Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மைவிழி ஜாடைகள்.

மைவிழி ஜாடைகள் – 8

மைவிழி – 8

“சித்பா உங்களை தாத்தா வரட்டாம்” என அசந்து தூங்கிக் கொண்டிருந்த வாசனை எழுப்பினாள் ஆரன்யா. (கிருஷ்ணனின் மகள்)



Advertisement

“வரேன்டா” கண் திறக்காமல் புரண்டு படுத்தவனின் செவியில்,

“விடியக் காலைல தானே வந்தான். எதுக்கு இப்பவே எழுப்பறீங்க?” என மேகலை சலித்துக் கொள்வதும்,

Advertisement

Advertisement

“மணி ஏழாச்சு மேகா! இன்னும் என்ன தூக்கம்” என அமரேசன் பதில் கொடுப்பதும் கேட்டது.

“உங்க ரூல்ஸ்க்கு ஒரு அளவில்லையா? இப்போ நீங்க ரிடேர்ட் ப்ரின்சிபால். மறந்து போய் அடிக்கடி வீட்டையும் ஸ்கூல் போல நடத்தறீங்க” என்றார், மேகலை கண்டனமாக.

Advertisement

“நேர காலமே எழுந்துக்கறது உடம்புக்கு நல்லது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இதுவும் ரொம்ப முக்கியம்” என அமரேசன் பாடம் எடுக்கத் தொடங்கி விட, மேகலைக்கு எதற்கு பேச்சுக் கொடுத்தோம் என்றாகி விட்டது.

இது வாடிக்கை தான்.

அமரேசன் ஓய்வு பெற்ற அதிபர் என்பதால் இப்படிப்பட்டவர் அல்ல. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அப்படி ஒரு விம்பத்தைக் கொடுத்தாலும் அவர் வளர்ந்த விதமே இம்மாதிரி தான் இருந்தது.

பழக்க வழக்கங்கள் எல்லாவற்றிலும் ஒரு நெறிமுறையைக் கடைப்பிடிப்பவர். அதனால் பிள்ளைகளையும் அப்படியே பழக்கி விட்டிருந்தார்.

மேகலைக்கு இப்படியான வாழ்க்கை முறையில் சற்றும் உடன் பாடில்லை என்பதால், மனைவியைத் தனக்குப் போல் மாற்ற முயற்சித்தவருக்கு இறுதியில் கிட்டியதென்னவோ தோல்வி தான்.

காலையில் ஐந்துக்கெல்லாம் எழுந்து விட வேண்டும். அதேபோல் இரவு பதினொரு மணிக்கு முன்பு தூங்கி விட வேண்டும் என எதற்கும் சட்டம் தான். ஆண் பிள்ளைகள் என்றாலும் சரி மாலை ஆறு மணிக்கு மேல் பொழுதுக்காக எல்லாம் வெளியில் சுற்றக் கூடாது என பலவித விதி முறைகள்.

கிருஷ்ணன் உட்பட வாசன் வரை இன்னுமே இதையெல்லாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தான் இங்கு ஹைலைட்!

“கீர்த்தி!”என மகனை அழைத்தவாறு அவன் அறை நுழைந்தவர், மின் விசிறியை அணைத்து விட்டு திரைச் சீலைகளை திறந்து விட்டார்.

“எழுந்துக்கோ ப்பா”என அவன் பாதங்களில் தட்டி விட்டு செல்ல, அலுப்பு இருப்பினும் எழுந்து கொண்டான் கீர்த்தி வாசன்.

முகம் கழுவி விட்டு கூடம் வந்தவனிடம், காபியைக் கொடுத்தாள் சௌந்தர்யா.

“தேங்க்ஸ் அண்ணி” என வாங்கிக் கொண்டவனின் கண்களில் தூக்கம் மிச்சமிருந்தது.

அதைக் கண்டு கொண்ட மேகலை, “அவர் தான் சொல்றாருன்னா உன் கொழுந்தனுக்கு கொஞ்சம் தூங்கி எந்திருச்சா என்னவாம்?ஸ்கூல் இன்னைக்கு லீவ் தானே போட்டிருக்கான்.” என்றார் மூத்த மருமகளிடம்.

“நீங்களே ஏன்னு கேளுங்களேன் அத்தை!” என புன்னகைத்த சௌந்தர்யா சமையலறை நுழைந்து கொள்ள,

“கல்யாணம் முடிய மட்டும் எனக்கு இவன் கூட பேச்சில்லை” என அடுக்களையை எட்டிப் பார்த்து குரல் கொடுத்தார், மேகலை.

“இப்போ தான் நிச்சயமாச்சில்ல! அப்போ பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி தான் இல்லையாமா?அப்போ பாதியாவது பேசலாம்ல”என குறும்பாய் தாயிடம் வாசன் கேட்க,

“அதெல்லாம் செல்லாது. செல்லாது!கல்யாணம் முடிஞ்ச அப்பறம் தான் பேசுவேனாம்” என்றவர் மகனைப் பார்க்காது அவனிடமே சொல்ல, அடக்க மாட்டாமல் சிரித்து விட்டான் வாசன்.

மேகலை பேரப் பிள்ளைகளை பள்ளி அனுப்புவதற்கு எழுந்து செல்ல,

“நேத்து பூ வைக்கற ஃபங்க்ஷன்லாம் எப்டி போச்சண்ணி?” என டிபன் வைத்த சௌந்தர்யாவிடம் கேட்டான்.

“நல்லா போச்சு தம்பி.” என்றவளிடம் தலையசைத்து விட்டு,

“நீங்க வெச்சிட்டு ரெடியாகுங்க அண்ணி. வேலைக்கு டைம்மாகுதில்ல. நான் பாத்துக்கறேன்” என சொல்லி அவள் கரத்திலிருந்ததை வாங்கி மேசையில் அடுக்கி வைத்தான் வாசன்.

அந்நேரம் கிருஷ்ணனும் பரதனும் வர,

“முப்பது பேருக்கு மேல நேத்து பங்ஷனுக்கு கூட்டிட்டு போனீங்களாம். அவங்க கிட்ட நாம இத்தனை பேர்னு சொல்லலையே. இல்ல, நான் சென்னைக்கு போனப்பறம் இது பத்தி அவங்க கிட்ட இன்போர்ம் பண்ணிட்டு போனீங்களா?” என கேட்டான் நிதானமாய்.

தொண்டையை செருமிக் கொண்ட கிருஷ்ணன்,

“அதான் ஃபங்க்ஷன் நல்ல படியா முடிஞ்சு போச்சுல்ல. இப்போ எதுக்கு அது” என அமர,

“அப்போ சொல்லல ரைட்?” என்றான் விடாது.

“ஆமா கீர்த்தி, சொல்லல”என அலட்சியமாய் வாணி வர,

“ஏன்?” என்றான் தீவிரத்துடன்.

“என்ன தம்பி? நாம மாப்ள வீட்டுக்காரங்க. எப்டி இருந்தாலும் அவங்க சமாளிச்சு தானே ஆகணும். வரோம்னு சொல்லிட்டோம். அதுக்கு மேல வேற என்ன சொல்லனும்?” என்றாள். 

வாசனுக்கு அவள் பேசியது அதிருப்தியைக் கொடுக்க,

“என்ன இருந்தாலும் நம்ம சொல்லிருக்கனும் அண்ணி. இத்தனை பேரை கூட்டிட்டு போய் அவங்களுக்கு பதட்டைத்தை கொடுத்திருக்க வேணாம்” என்றவன்,

அமரேசன் வரவும்,

“ப்பா! நீங்களாவது சத்யன் அங்கிள்ட்ட இன்போர்ம் பண்ணிருக்கலாமே?”என அனைவருக்கும் சாப்பாட்டை பரிமாறியபடி.

“அன்னைக்கு காலைல தான் அத்தனை பேர்னு தெரியும்பா. இல்லைன்னா முன்னாடியே அவங்க கிட்ட சொல்லிருப்பேன்” என்றார்.

அமரேசனுக்கு இத்தனை பேர் என்றெல்லாம் தெரியாது. அவர் பொறுப்பை மூத்த மகன்களிடம் ஒப்படைத்திருந்தார்.

முதலில் பதினைந்து பேர் என்றிருக்க, அதை மாற்றி அமைத்தது வாணி, சௌந்தர்யா, கௌசல்யா மூவரும் தான்.

வாணியின் சொந்தம், சௌந்தர்யாவின் சொந்தமென அத்தனை பேரையும் அழைத்து விட, அவர்களும் அமரேசன் வீட்டுக்கு வந்து விட்டனர்.

கிருஷ்ணனனும்,பரதனும் விஷயம் தெரிந்து மனைவியரைக் கடிந்து கொண்டாலும்,வீட்டுக்கு வந்து விட்டவர்களை என்ன செய்வது? திருப்பி அனுப்ப முடியாமல் நிச்சயத்திற்கு அழைத்து சென்றிருந்தனர்.

“நீ தான் நேத்து இங்க இல்லையே? உனக்கு எப்டி தெரிஞ்சுது கீர்த்தி?”என பரதன் கேட்கவும்,

“அதெல்லாம் அந்தப் பொண்ணு சொல்லிருக்கும்ங்க. அதான் தம்பி இந்த குதி குதிக்குது” என முந்திக் கொண்டாள் வாணி.

இடைச் சொருகலாய், “வீட்டுக்கு வர முன்னமே குடும்பத்தை பிரிக்க பார்க்கறா” என முணுமுணுப்பு வேறு.

வாணியின் பேச்சின் மூலம் இவர்கள் வேலையாகத் தான் இருக்கும் என கண்டு கொண்டான் வாசன்.அவள் பேசியதில் எரிச்சலாய் வர,

“நான் இங்க இல்லைன்னாலும் சிவா கிட்ட சொல்லிட்டு தான் போனேன்” என பொதுவாய் சொன்னவன்,

“ண்ணி, இன்னொரு விஷயம். அந்தப் பொண்ணில்ல. வேதா வேதவி” என மீசையோடு மேலுதடு கடித்து சிரிப்பைக் அடக்கிக் கொள்ள, முகத்தை திருப்பிக் கொண்டாள் வாணி.

“விடுப்பா, என்ன இருந்தாலும் நாம அப்டி செஞ்சிருக்க கூடாது தான்.” என்ற அமரேசன்,

“சத்யன் கிட்ட இனிமே இதுபோல நடக்காதுன்னு சொல்லிட்டு தான் வந்திருக்கேன்”என்றார்.

“ஹ்ம்ம”என்றவன் அதற்கு மேல் பேசாமல் அமைதியாகி விட்டான்.

பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பி விட, குளித்து விட்டு வந்த வாசனை எதிர் நோக்கியபடி அவனது அண்ணியர்கள்.

புருவம் சுருக்கியவன் டிபனை தானே வைத்து சாப்பிட அமர்ந்தான்.

“போங்கக்கா, போய் பேசுங்க!” என ஓரக்கத்தியிடம் வாணி சொல்ல,

எப்படியும் தாங்கள் நினைப்பது நடக்கப் போவதில்லை எனத் தெரிந்தே அவனிடம் பேசச் சென்றாள் சௌந்தர்யா.

“என்னண்ணி? ஏதாவது சொல்லணுமா?வேலைக்கு உங்களுக்கு நேரமாச்சே?” என சாப்பிடுவதை நிறுத்தி விட்டுக் கேட்டான் வாசன்.

“அது.. வ. வந்து தம்பி”என இழுத்தவர், திரும்பி வாணியைப் பார்த்து வைக்க,

அவளோ “பேசுங்க, ம்ம்” என கண் ஜாடை காட்டினாள்.

“என்னவாம் நம்ம சின்னண்ணிக்கு?” என அடக்கப்பட்ட சிரிப்புடன் அமர்த்தலாகக் கேட்டு வைத்தவனிடம்,

“நே..நேத்து பூ வைக்க போனோமே தம்பி அப்போ.. வேதவியை போட்டோ எடுத்துட்டு வந்தோம்”என ஒரு வழியாக கூறி முடித்தாள் சௌந்தர்யா.

“ஹ்ம்ம்…”என்றவன்,

“விஜிக்கா நேத்து ஃபங்க்ஷன் போட்டோஸ் எல்லாமே எனக்கு அனுப்பிட்டாங்களே” என்றான்.

சௌந்தர்யா என்ன சொல்வதென தெரியாது கைகளை பிசைந்து கொள்ள,

“இது வேற போட்டோ தம்பி! ஃபங்க்ஷன்ல அந்த பொண்ணு மேக்கப்போட இருந்திருக்கும். சில உண்மை முகங்கள் தெரியனும் தானே?” என முன் வந்தாள் வாணி.

“ஓஹோ..!” என புருவம் உயர்த்தினான் வாசன். எதுவோ வில்லங்கமாக சொல்லப் போகிறார்கள் என மட்டும் புரிந்தது இவனுக்கு.

“நீயே பாரு ‘அந்த பொண்ணை’ என சொல்ல வந்தவள்,

“வேதவியை” என மாற்றி தன் போனை நீட்ட, வாணி பேசிய விதத்தில் நமட்டுச் சிரிப்போடு வாங்கிக் கொண்டான் கீர்த்தி.

வேதவியின் ‘நைட்டி லுக்’கை பார்க்கையில் அவன் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என ஆர்வம் பொங்கப் பார்த்த இருவரின் முகமும், அவன் கொடுத்த கமெண்டில் தண்ணீர் தெளித்த புஸ்வானமாகியது.

“கியூட் பிக்!தேங்க்ஸ் அண்ணிஸ்” என்றிருந்தான் வாசன்.

“என்ன கீர்த்தி இப்படி சொல்ற? நம்ம கிட்ட கலரா இருக்கற போட்டோ தந்து அவங்க ஏமாத்திருக்காங்க! மேக்கப்பை அழிச்சிட்டு பார்த்தா தானே நிஜ கலரு தெரியுது.”என வாணி நொடிப்பும் கடுப்புமாக சொன்னாள்.

“எனக்கொன்னும் அப்படி தெரியலையேண்ணி!” என்றானே பார்க்கலாம்.

அவனுக்கு இப்போது புரிந்தது. வேதவியின் இந்த படத்தை காட்டினால் தான் அவளை வேண்டாமென்று விடுவேன் என எண்ணியிருக்க கூடும்!

‘ஹா ஹா சில்லி!’ என நினைத்தாலும் பெண்களின் இந்த செய்கையில் அவனுக்கு வருத்தமே.

அதிலும், அண்ணி சௌந்தர்யாவிடத்தில் இப்படி என எதிர்பார்த்திராதவனுக்கு கூடுதலாய் தமக்கை கௌசல்யாவும் இதில் கூட்டு என்பது பெரும் கவலையைத் தந்தது.

‘பார்த்துக்கொள்ளலாம்’என நினைத்தவன், அண்ணிமார்களை பார்க்க இன்னுமே இருவரும் வாசன் பேச்சில் தெளியாது இருந்தனர்.

எழுந்த சிரிப்பை அடக்கும் வழியாக தண்ணீரைக் குடித்தவன்,

“என் போன்கு இந்த போட்டோவை வாட்சாப் பண்ணிடுங்க ண்ணி” என எழ, ‘பே’ வென விழித்தனர் பெண்கள்.

வேண்டுமென்றே,

“இன்னைக்கு வேதாவ பார்க்க போகும் போது நைட்டியே வாங்கிப் போயிட்டா என்ன!” என தனக்குள் பேசுவது போல் சத்தமாய் முணுமுணுத்து விட்டு சமையலறை நுழைந்து கொண்டான் கீர்த்தி வாசன்.

**************

“ஸ்ஆ! ம்மா” என அலறினாள் வேதவி.

“என்னடி சுட்டு கிட்டியா?” – என சரஸ்வதி சலிப்புடன் கேட்டு வைத்தார்.

பின்னே,ஒன்பது மணி நேரமாக ஒரு பொரியலை பிரட்டிக் கொண்டிருந்தால் அவருக்கும் கடுப்பாகாதா என்ன?

“இது வருதே இல்ல. நான் என்ன செய்றதாம். கைல எண்ணெய் வேற தெறிக்குது” என்றவள் சொன்ன நேரம், ‘பொப்’ என மீண்டும் அவள் கையில் தெறித்து விட அலறி விட்டாள் பெண்.

“ஒரு பொரியலுக்கே இப்படின்னா எப்படி தான் சமையல் கத்துக்கப் போற” என்றவர்,

“அங்குட்டு போடி! பொரியல் தீஞ்சி போகுது”என மகளை அப்புறப் படுத்தி விட்டு,

“போய் எண்ணெய் பட்ட இடத்துல தண்ணிய காட்டிட்டு டூத் பேஸ்ட்டை வை” என தன் வேலையில் கவனமானார்.

கையை சரி செய்து விட்டு மீண்டும் அடுக்களை நுழைந்தாள் வேதவி.

“வேற ஏதாவது வேலை இருந்தா சொல்லு மீ?” என்றவளிடம்,

 “ம்ம், எத்தனை நேரம் போனாலும் இன்னைக்கு நீ தான் நைட் சாப்பாடு செய்ற” என்றார்.

“ம்மா! இதெல்லாம் போங்கு. சின்ன வேலையா இருந்தா சொல்லும்மா” என சலிக்க,

“அதெல்லாம் தெரியாது. எப்படியாவது சமையல் செஞ்சே பழகற” என்றார் விடாமல்.

“ம்ம்மா!”

“உனக்கு சமையல்ல ஒரு ‘அ’ கூட தெரியாம என்னால கட்டிக்கொடுக்க முடியாது டி”

“அதென்ன கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுங்க மட்டும் தான் சமைக்கணுமா? பசங்க செஞ்ச ஆகாதா?”

“பெண்ணியம் பேசறதை விட்டுட்டு அந்த பெருங்காயத்தை எடுடி”

“ச்சேஹ்!இங்க பெண்கள் தான் பெண்களுக்கு எதிரி!” – என வேதவி சிடு சிடுக்க,

“ஆமா, போன வாரம் சன் டீவில சொன்னாங்க”என்றார் சரஸ்வதி அலட்டிக் கொள்ளாமல்.

“சரஸு!” என பற்களை நறநறத்தாள் இவள்.

“இப்போ என்னடி உன் பிரச்சனை? ஒரு ரெண்டு சமையல் தெரிஞ்சு வெச்சுக்கறதுல என்ன குறையப் போகுது” என்றார்.

“நைட் டிபன்லாம் செய்ய முடியாது. அதுக்கு உதவி வேணா செய்றேன்” என பெரிய மனதாய் ஒத்துக்க கொண்டாள் வேதவி.

“என்னவோ பண்ணு! ஆனா போற இடத்துல நல்ல பேரா வாங்கிக்க” எனவும்,

“வேதவி நல்ல பேர் தான் ம்மா! வெச்ச உனக்கு தெரியாதா!” என்றாள்.

“வளவளக்காம, வாழைக்காய சீவுடி” ரைமிங்காம்.

இவர்கள் இருவரும் சமையலறையில் சண்டையிட்டுக் கொண்டிருக்க, வேதவியின் போன் இசைப்பதாக சொல்லிச் சென்றாள் சங்கவி.

“எனக்கு கேக்கவே இல்ல” என முனகியவள் தன் அறை நுழைய, வாசன் அழைத்திருந்தான்.

“இவரு என்ன இப்போ கூப்பிடறாரு” என அட்டென்ட் செய்தவள்,

“சொல்லுங்க” என்றாள்.

“சொல் சொல் சொல்! அன்பே நீ சொல்” என பாடினான் வாசன்.

“ஐயே, சகிக்கல” என இவள் கேலி செய்ய,

“பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி” அடங்குவதாக இல்லை அவன்.

வேதவியின் முகம் தானாய் புன்னகையைப் பூசிக் கொண்டது.

“ஹ்ம்ம், எப்போ சென்னைலருந்து வந்தீங்க?” எனக் கேட்டாள்.

“இன்னைக்கு ஏர்லி மார்னிங்”

“போன வேலை என்னாச்சு?”

“அதெல்லாம் நல்லாவே போச்சு” என்றவனிடம்,

“அதான் இன்னைக்கு வாசன் ஸார்ட்ட ஒரே பாட்டா?”என கேட்டாள் சிரிப்புடன்.

“ப்ச்,ப்ச்! இது வேற டீச்சர்”என்றான் வாசன் குறு நகையுடன்.

“என்னவாம்?”

“உன்னைப் பார்க்க வரலாம்னு இருக்கேன் வேதாஜி!அதுவும் இப்பவே”

“என்ன?!!”

“என்ன என்ன?”

“இந்த நேரத்துல..? ம்ஹூம்!”

“அதெல்லாம் தெரியாது நான் கிளம்பிட்டேன்”என்றான்.

“அப்போ கெளம்பிட்டு தான் கால் பண்ணிருக்கீங்கல்ல?”

“டெபினட்லி”

“ஐயோ!இப்போ எங்க இருக்கீங்க?”என பதட்டமானாள் இவள்.

“உன் வீட்டு வாசல்ல” என்றான் அட்டாகாசமாய் சிரித்தபடி.

“ஹா!!” என திகைத்தவள்,

“இருங்க நான் அம்மாட்ட சொல்றேன்”என சொல்லி கட் செய்து விட்டு குடுகுடுவென சமையல் அறை புகுந்து கொண்டவள் சரஸ்வதி முன் நின்று மூச்சு வாங்கினாள்.

“என்னடி வேதா?சமைக்கற நேரமா பாத்து ஓடி போய்ட்ட” என்றவர் மேலும் என்னென்னமோ சொல்லி பேசிக் கொண்டிருக்க, கைகளைப் பிசைந்தாள் இவள்.

மகளை பார்த்தவர், “யார் போன் பண்ணா?” எனக் கேட்க,

“ம்மா. அவங்க வரங்களாம்” என்றாள் தயக்கமாய்.

“எவங்க?”

“அவரு தான்!” மென்குரலில் வேதவி.

“எந்த சுவரு? புரியற மாதிரி சொல்ல மாட்டியா” என்ற சரஸ்வதி பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நகர,

“ம்மா மா! வாசன் மா. உன் மாப்பிள்ளை. நம்ம வீட்ட வராங்களாம்” என்றாள் தாய் பின்னால் சென்றபடி.

“ஐயோ மாப்ளயா?”என பரபரப்பானவர்,

“இதை மொதல்லயே ஒழுங்கா சொல்றதுக்கு என்ன உனக்கு! நான் வேற எவரு செவருன்னுட்டேன்” என புலம்பினார்.

“ம்மா!”

“சரி இப்போ எங்க இருக்காராம்? கெளம்பிட்டாராமா?”என கேட்க,

“நம்ம வீட்டு கேட் கிட்ட” என்றாள் வேதவி.

“என்ன?!!”

“ஆமாமா”

இவர்கள் பேசிக் கொண்டிருக்க, வெளியில் செல்ல தயாராகி வந்தார் சத்யநாதன். 

மனைவியும், மகளும் நிற்பதை கண்டு அங்கு வந்தவர்,

“என்ன ரெண்டு பேரும் என்னமோ போல நிக்கறீங்க?” என கேட்க,

“அதானே!”என்றபடி சங்கவியும் வந்தாள்.

“மாப்ள வந்திருக்காராம். வெளில நிக்கிறாராம்”என்றார் சரஸ்வதி.

“என்ன சொல்ற சரஸு” என்றவர்,

“என்ன இந்த நேரத்துல வந்திருக்காரு”என அவரும் பரபரப்பாக,

“கட்டிக்க போற பொண்ணை பார்க்க வந்திருக்காரு. ஏதோ நீங்க இதெல்லாம் பண்ணாதவர் போல பதட்டமாகறீங்க!என்னை பார்க்க எங்க வீட்டுக்கு செவரேறி குதிச்சு வந்தீங்களே”என்றார் சரஸ்வதி, கணவனைக் கண்டு கொள்ளாமல்.

மகள்கள் இருவரும் வாய்ப் பொத்தி சிரிக்க,

“இவ வேற, கூறு கெட்டவ! பிள்ளைங்க முன்னுக்க என்னத்த சொல்லி என் மானத்தை வாங்கறா”என முணுமுணுத்தவர்,

“நான் வெளிய போய் மாப்ளய பார்க்கறேன்” என வெளியில் சென்று விட்டார்.

“என்ன வேதா. மாமா சர்ப்ரைஸ் விசிட்டெல்லாம் தராரு” என கிண்டல் செய்தாள் சங்கவி.

வேதவி முறைக்க,

“அவ கெடக்கறா! இப்படியே நிக்காம நீ போய் நல்ல சுடிதார் ஒன்னை மாத்திக்க” என சரஸ்வதி மூத்த மகளிடம் சொன்னவர்,

விழா முடிந்ததும் நேற்றிரவே கனியன் சென்னை சென்றிருக்கவும்,

“கவி, நீ போய் பெரியம்மாட்ட அண்ணனுங்க யாரும் இருந்தா வரச் சொல்லு” என்றார்.

சத்யநாதன்,வாசனை உள்ளே அழைத்து வந்தவர் சற்று நேரம் பேசி விட்டு, அவசர வேலையாக வெளியில் செல்வதாக கூறிச் சென்றார்.

அவர் சென்றதும், சங்கரியின் மூன்றாவது மகன் (வருண்) வந்து கீர்த்தி வாசனுடன் பேசிக் கொண்டிருந்தான்.

“வேதா, இந்தா நீ போய் டீ கொடு” என மகளிடம் கொடுத்தனுப்பினார் சரஸ்வதி.

என்ன தான் வாசனிடம் பேசிருந்தாலும்,முதன் முதலில் நேரில் அவனை சந்திக்கப் போவது ஒரு வித நடுக்கத்தை கொடுத்திருந்தது வேதவிக்கு.

மேல் தளத்தை சுற்றிக் காண்பிக்க கீர்த்தி வாசனை அங்கே அழைத்து சென்றிருந்தான் வருண்.

மெல்ல படியேறிவளின் செவியில் வாசன் குரல் கேட்டது.

காபி ட்ரேயை அழுந்த பற்றிக் கொண்டாள் வேதவி.

“வாக்கா” என்ற வருண் தனக்கான டீயை எடுத்துக் கொண்டு ஹாலில் தேங்கி விட,

“தேங்க்ஸ் வேதவி” என தனக்கானதை எடுத்துக் கொண்டான்,வாசன்.

“வாங்க”என்ற வேதவி, வருணிடம் தலையசைத்து விட்டு வாசனை பால்கனிக்கு அழைத்து சென்றாள்.

சற்று நேரம் இருவருக்குமிடையில் பேச்சற்ற மௌனங்கள் தொடர்ந்தன.

இவனைப் பார்க்காது அங்குமிங்கும் கண்களை சுழல விட்டாள் வேதவி.

“பார்த்து பார்த்து கண்ணு சுளுக்கிக்க போகுது”என்றான் சிரிப்புடன் வாசன்.

முறைத்தாள் பெண்.

“ப்பாஹ்!”என்றவன்,

“இதோ இப்படி இப்படித்தான்! இந்த வேதவிய முதல்ல பார்த்தேன்” என உட் கன்னத்தில் நாக்கு முட்டி சிரிக்க,

“என்ன?!”திகைத்தாள் வேதவி.

“ஆமா,ஆனா இன்னைக்கு கொஞ்ச முறைப்புல காரம் மிஸ்ஸிங்” என்றவன், அவனுக்காக அனுப்பிய வரன் ஃபோட்டோ கதையை சொல்ல,

“வாசன் சார்!” முறைக்க முயன்று தோற்று புன்னகைத்தாள் இவள்.

“இப்போ கன்பர்டபிள்ளா ஃபீல் பண்றியா வேதா?”

“ஹ்ம்ம், மொதல் முறை நேர்ல பார்க்கறேன்ல. அதான் கொஞ்சம் நேர்வஸ்”

“ஹ்ம்ம்..” மென்னகையுடன் அவன்.

“நீங்க வேற இப்படி திடு திப்புன்னு வரேனுட்டீங்க! மனுசனுக்கு பதறாதா?” என அதன் பின் சரளமாக பேசினாள் வேதவி.

“நிச்சயமான பொண்ணை பார்க்க வர்றது குத்தமா வேதாஜி” என சிரித்தான்.

நேரம் மணி எட்டைக் கடந்திருக்க இரவும் நிலவும் ஏகாந்தம் கூட்ட எண்ணற்ற பேச்சுக்கள் இருவருக்கும்.

இனிப்பாய்,குறும்பாய் என ஸ்வீட் நதிங்ஸ் பேசிக் கொண்டனர்.

விடை பெறும் முன் பரிசுப் பெட்டி ஒன்றைக் கொடுத்தான் வாசன்.(நீங்க நைட்டின்னு நினைச்சா அது தான் தப்பு)

அவளுக்காக சென்னையிலிருந்து வாங்கி வந்திருந்தான்.

எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருந்தது, வேதவி அந்தக் கேள்வியை கேட்கும் வரை.

அதில் நிலை கொள்ளாமல் தவிக்க தொடங்கினான் கீர்த்தி வாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!