Skip to content
Post Views: 4,392
அத்தியாயம் – 12
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது எஸ்.பி அலுவலகம். சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் நடந்த கலவரத்தை பற்றி ஆலோசிக்கவும் விசாரிக்கவும் உள்துறை ஆட்கள் வரவிருக்கிறார்கள். அதிராவின் தலைமையில் நடந்த பாதுகாப்பு பணியில் எங்கு தொய்வு ஏற்பட்டு சச்சரவுக்கு வழி கொடுத்தது என்று அவள் மீதுதான் விசாரணை பாய்ந்தது. சொல்லப்போனால் அவள்தான் உள்துறை அமைச்சகம் சென்று பதில் கொடுக்க வேண்டும். ஆனால் நடந்த கலவரத்தில் அவளும் பாதிக்கப்பட்டிருக்கிறாள், மருத்துவ விடுப்பில் இருக்கிறாள் என்று சொல்லி ஐ.ஜி சலுகை வாங்கிக்கொடுத்ததால் விசாரணையை அவள் அலுவலகத்தில் வைத்திருந்தனர்.
அன்று பாதுகாப்பு பணியில் இருந்தவர்களில் தலைமை பொறுப்பில் இருந்த காவல் அதிகாரிகளும் கூடி இருந்தனர். அகிலன் இருப்பு அவசியமில்லை என்றாலும் விஷயம் கேள்விப்பட்டு தானாக வந்திருந்தான்.
பரிதி மான்சி வழக்குக்கு துப்பு துலக்க சென்றிருக்க, உதவியாளரை வைத்துக்கொண்டு அறிக்கை தயார் செய்திருந்தாள். உள்துறையிலிருந்து வந்த அதிகாரிகள் அவள் அலட்சியமாய் பாதுகாப்பு வரைவு செய்திருந்ததால்தான் இப்படி ஆகிவிட்டது. நாங்கள் எச்சரிக்கை கொடுத்தும் கவனக்குறைவாக இருந்திருக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினார்கள்.
Advertisement
“எல்லாரையும் செக் பண்ணிதான் உள்ளே அலோ பண்ணோம். வெப்பன்ஸ் கூட யார்கிட்டேயும் இல்லை. அண்ட் இது அரசியலை காழ்ப்புணர்ச்சில செஞ்ச மாதிரி இருக்கு. நத்திங் சீரியஸ்.”
“சீரியஸ் இல்லைனு நீங்க எப்படி சொல்லலாம்? எங்களுக்கு கிடைச்ச தகவல்படி அவங்க பெருசா பிளான் பண்ணி இருக்காங்க. பட் மிஸ் ஆகியிருக்கு.”
“எங்களோட ப்ரோட்டோகால் படி அமைச்சர் சைட்லேந்து ஒத்துழைப்பு வரல. எங்களை மட்டும் நீங்க முழுசா ப்ளேம் பண்ண முடியாது சார். யூ கேன் செக் அவர் ப்ரோட்டோகால்.” என்று பாதுகாப்பு வரைவை அவர்களிடம் கொடுத்தாள் அதிரா.
Advertisement
“இவ்ளோ விசாரிக்குற அளவுக்கு அப்படி என்ன த்ரெடன் சார்? யாருனு தெரிஞ்சிதா?” அமைச்சர் வீட்டில் நடந்த சலசலப்பு அவ்வப்போது கட்சிகளுக்குள் இருக்கும் காழ்ப்புணர்ச்சியால் நடப்பவை தான். ஆனால் அதற்கு ஏன் இப்படி விசாரணை குழுவெல்லாம் வைத்து விசாரிக்கிறார்கள் என்று பார்த்தாள் அதிரா.
Advertisement
அவள் தயாரித்திருந்த அறிக்கையில் திருப்தியுற்றவர்களாய் தளர்ந்து அமர்ந்தவர்கள், “கூட்டணி பேரத்துல ஒரு பெரிய அமெளண்ட் கைமாற இருக்கிறதா தகவல் இருக்கு. அந்த பணத்தை குறி வச்சிதான் இந்த தாக்குதல்… தேர்தல் நெருங்க நெருங்க இந்தியா புல்லா இது மாதிரி அரசியல் பிரமுகர் வீடுகளை குறி வச்சி ஒரு கேங் ஆக்டிவா சுத்திட்டு இருக்கு.” என்று கூடுதல் தகவல் அளித்துவிட்டு அவர்கள் கிளம்ப, அதிரா ஒன்றோடு ஒன்று இணைத்து மான்சி வழக்கை இதனுள் கொண்டு வந்தாள்.
பண பலம், அரசியல் பலம் உள்ள பெரிய வீட்டுப்பெண். பாலியல் தொந்தரவுகள் இல்லாத பட்சத்தில் பணத்திற்கோ பதவிக்கோ மான்சி பலியாகி இருப்பாளோ என்று யோசித்து ஒரு தாளில் குறித்து வைத்தாள்.
இதுவரை சந்தேகம் கொள்ளும்படி அவளது மருத்துவ அறிக்கை மட்டுமே இருப்பதால் வழக்கின் திசையை அமைச்சர் மற்றும் மான்சி தந்தையின் தொழில் புறம் திருப்பினாள். பரிதியை அழைத்து இந்த கோணத்தில் விசாரிக்க சொல்ல, அவனோ,
Advertisement
“இதுவரை எப்படியோ இவங்க பெரிய இடம் மேம். சாலிட் எவிடென்ஸ் இல்லாம அவங்க ராஜ்யத்துக்குள்ள நம்ம முடி கூட உள்ள போக முடியாது.” என்றான்.
“பரிதி, எல்லா நேரமும் நேர் வழி உதவாது. மான்சி வீட்ல வேலை பாக்குற யாரையாவது நம்ம பக்கம் இழுங்க. கண்காணிக்க சொல்லுங்க. சந்தேகப்படும்படியா ஏதாவது கிடைச்சா நமக்கு வசதியா இருக்கும்.
ஒருவேலை நாம சந்தேகப்படுற மாதிரி இது பணம், பதவிக்காக இருந்துச்சுன்னா குற்றவாளியை நாம கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடி அவங்க புடிச்சிடுவாங்க. அப்படியே அதை வெளில விடாம அமுக்கவும் வாய்ப்பிருக்கு. அதுக்கு நாம விடக்கூடாது.”
அவள் சொல்வதும் யோசிக்க வேண்டியதாய் இருக்க, சரியென்று ஒத்துக்கொண்டான் பரிதி.
அவனிடம் பேசிவிட்டு மணியைப் பார்த்தவள் நெற்றியை தேய்த்துக்கொண்டு எழுந்தாள். மாலை ஆகி இருந்தது. கைக்கு பிஸியோ செய்வதால் வேலை நேரத்தை குறைத்துக்கொண்டாள். பெரிதாக வேலை இல்லாத நாட்களில் முன்பு போல் இரவு வரை அலுவலகத்தில் இருப்பதில்லை. தொப்பியை மட்டும் இடக்கையில் எடுத்துக்கொண்டவள் மணி அடிக்க, உள்ளே வந்ததோ அகிலன்.
“நீ எங்க இங்க?”
“வெளில உங்க அசிஸ்டென்ட் இல்லை, அதான் நான் வந்தேன்.” என்றான் பவ்யமாய்.
“இந்த ஆபிஸ்ல என்ன வேலை உனக்கு?” அதிர்ந்து பின் தெளிந்தாள் அதிரா.
“விசாரணை கமிஷன் வருதுன்னு சொன்னாங்க அதான் வந்தேன். என்னை கூப்பிடவே இல்லை.” என்று கேட்டவனை முடிந்த மட்டும் முறைத்தாள் அதிரா.
“தெரிஞ்சு செய்றீயா இல்லை தெரியாம செய்றீயா?”
“எதை?” என்று ஒன்றும் தெரியாதவன் போல் பார்த்தான் அகிலன்.
“…” அதிரா முறைத்துப் பார்க்க, தொண்டையை செறுமியவன்,
“சம்பவ இடத்துல நானும்தான் இருந்தேன். அதான் யூஸ் ஆகுமேனு வந்தேன்.”
“…”
“சரி உங்களை பார்க்கத்தான் வந்தேன். அன்னைக்கு ஃப்ரீயா இருக்கும் போது பேசலாம்னு சொல்லிட்டு அப்படியே மறந்துட்டீங்க.” என்று குறை போல சொல்ல, பேசாமல் இவன் விடமாட்டான் என்று புரிந்தது அதிராவுக்கு.
என்ன என்று விசாரித்து இதை இன்றோடு முடித்திட வேண்டும் என்று எண்ணிக்கொண்டவள்,
“என் பேக் எடுத்துட்டு வா.” என்று கண் காண்பிக்க, அவள் மேசைக்கு அடியில் இருந்த பையை எடுத்துக்கொண்டு அவளை பின்தொடர்ந்தான்.
பையை காருக்கு பின்னால் வைத்து கதவை சாற்றியவன் அதிராவைப் பார்க்க,
“வீட்டுக்கு வா.” என்றதோடு அவள் முன்னே ஏறிக்கொண்டாள். இவனும் தொடர்ந்து பின்னே ஏறப்போக,
“ஹே, எங்க ஏறுற? உன் வண்டியில வா.” என்று தடுத்து நிறுத்தினாள்.
“என்கிட்ட வண்டி இல்லை.” என்றான் உர்ரென்று.
“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. நீ அபீஷியலா வரல, சோ…” காரில் ஏறாதே எனும் விதமாய் விரல் மடக்கி கையசைக்க, அவனுக்கு சுர்ரென்று ஏறியது ஆனால் அதே வேகத்தில் அது இறங்கவும் செய்ய, அங்கிருந்தபடியே ரேபிடோவில் பைக் புக் செய்து அவளுக்கு முன் அவள் வீட்டில் இருந்தான் அகிலன்.
‘இவனுக்கு இதே வேலை.’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அதிராவால்.
தற்சமயம் டிரைவராக இருப்பவரிடம் கார் சாவியை வாங்கி அனுப்பிவிட்டு அகிலனை உள்ளே வரும்படி தலையசைத்தாள். ஆர்வமாய் உள்ளே நுழைந்தவன் கண்களை நாலா புறமும் சுழல விட்டான்.
“யாரை தேடுற?” சட்டென அதிரா கவனித்து கேட்டிட, அவளை தடுமாற்றத்துடன் பார்த்தவன்,
“அன்னைக்கு உங்க பிரென்ட் இருந்தாங்களே…” என்று இழுக்க, அதிரா எதுவும் சொல்லாது, வள்ளி என்று குரல் கொடுத்தாள்.
வரேன்மா என்ற குரல் பதிலாய் வர, இது யார் புதிதாய் என்று அகிலனின் யோசனை சென்றது.
அடுத்த நொடி அந்த வள்ளி தண்ணீர் எடுத்து வந்து அதிராவுக்கு கொடுத்தாள். அதிரா அகிலனை கண்காட்ட, அவனுக்கும் ஒரு டம்ளர் தண்ணீர் வந்தது.
‘பரவாயில்லை தண்ணி குடுக்குற அளவுக்கு இம்ப்ரூமென்ட்.’ என்று எண்ணிக்கொண்டே தண்ணீர் குடிக்க, அதிரா வள்ளியிடம் பேசுவது செவியில் விழுந்தது.
“டின்னர் ரெடியா? இன்னைக்கு சீக்கிரம் வேணும்.” அதிரா கேட்க,
“இன்னும் பத்து நிமிசத்துல ரெடி ஆகிடும்மா.” என்று சொன்ன வள்ளி உள்ளே சென்றுவிட்டாள்.
“புதுசா வேலைக்கு சேர்ந்திருக்காங்களா? உங்க டையட்டுக்கு செட் ஆகுறாங்களா?” பல நாள் பழக்கம் போல் அவளிடம் கேள்விகளை அடுக்கினான்.
அவனை அழுத்தமாக பார்த்துக்கொண்டே சோபாவில் அமர்ந்தவள் வலக்கையை இலகுவாக விட்டு, இடக்கையை மடியில் வைத்துக்கொண்டாள்.
தன் கேள்விகளை ஒரு பொருட்டாய் கூட மதிக்காது இருப்பவளைக் கண்டு அவனும் வாய் மூடிக் கொண்டான். அதிராவின் பார்வை அவன் மீதும் அவன் கையில் இருக்கும் பையின் மீதும் படிய, தானாக பையை அவள் எதிரில் இருந்த மேசையில் வைத்தான்.
“என்ன பிரச்சனை உனக்கு?”
“ஒன்னுமில்லயே…” மொழியோடு சேர்ந்து அவன் சிரமும் இல்லை என்று ஆடியது.
“லுக், உன்கிட்ட சண்டை போட்டு அலுத்துடுச்சு எனக்கு. எதுக்கு சுத்தி சுத்தி வரேன்னு டிரெக்ட்டா சொல்லிட்டு கிளம்பு.”
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுபவளிடம் என்ன சொல்வது என்று சலிப்பு தட்டியது அவனுக்கு. இன்னும் சொல்லப்போனால் அவள் இப்படி நேரடியாய் கேட்கவும் என்ன சொல்வது என்ற தடுமாற்றம். அவளுடன் முன்பு போல் பேச வேண்டும், அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பிரதானமாய் இருக்க, என்ன பேசவேண்டும் என்றெல்லாம் ஒத்திகை பார்க்கவில்லை அவன்.
“அகிலன், எனக்கு வேற வேலை நிறையா இருக்கு.” என்று அழுத்திச் சொன்னாள் அதிரா.
“ஹான்… உங்க உடம்பு எப்படி இருக்குனு கேட்டா பதிலே சொல்லாம போறீங்க. அதை தான் விசாரிக்கலாம்னு…” என்று இழுத்து அவளை பார்த்தான்.
“பிஸியோ பண்றேன். பெட்டர் ஆகிட்டு இருக்கு. வேற எதுவும் கேட்கணுமா?” புருவம் உயர்த்தினாள் அதிரா.
இல்லை என்று அவன் தலை ஆட, நா அதற்கு மாறாக, “ஏன் இப்படி தனியா கஷ்டப்படுறீங்க? உங்க பிரென்ட் இல்லையா? இந்த குக் ஓகே வா?”
“நான் கஷ்டப்படுறேனு உன்கிட்ட சொன்னேனா? ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்காத. அப்புறம் என் பிரென்ட் இங்க இருந்தா என்ன இல்லைனா உனக்கு என்ன? நீ எனக்கு கீழ வேலை பாக்குற அவ்ளோ தான்.”
“ம்ச், உங்களுக்கு கீழ வேலை பாக்குறேங்குறது எனக்கும் தெரியும். அந்த உரிமையில தான் உங்களை பத்தி விசாரிச்சேன். நீங்கதான் என்னை விரட்டுற மாதிரி பேசுறீங்க.” என்று பதிலுக்கு குரல் உயர்த்த, சாய்ந்தமர்ந்த அதிரா,
“அப்புறம்?”
வேண்டுமென்றே சீண்டுகிறாளோ? துணுக்குற்று அவன் புருவங்களை நெறிக்க, அவளும் சளைக்காது அவனை எதிர்கொண்டாள்.
வள்ளி அதற்குள் வேலை முடித்து கிளம்பவா என்று நின்றாள். இரவு உணவு செய்துவிட்டு கிளம்புவது வள்ளியின் வழக்கம். இன்றும் அதுபோல் சொல்லிக்கொண்டு கிளம்ப, அகிலன் அமைதியாய் நின்றான். அதிரா அவனை ஆராயும் பார்வை பார்த்தவள், “கிளம்பு.” என்றிருந்தாள்.
மீண்டுமா… இது உனக்கு தேவையா என்று அவன் மனசாட்சியே காறித் துப்ப, வரேன் என்று வாய்க்குள் முனகிக்கொண்டு நிற்காது சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் கண்களை மூடித் திறந்த அதிரா பெருமூச்சு விட்டாள். அவன் மாற்றத்திற்கான அர்த்தம் விளங்குவது போல் இருந்தது. தெளிவாக இதுதான் என்று தெரியவில்லை என்றாலும் அவன் எண்ணம் செல்லும் திசை பிடிபட்டது. இதோடு இதை நிறுத்துவது உசிதம் என்றுபட, அவனை வேண்டுமென்றேதான் சீண்டி அனுப்பியிருந்தாள். கோபத்திலாவது திரும்பி வராது இருப்பான் என்று நினைத்தாலும் அவன் திரும்ப வருவான் என்றது கற்றுத் தேர்ந்து அனுபவங்களை பெற்றிருந்த சிந்தை.
அவள் எண்ணம் மெய்யானது மறுநாளே. மறுநாள் அவள் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருக்கும் சரகத்தின் ஒரு பெரிய கோவில் திருவிழா. பாதுகாப்பு ஏற்பாடுகளும் விழா நடத்த அனுமதியும் முன்னரே கொடுக்கப்பட்டு எல்லாம் சரியாய் சென்றுகொண்டிருந்தது. இந்த ஊருக்கு வந்ததிலிருந்தே கோவிலுக்கு செல்லவில்லை என்ற நினைவு வர, பாதுகாப்பு ஏற்பாட்டையும் கோவிலையும் ஒருசேர பார்த்து வரலாம் என்று கிளம்பிச் சென்றாள்.
நல்ல கூட்டம். இவளைக் கண்டதும் இன்ஸ்பெக்டரே அவளை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். பொது இடம் என்பதால் கையில் ஸ்லிங் அணிந்திருந்தாள். கோவிலுக்கு உள்ளே சுவாமி தரிசனம் செய்ய பொது வழி ஒன்றும் ஸ்பெசல் டிக்கெட் ஒன்றும் வெளியேற ஒன்றும் என்று மூன்று பாதைகள் இருந்தது. இதைத் தவிர்த்து முக்கிய பிரமுகர்கள் வந்தால் அவர்கள் நேரே செல்ல ஏதுவாய் சிறிய அளவில் கொடிமரத்தை ஒட்டி வழி விட்டிருந்தனர். இவளை அந்த வி.ஐ.பி வரிசையில் அழைத்துச் செல்ல முனைய, சிறப்பு தரிசன குழுவில் நெரிசல். சலசலப்பு கேட்டது.
“என்னனு போய் பார்த்து கிளியர் பண்ணுங்க.” என்று இன்ஸ்பெக்டரை அனுப்பி வைக்க, அவளுக்கு உள்ளே செல்ல வழி காட்டிவிட்டு நகர்ந்தார் அவர்.
அதிரா அனைத்தையும் கவனித்தபடி உள்ளே செல்ல, எப்போது அவன் வந்தான் என்று தெரியவில்லை. சுவாமி முன் கண்மூடி அவள் தரிசனம் முடித்தபின் அவள் முன் தீபாராதனை நீட்ட, அதை அவள் நோக்கி செல்வது போல் விசிறிவிட்டு அவளை முந்திக்கொண்டு திருநீறு வாங்க நீண்டது அவன் கை.
உரசவில்லை என்றாலும் பின்னாலிருந்து சட்டென ஒரு ஆண் கை நீளவும் நொடி திகைத்து திரும்பிப்பார்த்தால் அகிலன் நின்றிருந்தான். இவளுக்காக திருநீறு வாங்கியவன் வெளியே செல்லும் வழியை காண்பிக்க, அந்த கூட்ட மிகுதியில் எதுவும் சொல்ல முடியாது அவன் காட்டிய திசையில் வெளியேறினாள்.
கூட்டம் குறைந்த வெளிப்பிரகாரம் வந்ததும் வலக்கையில் இருந்த திருநீறை அவளுக்கு நீட்ட, அவனை முறைத்தாளே ஒழிய அதை எடுத்துக்கொள்ளவில்லை.
“கை தானே தூக்க முடியாது, விரல்ல விபூதி எடுத்து குனிஞ்சி நெத்தியில பூசிக்கோங்க.” என்று நீட்டினான்.
முறைத்துக்கொண்டே அவன் சொன்னது போல் மோதிர விரலில் கொஞ்சமாய் திருநீறு எடுத்து குனிந்து நெற்றியில் பூசிக்கொண்டாள்.
“வேலையை பாக்காம இங்க பண்ணிட்டு இருக்க?”
“என் வேலையைத்தான் பாக்குறேன். இன்ஸ்பெக்டர் தான் உங்களை அழைச்சிட்டு வர சொன்னாரு.” என்றான் அலட்டாது.
வெட்டிவிடத்தான் பார்க்கிறாள் விடாது அட்டையாய் ஒட்டிக்கொள்ள வருகிறானே என்று நினைப்பு அவளுக்குள் தோன்றவும், திடுக்கிடல். மீண்டும் மீண்டும் இவனை பார்க்கத்தான் வேணுமா என்று சலித்துக்கொண்டே முன்னே நடக்க, பின்னோடே வந்தவன், “நேத்திக்கு கேட்டீங்கல்ல அப்புறம்ன்னு… நைட் எல்லாம் யோசிச்சேன்.” என்றதும் என்ன சொல்லப் போகிறானோ என்று இவளுக்குள் ஒரு தவிப்பு.
இது என்னது புதிதாக ஏதேதோ உணர வைக்கிறான் என்று அவனை விட்டு தள்ளிச் செல்ல உந்தியது அறிவு. அப்படி போனாலும் திரும்ப வருவான் என்றது மனது.
முதல்முறையாய் ஒருவரை எப்படி எதிர்கொள்வது என்ற தடுமாற்றமே. அது அவளுக்கு பிடிக்கவில்லை. வேலையில் சேர்ந்த புதிதில் சில மாதங்கள் தடுமாறியவள் பின் அனைத்திலும் கற்று தேர்ந்துவிட்டாள். அந்தந்த சூழலுக்கு ஏற்ப தன்னை பக்குவப்படுத்திக்கொண்டாள். அப்படியிருக்கும் போது இவன் என்ன என்னை இப்படி படுத்துகிறான் என்று கோபம் தலைக்கேறியது. அதை காட்ட முடியாத இடத்தில் நிற்க, அவனுக்கு அதெல்லாம் இல்லை போல.
“ஒருத்தவங்களை புடிக்கலைன்னா அவங்க பக்கமே தலை வச்சி படுக்க மாட்டேன். உங்ககிட்ட பேசுனா மாதிரி திரும்பத் திரும்ப பேச மாட்டேன்…” என்றவனை நம்பாத பார்வை பார்த்தாள்.
“சரி, சரி… பேச மாட்டேன்தான் ஆனா மூஞ்சை காட்டிடுவேன். நீங்கதான் எனக்கு பதிலுக்கு பதில் குடுத்து என் மண்டையை சூடாவே வச்சிருந்தீங்க. உங்களை திட்டுனாலும் திரும்பத் திரும்ப உங்ககிட்ட ஏன் வாய் குடுத்தேன்னு தெரியல. ஏன் எல்லாத்தையும் எடக்கு முடக்கா செஞ்சேன்னு தெரியல. அதான் இப்போவே என் பீ.பி எல்லாம் தாறுமாறா இருக்கு.” எனும் போதே அவள் யோசனையாய் பார்க்க,
“அன்னைக்கு இரத்தம் கொடுத்த இடத்துல செக் பண்ணி சொன்னாங்க. இந்த வயசுக்கு இந்தளவு அதிகமாம். பயந்துட்டேன்.”
“கரெக்ட் டயட், எக்ஸர்சைஸ் பண்ணா ரிவர்ஸ் பண்ணிடலாம்.” என்று ஆதரவாய் சொல்லிவிட்டு அவள் நடையைத் தொடர, வெளியே வந்திருந்தனர். பேச்சு தடைபட்டது. அகிலன் அதிருப்தியாய் பார்த்தான்.
இந்த முறை அதிரா விடவில்லை. அவனை ஒதுக்க ஒதுக்க எண்ணங்களில், நினைவுகளில் புற்றீசலாய் கிளம்பி வர வாய்ப்பிருக்கிறது என்று மனம் எச்சரிக்க, விழித்துக்கொண்டாள். ஒதுங்கி சென்று சிக்கலாக்குவதை விட பேசி ஒதுக்கிவிடுவது நல்லது என்றதும் அவனையே மீண்டும் அன்றைக்கு மட்டும் சாரதியாக்கி வீட்டிற்கு கூட்டி வந்தாள்.
“பீ.பி’க்கு டாக்டரை பாத்தியா?” விட்ட இடத்திலிருந்து துவங்கியது பேச்சு.
அவள் சோபாவில் அமர்ந்திருக்க, அவன் நின்றிருந்தான்.
“இல்லை மேடம். யோசனையாவே இருக்கு. நீங்கதான் டயட் எல்லாம் இருக்கீங்களே என்ன பண்ணலாம்னு சொல்லுங்க.”
“எல்லாம் பச்சை பச்சையா இலை தழையா இருக்கேனு அன்னைக்கு மோந்து பார்த்து டப்பிக்குள்ள வச்சது, அப்புறம் குடிச்சிட்டு துப்புனது… அது எல்லாத்தையும் சாப்புடனும்.” கேலி இழையோட அவள் சொல்லியது அவனை அந்த நினைவிற்கே இழுத்துச் சென்றது.
காய்கறி கீரைகளும், தனியாக இனிப்பு சேர்க்காத பழச்சாறும் அந்த நொடியே நாக்கில் பட்டது போல் முகம் அஷ்டகோணலாகியது.
அவன் முகம் போன போக்கில் லேசாக சிரிப்பு எட்டிப் பார்த்தது அதிராவுக்கு. உடன் அவனை சீண்டும் ஆர்வமும்.
“வள்ளி சமைச்சு வச்சிட்டு போயிருப்பாங்க. இன்னைக்கு அதை சாப்புட்டு பாரேன்.” சிரிப்பை இதழ்களுக்குள் அடக்கி அவனிடம் சொல்ல, இரண்டடி பின்னே நகர்ந்தான் அவன்.
“வேற எதுவும் வழி இல்லையா?”
“இருக்கு. ஆயுசு முழுக்க மாத்திரை சாப்புடனும். ஓகேன்னா நாக்கு சொல்ற பேச்சை கேளு.”
என்ன சொல்ல என்று தெரியாது நின்றான் அவன். துளைக்கும் பார்வை பார்த்தவள் இரண்டொரு முறை நிதானமாய் மூச்சிழுத்து வெளியிட்டு தன்னை சமன்படுத்திக் கொண்டவள்,
“உனக்கு என்ன பிரச்சனை?” என்றவள், “உன் வயசென்ன?” அவன் விவரங்களை நினைவு அடுக்கிலிருந்து மீட்கும் விதமாய் அவள் புருவங்கள் சுருங்கியது.
அதிகம் யோசிக்கும் முன் வயதை சொல்லி இருந்தான். இரத்த அழுத்தம் எவ்வளவு இருந்தது என்று கேட்டுக்கொண்டாள்.
“இன்னும் முப்பதே ஆகல, உன் வயசுக்கு இது அதிகம்தான். ஸ்ட்ரெஸ் அண்ட் ப்ராபர் டயட் இல்லாம தான் இப்படி இருக்கு. கவனிக்காம விட்டா கஷ்டமாகிடும் பாத்துக்கோ.” என்றாள் அக்கறையாய்.
“அதான் கொஞ்சம் பயமா இருக்கு.”
“முதல்ல குடிக்கறதை ஸ்டாப் பண்ணு.” என்றதும் சுருங்கியது அவன் முகம்.
“என்ன?” என்று அதட்டலாய் கேட்டாள்.
“நான் ஒன்னும் வேணும்னு குடிக்கிறது இல்லை.”
“ஓ, குடிக்குறதுக்கு காரணம் எல்லாம் வச்சிருக்கியோ?” நக்கலாய் வந்தது அவள் குரல்.
“ம்ச்…” பதில் கூற முடியாது தலைகோதி வேறு பக்கம் பார்த்தான்.
“இந்த வேலையில எல்லாருக்கும் அழுத்தம் இருக்கும்தான். அதுக்காக குடிச்சா ஆச்சா?” காரணம் என்னவாக இருக்கும் என்று யூகித்து அதிராவே தொடர்ந்தாள்.
“வேற என்ன பண்ண சொல்றீங்க. எதுவும் பிடிக்கல, தினம் ஸ்டேஷன் போய்ட்டு வர்றதெல்லாம் கடுப்பா இருக்கு. எதுக்கு இதெல்லாம் செய்யணும்னு இருக்கு.”
பிடித்தமின்மையால் தான் வேலையில் அக்கறை இல்லாது இருக்கிறான் என்பது அவள் ஏற்கனவே அறிந்ததே. அதனால் அவன் சொல்வதை அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“இங்க நான் மட்டுமில்லை, ஏட்டு தொடங்கி இன்ஸ்பெக்டர் வரைக்கும் குடிக்குறது ஒரு ஸ்ட்ரெஸ் ரிலீஃப்.”
“உன் லாஜிக்படி நான் பாட்டில் பாட்டிலா குடிக்கணும் அப்படித்தானே?” என்று அதிரா அழுத்தமாய் பார்க்க, உடனே ‘அதெப்படி’ என்று மறுப்பாய் அசைந்தது அவன் தலை.
“இங்க பாரு, எல்லா வேலையிலும் அழுத்தம் இருக்கு. ஆனா அதை எப்படி அமைதிப்படுத்தணும்னு நீ தெரிஞ்சிக்கிட்டாலே உன் மைண்ட் அண்ட் பாடி உன் கன்ட்ரோலுக்கு வந்துடும். ஆனா அந்த அமைதி அற்ப சந்தோஷம் கொடுக்கிற தண்ணி, தம்மு, போதையில இல்லை. இதெல்லாமே கொஞ்சம் கொஞ்சமா உன்னை சிதைச்சிடும். புரிஞ்சிதா?” உடல்நிலை பற்றிய பேச்சுகள் வரவும் அவன் நடவடிக்கை குறித்த எண்ணங்கள் பின் சென்று இயல்பாய் பேசினாள் அதிரா.
அவனும் புரிந்தது போல் வேகமாய் தலையாட்டினாலும் அவன் முகமே தெளிவின்மையை காட்டியது.
“என்ன அகிலன்?”
“நீங்க எப்படி இப்படி இருக்கீங்க?”
“எப்படி?”
“இல்லை, உங்களுக்கு ஸ்ட்ரெஸ் எல்லாம் வராதா?”
லேசாக சிரித்தவள், “உன்னையெல்லாம் சமாளிக்குறேனே இவ்ளோ நாள் வராமையா இருக்கும்?”
கோபத்தில் முஷ்டி இறுக்கி, இதழ்களை பிரிக்க மறுத்து நின்றான் அகிலன்.
“லுக், வேலைக்கு போறவங்களுக்கு வேலையில மேலதிகாரி கொடுக்கிற ஸ்ட்ரெஸ், வேலை இல்லாதவங்களுக்கு வேலை இல்லையேன்னு ஸ்ட்ரெஸ், குடும்பத்துக்காக வேலையை விட்டுட்டு வீட்ல இருக்குறவங்களுக்கும் ஸ்ட்ரெஸ். இப்படி ஸ்ட்ரெஸ் ஸ்ட்ரெஸ்ன்னு இப்போ தொட்டதுக்கெல்லாம் உடைஞ்சி போய் மது, மாதுவை தேடுறது பலவீனம்.
பலவீனம் என்னைக்குமே உன்னை சரியான பாதைக்கு கூட்டிட்டு போகாது. நீ தப்பான பாதையை தேர்ந்தெடுத்தா நாளைக்கு உன்னை பாத்து நாலு பேர் அதே பாதையில போவாங்க. ஏன், உன் குடும்பம் கூட வழி மாற வாய்ப்பிருக்கு. இதெல்லாம் நடக்க வேண்டாம்னா உனக்குள்ள தேடு.
குறிக்கோள் இருக்கணும்னு அவசியம் இல்லை. ஆனா நீ இந்த உலகத்துல இருக்கீன்னா ஏதோ ஒரு காரணம் இருக்கும். அதை தேடி கண்டுபிடி. அது நோக்கி உன் வாழ்க்கையை செலுத்து. இந்த ஸ்ட்ரெஸ் எல்லாம் தானா தூர ஓடி போயிடும்.” என்றவளை இன்னுமே புரியாமல் பார்த்தான் அகிலன்.
“இன்னும் என்ன?”
“சந்துருவும் இதே தான் சொல்றான். எனக்குதான் எங்க ஆரம்பிக்குறதுனு ஒன்னும் தெரியல. வேற வழியே இல்லாம இந்த வேலையில சேர்ந்தேன். இப்போ திரும்பி போக முடியும்னு தோணல.”
“ஏன் திரும்பி போகணும்னு நினைக்குற. இதுவரைக்கும் கத்துகிட்டத வச்சி நேரா அடியெடுத்து வச்சி முன்னேறி போ.”
‘இந்த வேலையில எங்க முன்னேற…’ என்று முணுமுணுப்புடன் அவளை பார்த்தான்.
“ஹவ் ஆர் யூனு கேட்டா என்ன சொல்லுவ?”
கண்களை சுருக்கியவன், “ஏதோ போகுதுனு சொல்வேன்.”
“ம்கூம்… இப்போலேந்து எக்ஸலெண்ட்டா இருக்கேனு சொல்லிப் பாரு. உனக்கே ஒரு எனர்ஜி வரும். நான் இப்படி மூச்சு புடிச்சு பேசுறதால மட்டும் உன் மைண்ட் மாறிடாது, நான் நல்லா இருக்கேன்னு என் லைப் நல்லா போகுதுனு நீ நம்பனும். அப்போதான் எல்லாம் மாறும்.
பிஸிக்கல் ஹெல்த்தை விட மெண்டல் ஹெல்த் தான் மாஸ்டர். மைண்ட் நல்லாயிருந்தா பிஸிக்கல் ஹெல்த்தும் நல்லா இருக்கும். புடிச்சது பக்கம் கவனத்தை திருப்பு.” என்றவள் தானே உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்து அவனுக்குக் கொடுத்தாள்.
எந்த எதிர்ப்பும் இல்லாது வாங்கிப் பருகியவன் அவளை குழப்பமாய் பார்க்க,
“இந்த வேலையெல்லாம் மறந்து ஒரு ரெண்டு நாள் லீவ் எடுத்து யோசி. என்ன பண்ணனும்னு உனக்கே புரியும், வெளில இருந்து நாங்க சொல்லணும்னு அவசியமே இல்லை.”
சரியென்று தலையசைத்து விடை பெற்றவன் யோசனையோடே கிளம்பிச் சென்றான். செல்லும் அவனையே பார்த்து நின்றவள் தளர்வாய் அமர்ந்து அவனுக்கு சொன்னதையே தனக்கும் ஒருமுறை சொல்லிக்கொண்டு உடற்பயற்சி செய்ய தயாரானாள்.
அன்றைய வேலைகள் முடிந்ததும் விஷுவுக்கு இரவு வாழ்த்து அனுப்பிவிட்டு படுக்க, அவன் அழைத்துவிட்டான். இவளுக்கு அடிபட்டதிலிருந்து இந்த புது பழக்கம் துவங்கியிருந்தது. அவள் நலம் வேண்டி எந்நேரமானாலும் அழைத்து பேசும் வேலையில் அவள் இல்லையென்பதால் இப்படி குறுஞ்செய்தி அனுப்ப சொல்லியிருந்தான் விஷு. அவனுக்கு இவளை தனியே விடவே ஒப்பவில்லை, ஆனால் அவள் பிடிவாதமாய் இருக்கும் போது என்ன செய்வது…
“பிசியோ பண்ணியா? எல்லாம் ஓகேவா? இம்ப்ரூவ்மென்ட் இருக்கா?” என்று இரவு அழைத்து கேட்டுக்கொள்வான்.
“தினம் இதையே தான் கேக்குற விஷு…”
“வேற என்ன கேக்க சொல்ற? உன் வேலையை பத்தி வாயை துறந்தாலே க்ரைம் ஸ்டோரி டெலிகாஸ்ட் ஆகும். சரி, என்ன சொல்றான் உன் சபார்டினேட்? அதுக்கப்புறம் உன்னை டிஸ்டர்ப் பண்ணானா?” என்று அவன் கேட்டதுமே கோவிலில் அவன் ஏற்படுத்திய பதட்டம் நினைவுக்கு வந்தது.
“அதி?”
“ஹான்… அவன்தான் டிஸ்டர்ப்டா இருந்தான். பேசி அனுப்பி இருக்கேன்.” என்றாள் சிறிய குரலில்.
“என்னவாம்?”
“அவனுக்கு எதுலையுமே பிடிப்பு இல்லை. மேனேஜ் பண்ண தடுமாறுறான்.”
“ரொம்ப எல்லாம் தலைக்கு ஏத்திக்காத அதி.”
“ஐ க்னோ.” என்றளவளுக்கு அகிலன் நினைவு மீண்டும் வந்தது. ஏதோ விவகாரமாய் சொல்லப் போகிறான் என்று எதிர்பார்த்தவளுக்கு அவன் பேச்சு ஆசுவாசம்தான்.
அவன் குழம்பி என்னையும் தேவையில்லாது குழப்பி விட்டான். வாழ்க்கையில் பிடிப்பு வந்துவிட்டால் நாளையே வந்து நன்றி சொல்லிவிட்டு வாழ்க்கையிலிருந்து வெளியேறிவிடுவான். விஷு சொல்வது போல் இதையெல்லாம் தலைக்கு ஏற்றாமல் இருப்பது நல்லது என்று உறக்கத்திற்கு சென்றாள்.
அவள் சொன்னது போல் இரண்டு நாள் விடுப்பு எடுத்து சுற்றித் திரிந்து மனதை நிலைப்படுத்த முயன்று, சுற்றத்தை கவனித்து அகிலன் கண்டுகொண்டது என்னவோ வாழ்க்கை மீதான அவனது நிராசை தான் அவனை தவறான பாதையில் இயக்குகிறதோ என்று சிந்தித்தான்.
உடன் யாருமில்லையென்றாலும் ஒரு கையை வைத்துக்கொண்டு இத்தனை தன்னம்பிக்கையுடன் அதிரா வலம் வருகிறாள் என்றால் அது அவளது வாழ்க்கை முறையின் பிரதிபலிப்பின்றி வேறென்ன…
இவனோ பிடிப்பின்மையை சுற்றி இருக்கும் நண்பர்களிடம் குடும்பத்திடமும் கடத்தி அவனும் நிம்மதியிழந்து அவர்களையும் ஐயத்துடன் தானே வைத்திருக்கிறான். ஒருவேளை அவள் சொல்வது போல் இருந்துதான் பார்ப்போமே. என்னவாகிடப் போகிறது…
முடியாது என்று ஒதுக்கிவிடுவதற்கு பதில் முடியும் என்று நம்பிப் பார்ப்போமே…
error: Content is protected !!