாங்க இந்த காலத்தில? உங்க பெரியம்மாக்கு தங்கமான மனசு, அவள் சொல்ற மாதிரி கேட்டு நடந்துக்கோ, என பலதும் பேசி அவளது மனதில் பிரிவினையை ஏற்படுத்தியிருந்தனர்.
அந்த வார்த்தைகள் எல்லாம் அவளுக்கு வலியுடன், தான் தனி என்பதையும் சேர்த்தே உணர்த்தியிருந்தது.
செல்வியை அம்மா என்று அழைத்தாலும், மனதில் அவர் உன் பெரியம்மா தான் என்பதை உணர வைத்திருந்தனர் உறவினர்களும், சுற்றி இருப்பவர்களும். அதுவே நாளாக நாளாக அந்த பிஞ்சு மனதில் ஆழமாகப் பதிந்தது.
தன்னால் பெரியம்மாக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என மனதினில் அழுத்தமாக பதிந்து, மனதளவிலேயே அந்த குடும்பத்திலிருந்து ஒதுக்கத்தைக் கொடுத்திருந்தது.
பாண்டியனுக்கு திருமணமாகி தேவகியின் வருகைக்கு பிறகு ரொம்பவே மனதளவில் ஒடுங்கியிருந்தாள். இப்பொழுது செந்திலின் கல்யாணத்திற்கான மிரட்டல் அவளை பயம் கொள்ளச் செய்தது. இனி என்ன செய்யப் போகிறோம்….. என தெரியாமல் சோர்ந்துவிட்டாள் மனதளவில்.
தொடரும்.
