Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 26

அத்தியாயம்    26  ( 1 ) 

பக்கத்தில் கேட்ட சரசின் குரலில், பழைய நினைவிலிருந்து மீண்டவன் அன்னையைப் பார்த்தான்.

சரசு முதலில் ஜமுனாவை நலங்கு வைக்க சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார்.  ஜமுனா மறுத்து சரசுவை வைக்கச் சொல்லியும், விடாமல் ஜமுனாவை நலங்கு வைப்பதற்காக கைப்பிடித்து அழைத்து சென்றார்.

ஜமுனா மகளுக்கு நலங்கு வைத்து, தாய் வீட்டு சீராக தங்க வளையல்களை இரண்டு கையிலும் போட்டுவிட்டார்.  அடுத்து சரசு மருமகளுக்கு நலங்கு வைத்து நவரத்தின கற்கள் பதித்த வளையல்களை அணிவித்தார்.



Advertisement

அடுத்து ஒருத்தர் ஒருத்தராக நலங்கு வைக்க ஆரம்பித்தனர்.  பானுவின் பக்கத்தில் நின்றிருந்த பூர்ணியின் கைகளில் பெரிய தாம்பாலத்தட்டு இருந்தது.  அதில் கண்ணாடி வளையல்கள் பல வண்ணங்களிலும், பல அளவுகளிலும் பரப்பி வைக்கப்பட்டிருந்தது.

பக்கத்திலேயே நேயா நின்று, நலங்கு வைத்து வருபவர்களுக்கு எல்லாம் தாம்பூலம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.  சமீபகாலமாக பூர்ணி வீட்டாருடன் ஏற்பட்டிருந்த நெருக்கமான பழக்கத்தினால், ஜமுனாவும் மதுவும் அவளை சீமந்தத்திற்கு அழைத்திருந்தனர்.

அவர்களது அழைப்பை மறுக்க முடியாமல் வந்திருந்தாள்.  விடுமுறை தினமும் என்பதால், அவளுக்கு இன்னும் வசதியாக போனது.

Advertisement

நலங்கு வைத்து வந்த சொந்தத்தில் ஒருவர், பூர்ணியைப் பார்த்து ‘’ஏன்டியம்மா நீ எப்ப பேரப்பிள்ளைய பெத்துத் தர போற’’? என கேட்டு சென்றார்.

Advertisement

பூர்ணி அந்த மூதாட்டி கேட்டதற்கு பதில் ஏதும் கூறாமல் சிரித்தாள்.

நேயா, “இந்த கிழவிக்கு வேற வேலையே இல்ல போல.  சந்துல சிந்து பாடிட்டு போகுது…” என நக்கல் அடித்தாள்.

பூர்ணி, “விடுடி… வயசானவங்கன்னா அப்படிதான்… கண்டுக்காம விடு”.

Advertisement

எல்லோரும் நலங்கு வைத்து முடித்ததற்கு பிறகு, இறுதியாக சங்கரை அழைத்தார் சரசு.

சங்கர் அருகில் வந்ததும் அவனை சந்தனம் பூசி, குங்குமம் வைத்து, அட்சதை போடச் சொன்னார்.  சரசு சொன்னது போலவே முதலில் சந்தனத்தை எடுத்து பானுவின் கன்னத்தில் பூசியவன், நெற்றியில் குங்குமம் இட்டு, பன்னீர் தெளித்து, அட்சதை தூவினான்.

கணவனின் விரல்கள் சந்தனத்தில் குழைந்து கன்னத்தில் தீண்டிய குளுமையில்… மேனி சிலிர்த்து, இமைகளை தூக்கி கணவனை பார்த்தாள்.

மனைவியின் பார்வைக்காகவே காத்திருந்தவன் போல், அவள் பார்த்ததும் கண்களைச் சிமிட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சிரித்தான்.  அவனது குறும்பில் முகம் சிவந்தவள்… சுற்றியிருப்பவர்களை கண்களாலேயே சுட்டிகாட்டி, அவனை அடக்க முயன்றாள்.

கண் எடுக்காமல் மனைவியையே பார்த்து நின்றான்.   கன்னத்தில் இருந்த சந்தனமும், நெற்றியில் இருந்த குங்குமமும், தோளில் வழிந்த பூச்சரமும், கழுத்தில் போடப்பட்டிருந்த மாலையும், தலையில் ஒட்டியிருந்த மஞ்சள் கலந்த அட்சதையும் சேர்ந்து, அவளைப் பார்க்க பார்க்க திகட்டவில்லை அவனுக்கு.  அத்தனை மங்களகரமாக இருந்தாள்.

மனைவியை சில நொடிகள் அருகில் நின்று ரசித்தவன், அன்னையை நிமிர்ந்து பார்த்தான்.  அவனது பார்வைக்காக காத்திருந்தவர், சங்கரது கைகளில் ஒரு பையினைக் கொடுத்தார்.

அதைப் பிரித்து அதிலிருந்த நகைப் பெட்டியை கையில் எடுத்தான்.  கேள்வி கலந்த ஆச்சர்யத்துடன் அவனைப் பார்த்தாள்.

பானுக்கே இதுபற்றி தெரியாது.  அவளுக்கு சர்ப்பரைஸாக இருக்க வேண்டும் என்று, அவளுக்கு தெரியாமலேயே சென்று வாங்கி வந்திருந்தான்.

தங்கத்தில் ரூபியும் எமரால்டும் பதித்த நெக்லஸ், வளையல், காதணி, மோதிரம் என செட்டாக இருந்தது அதனுள்ளே.  அவளிடம் குனிந்து அதைக் காண்பித்தான். அதைப்பார்த்ததும் பானுக்கு வியப்பில் கண்கள் விரிந்து முகம் சந்தோஷத்தில் புன்னகை பூத்தது.

மனைவியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்தவனுக்கு மனம் நிறைந்தது.  முதலில் நெக்லஸை எடுத்து கழுத்தில் போட்டு விட்டவன்,..,  பின்பு இரண்டு கைகளிலும் அதே சிவப்பு பச்சை நிறத்தில் இருந்த, ரூபி… எமரால்ட்… கற்கள் பதித்திருந்த வளையல்களை மாட்டிவிட்டான்.  வலது கை மோதிர விரலில் மோதிரத்தையும் அணிவித்தவன், காதணியை மட்டும் அணிவிக்காமல் அப்படியே வைத்து மூடி, அன்னையிடம் அந்த பாக்ஸை கொடுத்து, மனைவியை பார்த்தான்.

சங்கர் அவளுக்கு ஒவ்வொன்றாக போட்டுவிட, போட்டுவிட கண் இமைக்காது அவனையே பார்த்திருந்தாள் காதலாக.

போட்டு முடித்து மனைவியை நிமிர்ந்து பார்த்தவனுக்கு மனைவியின்  கண்களில் தெரிந்த நேசத்தில் உருகி…, ஒற்றைப் புருவத்தை தூக்கி… உதட்டில் நெளிந்த புன்னகையுடன், பிடிச்சிருக்கா”…. என்றான்.

புன்னகையுடன்…. ஆமாம்…. என தலையசைத்தவள், “அழகாயிருக்கு… தேங்க்ஸ்”.  “எப்ப வாங்கினீங்க…?  சொல்லவேயில்ல…” என்றாள்.

“என் பொண்டாட்டிக்கு…., சர்ப்ரைஸ்…” என கண்சிமிட்டினான் சிரித்துக்கொண்டே.

நேயா, “அச்சோ…… பிடிங்கப்பா….. பிடிங்கப்பா……. இதையெல்லாம் போட்டோ பிடிங்கப்பா…….. லவ்ஸா பிழியறாங்க…… இரண்டு பேரும்.  இந்த சீனெல்லாம் பின்னாடி கிடைக்காது” என கிண்டல் செய்து கொண்டு நின்றிருந்தாள் பூர்ணியிடம்.

பூர்ணி, “ஹேய் சும்மா….யிருடி, யார் காதுலயாவது விழப் போகுது…” என அவளை அடக்கிகொண்டிருந்தாள்.

நேயா, யாருக்கும் கேட்காதவாறு குரலை இன்னும் தாழ்த்தியவள் “இவங்க லவ் மேரேஜா………?” என கிசுகிசுத்தாள் பூர்ணியிடம்.

பூர்ணி, “இல்லையே.  அரேன்ஜ்ட் மேரேஜ்தான்.  ஏன் கேட்கற?”

“ஒஹ்…  இவங்களோட லவ்ஸ் பார்த்ததும்… அப்படி தோணுச்சு”.

இதை பின்னால் நின்றிருந்த தரணி கேட்டுக் கொண்டிருந்ததை அறியவில்லை பூர்ணியும், நேயாவும்.  சங்கர் வரும் போதே அவனையும் சேர்த்து அழைத்து வந்திருந்தான்.  பானுவோடு சேர்ந்து நின்று போட்டோ எடுப்பதற்காக என்று.

சங்கருக்கு பின்னால் வந்தவன், சங்கர் நலங்கு வைத்து, மனைவிக்கு நகைகளை பூட்டி விடவும், இவர்களுக்கு பின்னாலேயே தேங்கி நின்றான்.  அதை பூர்ணியும், நேயாவும் கவனித்திருக்கவில்லை.

மேடை ஏறியதிலிருந்து நேயாவைத் தான் கவனித்துக் கொண்டிருந்தான்.  சரியான வாயாடி போல.  எங்கயாவது வாய் ஓயுதா இந்த பொண்ணுக்கு.  சலசல சலன்னு பேசிட்டேயிருக்கா.  வாய் வலிக்காதா…..? என அவளையே ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.

நலங்கு முடிந்ததும் தம்பதியர்கள் ஒன்றாக சேர்ந்து நின்று எல்லோரிடமும் ஆசிவாங்கினர்.  பானுவிற்கு வயிறு பெரியதாக இருப்பதால் கீழே விழுந்து எழுவதற்கு சிரமமாக இருக்கும் என்று விழுந்து வணங்க வேண்டாம் என்று, நிற்க வைத்தே எல்லோரும் அட்சதை தூவி ஆசிர்வதித்திருந்தார்கள்.

சரசு சங்கரிடம் பானுவை சாப்பிடுவதற்காக அழைத்து வரச் சொல்லிச் சென்றார்.  அவனும் பானுவின் கையைப் பிடித்து மெல்ல சாப்பிடுவதற்காக அழைத்துச் சென்றான்.

பானுவின் பக்கத்திலேயே சங்கரும் தரணியும் அமர்ந்துகொண்டனர் சாப்பிடுவதற்காக.  இலையில் இருந்த ஐட்டங்களைப் பார்த்ததும் பானுக்கு வயிறு நிறைந்தது போல் ஆனது.

சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், கருவேப்பிலை சாதம், மிளகு சாதம், தயிர்சாதம் என நிறைய வைத்திருந்தார்கள்.

இது இல்லாமல் வெஜிட்டபிள் புலாவ், சப்பாத்தி, வைட் குருமா, தயிர் பச்சடி, ஸ்வீட், வடை, சேனை சிப்ஸ், உருளை வறுவல், பொரியல், துவையல், கூட்டு என இலை முழுவதும் நிரப்பி வைக்கப் பட்டிருந்தது.

இது முடிந்து வைட் ரைஸ் சாம்பார், வத்தக் குழம்பு, ரசம் மோர் என அதுவும் பறிமாறிக் கொண்டிருந்தனர்.

ஸ்வீட்டே மூன்று வகைகள் வைக்கப்பட்டிருந்தது.  மில்க் ஸ்வீட், ஜாங்கிரி, குலாப்ஜாமூன் என மூன்று வகை இருந்தது.  இது இல்லாமல் பாதாம்கீரும், பாயாசமும், ஜஸ்கிரீமும் இருந்தது.

பானு சாப்பிட உட்கார்ந்ததும் சரசு வந்து மீதி வைக்காம சாப்பிடனும் என்று நின்றார் கூடவே.  ஜமுனாவும் வந்திருந்து “ஏதாவது வேணுமா…?” என கேட்டு சென்றுவிட்டார், வந்தவர்களை கவனிக்க என்று.

சரசு, “பொறுமையா சாப்பிடுடா…….” என அங்கேயே நின்றிருந்தார்.

பானு முழிப்பதைப் பார்த்தவன் “ம்மா…. நான் பார்த்துக்கறேன், நீங்க போய் மத்தவங்களை கவனிங்க…..” என அனுப்பி வைத்தான்.

முடிஞ்ச வரைக்கும் சாப்பிடு பானு, மீதியை நான் சாப்பிடறேன்.  அம்மா இன்னைக்கு… உன் இலையிலிருந்து எதையும் வேஸ்ட் பண்ண கூடாதுன்னு சொல்லியிருக்காங்க.

பாதியை சாப்பிட்டவள், அதற்கு மேல் முடியாமல் அவனைப் பாவமாக பார்த்தாள்.

அவளது இலையில் மிதியிருந்ததை எடுத்து அவன் சாப்பிட்டான்.

“தேங்க்ஸ். அத்தைகிட்ட சொல்லாதீங்க, அவங்க ஏதாவது சொல்லப் போறாங்க…..”

“ஹ்ம்ம்….., ஐஸ்கிரீம் மட்டும் சாப்பிடறயா…?”

சரி… எனத் தலையசைத்து அதை சாப்பிட்டு முடித்தாள்.

மண்டபத்திலிருந்தே தாய் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர் பானுவை.  அவளுடனேயே சங்கரும் தரணியும் வீட்டிற்கு வந்திருந்தனர்.   கிளம்புகிறேன் என்றவனை பிடிவாதமாக வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் சங்கர் அவர்களுடன்.

சொந்தங்கள் எல்லாம் மண்டபத்திலிருந்தே கிளம்பியிருந்தனர்.  எஞ்சியிருந்த சில பேரும் வீட்டிற்கு வந்த கொஞ்ச நேரத்தில் கிளம்பி விட்டனர்.

அன்று மாலைவரை இருந்த தரணி சென்னைக்கு கிளம்பிவிட்டான்.  விசேஷம் முடிந்து மனைவியுடன் இரண்டு நாட்கள்  தங்கியிருந்த சங்கர், சென்னைக்கு கிளம்பியிருந்தான்.

சென்னைக்கு வந்த பிறகு வீட்டின் தனிமை அவனை கொன்றது.  ஒரு வாரம் கூட ஆகவில்லை, அவளை விட்டு வந்து.  அதற்குள்ளாகவே அவனுக்கு பானு இல்லாத வீடு வெறுமையைத் தந்தது.

இதற்கு பயந்தே வார விடுமுறைக்கு பானுவைப் பார்க்க சென்றுவிடுவான்.  சரசு அவனுடன் வந்து தங்குவதாக கேட்டும், மறுத்துவிட்டான்.

தினமும் பானுவுக்கு, ஏதாவது வாய்க்கு ருசியாக செய்து எடுத்துக் கொண்டு வந்து மருகளைப் பார்த்து சென்றுவிடுவார் சரசு.  இரண்டு தெரு தள்ளிதான் பானுவின் வீடு இருந்ததால், யாரையும் எதிர்பார்க்காமல் அவரே நடந்து வந்து பார்த்து சென்றுவிடுவார்.

சில சமயத்தில்…, காலையில் வருபவர், மாலை வரை மருமகளுடன் இருந்துவிட்டு செல்வார்.  திருமணத்திற்கு முன்பிருந்தே ஜமுனாவும் சரசுவும் நல்ல தோழிகள் என்பதால், அவர்களுக்குள் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தது.

அடுத்த வாரம் பானுக்கு, டெலிவரி டேட் கொடுத்திருந்ததால், அந்த வாரம் சங்கர் வரவில்லை.  ஒரேடியாக இன்னும் இரண்டு நாளில் விடுமுறை எடுத்துக் கொண்டு, மனைவியின் டெலிவரிக்காக ஊருக்கு செல்லலாம் என நினைத்திருந்தான்.

இரவில் தூங்கும்பொழுது பானுக்கு துணையாக ஜமுனா அவளுடன் படுத்துக் கொண்டார்.

அன்று மாலையிலிருந்தே அசௌகரியமாக உணர்ந்த பானுக்கு இரவு ஒருநேரத்தில் விழிப்பு வந்திருந்தது.  விழித்தெழுந்து உட்கார்ந்தவள், பாத்ரூம் வருவதுபோல் இருந்ததால், எழுந்து சென்றாள்.

காலையிலிருந்து வேலைப் பார்த்த அசதியில் ஜமுனா களைத்திருந்தார்.  பாத்ரூம் சென்று வந்தவளுக்கு, ஏதாவது குடித்தால் இதமாக இருக்கும் என்று கிட்சனிற்குச் சென்றாள்.

அடுப்படிக்கு சென்று விளக்கைப் போட்டவள், பிரிட்ஜில் இருந்த பாலை எடுத்து வந்து சூடு செய்தாள்.

‘’என்ன பண்ற பானு…………?”

திடுமென சத்தம் கேட்கவும், திடுக்கிட்டவள், பின்னால் திரும்பி பார்த்து, நெஞ்சில் கைவைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

ஹேய்……… நான்தான் என நெருங்கி வந்து, அவள் தோளைப் பிடித்தாள் பூர்ணி.

‘’ஏதாவது சூடா….. குடிக்கனும் போல இருந்தது…’’  அதான் வந்தேண்ணி……..

‘’என்னை எழுப்பியிருக்கலாமில்ல……. நீ போய் உட்காரு, நான் எடுத்துட்டு வரேன்”.

இருக்கட்டும் ண்ணி……, சூடாயிடுச்சி.

ம்ப்ச்….., ‘’நீ போய் உட்காரு…… பானு.  அடுப்படி அனல்ல நிக்க வேணாம்…..”

பால் சூடானதும் அடுப்பை அணைத்தவள், வெளியே வந்து சோபாவில் கால்களை நீட்டி உட்கார்ந்து விட்டாள் பானு.

சூடான பாலை டம்பளரில் ஊற்றி, அதை குடிக்கும் பதத்தில் ஆத்தி எடுத்து வந்து பானுவிடம் கொடுத்தாள் பூர்ணி.

“பிரட், பிஸ்கட் ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா பானு………………..?”

“வேணாம் ண்ணி…….., பால் போதும், நீங்க போய் படுங்க….”

பூர்ணியும் பானுவின் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டாள்.  “நீ குடி.  நான் கொஞ்ச நேரம் இருக்கேன்”.

“உங்களுக்கு தூக்கம் கெடும் ண்ணி….., நாளைக்கு வேலைக்கு போகனும் இல்ல……..”

“இருக்கட்டும், கொஞ்ச நேரம் கழிச்சு போறேன்.  நீ குடி………”

மெல்ல பாலை கொஞ்சம் கொஞ்சமாக குடித்தாள்.

“கால் நல்லா வீங்கியிருக்கு……………..,  சாயந்திரம் சுடுதண்ணி ஒத்தடம் கொடுத்தியா…………….?”

நான் இராத்திரி சீக்கிரமே தூங்கிட்டேன் ண்ணி…..  வெந்நீ ஒத்தடம் குடுக்கல.  “இராத்தியில சரியான தூக்கம் வரமாட்டேன்னுது,  அதனால எப்ப தூக்கம் வருதோ… தூங்கிடறேன்”.

நேத்து நேரத்தோட தூங்கினதால, பாலும் குடிக்கல.  அதான் பசியில முழிச்சிட்டேன் போல.

பூர்ணி எழுந்து சென்று பிளாஸ்டிக் டப்பில் பாத்ரூமிலிருந்து சுடுநீர் பிடித்து வந்து, பானுவின் காலை எடுத்து அதற்குள் வைத்தாள்.

“ம்ப்ச்… அண்ணி, ‘’என்ன பண்றீங்க…..?  விடுங்க, காலெல்லாம் பிடிச்சுட்டு…”

“கால ஆட்டாம ஒழுங்கா வை பானு.  கொஞ்ச நேரம் சூட்டுல இருந்தா வீக்கம் வடியும்.  கால்ல வலியிருக்கா………?”

ஹம்ம்………., “கால் வலி கொடையுது ண்ணி…..”

“அதனால தான் உனக்கு தூக்கம் கலைஞ்சு முழிச்சிருப்பே.  அசையாம கொஞ்ச நேரம் அப்படியே உட்காரு…”

அதற்குள் மதுவும் எழுந்து வந்திருந்தான்.  ‘’என்ன ம்மா……?  இந்நேரத்தில இரண்டு பேரும் தனியா உட்கார்ந்திருக்கீங்க…..”

“ஒன்னுமில்ல…….. ண்ணே.  பசியா இருந்ததுனு… பால் குடிக்கலாம்னு வந்தேன்.  அண்ணியும் வந்துட்டாங்க…  உன்னோட தூக்கமும் போச்சா…”

அருகில் வந்து பானுவின் காலைப் பார்த்தவன், “இப்படி வீங்கியிருக்கே… கால் வலிக்குதாடா…….?” என்றான்.

ஆமாம்… என தலையசைத்தாள்.

“வலிக்கு எதுவும் மாத்திரை போடக் கூடாதா………….?”

பூர்ணி, “பிரகெனன்சி டைம்ல டாக்டர் அட்வைஸ் இல்லாம மாத்திரை எதுவும் எடுக்க கூடாதுங்க….”

“ஒஹ்………. தைலமாவது தேய்க்கலாமா………”

“இல்ல …ண்ணே, வெந்நீர்ல கால் வச்சா வலி கேட்கும்.  உன் தூக்கத்தையும் கெடுத்துட்டேனா………. நீ போய் படு”.

பூர்ணி, நீங்க போய் படுங்க……. நான் இருக்கேன்.

பானு, நீங்களும் போய் படுங்க அண்ணி.  நான் பார்த்துப்பேன்.

மதுவும் எதிரில் இருந்த இருக்கையில் உட்கார்ந்தான்.  அங்க பானு பால் குடித்து வைத்திருந்த காலி டம்பளரைப் பார்த்தவன், “எனக்கும் ஒரு டீ போடேன்…” பூர்ணி என்றான்.

கணவனுக்கும் தனக்குமாக டீ வைத்து எடுத்து வந்தாள்.  டீயுடன் இரண்டு பிஸ்கட்டையும் எடுத்து வந்து அதில் தோய்த்து சாப்பிட்டு, மீதி டீயை ஊதி குடித்தாள் பூர்ணி.

“பசியா இருந்தா ஒழுங்கா எதாவது எடுத்து சாப்பிடேன்.  இரண்டு… பிஸ்கட் மட்டும் போதுமா…….?”

“போதுங்க………….”

பானு காலை வெளியே எடுத்ததும், வெந்நீரை எடுத்துப் போய் ஊற்றிவிட்டு, பானுக்கு துடைக்க துண்டு கொண்டு வந்து கொடுத்தாள் பூர்ணி.  அவளால் குனிந்து காலை துடைக்க முடியாமல் வயிறு இடித்தது.

இரு… இரு… என அவள் காலருகில் வந்து, தரையில் சம்மணமிட்டு அமர்ந்தவன், தங்கையின் கையிலிருந்த துண்டை வாங்கி, பானுவின் காலை ஈரம் போக துடைத்துவிட்டான்.

எனக்கு தூக்கம் வர மாதிரியிருக்கு ‘’நான் போய் படுக்கறேன், நீங்க போய் படுங்க”, என்று அவளது அறைக்கு வந்து கட்டிலில் படுத்தாள் பானு.

அங்கேயே இருந்தால், தன்னால் அவர்களும் உறங்காமல் உட்கார்ந்திருப்பார்கள், என்று உள்ளே வந்து படுத்துவிட்டாள்.  படுத்தவளுக்கு தூக்கம் வராமல்… எழுந்து உட்கார்வதும். திரும்பி திரும்பி படுப்பதுமாக இருந்தாள்.

இவளது அசைவில் ஜமுனாவும் முழித்துவிட்டார்.

‘’என்னடா……….?’ என்ன பண்ணுது…….?  ஏதாவது வேணுமா………?’’

“ஒன்னும் இல்லம்மா……, தூக்கம் வரல……”

“பசிக்குதா………..?  ஏதாவது சாப்பிடறயா……………?”

“இப்பதான் பால் சாப்பிட்டு வந்து படுத்தேன்”.

“என்னை எழுப்பியிருக்கலாம் இல்ல.  நீயே போய் குடிச்சியா……?”

“சத்தம் கேட்டு அண்ணி வந்துட்டங்க ம்மா……, அண்ணனும் எழுந்து வந்துடுச்சு.  எல்லாம் இப்பதான் போய் படுத்தாங்க.  நீ தூங்கு…..  கொஞ்ச நேரத்துல… நானும் தூங்கிடுவேன்”.

கால் வலிக்குதா பானு…………, பிடிச்சு விடட்டா என எழுந்து அமர்ந்து, அவளது கால்களுக்கு அருகில் நகர்ந்து உட்கார்ந்தவர், பாதத்தையும், காலையும் இதமாக பிடித்து விட்டார்.

ஜமுனா கால் பிடித்து விடும் சுகத்தில், கணவனின் நினைவு தன்னைபோல் நெஞ்சில் வந்து உட்கார்ந்தது.  சங்கர் இருந்தால் அவளுக்கு எதற்கும் கூச்சமிருக்காது.  தூங்குபவனை எழுப்பி கூட ஏதாவது வேலை வாங்குவாள்.

அவனும் முகம் சுளிக்காமல் செய்து தருவான்.  அவனிருந்தால் கொஞ்சி, கெஞ்சி, கால் பிடித்துவிட்டு, முதுகு வருடிக் கொடுத்து, தலை கோதிவிட்டு எப்படியாவது அவளை உறங்க வைத்து விடுவான்.

கணவனின் அன்பிற்காக ஏங்கியது மனம்.  இன்னும் இரண்டு நாட்களில் வந்துவிடுவான், என தன்னை தானே சமாதானம் செய்துகொண்டு, தூங்க முயற்சித்தாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!