Skip to content
Post Views: 4,295
உன் காதல் ஒரு வரமாய்…..11
அந்த பார்க்கில் எப்போதும் அமரும் கல் பெஞ்ஜில் அமர்ந்து நகத்தை கடித்துக் கொண்டிருந்தாள் அமிர்தா.அவள் தேர்வு முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது.தேர்வு எழுதிவிட்டு வந்து சிவாவை பார்த்தது அதன் பின் அவனை பார்க்கமுடியவில்லை இவள் அழைத்தாலும் அழைப்பை ஏற்கவில்லை.இன்று மீண்டும் அழைக்க ஏற்றவனிடம் பார்க்க வேண்டும் என்று கூற,
“என்ன நினைச்சிக்கிட்டு இருக்க நீ….உன் இஷ்டதுக்கு கூப்பிட்டுட்டு இருக்க…”என்று அவன் கத்த,
“நீங்களா வந்துட்டீங்கனா ஓகே இல்லை நான் உங்க ஹாஸ்ட்டலுக்கு வந்துடுவேன்….”என்று கூற மறுபக்கம் பதில்லை,
Advertisement
“வச்சிட்டாரா….”என்று முணகிக் கொண்டே பேசியை பார்க்க இணைப்பில் தான் இருந்தான்.
“ஹலோ….ஹலோ….வருவீங்க தான….”என்று கேட்க மறுபக்கம் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
“ப்பா கிளம்பிட்டாரு….”என்று நிம்மதி பெருமூச்சுவிட்டவளுக்கு அவன் வந்ததுக்கு பிறகு அவனை எப்படி சமாளிப்பது என்று தான் யோசனை செய்து கொண்டிருந்தாள்.ஏதோ குருட்டு தைரியத்தில் அவனிடம் பேசிவிட்டாள் தான் ஆனால் இப்போது கை,கால் எல்லாம் நடுங்கியது.இதில் அவள் கூறப்போகும் விஷயத்தை அவன் கேட்டால் பயத்தில் நா வரண்டு போனது.
Advertisement
“இந்த பாரதிக்கா சொன்னதை நம்பி வந்தது தப்போ….”என்று யோசனை சென்றது.பாரதி தான் அமிர்தாவை வற்புறுத்தி அனுப்பி வைத்தது அவளுக்கு அமிர்தா ஏதோ தப்பு செய்வது போல் ஒரு எண்ணம் அதோடு அவளின் அக்காவின் இழப்பு வேறு அவளை ஆட்டி வைக்க யாருமற்ற சிறு பெண்ணான அமிர்தாவிற்கு இந்த காதலால் எதுவும் ஆகாக்கூடாது என்று நினைத்து தான் அவள் மனதில் இருப்பதைக் சொல்லிவிடும்படி கூறி அனுப்பி வைத்திருந்தாள்.
Advertisement
“ஏய் என்ன நினைச்சிக்கிட்டு இருக்க நீ…..”என்று வந்ததும் சிவா கோபத்தில் கத்த,அதுவரை ஏதோ நினைவில் இருந்தவள் அவனின் சத்தத்தில் திடுக்கிட்டு திரும்ப,கோபத்தில் கண்கள் சிவந்து வேர்த்து விறுவிறுத்து ஐய்யனாரை போல் நின்றவனைக் கண்டு அமிர்தா பயந்து ஒரு அடி பின் வைத்துவிட்டாள்.
“சும்மா இருந்த கடுவானை நானே உசுப்பிவிட்டேன் போல….இப்ப கடிச்சி குதறமா விட மாட்டாரே….இதுல நான் இவரை லவ் பண்ணுறேன்னு சொன்னா…..”என்று அவள் தனக்குள் பேசிக் கொண்டிருக்க,
“ஏய் அமிர்தா….”என்று அவளின் தோள்களை பிடித்து சிவா பலம் கொண்ட வரை உலுக்க,
Advertisement
“ஆஆஆ….அம்மா…..விடுங்க….வலிக்குது….தெரியாம கூப்பிட்டுட்டேன்…..”என்று வலியிலும் பயத்திலும் அழுதுவிட,
“ப்ச்….அழாத….எத்தனை தடவை உனக்கு சொல்லியிருக்கேன்….உனக்கு நீயே பேசிக்கிறதுனா எதுக்கு என்னை கூப்பிடுற….”என்று பல்லை கடித்துக் கொண்டு கூறியபடி கல் மேடையில் அவன் அமர்ந்து,
“எதுக்கு கூப்பிட்ட….”
“…..”
“ஏய் உன்னை தான்…..”என்று அவளை தட்ட,அவளோ நடுங்கி இன்னும் இரண்டடி பின்னுக்கு சென்றாள்.
“ஆ….என்ன கேட்டீங்க….”என்று திருதிருத்தவாறே கேட்க,
“சுத்தம் அதுவும் மறந்து போச்சா…..நீ தான எனக்கு போன் பண்ணது….நீங்க வரலைனா நான் வருவேன்னு தைரியமா சொன்னது….நீங்க தான மேடம்…”என்று நக்கலாக அவன் கேட்க,அமிர்தா எச்சில் விழுங்க,
“சொல்லு…..”என்று பெஞ்சை கோபத்தில் தட்ட,
“ஆஆஆஆ….ஆவ்….ம்….ம்ம்…..”என்று சிறு குழந்தை போல அவள் கண்களை கசக்கி கொண்டு அழவே தொடங்கிவிட,வேகமாக அமர்ந்திருந்த இடத்தில் இருந்து அவன் எழுந்துவிட சுவிட்சு போட்டது போல் அவளின் அழுகை நிற்க,
“ஷ்ஷ்ஷ்…..”என்று அவளின் விரலை எடுத்து அவளின் உதட்டில் வைக்க,
“சத்தம் வரக்கூடாது….வந்துச்சு….தொலைச்சிடுவேன்….”என்று விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய அனைத்தும் மறந்துவிட்டது அமிர்தாவிற்கு.
“இப்ப சொல்லு எதுக்கு என்னை கூப்பிட்ட…”என்று கேட்க,அவளோ பதில் கூறாமல் மிரண்டு விழிக்க,
“சரி நீ சொல்ல வேண்டாம் நான் கிளம்புறேன்….நீ இப்படியே நில்லு….”என்றுவிட்டு எழ,
“இருங்க இருங்க போயிடாதீங்க….”என்று வாயில் விரலை வைத்ததுக் கொண்டே கூற,
“இப்ப மட்டும் பேச்சு வருது….”
“நீங்க தான பேசக்கூடாதுனு சொன்னீங்க….”
“ஊப்ஸ்…..”
“பாருங்க நான் விரலைக் கூட எடுக்கலை….”என்று கூற,
“முடியல….நிஜமா முடியல….”என்று சோர்ந்து அமர்ந்துவிட்டான்.இவளை என்ன தான் செய்ய முடியும் கோபமும் பட முடியவில்லை சிறு பிள்ளை போல அழுது ஊரைக் கூட்டுகிறாள் ஒரு புறம் கோபம் கரைபுரன்டாலும் சின்ன பெண் அவளுக்கு என்று யாரும் இல்லை கோபப்படக்கூடாது என்று தன்னை கட்டுப்படுத்த முயன்று தோற்று தான் போகிறான்.
“இல்ல அது….”என்று அவள் ஆரம்பிக்கும் போதே,
“திரும்பியும் முதலிருந்தா….சீக்கிரம் சொல்லு அமிர்தா எனக்கு அடுத்த வாரம் பரிட்சை….நிறைய வேலையிருக்கு நானே டென்ஷனா இருக்கேன்….”என்று சோர்வுடன் கூற,அமிர்தா அப்போது தான் அவனை முழுமையாக கவனித்தாள் முகத்தில் அதீத சோர்வு உடலும் இளைத்து போய் இருந்தான்.
“என்னாச்சு….நீங்க நல்லாயிருக்கீங்க தான…” என்று பதட்டத்துடன் அவனிடம் நெருங்கி கேட்க,கண்கள் சுருக்கி அவளை பார்த்தான் சிவா.அவன் பார்வை உணர்ந்தவள் தன்னை சுதாரித்துக் கொண்டு,
“இல்ல உங்களுக்கு பரிட்சையா…..”என்று கேட்க,
“ஆமா….இப்ப உனக்கு என்ன வேணும்னு சொல்லு….”
“இல்ல எனக்கு எப்ப இந்த பரிட்சை ரிசல்ட் வரும்….”
“ப்ச்….அமிர்தா அன்னைக்கே எத்தனை தடவை சொன்னேன்….ஒரு மாசத்துக்கு மேல ஆகும்னு….உனக்கு ரிசல்ட் வரும் போது மெஸேஜ் வரும்….அப்ப அந்த வெப் சைட்ல போய் பாரு தெரிஞ்சிடும்…அதைவிடு நீ படி….இதை மட்டும் நம்பிட்டு படிக்காம விட்டுடாத….புரியுதா….அதுல பாஸாகிட்டா அடுத்து இன்டர்வியூ இருக்கும் அதுக்கு ரெடி பண்ணு….”
“ம்ம்….ஆனா எனக்கு பாஸ் ஆகிடுவேனானே தெரியலை….”என்று கூற,
“அப்ப ஒண்ணு பண்ணு போய் உன் துணி கடையிலேயே துடைச்சிக்கிட்டு இரு….”என்று கோபமாக கூற,
“ஏன் இப்படி பேசுறீங்க….”
“பின்ன நீ ஒரு முயற்சி செஞ்சிருக்க….அது வெற்றி அடைஞ்சா சந்தோஷபடு தோத்து போனா அடுத்து என்ன செஞ்சா நாம ஜெயிக்கலாம்னு யோசிக்கனும் அதை விட்டுட்டு இப்படி அழுதிட்டு இருந்தா நீ கடைசி வரை அந்த கடையில இதே வேலையில தான் இருப்ப….”என்று காட்டமாக கூறிவிட்டான்.
“இல்ல நான் அப்படி இல்லை….நான்….”
“என்ன நான் நான்…..உனக்கு இதோட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்….வெற்றியோ தோல்வியோ ஏத்துக்க பழகு….அது தான் உனக்கு நல்லது….ப்ச்….நீ டென்ஷன் ஆனது இல்லாம என்னை டென்ஷன் ஆக்குற….”
“இல்ல இல்ல நீங்க டென்ஷன் ஆகாதீங்க…..எனக்கு பயமெல்லாம் இல்லை நான் நல்லா தான் இருக்கேன்….நான் படிக்கிறேன்….நல்லா படிக்கிறேன்….”என்று சிறு குழந்தை போலவே அவள் கூற,சிவாவிற்கு சற்று பாவமாகவும் இருந்தது ஆனாலும் இவளை இப்படியே விட்டால் இப்படி தன் கூட்டுக்குள் நுழைந்து முன்னேறாமல் போய்விடுவாள் என்று தான் அவ்வபோது திட்டி வழிப்படுத்திகிறான் ஆனாலும் இவளை மாற்றுவது அத்தனை எளிதல்ல என்று புரிந்தது.ஆனாலும் அவளை தெளிவுபடுத்த நினைத்தவன்,
“இங்க பாரு அமிர்தா நான் எப்போதும் உன் கூட இருக்க மாட்டேன்….”என்ற நொடி,
“என்ன என்ன சொல்லுரீங்க…..ஏன் இருக்கமாட்டீங்க….ஏன்…..”என்று அழுது கொண்டே கேட்க,சிவாவின் கண்கள் இன்னும் கூர்மை பெற்றது சில நாட்களாக அவளிடம் ஒரு மாற்றத்தை உணர்தான் தான் அது பரிட்சைக்காக பயப்படுகிறாள் என்று நினைத்திருக்க, இன்று அவளின் முகத்தில் இருக்கும் தனக்கான பதட்டம் ஏதோ தவறாக பட,
“ஏய் எதுக்கு அழுவுற…..நான் என்ன உன் கூடவேவா இருக்க முடியும்….எனக்கு என்ன வேற வேலையில்லை….ஏதோ கஷ்டப்படுறியேனு உதவி செஞ்சா சும்மா தொட்டதுக்கெல்லாம் அழுதுகிட்டு….”என்று எரிந்து விழ அமிர்தா அதிர்ந்து நின்றுவிட்டாள்.
“என்னோட பரிட்சை ரிசல்ட் வந்துட்டா நான் எனக்கு எங்க வேலை கொடுக்குறாங்களோ அங்க போயிடுவேன்….அதனால தான் சொல்லுறேன் ஒழுங்கா படி….இந்த பரிட்சையில தோத்துட்டா அடுத்த எக்ஸாம் எப்ப வருதுனு பார்த்து அதுக்கு எழுதி போட்டு எழுது….நீ இதுல ஜெயிக்கிற வரைக்கும் எழுது….”என்றவன் இப்போது தான் அவளின் முகம் பார்த்தான்.அதுவரை அவளின் முகம் பார்க்கவில்லை எங்கே பார்த்தால் கூற வந்ததை கூறவிடாது விட்டுவிடுவோம் என்று கூறிவிட அவன் நினைத்தது போலவே அவளின் முகம் சிவந்து அழுகையில் உதடு துடித்தது.
“ச்சு அமிர்தா அழதா….ப்ளீஸ்….எனக்கு தான் கஷ்டமா இருக்கு…”என்றவன் முகம் கசங்கியது.
சிறிது நேரம் பிடித்தது அமிர்தாவிற்கு இயல்பிற்கு திரும்ப புரிந்தது என்ன தான் அவன் தன்னிடம் பேசினாலும் நான் அவனிற்கு யாரோ ஒருவள் தான் என்பதை கூறிவிட்டான் இனி என்ன இருக்கிறது என்று நினைத்தவள்,
“நா…நான் கிளம்புறேன்…நீங்க பரிட்சை நல்லா எழுதுங்க….ஆல் தி பெஸ்ட்….”என்று குனிந்த படியே கூறிவிட்டு அவள் செல்ல,
“போயிட்டு வா…”என்ற பதில் தான் வந்தது சிவாவிடம் இருந்து,அது இன்னும் அமிர்தாவை காயம் செய்தது போகும் அவளின் முதுகை பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களும் கலங்கியிருந்ததுவோ அதை அவள் கவனிக்காமல் போனது தான் அவளின் தவறோ.அவளின் நினைப்பு ஒன்று அவனின் நினைப்பு வேறொன்று.
தனது விடுதியின் மாடியில் அமர்ந்திருந்தாள் அமிர்தா முகத்தில் ஏதோ சிந்தனை அவளையே பார்த்துக் கொண்டிருந்த பாரதிக்கு தான் மனதிற்கு கஷ்டமாக இருந்தது.கடந்த ஒரு மாதமாக இப்படி தான் இருக்கிறாள் அன்று சிவாவை சந்தித்துவிட்டு வந்த போது முகம் முழுதாக சிவந்து வந்தவளைக் கண்டு பாரதி பதறி போய் கேட்க அமிர்தா ஒண்ணுமில்லை என்று கூறிவிட்டாள்.அதன் பிறகு எத்தனை முறை கேட்டும் அவளிடம் பதில் வரவில்லை பாரதியும் கேட்டு பார்த்து ஓய்ந்துவிட்டாள்.ஆனால் முன்பு போல் இல்லை ஏதோ இழந்ததை போல் தான் இருக்கிறாள்.
“ஏய் புள்ள…”என்று பாரதி அமிர்தா இருமுறை அழைத்தும் அவள் கவனம் இங்கில்லை எனவும்,அவளின் தோள்களை தொட,
“ஆங் என்னக்கா….”என்றவளைக் கண்டு பாரதிக்கு தான் மனது கலங்கியது.தான் கூறி தான் இவள் இப்படி ஆகிவிட்டாளோ அந்த சிவா இவளை வேண்டாம் என்று கூறிவிட்டானோ என்ற பயம் அதை அவளிடம் கேட்டு இன்னும் உடைந்துவிடுவாளோ என்ற பயமும் ஒருசேர அவளை பாடாய்படுத்தியது.
“என்னடி என்னவோ போல இருக்க….என்கிட்ட சொல்லமாட்டியா….”என்று பரிதவிப்பாக கேட்க,
“க்கா எனக்கு ஒண்ணிமில்ல நான் நல்லா தான் இருக்கேன்….உங்களுக்கே தெரியும் தான எனக்கு இப்பெல்லாம் வேலை அதிகம் அதோட இங்க வந்தும் படிக்க வேண்டியிருக்கு அதான் கொஞ்சம் தூங்க முடியலை….”என்று கூற,பாரிதிக்கும் இது தெரியும் தான் இருந்தும் அவள் எதையோ மறைக்கிறாள் என்று புரிந்தது அதை உடைத்தும் கேட்டுவிட்டாள் ஆனால் இந்த அழுத்தக்காரி தான் கூற மறுக்கிறாளே.
“க்கா எனக்கா என்னை சொல்லிட்டு நீ எதையோ யோசிட்டு இருக்க….”என்று அமிர்தா கேட்க,
“ம்ம் ஏன்டி சொல்லமாட்ட நீ ஏதோ போல இருக்கியேனு உன்னை கேட்டா நீ என்கிட்ட கேள்வியை திருப்புற….சரி அதை விடு….நான் உன் கிட்ட ஒண்ணு கேட்பேன் நீ எனக்கு உண்மையை சொல்லனும்….”
“என்னக்கா….”
“அது நீ இப்பெல்லாம் படிக்க போறதில்லை ஏன்….”
“க்கா அதான் சொன்னேனே அவருக்கு பரிட்சைனு….”
“சரிடி அதான் முடிஞ்சு போச்சே….”
“ம்ம் முடிஞ்சி தான் போச்சு….”என்றவளின் முகத்தில் வலியின் சாயல்,
“என்ன புள்ள….”என்று பாரதி பயந்து கேட்க,
“ம்…ஒண்ணுமில்லக்கா…அவருக்கு வேலையிருக்குனு சொல்லிட்டார் அதான் நான் போன் போடலை….”
“ம்ம் சரி…வேற எதுவும் இல்லையே….”என்று பாரதி விடாமல் கேட்க,
“இல்ல இதுவரைக்கும் இல்லை….”
“என்னடி என்ன சொல்லுற புரியலை…”
“புரிய வேண்டாம்….எனக்கும் புரிய வேண்டாம்….”என்றுவிட்டு சென்றவளைக் காண பாரதிக்கு இன்னும் பயம் தான் கூடியது.அவள் பயந்தது போல் தான் அடுத்தடுத்த நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்ந்தது.அந்த நிகழ்வுகளை தடுக்கவும் முடியாமல் அதன் தாக்கத்தால் உடைந்த அமிர்தாவை தேற்றவும் முடியாமல் திணறி போனாள் பாரதி.
error: Content is protected !!