Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மைவிழி ஜாடைகள்.

மைவிழி ஜாடைகள் – 10(b)

மைவிழி – 10(b)

வாசன் சோர்ந்து போய் வீடு வர, சரியாய் அந்நேரம் வேதவியிடமிருந்து அழைப்பு.



Advertisement

போனை எடுத்த பார்த்தவன் சத்தியமாய் இவளின் அழைப்பை எதிர் பார்த்திருக்கவில்லை.

அவள் கோபம் அறிந்தவன், அழைக்க மாட்டாள் எனத் தான் நினைத்திருந்தான்.

Advertisement

Advertisement

சிவா வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து எப்படி அவளை சமாதானப் படுத்துவேன் எனும் யோசனை தான் இவனுக்கு.

இப்போது வேதவியின் அழைப்பில் ஆசுவாசப்படுவதா,அஞ்சுவதா எனத் தெரியவில்லை.

Advertisement

ஏற்கனவே பயந்து போயிருந்தான் வாசன். சஞ்சனாவை மறக்க முடியாது வேதவிக்கு துரோகம் செய்கின்றோமோ என அவன் மனதுக்குள் புழுங்குவதை எவரும் அறிய வாய்ப்பில்லை.

எத்தனை எத்தனை முயற்சிகள் அவளை மறப்பதற்கு. என்று திருமணம் செய்து கொள்கிறேன் என தந்தைக்கு உறுதி கொடுத்திருந்தானோ அன்றிலிருந்து ஆரம்பித்தது அல்லவா, அவளை மறப்பதற்கான முயற்சிகளை.

இரண்டு வருடமாகி விட்டது சஞ்சனா என்பவள் அவனை விட்டு நீங்கி! ஆனாலும் அவன் மனதில் நீங்க இடம் பிடித்திருந்தாள் அவள்.

அப்படித் தான்!பிடித்தவைகளோ, பிரியம் வைத்ததுவோ நீங்கிச் சென்றாலும், நீங்கா இடத்தை பிடித்து விடுகிறது, இதயம் எனும் இருப்பிடத்தில்!

‘எனக்கு ரொம்ப புடிச்ச சட்டை அது, போட்ட ஒரே நாள்ல கிழிஞ்சு போச்சு. ரெண்டு வருசமா அதே மாதிரி கிடைக்குமான்னு தேடுறேன் கிடைக்க மாட்டேங்குது’ என்றதில் ஆரம்பித்து,

‘நாய்க்குட்டின்னா அவ்வளவா பிடிக்காது!ஆனா ஜிஞ்சுவ (நாய்க்குட்டியின் பெயர்) பார்த்ததுல இருந்து என்னவோ ஒட்டுதல் அவன்கிட்ட! காலையே சுத்தி வந்தான். திடீர்னு செத்து போய்ட்டான். அத்தனை அன்பு அவன் மேல எனக்கு’என்று நீண்டு,

‘எத்தனை பிரியங்களை சுமந்தாலும் அதுக்கு சொந்தமானவங்க நம்ம விட்டுப் போறதை மட்டும் இந்த மனசு ஏத்துக்க மாட்டுதில்ல? இந்த அன்பு இத்தனை பலவீனப் படுத்தும்னு தெரிஞ்சிருந்தா அன்பே வெச்சிருக்க மாட்டேன்’ என்பதில் முடிகிறது, இந்த அண்டத்தின் அற்பங்கள்.

வாசன் என்றவனும் அத்தனை பிரியங்களை வைத்திருந்தவன் தான்! காலம் அதைப் பிரித்து விட ஜீவனற்றுப் போய்,பற்றிக் கொள்ள கைகளின்றி பலவீனமாய், அவனுக்கான உறவுகளைப் பிடிமானமாய்க் கொண்டு வாழ்பவன்.

காதல் தோல்வி தந்த வலியில் தாடி வைத்திருந்தாலும், குடியைக் கூட அண்ட விடா குடிமகன்.

சஞ்சனாவின் நினைவுகள் சதா குடைந்து கொண்டு வலியை, துன்பத்தை, மனஉளைச்சலைக் கொடுத்தாலும், அதை சிறிதளவேனும் வெளியில் காட்டிக் கொண்டதில்லை இவன்.

உறுதி கொடுத்ததும் தன்னை நம்பி வரும் பெண்ணுக்காக அவளை மறக்க முயற்சித்து தோல்வி கண்டவன், ஒரு கட்டத்திற்கு மேல் தன்னால் கையாள முடியாது போக,பயந்து போய் கவுன்சிலிங் சென்று இன்று வரையிலும் அவனை அவனே இயல்பாய் காட்டிக் கொள்ளப்படும் பாடு சிவாவே அறியாதது!

மருத்துவர் கூட சொல்லி விட்டார் இதெல்லாம் சாதாரணம் என்று. இவனால் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“நான் வேதவிக்கு துரோகம் செய்றேனா டாக்டர்”குற்ற குறுகுறுப்பில் தத்தளித்தவனை,

“நீங்க கில்ட்டாகற அளவுக்கு இது பெரிய விசியம் இல்ல கீர்த்தி வாசன். அவங்க உங்க நினைவலைகளாத் தான் இருக்காங்க. மறக்க முடியாத தவிர்த்து நினைக்காம இருக்க முடியும்”என்று எத்தனையோ சமாதானங்கள் செய்திருந்து தான் ஓரளவிற்கு சரியாகிருந்தான்.

வேதவி தான் அவன் வாழ்வின் நிகழ்காலம்,எதிர்காலம் என உறுதியாகி விட்ட பின் வீட்டில் பார்த்த பெண் என்பதைத் தவிர்ந்து மெல்ல மெல்ல அவள் மேலான உரிமை உணர்வும்,அன்பும் நாளுக்கு நாள் அதிகமாகியது.

காதல் எனும் கோட்டைத் தொடா விடினும் அவன் வைத்திருக்கும் அவள் மேலான அந்த அன்பு வரையறைக்குள் அடக்க முடியாதது.

அன்பு வைத்த இரு உள்ளங்களும் அழைப்பை ஏற்றுக் கொண்டு பல நிமிடங்களை அமைதியின் ஆர்ப்பரிப்பில் கடந்திருக்க,

“ஃபோன் பண்ணா என்னனு கேட்க மாட்டிங்களா?” என வேதவியே கேட்டிருந்தாள். அழுகையை அடக்குவது அவள் குரலில் தெரிந்தது இவனுக்கு.

“ஆஹ்? ம்ம்” என்ற வாசனுக்கு தொண்டைக் குழியிலே வார்த்தைகள் சிக்கிக் கொண்டன.

“அவ்ளோ பேசுவீங்க!நேத்து அத்தனை பேசினீங்களே..!இப்போ பேசறது?அடமாய் சொல்லியவளைக் கேட்டிருந்தவனுக்கு இதழ்கடையில் சிறு புன்னகை.

“தெரியல வேதவி”என்றான் வாசன்.

“என்ன தெரியல?”

“என்ன பேச, உன்னை எப்டி சமாதானப்படுத்த. எதுவுமே தெரியல வேதவி!”

“…..”

“கோபமா இருப்ப, காலே பண்ண மாட்டேன்னு தான் நினைச்சேன்”

“இப்பவும் கோபமாத் தான் இருக்கேன். நான் இன்னும் சமாதானம் ஆகல. நீங்க சமாதனப்படுத்தல!”

“!!!”

“சிரிக்கறீங்க தானே?”

“ஹ்ம்ம்” மெல்லிய சிரிப்புடன் உண்மையை ஒத்துக் கொண்டான் வாசன்.

அவ்வளவு தான். ஃபோனை கட் செய்துவிட்டாள் வேதவி.

“ஐயோடா!அவளே கோபமா இருக்கா சிரிப்பியா நீ?”என முணுமுணுப்பாய் தனக்கே கேட்டுக் கொண்டவன், அவளுக்கு அழைக்க முயற்சிக்க வீடியோ கால் செய்தாள் அவள்.

அழைப்பை ஏற்றவன், தன்னையே ஆழ்ந்து பார்க்கும் பெண்ணவளை அமைதியாய் ஆராய்ந்தான்.

குட்டியாய் இருக்கும் அவள் கண்கள் தடித்து, கன்னங்கள் உப்பி முகம் பொழிவிழந்து சோர்ந்து போய் இருந்ததின் அடையாளம் அவள் அழுகையின் அளவீட்டை அவன் அகத்தில் கொண்டு சேர்த்தது.

“ஸாரி வேதவி” என்றான் அடைக்கும் தொண்டையுடன்.

“…….”மெல்ல தலை நிமிர்த்தி அண்ணார்ந்து பார்த்து இமை சிமிட்டிக் கொண்டவளின் செய்கையில் மீண்டுமாய்,

“ஸாரி வேதா”என்றான் இவன்.

“இல்ல. ஸாரி வேணாம். கேட்காதீங்க நீங்க”என்றாள் வேதவி.

இவன் கேள்வியாய்ப் பார்க்கவும்,

“நானுமே நேத்து பேசிட்டேன். பேசிருக்கக் கூடாது. ப்ச்,அந்த நேரக் கோபம். எல்லாருமா மறைச்சிட்டாங்கன்னா வருத்தம்! எல்லாமே சேர்ந்து நா.. நான் என..எனக்கு.. ஸாரி வாசன்” என்றவளின் கண்ணீர் விழி தாண்டி கன்னத்தில் உருண்டிட,

“வேதா!வேணாம் ப்ளீஸ். அழாதே!” என அவளை ஆறுதல் செய்ய முடியாது தவித்தான் வாசன்.

“நாங்க தான் தப்பு!இது தெரியாம நானும் மடச்சி மாதிரி போய் கல்யாணம் வே..வேணான்னு சொல்லிட்டேன்! எக்ஸ்ட்ரீம்லி ஸாரி வாசன்” என்றவளை இப்போது மெல்லிய புன்னகையுடன் பார்த்திருந்தான் இவன்.

நிமிர்ந்தவள் அவன் முக பாவனையில் மூக்கு விடைக்க,

“என்ன அப்போவும் சிரிச்சீங்க. இப்பவும் சிரிக்கறீங்க? நான் சீரியஸா பேசறது சிரிப்பா இருக்கா உங்களுக்கு” என கடுகடுக்க, மாறும் அவள் உணர்ச்சிகளின் வேகத்தை உள்வாங்கிக் கொண்டவனின் புன்னகை மேலும் விரியப் பார்க்க இழுத்து பிடித்து ஒன்றுமில்லையென தலையசைத்து கண் சிமிட்டி வைத்தான்.

“அப்போ நான் கல்யாணம் வேணான்னு தான் சொல்லிருப்பேன்னு எக்ஸ்பக்ட் பண்ணிருக்கீங்க. ரைட்?” என முறைக்க,

“ஹ்ம்ம்”என்றான்.

“ஆஆஆஹ்ஹ்!அப்போ நான் கேட்ட ஸாரி வாபஸ்!” என்றாள் வேதவி.

“இட்ஸ் பைன்!ஆனா ஹேப்பி தான். உன்னை இந்தளவுக்கு புரிஞ்சு வெச்சுருக்கேன்னு”என ஆதூரமாய் சொல்ல,

“நீங்க மட்டும் தான் புரிஞ்சி வெச்சிருப்பீங்களா? நானும், எனக்கும் உங்களை தெரியும், புரியும்”என முந்திக் கொண்டாள் இவள்.

“சொல்லேன். கேப்போம்!”

“அ.. அது நீங்க அன்னைக்கே எனக்கு கால் பண்ணது உங்க..”என மென்று விழுங்கியவள்,

“அதை சொல்லித் தான் இந்த கல்யாணத்துல சம்மதமான்னு கேட்டிருக்கீங்க! முன்னாடி தெரியலைன்னாலும் இப்போ புரிஞ்சுது.அவ..அவங்களை மறக்க முடியல்லனு நீங்க சொன்னது கஷ்டமா இருந்தது தான். இப்பவும் இருக்கு. இல்லைன்னெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா அதே மாதிரி நீங்க எ..என் மேல வெச்ச அன்பும் உண்மையானது” என்று அவன் கண்களை பார்த்து சொல்ல, வாசன் கண்களில் பிரகாசம் வேதவியின் புரிதலில்.

இங்கு உணர்தலுக்கும், புரிதலுக்கும் நூலிழையில் தான் வித்தியாசம். புரிந்து உணருதல் ஒரு வகை என்றாலும் உணர்த்தலுக்கு அப்பாற்பட்ட புரிதல்கள் லாளிதமாய்!

இருவருமே ஒருவரை ஒருவர் உணர்த்தா விடினும் புரிந்து கொண்டிருந்தது அவர்களின் உறவுக்கு இன்னுமே அழகு சேர்த்தது.

“தேங்க்ஸ்”என்றான் வாசன் உணர்ந்து.

இவள் முறைக்கவும்,

“எனக்கு என்னை எப்படி எக்ஸ்பிரஸ் பண்ணனு தெரியல வேதா! நீ இப்படி சொன்னது நெஞ்சை அடைக்க மாதிரி.. அவ்ளோ அவ்ளோ சந்தோஷம்” என்றவன் விழிகளில் மெல்லிதாய் நீர்ப் படலம்.

“வாசன்”அவளும் கலங்க,

பெரு விரலால் கண்களைத் துடைத்து கொண்டவன், நடுங்கும் கரத்தை அழுத்திக் கொண்டு

“நா.. நான் சஞ்சனா பத்தி உன்கிட்ட சொல்லனும் வேதவி!”என அவளைப் பார்த்து கூற,அமைதியாய் அவனையே பார்த்திருந்தாள் பாவை.

அவனிடமிருந்து தான் தெரிய வேண்டுமென கிஷோர் சொல்ல வந்ததை தடுத்திருந்தவளுக்கு இப்போது வாசன் கூற வருகையில் மனதினுள் மெல்லிய நடுக்கம்.

அதிலும் அவன் படும் அவஸ்த்தை. அப்பப்பா!மெல்லிய வலி அவள் இதயத்தை இறுக்கிப் பிடிக்க,எங்கே சொல்ல வேண்டாமென தடுத்து விடுவோமோ என்ற பயம் வேறு!

நெஞ்சை அடைத்த ஏதோவொன்று பெரும் வலியுடன் தொண்டைக்குழியில் நின்று கொண்டு தவிப்பில் அவன் ஆடாம்ஸ் ஆப்பிளை ஆட்டம் காணச் செய்திருக்க, மீண்டும் கண்களை நிறைக்கத் தொடங்கிய விழி நீரை விரட்டி அடிக்க முயன்று தோற்றவனாய்,

“சஞ்சனா இறந்து இரண்டு வருசமாச்சு!”என்றான் ஜீவனின்றிய குரலில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!