Skip to content
Post Views: 7,886
பொன்னன் கொடுத்த அதிர்வில் அதே இடத்தில் நின்றுக்கொண்டிருந்தாள் நந்தினி. மீண்டும் கதவு திறக்கப்படவும் அவள் கொஞ்சமாய் நடுங்க, உள்ளே வந்த ஜெயாவை கண்டு ஆசுவாசமானது.
“மூணு நாளுக்கு பிறகு தான் சடங்கு. நீ தூங்கு இப்ப” என்றவர் தூங்கிவிட்டார். தன்னை மீறி ஒரு நிம்மதி எழ, நிம்மதியாய் தூங்கினாள், அங்கொருவன் அவளுக்காக ஏங்குவது தெரியாமல்.
Advertisement
மறுநாள் இருவரையும் அருகே இருக்கும் கோவிலுக்கு சென்று வர சொன்னவர், தியாகராஜன் திரும்பி வந்ததும் குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவரலாம் என்றுவிட்டார். அதே தெருவில் இருந்த கோவிலுக்கு நடந்தே சென்றுவிட்டு வந்தவர்களை தெருவே வேடிக்கை பார்த்தது.
Advertisement
காலை உணவு முடிந்ததுமே, “நீ கடைக்கு கிளம்பு பொன்னா” என்றுவிட்டார் ஜெயா. அடுத்த ஒரு வாரத்துக்கு கடை பக்கமே போகபோவதில்லை என்றிருந்தவன் இதைக்கேட்டதும் அதிர, “வீட்டுல இருந்து என்ன செய்யப்போற? சொன்னா கேளு… கிளம்பு!” முடிவாய் சொன்னார் அவர்.
Advertisement
மூன்று நாட்களுக்கு இருவரையும் பாதுகாக்க வேண்டியது அவர் பொறுப்பாயிற்றே! மகனது முகம் பார்த்தே அவன் எண்ணம் புரிந்தாலும், புரியாதது போல முடிவாக சொன்னார். நந்தினியை ஏக்கமாய் பார்த்துக்கொண்டே வேலைக்கு சென்றான் பொன்னிலவன்.
Advertisement
அவன் சென்ற சற்று நேரத்திற்க்கெல்லாம் வீட்டின் லேன்ட்லைனுக்கு அழைப்பு வந்தது. நந்தினியின் தோழி தான் அழைத்திருந்தாள். அவளிடம் பேசியபின் சில நேரம் சிந்தனையிலேயே இருந்த நந்தினி, ஜெயாவை தேடி சென்றாள்.
கிச்சனில் ஜெயாவுடன் ராதாவும் அமர்ந்து வேலை செய்துக்கொண்டிருக்க, “அத்தே…” தயக்கமாய் வந்து அழைத்தாள் நந்தினி.
“சொல்லு!” என்ற ஜெயா வேலையை பார்க்க, “அத்தே, என் பிரன்ட் பேசுனா… காலேஜ்ல அட்மிஷன் பாரம் குடுக்குறாங்கலாம்” என்று சொல்ல, “குடுத்தா குடுத்துட்டு போகட்டும்… அதுக்கு என்ன?” என்றார் அவர். ராதா இளப்பமாய் சிரித்தார்.
“இல்ல அத்தே, இப்ப வாங்கி எழுதி குடுத்தா தான் அடுத்த மாசம் அட்மிஷன் போட முடியும்” என்று சொல்லவும், “அதெல்லாம் ஒரு அட்மிசனும் வேண்டாம். ஒழுங்கா வீட்டுல இருந்தோமோ புருஷனை பாத்தோமான்னு இரு” என்றதும் திக்கென்றானது அவளுக்கு.
“அத்தே” அவள் அழைக்க, “எல்லாம் காரணமா தான் சொல்றேன். நாளைக்கே புள்ளை உண்டானா மயக்கம் கிறக்கம் ன்னு நிதம் லீவ் எடுக்க முடியுமா? புள்ளை பேருக்கு ஆறேழு மாசம் வீட்டுல இருக்கனும். குறைஞ்சது ஒன்னரை வருஷத்துக்கு பாலு குடுத்தாவனும். நீ பைய மாட்டிக்கிட்டு பள்ளிக்கூடம் போனா இதெல்லாம் முடியுமா? பெரியவங்க சொன்னா அர்த்தம் இருக்கும்… கேளு” என்று எழுந்துக்கொண்டார்.
“மாமா படிக்கலாம்ன்னு சொன்னாங்களே த்தே!” தவிப்புடன் அவள் கேட்க, “அவர் கடக்காரு… பொம்பளைங்க கஷ்டம் அவருக்கெங்க புரியும்! எல்லாம் நான் பேசிக்குறேன்” என்றுவிட்டார். சொன்னதோடு எழுந்து பின்கட்டிற்கு போய்விட, திகைத்து அமர்ந்திருந்தாள் நந்தினி. அவளை பார்த்தபடியே, “யசோதா….!” என குரல் கொடுத்தார் ராதா.
சுரத்தே இன்றி, “என்னமா?” என்று அவள் வர, “காலேஜுக்கு போலையா நீ? நேத்தே தொறந்தாச்சுல?” என்றார்.
“திங்கள் போலாம் ம்மா!” நந்தினியை முறைத்துக்கொண்டு சொன்னாள் யசோதா.
“இல்ல கண்ணு… பொம்பளை புள்ளைங்களுக்கு படிப்பு முக்கியம். புருஷன் காசுல சொகுசா வாழ்ந்தாலும், தான் கையிட்டு ஒரு அஞ்சுரூவாயாது சம்பாரிச்சா தான், போற வீட்டுல அந்த பொண்ணுக்கு மதிப்பு. கல்யாணம்ன்னு லீவ் எடுத்த, அதான் முடிஞ்சுதுல? இனி படிப்பை பாரு, காலேஜுக்கு கிளம்பு!” என்றுவிட்டு எழுந்து சென்றார் ராதா.
படிக்க முடியாதோ? என்ற தவிப்பில் இருந்தவளை மேலும் தவிக்கவிட்டார் வார்த்தைகளால். தியாகராஜனிடம் ஒருமுறை பேசிவிட்டால் கூட ஒரு தெளிவு கிட்டும். அவரும் அருகே இல்லாததில் மனது சற்று அழுத்தமாகி போனது அவளுக்கு.
தியாகராஜனுக்கு அடுத்து அவளுக்கு இருந்த நம்பிக்கை பொன்னிலவன் தான். இரவு அவன் வந்ததும் அவனிடம் பேச வேண்டி முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஜெயா அவர்களை தனியே விடாமல் அருகேயே இருக்க, அவருக்கு ஒரு அழைப்பு வரவும் ஃபோனில் பிசி ஆனார்.
அந்த நேரம் பார்த்து அவளை தனியே இழுத்து சென்றவன் நெருக்கமாய் கட்டி அணைக்க, “மாமா… மாமா… பேசணும்!” என்றாள் அவன் நெருக்கத்தில் திணறி.
“அப்புறம் பேசிக்கலாம்!” என்றவன் முத்தமிட ஆரம்பிக்க, “அம்மாஆஆ…!” என்ற சத்தம். பட்டென பொன்னன் விலக, அவர்களுக்கு சற்று தூரத்தில் முதுகு காட்டி நின்றிருந்தாள் யசோதா.
“என்னடி?” ராதா எங்கிருந்தோ குரல் கொடுக்க, இவர்களை திரும்பிப்பார்த்தவள் கண்கள் எல்லாம் கலங்கிப்போய் இருந்தது.
“ஒன்னும் இல்ல” என்ற யசோதா, நந்தினியை முறைத்தபடி கண்களை துடைத்துக்கொண்டு போக, சங்கடமாய் தலையில் அடித்துக்கொண்டு நின்றான் பொன்னன்.
நந்தினிக்கு தனக்கு வேண்டியதை கேட்டே ஆகவேண்டும் என்று தோன்றவும், “மாமா…” என்றவள், ஜெயாவிடம் பேசியதை அப்படியே சொல்ல, “அம்மா சொல்றதும் சரி தானே!?” என்றான் பொன்னன். நந்தினிக்கு மனதே விட்டுப்போனது. ஜெயா அழைக்கவும் சென்றுவிட்டான் பொன்னிலவன்.
அதன்பிறகு நந்தினிக்கு மனம் எதிலுமே ஒட்டவில்லை. இருநாட்களும் இப்படியே ஓட, கிடைக்கும் நேரங்களில் பொன்னிலவன் இவளிடம் சேட்டை செய்ய, மனம் முழுவதும் அவள் எதிர்க்காலம் குறித்த பயத்திலேயே இருந்ததில் அவனிடம் கவனம் திரும்பவேயில்லை.
யசோதா அறையை விட்டு வெளியே வருவதே இல்லை. ராதாவும் முன்பு போல பேசுவதில்லை. ஜெயாவுக்கு இது இரண்டுமே உறுத்திக்கொண்டே இருந்தது. கார்முகிலனிடம் இதை சொல்ல, “விடுங்கம்மா, கொஞ்ச நாள்ல சரியாகிடுவாங்க. நீங்க எப்பவும் போல பேசுங்க” என்றுவிட்டான்.
ஞாயிறு பொழுது பொன்னனுக்கு சந்தோஷமாய் விடிய, அன்றைய இரவே அவன் மொத்த சிரிப்பும் போய்விடும் என்று அவன் நினைத்திருக்கவே இல்லை.
கடைக்கு சென்றவன் மதியமே கடையடைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டான். மாலை போல லோடு வந்திருப்பதாக அவனுக்கு அழைப்பு வரவும் உறக்கத்தில் இருந்தவன், ஜெயாவிடம் சொல்லிவிட்டு கிளம்பி சென்றான்.
அவன் சென்ற சிறிது நேரத்திலேயே ஜெயாவுக்கு அழைப்பு வந்தது, அவரது நெருங்கிய சொந்தத்தில் ஒருவருக்கு அடிபட்டு மருத்துவமனையில் வைத்திருப்பதாக. பதறியவர், வீட்டில் இருந்த கார்முகிலனிடம் சொல்லி ஆட்டோவுக்கு சொல்ல, ராதாவும் உடன் வருவதாக சொல்லி சென்றார். அவர்கள் சென்று ஒரு மணி நேரத்தில் டீ வைத்த நந்தினி, ஹாலில் இருந்த முகிலனிடம் கொடுத்தாள்.
ஒன்றும் சொல்லாமல் அவன் வாங்கிக்கொள்ள, மற்றொரு குவளையை எடுத்துக்கொண்டு தயங்கி தயங்கி யசோதாவின் அறைக்கதவை தட்டினாள் நந்தினி.
“என்ன?” அவள் கத்திய கத்தில் முகிலனே, “அவளை விடு… வேணுன்னா சாப்பிட்டுப்பா!” என்றான்.
இரவு சமையலுக்கான வேலைகளில் மூழ்கியவளுக்கு சிந்தனை மொத்தமும் ‘அடுத்து என்ன?’ என்பது தான். எப்படியும் அவள் தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வந்துவிடும். நிச்சயமாக சொல்லிக்கொள்ளும்படியான அதிக மதிப்பெண்கள் தான் வரும். அத்தனையும் இந்த அடுப்படியில் கிடந்து அவியவா? என்ற எண்ணம்.
இரவு எட்டை நெருங்கும் போது சமைத்ததை கொண்டு வந்து வைத்தவள் முகிலனை சாப்பிட அழைக்க, அவனும் உடனே வந்தான். அவனுக்கு பறிமாறிவிட்டு, “நான் யசோதாவை கூட்டிட்டு வரேன்” என்றாள் நந்தினி.
‘தேவையில்லாத வேலை’ என்பது போல ஒரு பார்வை பார்த்த முகிலன், ஆமோதிப்பான சிறு தலையாட்டலுடன் டிவியை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
யசோதாவின் அறைக்கதவை மெதுவாக தட்ட, உள்ளிருந்து பதிலில்லை. தாழிடாத கதவு கொஞ்சமாய் திறந்துகொள்ள, இன்னும் கொஞ்சம் திறந்து உள்ளே சென்றாள் நந்தினி.
அங்கே மடக்கிய கால்களில் முகத்தை புதைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் யசோதா.
“யசோ, ரொம்ப நேரமா ஒண்ணுமே சாப்பிடல, சாப்பிட வா” நந்தினி அழைக்க, வெடுக்கென நிமிர்ந்தவள், “உன் அதிகாரத்தை என் கிட்ட காட்டாத” என்றாள்.
“அதிகாரமா? சாப்பிட தானே கூப்புடுறேன்?” நந்தினி கேட்க, “நீ சொல்லி நான் கேட்கணும்ன்னு எனக்கு ஒன்னும் இல்ல… உன்னை பார்த்தாலே எரிச்சலா வருது… அப்பாவி மாறி நடிச்சு என் ஆசைல மண்ணள்ளி போட்டுட்டல்ல?” என்றவள் குரல் உயர்ந்தது.
“நான் என்ன யசோ செஞ்சேன்? நீ கூட புரிஞ்சுக்காம பேசுறியே?” நந்தினி சொன்னதும், ஆங்காரமாய் எழுந்தவள், “என் மாமாவை நீ கட்டிக்கிட்டியே… வேற என்ன செய்யணும் நீ எனக்கு?” என்றவளிடம், “நான் ஒன்னும் ஆசைப்பட்டு செய்யல யசோ!” என்றாள் நந்தினி.
“ஓ… பிடிக்காம தான் அவரோட ஒட்டி உரசிட்டு இருக்கியா? அக்கம் பக்கம் யார் இருக்காங்கன்னு கூட பாக்காம…” முகத்தை சுளித்து அவள் சொன்னதில், நந்தினிக்கு தான் ஏதோ பெரிய தவறு செய்ததை போல தோன்றிவிட்டது. அதில் குரலே வெளிவராமல் போக, “நான் என்ன செய்வேன்!?” என்றாள் கண்கள் கலங்க.
“பிடிக்கலன்னா எதுக்கு இங்க இருக்க? எங்கயாது போ!” என்றாள் யசோதா.
“எங்க போவேன் நான்?!”
“எங்கயோ போ! உனக்கு தான் பிடிக்கலல?”
“நா… நான் எப்படி?” அவள் அதிர்ந்து தயங்க, “தெரியும் டி எனக்கு… பிடிக்கலன்னு சொல்றதெல்லாம் சும்மா… உனக்கு இங்கயே ஒட்டிக்கணும். என் தாய்மாமாக்கு தங்கச்சி பொண்ணுன்னு என் மேல கூட பாசம் இல்ல. நான் அழுதாலும் சரின்னு உன்னை தானே கட்டி வச்சுருக்காரு. இப்படி பட்ட இளிச்சவாயனுங்களை விட்டு போவியா நீ!?” யசோதா பேச, நந்தினி கண்கள் விடாமல் கலங்கியது.
“வந்த சொந்தக்காரன் ஒருத்தன் விடாம எவ்ளோ கிண்டலா பேசுனாங்க தெரியுமா? என்னை பிடிக்காம தான் உன்னை கட்டிக்கிட்டாராம்! என்கிட்டயே சொல்றாங்க” என்றவள், “இந்த கல்யாணம் முடிவானதுல உனக்கு ஏதாவது வருத்தம் இருக்கான்னு இந்த வீட்டுல ஒருத்தராது என்கிட்ட வந்து பேசுனாங்களா? நீ எக்கேடோ கெட்டுப்போன்னு அப்படியே விட்டுட்டாங்கள்ள? அப்போ இவ்ளோ நாளும் இந்த வீட்டுல வளர்ந்த என்மேல யாருக்கும் எந்த பாசமும் இல்லையா?” என்றாள் தேம்பிக்கொண்டே.
“யசோ… யசோ…ன்னு என்கிட்டே எதாவது பேசிட்டே இருக்க மாமா, உன்னோட கல்யாணம் முடிவு செஞ்சதும் நான் இருக்கேனா இல்லையான்னு கூட பாக்கலை. எல்லாம் உன்னால தான்… நீ இல்லன்னா என் மாமா எனக்கே சொந்தமா இருந்துருப்பாரு. இப்படி என் மாமா வீட்லயே நான் ஒரு அனாதை மாதிரி உணர்ந்துருக்க மாட்டேன்!”
பதினேழு முடிந்த ஒருத்தியிடம் பதினெட்டு முடிந்த ஒருத்தி விவரமின்றி, ஆழமான காரணமின்றி பேசிக்கொண்டிருந்தாள்.
“அப்படீல்லாம் நினைக்காத யசோ… உன் மேல எல்லாருக்குமே பாசம் உண்டு!” நந்தினி சொல்ல, “என்னை எல்லாரும் ஒதுக்கி வச்சுட்டாங்க. அதுவும் உன்னால…” என்றவள், “நீ இங்கிருந்து போடி… எங்கவாது போய் தொல! அப்போதான் நான் ஒருத்தி இருக்கேன்னே எல்லாருக்கும் தெரியும்” என்று கத்தினாள்.
“எனக்கு யாரையும் தெரியாது யசோ… நான் எங்க போவேன் சொல்லு?”
“எங்கயோ போ டி… நீ போய்ட்டீன்னா, என் மாமாவை நானே கல்யாணம் பண்ணிக்குவேன்” சிறுபிள்ளை போல யசோதா சொல்ல, “அது எப்டி யசோ?” என்று திகைத்தாள் நந்தினி.
“உனக்கு தான் பிடிக்கலல? அப்போ கிளம்பு இப்போவே!”
“அது தப்பு யசோ… அப்படி போக கூடாது”
“என்னடி தப்பு? ஒரு தப்பும் இல்ல… எங்கிருந்தோ வந்த உனக்காக நானும் எங்க அம்மாவும் இங்கிருந்து போணுமா?” என்று கேட்க, “நீங்க போறீங்களா?” என்று அதிர்ந்து கேட்டாள் நந்தினி.
“ஆமா… இனியும் இங்க இருக்க வேண்டாம்ன்னு எங்கம்மா அப்பா ஊரு பக்கம் வீடு பாக்க சொல்லிருச்சு. இந்த வாரத்துல இங்கிருந்து மொத்தமா கிளம்பிடுவோம்” என்றவள், “உன்னால தான் டி” என்று அழுதாள்.
“என் சின்ன வயசுல இருந்து இந்த வீட்ல தான் இருக்கேன். என் வீடு இதான்னு நினைச்சேன். அது இல்லன்னு ஆகிடுச்சு… என் காலேஜு, பிரண்ட்ஸு எல்லாரையும் விட்டுட்டு போனும் நான்…” என்றவளுக்கு அழுகை ஓயவில்லை.
இருந்த ஊரை விட்டு வேறிடம் செல்லும் கஷ்டம் நந்தினிக்கு நன்றாக தெரியும். தன்னால் தான் யசோதாவுக்கு இந்த நிலை என்பதும் புரிய, யோசனையில் ஆழ்ந்தாள்.
அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. தான் இந்த வீட்டில் இருப்பது யாருக்குமே நல்லதாக இல்லை. ஜெயா கூட வேறு வழி இல்லாமல் தான் தன்னை ஒத்துக்கொண்டார் என்றுக்கூட புரிந்துப்போனது. தன் எதிர்க்காலத்தையும் அழித்து, மற்றவர்களையும் சிரமப்படுத்தி ஒரு வாழ்வு தேவையா? என்று தோன்றிவிட்டது.
“உனக்கு பொன்னு மாமாவை பிடிக்குமா?” குரலே எழும்பாமல் கேட்டாள் நந்தினி.
“அவரை பிடிக்காம இருக்குமா?” என்ற யசோதா, “அதான் நீ குறுக்க வந்து கெடுத்துட்டியே மொத்தமா!” என்றாள்.
“நான் இல்லைன்னா நீ அவரை கட்டிக்குவியா?”
“அதான் நீ இருக்கியே டி”
“இல்லன்னா… இல்லன்னா கட்டிப்பியா?” நந்தினி கேட்டுக்கொண்டிருக்க, வாசலில் ஆட்டோ வந்து நின்றது. உண்டுமுடித்த கார்முகிலன் வெளியே சென்று பார்க்க, ராதா வந்துக்கொண்டிருந்தார்.
“என்ன அத்த, நீங்க மட்டும் வரீங்க?” அவன் கேட்க, “உன் சித்தப்பாக்கு துணையா சித்தியும் ஆஸ்பத்ரில இருக்கனால வீட்டுல பிள்ளைங்க, பெரியவங்களை கவனிக்க ஆள் இல்லையாம். நாளைக்கு அவ தங்கச்சி வந்துடுவாளாம். இந்த ஒரு ராத்திரிக்கு ஆள் இல்லன்னு புலம்பவும் உன் அம்மா நான் போறேன், நீ கலங்காதன்னு சொல்லி கிளம்பிட்டா அவங்க வீட்டுக்கு” என்றார் ராதா.
“நாளைக்கு தான் வருவாங்களா அப்போ?” அவன் கேட்க, “ம்ம்ம்…” என ராதா ஆரம்பிக்கும்போதே, “ஐயோ… யசோதா…” என்ற நந்தினியின் அலறல் கேட்க முகிலனும் ராதாவும் அடித்துப்பிடித்து ஓடினர்.
யசோதாவின் அறைக்குள் கையை கிழித்துக்கொண்டு ரத்தம் கொட்ட நின்றிருந்தாள். நந்தினி ஏதோ ஒரு துணியை எடுத்துக்கொண்டு அவளிடம் போக, “அடியே யசோ… என்னடி பண்ணிட்ட நீ?” என்று மகளிடம் ஓடிய ராதா, அருகே வந்த நந்தினியை “போடி அந்தாண்ட” என்று தள்ளிவிட்டார்.
“ம்மா, துணி கட்டுங்க” நந்தினி பதறிக்கொண்டு நீட்ட, “ச்ச… எங்கயாது போய்த்தொலடி நீ!” என்றவர் தன் புடவையை கிழித்தே காயத்தில் சுற்றினார்.
ராதாவை நகர்த்தி, ரத்தம் வடியும் அவள் கையை தூக்கிப்பிடித்த முகிலன், “பைத்தியமா உனக்கு!” என்று யசோவை கத்த, அவர்களை மீறி தள்ளி நின்ற நந்தினியை எட்டிப்பார்த்த யசோ, “கேட்டியே… எவ்ளோ பிடிக்கும்ன்னு… இந்த அளவு அவரை பிடிக்கும்!” என்றாள் வலியில் நடுங்கிக்கொண்டு.
முகிலன் அந்த பேச்சை கண்டுக்கொள்ளாமல் தனது அலைபேசியில் இருந்து ஆட்டோவுக்கு அழைத்தான். அதே தெருவிலேயே இருந்த ஆட்டோக்காரரும் உடனே வருவதாக சொல்லிவிட, “அத்த, இந்த லூசை கூட்டிட்டு வெளில போங்க” என்றான்.
அழுதுக்கொண்டே ராதாவும் யசோதாவை அழைத்துப்போக, விக்கித்து நின்றிருந்த நந்தினியை நெருங்கிய முகிலன், “பொன்னன் வந்தா இதெல்லாம் உளறி வைக்காத, வேற எதாவது சொல்லி சமாளி… சின்ன காயம் தான். நீ பயக்காத புரியுதா?” என்றவன், ஆட்டோ சத்ததில் வேகமாய் சென்றுவிட்டான்.
error: Content is protected !!