Skip to content
Post Views: 770
நம்பி க்ரூப்ஸ் பல தொழில்களை உள்ளடக்கிய நிறுவனம். திருமணம் என்றால் நம்பி க்ரூஸ் சென்றால் போதும் மணமகளும் மணமகனும் தயாராக இருந்தால் திருமணத்தை நிம்மதியாகவும் பொறுமையாகவும் செய்து முடித்துவிடலாம்.
ஆம் பட்டு எடுக்க நம்பி ஜவுளி மாளிகை,
பண்டப் பாத்திரங்கள் வாங்க நம்பி பாத்திரக் கடை,
நகை மற்றும் தாலி எடுக்க நம்பி நகை மாளிகை,
சீர்வரிசைகளான மெத்தை, கட்டில், அலமாரி, நீண்ட சாய்விருக்கை வாங்க நம்பி ஃபர்னிச்சர்,
குளிர்சாதனப் பெட்டி, மின்விசிறி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் வாங்க நம்பி ஹோம் அப்லையன்சஸ்.
இது மட்டுமல்லாது, திருமணம் நடைபெறுவதற்கு நம்பி கல்யாண மண்டபம்.
Advertisement
இத்தனை தொழில்களின் மூன்றாவது தலைமுறையின் மூத்த வாரிசு தான் ரேவந்த். ஆறு அடிக்குச் சற்று குறைவான உயரத்தில், கருப்பும் அல்லாது வெள்ளையும் அல்லாது மாநிறத்தில் பார்த்ததும் யாரையும் ஈர்க்கும் வண்ணம் கட்டுமஸ்தான உடலுடன் இருப்பான்.
ரேவந்த், தவமணியிடம் பேசிவிட்டு அவன் சென்ற இடம் அவர்களது பாத்திரக் கடை தான். அப்போது தான் கடை திறந்து பணியாளர்கள் கூட்டிக் கொண்டிருந்தார்கள். இவனை அந்த நேரம் எதிர்பார்க்காதவர்கள் செய்யும் வேலையை விட்டு அவனையே பார்க்க, அவனோ அவர்களை எல்லாம் கவனிக்காமல் நேராக அவனது அறைக்குச் சென்றான். சில காலங்களுக்கு முன்பு வரை அது அவனது தந்தையின் அறையாக இருந்தது. மாரடைப்பு வந்து உடல்நலக் கோளாறு ஏற்படவும் அனைத்துப் பொறுப்புகளையும் ரேவந்திடம் தந்துவிட்டு ஒதுங்கிவிட்டார் ரேவந்தின் தந்தை எத்திராஜ்.
Advertisement
Advertisement
இப்போது அவனது நினைவில் இருப்பது அனைத்தும் நிவாஷினியை எப்படித் தன் பக்கம் கொண்டு வருவதில் தான் அதிகமாக இருந்தது. அவளிடம் பேசலாம் என்றால் இத்தனை நாள் தவமணியைத் தாண்டி எதுவும் செய்ய இயலவில்லை. ஆனால் இதற்கு மேல் அமைதியாக இருந்தால் எதுவும் நடக்கலாம். அதனால் சீக்கிரம் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று தீர்மானித்தான்.
##########
Advertisement
நிவாஷினி கடை ஆரம்பித்து ஒரு வாரமாகி இருந்தது. இதுவரை ஒரு நாள் கூட விஷாகன் அவளை நேரில் சென்று சந்திக்கவில்லை. ஆனால் அவனது சிந்தை முழுவதும் நிவாஷினியே நிறைந்திருந்தாள். ஈர்ப்பு என்று எண்ணி அவளைச் சந்திக்காமல் இருந்தால் அவளை மறந்து விடலாம் என்று நினைத்துத் தான் அவளைப் பார்க்காமல் இருந்தான். ஆனால் இப்போது ஒரு வாரம் அவளைப் பார்க்காமல் இருந்தும் அவளே தன் சிந்தையில். அப்படியென்றால் இது சாதாரண ஈர்ப்பு கிடையாது. இது காதல் தான் என்று உறுதியாக, அடுத்து அவளை என்னக் காரணமாகச் சென்று சந்திப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
அப்பொழுது தான் விஷாகன், நிவாஷினியின் கடையில் வாங்கியக் கைச்செயினை அவன் அணியாமல் இருப்பது ஞாபகம் வந்தது. வேகமாக அவனது அறையிலிருக்கும் அலமாரியில் வைத்தக் கைசெயினை எடுத்து அணிந்து பார்க்க, அவனால் ஒற்றைக் கையால் அதை அணிய முடியவில்லை. உடனே கீழே வந்தவன், கோகிலா தொலைக்காட்சியில் தொடர் பார்த்துக் கொண்டிருப்பது உணர்ந்து அவரின் பக்கத்தில் சென்று அமர்ந்தான்.
அவன் அமர்ந்ததும் அவனை விநோதமாகப் பார்த்தவர்,”அதிசயமா என்ன இங்கே வந்து உட்கார்ந்திருக்க? அதுவும் நான் சீரியல் பார்த்துட்டு இருக்கும் போது?” என்று கேட்டார்.
“அது ஒன்னுமில்ல அம்மா இந்த ப்ரேஸ்லெட்டை கொஞ்சம் மாட்டி விடுங்க.” என்று கூறி கைச்செயினை அவர் கையில் தந்தான்.
“என்ன விஷா இது? ஏதோ கடை திறப்பு விழா எதுவும் வாங்கலைனா நல்லா இருக்காதுனு தான் வாங்கினேன்னு சொன்ன. இப்போ என்ன டா னா போட்டுவிடுனு சொல்ற? அப்படி உனக்கு ப்ரேஸ்லெட் போடனும்னா உனக்காகச் செஞ்ச தங்கக் காப்பு இருக்கு. அதைப் போட்டுக்கோ. நான் வேணா எடுத்துட்டு வரவா?” என்று கேட்டார்.
“அம்மா நோ!! அதெல்லாம் எனக்கு வேண்டாம். இதைப் போட்டு விட முடியுமா முடியாதா அதை மட்டும் சொல்லுங்க.” என்று அவன் சற்று அழுத்தமாகக் கேட்கவும், அவனைச் சந்தேகத்தோடுப் பார்த்தார் கோகிலா.
“என்ன விஷயம் விஷாகன்?” என்று பொறுமையாக அவர் கேட்கவும் அவனிற்கு உண்மையைக் கூற முடியவில்லை.
கோகிலா பணம், காசு வசதி என்று பார்ப்பவர் இல்லை என்றாலும், தங்களிடம் வேலைச் செய்யும் ஒருவரின் பொண்ணை பிடித்திருக்கிறது என்று கூறினால் அவர் அதை எப்படி எடுத்துக் கொள்வார் என்று உறுதியாகக் கூற முடியாது. அதனால் உண்மையைக் கூறாமல்,”அம்மா எனக்கு இதைப் போட்டுக்கனும்னு தோனுச்சு போட்டுக்கிறேன். அவ்ளோதான் அதனால் வேற கேள்வி கேட்காமல் என் செல்ல மம்மியா இதைப் போட்டு விடுவியாம்.” என்று செல்லம் கொஞ்சவும்,
“கத்திரிக்கா முத்தினா கடைத் தெருவுக்கு வந்துத் தான ஆகனும். அப்போ பார்த்துக்கிறேன்.” என்று கூறிக் கொண்டே கைசெயினை அவனது கையில் போட்டு விட்டார் கோகிலா.
உடனே அவனது அம்மாவின் கண்ணத்தில் முத்தம் ஒன்றை வைத்தவன் உல்லாசமாக,”அம்மா நான் வெளில போயிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு அவரது பதிலை எதிர்பாராமல் விசிலடித்துக் கொண்டே அங்கிருந்து சென்றான்.
மகனின் முகத்திலிருந்த சந்தோஷம் அம்மாவின் முகத்திலும் ஒட்டிக்கொள்ள, இதே சந்தோஷத்துடன் அவன் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டுமென்று கடவுளிற்கு அப்பொழுதே விண்ணப்பம் ஒன்றை அனுப்பி வைத்தார் கோகிலா.
வீட்டிலிருந்து கிளம்பிய விஷாகன் நேராகச் சென்றது ஒரு உணவகத்திற்குத் தான். அது அவனது நண்பன் மைக்கேலின் உணவகம் தான்.
மைக்கேல் அப்போது தான் உணவகத்திற்கு வந்திருந்தான். விஷாகன் வருவதைப் பார்த்தவன்,”என்ன விஷாகன் கால் கூடப் பண்ணாம வந்துருக்க?” என்று கேட்டான்.
“உனக்கு இப்போ எதுவும் வேலை இருக்கா?” மைக்கேல் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்காமல் இவன் ஒரு கேள்வி கேட்டான்.
“டேய் இப்போ தான் டா நானே வந்தேன். உள்ளக் கூடப் போகலை. உன் வண்டியைப் பார்த்ததும் அப்படியே நின்னுட்டேன். உள்ளே போனால் தான் தெரியும் என்ன வேலை இருக்குனு.” என்றான் மைக்கேல்.
“அப்போ இன்னும் நீ கடைக்கு வரலைனே வைச்சுக்கோ சரியா இப்போ என்னோட நீ ஒரு இடத்துக்கு வர.”
“எங்கே?” என்று அவன் கேட்க, இவனோ எதுவும் கூறாமல் அவனது கையைப் பற்றி இழுத்துச் சென்று அவனது மகிழுந்தில் அமர வைத்தவன் ஓட்டுநர் இருக்கைக்கு வந்து வண்டியை எடுத்தான்.
“டேய் எங்கே போறோம்? டிரிப் எதுவும் ப்ளான் பண்ணிருக்கியா? ஆனால் பசங்க யாருமில்லை? ஒருவேளை வழில பிக்கப் பண்ணப் போறோமோ?” என்று கேட்டான்.
எப்போதும் இப்படித் தான். எங்காவது வெளி ஊர் செல்ல வேண்டுமென்றால் முன்னரே முடிவு செய்யமாட்டார்கள் இப்படி இழுத்துக் கொண்டு தான் செல்வார்கள். போகும் போது தான் எங்கே செல்வது என்று முடிவு செய்வார்கள். துணிகளைக் கூட அங்குச் சென்று எடுத்துக் கொள்ளலாம் என்ற மெத்தனம். இப்போதும் அப்படி தானோ என்று மைக்கேல் கேட்க, விஷாகன் எதுவும் கூறாமல் நிவாஷினி கடை வரவும் வண்டியை நிறுத்தினான்.
வண்டி நின்றதும் ஒன்றும் புரியாமல் மைக்கேல், விஷாகனைப் பார்க்க, அவனோ அவனது கையைக் காண்பித்தான். உடனே ஆச்சரியப்பட்ட மைக்கேல்,”என்ன மச்சான் புதுசா ப்ரேஸ்லெட் எல்லாம் போட்டிருக்க?” என்று கேட்டான்.
“நல்லா இருக்கா இல்லையா?”
“ம் நல்லா இருக்கு டா.”
“அப்போ வா உனக்கும் ஒன்னு எடுப்போம்.” என்று கூறிக் கொண்டே வண்டியிலிருந்து அவன் இறங்க, மைக்கேலிற்கு ஒன்றுமே புரியவில்லை. வேகமாக அவனும் இறங்கியவன் விஷாகனின் கையைப் பற்றி,”டேய் என்ன டா பண்ற? சும்மா இருந்தவனை இப்படி இழுத்துட்டு வந்து கையைக் காட்டி ப்ரேஸ்லெட் எப்படி இருக்குனு கேட்ட! நல்லா இருக்குனு சொன்னதும் உனக்கும் ஒன்னு எடுக்கலாம்னு சொல்ற. என்ன டா நடக்குது இங்கே?” என்று கேட்டான்.
“ப்ச் மைக் இப்போ விளக்கம் சொல்ல எனக்கு நேரமில்லை. உள்ளே வந்து உனக்குப் பிடிச்ச மாடல்ல நல்ல ப்ரேஸ்லெட் ஒன்னு எடு சரியா. அப்புறம் வேற ஏதாவது பிடிச்சிருந்தாலும் எடுத்துக்கோ. செலவு என்னுடையது.” என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு நினி சில்வர்ஸ் உள்ளே நுழைந்தான் விஷாகன்.
நிவாஷினி அப்போது கடையில் தான் இருந்தாள். கண்களில் கண்ணாடியை அணிந்திருந்ததால் முதலில் அடையாளம் தெரியவில்லை. கண்ணாடியைக் கழட்டிக் கொண்டே அவன் அவளிடம் வர, அப்போது தான் ஞாபகம் வந்தது அவளிற்கு.
“வாங்க வாங்க.” என்று சிரித்த முகமாக வரவேற்றாள்.
நிவாஷினியைப் பார்த்ததும் விஷாகன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப்பை போல முகம் பிரகாசமாக இருக்க, அவனையே கவனித்துக் கொண்டிருந்த மைக்கிற்கு விஷயம் பிடிபட்டு விட்டது. காதல் என்று ஏதாவது பெண் அவனிடம் வந்தால் பல மைல் தூரம் ஓடி விடுவான். அப்படிப்பட்டவன் இன்று ஒரு பெண்ணைப் பார்த்து அவனது முகம் பிரகாசிக்கவும் சரி நண்பன் வாழ்க்கையில் செட்டிலாக போகிறான் என்று மகிழ்ந்தான் மைக்கேல்.
“இவன் என்னோட ப்ரண்ட் மைக்கேல். நான் போட்டிருக்கிற ப்ரேஸ்லேட் பார்த்து ரொம்ப பிடிச்சு போயிடுச்சாம். அவனுக்கும் இதே மாதிரி ப்ரேஸ்லேட் வேண்டும்னு கேட்டானா அதான் உடனே அவனை இங்கே கூட்டிட்டு வந்துட்டேன்.” என்று சரளமாக அவன் பொய் கூறினான்.
‘அடப்பாவி நான் பேசாமல் என்னோட வேலையைப் பார்க்கப் போனவனை தரதரனு இழுத்துட்டு வந்துட்டு இங்கே இப்படிப் புழுகுறான். காதல்னு வந்துட்டா இந்தப் பசங்க வாய்ல பொய் சரளமா வருது பா’ என்று நக்கலாக மனதில் நினைத்துக் கொண்டவன் மறந்தும் அதை முகத்தில் காட்டவில்லை.
“ஓ ரொம்ப சந்தோஷம். இங்கே எல்லாமே நானே டிசைன் பண்ணது.” என்று கூறி கைசெயினை எடுத்துக் காட்டினாள்.
முதலில் நண்பனுக்காக என்று வந்தவன் ஏனோ தானோ என்று தான் பார்த்தான். ஆனால் பார்க்கப் பார்க்க அவனிற்கு அதன் வடிவமைப்புப் பிடித்துப் போக ஒன்றிற்கு இரண்டாக எடுத்தான்.
“ரொம்ப நல்லா இருக்கு. அப்புறம் கழுத்தில் போட ப்ளஸ் போட்டு செயின் இருக்கா?” என்று கேட்டான்.
“ஃபுல்லா ப்ளஸ் போட்டு இல்லை. ஆனால் டாலர்ல ப்ளஸ் போட்டு இருக்கு.” என்று கூறி அவளிடம் இருக்கும் செயின்களை எடுத்துக் காட்டினாள். அதுவும் தனித்துவமாக நன்றாகவே இருக்க அதில் மூன்று எடுத்துக் கொண்டான் மைக்கேல். இதைச் சுத்தமாக விஷாகனே எதிர்பார்க்கவில்லை.
அனைத்தையும் பில் போட்டு ஆண்கள் உபயோகிக்கும் வேலட் ஒன்றையும் சேர்த்துக் கொடுத்தாள் நிவாஷினி. அதை மைக்கேல் வாங்குவதற்கு முன்பு முந்திக் கொண்டு நிவாஷினி கையிலிருந்து அதை வாங்கினான் விஷாகன்.
நிவாஷினி அதைப் பார்த்துச் சிரித்து,”டோண்ட் வொர்ரி உங்களுடைய நகையை நான் வைச்சுக்க மாட்டேன்.” என்று கூற, அவனோ ஐயோ இப்படியாகி விட்டதே என்று நெளிய, உடனே நண்பனைக் காப்பாற்றும் பொருட்டு,”அட என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? நீங்களே வைச்சுக்கிட்டாலும் என் மச்சான் ஒன்னும் சொல்லமாட்டான்.” என்று கூற, நிவாஷினி புரியாமல் பார்க்க விஷாகன் நண்பனை முறைத்துப் பார்த்தான்.
“அவன் சும்மா விளையாடுறான். நீங்க கண்டுக்காதீங்க.” என்றான் விஷாகன்.
அவளும் சரி நண்பர்கள் ஏதோ விளையாடுகிறார்கள் என்று சாதாரணமாக விட்டுவிட்டாள். பின்னர் அவளிடம் விடைபெற்று இருவரும் கடையை விட்டு வெளியே வர, விஷாகனைப் பிடித்துக் கொண்டான் மைக்கேல்.
“டேய் என்ன டா நடக்குது இங்கே?” என்று கேட்டான் மைக்கேல்.
“ப்ச் மைக் இங்கே எதுவும் பேச வேண்டாம். நாம முதல்ல இங்கிருந்து போவோம். அப்புறம் எல்லாம் சொல்றேன்.” என்று கூறி அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
சிறிது தூரம் சென்றவுடன் வண்டியை நிப்பாட்டியவன், மைக்கேல்லை பார்த்தபடி திரும்பி அமர்ந்தவன்,”எனக்கு நிவாஷினியைப் பிடிச்சுருக்கு மச்சான்.” என்று ஒளிவு மறைவின்றி கூறினான்.
“மச்சான் அந்தப் பொண்ண எப்போ எங்கே பார்த்த? நேத்து வரைக்கும் எங்கே கூடத் தான டா சுத்திட்டு இருந்த, தீடிர்னு வந்து பிடிச்சுருக்குனு சொல்ற? என்ன டா நடக்குது?”
“டேய் நான் ஷினுவ பார்த்து ஒரு வாரமாகிடுச்சு. இந்த ஏழு நாளும் இது ஈர்ப்புனு தான் அமைதியா இருந்தேன். அவளுடைய நினைப்பே வரக் கூடாதுனு இருந்தேன் டா. ஆனால் அதையும் மீறி என் நினைப்புல எல்லாம் ஷினு மட்டும் தான் டா. நான் என்ன பண்ணச் சொல்லு?” என்று நண்பனைப் பாவமாகப் பார்த்துக் கேட்டான்.
“சரி அந்தப் பொண்ணை பத்தி ஏதாவது தெரியுமா உனக்கு?”
“நம்ம கார்மென்ட்ஸ்ல வேலைப் பார்க்கிற தவமணி சாரோட பொண்ணு தான் டா.”
“டேய் என்ன டா சொல்ற? இதுக்கு அப்பா ஒத்துக்குவாரா சொல்லு?”
“அதெல்லாம் அம்மாவை கரெக்ட் பண்ணிட்டா போதும் அப்பாவை அவங்க பார்த்துப்பாங்க.”
“நீ ஒரு ப்ளானோட தான் இருக்க. சரி லவ் பண்றேன்னு சொல்ற! ஆனால் ஏன் அந்தப் பொண்ணுகிட்ட எதுவும் பேசாமல் வந்த? இன்னைக்கு உனக்கு நல்ல சான்ஸ் கிடைச்சதுல? அப்புறம் ஏன் டா கோட்ட விட்ட?” என்று கேட்டான்.
“ப்ச் இல்லை டா. ஷினு பார்க்க ஷார்ப்பா தெரியுறா!! நான் ஏதாவது பேசி அவள் என் காதல்ல தெரிஞ்சு என்னை அவாய்ட் பண்ண ஆரம்பிச்சுட்டா நோ டா. நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை டா.”
“அதுவும் சரி தான். சரி அப்போ என்ன தான் பண்ணப் போற?”
“அதான் இன்னும் எனக்கு இரண்டு ப்ரண்ட்ஸ் இருக்காங்களே!! அவங்களை ஒரு நாள் கூட்டிட்டு போய் முதல்ல ப்ரண்ட் ஆவோம். அதுக்கு அப்புறம் சிட்டுவேஷன் பார்த்து இதை லவ் ஆர் அரென்ஜ்டு மேரேஜா பண்றதானு அப்புறம் பார்த்துக்கலாம்.”
“அடப்பாவி மேரேஜ் வரைக்கும் போயிட்டியா?”
“பின்ன பொழுது போகாமலா நான் ஷினு பின்னாடி சுத்துறேன்?” என்று சற்றுக் காட்டமாகக் கேட்கவும், அவனைச் சமாதானப்படுத்தினான் மைக்கேல். பின்னே இருவரும் கிளம்ப, விஷாகன் மைக்கேல்லை அவனது உணவகத்தில் இறக்கி விட்டு அவர்களது ஸ்டோர் நோக்கிச் சென்றான்.
##########
மதிய நேரம் இரண்டு மணிநேரம் மதிய உணவு நேர இடைவெளி என்று கடையை மூடி விடுவாள் நிவாஷினி. அன்றும் அதே போல் விஷாகன் மற்றும் மைக்கேல் சென்ற சிறிது நேரத்தில் எல்லாம் கடையைப் பூட்டி விட்டு அவளது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள். அதே நேரம் தவமணியும் வர, இருவரும் சேர்ந்தே உள்ளே வந்தனர்.
“அப்புறம் இன்னைக்கு வியாபாரம் எப்படிப் போச்சு நிவி?”
“ம் நல்லா போச்சு பா. ஹான் இன்னைக்கு கங்காதரன் சாரோட பையன் வந்து இருந்தார் பா. அதுவும் அவரோட ப்ரண்டோட.” என்றாள்.
“என்ன டா சொல்ற? விஷாகன் தம்பியா?” என்று சற்று ஆச்சரியமாகக் கேட்டார்.
“ம் ஆமா அப்பா. அவர் தான். அவரோட ப்ரண்டுக்கு நம்ம கடையில வாங்கின ப்ரேஸ்லெட் பிடிச்சுருக்கனு நம்ம கடைக்கு வந்து இரண்டு ப்ரேஸ்லெட் மூணு ப்ளச் போட்ட டாலர் செயினும் வாங்குனாங்க பா.” என்றாள்.
“ஓ அப்படியா சரி மா.” என்று மட்டும் கூறினார்.
“என்ன இது இரண்டு பேரும் வந்து அப்படியே உட்காந்து இருக்கீங்க? போங்க போய் ப்ரஷாகிட்டு வாங்க இரண்டு பேரும்.” என்று சற்று அதட்டலுடன் சங்கரி கூற, வேகமாக உள்ளே எழுந்து சென்றாள் நிவாஷினி.
ஆனால் தவமணியோ அப்படியே அமர்ந்திருந்தார். அதைப் பார்த்த சங்கரி அவரிடம் வந்து,”என்னங்க நான் சொன்னது காதுல விழலையா? போங்க போய் ப்ரஷாகிட்டு வாங்க.” என்றார்.
அப்போதும் அவர் அப்படியே அமர்ந்திருக்க, அவரது கையைப் பிடித்து உலுக்கினார் சங்கரி. அதில் சுயநினைவிற்கு வந்த தவமணி கேள்வியாக அவரைப் பார்க்க,”என்ன யோசனை உங்களுக்கு? நான் சொன்னது கூடக் காதுல வாங்காமல் இப்படி உட்கார்ந்திருக்கீங்க?” என்று கேட்டார்.
“ஒன்னுமில்லை சங்கரி. நம்ம கங்காதரன் ஐயா பையன் விஷாகன் நிவி கடைக்கு வந்தாராம்.”
“சரி அதுக்கு என்ன?”
“ப்ச் ஒன்னுமில்லைனா எதுவும் பிரச்சனை இல்லை. ஆனால் அவர் மனசுல வேற எண்ணம் இருந்தால்?”
“என்ன சொல்றீங்க நீங்க?”
“நம்ம நிவி கடை திறப்பு விழாவுக்கு வந்த போதே அவர் பார்வை நிவியை விட்டு விலகலை. அப்போ வேற ஒரு யோசனைல இருந்ததால அதை அப்படியே விட்டுட்டேன். இப்போ அப்படி விட்டுருக்க கூடாதோனு தோனுது.”
“என்னங்க நீங்க அந்தத் தம்பி ஏதோ டிசைன் பிடிச்சு போய் ப்ரண்டையும் கூட்டிட்டு வந்துருப்பாங்க. நீங்க தேவையில்லாததை யோசிக்காமல் போய் முகத்தைக் கழுவிட்டு வாங்க.” என்று கூறினார்.
“இல்லை சங்கரி என்னால அப்படியே சாதாரணமா விட முடியாது. வயசு பொண்ணை வைச்சுருக்கோம் நாம. நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அது நம்ம பொண்ணை தான் பாதிக்கும். அப்படி நடக்க நான் விடமாட்டேன். அதனால நான் ஒரு முடிவு பண்ணிட்டேன்.”
“என்ன முடிவு?”
“நாளைக்கு ஜோசியரைப் போய் பார்த்துட்டு வரலாம். சீக்கிரம் மாப்பிள்ளைப் பார்த்து நிவிக்குக் கல்யாணம் பண்ணி வைச்சுடலாம்.” என்றார்.
“என்னங்க அவளுக்கு இருபத்தி மூணு தான் ஆகுது. இன்னும் இரண்டு வருஷம் போகட்டுமே. நீங்க தேவையில்லாமல் பயப்படுறீங்கனு தோனுது.”
“அப்படியே இருக்கட்டும். ஆனால் என் முடிவுல மாற்றம் இல்லை.” என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட, சங்கரிக்கு அவர் தேவையில்லாமல் யோசிக்கிறாரோ என்று தான் தோன்றியது.
error: Content is protected !!