Skip to content
Post Views: 4,841
அத்தியாயம் – 15
“இப்படி அவசரமா கிளம்பி வந்திருக்க வேண்டாம் விஷூ.”
“ஜுரம் வந்து முடியாம இருக்க, வேலை செய்றவங்களும் வரலை. எப்படி தனியா சமாளிப்ப?”
“அதுக்காக இப்படி கிளம்பி வருவீயா?”
Advertisement
“உனக்கு ஒன்னுன்னா நான் வராம யார் வருவா அதி?”
“ஜஸ்ட் பீவர்தான் விஷூ.”
“பாத்தாலே தெரியுது. நேத்தி வீடியோ கால்ல பாக்கும் போது நல்லா இருந்த. இப்படி ஒரே நாள்ல பீவரை இழுத்து விடுற அளவுக்கு அப்படி என்ன பண்ண?”
Advertisement
அவள் விழிகள் அகிலனிடம் சென்று மீண்டது. நேற்று அவனிடம் வார்த்தை விட்டபின் ஏதேதோ நினைவுகள் அவளைப் போட்டு அலைக்கழிக்க, காலை கண்விழித்தால் உடல் சோர்ந்து கொதித்தது. உடலோடு மனதும் சோர்ந்துவிட, யாரிடமாவது பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்ற விஷுவுக்கு அழைத்து பேசினாள். மாத்திரை போட்டால் சரியாகிவிடும் என்று சமாதானம் சொல்லியே வைத்தாள், இப்படி விஷுவை நேரே எதிர்பார்க்கவில்லை.
Advertisement
“ஒர்க் அதிகம் விஷு. அலைச்சல் வேற…” என்றவளை நம்பாத பார்வை பார்த்தான் விஷு.
யுபிஎஸ்சி பயிற்சிக்கு என அவள் டெல்லி வந்த நாள்முதல் அவளைத் தெரியும். கல்லூரி முடித்து அந்த இருபது வயதிலேயே அத்தனை தீர்க்கமாய் அழுத்தமாய் இருந்தவள் அவள். முதல் முறை தோல்வியைத் தழுவி இரண்டாம் முறை படிக்க டெல்லி வந்து எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாகட்டும் அதன்பின் பெற்ற காவலருக்கான பயிற்சியாகட்டும் அனைத்திலும் அவளின் உத்வேகத்தையும் தன்னம்பிக்கையும் பார்த்திருக்கிறான். என்றும் எதற்கும் சோர்ந்ததே இல்லை அவள். உடல் உபாதைகள் அண்டாத வண்ணம் தன் உடலை அத்தனை சிரத்தை எடுத்து பார்த்துக்கொள்வாள். கேட்டால் என்னை நான்தானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பாள். யாரையும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் நான் இல்லை என்று அனைத்தையும் திடமாய் எதிர்கொள்பவள் இன்று சோர்வாய் பேசுவது மனதை உறுத்தியது.
விஷுவின் வருத்தம் அவன் முகத்தில் தெரிய, “ஹே! நான் என்ன மிஷினா உடம்பு அப்படியே இருக்க… சின்ன சின்ன இஸ்யூஸ் வரத்தான் செய்யும்.” என்று சமாதானம் போல சொன்னாள்.
Advertisement
“இதுமாதிரி நீ சோர்ந்து இருந்ததே இல்லை அதி. லாஸ்ட் டைம் ஆக்சிடென்ட் ஆனப்போ கூட சீக்கிரம் இயல்புக்கு வரணும்னு அப்படி ஒர்க்அவுட் பண்ண. இப்போ இந்த சின்ன ஜுரத்துக்கே ஆள் உள்ள போன மாதிரி தெரியுற.”
“அது உன் பிரம்மைடா லூசு. ரெண்டு கிலோ வெயிட் ஏறி இருக்கேன் நானு.” என்று சொல்லிக்கொண்டே குனிந்து தன்னைப் பார்த்தாள்.
“நீ பேசாம டிரான்ஸ்பர் வாங்கிட்டு நார்த் வந்துடு. அம்மா கூட ரொம்ப கவலைப்பட்டாங்க.” என்றான் விஷூ மனது கேளாமல்.
“ஒரு சின்ன ஜுரத்துக்கு ட்ரான்ஸ்பரா?” பக்கவாட்டில் தலை சரித்து முகம் சுருக்கிக் கேட்க,
“இங்க தனியா இருக்கீல்ல… அங்கன்னா என் பிரெண்ட்ஸ் உன் பிரெண்ட்ஸ் அவங்க பேமிலினு எல்லாரும் இருக்கோம்.” என்ற விஷுவின் கேள்விக்கு,
“நான் எங்க தனியா இருக்கேன். பாரு இதோ அகிலன் இருக்கான், பரிதி இருக்காரு. போன முறை பரிதி அம்மா ஜானகி ஆன்டி இங்க வந்து என்னை பாத்துக்கிட்டாங்க.” என்றதும் அதுவரை கடுப்புடன் அவர்களை பார்த்துக்கொண்டிருந்த அகிலனின் முகம் சட்டென மின்னியது.
சமாதானம் அடையாதவனாய் இன்னும் அங்கு நின்றுகொண்டிருந்த அகிலனை பார்த்துவிட்டு அதிராவைப் பார்த்தான் விஷு.
“சரி உக்காரு விஷு. கடைசி நேரத்துல பிளைட் டிக்கெட் எல்லாம் அதிகமா இருக்குமே. ஏன் இப்படி வேஸ்ட் பண்ற?”
“எனக்கு இதுமாதிரி ஆச்சுன்னா நீ அங்க வர இப்படி டிக்கெட் விலையெல்லாம் பாத்துட்டு இருப்பீயா?”
“சின்ன காய்ச்சலுக்கு எல்லாம் நான் ஏன் உன்னை பாக்க வரப்போறேன். எனக்கு வேலை இருக்குப்பா.” என்று அவனை வாரிவிட்டு லேசாக சிரித்தவள் தொண்டை பிடிக்கவும் செருமி இறுமினாள்.
எள் என்றால் எண்ணையாய் இருப்பதற்கான அர்த்தத்தை அன்று உணர்ந்தாளோ… நொடி நேரத்தில் அவளுக்கு தண்ணீர் எடுத்து வந்து நீட்டியிருந்தான் அகிலன். ஆச்சர்யமாய் பார்த்தாலும் மறுப்பைக் காட்டாது தண்ணீர் வாங்கிப் பருகினாள்.
“ஹாட் வாட்டர் தானே?” இடைஞ்சலாய் புகுந்தான் விஷு.
நாக்கை கடித்துக்கொண்டு இல்லை என்று தலையசைத்தான் அகிலன்.
“இந்த டைம்ல ஹாட் வாட்டர் தான் பெஸ்ட்.” என்றவன் அதிராவிடமிருந்து தண்ணீரை பிடுங்கி, “ஹாட் வாட்டர் எடுத்துட்டு வா.” என்று அகிலனை ஏவினான்.
நீ ஆடர் போட்டா நான் கேட்கணுமா என்று கடுமை பூசிய வண்ணம் அழுத்தமாய் நின்றான் அகிலன். விஷு அவனை எதுவோ சொல்லப் போக,
“இல்லை எனக்கு போதும்.” என்றாள் அதிரா.
“சரி அகிலன். யாரும் இல்லாதப்போ அதியை பாத்துக்கிட்டதுக்கு தாங்க்ஸ். நீங்க கிளம்புங்க, இனி நான் பாத்துக்குறேன்.” விடை கொடுக்கும் விதமாய் விஷு எழுந்து நிற்க, அகிலன் அதிராவைத் தான் பார்த்தான்.
“ம்ம், கிளம்புங்க அகிலன். ஐ அம் ஓகே.” என்ற அதிராவின் பேச்சுக்கு பின் அவன் அங்கு நிற்கவில்லை. விறுவிறுவென வெளியேறிவிட்டான். விஷூ சொல்லி அவள் தன்னைக் கிளம்பச் சொல்லிவிட்டாள் என்ற கடுப்பு.
“ஏன் இப்படி பட்டுனு பேசுற அவன்கிட்ட? எனக்காக வந்தான்…” அகிலன் சென்றதும் அதிரா நண்பனை கடிய,
“நீ எப்போதும் இப்படித்தானே அவன்கிட்ட பேசுவ. இப்போ என்ன புதுசா?” பொறாமை எட்டிப்பார்த்ததோ…
“நான் பேசுவேன்னா எனக்கு அதிகாரம் இருக்கு.”
“அதிகாரம் இருக்குனு யாரையும் வீட்டுக்குள்ள கிட்சன் வரைக்கும் விடமாட்டியே. இவன் என்ன புதுசா வரான்?”
“ம்ச்… என்னோட எல்லா செயலுக்கும் விளக்கம் கொடுக்கணும் அவசியம் இல்லை விஷு. இதை இத்தோட விடு.” என்று சற்று கடுமையாக சொல்ல, விஷுவுக்கு பொறுக்கவில்லை. அவனுக்காக என்னை பேசுவாளா என்று உள்ளுக்குள் கனன்றாலும் அவளின் உடல்நிலம் பேண எண்ணி பேச்சை அத்தோடு நிறுத்தியவன் இரவு அவளுக்கு ஏத்தவாறு சமைத்துக் கொடுத்தான்.
இரவும் மாத்திரை போட்டுவிட்டு நேரமே அதிரா படுக்கச் சென்றுவிட, அதிராவின் தந்தைக்கு அழைத்தான் விஷூ.
“என்ன திடீர்னு உடம்பு முடியல? என்கிட்ட சொல்லல அவ.” வருத்தத்துடன் கேட்டார் அவர்.
“எதையோ மனசுல போட்டு குழப்பிட்டு இருக்காளோனு தோணுது. நீங்க சாதாரணமா பேசுற மாதிரி நாளைக்கு பேசிப் பாருங்க.”
“அவ பேச மாட்டா.” என்றார் மகளைப் பற்றி தெரிந்த தந்தையாய்.
“அவ பேசலைன்னா நீங்களும் பேச மாட்டிங்களா? சொந்த பொண்ணுகிட்டேயே அவ்ளோ ஈகோவா?” வார்த்தை தடித்து வந்தது விஷுவிடமிருந்து.
“என் பொண்ணுகிட்ட நான் ஈகோ பாக்குறேனா. பெத்த பொண்ணை பத்தி மூணாவது மனுஷனுங்க கிட்டயிருந்து ஒவ்வொரு முறையும் தெரிஞ்சிக்கும் போதும் நான் படுற வேதனை எனக்குத்தான் தெரியும். அவளை கிட்ட வச்சிக்கவும் முடியாம யாரோ மாதிரி எட்ட நின்னு பாக்கவும் முடியாம தவிக்குற தவிப்பு இருக்கே…” உணர்ச்சியின் பிடியில் பேசிக்கொண்டே சென்றவர் சட்டென நிதானித்து பேச்சை நிறுத்திவிட்டார்.
“எமெர்ஜென்சினா கூப்புடு.” என்று அழைப்பை துண்டித்தார்.
போனை நெற்றிக்கு முட்டுக்கொடுத்து பெருமூச்சு விட்ட விஷு அவனுக்கென்ன ஒதுக்கப்பட்டிருந்த விருந்தினர் அறையிலிருந்து வெளிவந்து அதிரா அறையைப் பார்த்தான். எந்தவித சத்தமும் வெளிச்சமும் இல்லாது அமைதியாய் இருக்க, திரும்ப அறைக்கே சென்றுவிட்டான்.
காலை விடிந்ததும் முதல் வேலையாய் அதிராவின் உடம்பு எப்படி இருக்கிறது என்று பார்க்கச் செல்ல, வீட்டு வாயிலில் யாரிடமோ அவள் பேசுவது கேட்டது. புருவ முடிச்சுடன் வேக எட்டுக்கள் எடுத்து வைத்து அதிராவைத் தாண்டி எட்டிப்பார்க்க, வியர்வைத் துளிகள் முகத்தை நிறைத்த வண்ணம் மலர்வாய் நின்றிருந்தான் அகிலன்.
‘இவனா?’ அதிர்ந்த விஷு உடனே அவர்களை நெருங்கினான்.
“என்ன காலையிலேயே?” இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் விஷுவின் முகம் தீவிரத்தை காட்டிக்கொடுத்தது.
“ஆடாதோடை சூப் சளி, இருமலுக்கு நல்லதாம்.” அதிரா பதில் கூறி கையிலிருக்கும் சூப்பை காண்பித்தாள்.
“ஓ! இதெல்லாம் கிடைக்குதா?”
“நான் போற ஜிம் பக்கத்துல தினம் விப்பாங்க.” என்ற அகிலன் பார்வையை திருப்ப, அதிரா அந்த சூப்பை முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அப்படி பாத்தா குடிக்கவே தோணாது. சாப்டுட்டு அப்படியே கப்புனு குடிச்சிடுங்க.” என்றான் அகிலன்.
புருவம் உயர்த்தி கண்களை சுருக்கிய அதிரா, “டேஸ்ட் நல்லா இருக்கும்னு தோணல.”
“உடம்புக்கு நல்லதுன்னா நீங்கதான் என்னத்தை வேணும்னாலும் சாப்பிடுவீங்களே… நல்லதுன்னு மனசுல பதிச்சிகிட்டு குடிச்சிடுங்க.” என்றவன், “இன்னைக்கு வள்ளி வர்றாங்களா இல்லை நான் எதுவும் வாங்கிட்டு வரவா?”
“செஃப் நான் இருக்கும் போது அதிக்கு வெளில சாப்பாடா…” என்று கேட்டுக்கொண்டே அதிராவை நெருங்கி அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான் விஷு.
அவன் கையை தட்டிவிட்டவள், “சரியாகியிடுச்சு விஷு.” என்றபடியே அகிலனிடம் தலையசைத்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.
‘உள்ள கூப்பிட மாட்டாங்களா. அவ்வளவுதானா?’ என்று அகிலன் ஏமாந்து நிற்க, பின்னோடே சென்றான் விஷு.
“என்ன ப்ரேக்பாஸ்ட் செய்ய?” கேட்டுக்கொண்டே அவள் அருகில் அமர்ந்தான் விஷு.
“நைட் நட்ஸ் ஊற வைக்க மறந்துட்டேன். உப்புமா மாதிரி லைட்டா ஏதாவது பண்ணு.” என்ற அதிரா அலைபேசி எடுத்து வள்ளிக்கு அழைத்தாள். வள்ளி இன்றும் வர முடியவில்லை என்று சொல்ல, நெற்றியை தேய்த்துக்கொண்டவள் ஏதோ சிந்திக்க,
“என்ன யோசனை?”
“கை பாரலைஸ் ஆனப்புறம் வள்ளிதான் ஹேர் பன் பண்ணிவிடுவா. இன்னைக்கு அவ வரலையாம்.”
“ப்ஃபூ… இவ்ளோதானா? போயி கிளம்பி வா, நான் பண்ணி விடுறேன்.”
“என்ன நீயா?” ஆச்சர்யமாய் பார்த்தாள் அதிரா.
“எங்க கிட்சன்ல ஒரு நாளைக்கு எத்தனை பன் பேக் பண்றேன் தெரியுமா… என்னை பாத்து இப்படி கேட்டுட்டீயே.”
“அந்த பன்னும் இந்த பன்னும் ஒன்னா?” என்று செல்லமாய் முறைத்தாள் அதிரா.
“ஒன்னோ ரெண்டோ உனக்கு இன்னைக்கு நாந்தான் பண்ணி விடுவேன்.” என்று அவன் பிடிவாதமாய் சொல்ல, என்னவோ செய் என்று எழுந்தவள் இடக்கையால் நீண்டு விரிந்திருக்கும் முடியை முறுக்கி கொண்டையாக மேலே சுற்றியவள், “என் ஹேர் க்ளிப் பெட்சைட் டேபிள்ல இருக்குடா. எடுத்து கொஞ்சம் க்ளிப் பண்ணிவிடு.” என்று தன் தலையை சுட்டிக்காண்பிக்க, அவள் சொன்னபடியே எடுத்து வந்து போட்டுவிட்டான்.
இவளும் சின்ன சிரிப்புடன் நன்றியுரைத்து குளித்து காவல் உடையில் கிளம்பி வந்தாள். விஷு உணவு தயார் செய்து வைத்திருக்க, ஸ்பூனால் உண்டாள்.
“ம்ம்… நான் ரெடி. வந்தா பன் போட்டுருவேன்.” என்று எழுந்து நின்றான் விஷு.
“பார்ரா ஆர்வத்தை…” என்றபடி அவனுக்கு முதுகு காட்டி வாகாய் அமர்ந்துகொள்ள, விஷு சீப்பால் தலை வாரினான்.
முடியின் நுனியை பிடித்துக்கொண்டு அவன் சிக்கு எடுத்த போது எதையும் உணராதவள் அவள் கழுத்துக்கு மேல் புரடியில் முடியை சேர்த்துப் பிடித்து வார, அவன் விரல்கள் மென்மையான அவளது பின்னந்தலையில் ஊறி முதுகில் பட்டும்படாமலும் ஊர்வலம் நிகழ்த்த, அசவுகரியமாய் உணர்ந்து நெளிந்தாள் அதிரா.
“ஆடாம இரு அதி.” முடியை அழுத்திப் பிடித்து கண்டித்தவன் சிரத்தையாய் செய்யும் வேலையில் கவனம் பதித்தான்.
இடக்கையை பின்னே கொண்டு வந்து முடியை பிடித்தவள், “விடு விஷு. ஒரு நாள் பன் போடலைன்னா ஒன்னும் பிரச்சனை இல்லை. எல்லாம் நம்ம கம்ஃபோர்டுக்கு தான்.” என்றாலும் அவன் விடவில்லை.
அவள் விருப்பமின்மை புரியாது, “ஹே! நான் நல்லா போட்டு விடுவேன் அதி. கொஞ்சம் வெய்ட் பண்ணி காமியேன்.”
பட்டென்று திரும்பியவள், “வேண்டாம்னு சொல்றேன்ல.” என்று சொல்ல, அவள் குரலில் இருந்த ஏதோவொன்று அவனை தள்ளி நிறுத்தியது. முடியை அப்படியே விட்டுவிட்டு இரண்டடி பின்னே வைத்தவன்,
“என்ன அதி?”
“இப்படியெல்லாம் பண்ணாத விஷு. எனக்கு கம்ஃபோர்ட்டா இல்லை.” முகத்திற்கு நேரே சொல்லியே விட்டாள்.
“ஏன்? ஏன்?” எகிறிக்கொண்டு வந்தான் அவன்.
“என்ன ஏன்? செட் ஆகலைன்னா விடேன்.” பேச்சை கத்தரிக்கவே எண்ணினாள் அதிரா. அவளுக்கே இந்த பேச்சு எங்கு செல்கிறது என்று விளங்கவில்லை. ஏன் அசவுகரியமாய் உணர்கிறாள் என்றும் தெரியவில்லை. முன்பு விபத்து நடந்த போது அன்றாட வேலைக்கு பெண் துணை இருந்ததால் இவன் ஆறுதல் எல்லாம் பேச்சோடு நின்றுவிட்டது. இங்கு வந்த பின்தான் அதிகமாய் உரிமை எடுத்து நெருங்குகிறானோ என்ற எண்ணம்.
அடிபட்ட பார்வையோடு அதிராவை கடைக்கண்ணில் பார்த்தான் விஷு. அப்படி என்ன அத்துமீறிவிட்டேன் என்று விலக்கி வைக்கிறாள். இவளுக்காக இவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தள்ளி இருந்தால் இப்படித்தான் பேசுவாளா என்று கோபமும் ஆதங்கமுமாய் நின்றான்.
அவனை நேராய் சந்திக்க முடியாது தாண்டிச் சென்றவள் பட்டை க்ளிப் ஒன்றை ஏனாதானோவென முடியை சேர்த்துப் பிடித்து போட்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள்.
கொண்டை போடாது தலையை சீராகவும் வாராது வித்தியாசமாய் இருந்தவளை அலுவலத்தில் ஒருமுறைக்கு இருமுறை பார்த்துவிட்டே நகர்ந்தனர். பரிதியும் கவனித்தானே ஒழிய நாகரிகம் கருதி கேட்டுக்கொள்ளவில்லை.
“ஐ.ஜி டீம் பார்ம் பண்ணி கேஸை சீக்கிரம் க்ளோஸ் பண்ண சொல்லியிருக்கார் பரிதி. இன்வெஸ்டிகேட் பண்ண எபீஷியன்ட் இன்ஸ்பெக்டர்ஸ், அசிஸ்ட் அண்ட் டாகுமெண்ட் ஒர்க்ஸ் பாக்க ரெண்டு மூணு கான்ஸ்டபிள்ஸ், லேடி போலீஸ் எல்லாம் சேர்ந்து ஒரு டீம் உருவாக்கனும். சுத்தி இருக்குற ஸ்டேஷன் டீடெயில்ஸ் எல்லாம் கொடுங்க.” என்று கேட்டு வாங்கிக்கொண்டவள் அவளாகவே குழு அமைத்தாள்.
குப்பை கிடங்கு இருக்கும் இடத்தைச் சுற்றி இருக்கும் ஐந்து காவல் நிலையங்கள் அனைத்திலிருந்தும் ஒன்றிலிருந்து இரண்டு காவலர்களை குழுவில் எடுத்தவள் அகிலன் வேலை செய்யும் நிலையத்திலிருந்து அவனையே குழுவில் சேர்த்தாள். அனைவருக்குமான வேலை பிரித்துக்கொடுக்கும் பணியை பரிதியுடன் சேர்ந்து பார்த்தாள்.
“ஒரு டீம் மிஸ்ஸிங் கேஸ் விசாரிக்கட்டும். இன்னொரு டீம் பாரென்சிக் ரிப்போர்ட்ஸ் பாலோ செஞ்சு க்ரைம் ஸீனோட எவிடென்ஸ் கலெக்ட் பண்ணி கோஆர்டினட் பண்ணட்டும். நீங்க இவங்க எல்லாரையும் உங்க கண்ட்ரோல்ல வச்சிக்கோங்க. விசாரணைல கிடைக்குற ஒரு சின்ன விஷயம் கூட மிஸ் ஆகாம என்கிட்ட கொண்டுவர்றது உங்க பொறுப்பு. இது ஒரு டீம் எபோர்ட். சோ, எல்லாரும் கோஆப்ரேட் பண்ற மாதிரி பாத்துக்கோங்க.” பரிதியிடம் சொன்னது போலவே தேர்ந்தெடுத்த எட்டு பேர் கொண்ட குழுவை மறுநாள் ஒரே இடத்தில் கூட்டி என்னென்ன செய்ய வேண்டும், எதிலெல்லாம் கவனம் எடுத்து விசாரிக்க வேண்டும். அவர்களின் விசாரணை எங்கிருந்து துவங்குகிறது என்பது வரை அனைத்தையும் விளக்கினாள்.
கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்து போக, அகிலன் தேங்கி நின்றான். அதிரா என்ன என்பது போல் பார்க்க,
“அசிஸ்ட் பண்ணத்தானே என்னை சேர்த்திருக்கீங்க.” என்றவாறே அவளை நெருங்கியவன் அவள் அமர்ந்த இடத்திலிருந்த அவளுடைய கோப்புகளை எடுத்துக்கொண்டு அவளை முன்னே நடக்கும்படி கைகாட்டினான்.
“இன்னைக்கு வாங்கிட்டு வந்த நெல்லிக்காய் சூப் நல்லா இருந்துச்சு.” சிறு புன்னகையுடன் சொல்லிவிட்டு முன்னே நடந்தாள்.
அகிலன் பற்கள் தெரிய சிரித்தவன் அவளை நெருங்கி அதே சமயம் அவளை தொந்தரவு செய்யாது மற்றவர் பார்வைக்கு உறுத்தாது பின்தொடர்ந்தான்.
“அந்த கடை ரொம்ப பேமஸாம். ஜிம் போகவும்தான் இது மேல எல்லாம் பார்வை போகுது.” என்றான் அகிலன் இயல்பாய்.
“ஆமாமாம் இல்லைனா சார் கண்ணுக்கு ரம்மு, விஸ்கி மட்டும்தானே தெரியும்.” கேலி அவள் பேச்சிலே ஒட்டியிருந்ததோ.
“அதெல்லாம் இப்போ நாலு நாளா தொடுறது இல்லை.”
“நாலு நாள்… ம்ம்ம், பெரிய விஷயம்தான்.”
“கிண்டலா இருக்கா மேடம். ரெண்டு நாள் ஜிம் போனதுக்கே என் உடம்பு தாங்காம போய் குடிச்சிட்டேன். இப்போதான் திரும்ப கண்ட்ரோலா இருக்கேன்.”
“அதுல மட்டும் கண்ட்ரோலா இருக்குறது பத்தாது. வேலையில மேல வரப்பாரு.” என்றவள் அதற்குள் அறைக்கு வந்திருக்க, இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டாள்.
அகிலன் கோப்புகளை அவள் எதிரே வைத்துவிட்டு அடுத்து என்ன என்பது போல் அவளைப் பார்த்தான்.
“ஜிம்முக்கெல்லாம் போறியே ஏதோ புத்தி வந்திருக்குனு நினைச்சிதான் இந்த டீம்ல உன்னை சேர்த்திருக்கேன். சும்மா டெஸ்க் வொர்க் மட்டும் பாக்காம இதை ஒரு வாய்ப்பா எடுத்துக்குட்டு பீல்டுல இறங்கி வேலை கத்துக்குட்டு முன்னேற வழியப் பாரு.” என்றதற்கு பலமாய் தலையாட்டினான் அகிலன்.
“தலை பலமா ஆடுதே… நம்பலாமா?” சந்தேகமாய் அவள் பார்க்க,
“இத்தனை நாள் குறிக்கோள் இல்லாம வேலை பாத்தோமா சம்பளம் வாங்குனோமான்னு இருந்தேன். இப்போ அப்படியில்லை மேடம்.” என்றவனை யோசனையாய் பார்த்தாள் அதிரா. திருந்திவிட்டானா என்ற கேள்வி அதில் தொக்கி நிற்க, புரிந்துகொண்ட அகிலன்,
“போக போக நீங்களே புரிஞ்சிப்பீங்க.” என்றவன் சல்யூட்டு வைத்துக் கிளம்பினான்.
கண்மூடி பின்னே சாய்ந்த அதிராவின் கவனம் வேலை நேரத்தில் அதில் செல்லாமல் சொந்த விஷயத்தில் சென்றது. இன்று காலையும் அகிலன் வந்து சூப் கொடுத்ததை பார்த்து கொதித்துவிட்டான் விஷு.
“இதெல்லாம் என்கரேஜ் பண்ணாத அதி.” என்று சொல்லிப்பார்த்தான்.
“உடம்பு சரியில்லைன்னு வாங்கிட்டு வரான். தினமுமா வரப்போறான்.” என்றாள் இவள்.
“நீ கொடுக்குற இடத்துக்கு தினம் வந்தாலும் வருவான்.”
“நான் இடம் கொடுக்கிறேனா… என்ன பேசுறேன்னு புரிஞ்சிதான் பேசுறியா விஷு?”
“எல்லாம் புரிஞ்சிதான் சொல்றேன். உன் வேலையில இதுமாதிரி யாரையும் பர்சனல்குள்ள விடமாடியே. இவனை மட்டும் ஏன் விடுற. ஜஸ்ட் அ சபார்டினேட்னு சொன்ன. நடந்துக்குறதை பாத்தா அப்படி தெரியல.” கோபம் கொப்பளிக்க சொன்னவனை அதே சீற்றத்தோடு பார்த்தாள் அதிராவும்.
“இப்போ என்ன நடந்துடுச்சுனு என்னை கேள்வி கேட்டுட்டு இருக்க?”
“எதுவும் நடந்துடக்கூடாதுனு தான் கேட்டுட்டு இருக்கேன்.” காட்டமாய் சொன்னான் அவனும்.
“அப்படி என்ன நடந்துடும்னு இப்படி கத்திட்டு இருக்க? நான் என்ன ஒன்னும் தெரியாத அம்மாஞ்சினு நினைச்சியா? யாரை எங்க வைக்கணும் வைக்கக்கூடாதுனு கூடத்தெரியாதா.” என்று அதிரா சத்தம் போட,
“யாரோ ஒருத்தனுக்காக என்னை பேசுறீல்ல அதி.” இயலாமையுடன் பார்த்தான் விஷு.
“யாருக்காவும் நான் பேசல. நீதான் தேவையே இல்லாம என்னை பாயிண்ட் பண்ண அதுக்கு நான் டிபென்ட் பண்றேன்.”
“இதுவரைக்கும் என்கிட்ட இதுமாதிரி நீ பேசுனதே இல்லை அதி. அவனுக்காக என்கிட்ட சண்டை போடுவீயா?”
“அவனுக்கான சண்டைனு நீயா நினைச்சிகிட்டா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது விஷு. இந்த வாக்குவாதத்துக்கு உன் பேச்சும் நடவடிக்கையும் தான் காரணம். நீ கிளம்பு, இங்கிருக்கிறது சரியா வராது.”
“ஓ, என்னையே போக சொல்ற அளவுக்கு வந்தாச்சா.”
என்றைக்கிருந்தாலும் தன் விருப்பத்திற்கு ஒத்து வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் இருந்தவனுக்கு விழுந்த முதல் அடியில் ஏமாற்றமும் ஆதங்கமும் வரப்பெற்றவனாய் வேதனை தோய்ந்த முகத்தோடு அப்போதே கிளம்பிவிட்டான் விஷு.
கோபத்தில் இப்படி உடனே கிளம்பிடுவான் என்று எதிர்பாராத அதிராவும் அதிர்ந்து, செல்பவனை சமாதானம் செய்யத் தோன்றாது அலுவலகம் கிளம்பி வந்திருந்தாள்.
இப்போது யோசித்துப் பார்த்தால் தனக்கிருக்கும் ஒரே நெருங்கிய உறவை இப்படி பேச எது தூண்டியது என்று விளங்கவில்லை. ஏன் அவனது உரிமையான செய்கைகள் அத்துமீறுவதாக தெரிகிறது, ஏன் பழையபடி அவனை நடத்தமுடியவில்லை, தனக்கு ஏன் அவனது பேச்சுக்கள் சுகிக்கவில்லை என்று யோசித்து யோசித்து களைத்துப் போனாள். வழக்குகள் வேறு குவிந்துக் கிடக்க, முயன்று தன்னை வேலையில் மூழ்கடித்துக்கொண்டாள்.
இரண்டு நாள் கழித்து ஒரு பைலுடன் ஆவலும் பதட்டமுமாய் அதிரா அறைக்குள் வந்தான் அகிலன்.
“என்ன இவ்ளோ பதட்டம். உக்காரு.” முதல் முறையாய் அவனை அமரச் சொல்லியதை கூட கருத்தில் கொள்ளாதவனாய் அவள் முன் பைலை வைத்தவன்,
“எங்க ஸ்டேஷனுக்கு வந்த கம்பளைண்ட் எல்லாத்தையும் தேடிப் பாத்தேன். அதுல எட்டு மாசம் முன்னாடி மிஸ்ஸிங் கேஸ் ஒன்னு க்ளோஸ் பண்ணாம இருக்கு. பேர் மாணிக்கம், அம்பது வயசு. குப்பை கிடங்கு இருக்குற ஊராட்சிக்கு வீ.ஏ.வோ.”
“கவர்மெண்ட் ஆஃபீசர் காணாம போயிருக்காரு என்ன பண்ணிட்டு இருக்கீங்க உங்க ஸ்டேஷன்ல?” கடிந்துகொண்டவள் அவன் கொடுத்த கோப்பை பிரித்துப்பார்த்தாள்.
“மூணு மாசம் தேடுனாங்க கிடைக்கலைங்கவும் அப்படியே மந்தமாகிடுச்சு. ரெண்டு மாசம் முன்னாடி அவரோட வைஃப்பும் உடம்பு சரியில்லாம இருந்து இறந்துட்டாங்க. பசங்க இல்லை அதுனால கேஸை பாலோ பண்ண சொல்லி அவங்க சைட்லேந்தும் பிரஷர் இல்லைங்கவும் கிடப்புல போட்டாங்க.”
“மாணிக்கத்தோட நெருங்கிய சொந்தக்காரங்களை கண்டுபுடி லைக் அவரோட கூடப்பிறந்தவங்க. அப்போதான் டீ.என்.ஏ எடுத்து கிடைச்சிருக்குற எலும்புக்கூடு மாணிக்கத்தோடதானு பைண்ட் பண்ண முடியும்.”
“நானா?” என்று பார்த்தான் அகிலன். ஒரு வழக்கில் அவனாக கண்டுபிடித்த ஒரு துரும்பென்றால் இதை பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். விசாரணை செய்தெல்லாம் பழக்கமே இல்லை. மேலதிகாரி சொல்வதை கேட்டு எளியோர்களிடம் முடிந்தமட்டும் அதிகாரம் காட்டுவான் வேறெதுக்கும் தேவையின்றி மூளைக்கு வேலை கொடுப்பதில்லை.
“உன் இன்ஸ்பெக்டர்கிட்ட நான் பேசிக்குறேன். நீ போய் இந்த வேலையைப் பாரு.” மேலதிகாரிக்காக யோசிக்கிறானோ என்று நினைத்து சொன்னாள் அதிரா.
“இல்லை… எனக்கு பழக்கம் இல்லை.” தனியாக முதல்முதலாக ஒரு விஷயத்தை எடுத்துச் செய்யப்போகும் தடுமாற்றம் தெரிந்தது அவன் உடல்மொழியில்.
“ஹே! கூல். ஏன் இவ்ளோ டென்சன்…” என்றவள் அவனை அமரச் சொல்லி வழக்கை எந்த கோணத்தில் எங்கிருந்து துவங்க வேண்டும் எதையெல்லாம் சிரத்தையெடுத்து ஒன்றிற்கு இரண்டுமுறை சரிபார்த்து கோப்புகளில் சேர்க்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தாள்.
அவள் சொன்னதை கவனத்துடன் கேட்டுக்கொண்டவன் நம்பிக்கை வரப்பெற்றவனாய் எழுந்தான்.
“நாளைக்கு என்ன சூப் வாங்கிட்டு வர?” மீசைக்கடியில் லேசாக விரியத் துடிக்கும் இதழ்களை இழுத்துப் பிடித்துக் கேட்டான். விஷு அஞ்சியது போல் அந்த பழக்கம் தினம் வாடிக்கையாகிவிட்டிருந்தது.
விரும்பியே அவனது அக்கறையை ஏற்றுக்கொண்டவள், “இதுவரைக்கும் ட்ரை பண்ணாதது எதுவும் இருந்தா வாங்கிட்டு வா.” என்றாள்.
“அப்போ கிளம்புறேன் மேடம். நாளைக்கு பாக்கலாம்.” என்று பளிச்சிடும் கன்னக்கதுப்புகளுக்கு இடையே அவன் மென்னகை புரிவது தெரிய இவளது இதழ்களும் மெல்ல விரிந்தது.
error: Content is protected !!