Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய்

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 14

அத்தியாயம்     14

இவர்களையே குழப்பமாக பார்த்துகொண்டிருந்த பூர்ணிமா, அங்கே என்ன நடக்கிறது என ஒன்றும் புரியாமல், திரும்பி மதுவைப் பார்த்தாள் கலக்கத்துடன்.

மதுசூதனனும் அவர்களைதான் பார்த்திருந்தான்.  அவனுக்கும் ஒன்றும் புரியவில்லை.  இருந்தும் சங்கரின் உடல்மொழியிலிலும், தங்கையின் குறுநகையிலும், ஏதோ அவர்களுக்குள் கேலி செய்து விளையாடுகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.  ஆதலால் பூர்ணிமாவை சமாதானப்படுத்தினான்.



Advertisement

‘’ஒன்னுமிருக்காது……, நீ சாப்பிடு”.

அப்படியும் சாப்பிடாமல்…, திரும்பி சங்கரையே பார்த்துகொண்டிருந்தாள் பூர்ணிமா……..  அவளுக்கு உள்ளுக்குள் பயம் வந்தது.  எங்கே மறுபடியும் ஏதாவது நடந்து, திரும்ப தனது திருமணம் தடைபட்டுவிடுமோ என கவலை கொண்டது மனம்.

அவளைப் புரிந்ததுபோல மதுசூதனன், பூர்ணிமாவின் மனநிலையை மாற்ற  எண்ணி, அவள் கையில் வைத்திருந்த உணவை, அவள் கையோடு சேர்த்து கொண்டுவந்து, தனது வாயில் வாங்கி சாப்பிட்டான்.

Advertisement

எல்லோரது கவனமும் சங்கரின் மேல் இருக்கவே, இவர்களை யாரும் கவனிக்கவில்லை.  ஆனால் சங்கரின் பார்வையில் இது தவறாமல் விழுந்திருந்தது.  அவனுக்கு இன்னும் பொறாமையில் புகைந்தது.

Advertisement

நொடியில் மதுசூதனன் அவளது கையைப் பிடித்து உணவோடு தனது வாயில் வைத்துகொள்ளவும், இதை எதிர்பார்க்காத பூர்ணிமா வெட்கப்பட்டு குனிந்து கொண்டாள்.  அவளது கன்னம் இரண்டும் சிவந்து நாணத்தில், முகம் விகசித்தது.

பூர்ணிமாவின் வெட்கத்தைப் பார்த்து மதுவுக்கு மந்தகாச புன்னகை எழுந்தது.

விசேஷம் சந்தோஷமாக முடிந்து, எல்லோரும் கிளம்பி வந்திருந்தனர்.  பானுவை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு, சங்கர் தனது பெற்றோர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்திருந்தான்.

Advertisement

இன்னும் திருமணத்திற்கு ஒரு மாதமே இருப்பதால் ஜமுனா மகள் மருமகன் இங்கு இருக்கும் பொழுதே ஐவுளி எடுக்கும் வேலைகளை முடித்து விட எண்ணி மறுநாளே,  திருபுவனம் சென்று,  முகூர்த்தப் புடவை எடுக்க முன்கூட்டியே பேசி முடிவு செய்திருந்தார்.

மதியம் விசேஷம் முடிந்து பானுவை அவளது வீட்டில் விட்டு வந்தவனுக்கு, அவள் இல்லாமல் பொழுதே போகவில்லை.  சிரமமாக இருந்தது.  மாலை அவளை அழைத்து வந்துவிடலாம் என எண்ணி போன் செய்தவனிடம், தான் ”இன்று ஒரு நாள் அம்மா வீட்டிலேயே தங்கிக்கொள்ளவா…..”  என கேட்டவளிடம் மறுக்கவும் முடியாமல்……. சரி என்றிருந்தான்.

சென்னை வந்ததிலிருந்து, இப்பொழுதுதான் பல மாதங்கள் கழித்து முட்லூருக்கு அழைத்து வந்திருந்தான்.  அவளுக்கும் அவளது வீட்டினருடன் தங்குவதற்கு ஆசை இருக்குமில்லையா… என எண்ணி, சரி என சொல்லி விட்டான்.

சங்கரின் மனது பானுவை தேடியது.  இத்தனை நாள் ஒன்றாகவே இருந்துவிட்டு, திடீரென அவள் இல்லாமல் இருந்தது, அவனுக்கு வெறுமையாக இருந்தது.  மனைவியில்லாமல் தனிமையில் பொழுதை நெட்டித்தள்ளி கொண்டிருந்தான்.

நேற்று இரவு, அவள் பக்கத்தில் படுத்திருந்ததின் தாக்கம், இன்றும் அவளது அருகாமைக்காக ஏங்கியது உள்ளம்.  ‘’ராட்சஷி…. வர வர என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றா………’’ என செல்லமாக சலித்துகொண்டவன், நெடு நேரம் தூக்கம் வராமல், புரண்டு கொண்டிருந்தான்.

முகூர்த்தப் புடவை எடுக்க அனைவரும் திருபுவனம் வந்திருந்தனர். கலியமூர்த்தியையும், ராகவனையும் தவிர வீட்டு ஆட்கள் அனைவரும் வந்திருந்தனர்.

மணப்பெண்ணின் வீட்டிலிருந்து செல்வி, மாதவி, குமார், பூர்ணி என நால்வர் மட்டும் வந்திருந்தனர்.  தேவகியும், பாண்டியனும் நேற்று இரவே வேலைக்கு செல்ல வேண்டும் என சென்னைக்கு திரும்பிருந்தனர்.

காஞ்சிபுரம் அளவு இல்லையென்றாலும், திருபுவனத்திலும் பட்டு நெசவு பெயர்பெற்றது.  காலம் காலமாக பரம்பரை தொழிலை விடாமல் இன்னும் சில பட்டு நெசவாளர்கள், நெசவுத் செய்து வருகிறார்கள்.

அந்த சுத்து வட்டார மக்களுக்கு திருபுவனம் பட்டு மிகவும் பிரசித்தி பெற்றது.  இன்னும் பழமை மாறாமல் சில நெசவாளர்கள் பாரம்பரியத்தை கடைப்பிடித்து கொண்டு வருகிறார்கள்.

ஜமுனாவுக்கு அங்கே எடுத்தால் ராசியாக இருக்கும் என்பதால் முகூர்த்தப் புடவையை அங்கேயே எடுக்க முடிவு செய்தார்.

சங்கர், ”என்னம்மா கடை பார்க்க சின்னதா இருக்கு.  இங்க போய் எடுக்கனும்னு வந்திருக்கீங்க.  அதுக்கு சென்னையிலேயே எடுத்திருக்கலாமில்ல”.

சரசு, ”டேய் கடையோட சைஸ் பார்த்து முடிவு பண்ணாத உள்ள வந்து பாருடா…” என அழைத்து சென்றார் அவனை, கடையின் உள்ளே.

பானு ஜமுனா எல்லாம் முன்னமே கடையினுள் சென்றிருந்தனர்.  அவர்களுடன் மதுசூதனனும் வந்திருந்தான்.

”என்ன மாதிரி புடவை வேணும்னு சொல்லு பூர்ணி, உனக்கு பிடிச்ச கலர்ல, பிடிச்ச மாதிரி, எடுத்துக்கோ மா…. என்றார் ஜமுனா”.

பூர்ணி, அவரது வார்த்தைக்கு தலையசைத்தவள், அங்கிருந்த சேலைகளை எடுத்துகாட்ட சொல்லி பார்வையிட ஆரம்பித்தாள்.

ஜமுனா பானுவையும் அவளுக்கு பிடித்த மாதிரி பார்த்து எடுக்க சொல்லியிருந்தார்.  ஆதலால் அவளும் ஒரு பக்கம் சேலையை எடுத்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

வெளியே தெரிந்த கடையின் முகப்பை பார்த்து சரசிடம் கடை சின்னதாக இருக்கு என்று கேட்டிருந்தவனுக்கு, உள்ளே வந்ததும், அதன் விஸ்தாரத்தைப் பார்த்து கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

மனைவி தனியாக நின்றிருப்பதைப் பார்த்து அங்கே சென்று நின்றான். அவள் எடுப்பதும் விலையைப் பார்த்து வைப்பதுமாக இருப்பதை பார்த்தவன், ‘’பிடிச்சிருந்தா எடுத்துக்கோ பானு, விலையெல்லாம் பார்க்காத’’ என்றான்.

‘நான் இதுவரைக்கும் தனியாலாம் வந்து எடுத்தது இல்ல.  அம்மாதான் எடுத்து தருவாங்க, எது எடுக்கறதுன்னு தெரியல’, என்றாள் குழப்பமாக.

‘’ஹம்ம்……. புருஷனையே…, அம்மா சொன்னாங்கன்னு ஓகே பண்ணிட்ட. சேலை எடுக்க அம்மா வேணுன்றதுல அதிசயமில்ல……..’’ என்றான் அவளைப்பார்த்து கண்அடித்து.

அவனது செய்கையில் அழகாக வெட்கப் பட்டவள்…,  ‘’கடையிலே இருக்கோம்… என அவனது கையை யாருக்கும் தெரியாமல் பிடித்து கிள்ளினாள்.  அவளது கையை விடாமல் பிடித்துக் கொண்டவன், அப்ப வீடுன்னா ஓகேவா…. பானு செல்லம்’’ என அவளது காதில் கிசுகிசுத்து, அவளை இன்னும் வெட்கப்பட வைத்தான்.

‘’நான் செலக்ட் பண்ணவா……..?’’

‘’உங்களுக்கு சேரியெல்லாம் எடுக்க தெரியுமா……?’’ என்றாள் ஆச்சர்யமாக கண்களை விரித்து.

அப்பப்ப அம்மாக்கு வாங்கி குடுப்பேன்.  இந்த கலர் ”உனக்கு பிடிச்சிருக்கா பாரு…..” என வெளிர் மஞ்சளில்… பூளூ பார்டர் போட்டிருந்த புடவையை எடுத்துக் காட்டினான்.

இதிலேயே டார்க் கிரீன் பார்டர் போட்ட சேரி கூட இருக்கு ஸார் என கடைக்காரர், அதே வெளிர் மஞ்சள் புடவையில் அடர்பச்சை பார்டர் போட்ட புடவையையும் எடுத்துக் காட்டினார்.

”எனக்கு இரண்டுமே பிடிச்சிருக்கு…. நீங்களே செலக்ட் பண்ணுங்க…….”

ப்ளூ பார்டர் போட்டது நல்லாயிருக்கு.  இதையே எடுத்துக்கோ… என்றவன்.  இந்த சாஃப்ட் சில்க்னு சொல்றாங்களே, அது எல்லாம் எங்க இருக்கும் என கேட்டு அங்கே சென்று பானுவுக்கும் சரசுக்கும் இன்னும் சில புடவைகளை தேர்வு செய்தான்.

சங்கர், ‘’என்னடி? என்னை ஏதோ மியூஸியத்துல இருக்கற மாதிரி அதிசயமா பார்த்துட்டிருகஎகே….’’

ம்ப்ச், ‘’அப்படிலாம் இல்ல.  எங்க வீட்டுல அப்பா அண்ணன்னு யாரும் கடைக்கு வந்து, புடவைலாம் எடுத்து நான் பார்த்தது இல்ல.  இன்னைக்குகூட அம்மா கூட்டதாலதான் அண்ணன் வந்தாங்க…  அதான் ஆச்சர்யமாயிருந்தது’’.

‘’யாரு உங்கண்ணனுக்கு புடவை எடுத்து பழக்கம் இல்ல?  இதை நான் நம்பனும்’’.

‘’நிஜமாதாங்க சொல்றேன்.  அம்மாதான் சேரிலாம் எடுப்பாங்க.  அண்ணனுக்கும்…, அப்பாக்கும்….. ஒன்னும் தெரியாது’’.

‘’ஹ்ம்ம்…….. நம்பிட்டேன்.  அங்க கொஞ்சம் திரும்பி பாரு உங்கண்ணன் என்ன பண்றான்னு…………?’’

பானு திரும்பி பார்த்தாள்.  ‘’மதுசூதனன் சேரியை எடுத்து பூர்ணியின் மேல் வைப்பதும்…… போனில் போட்டோ எடுத்து பார்த்து…. பூர்ணிக்கு அந்த போட்டோவைக் காட்டி டிஸ்கஸ் செய்தவதும், திரும்ப வேறு எடுப்பதுமாக இருந்தான்’’.

‘’ஆங்…….. என வாய் பிளந்து பார்த்தாள் பானு மதுசூதனனை’’.  ஜமுனா, செல்வி, மாதவி, சரசு எல்லோரும் அவர்களுக்கான புடவையை எடுக்கும் மும்முரத்தில் இருந்தனர்.

‘’தெரியுதா……?  உங்கண்ணன் என்ன பண்றான்னு……….?  இப்ப என்ன சொல்ற…….?’’

பானு திரும்பி சங்கரை முறைத்தாள்.  ‘’அவங்க புதுசா கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க………. அதான்……..’’ என்றாள் விட்டுகொடுக்காமல்.  அவளுக்கே மதுவைப் பார்த்து ஆச்சரியம்.  ‘’எங்கே?’’ ஆமாம், என்றால் சங்கர் அதற்கும்…, ‘கேலி பேசுவானோ’ என பேச்சை மாற்றியிருந்தாள்.

‘’நல்லா சமாளிக்கறடி……….. , உங்க நொண்ணன், நேத்துலருந்து பண்ற அளப்பரைய பார்த்து வெந்துபோயிருக்கேன் நான்.  இவன் பண்ற அக்கப்போரை பார்த்தா…, நான்லாம் அவன்கிட்ட தனியா டியூஷன் படிக்கனும் போல………’’

ஆனாலும் உங்கண்ணன… ‘’சும்மா சொல்லக்கூடாதுடி….. அவனை.  அவன் எல்லாம் வேறலெவல்டி…….?’’

ஹ்ம்ம்………….  ‘’பல்லு இருக்கறவன் பட்டாணி கடிக்கிறான்.  புண்ணியவான்.  என்னால என்ன பண்ண முடியும்?  வேடிக்கைதான் பார்க்க முடியும்……….’’ என அவளைப் பார்த்து, பெருமூச்சை இழுத்து விட்டான்.

அவளுக்கே சிரிப்பு வந்துவிட்டது சங்கர் சொல்லிய விதத்தில்.  அவனுக்கு  முகத்தை காண்பிக்காமல் புடவை பார்ப்பது போல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டு சிரித்தாள்.

ஜமுனா மதுசூதனனுக்கு எடுத்தது போலவே, சங்கருக்கும் பட்டு வேட்டி சட்டை எடுத்திருந்தார்.  சரசுக்கும் ராகவனுக்கும் சம்மந்தி முறை என்பதற்காக அவர்களுக்கும் சேர்த்து எடுத்திருந்தார்.  எல்லோருக்கும் துணிமணி எடுத்து கிளம்பியிருந்தனர்.

பூர்ணிமா மதுசுதனனுக்குப் பிடித்த மாதிரி செந்தாமரை பூ நிறத்தில் உடல் முழுதும் ஜரிகை போட்டிருந்த புடவையை மூகூர்த்தத்திற்காக எடுத்திருந்தாள்.

மேலும் இரண்டு நாட்கள் முட்லூரில் இருந்துவிட்டு சங்கரும் பானுவும் சென்னைக்கு கிளம்பியிருந்தனர்.

செந்திலுக்கு பூர்ணிமாவின் திருமண ஏற்பாடுகளை பார்த்து நெஞ்சில் ஆத்திரம் வந்தது.  தான் அவ்வளவு பேசியும் பூர்ணிமா தன்னை மதிக்காமல் ஏமாற்றிவிட்டதாக மனதில் கொந்தளித்துக் கொண்டிருந்தான்.  எப்படியாவது அவளது திருமணத்தை நிறுத்திவிட எண்ணி மதுசூதனனுக்கு போன் செய்து, அவனையும் பூர்ணிமாவையும் இணைத்து திரித்து பேசினான்.

ஏற்கனவே தாங்கள் காதலித்ததாகவும், வீட்டில் எதிர்த்ததால் பூர்ணிமா வேறு வழியில்லாமல், மதுசூதனனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாகவும், பூர்ணிமாவின் மனதில் இன்றும் அவன்தான் இருப்பதாகவும், வாய்க்கு வந்ததெல்லாம் அளந்து விட்டிருந்தான்.

நீங்க இதை பூர்ணிமாகிட்ட கேட்டீங்கனா பயத்தில இல்லைனு தான் சொல்லுவாள்.  பூர்ணிமாவும் நானும் ஒன்னு சேரனும்னா நீங்க எங்க வாழ்க்கையிலிருந்து விலகனும், என உருக்கமாக பேசியிருந்தான்.

அவன் பேசியதில் மதுசூதனனுக்கே உண்மையாக இருக்குமோ என எண்ணும்படி இருந்தது….., அவனது நைச்சியமான பேச்சை கேட்டு.

பூர்ணிமா அவனிடம் முன்னமே கூறாமல் இருந்திருந்தால் மதுசூதனன் ஒருவேளை நம்பியிருக்கலாம்.

மதுசூதனன் செந்திலை பெரியதாக கண்டு கொள்ளவில்லை.  திருமண வேலைகளில் செந்திலை கருத்தில் எடுக்காமல் விட்டிருந்தான்.

செந்தில் பேசியதற்கும் அவனுக்கு தன்மையாகவே மறுமொழி கூறியிருந்தான்.  தனக்கு இதுபற்றி தெரியும் என்றும், பூர்ணிமா ஏற்கனவே அவனைப்பற்றி தன்னிடம் கூறிவிட்டாள் என்றும், எனவே இனி நீ பூர்ணிமாவை  நினைக்கவோ, பேசவோ கூடாது.

”உன்னால் பூர்ணிமாவுக்கு எந்த தொந்தரவும் வரக் கூடாது” என வாய் வார்த்தைகளால் எச்சரித்து அத்துடன் விட்டிருந்தான்.

பூர்ணிமாவிடமும் இதுபற்றி கூறி அவளையும் எச்சரிக்கை செய்திருந்தான்.

அதன்பிறகு செந்திலிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லாததால் அவனை மறந்தே இருந்தான்.  இது அவர்களது நிச்சயத்திற்கு முன்பே நடந்திருந்தது.

செந்திலுக்கு தான் போன் பண்ணதும், மது பூர்ணிமாவை சந்தேகப்பட்டு நிச்சயத்தை நிறுத்திவிடுவான் என எண்ணியிருந்தது ஏமாற்றமானது.  அவனுடைய  அக்கா தேவகி, தந்தை என எல்லோரும் அவனை கண்டிருத்திருந்ததால், அவனால்  நேரடியாக எதிர்த்து எதுவும் செய்ய முடியாத சூழலில் இருந்தான்.

ஏதாவது செய்து அவளது திருமணத்தை நிறுத்தியே ஆக வேண்டும் என்ற முடிவில் கங்கனம் கட்டிக் கொண்டிருந்தான்.

மாதவியும் குமாரும் திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக சென்னைக்கு சென்றிருந்தனர்.  அதைத் தெரிந்துகொண்ட செந்தில் பூர்ணிமாவைத் தேடி முட்லூருக்கு வந்திருந்தான்.

வேலையிலிருந்து வந்தவள் குளித்துவிட்டு, டீ வைத்து சாப்பிட்டு விட்டு டீவி பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.  சரியாக அந்த நேரம் மதுசூதனன் போன் செய்திருந்தான்.  அவனுடன் பேசிக் கொண்டு இருந்தவளுக்கு காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.  யாராக இருக்கும் என யோசனையாக கதவைத் திறந்தவள் செந்தில் அங்கே நின்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.

அவனைப் பார்த்த உடனே கதவைத் திரும்ப மூடச் சென்றவளை பிடித்து தள்ளிவிட்டு உள்ளே வந்திருந்தான்.

”ஏய்…….. இங்க ஏன் வந்தே……….?  முதல்ல வெளிய போ……. என கத்தினாள் பதட்டத்தில்”.

மதுசூதனனுக்கும் இவள் கத்தியது எல்லாம் கேட்டது.  செந்தில் தள்ளியதில் கையில் இருந்த போன் வேறு கீழே விழுந்திருந்தது.   கீழே விழுந்த அதிர்ச்சியில் அப்படியே சில நொடிகள் பேச்சற்றிருந்தாள்.

மது பூர்ணியிடம் ”யார் பூர்ணி………?  ஏதாவது பிரச்சினையா……….?” என கேட்டதும் தான் பூர்ணி போன் கீழே விழுந்திருந்ததை கவனித்து, எக்கி அதனை எடுக்கப் போனாள்.

செந்திலும் அதனை கவனித்திருந்ததால், பூர்ணி எடுக்கும் முன் போனை கைப்பற்றியிருந்தான்.  போனை எடுத்தவன் அதனை சுவிட்ச் ஆஃப் செய்து, அவனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு சிரித்தான் வில்லத்தனமாக.

அவன் வந்ததிலிருந்து ‘பயத்தில் நெஞ்சு தட தடக்க ஆரம்பித்து, உடல் வேர்வையில் நனைந்திருந்தது.  என்ன பண்ணுவானோ என அச்சத்தில் மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது.  பயத்தில் தொண்டையெல்லாம் வறண்டு, பேச்சு கூட வராமல், நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு நின்றது’ அவளுக்கு.

”என்ன அப்படியே பார்த்துட்டு நின்னுட்டிருக்க…………?  எத்தனை முறை உன்கிட்ட நம்ம கல்யாணத்தை பத்தி பேசினேன்.  எவ்வளவு சொல்லியும், நான் பேசியும் கொஞ்சமும் மதிக்கலையில்ல.”

”அவ்வளவு ஈசியா வேற ஒருத்தனோட, உன்னை கல்யாணம் பண்ண விட்டிருவேனா……….?”

”இன்னைக்கு நான் ஒரு முடிவோடதான்டி வந்திருக்கேன். ஒன்னு இங்கயே உன் கழுத்தில தாலி கட்டி உன்னை என் பொண்டாட்டியாக்கிகனும்.   இல்ல…..,  எனக்கில்லாத நீ யாருக்கும் கிடைக்க கூடாது……” என்றான் ஆங்காரமாக.

இவனது பேச பேச பயத்தில் வெதும்பி, எழுந்து அறைக்குள் செல்ல முயன்றவளை, இழுத்து பிடித்து நிறுத்தினான்.

”ச்சீ……., என்ன பண்ற……………….? விடு…., விருப்பமில்லாத பெண்ணை கட்டாயபடுத்தற.   நீயெல்லாம் ஒரு ஆம்பளையா……?”

”ஹா…. ஹா….. நான் ஆம்பிளையா… இல்லையான்னு சந்தேகமா…..?  நான்ஆம்பிளைதான்னு, உனக்கு புரூவ் பண்ணனுமா…..?  நல்லாயிருக்கே….., இது”.

”நீ ஒத்துழைச்சா அதையும் புரூவ் பண்றேன்….” என்றான் சிரித்துகொண்டே.

அவனது வார்த்தையில் மேலும் வெளிறியவள், அவனிடம் இருந்து விடுபட்டு உள்ளே செல்ல திமிறினாள்.

‘’நான் இங்க பேசிட்டு இருக்கேன் இல்ல.., எங்க ஓடி ஒளிய பார்க்கறே……..?’’

‘’உனக்கு என்னடா……………….. வேணும்? ஏன்? என்னை டார்ச்சர் பண்ற………..? விடு…’’ என அவளைப் பிடித்திருந்த கைகளை பிரித்துவிட முயன்றுகொண்டிருந்தாள்.

‘’விடறதா……, ஈசியா சொல்லிட்டே.  என்னை பார்த்தா கேனையன் மாதிரியா இருக்கு…………?  எப்ப தனியா சிக்குவன்னு காத்திருந்து பிடிச்சுருக்கேன். உன்ன…… அவ்வளவு ஈசியா விட்டுடுவேனா………?’’

என்ன செய்வது என புரியாமல் திகைத்து முழித்து கொண்டிருந்தவளின் கண்களில், டீபாய் மேல் இருந்த பொருள், கண்களில் பட்டது.

யோசிக்காமல் சட்டென அங்கிருந்த டீவி ரிமோட்டை எடுத்து, அவன் மண்டையை குறிபார்த்து அடித்தாள்.  அவன் அதை எதிர்பாராததால், சட்டென்று சுதாரித்து திரும்புவதற்குள், டீவி ரிமோட்…. வேகமாக வந்து, அவனது ஒரு கண்ணை குறி பார்த்திருந்தது.

கண்ணில் ஏற்பட்ட வலியால் அவளது கையை விட்டுவிட்டு தனது கண்ணை இருகைகளாலும் பொத்திக் கொண்டு குனிந்தான் வலியில்.   அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு வெளிவாசல் கதவைத் திறந்திருந்தாள்.

அவனும் அதற்குள் எக்கி அவளது தலைமுடியை பிடித்து இழுத்தான் வெளியே செல்ல விடாமல்.

அவன் அவளது முடியை வேகமாக பிடித்து இழுத்ததில் வலி அதிகமாகி ‘’ஆஹ்…………………….’’ என வலியில் துடித்தாள் பூர்ணி.

சரியாக அந்த நேர்த்தில் மதுசூதனன் உள்ளே வந்திருந்தான்.  வீட்டிலிருந்து பூர்ணிக்கு போன் செய்து பார்த்தவன், அவளது போன் ஸ்விட்ச் ஆப் என வரவும் வேகமாக கிளம்பி வந்திருந்தான்.

போனில் இவள் கத்தியதிலிருந்து, செந்தில் தான் வந்திருப்பானோ…. என ஒரு ஊகம் அவனுக்கு  மனதில்.  போனில் யார் என்று கேட்டும்…., அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.  அதுமட்டுமில்லாமல், அடுத்த நிமிடமே போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது, மதுவுக்கு பயத்தை கொடுத்து.

பூர்ணியை பதில் சொல்ல விடாமல் செந்தில் போனை எடுத்து கட் செய்திருந்தான்.  அடுத்து மது பூர்ணிக்கு போன் ட்ரை செய்ததற்கும் போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்ததும், யோசிக்காமல் கிளம்பியிருந்தான் பூர்ணிமாவின் வீட்டிற்கு.

அவன் வருவதற்கு எடுத்த பத்து நிமிடத்தில் இங்கு பிரளயமே நடந்திருந்தது.  மதுவும் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டேதான் வந்தான்.

அவன் வரவும் செந்தில் பூர்ணியின் முடியை பிடித்து உள்ளே இழுக்கவும் சரியாக இருந்தது.  வீட்டின் உள்ளே புகுந்தவன் தனது காலை தூக்கி செந்திலின் வயிற்றில் ஓங்கி உதைத்தான் வந்த ஆத்திரத்திற்கு.

மதுவை எதிர்பாராத செந்தில், அவனது தாக்குதலில், வயிற்றைப் பிடித்து கொண்டு சுருண்டு விழுந்திருந்தான் கீழே.

”பொம்பளை நாயே… தனியா இருக்கற பொண்ணுகிட்ட வந்து வம்பு பண்ணுவியா….?  உன்னை கொல்லனும்டா…   நீ போன் பண்ணும் போதே உன்னை மிதிச்சிருக்கனும்டா.

சரி… வாயால சொன்னா கேட்டுப்பேன்னு நினைச்சா…….., உன் வேலைய என்கிட்டயே காட்டுறயா…….

என்னையெல்லாம் என்னன்னு நினைச்சே…..?  சும்மா உன்ன மாதிரி வாயால பூச்சாண்டி காட்டிட்டிருப்பேன்னு பார்த்தியா…….?

எங்களுக்கு முதல்ல கைதான் பேசும்டி.  அப்புறம்தான் வாய்பேச்சு எல்லாம்.  உன்னை மாதிரி வெள்ளை சொக்கா போட்டு ஏசி காத்துல உங்காந்து, சொகுசா நாங்க வேலைபார்க்கறவங்க இல்லடா………

அடுப்பலயும் அனல்லயும் வேர்வை வழிய வெந்து நின்னு வேலைப் பார்க்கறவன் நான்.  சரி டீசன்டா சொல்லுவோம்னு, போன்ல தன்மையா பேசினா………., என்னை என்ன சொங்கின்னு நினைச்சியா………?  என ஒவ்வொரு அடியும் சொல்லி சொல்லி அவனை வெளுத்து வாங்கியிருந்தான்.

நிஜமாகவே அவனது அடி ஒவ்வொன்றும் இரும்பு போல தான் கனத்தது சொந்திலுக்கு.  கரடு முரடாக கரமெல்லாம் இரும்பு போல காச்சிருந்த, மதுவின் கைகளால் அவன் அடித்த அடிகளுக்கு தாங்க முடியாமல் சுருண்டிருந்தான் செந்தில்.

செந்தில் இதனை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.  அவனுக்கு இந்த அடிதடியெல்லாம் கொஞ்சமும் பழக்கமில்லை.  நாகரிக போர்வையில் சொகுசாக வளர்ந்திருந்தவனை முரட்டுசிங்கம் போல் பின்னி எடுத்திருந்தான் மதுசூதனன்.

செந்திலால் எழக் கூட முடியாத அளவு அடி வாங்கி… கீழே சுவற்றின் மூலையில் சுருண்டு கிடந்தான்.

ஏதோ சினிமாவில் நடப்பது போல இருந்தது ஓவ்வொன்றும்.

இதையெல்லாம் பார்த்த பூர்ணிமாவுக்கு பயத்தில் நெஞ்சு எகிறி குதித்து வெளியே வந்துவிடும் போல திகிலாக இருந்தது.  மதுசூதனின் ரௌத்திரத்தை பார்த்து திக்பிரமையில் பேயறைந்ததுபோல பேச்சு மூச்சற்று அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

இதுவரை மது அவளிடம் காட்டியிருந்த சாந்த முகத்தை மட்டுமே பார்த்திருந்தவளுக்கு, இவனது இந்த புதிய அவதாரத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.

‘’வாலு போய் கத்தி வந்தது!                                                                     டும்… டும்… டும்… டும்……….’’   என்பது போல, ”பூர்ணிமாவுக்கு, இப்போது செந்திலின் மீதிருந்த பயம் போய் மதுசூதனின் மீது பயம் வந்திருக்குமோ….?”

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!