Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மைவிழி ஜாடைகள்.

மைவிழி ஜாடைகள் – 14(a)

மைவிழி -14(a)

“நாளைக்கு வேணாம் இன்னொரு நாள் போகலாம்!” என தன் பிடியிலே நின்றாள் வேதவி.



Advertisement

“ப்ச், நம்மல எதிர்பாத்துட்டு இருப்பாங்க வேதா! உன் எக்ஸாம் முடிஞ்சதும் வரோம்னு வாக்கு கொடுத்துருக்கோம். என்னால மீற முடியாது” என்றான் அவள் கணவன்.

“ப்ச்”என முகம் திருப்பியவளின் செயலில் கோபம் வரப் பெற்றவனாக, அழுத்தமாய் மனைவியின் தாடைப் பற்றி தன் முகம் காணச் செய்தான் வாசன்.

Advertisement

Advertisement

“பேசிட்டிருக்கும் போது இது என்ன முகம் திருப்புற பழக்கம்?எனக்கு முகம் திருப்பினா பிடிக்காது வேதவி” என வார்த்தையிலும் அவளைப் பற்றியிருந்த கரத்திலும் அழுத்தம் கொடுத்தான்.

அசராத பார்வையுடன் நின்றிருந்தாள் வேதவி.

Advertisement

‘அழுத்தக்காரி!கண்ணுலயே ஃபயர் விடறா’என்று மனதில் வைதபடி மனைவியை முறைத்தான் இவன்.

கண்களால் அவன் கரத்தை இவள் பார்க்க,அழுத்தத்தைக் குறைத்துக் கொண்ட வாசன் பிடித்திருந்த அதே கரத்தால் மென்மையாய் மனைவியின் தாடையை வருடி விட்டான்.

“ஸாரி” என.

“நானும் ஸாரி, முகம் திருப்புனதுக்கு” என்றாள் வேதவியும்.

இது,இது தான் அவளிடம் அவனுக்கு பிடித்தது!தன் பக்கம் தவறென்றால் உடனே ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டு விடுவாள்.

ஆனால் என்ன,வாணியைப் பேசியதை மட்டும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே என ஆதங்கமாய் இவன் யோசிக்க, ‘அதுல அவ தப்பு என்ன இருக்கு?’ என்றது வாசன் மனது.

“பொறுமையா போயிருக்கலாம்” மனசாட்சிக்கு பதில் கொடுப்பதாக இவன் மெலிதாக முனக,அதைக் கேட்டு முறைத்த வேதவிக்கு ஏற்ப,

‘அடேய்! அடங்கவே மாட்டியே நீ’ என அலறியது அவன் மனசாட்சி.

வாசன் பெரு மூச்சுடன் மனைவியைப் பார்க்க.. கோபத்தைக் கைவிட்டவளாய்,

“நாம ரெண்டு பேருமே இப்ப நல்ல மனநிலைல இல்ல. இப்படியிருக்கும் போது வீட்ட போறது சரியில்ல. அம்மா,அப்பாக்கு தெரிஞ்சிடும். கவலைப் படுவாங்க வாசன். சொல்றதை புரிஞ்சிக்கோங்களேன்” என்றாள் வேதவி.

“அப்போ இங்க உள்ளவங்க என்ன மனநிலைல இருப்பாங்கன்னு உனக்கு வருத்தமில்ல ரைட்?” எனக் கோபமாகக் கேட்ட கணவனை புரியாது பார்த்தாள் அவள்.

“புரியல?”

“என்ன புரியல? நீ புரிஞ்சிக்க ரெடியா இல்லைன்னு சொல்லு!”

“….”

“உங்க வீட்டுக்கு போகலைன்னா என் அம்மா ஏன்னு கேக்க மாட்டாங்களா? ஏற்கனவே நடந்த விஷயத்துல அவங்களுக்கு உன் மேல வருத்தமும்,கவலையும் இருக்கு. ஆனா எங்க, அது நம்ம ரெண்டு பேரையும் பாதிச்சுடுமோன்னு காட்டிக்காம இருக்காங்க” என்றவனிடம், 

“நான் அத்தைக்கிட்ட பேசிக்கிறேன்-ங்க. ஆனா இதே மனநிலைல எங்க வீட்ட போனா.. நம்மால அங்க இயல்பா இருக்க முடியாது. வீட்ட உள்ளவங்ககிட்டயும் இயல்பா பேச முடியாது” என்றவளை அலுப்பாக பார்த்து வைத்தான் வாசன்.

பரீட்சை நன்றாகவே செய்திருந்த வேதவியை இவன் தான் அழைத்து வரச் சென்றிருந்தான். கோபம் மறைந்து இருவரும் நன்றாகத் தான் பேசிக் கொண்டு வந்தனர். ஆனால் வாசனுக்கு வாயில் சனி பகவான் உட்கார்ந்திருப்பார் போல.

சும்மா இல்லாமல் நேற்று மாலை நடந்த சண்டையை மனைவிடம் ரிபீட்டில் கேட்டுக் கொண்டவன் ‘நீ பொறுமையாக இருந்திருக்கலாம் வேதவி’ என சொல்லி மீண்டுமொரு சண்டையை இழுத்து விட்டான்.

வீடு வந்தும் இருவரும் அவரவர் நிலையில் இருந்து கொள்ள, மீண்டும் வாசன் பேச முயல்கையில் அது நீண்ட வாக்குவாதமாகி இதோ இரவு வரையிலும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

இவர்களின் திட்டப்படி வேதவிக்கு பரீட்சை முடிந்த அடுத்த நாள் அவளின் பிறந்தகம் செல்வதாக இருக்க, இப்போதிருக்கும் மனநிலையில் அங்கு செல்ல வேண்டாமென மறுத்துக் கொண்டிருந்தாள் அவன் மனையாள்.

இப்போது அவள் குடும்பத்தை முன்னிறுத்தி மறுத்ததில் இவனுக்கு கோபம் உண்டானது.

“இதோ,நீ உன் குடும்பத்தை யோசிக்கிற மாதிரி நீ ஏன் நம்ம குடும்பத்தை யோசிக்க மாட்டேன்ற? அப்டி என்ன கோபம் உனக்கு வாணி அண்ணி மேல? அவங்க பேசினது தப்பாவே இருக்கட்டும். அதுக்கு உடனே பதில் கொடுத்துடணுமா? அண்ணன், உன்னை எங்கிட்ட பேசுறது மாதிரி வெச்சிட்ட நீ! அது எந்தளவு எனக்கு வருத்தத்தை கொடுத்திரும்னு உனக்குத் தோணலையா?” என்று அதிலயே நின்றான் வாசன்.

அவன் குரலில் தெரிந்த ஆற்றாமையிலும், குற்றம் சாட்டும் தோணியிலும் சோர்வுற்ற வேதவி,

“ப்ச், நான் இதைப் பத்தி பேசவே விரும்பல வாசன். ப்ளீஸ் என்னை விட்டுடுங்க” என்றாள் அயர்ந்தவளாய்.

இப்படி சண்டையிட்டுக் கொண்டிருப்பதில் துளியும் விருப்பமில்லை வேதவிக்கு. இதே விடயத்தை ஒரே பேசிக் கொண்டிருப்பதில் தலைவலி கூட வந்து விட்டது.

‘ப்ச்’ என தலை கோதி தன்னை நிதானித்தவன்,விலகிச் சென்றவளின் கைப் பற்றி,

“எனக்கு என் குடும்பம் முக்கியம் வேதவி.”என்றான் அழுத்தமாய்.

கணவன் பேச்சில் சட்டென திகைத்து திரும்பினாள் வேதவி. அவள் கண்களின் கருமணிகள் அசைவை நிறுத்தி அவனை ஏறிட்டன.

‘அவன் குடும்பம் என்றால் நான் யார் அங்கு?’அடிபட்ட பார்வையுடன் நின்றாள் பெண்.

இதை எதிர்பார்த்து தான் அவன் பேசியது. ஆனாலும் மனைவியின் இப் பார்வையை எதிர் கொள்ள தைரியமற்றவனாய்,தன் பார்வையை அவளிலிருந்து விலக்கி,அவன் பிடியிலிருந்த அவள் கரத்தின் மீது பார்வையை பதித்தவன்,

“உன் கண்ணுல தெரியுதே இது, இதுக்கென்ன அர்த்தம்! என் குடும்பம்னு நான் பேசும் போது அங்க நீயார்னு கேள்வி உன் மனசுல வருதில்ல. அது,அது தான் வேதவி. இங்க எதுவும் விட்டுப் போற உறவுல்ல புரிஞ்சிக்கோ. வாணி என் அண்ணின்னா நீ என் மனைவி இல்லையா?” என சொல்ல,

கோபத்தில் மூக்கு விடைக்க, கலங்கப் பார்த்த விழிகளைச் சிமிட்டியவள்,

“உங்க வீட்ல என்னை எப்படி பேசினாலும் பொறுத்துட்டு போன்னு சொல்றீங்கல்ல!நீங்களும் சராசரிக் கணவன் மாதி..ஸ்ஸ்ஸ்..ஆஆ!”

“ராஸ்கல்! என்ன சொல்லிட்டிருக்கேன் என்ன பேசற?”என்று அவள் கரத்தில் இன்னும் அழுத்தத்தை கூட்டினான் வாசன்.

மூக்கு சிவக்க, பல்லைக் கடித்தபடி அவனை முறைத்தாள் வேதவி.

தானும் முறைத்தவன்,

“இங்க உன் விம்பம் இப்படியா தெரியறதுல எனக்கு விருப்பம் இல்லை. என் மனைவி யார் பார்வையிலும் குறைவா தெரியக்கூடாதுன்ற அர்த்தத்துல சொன்னா.. எப்படி பேசறா ராஸ்கல்! சராசரிக் கணவனாமே..”என பற்களை நறநறத்தான்.

“உங்களோட முடியல. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க” என்று அவன் முகம் பாராது கூறியவளின் பேச்சில் வெகுண்டவன்,

“என்ன? என்ன சொன்ன? என்னை விட்டுடுங்கன்னா என்ன அர்த்தம்?” என அதட்டினான்.

“விட்டுடுங்கன்னா விட்டுடுங்கன்னு தான் அர்த்தம்” என குரலை உயர்த்திய வேதவி, கலங்கிய கண்களை காட்ட விரும்பாது கணவன் பிடியிலிருந்த கரத்தை விலக்கிச் சென்று கட்டிலில் போய் அமர்ந்து கொண்டாள்.

வாசனுக்கு கோபமான கோபம்! அதென்ன மறுபடியும் மறுபடியும் விட்டு விடச் சொல்லிச் சொல்வது. முதலில் கூறியதை பொருட்படுத்தாமல் இருந்தும் மீண்டும் சொன்னதில் கோபம் அதிகமாகியது இவனுக்கு. திருமணமாகி வெறும் இரண்டு நாட்களில் மனைவியிடமிருந்து இப்படியான வார்த்தைகளை எதிர் பார்க்கவே இல்லை வாசன்.

அதிலும் தன்னை நினைத்தே கோபம். தானும் பொறுமையாக இராமல் பேசி, இருக்கும் நிம்மதியையும் கெடுத்துக் கொண்டிருக்கிறேன். என் பொறுமை எங்கே!?

‘அநியாயத்துக்கு கோபப்படுத்தி அவளை அழுக வெச்சிட்ட வாசா!’ என தனக்கே சொல்லிக் கொண்டு தன் பின்னந்தலையில் ஒரு அடி வைத்தான் அவன்.

“ஹ்ம்ம்..” நெடு மூச்செறிந்தவன் மனைவியைப் பார்க்க, அவளோ வீம்பும்,கோபமுமாய் கண்களை மூடிய படி கட்டிலில் முதுகு சாய்த்திருந்தாள்.

அவள் அருகில் போய் நின்றான் வாசன். இவன் அரவம் உணர்ந்து வலது புறங்கை கொண்டு கண்களை மறைக்க, அதை எடுத்து விட முயன்றவனின் கரத்தை ‘ப்ச்’ என எரிச்சலிலும்,கோபத்திலும் தட்டி விட்டாள் வேதவி.

அதில் தானும் கோபம் கொண்டவன்,

“வேதவி!”என அதட்ட, கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள் அவள்.

தன்னை நிதானப்படுத்த தாடியை நீவி விட்டவன், அவள் கால் பக்கம் போய் நின்று அவள் கால்களைத் தூக்கிப் பிடிக்க அவன் செயலில் அதிர்ந்து கண்களை திறந்தாள் வேதவி.

“நீங்க காலைப் புடிச்சாலும் நான் மன்னிக்கிறதா இல்ல!” என கடுகடுத்து காலை இழுக்கப் பார்த்தவளிடம்,

தன் பிடியை அழுத்தியவன்,

“நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம் வேதாஜி!” என்றான் முறைப்பும், சிரிப்புமாக.

“வேதாஜியாம் வேதாஜி. இப்போ தான் அந்த ‘ஜி’ எல்லாம் வருதோ?!” அவனுக்கு கேட்கும் வகையில் முணுமுணுத்து,

“ப்ச், விடுங்க!”என விலக்க முயற்சித்தவளை கண்டு கொள்ளாமல் அவள் கால் மட்டில் அமர்ந்தவன், அவள் கால்களை தன் மடி மீது வைத்துக் கொண்டான்.

“விடுங்கன்றேன்ல?!”இழுக்கப் பார்க்க, விட்டானில்லை அந்த விடாக்கண்டன்.

அவன் மடியில் தன் கால்கள் இருப்பது என்னவோ போலாக இயல்பாக இருக்க முடியவில்லை வேதவியால்.

அதைக் காட்டிக் கொள்ளாமல், “நான் தான் மன்னிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்ல!” அலட்டலின்றி இவள் சொல்ல,

“திமிரு தான்ல உனக்கு” கோபமில்லாது புன்னகையாய் சொன்ன வாசன், அவள் விரல்களில் சொடுக்கு எடுத்து விட கூச்சமாய் நெளிந்தாள்.

அதைக் கண்டுகொள்ளாமல் இவன் தன் வேலையைத் தொடர்ந்தான்.

முதலில் அவன் தொடுகையை ஏற்க முடியாமல் இயல்பான கூச்சத்தில் நெளிந்தவள், கொஞ்சம் கொஞ்சமாக அதை உணர்ந்து ஏற்று தனக்குப் பழக்கப்படுத்திக் கொண்டு சட்டமாக அவன் மடியில் தன் கால்களை அழுத்தினாள்.

குறுஞ்சிரிப்பு வாசனிடம்.

அதைக் கவனித்து விட்டவள்,

“நீங்க இவ்ளோஓஓ… என் காலைப் புடிச்சு மன்னிப்புக் கேக்கறதுனால போனாப் போகுதுன்னு பாவமேன்னுட்டு மன்னிச்சு விடறேன் உங்களை” என்றாள் ராகமிழுத்து சிரிப்பை அடக்கி, கோபம் போல்.

“அடிங்!” என்று சொடுக்கெடுத்துக் கொண்டிருந்த விரலை வலிக்கும் படி இழுத்தான் வாசன்.

“ஆஆ..!”மெலிதாக அலறிய வேதவி இம்முறை நிஜமாகவே கணவனை முறைக்க, புன்னகையுடன் அவள் பாதங்களை வருடி விட்டவன்,

“அதான் மன்னிச்சு விட்டேன்னு சொல்லிட்டல்ல! இன்னும் என்ன முறைப்பு வேதாஜி?”என்றான் உயர்ந்த புருவங்களுடன்.

“ஹாஆஆங்! அதெல்லாம் ஒரு பேச்சுக்கு சொன்னது. ஸாரி கேளுங்க!” என்றாள், தன் பாதங்களின் நீள அகலங்களை அளந்து கொண்டிருந்தவனிடம்.

“கேட்க முடியாது டி!”மிதப்பாய் சொன்னவன், மனைவியின் உள்ளங் கால்களின் பக்கம் கையை நகர்த்தி அங்கே வருடியபடி,

“வீட்ல வேலைலாம் செய்றது இல்ல போல?! உள்ளங்காலெல்லாம் செம்ம சாஃப்டா இருக்கு! கள்ளி!” என்று கேலி செய்தான்.

“ஆமா, இப்போ இந்த நேரத்துல இந்த ஆராய்ச்சிலாம் முக்கியம் பாரு!” என்று நொடித்தாள் வேதவி.

“ரொம்பப.. முக்கியம் வேதா!” என கள்ளச் சிரிப்புடன் சொல்ல, கணவன் வில்லங்கமாக கூற வருவது புரிந்து கண்களாலே மிரட்டினாள் இவள்.

“ஹா ஹா” எனப் பெரும் நகைப்புடன்,

“உனக்கு உள்ளங்கால் கூட வேர்க்குது வேதா!” என்று குறுகுறுப்பு மூட்டினான் வாசன்.

“ஆஆ.. கூசுதுங்க” என்றவளின் சிணுங்களில் தன் சிரிப்பின் சத்தத்தை அதிகரித்தவன்,

“நாளைக்கு உங்க வீட்டுக்கு போகலாம்” என்றான் புன்னகை முகமாய்.

மறுப்பைக் காட்ட வந்தவளிடம்,

“போலாம். போறோம்! டாட்!”என்றான் முடிவாக.

“ப்ச்!”

“நாம சமாதானம் ஆகிக்கலாம்!”

“அதெல்லாம் முடியாது!” முறுக்கிக் கொண்டாள்.

“சரி! அப்போ சண்டையை நிறுத்திக்கலாம்!” என்றான் வாசன் மீசையோடு மேலுதடு கடித்து சிரிப்புடன்.

“நோ! சண்டை இஸ் சண்டை” என்றாள் இவள்.

“ஓகே. நிர்ர்றை…சண்டை போடலாம்” என கண்கள் சுருங்க சிரித்து வைத்தான்.

“கேடி கேவி”முணுமுணுத்தாள்.

“இருக்கலாம் தப்பில்ல” சிரிப்புடன் தோள்களை குலுக்கினான்.

“சரி, இப்போ என் காலை விடுங்க!” என்றவள் பேச்சில்,

அவள் காலை நன்றாக இழுத்தவன் “என்ன பண்றீங்க வாசு?!” என்றவளின் அலறலை பொருட்படுத்தாது அனாயாசமாய் தன் அருகில் அவளை வரச் செய்திருந்தான் கீர்த்தி வாசன்.

கோபமாக எழ முயற்சித்தவளின் தோள்களை அழுத்திப் பிடித்து எழ முடியாமல் செய்தவன் கால்களை மடக்கியபடி கட்டிலில் அமர்ந்திருக்க, இவன் இழுத்ததில் சரியாக அவன் கால்கள் பக்கமே வேதவி முகம் இருக்கும் படி கட்டிலில் குறுக்காக படுத்திருந்தாள் அவள்.

வேதவி பேச வர, அவள் கீழிதழைப் பிடித்திழுத்து அழுத்தியவன்,

“தம்மாத் துண்டு வாய வெச்சிட்டு என்னெல்லாம் பேசற! ஒரு நிமிசத்துல தௌசன்ட் வர்ட்ஸ்!” என்றான்.

“வ்வ்வ்வ் வா…சா!” என்றவளின் இதழை இன்னும் அழுத்தி,

“அப்போ என்ன சொன்ன, விட சொல்லித்தானே..!?இனி விட்டுடுங்கன்னு சொல்லிப் பாரு,அப்ப தெரியும் இந்த வாசன!” என மிரட்டியவன்,

“விட்டுடுங்கவாம் விட்டு! விர்றதுக்கா கட்டிக்கிட்டேனாம்” என கோபம் கொண்டான்.

இவள் முறைக்க,இதழை விட்டதுடன் சுள்ளென அதில் சுண்டி விட்ட வாசன்,

“இருக்கிறதே சப்பை மூக்கு இதுல எப்டிலாம் கோபம் வருது உனக்கு..! சப்பை மூக்கி” என்று மூக்கையும் நிமிண்டி விட்டான்.

மூக்கைத் தேய்த்து விட்டுக் கொண்டவள்,

“போடா உருண்டை மூக்கா!” என்றாள் பதிலுக்கு.

“போடி சப்பை மூக்கி!” என கீழுதடை கடித்து இவன் கோபம் போல பார்த்தான்.

ஒருவர் முகத்தை ஒருவர் முறைப்பாக பார்த்த வண்ணமிருந்த இருவருவே அடக்க முடியாது சிரித்து விட்டனர்.

“நான் சமாதானமாகல. நம்ம சண்டை அப்படியே தான் இருக்கு! ஆனாலும் போகலாம். உங்களுக்காக” – வேதவி.

“ஹ்ம்ம்! நீ இயல்பா இரு. நம்ம சண்டை நமக்குள்ள” – வாசன்.

தலையை மறுத்தசைத்தவள், “எனக்கு நடிக்கவெல்லாம் வராது!” என்றாள் முறைத்து.

“சரிடி! நீ எப்படி இருக்கணுமோ அப்படியே இரு” என்று புன்னகைத்தான்.

ஒருவழியாக கணவன் மனைவி இருவரும் சமாதானமில்லாத சமாதானமாகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!