Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இ.பி.கோ. 55

இ.பி.கோ. 55 – அத்தியாயம் 4

அத்தியாயம் – 4

“இது இயற்கையா நடந்ததுன்னு எப்படி இவ்ளோ உறுதியா சொல்றீங்க?”

“புகையோட நிறமும் காற்றுல கலந்திருந்த வாயுவையும் வச்சி பாக்கும் போது தற்செயலா குப்பையில கிடந்த ஏதோ சில மெட்டல்ஸ் ஒன்னோட  ஒன்னு உரசியோ இல்லை எளிதா தீ பிடிக்குற பொருளோட உராய்வுனால நடந்திருக்க வாய்ப்பு இருக்கு.” என்று தீயணைப்பு துறை சார்பாக வந்திருந்த அதிகாரி தீவிபத்து சம்பந்தமான இறுதி அறிக்கை கோப்புகளை நீட்ட, பெற்றுக்கொண்ட அதிரா அதை மேலோட்டமாய் புரட்டிப் பார்த்தாள்.

“யாரும் குப்பையை தரம் பிரிச்சி போடுறது இல்லை. மக்குறது மக்காதது, சுலபமா தீ பற்றக்கூடியது எது என்னனு எல்லாம் பாக்காம ஒரே பையில கட்டி தூக்கி போட்டுடுறாங்க. தொழிற்சாலை கழிவு கூட ஒழுங்கா ஹாண்டில் பண்றது இல்லை. சோ, எப்படி எதனால தீ புடிச்சிருக்கும்னு உறுதியா சொல்ல முடியாது.” 



Advertisement

தங்களின் அவசர தேவை புரிந்து விரைந்து அறிக்கை தயாரித்து கொடுத்ததற்கு நன்றி நவிழ்ந்து அவரை அனுப்பி வைத்தவள் நேரத்தை பார்க்க மதிய உணவு வேளை நெருங்கி இருந்தது. அழைப்பு மணி அடிக்க, அவள் உணவுடன் உள்ளே நுழைந்தார் உதவியாளர்.

“உங்களை பார்க்க கான்ஸ்டபிள் அகிலன் வெய்ட் பண்றார். நீங்க வர சொல்லி இருந்தீங்களாம்.” உணவு பையை கொடுத்துவிட்டு உதவியாளர் தகவல் சொல்ல, மணிக்கட்டை பார்த்தவள் நேரமாவதை உணர்ந்து,

“சாப்பிட்டு ஈவ்னிங் போல வர சொல்லுங்க.” என்று அவரை அனுப்பிவிட்டு உணவுப் பையை பிரித்தாள். அதில் அதிகமிருக்கும் சாதத்தை ஒதுக்கிவிட்டு ஏனைய குழம்பு, கூட்டு, பொரியலை சேர்த்துக்கொண்டாள். பத்து நிமிடத்தில் மாவட்ட ஆட்சியருடன் காணொளி அழைப்பு இருந்ததால் உணவை விரைந்து முடித்தவள் அறையில் இரண்டொரு நிமிடம் நடந்துவிட்டு பேசுவதற்கு தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு மடிக்கணியை உயிர்ப்பித்து அமர்ந்தாள்.

Advertisement

அவருடன் அழைப்பு முடிந்த பின் வழக்கமாக நடக்கும் உள்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை என்று நேரம் செல்ல, மாலை பொழுதில் பரிதி கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தான்.

Advertisement

அப்போதுதான் அனைத்து ஆலோசனைகளையும் முடித்திருந்தவள் தலையின் பின்னே கைகோர்த்து கழுத்தை இடவலமாய் அசைத்து இளகுவானாள். பரிதி வரவும் நிமிர்ந்து அமர்ந்து அவனைக் கேள்வியாய் பார்த்தாள்.

“இன்னைக்கு மான்சி வீட்டுக்கு விசாரிக்க போலாம்னு சொன்னீங்க மேம்.” என்று அவன் நினைவூட்ட, நெற்றியை தேய்த்துக்கொண்டவள், போகலாம் எனும் விதமாய் தொப்பி எடுத்துக்கொண்டு எழுந்தாள்.

“அதுக்கு முன்னாடி இந்த பூட்டேஜையும் பாத்துடுங்க.” என்று ஒரு பென்டிரைவை நீட்ட, யோசனையுடன் அதை தனது மடிக்கணினியில் சொருகி ஓடவிட்டாள்.

Advertisement

கும்பலுக்கு நடுவே ஒரு இளம்பெண் இரண்டு ஆண்களுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தாள். பெண்ணின் முதுகு புறம்தான் கேமராவில் பதிவாகியிருந்தது. என்ன இது என்பது போல் அதிரா நிமிர,

“அந்த பொண்ணுதான் மான்சி. பிரெண்ட் வீட்டுக்கு போய்ட்டு திரும்ப ஷேர் ஆட்டோல வந்துட்டு இருக்கும்போது ஏதோ பிரச்சனையாகி ஆட்டோலேந்து பாதியிலேயே இறங்கியிருக்காங்க. இதுக்கு அப்புறம் தான் மான்சிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. இரண்டாவதா அவங்க ஒரு ஆட்டோல ஏறி போயிருக்காங்க. விசாரிச்சதுல அந்த ஆட்டோ ரிப்பேர் ஆகி பாதி வழில நின்னுட்டதுனால மான்சி அங்கேயே இறங்கி போயிட்டாங்கனு சொல்றான் அந்த ஆட்டோக்காரன்.” திரையில் தெரியும் படத்திற்கு விளக்கவுரை அளித்தான் பரிதி. 

அதிரா அதை மீண்டும் ஓடவிட, கூட்டத்தை விலக்கிக்கொண்டு காவல் உடையில் ஒருவன் உள்ளே நுழைவது தெரிந்தது. நொடி நேரத்தில் அவனை கண்டுகொண்டவள், “இது கான்ஸ்டபில் அகிலன். வெளில வெயிட் பண்ணுவாரு. உள்ள வர சொல்லுங்க.” என்று தன் உதவியாளரை அழைத்து சொல்ல,

“மதியம் சாப்பிட்டு சாயந்திரமா வர சொன்னீங்க மேடம், அவர் இன்னும் வரல.” என்ற பதில் வந்தது.

“எந்த ஸ்டேஷன்னு பாத்து சீக்கிரம் வர சொல்லுங்க.” கட்டளை பிறப்பித்தவள் பரிதியிடம் வேறு தகவல் கிடைத்ததா என்று கேட்டுக்கொண்டாள்.

“சுத்தி விசாரிச்ச வரைக்கும் லீட் கிடைக்கல மேம். ஆட்டோல நடந்த பிரச்சனை கூட தற்செயல் மாதிரிதான் தெரியுது.”

“அப்படி ஈஸியா விட்டுற முடியாது. பிளான் பண்ணிதான் நடக்கணும்னு இல்லை, அந்த நேர சிதறல்ல என்ன வேணா நடந்திருக்கலாம். மான்சி சண்டை போட்டுட்டு இருந்த அந்த ரெண்டு பேரை கூப்பிட்டு விசாரிங்க.” என்றவள் தொடர்ந்து,

“நீங்க இன்னும் ஷார்ப்பா இருக்கனும் பரிதி. ஒவ்வொரு முறையும் நானே அடுத்து என்னன்னு சொல்லிட்டு இருந்தா கேஸை சீக்கிரம் முடிக்க முடியாது. மான்சி வீட்ல விசாரிக்கணும்.” என்று எழுந்துகொண்டவள்  விறுவிறுவென அறையிலிருந்து வெளியேற, பின்னோடே சுணக்கத்துடன் அவளை தொடர்ந்தான் பரிதி.

வாகனம் மான்சி வீட்டு வாயிலில் நிற்க, காவலாளி அந்த பெரிய கதவை திறந்துவிட்டான். வெளிக் கதவிலிருந்து வீட்டு உள்வாயிலை நெருங்கும் அந்த ஐநூறு அடி தூர சாலையின் இரு பக்கமும் பச்சை பசேலென செடிகளும் மரங்களுமாய் பசுமை போர்த்தி இயற்கையின் செழுப்பை வனப்பாய் காட்டியது. ஆங்காங்கே பூத்துக்குலுங்கிய பூக்கள் கண்களுக்கு விருந்தாய் அமைய, அவ்விடமே மனதை சாந்தப்படுத்துவதாய் இருந்தது. 

“மான்சி இயற்கை விவசாயம் பண்றதுல ஆச்சரியமே இல்லை. வீடே அழகா இருக்கு.” என்றான் பரிதி.

கார் வாயிலில் நிற்க, காவலாளி கொடுத்த தகவலின் பெயரில் வீட்டு வாசலுக்கு வந்த மான்சியின் உறவினர் ஒருவர் இவர்களை வரவேற்று அழைத்துச் சென்றார். 

மேலோட்டமாக கேட்ட கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் சொல்லி இருந்ததால் இறுக்கமாகவே அமர்ந்திருந்தனர் ஓய்ந்து போயிருந்த மான்சியின் பெற்றோர்.

“திரும்ப திரும்ப இதையே தான் கேக்குறீங்க. ஆனா ஒன்னும் கண்டுபுடிச்ச மாதிரி தெரியல. முடியலைன்னா சொல்லிடுங்க நாங்க பாக்க வேண்டியவங்களை வச்சி பாத்து கண்டுபுடிச்சிக்குறோம். எங்களுக்கும் ஆளுங்க இருக்காங்க.” என்று சீறினார் மான்சி உறவினர்.

“விசாரணை போய்ட்டு இருக்கு சார். சந்தேகப்படுறபடி எந்த தகவலும் இல்லைங்கும் போது எங்களுக்கும் டைம் எடுக்கும். மான்சியோட ரெக்கார்டஸ் எல்லாமே க்ளியரா இருக்கு. விசாரிச்சா வரைக்கும் யார்கிட்டேயும் எந்த முன்புகையும் இல்லை. அவங்க தனிப்பட்ட விஷயங்களை டீப்பா தோண்டுனா ஏதாவது கிடைக்க வாய்ப்பிருக்கு. மான்சியோட க்ளோஸ் பிரெண்ட்ஸ் பத்தி சொல்லுங்க. அதோட சமீபமா அவங்களை யாராவது பின்தொடர்ற மாதிரியோ தொந்தரவு பண்றதாகவோ சொல்லி இருக்காங்களா?” கேள்விகளூடே மான்சி பெற்றோர் முகத்தை உன்னிப்பாக கவனித்தாள் அதிரா.

அவர்கள் முகத்தில் தெரியும் குழப்பங்களும் யோசனைகளும் அவளுக்கு உதவிகரமாக இல்லை. அவர்கள் கொடுத்த பதிலுமே வழக்கின் முன்னேற்றத்திற்கு வழி கொடுக்கவில்லை.

“காலேஜ் படிக்கும் போது ஏதாவது பிரச்சனை?” என்ற அதிராவின் கேள்விக்கு அவர்களின் பதில் மறுப்பாய் சிறு தலையசைப்பே.

பெருமூச்சு விட்டவள் சட்டென இருக்கையிலிருந்து எழுந்து, “மான்சியோட ஆபீஸ் அண்ட் ஃபார்ம் பாக்கணும்.” என்று தீர்க்கமாய் சொல்ல, 

“ஆபீஸ் இப்போ பாருங்க, ஃபார்ம் இங்கிருந்து இருபது கிலோமீட்டர் தள்ளி  இருக்கு. அங்க போறதுக்குள்ள இருட்டிடும். நாளைக்கு என் ஆள்கிட்ட சொல்லி வைக்குறேன். நீங்க எப்போ வேணுமோ போய் பாத்துக்கலாம்.” என்ற மான்சியின் தந்தை அவரின் உதவியாளரை கூப்பிட்டு அதிராவை மான்சியின் அலுவலகம் மற்றும் அவர்களின் தோப்புக்கு அழைத்து போக சொன்னார்.

உதவியை மறுத்த அதிரா இரண்டு விலாசங்களையும் வாங்கிக்கொண்டு முதலில் மான்சி அலுவலகம் சென்றாள். அந்த அலுவலகம் சிறிய குடோன் போல் இருந்தாலும் நேர்த்தியாய் காய்கறிகள், பழங்கள் அடுக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மறுநாள் அனுப்ப வேண்டிய காய்கறி ஆடர்களை பிரித்து பைகளில் போட்டு ரசீது அச்சிடப்பட்டு விநியோகத்திற்காக ஓரிடத்தில் அடுக்கிக்கொண்டிருந்தனர் சிலர். மான்சி இல்லையென்றாலும் ஆர்டர்கள் தொடர்ந்து வருவதால் வேலை துரிதமாய் நடந்து கொண்டிருந்தது.

உடன் மான்சியின் தனிப்பட்ட குளிரூட்டப்பட்ட அறை ஒன்றும் இருக்க, அவளது அறையை நோட்டமிட்டவள் பரிதியை துப்பு துலக்க சொன்னாள். 

சிறிது நேரம் தேடிவிட்டு உதட்டை பிதுக்கினான் பரிதி. இடவலமாய் தலையசைத்த அதிரா அங்கிருந்த ஊழியரை அழைத்து கையோடு சிசிடீவி பதிவுகளை வாங்கிக்கொண்டாள். மான்சி அலுவலகம் தொடர்பான ஆவண கோப்புகளை மேசை இழுவையில் பத்திரப்படுத்தி வைத்திருக்க, அதையும் எடுத்துக்கொண்டு கிளம்பினர்.

“தலைவலியா இருக்கும் போல இந்த கேஸ்.” அதிரா நெற்றியை தேய்க்க ஆமோதித்தான் பரிதி.

“எந்த லீடும் கிடைக்கல. நாளைக்கு போஸ்ட் மார்டம் ரிப்போட் வந்துரும், மேபீ அதுல ஏதாவது கிடைக்கலாம்.”

“அது கைக்கு வந்ததும் லேட் பண்ணாம என்கிட்ட ரிப்போட் பண்ணுங்க.” என்றவள் வழக்கு குறித்த யோசனையில் மூழ்கிவிட, மீண்டும் அலுவலகத்தில் நின்றது கார்.

இறங்கியதும் பரிதியை வேறு வேலைக்கு அனுப்பி வைத்தவள் தன் அறை நோக்கி வேகநடை போட, அவளை மறித்தபடி குறுக்கே நின்றான் அகிலன். அவன் இடையூரில் அப்பட்டமாய் எரிச்சலை முகத்தில் காட்டியவள், ‘மேனர்ஸ் என்ன விலைனு கேப்பான்’ என்று வாய்க்குள் முனகியபடி அவனை தாண்டிச் சென்றாள்.

அவளின் உதாசீனத்தில் சினம் வரப்பெற்றவனாய் விரல்களை உள்ளங்கையில் குவித்து அழுத்தினான். அவனைக் கடந்து இரண்டடி வைத்த அதிரா, தனிப்பட்ட எரிச்சலை மற்றவரிடம் கடத்தக்கூடாது என்று கண்மூடி நிதானித்தவள் அவன்புறம் திரும்பி,

“உள்ள வாங்க.” என்று அவனை அழைத்துவிட்டு அவளறைக்குள் நுழைந்து நாற்காலியில் அமர்ந்தாள்.

பின்னோடே வந்து விறைப்பாய் சல்யூட் வைத்தவன் முகம் இறுகிப் போயிருந்தது. 

“ரெண்டு நாள் முன்னாடி சென்னை திருச்சி ஹைவேஸ்ல ஒரு பொண்ணு கூட ரெண்டு பேர் சண்டை போட்டிருக்காங்க. அந்த இடத்துல நீங்களும் இருந்தீங்க. அங்க என்ன பிரச்சனை? அந்த ரெண்டு ஜென்ட்ஸ் யாரு என்னனு விசாரிச்சிங்களா?” 

வழக்கு முக்கியமானதாக முன்னே நிற்க, முதல் நாள் குறித்த பேச்செல்லாம் எடுக்காமல் நேரே மான்சி விவகாரத்துக்கு வந்தாள். அவனுக்கோ அவள் எதை கேட்கிறாள் என்று புரியாது முகம் சுருக்கினான். 

“உங்களை தான் அகிலன், அங்க என்ன பிரச்சனை ஆச்சு? அந்த பொண்ணு ஏதாவது சொன்னாளா?” அதிரா அழுத்திக் கேட்க, மங்கலாய் நினைவில் வந்தது அந்த பெண் முகம். அவளைத்தான் சொல்கிறாளா என்று சந்தேகம் வேறு முளைக்க, நெற்றி சுருக்கி முகம் இளகி நின்றான்.

அவனின் மெளனம் அவளை சோதிக்க, அவனை கடிய நா வரை வந்த வார்த்தைகளை விழுங்கியவள் தன் மடிக்கணினியில் பென்ட்ரைவை சொருகி அந்த காணொளியை அவனுக்குக் காட்டினாள். அதை பார்த்தவுடன் நினைவு வந்தவனாய் முகம் விகசிக்க,

“இது சப்பை மேட்டர் மேடம். அந்த பொண்ணோட முடி தெரியாம மேல உக்காந்திருந்தவங்களோட லேப்டாப் பேக் ஜிப்ல மாட்டிக்கிச்சு. அதை பெருசாக்கி பிரச்சனை பண்ணிட்டா அந்த பொண்ணு.” சிரத்தையின்றி அவன் கூற,

கூர்மையாய் அவனைப் பார்த்தவள், “நடந்ததை சொல்லுங்க, அது சப்பை மேட்டரா சப்ஜெக்ட் உள்ள மேட்டரான்னு நான் முடிவு பண்ணிக்குறேன்.”

அவளின் கடுமையில் அவன் முகம் வீழ்ந்திட, அன்று நடந்ததை வேறெங்கோ பார்த்தபடி சொன்னான்.

“புல்ஷிட். பிரச்சனைன்னு சொன்ன பொண்ணுகிட்ட விசாரிக்காம உங்க வெத்து வீராப்பை காட்டுட்டு வந்திருக்கீங்க. ரெண்டு ஆம்பளைங்களும் அந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்திருக்க கூட வாய்ப்பிருக்கு. அங்க கோட்டை விட்டுட்டு இங்க தெனாவட்டா நிக்குறீங்க. இதுதான் நீங்க டியூட்டி பாக்குற லட்சணமா?”  

“அந்த ரெண்டு பேரும் ஐ.டில வேலை பாக்குறவங்க. விசாரிச்சுதான் அனுப்புனேன். டிப்டாப்பா அவ்ளோ டீசண்ட்டா இருந்தாங்க, இந்த பொண்ணுதான் கத்திட்டு இருந்துச்சு.” பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்து துப்பாத குறையாக அகிலன் வாதிட,

“டிப்டாப்பா இருந்தா தப்பு பண்ண மாட்டாங்கன்னு யாரு மேன் சொன்னது உனக்கு? குழந்தைலேந்து கிழவி வரை யாருக்கும் இங்க பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நீங்க இந்த லட்சணத்துல வேலை செஞ்சா பொண்ணுங்க எல்லாம் நிம்மதியா சுத்தின மாதிரிதான்.”

“…”

“இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு நீங்க வேலை பாத்து கிழிச்சது எல்லாம் போதும். நாளையிலிருந்து என் டிரைவரை ரீப்லேஸ் பண்ணி நீங்க டேக் ஓவர் பண்ணுங்க. ஆடர் நாளைக்கு கையிக்கு வந்துரும்.” என்று அசராது குண்டை தூக்கிப்போட்டவளின் கோபம் கட்டுக்கடங்க மறுத்து கனன்று கொண்டிருந்தது.

வேலையில் அவன் காட்டிய அலட்சியத்தை அவளால பொறுக்கவே முடியவில்லை. வேறு ஏதாவது பிரச்சனை என்றாலாவது இளக்கம் வந்திருக்குமோ என்னவோ பெண் சம்மந்தப்பட்ட பிரச்சனை எனும்போது எச்சரிக்கையாய் கையாண்டு மான்சியை விசாரித்து சரிசெய்திருக்க வேண்டாமா? தினம் பெண்களுக்கு எதிராக எத்தனை வன்கொடுமைகள் நடக்கிறது என்ற புள்ளி விவரத்துடன் நேரில் பார்க்கும் காவல் அதிகாரியே இப்படி அலட்சியம் காட்டலாமா என்று புகைந்து கொண்டிருந்தாள்.  

அவளுக்கு ஈடாக டிரைவராக நானா என்று அதிர்ந்து சினந்து நின்றான் அகிலன்.

“டிபார்ட்மெண்டல் டிசிபிலினரி ஆக்ஷன் எடுக்கணும்னா என் ஷிப்ட் டைமிங் இல்லை டியூட்டியை மாத்தி போடுங்க. அதை விட்டு இப்படி டிரைவரா போடறது எல்லாம் ரூல்ஸ்ல இல்லை…”

“உங்ககிட்ட ரூல்ஸ்ல இருக்கா இல்லையான்னு கேக்கல. ஆடர் போட்டிருக்கேன். நாளைக்கு நேரமே வந்து சேருங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு.” கத்தரித்தது போல் பேசிய அதிரா மேசையில் இருந்த கோப்புகளில் கவனம் செலுத்த, இதழ்களை இறுக மூடி விறைப்பாய் நின்ற அகிலனின் நெஞ்சம் கொதித்தது. 

அவன் கிளம்பாமல் நிற்பதை கண்டு கேள்வியாய் புருவம் உயர்த்திய அதிரா, “ஆடர் கைக்கு வந்தாதான் கிளம்புவீங்களா?” என்றிட,

விறுவிறுவென அவன் கதவை நோக்கி நடக்க, அவன் வெளியேறும் முன், “வெளில அசிஸ்டென்ட்கிட்ட உங்க டீடைல்ஸ் குடுத்துட்டு போங்க.” என்றவள் உன்னை அழைத்த வேலை முடிந்துவிட்டது என்பது போல் அடுத்த வேலையை பார்க்கத் துவங்கிவிட, கையாலாகாதவனாய் அங்கிருந்து வெளியேறினான். 

அதிகார வர்க்கத்தில் இருந்துகொண்டு அவள் தன்னை மட்டம் தட்டுகிறாள் என்று உள்ளுக்குள்ள உறுமிக் கொண்டிருந்தவன் வேறு வழி இல்லாதவனாய் தன் விவரங்களை அளித்துவிட்டு புறப்பட்டான்.

‘சட்டையில ஸ்டார் வச்சிருக்கோங்குற திமிரு. என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு நினைச்சிட்டு இருக்காங்க. நான் சும்மா விடமாட்டேன்.’ என்று கொந்தளித்த அகிலன் நேரே ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் சென்று முறையிட்டான்.

“டிரைவரா போடுறது எல்லாம் ஓவர் சார். தனிப்பட்ட அவங்களோட வெறுப்பை காமிக்குறாங்க.”

பதிலுக்கு அன்று சாலையில் பிரச்சனையினூடே வீடியோ எடுத்தவர்களிடம் அவன் கை ஓங்கி, நாக்கு துருத்தி வாதிடும் காணொளியை காண்பித்தவர்,

“இப்போ சோஷியல் மீடியாவுல சுத்திட்டு இருக்கிறதை மேடமும் பாத்திருப்பாங்கயா. போதாக்குறைக்கு அந்த பொண்ணு வேற செத்து போச்சு. உன்னை கிழிகிழினு கிழிச்சிட்டு இருக்காங்க. சஸ்பென்ஷன் கொடுக்காம இதோட விட்டாங்கன்னு போவியா. அதை விட்டுட்டு வந்துட்டான் நேர்மையா வேலை பாக்குற மாதிரி.” என்று அவனை திருப்பி அனுப்ப, கூண்டுக்குள் அடைக்கப்பட்டவனாய் பொருமலுடன் அங்குமிங்கும் நடந்தான்.

“எத்தனையோ முறை சொல்லிட்டேன் வேலைல அலட்சியமா இருக்காத ஒருத்தர் போல ஒருத்தர் இருக்க மாட்டாங்கன்னு. கேட்க மாட்டேன்னு இஷ்டத்துக்கு இருந்தா இப்போ எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பாத்தியா.” என்ற சந்துருவை வெறி கொண்டு முறைத்தான் அகிலன்.

“உன் ஈகோவை ஓரமா தூக்கி வச்சிட்டு சீக்கிரம் இதிலிருந்து வெளில வரப்பாரு.”

சந்துரு ஈகோவை பற்றி சொன்னதும் இவனது ஈகோ விழித்துக்கொண்டது. சூடாய் ஏதோ சொல்ல வாய் திறக்கவும் அவன் அலைபேசி அலறவும் சரியாய் இருந்தது. எடுத்துப்பார்த்தால் அவன் அம்மா அழைத்தார். மீண்டும் எரிச்சல்.

“என்ன ம்மா?” 

அவன் குரல் கொண்டே மகனின் மனநிலையை கணித்தவர் சொல்ல வந்ததை விடுத்து, “சாப்பிட்டியா அகிலு?”

“இதை கேட்கத் தான் கூப்பிட்டியா நீயி?”

“ஒரு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வந்து ஓய்வா இருந்துட்டு போயா.” 

“ஓய்வா இருந்துட்டா மட்டும் எல்லாம் மாறிட போகுது பாரு. ஏதாவது சொல்லிட போறேன் போனை வையி.” என்று அகிலன் கத்த, எதிர்முனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டது.  

“ஏன்டா இப்படி எரிஞ்சி விழற?” அதிருப்தியாய் கேட்டான் சந்துரு.

“மனுசன் இருக்கிற நிலைமை புரியாம ஓய்வாம் ஓய்வு. வந்துட்டாங்க எதையாவது சொல்ல…”

“நீ பேசுறது செய்யறது எதுவுமே நல்லாயில்லைடா. அம்மாவா போயிட்டதால நீ அவங்களை போட்டு இந்த பாடுபடுத்தியும் திரும்ப திரும்ப உன்கிட்ட வராங்க. இல்லைனா…” பேச்சை சட்டென சந்துரு நிறுத்த, இடுங்கும் பார்வை பார்த்த அகிலன், 

“அதான் வாய் வரைக்கும் வந்துடுச்சே, முழுசா சொல்லு.” என்று சீற,

“சொல்வேனே எனக்கென்ன பயமா? உன்கிட்ட எல்லாம் மனுசன் இருப்பானாடா.” 

“ஏன் நீ இல்லை?” என்று எகத்தாளமாக பார்த்தான் அகிலன்.

நெற்றியில் அடித்துக்கொண்ட சந்துரு, “நான் இருக்கிறதும் உன் குடும்பம் இருக்கிறதும் ஒன்னாடா? சந்தோசத்தை விடு நீ துவண்டு போறப்ப, கோபப்படுறப்ப, மனசுக்கு ஆறுதல் தேடுறப்ப அதை வெளிக்காட்ட ஒருத்தவங்க வேணும். இப்படி தேள் கொட்டுற மாதிரி கொட்டி கொட்டி உனக்குன்னு இருக்கிறவங்களை ஒதுக்கி வச்சிடாத அப்புறம் நீதான் வருத்தப்படுவ.” 

முகத்திற்கு நேரே தன் எதிர்மறை குணங்களை பிட்டு பிட்டு வைக்கும் நண்பனை முறைத்தவன் எதுவும் சொல்ல முடியாமல் விருட்டென அறையை விட்டு வெளியேறினான். 

நிதர்சனத்தை புரிந்துகொள்ள விரும்பாதவனுக்கு எதை சொல்லி தெளிய வைப்பது என்ற யோசனையுடன் செல்லும் அகிலனைப் பார்த்த சந்துருவுக்கு பெருமூச்சு எழுந்து அடங்கியது. 

சினத்துடன் வெளியேறிய அகிலன் நேரே சென்றது மதுபான கடைக்குத்தான். அங்கு கூட்டம் நிரம்பி வழிய, அனைவரையும் இடித்துக்கொண்டு கூட்டத்தினுள் நுழைந்தவன் காசை கொடுத்து தேவையானவற்றை வாங்கி வந்தான். ஒரு கையில் மதுவும் மறு கையில் சிகரெட்டையும் பற்ற வைத்து இழுத்து புகையை வெளித்தள்ளியவன் சரியாய் மாட்டக்கூடாத நபரிடம் இன்றும் மாட்டிக்கொண்டான்.

எதார்த்தமாய் அவ்வழியே வந்த அதிராவின் வாகனம் அவன் அருகில் சென்று நிற்க, புருவ முடிச்சுடன் நிமிர்ந்து பார்த்த அகிலன் அதிராவை கண்டதும் நொடி அதிர்ந்து பின் எரிச்சலை முகத்தில் காட்டினான். அவள் எதுவும் கேட்கும் முன்,

“என் டியூட்டி முடிஞ்சிடுச்சு.” என்றான் தன் இரவு உடையை சுட்டிக்காட்டி.

அவனை தீர்க்கமாய் பார்த்தவள் அருகில் இருக்கும் டிரைவரை பின் செல்லும்படி கண் அசைத்தவள் அகிலன் புறம் திரும்பி, “வந்து வண்டி எடுங்க.” 

“என்ன?” 

“உங்களை பாத்துட்டு இங்கேயே நிக்க எனக்கு நேரமில்லை. கேஸ் விசாரணை இருக்கு.” என்றாள் அதிரா அதிகாரமாய்.

தாடை இறுக கோபத்தில் கனன்றவன் தன்னை கட்டுப்படுத்த மிகுந்த சிரமப்பட்டு, “நாளைக்குதான் என் ஒர்க் ஸ்டார்ட் ஆகுது. இன்னைக்கு என்னால முடியாது.” 

“ஹையர் ஆபீசர் சொன்னா கேக்கணும்னு உங்க ஸ்டேஷன்ல சொல்லித்தரலையா. நான் எப்போ கூப்பிட்டாலும் வரணும் அதுதான் உங்க வேலை. வந்து வண்டி எடுங்க இல்லை சஸ்பென்ஷன் லெட்டர் வாங்கிட்டு போயிட்டே இருங்க. உங்க இஷ்டத்துக்கு வேலை செய்ய இதுவொன்னும் உங்க வீடு இல்லை.” என்ற அதிராவின் அழுத்தமான வார்த்தைகளுக்கு அகிலன் மதிப்பு கொடுத்தானோ இல்லையோ அவளின் கட்டளையை மதித்து கீழிறங்கியிருந்த ஓட்டுநர் அகிலனை நெருங்கி,

“சஸ்பென்ஷன் வாங்குனா சம்பளத்துல கைவப்பாங்க. இன்க்ரிமெண்ட் எல்லாம் லேட்டாகும். யோசிச்சிக்கோங்க தம்பி.” என்று மெதுவாய் சொல்ல, இதழ்களை அழுந்த மூடி நின்றவன் சிகரெட்டை காலில் போட்டு நசுக்கிவிட்டு விறுவிறுவென ஓட்டுநர் இருக்கையில் ஏறினான்.

மதுபானத்துடன் வண்டியில் எறியவனை உக்கிரமாக முறைத்த அதிரா அதை பிடுங்கப் போக, அவனே அதை ஜன்னல் வழியே தூர வீசினான். சில்லுசில்லாய் உடைந்தது அந்த பானம். 

“இப்படி நடுரோட்டுல போட்டு உடைச்சா போற வர யார் காலையும் கிழிக்காதா… கொஞ்சமும் பொறுப்பு இல்லை.” அதிராவின் குரலுக்கு சற்றும் சலைக்காது,

“நேத்தி நீங்களும் இப்படி ரோட்டுலதான் உடைச்சீங்க மேடம்.” என்றான் அகிலனும் ஏளனமாய்.

எப்போதும் அவளுள் இருக்கும் நிதானம் அவனின் சரிக்குசரி பேச்சில் தவறிவிட, கோபம் தலைக்கேறியது. கொஞ்சமும் சமூக பொறுப்பின்றி சமூகத்தை காக்கும் வேலையில் இருந்துகொண்டு என்ன தெனாவெட்டாய் பேசுகிறான். உயர் அதிகாரி என்ற பயமும் மரியாதையும் துளியும் அவனிடம் இல்லை. வேலையில் பற்று இல்லை, நேர்மையும் இருக்குமா என்ற சந்தேகம் எழ, அவனை ஊடுருவும் பார்வை பார்த்தாள்.

அவனோ அவளின் பார்வையெல்லாம் கண்டுகொள்ளாது வண்டியை சரேலென்று எடுக்க, சீட்பெல்டின் உபயத்தால் இருக்கையிலிருந்து நகராது தப்பித்தவள் அவனின் வேகத்தை கண்டுகொண்டாள்.

‘திமிர்… திமிர்…’ முனகியவள், “மெல்ல போ.” என்று ஒருமைக்கு தாவியிருந்தாள். 

திரும்பி அவளை பார்த்தவன் என்ன நினைத்தானோ வேகத்தை குறைத்து, “எங்க போகணும் மேடம்?” மேடம்’ என்றதில் அழுத்தம் கொடுத்தான்.

“இப்போவாச்சும் கேக்கணும்னு தோணுச்சே. இதையே வேலையில காட்டியிருந்தா இந்நேரம் மான்சி கேஸ்ல லீட் கிடைச்சிருக்கும்.” சத்தமாகவே சொன்னவள் அவள் வீட்டிற்கு செல்லும் வழியை சொல்ல, வீட்டினுள் வண்டியை நிறுத்தியவன் புருவம் சுருங்க,

“கேஸ் விசாரணை இருக்குனு சொன்னீங்க?” என்று பார்த்தான் அகிலன்.

“என்னை கேள்வி கேட்க உன்னை டிரைவராக்கல.” சொன்னதை மட்டும் செய் என்ற செய்தி தாங்கி வந்த அவளது பதிலில் மட்டுப்பட்டிருந்த எரிச்சல் மீண்டும் வந்தது.

“சாவி?” என்று அவள் கை நீட்ட, அவள் கைக்கு நேரே கை உயர்த்தி பொத்தென்று அவள் உள்ளங்கையில் சாவியை போட்டான் அகிலன். அவனை முறைத்தவள் டிரைவரை ஒரு நாள் விடுப்பு எடுத்துவிட்டு மறுநாள் அலுவலகத்திற்கு வர சொன்னவள், “உங்க வேலையை மாத்திவிடுறேன்.” என்கவும் அவன் குளிர்ந்துவிட்டான்.

அப்படியே 360 டிகிரி சுழற்சியாய் கடுவன் பூனை போல் அவள் முகம் மாறிட அகிலனிடம் பார்வை பதித்தவள், “காலையில ஷார்ப் எயிட்க்கு இங்க இருக்கணும். லேட்டானா லெட்டர் தேடி வரும். வேலைக்கே வர வேணாம், வீட்லையே உங்க இஷ்டபடி ரெஸ்ட் எடுக்கலாம்.” என்றுவிட்டு சென்றவளை திட்டாமல் இருக்க முடியவில்லை அகிலனால்.

‘அகங்காரம் புடிச்சவ.’

‘திமிரு திமிரு…’ என்று வாய்க்குள் திட்டிக்கொண்டிருக்க, அனைத்தையும் அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்த டிரைவர் அவனிடம் வந்தார்.

“நான் பாத்ததுலேயே மேடம் ரொம்ப நல்ல மாதிரி. அக்கறையா இருப்பாங்க. சூதானமா புழைக்க கத்துக்கோங்க.”

“போயா…” என்றிருந்தான் அகிலன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!