Skip to content
Post Views: 4,711
அத்தியாயம் – 7
தலைமையேற்று நடத்தும் விழாவில் சிறப்புரை முடித்து மரியாதையை ஏற்றுக்கொண்டவள் அன்றைய நிகழ்ச்சியான இரத்ததான முகாம் குறித்த விழிப்புணர்வுகளை தன் பேச்சினில் இணைத்திருந்தாள். மனிதனின் முக்கிய உறுப்பு இதயம் என்ற பொழுதும் அது வேலை செய்யவும் மற்ற உறுப்புகள் தங்கள் கடமைகளை செவ்வென செய்யவும் இரத்தம் எத்தனை முக்கியமானது என்று அதன் அவசியத்தை சொன்னதோடு நிற்காமல் தானும் இரத்தம் கொடுத்தாள்.
‘பரவாயில்லை பேச்சு மட்டுமில்லை இதெல்லாம் கூட செய்றாங்களே.’ என்று மனதில் அவளை மெச்சியது அகிலனே.
இரண்டாவது நாளான அன்று காலை முன்னதாக அதிரா வீட்டிற்கு சென்று பெயருக்கு காரில் இருக்கும் தூசியை தட்டியவன் அவளை அழைத்துக்கொண்டு வந்திறங்கியது இந்த முகாமிற்குத்தான். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காவல் துறையினால் இரத்ததான முகாம்கள் பல நடத்தப்பட, அதில் ஒன்றை துவங்கி வைத்தாள் அதிரா.
Advertisement
இரத்தம் கொடுத்துவிட்டு பிளாஸ்தர் ஒட்டிய கையை தடவியபடி வந்த அதிரா ஓரமாய் நின்றிருந்த அகிலனை ஆராய்ச்சியாய் பார்த்தாள். அவன் பார்வை வேறெங்கோ இருக்க, அவனருகில் நின்றிருந்தவர் கவனம் அதிராவிடம் பதிய, அகிலனை கூப்பிடும்படி சைகை செய்தாள். அவரும் அகிலன் தோள் தொட்டு அதிராவை கண்காட்ட, என்ன என்ற கேள்வியை விழிகளில் தாங்கியபடி அவளிடம் வந்தாள்.
“நைட் குடிச்சியா?” முகத்தில் அடித்தது போல் அவள் கேட்கவும் இவனுக்கு கடுப்பாகிற்று, நறுக்கென்று வாய் வரை வந்த வார்த்தைகளை சுற்றம் உணர்ந்து விழுங்கியவன், இல்லை என்பது போல் தலையசைத்தான்.
“கடைசியா எப்போ தம்மடிச்ச?” அவன் பொறுமையை சோதிக்கும் விதமாய் அவளது அடுத்த கேள்வி அமைய, வார்த்தைகளை அவன் இழுத்துப்பிடிக்க வேண்டியதாகிற்று.
Advertisement
கேட்ட கேள்விக்கு பதில் என்பது போல் அவள் பார்த்துவைக்க, “நேத்திக்கு.” என்றான் அகிலன்.
Advertisement
“அப்போ போய் இரத்தம் கொடுத்துட்டு வா.” என்றுவிட்டு அதிரா நகர, நகர மறுத்து நின்றான் அகிலன்.
இரண்டடி எடுத்து வைத்தவள் அவன் உள்ளே செல்லாமல் இருக்கவும் திரும்பி, “சீக்கிரம் கொடுத்துட்டு டென் மினிட்ஸ் ரெஸ்ட் எடுத்துட்டு வா, கேஸ் விசாரணை இருக்கு.”
“எல்லாரும் கொடுக்கணும்னு கட்டாயமா என்ன?” என்று கண்களை சுருக்கிக் கேட்டான் அகிலன்.
Advertisement
“கொடுக்கிற உடல்நிலைல இருக்கிற எல்லாரும் கொடுக்கலாம், தப்பில்லை. நீ கொடுக்கப்போற ஒரு யூனிட் ப்ளட் ஒன்னில்லை மூணு பேருக்கு உபயோகமா இருக்கும். என்னை கேட்டா கட்டாயம் கொடுக்கணும்.” என்றதும் தலையசைத்து நகர்ந்து சென்றான் அகிலன்.
இவன் கொடுப்பானா மாட்டானா என்று பார்க்க, இரத்தம் கொடுக்கும் முன் செய்ய வேண்டிய பரிசோதனைக்கு காத்திருக்கும் வரிசையில் நின்றான். பரிசோதனை முடித்து இருவர் தானம் கொடுத்த பின் இவன் பெயர் வர, சட்டையை தளர்த்தி கண்களை மூடிப்படுத்துவிட்டான்.
ஒரு யூனிட் இரத்தம் சேகரித்தபின் அவனுக்கு பழச்சாறு கொடுத்தனர். அமைதியாய் அதை பருகியவன் மனதில் பரிசோதனை முடித்து செவிலியர் சொன்ன விசயமே ஓடியது. அதே யோசனையுடன் அதிரா இருக்கும் இடத்திற்கு சென்று அவளிடம் பஞ்சு ஒட்டியிருந்த தன் கையை காட்டினான். அதிரா மெச்சுதலாய் பார்த்து தலையசைக்க, பஞ்சை தூக்கிப்போட்டுவிட்டு மெளனமாய் காருக்கு சென்று அமர்ந்துவிட்டான். அதிரா அங்கிருந்த கண்காணிப்பாளரிடமும் அந்த சரகத்தின் காவல் அதிகாரியிடமும் பேசிவிட்டு வந்தாள்.
“பரவாயில்லை உனக்கும் கடமை, பொறுப்பு எல்லாம் இருக்கு.” அதிரா கேலி பேசிய போதும் அகிலன் வாய் திறக்கவில்லை.
காரை எடுக்காது அதை வெறுமென ஸ்டார்ட் செய்து அவள் கட்டளைக்கு காத்திருந்தான். மனம் அந்த ஒரு விசயத்தை போட்டு உழப்பிக்கொண்டிருந்தது. ஒரு நிலையில் இருக்க முடியாமல் தவித்தான். ஐயம் முதல் முறை ஜம்மென்று வந்து ஒட்டிக்கொண்டது. என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று முதல் முறையாக கேள்வியும் பிறந்தது. கேள்விக்கு விடை அறியும் முன் அதிராவிடமிருந்து எங்கு செல்ல வேண்டும் என்ற கட்டளை பறந்தது.
மான்சி வீட்டு விலாசம் சொல்லி வண்டியை விடச்சொல்ல, அவளை விட்டுவிட்டு வாயிலில்தான் நின்றான். பின் அவள் அழைத்து காரிலிருந்து பைல் ஒன்றை எடுத்து வரச்சொல்லவும், எடுத்துக்கொண்டு உள்ளே சென்றவனுக்கு அந்த வீட்டில் மான்சி புகைப்படத்தை பார்த்ததும் அதிரா தீவிரமாய் விசாரித்துக்கொண்டிருக்கும் வழக்கு மான்சியுடையது என்று புரிந்தது.
அன்று அவள் காணொளி காட்டி விசாரித்து அவனை ஓட்டுனராக்கியதும் அதை இன்ஸ்பெக்டரிடம் இவன் முறையிட்ட போது அந்த பெண் இறந்துவிட்டாள் என்று சொன்னதும் நினைவு வந்தது. அதிரா மீது ஆத்திரத்தில் இருந்தமையால் அச்சமயத்தில் இதையெல்லாம் கவனிக்கவில்லை அவன். இன்று கண்டுகொண்டதும் லேசான அதிர்ச்சி அவ்வளவே. எத்தனையோ கொலைகள் நடக்கிறது அதில் இதுவும் ஒன்று என்று நினைத்துக்கொண்டவன் மனதில் ஓரமாய் அன்று மான்சியை அலட்சியம் செய்திருக்கக்கூடாதோ என்றுகூட தோன்றி சடுதியில் மறைந்தது.
உள்ளே அதிரா மான்சியின் பெற்றோருக்காக காத்திருக்க, மான்சி அம்மா மட்டுமே வீட்டில் இருந்தார்.
“இன்னும் என்ன மேடம் பண்றீங்க? என் பொண்ணை கொன்னவன் வெளில சுதந்திரமா நடமாடிட்டு இருக்கான். இங்க நாங்க எங்க பொண்ணோட முழு உருவத்தை கூட கடைசியா பாக்க முடியாம உருகுலைஞ்சி போயிருக்கோம்.” எனும் போதே அழுதுவிட்டார்.
விசாரணைக்கு இடையில் மான்சியின் பூதவுடல் அவள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டிருந்தது. சில நொடிகள் அவர் தேறட்டும் என்று அமைதி காத்த அதிரா தனக்கென அவர்கள் வீட்டு பணிப்பெண் எடுத்து வந்து வைத்திருந்த தண்ணீரை அவரிடம் நீட்ட, அதை பருகியவர் கண்களை துடைத்துக்கொண்டே அதிராவை கேள்வியாய் பார்த்தார்.
“உங்க இழப்பு ஈடுசெய்ய முடியாததுனு எனக்கு புரியுது. வாழ வேண்டிய பொண்ணை இப்படி பண்ணவங்களை சட்டம் முன்னாடி நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டியது என் பொறுப்பு. அதுக்கு உங்களோட ஒத்துழைப்பு எங்களுக்கு வேணும்.”
“என்ன செய்யணும்னு சொல்லுங்க மான்சி அப்பாகிட்ட சொல்லி ஏற்பாடு பண்றேன்.”
“என்னோட சந்தேகத்தை தெளிவுப்படுத்திட்டீங்கன்னா போதும்.” என்று பொதுவாய் பேசி மான்சி அம்மாவை கொஞ்சம் நிதானப்படுத்திய பிறகே விசயத்திற்கு வந்தாள் அதிரா.
“மான்சிக்கு ஏதாவது மெடிக்கல் இஷ்யூஸ் இருந்துச்சா?”
“அவ ஆராக்கியமான பொண்ணு. அஞ்சு வருசமா என் பொண்ணோட ஃபார்ம்லேந்துதான் எங்களுக்கு காய்கறி, பால், முட்டை எல்லாமே வருது. டையட்னு ஆரோக்கியமான சாப்பாடுதான் சாப்புட்டா.”
“சின்ன வயசுல ஏதாவது?” என்று அதிரா பரபரப்பாய் பார்க்க,
புருவம் சுருக்கிய மான்சியின் அம்மா இல்லை என்று உதடு பிதுக்கினார்.
“நல்லா யோசிச்சு சொல்லுங்க மேம்.”
இல்லை என்ற தலையசைப்பே மீண்டும் பதிலாய் கிடைத்தது.
“ரீசென்ட்டா கோல்டு, பீவர் மாதிரி எதுக்காவது மான்சி ஹாஸ்பிடல் போனாங்களா?” மான்சியின் அம்மா ஒரு சிறு விசயம் பகிர்ந்தாலும் அது பயனுள்ளதாய் இருக்க வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையில் அவள் துருவித்துருவி கேட்டாள்.
ஏதோ நினைவு வந்ததன் அறிகுறியாக மான்சி அம்மாவின் புருவம் உயர்ந்தது, “மூணு மாசம் முன்ன மலேரியா வந்துச்சு.” என்றார்.
“எந்த ஹாஸ்பிடல்ல காமிச்சாங்க?” என்று கேட்டு தெரிந்துகொண்டவள் மருத்துவ அறிக்கை கிடைக்குமா என்று கேட்க, யோசித்த மான்சி அம்மா, “எங்க இருக்குனு தெரியல. பாக்குறேன்.” என்று அவர் உள்ளே செல்ல, பார்வையை அவ்வீட்டின் இண்டு இடுக்குகளில் எல்லாம் பதித்தாள் அதிரா. அங்கிருக்கும் சிறு சிறு விசயங்களையும் ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு பார்த்து மனதில் பதித்துக்கொண்டாள்.
நடுவே வேலையாள் வந்து பழச்சாறு கொடுத்துவிட்டு போக, அவரிடமும் சில கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டாள். அரைமணி நேரம் கழித்து அறிக்கையுடன் வந்தார் மான்சி அம்மா.
நன்றி சொல்லி வாங்கிக்கொண்டவள் அங்கிருந்து யோசனையுடன் காரில் ஏற, அடுத்து எங்கு என்று பார்த்தான் அகிலன். அலுவலகத்திற்கு விடச் சொல்ல, அதன் பின் இருவரிடமும் மெளனமே. அலுவலகம் சென்ற பின் அடுத்தடுத்த வேலைகள் அதிராவை சூழ்ந்து கொண்டாலும் மான்சி வழக்கு எந்த முன்னேற்றமும் காணாது தேங்குகிறதோ என்ற எண்ணம் நெருடியது.
பரிதியை அழைத்து, “ஏதாவது க்ளூ கிடைச்சிதா?” என்று கேட்டுப்பார்க்க, விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்றான் அவன்.
“எந்த லீடும் கிடைக்கல. இன்னும் விசாரிச்சிட்டு இருக்கோம்னு சொல்லிட்டு இருக்கீங்க. இப்படி இருந்தா எப்படி சால்வ் பண்றது?” எரிச்சலும் ஆதங்கமுமாய் கேட்டாள் அதிரா.
நான் என்ன செய்வது என்று சுணங்கிய பரிதியும், “எங்களால முடிஞ்சிதை பண்ணிட்டுதான் மேம் இருக்கோம்.” என்றான்.
“என்ன பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியாது நாளைக்கு ஏதாவது க்ளூ கண்டுபுடிச்சே ஆகணும்.” என்று அழுத்தம் கொடுத்தவள் மணியைப் பார்க்க ஏழை தொட்டுக்கொண்டிருந்தது.
இதற்கு மேல் தாங்காது என்று முடிவெடுத்தவளாய் பைகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். இங்கு வந்து சேர்ந்ததிலிருந்து அந்த வாரத்திற்கான விடுமுறை இன்னும் எடுக்கவில்லை. மான்சி வழக்கைத் தவிர வேறெந்த அவசர வழக்குகளும் இல்லையென்பதால் நாளை விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தவள் இன்று நேரமே வீட்டிற்கு சென்று ஓய்வை தொடங்கலாம் என்ற நோக்கில் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
“வீட்டுக்கு போ.” அகிலனிடம் உத்தரவு பாய்ந்தது.
அவனும் சீரான வேகத்தில் காரை இயக்க,
“நாளைக்கு நான் லீவ். நீயும் ஆஃப்(off) எடுத்துட்டு நாளான்னைக்கு வந்துடு.”
“நான் இப்போ ஆஃப் எடுக்கல. எனக்கு ஆகஸ்ட் பதிமூணு பதினாலு ரெண்டு நாள் லீவ் வேணும் மேடம்.”
“சுதந்திர தினம் வருது. அது முடிஞ்சி லீவ் எடுத்துக்கோ.” என்று அவள் சொல்லவும் அவனது குணம் தலைதூக்கியது.
“நீங்க லீவ் கொடுக்கிற அன்னைக்கு எல்லாம் என்னால எடுக்க முடியாது. தங்கச்சிக்கு விஷேசம் வச்சிருக்கு. நான் கண்டிப்பா போகணும்.”
தங்கைக்கு விழா என்று சொன்னதும் அதிரா இரண்டொரு நொடி யோசித்துவிட்டு, “சரி. ஆனா சுதந்திர தினத்தன்னைக்கு கண்டிப்பா இங்க இருக்கணும்.” என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டாள்.
இவன் முறுக்கலுடன் ‘ம்’ என்று சொல்லிக்கொண்டான்.
“நீ இண்டிபெண்டென்ஸ் டே பரேட் பண்ணியிருக்கியா?” என்று இயல்பாய் பேச்சை அதிராவே துவங்கினாள். எவ்வளவு நேரம்தான் அவனின் உர்ரென்ற முகத்தையும் வாகன நெரிசலையும் பார்ப்பது. நாளை விடுமுறை என்ற நினைப்பே மனதை இலகுவாக்கி அவனிடம் வலிய பேச வைத்தது.
“வேலைக்கு சேர்ந்த புதுசுல ஒருதடவை.” என்று அவனும் முறுக்கிக்கொள்ளாது பதில் கொடுத்தான்.
“அப்புறம் என்னாச்சு?”
“என் பர்ஃபார்மென்ஸ் பாத்து நீ ஸ்டேஷன்ல இருக்க வேண்டிய ஆளு. உன்னோட கடமை உணர்ச்சி ஸ்டேஷனுக்கு ரொம்ப தேவைனு அனுப்பி வச்சிட்டாங்க.” என்று அவன் சொன்ன தினுசில் லேசாக சிரித்துவிட்டாள்.
“துரத்திவிட்டுட்டுட்டாங்கனு எவ்ளோ நாசுக்கா சொல்ற.”
“என்னையெல்லாம் துரத்த முடியுமா? உங்களாலேயே என்னை சமாளிக்க முடியல தானே?” அவன் பேச்சில் கர்வம் இருந்ததோ, புருவம் உயர்த்தி விழிகளை சுழற்றினாள் அதிரா.
“உண்மையை சொல்லு, நேத்தி நான் ஜுஸ்ஸை குடிக்க சொல்லவும் பதறியடிச்சி இனி என்கிட்ட வச்சிக்க கூடாதுனு முடிவு பண்ணி அமைதியா இருக்குறதான நீ?” என்று அவள் சரியாய் நாடிப்பிடித்து கேட்க,
“நீங்க யூகிக்கிறது எல்லாமே சரியா இருக்கணுமா என்ன?” என்றான் அகிலன்.
“ஒத்துக்கமாட்ட…” என்றவள் வீடு வரவும் இறங்கிக்கொள்ள, அகிலன் வண்டியை அதனிடத்தில் நிறுத்திவிட்டு வந்து சாவியை ஒப்படைத்தான்.
“இன்னைக்கு நைட் தம்மு, தண்ணின்னு இருக்காத. ப்ளெட் கொடுத்திருக்க பாத்து இருந்துக்கோ.” என்றதும் காலை அவனை போட்டு அரற்றிய விசயம் மீண்டும் மேலெழுந்து அவனை அமுக்கியது.
தான் சொன்னதும் அவன் முகம் கூம்பிவிட்டதாய் நினைத்த அதிரா குரல் செருமி, “ஒருநாள் குடிக்கலைனா குடி மூழ்கி போயிடாது. கண்ட்ரோலா இரு.” அவள் அக்கறையாய் சொல்ல முனைந்தாலும் குதர்க்கமாக அவனை சென்று சேர்ந்துவிட்டது. அவன் குதிக்க ஆரம்பித்துவிட்டான்.
“என்னை பார்த்தா தினம் குடிக்கிற மொடா குடிகாரன் மாதிரி இருக்கா?”
“இல்லையா பின்ன? தினம் உன்னை டாஸ்மாக் வாசல்லதான் பாக்குறேன்.”
“ரெண்டு நாள் பாத்திருப்பீங்களா அதுக்குள்ள நான் இப்படினு முடிவு பண்ணியாச்சு. என்ன தெரியும் உங்களுக்கு என்னை பத்தி?” அவன் எகிறிக்கொண்டு செல்ல, அசயவில்லை அதிரா. அசிரத்தையாய் பார்த்தாள்.
“உன்னை பத்தி தெரிஞ்சிக்க வேண்டிய அளவுக்கு தெரிஞ்சிக்கிட்டாச்சு. வேலையில கவனமோ பொறுப்போ எதுவும் கிடையாது. ஆனா ஈகோவும் அகங்காரமும் கொட்டிக்கிடக்கு. வேலைக்கு வயசுக்கு எதுக்கும் மரியாதை கொடுக்கத் தெரியாது. கை நீட்ட மட்டும் நல்லா தெரியும். உன்னை போல ஆளெல்லாம் டிபார்ட்மென்ட்ல இருக்கிறதாலதான் டிபார்ட்மென்ட் பேரே கெட்டுப்போகுது.” என்று அவள் மூச்சை பிடித்துப் பேச, வாக்குவாதம் முற்றியது.
“என்ன? என்னால பேர் கெட்டுப்போகுதா? உண்மையை சொல்லப்போனா உங்க ஆளுங்கதான் போன ஆட்சியில ஒரு அமைச்சரோட அடியாளை காப்பாத்துறதுக்கு எங்கப்பாவை என்கவுன்டர்ல பலிகொடுத்தது. அதை நாங்க வெளில சொல்லிடக்கூடாதுனு என்னை உள்ள இழுத்துவிட்டு எங்க வாயை அடைச்சிட்டாங்க. எங்களோட வறுமையை பகடையா யூஸ் பண்ணிகிட்டாங்க. இப்போவும் நான் வாயை திறந்தா உங்க டிபார்ட்மெண்ட் பேர் கொஞ்ச நாள் நியூஸ் பேப்பர், டீவின்னு நாறிடும்.” என்றான் இவனும் திமிராய்.
“தப்பு உங்க பக்கம் இல்லைன்னா உண்மையை சொல்ல வேண்டியதுதானே. யார் வேணாம்னு சொன்னது? டிபார்ட்மென்ட் தப்பே பண்ணியிருந்தாலும் உனக்கு இந்த வேலையில கிடைக்குற சம்பளம் வேணும்னுதானே அமைதியா இருக்க. பிடிக்கலைன்னா உதறிட்டு போக வேண்டியதுதானே? இப்போ உன்னை யாரு புடிச்சி வச்சிருக்கிறது?” என்று அவள் கேட்கவும் முகத்தை திருப்பிக்கொண்டான்.
இந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு வேறு வேலை தேடுவதெல்லாம் இயலாத காரியமாகத் தெரிந்தது. கம்ஃபோர்ட் சோன் என்று சொல்வார்களே அதுபோல காவல்துறை வேலை மூலம் கிடைக்கும் கிம்பளத்திற்கும் காவல் உடை மீதான மற்றவர்களின் மரியாதையும் ஏற்றுப் பழகியவனுக்கு அதைவிட்டு வெளிவர தோன்றவுமில்லை, அந்த வேலையில் பிடித்தமும் இல்லை.
“இப்போ பேசு. உண்மை சுடுதோ.” என்றாள் அவளும் குறையாத அதிருப்தியுடன்.
“ம்ச், ஆமா குத்துது. இப்போ என்ன பண்ணணுங்குறீங்க? யார் தான் இங்க குடிக்கல, அதை ஒரு குறையா குத்திக்காட்டி கீழா பாக்குறீங்க?” தன் செயலில் தவறில்லை எனும் விதமாய் அவள் விழிகளை நேராக பார்த்தே கேட்டான் அகிலன்.
“எல்லாரும் குடிக்குறதால குடிப்பழக்கம் சரின்னு ஆகிடாது. எத்தனை குடும்பத்தை குடி அழிச்சிருக்குனு நான் சொல்லித்தான் உனக்கு தெரியுனும்னு இல்லை. எல்லாம் பாக்குற தானே, தினம் குடிச்சிட்டு எவ்ளோ கொள்ளை, திருட்டு, ஈவ்டீஸிங் கேஸ் வருதுன்னு.
அது மட்டுமா குடியினால ஏகப்பட்ட வியாதி வந்து இந்த ஆம்பளைங்க படுத்துடுறாங்க, கட்டுன பாவத்துக்கும் பெத்த பாவத்துக்கும் எத்தனை பொண்டாட்டி புள்ளைங்க சகிச்சிக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க. சரி அதெல்லாத்தையும் விட்டுத்தள்ளு, டாஸ்மாக் பக்கம் நைட் ஏழெட்டு மணிக்கு உன் தங்கச்சியை அனுப்புவியா?” என்று அவனை அழுத்தமாய் பார்த்துக் கேட்க, அவன் கை நரம்புகள் புடைத்தது தெரியா வண்ணம் பூசிய உடல்வாகு மறைத்துவிட, அவன் கழுத்து நரம்புகள் புடைப்பது அவள் கண்களுக்கு அப்பட்டமாய் தெரிந்தது.
“சொல்லு…” என்றவள், “சொல்ல முடியலைல? ஏன் முடியலைன்னு யோசிச்சு பாரு. அவங்க க்ரியேட் பண்ற நியூசன்ஸ்ஸால உன் தங்கச்சிக்கு பாதுகாப்பு இல்லைனு உனக்கே தெரியுது. ஆனா அதைத்தான் நீ செஞ்சிட்டு இருக்க.
உன்னோட காக்கிச் சட்டையை பார்த்து நம்பிக்கையோட ஓடிவர்ற பாதிக்கப்பட்ட பொண்ணுங்களை உன்னோட இந்த ஒரு பழக்கத்தால தூர நிறுத்துற.
அரணா இருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நீயே, வேட்டையாடிடுவியோன்னு பயப்புடற நிலைமையில தான் நீ உன்னை சுத்தி இருக்குறவங்களை வச்சிருக்க.” என்றதும் அவன் கண்கள் சிவப்பேறி, நெற்றிப்பொட்டு துடித்தது.
“ஒரு சின்ன விசயத்துக்கு என்னை என்னவெல்லாம் பேசுறீங்க. இதெல்லாம் ரொம்ப தப்பு.” என்றான் கை முஷ்டியை இறுக்கியபடி.
“எப்படி நடக்குறீயா அப்படித்தான் பேச முடியும். அன்னைக்கு உன்னை நம்பித்தானே அந்த பொண்ணு மான்சி ஆசுவாசமாகி இருப்பா. என்ன செஞ்ச நீ?” என்று இவள் திருப்பிக் கேட்க, அவன் தவறை ஒத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
பார்க்கும் உத்தியோகத்தில் அலட்சியம் காட்டுபவன்தான். அனைவரிடமும் எரிந்து விழுபவன்தான். யாரையும் மதிக்காதவன்தான். வாரத்திற்கு நான்கு இரவுகள் குடித்து, இரண்டு சிகரெட் பாக்கெட்டுகளை புகைத்து தீர்ப்பவன்தான். ஆனால் பெண்கள் புறம் தவறான பார்வை வீசிடாதவன். ஏனோ என்றுமே அப்படி யாரையும் பார்க்கத் தோன்றவில்லை. கல்லூரி காலத்தில் கேலி பேசி சைட் அடித்ததோடு சரி. வேறு எதற்கும் முயன்றதில்லை.
அதனால் இன்று அதிரா பேசவும் அவன் நாளங்கள் அனைத்தும் கோவத்தில் கொதித்தது. ஈகோவைத் தாண்டி அவனது தனிப்பட்ட ஒழுக்கத்தை அவள் கேள்விக்குறியில் நிறுத்துவது ஒப்பவில்லை. பதிலுக்கு பதில் பேசியவன் இதழ்களை இறுக மூடி நின்றான்.
“என்ன பேச்சையே காணோம்? மத்த நேரத்துல எப்படியோ, என்கிட்ட வேலை பாக்குறப்போ ஒழுங்கா ஒழுக்கமா இருக்கணும்.”
“இப்போ என்ன ஒழுக்கக்கேடா நடந்துட்டேன்.”
“இவ்ளோ நேரம் சொன்னேனே காதுல விழல. இல்லை என் வாயால அதை திரும்ப கேக்கணும்னு ஆசையா இருக்கா?”
இதழ்கள் துடிக்க அதை அடக்கியபடி நின்றான் அகிலன். விட்டால் அடித்துவிடும் ஆத்திரம். ஆனால் முடியாதே, கூடாதே. அவனது பொறுமை எல்லை கடப்பது புரிந்து சல்யூட்டு வைத்து அவளை திரும்பியும் பாராது நடந்தான். இனி இவளை பார்க்கவே கூடாது என்று மனம் கூப்பாடு போட்டாலும் அது முடியாதே. குறைந்தபட்சம் நாளை ஒருநாளாவது அவள் நினைவு இல்லாமல் இருக்க வேண்டும் என்ற உறுதியோடு நடையின் வேகத்தை கூட்டினான்.
‘அது ஒரு சில்லி பெல்லோ.’ என்று அதிரா யாரிடமோ கூறுவது செவியைத் தீண்ட, அவன் எட்டுக்கள் இன்னும் நீண்டு அதிகமாகியது.
அகிலன் செல்லவும் அதிராவின் அலைபேசிக்கு விஷூ அழைத்திருக்க, அவனிடம்தான் சில்லி என்றிருந்தாள்.
“வேலை பத்தின டென்ஷனை விடு. நாளைக்கு லீவுதான… நல்லா ரெஸ்ட் எடு.” என்று சில நிமிடம் பேசி, அதிரா மனதை இலகுவாக்கிவிட்டே அழைப்பை துண்டித்திருந்தான் விஷூ.
விஷூவிடம் பேசி முடித்த பின்னும் அகிலன் நினைப்பு வர, சோர்வாய் உணர்ந்த மனம் உடலையும் சோர்வாக்கியது.
இனி உணவு வேறு செய்து சாப்பிட வேண்டுமா என்று அலுத்துக்கொண்டவளை மீண்டும் சுறுசுறுப்பாக்கி குழப்பத்தில் நிற்க வைக்கவென பரிதியிடமிருந்து அந்த அழைப்பு வந்தது.
“மேம், ஃபார்ம்லேந்து மான்சி கிளம்புன பூட்டேஜ் வச்சி செக் பண்ணோம். அவங்க ஏறி போன ஆட்டோ நம்பரை நோட் பண்ணி ஆர்.டி.வோல கேட்டா அந்த நம்பர்ல அப்படியொரு ஆட்டோவே இல்லைனு சொல்றாங்க.”
error: Content is protected !!