Skip to content
Post Views: 9,212
“செஞ்ச பாவத்துக்கா இல்ல செய்யப் போற பாவத்துக்கா” என்ற குரலில் சட்டென்று விழிகள் திறந்து பார்த்தார் கனகம், கோவிலில் நின்றிருந்தார் நினைத்தபோலவே தனியாக வந்தாயிற்று இனி எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு.
“என்ன” என்றார் தடுமாற்றமாக.
Advertisement
“புதுசா என்ன திட்டம் வெச்சுருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமே அதுக்காகக் கேட்டேன்” என்றவனை பார்த்தவர் “நேத்துல இருந்து என்கிட்டே ஏதோ கோவமா நடந்துக்குற சேனா, நாங்க தனியா வந்தது பிடிக்கலைனு தெரியும் ஆனா அத்தையும் அப்படித்தானே பேசுறாங்க, நானும் கார்த்திகாவும் எல்லாத்தயும் எடுத்துக்குறதா அதனாலதான் இப்படியொரு முடிவு எடுத்தோம்” என்றதும் மெல்ல சிரித்தவன்.
“நா அதைப் பத்தியே பேசல, நேத்து ராத்திரி மலைக்கோயிலுக்கு போன மயூரிக்கு என்ன ஆச்சுன்னு ஏதும் சேதி வரலையா” என்க இபோழுது பதட்டம் கொண்டார் கனகம்.
Advertisement
Advertisement
“என்ன மாதிரி பொம்பள நீங்க ஒரு சின்னப் பொண்ணோட உயிரை எடுக்க நினைக்கறவனுங்களுக்கு வேவு பாத்து சொல்லிட்டு இருக்கீங்க வெக்கமா இல்ல, என்ன செஞ்சா அவ உங்கள, அவமானப்படுத்தினாளா உங்ககிட்டயிருந்து எதையாவது எடுத்துகிட்டாளா உங்க குடும்பத்தைப் பிரிச்சாளா? என்ன பண்ணா ஏன் இவ்ளோ வன்மம் அவ மேல உங்களுக்கு, ஒரு உயிரோட மதிப்பு தெரியுதா”.
“உங்க பேத்திகளுக்கு என்ன வயசு அந்தக் குழந்தைங்க மனசுதான் அவளுக்கும் அன்புக்காக ஏங்குற குழந்தை அவ, இன்னைக்கு வரைக்கும் அவ யாரையாவது காயப்படுத்திருப்பாளா வார்த்தையால் கூட யாரையுமே கஷ்டப்படுத்த தெரியாது அவளுக்கு, கேவலம் பணத்துக்காக அவளை என்ன பண்ண நினைசீங்க நீங்க, ஒரு நொடி போதும் இது எல்லாத்தயும் வீட்டுல சொல்ல அதுக்கப்பறம் என்ன நடக்கும்” என்றவன் விழிகளையும் கைகளையும் இறுக மூடி ஆத்திரத்தை கட்டுப்படுத்தினான்.
Advertisement
“பேத்திங்கள ஸ்கூல்ல சேத்துட்டீங்கள்ல… என் மயுவோட உயிருக்கு நீங்கப் பேசின விலைதானே அது” என்றவன் “இதுக்கான தண்டனை உங்களுக்கு உண்டு நீங்கப் பண்ண பாவமெல்லாம் உங்க பிள்ளைங்க மேல விழாம இருக்கணும்னு நான் சாமிய வேண்டிக்குறேன்” என்றதோடு திரும்பியும் பார்க்காமல் சென்றிருந்தான்.
சிலைபோல அப்படியே நின்றிருந்தார் கனகம் அவனுக்குத் தெரியவரும் என்று கனவில் கூட நினைக்கவில்லை.
மயூரியை லண்டன் அனுப்பவதுற்கு முன் நடந்த சம்பவமே அவனுக்குக் கனகத்தின் மீது மெலிதான சந்தேகத்தை விதைத்தது, அன்று வீட்டில் அனைவரும் வெல்லிங்டன் ஏரிக்குச் சென்றிருந்தனர் சேனாவிற்கு அன்று கல்லூரியில் கொஞ்சம் வேலை இருந்ததால் வரவில்லை என்று கூறிவிட்டான், கனகம் மூட்டுவலி என்று போகவில்லை மாலை சேனாவின் வீட்டிற்கு வந்த மயூரி ‘என்ன ஏன் கூட்டிட்டு போல’ என்று முகத்தைச் சுருக்கினாள்.
“தேவா போயிருக்காரா” என்ற அவளின் கேள்விக்கு “ஆமாம் அவனும் போயிருக்கான் என்னமோ உன்னைக் கூப்பிட சொல்லல” என்று கனகம் சொல்லிவிட அவளுக்குப் பெரிய வருத்தம் ஆகிவிட்டது, இத்தனை பேர் சென்றதெல்லாம் அவளுக்குப் பிரச்சனை இல்லை அவளுடைய தேவா அவளை விட்டுச்சென்றது மட்டுமே மனதை வலிக்கச் செய்தது அப்படியே சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
கல்லூரியிலிருந்து திரும்பி வந்துகொண்டு இருந்தவன் தேயிலை தோட்டத்தின் தொடக்கத்தில் ரோட்டில் விழுந்து கிடந்த அவளின் சைக்கிளைப் பார்த்தான், தேயிலை தோட்டத்தினூடே ஆட்கள் கையில் அருவாளோடு யாரையோ தேட அவன் வேகமாக அதன் உள்ளே நுழைந்து குனிந்தவாக்கிலே சென்று தேட பயந்து ஒடுங்கி உடலில் ஆங்காங்கே கீறல்களுடன் அமர்ந்திருந்தவளை பார்த்தான் அப்படியே அவளை இழுத்துக்கொண்டு சரிவில் இறங்கி அடர்ந்த வனத்தின் உள்ளே சென்று ஒளிந்துகொண்டனர்.
“என்ன விட்டுட்டு போகாத தேவா எனக்குப் பயமா இருக்கு” என்று அவனைக் கட்டிக்கொண்டு அழுதவள் “நீ ஏன் என்ன விட்டுட்டு ஏரி போன என்ன தனியா விட்டுட்ட” என்று ஏதேதோ புலம்பினாள், இரு தினங்களுக்குப் பிறகுதான் அவன் அதைப் பற்றியெல்லாம் யோசித்து பார்த்தான், வீட்டில் கனகம் மட்டுமே இருந்தார் பொய் சொல்லியிருக்கிறார்.
அவள் அங்கிருந்து புறப்பட்டவுடனே ஆட்கள் வந்திருக்கிறார்கள் முதல் இரண்டு முறையும் இதேதான் அவள் சேனாவின் வீட்டிற்கு வந்து சென்றபோதுதான் அவள்மீது தாக்குதல் நடந்தது அப்பொழுதும் அவனால் முழுதாகக் கனகத்தை சந்தேகப்படமுடியவில்லை.
தன்னுடைய குடும்பத்தில் அப்படியெல்லாம் யாரும் செய்யமாட்டார்கள் என்று நம்பினான், மயூரி ஊரிலிருந்து வந்த அன்று அவள் வருவதை பற்றி யாரிடமும் அவன் கூறியிருக்கவில்லை அன்று எந்தப் பிரச்சனையும் நடக்கவும் இல்லை, அவள் சேனாவின் வீட்டிற்கு வந்த அன்று ஒஸ்கர் அவளை அழைத்துச்செல்வதாகவே இருந்தது அதை நம்பி கனகம் தகவல் கொடுத்திருக்க எதிர்பார்க்காமல் சேனா அவளை அழைத்துச்சென்றான்.
“ஏன் அவ தாத்தா வரல” என்று கனகம் கேட்டபோதுகூட அவனுக்குப் பெரிதாகச் சந்தேகம் இல்லை அன்றைய தாக்குதலுக்குப் பிறகே அவருடைய அலைபேசி அழைப்புகளைக் கவனித்தான், யாருக்கு அழைக்கிறார் யாருக்கு தகவல் கொடுக்கிறார் என்று தெரிந்தது.
மகளுக்கு மொத்தமாக இரண்டு லக்ஷம் கொடுத்திருக்கிறார் பணம் அவருடைய வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது, அவருக்குத் தனியாகக் கணக்கு இருப்பதே அப்போழுதுதான் தெரிந்தது, இந்தமுறை மட்டும் அல்ல பல தவணைகளாக ஆயிரங்கள் அவர் வங்கி கணக்குக்கு வந்திருக்கிறது அதோடு மாதந்தோறும் சில ஆயிரங்கள் தவறாமல் வந்திருக்கிறது அதையும் அவனுடைய தந்தை கந்தசாமி கனகத்தின் கணக்கில் செலுத்தி வந்திருக்கிறார்.
“ஏன்” என்ற கேள்வி அவன் மூளையை வண்டாகக் குடைகிறது இத்தனை வருடத்தில் அவன் தாய்க்கு தனியே கணக்கு கிடையாது, வீட்டிற்கு என்று தனியாகச் செலவுக்குப் பணம் கொடுப்பான் அதோடு வீட்டு பெண்களுக்கு அவர்கள் கேட்க்காமலே தனியாகத் தந்துவிடுவான், அப்பா மற்றும் சித்தப்பாவிடம் கணக்கு கேட்பதில்லை வியாபார பணத்தை அவர்களே வாங்கி வைப்பது.
“உங்களுக்கு எவ்ளோ வேணுமோ எடுத்துட்டு மீதி வைங்க நான் கணக்கு எழுதிக்குறேன்” என்றுதான் சொல்லுவான், தன்னிடம் கூடச் சொல்லாமல் சித்திக்குத் தனியாக ஏன் பணம் கொடுக்கிறார் என்ற கேள்விக்கு மட்டும் அவனுக்கு விடை தெரியவில்லை.
ஒரு நொடி கூட அவனால் தந்தையை தவறாக எண்ணமுடியவில்லை தன்னிடம் சொல்லமுடியாத ஏதோ ஒரு காரணம் இருக்கலாம் கனகத்தின் குணத்தை வைத்து அவர் தந்தையை மிரட்டுகிறார் என்பதுவரை அவனுக்குப் புரிந்தது அதற்கான காரணம் தெரிய வேண்டும்.
காக்கி… அது சேனாவின் வாழ்நாள் கனவு சிறுவயது முதலே அதற்காகத் தன்னுடைய அத்தனை உழைப்பையும் போட்டிருந்தான், காலேஜ் சேரும்போது ஏதேனும் ஒரு டிகிரி என்பதை கடந்து கிரிமினாலஜி எடுத்துப் படித்திருந்தான், எஸ்.ஐ செலக்ஷனுக்காக நிறைய பாடுப்பட்டான்.
எழுத்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்வாகி மருத்துவ தேர்வு, நேர்முக தேர்வு உடல்நிலை தரநிலை தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று நேர்முகத்தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டு ஒன்பது மாதங்கள் டிரைனிங்கும் முடித்துப் போஸ்டிங் வரும் நாளை எதிர்பார்த்து காத்திருக்க அவனுடன் தேர்வானவர்கள் அனைவரும் ஒரு ஒரு இடமாக வேளையில் சேர்ந்துகொண்டிருந்தனர்.
நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த சேனாவுக்கு தகவல் ஒன்றும் வரவில்லை முதலில் கொஞ்சம் பொறுமையாக இருந்தவன் அனைவருக்கும் போஸ்டிங் வந்ததை அறிந்து நேரே சென்று விசாரித்தான் அவனுக்கு எந்த ஸ்டேஷனும் ஒதுக்கப்படவில்லை என்றார்கள்.
“அதெப்படி நல்ல முறையில் தேர்வாகியிருக்கிறேன்” என்றவனுக்கு கிடைத்த பதில் அவனுடைய போஸ்டிங் தடை செய்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதே “தடையா? எதற்கு” என்று ஆத்திரம் கொண்டான் அவன், ஆனால் சரியான பதில்தான் வரவில்லை அவனுடைய பலநாள் முயற்சியின் பலனாக இறுதியில் தெரிந்தது அனைத்திற்கும் பின்னில் ராஜப்பன் என்று.
உண்மையில் அவரும் காரணம் அல்ல, அவர் தம்பி கேட்டுக்கொண்டதை செய்துகொடுத்திருக்கிறார் நேரே சென்று ராஜேந்திரனிடம் நின்றான்.
“வா வா பரவாயில்லையே கண்டுபிடிச்சுட்ட” என்றவரை அத்தனை வெறுப்போடு நோக்கினான் “ஏன்” என்ற ஒற்றை கேள்வி மட்டுமே அவனிடம்.
“அட என்னப்பா நீ தவமா தவமிருந்து ஒத்த புள்ளய பெத்துருக்காங்க உன் அப்பா அம்மா, நீ சாதாரணமாவே வெரப்பா சுத்துவ காக்கி போட்டுட்டா சும்மா இருப்பியா தேவையில்லாம நெறய எடத்துல கை வைப்ப செல்வாக்கா இருக்கவன் சும்மா இருப்பானா உன்ன ஏதாவது செஞ்சுடுவான் பாவம்ல என் மச்சான் அதான் உனக்கு அந்த வேல சரியா வராதுன்னு குடுக்க வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றவரை பார்த்து நின்றவன் நரம்புகள் முறுக தொண்டை அடைத்துத் தாடை எலும்புகள் இறுகியது.
ராஜேந்திரனை நெருங்கிய கந்தசாமி “ஏன்யா… உனக்கு ஏன் இவ்ளோ வன்மம் அப்படி என்ன கெடுதல் பண்ணிட்டோம் உனக்கு, எங்களைத்தான் உனக்குக் கீழயே வெச்சுட்ட என் புள்ளய விட்று அவரோட வாழ்க்கையில பெரிய கனவு இது அதை ஒண்ணுமில்லாம ஆக்கிடாத” என்று கைகூப்பி நின்றார் அவர்.
“அப்பா நீங்க ஏன் இங்க வந்தீங்க எப்படி தெரியும் உங்களுக்கு” என்று அவரின் அருகில் நெருங்கினான் சேனா.
“நான்தான் சொன்னேன் நீ என்முன்னாடி கெஞ்சறதை உன் அப்பாவும், உன் அப்பா கெஞ்சுறதை நீயும் பாக்கணுமே அதுக்குதான்” என்றவரை அந்த நொடி கொன்று புதைத்துவிடும் ஆத்திரமே அவனுக்கு.
“உன் முன்னாடி கெஞ்சுற நிலைமை எங்களுக்கு எப்போவும் வராது, என்னோட கனவுக்காகக்கூட உண்முன்னாடி கையேந்த மாட்டேன்” என்றவன் “வாங்கப்பா போனா போட்டும்” என்று அழைத்துச்சென்றான், ராஜேந்திரனிடம் சேனாவின் வேலைக்காகச் சண்டையிட்டு தெய்வானையின் கன்னம் பழுத்ததே ஒழிய எந்த மாற்றமும் வரவில்லை.
கோசாலைக்கு பேரனைப் பார்க்கவே முடியவில்லை இதற்காக எத்தனை கஷ்டங்கள்… பயிற்சி அனைத்தும் மண்ணாகப் போய்விட்டதே எதிலுமே பற்று இல்லாமல் தோட்டத்திலே பழியாய் கிடந்தவனை எப்படி தேற்ற என்றே தெரியவில்லை ஒருவருக்கும், அவர்கள் குடும்பத்திலே முதல் காவல் அதிகாரி அந்த உடையில் மகன் வருவதை காண எங்கெல்லாம் வேண்டுதல் வைத்திருந்தார் பவுனு மனதே ஆறவில்லை ஒருவருக்கும்.
மெல்ல மெல்ல தன்னை மீட்டுக்கொள்ள தொடங்கினான் மூன்று மாதங்களுக்குப் பிறகு அவனைக் காண வந்திருந்தார் ஒருவர் “கிரைம் ப்ராஞ்சுல இருந்து வரேன் உங்களைப் பாக்க ஒருத்தர் காத்திருக்கார் இன்னைக்கு ராத்திரி ஏழு மணி” என்றவர் ஒரு விலாசத்தை கொடுத்து “போய்ப் பாருங்க கண்டிப்பா போகணும் வாய்ப்பு நம்மளைத்தேடி வரும்போது அத சரியா புடிச்சுக்கணும்” என்று சொல்லிச் சென்றார்.
அவனுக்கு எங்கேயும் போக விருப்பமில்லை என்றாலும் ‘யார்’ என்று போய்ப் பார்த்துவிட முடிவு செய்து அங்குச் சென்றிருந்தான்.
“வெல்கம் மிஸ்டர் தேவசேனாபதி” என்றவர் அவன் நேரே தன் கையை நீட்ட அவருடன் கைகுலுக்கியவன் முகத்தில் குழப்பரேகைகள்.
“உக்காருங்க பேசலாம்” என்றவர் “ஐ ஆம் சிவசங்கர் கிரைம் பிரென்ச் கமிஷனர்” என்க.
“சார்” என்றான் ஆச்சர்யமாகத் தன்னை எதற்க்காக அழைத்திருப்பார் என்ற கேள்வி மண்டையை குடைந்தது.
“உங்க ரெகார்டஸ் பாத்தேன் எக்ஸலண்ட் ஆனா பாருங்க இந்த மாதிரி திறமையான ஆளுங்களுக்கு சோதனையும் சேர்ந்தே வரும், ராஜேந்திரன் உங்க மாமா சரியா” என்க.
“ஹ்ம்ம்” என்றான்.
“தம்பி சொல்லி அண்ணன் செஞ்சிருக்கார் அதாவது மினிஸ்டர் ராஜப்பன், பரவாயில்ல அதை நாம கொஞ்சம் முயற்சி செஞ்சா மாத்தலாம், உங்க எஸ்.ஐ செலக்ஷன் கிரேட் போதும் உங்கள அப்படியே கிரைம் ப்ராஞ்சுக்கு மாத்திக்கலாம், இங்க முடிவை நானும் ஐ.ஜியும் தான் எடுப்போம் எங்க ரெண்டு பேருக்கும் உங்க பெர்பாமன்ஸ் திருப்தி இனிமே நீங்கதான் முடிவு பண்ணனும்”.
“காக்கி போட்டுத்தான் நாட்டைக் காப்பாத்தணும்னு இல்ல நாட்டோட எல்லையில எல்லைச்சாமியா நின்னு நம்மள காப்பாத்துற எத்தனை சிப்பாய்களை நமக்குத் தெரியும் என் கடமை என் நாட்டைக் காப்பாத்துறதுனு அவங்க செய்றாங்க, யூனிபோரம் இல்லாத இந்தக் கிரைம் பிரஞ்சும் அப்படிதான், எங்களோட சேர விருப்பம் இருந்தா இவர்கூட உள்ள போங்க நாம எப்படி வேலை செய்வோம்னு சொல்லுவார் விருப்பம் இல்லனா என்னைச் சந்திச்சத்தையே மறந்துட்டு வெளில போலாம்” என்க.
எழுந்து நின்றவன் “காக்கி போடலானாலும் மணாசல எப்போவும் போலீஸ்தான் சார்” என்றவனின் அருகில் வந்தவர் அவன் தோளில் தட்டி “வெல்கம் டு கிரைம் பிரென்ச், எடுக்குற கேஸ் அத்தனையும் நல்ல முறையில முடிங்க ஆசைப்பட்டது தேடி வரும்” என்றார், அன்றுமுதல் அவரின் கீழே அடையாளத்தை மறைத்துப் பணியைச் செய்துவருகிறான்.
மயூரியை வீட்டில் விட்டு நேரே அவர்களுடைய ரகசிய இடத்திற்குத்தான் சென்றான், அனைவரையும் கட்டி வைத்துத் தோலை உரித்திருந்தான் சக்தி “என்ன சொல்றாங்க” என்றான் உள்ளே நுழைந்து.
“சொல்லிட்டாங்க சார்” என்றான் சக்தி.
“ரவீந்திரன் அண்ட் சாம் ரைட்” என்க.
“எஸ் சார் அவங்க பேர்தான் சொன்னாங்க, மேடமோட சொந்தகாரங்க தானே சார்” என்க.
“ஹ்ம்ம் எஸ், மயூரியோட க்ராண்ட்மா அகதாவோட தங்கச்சியோட மாப்பிளைங்க, ஒஸ்கரோட ரிலேஷன் எல்லாரும் பாரின்ல செட்டில் ஆயிட்டாங்க இவங்க ரிலேஷன் கொஞ்சம் பேர்தான் இங்க இருக்காங்க” என்றவன் “இவனுங்கள நல்லா மேக்கப் போட்டு ரெடி பண்ணுங்க மாஜிஸ்திரேட் பாக்க போகணும் சீக்கிரம்” என்றவன் வெளியில் வந்து சிவசங்கருக்கு அழைத்து விவரம் கூறி அனைத்தையும் தயார் செய்தான்.
பாதி இரவில் ரவீந்திரன் வீட்டில் அமர்ந்திருந்தான் சேனாபதி “உன் கூட்டாளிக்குப் போன் போடு பத்து நிமிஷம்” என்றவன் பிஸ்டலை எடுத்து டேபிளில் வைத்தான்.
அடித்துப் பிடித்து ஓடிவந்தான் சாம் அவர்கள் முன்னே இருவருக்கும் எதிரான ஆதாரங்கள் அனைத்தையும் எடுத்து வைத்தவன் “விஷயம் புரிஞ்சிருக்கும் நீங்க அனுப்புன ஆளுங்கள சேரவேண்டிய எடுத்துல சேர்த்தாச்சு, ரெண்டு பெரும் என்ன பண்றீங்க நாளைக்கு விடிஞ்சதும் முதல் வேலையா பெரியவரைப் போய்ப் பாக்குறீங்க இனிமே அவருக்குத் துணையா நிப்போம்னு சொல்றீங்க, சொல்றதில்ல செய்யணும் மயூரி மேலே இனிமே உங்க நிழல் கூட விழக் கூடாது அவளுக்கு என்ன ஆனாலும் உங்களுக்குத்தான் பிரச்சனை”.
“இப்போதைக்கு இந்த ரெக்கார்டஸ் எல்லாம் என்கிட்டே பத்திரமா இருக்கும் நான் வெளில எடுக்காதவரைக்கும் இந்த ஊருக்குள்ள நீங்க யோக்கியனா நடக்கலாம் இத நான் வெளில எடுக்கக்கூடாதுன்னு வேண்டிக்கோங்க, அப்புறம் என்னை ஆளுவெச்சு போட்டுட்டா பிரச்சனை முடிஞ்சுரும்னு லூசுத்தனமா யோசிக்கக் கூடாது எனக்கு ஏதாவது ஆனாலும் பிரச்சனை உங்களுக்குத்தான் சந்தேகம் இருந்தா ஒரு ட்ரைல் வேணா பாருங்க” என்றவன் வாசல்வரை சென்று.
“திருடனுக்கு தேள் கொட்டினாப்ல இனிமே பொத்திகிட்டு இருக்கணும் யோசிக்காம ஒரு அடி எடுத்து வெச்சாக்கூட முதல்ல தூக்குறது உங்க பிள்ளைங்களைத்தான்” என்றவன் வெளியேற அசையாமல் அப்படியே நின்றிருந்தனர் இருவரும்.
மிராண்டா வரப்போவதில்லை என்று நினைத்திருக்க அவள் வந்தது கொஞ்சம் வருத்தம்தான் இருவருக்கும், அதன் பிறகு அவள் இறந்துவிட்டாள் என்ற செய்தி வந்ததும் மீண்டும் பேராசை துளிர்விட்டது, மயூரி மட்டுமே அவளும் இல்லை என்றால் சுலபமாகக் கோடிக்கணக்கான சொத்து கைக்குவந்துவிடும் அதற்க்கு துணையாக மயூரி அதிகம் உரிமையோடு பழகும் சேனாவின் வீட்டிலிருந்து கனகத்தை பிடித்தனர்.
மயூரி லண்டன் சென்றபிறகு இவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை, சிறிய அளவில் தொழில் செய்பவர்களே ஒஸ்கரை போல வசதி இல்லை வெளிநாடு சென்று ஆள் வைத்துக் கொள்ளும் அளவுக்கெல்லாம் திறமையும் இல்லை பணமும் இல்லை அவர்களுக்கு, அவள் மீண்டும் இங்கே வந்தால் பார்க்கலாம் என்றிருக்க அவள் வந்ததும் மீண்டும் முயற்சி.
ஆட்களும் கூலிப்படையெல்லாம் இல்லை இவர்களுடைய எஸ்டேட்டில் வேலை செய்யும் ஆட்களே சம்பளத்தோடு கொஞ்சம் பணம் கொடுத்தால் போதும், விசுவாசமும் இருக்கும் காட்டிக்கொடுக்கமாட்டார்கள் என்ற எண்ணம்.
இந்தக் கேசின் பின்னையே அலைந்துகொண்டிருந்தான் அதோடு சிலை கடத்தல் வழக்கின் வேலையும், உடன் தோட்டத்தின் வேலையும் என்று அவனுக்கு நிற்க நேரமில்லை மயூரியை அன்று வீட்டில் விட்டு வந்தது அதன்பிறகு அவளைப் பார்க்கவில்லை, இடையில் அவளே இரண்டு முறை அழைத்திருந்தாள் வேலை பளு காரணமாகச் சரியாகவும் இவன் பேசவில்லை.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் கடந்திருந்தது அனைத்தையும் முடித்து நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தான், பூக்கள் வாங்கிக்கொண்டு ஓசூரிலிருந்து திரும்பி வர அழைப்பு வந்திருந்தது அவளிடமிருந்து அவனுக்கே வருத்தமாகிவிட்டது அவளைத் தவிக்க விடுகிறோம் என்று.
“மயூ…” என்ற அவனின் அழைப்பில் சில நொடிகள் மௌனம் காத்தவள் அவர்கள் எப்பொழுதும் போகும் மருத்துவமனையின் பெயர் சொல்லி “அங்கயிருக்கேன் வாங்க” என்று வைத்துவிட்டாள்.
“என்னாச்சு” என்ற அவனின் கேள்வி காற்றோடு கலந்தது, மீண்டும் அழைக்க அழைப்பைத் துண்டித்தாள், அப்படியே காற்றின் வேகத்தில் பறந்து சென்று சேர்ந்தான், ஒஸ்கர் குடும்பம் அங்குதான் எப்பொழுதும் சிகிச்சை பெறுவது.
“ஐரிஸ்மயூரி” என்றவன் ரிசப்ஷனில் கேட்டு நிற்க “சேனா” என்று அழைத்துக்கொண்டு அருகில் வந்தார் ஒஸ்கர்.
“மயூ…” என்றவன் கேட்க அறை என் கூறியவர் “போய்ப் பாரு நான் வரேன்” என்று வெளியில் சென்றார்.
வேக எட்டுக்களில் அறைக்குள் நுழைந்தான், சோர்வாகப் படுக்கையில் படுத்திருந்தாள்.
“குட்டிமா” என்று அவளின் அருகில் நெருங்கியவன் “என்னாச்சு” என்றவள் கைபிடித்து அருகில் அமர்ந்தான்.
“தேவா… ஐ ஆம் ப்ரெக்னென்ட்” என்ற நொடி “வாட்!” என்று துள்ளி எழுந்தான் சேனாபதி.
error: Content is protected !!