Post Views: 1,337
“எனக்கு வந்து வாக்கிது பாரு எல்லாம் கால் வேக்காடும், அரை வேக்காடுமா. இப்டியாடா கடைசி நேரத்துல வந்து நிப்ப? நாங்க ஏர்போர்ட் வந்து ஒன்றை மணி நேரம் ஆகுது”
ஹரியை கழுவி ஊற்றிக்கொண்டே சிவா முன்னே நடக்க, பவ்யமாக ஹரி அவன் பின்னால்… செக்-இன் இடத்தை அடைந்தனர்.
இவர்கள் நால்வர் மட்டுமே அந்த பிலைட்டில் ஏற காத்திருக்க மற்ற எவரும் அங்கு இல்லை. ப்ரேம் தோளில் சுரண்டி அழைத்தான் கார்த்திக்.
“என்னடா?” சரியான நேரத்திற்கு ரிப்போர்ட் செய்ததால் அப்பொழுது தான் நிம்மதியாக மூச்சு வாங்கி நடந்துகொண்டிருந்தன அவன்.
Advertisement
“ஏன் மச்சி இந்த பிலைட்ல பாட்டு எல்லாம் போடுவாங்கல்ல?” நடந்துகொண்டிருந்தவன் உடனே நின்று திரும்பி கார்த்தியைப் பார்த்தான்.
“ஏன் கேக்குற?”
“சும்மா தான் மச்சி. போடுவாங்கல்ல?”
Advertisement
அவனிடம் எதுவும் பேசாமல் ஹரியைப் பார்த்து ப்ரேம் முறைக்க, ஹரியோ சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் நடந்தான், அவன் தானே கார்த்தியைப் பொய் கூறி தூண்டி விட்டது.
Advertisement
“ட்ரெயின்ல வித்தவுட்ல போறவன எல்லாம் பிலைட்ல கூட்டிட்டு வந்தா இது தான் நடக்கும்”
கார்த்தி தலையில் ஒரு அடியை போட்டு, “பன்னாடை இது பிலைட் டா உன் மாமா ஓட்டுற டவுன் பஸ் இல்ல. ஊர் போய் சேருற வரைக்கும் என் பக்கம் வந்துறாத” அவனை விட்டு ப்ரேம் முன்னே ஓட, அவனை விடாமல் கார்த்தியும் அவன் பின்னே ஓடினான்.
“மச்சான் என்ன விட்டு போகாதடா” என்று ஓடியவன் கையில் தண்ணீருடன் நீண்டிருந்த ஒருவர் மீது தெரியாமல் மோதிவிட, அவரோ ஒரு வெளிநாட்டவர்.
Advertisement
தண்ணீர் முழுதும் அவர் மீது பட்டுவிட, சற்று கோவம் உள்ளவர் போல் அவர்களுக்குத் தெரியாத அணைத்துக் கெட்ட வார்த்தைகளிலும் சரமாரியாகப் புகழ்ந்து தள்ளிவிட்டார்.
அதை எல்லாம் தனக்கு சம்மதமே இல்லை என்பது போல் கார்த்தி சிரித்த முகத்துடன் மேலும் நடக்க, “வெக்கமாவே இல்ல?” என்றான் சிவா.
“அதெல்லாம் இருந்தா பொழப்பு ஓடாது மாப்பிள்ளை. இப்ப பாரு உனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்றம் உன் பொண்டாட்டிகிட்ட அடி, உதை, திட்டு எல்லாம் வாங்குவ. அதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணிட்டு இருந்தா சோறுக்கு என்ன பண்ணுவ? நாமம் தான். அதே மாதிரி தான், தப்பு நம்ம மேல இருந்தா மூடிட்டு போயிட்டே இருக்கனும்”
“நோட் பண்ணிக்கிறேன் மச்சி” என்றான் கண்களில் பீதியுடன் சிவா.
ஒருவழியாக விமானத்தை அடைந்தவர்கள் பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டில் குதித்து குதித்து அமர்ந்து அதன் தரத்தைச் சோதித்தனர் கார்த்தியும், ஹரியும்.
“மச்சி நல்லா இங்கிலிஷ் படத்துல வர்ற மெத்தை மாதிரியே இருக்குடா”
“ஆமாடா… இப்டி தான் இருக்கும். எனக்கும் இது ரொம்ப புடிக்கும்”
ஹரி ஆனந்தமாய் அங்கிருந்த குட்டி தொலைக்காட்சியைப் போட்டு, “மச்சி வர்றியா படம் பாக்கலாம்?”
சுற்றி கண்களை மேயவிட்டிருந்த கார்த்தி மெதுவாக அவன் அருகே வந்து, “மச்சி அப்ப…”
அவன் வாயை உடனே அடைத்தான் பின்னிருந்து வந்த ப்ரேம், “டேய் அதெல்லாம் இங்க வராது, அமைதியா வாடா” என்றான் பீதியாய்.
ஹரி சிரித்துக்கொண்டே, “டேய் கண்ண திறந்து மூடுறதுக்குள்ள மதுரை வந்துடும்டா. வேணா ஒன்னு பண்ணலாம்… இங்க என்ன சோறு கிடைக்கிதுன்னு பாத்து எல்லாத்தையும் ஒரு புடி புடிச்சிடலாம். ஏர் இந்தியா சாப்பாடு நல்லா இருக்குமாம்”
“அப்ப சரக்கும் இருக்கும் தான?” ஆர்வமாய் கேட்டான் ப்ரேம்.
நின்றிருந்த ப்ரேம் பின்னாலிருந்து இன்னொரு தலை எட்டி பார்த்தது.
“டேய் நீயுமா? ஆனாலும் உங்க ஆட்டம் அதிகமாகிட்டே போகுதுடா. ஓசில சரக்கு கிடைச்சா எங்க வேணாலும் குடிப்பிங்களா? ஒழுங்கா வந்த வேலைய பாக்கலாம். போற வேலை மட்டும் சக்சஸ் ஆச்சுன்னா உங்களுக்கு நானே பெருசா பார்ட்டி வக்கிறேண்டா ஒரு ஒரு மணி நேரம் மட்டும் வாலு எல்லாம் சுருட்டிட்டு அமைதியா இருங்க” காலில் விழாத குறையாகக் கெஞ்சச் சற்று மனம் இறங்கினர் மூவரும்.
“சரி ஏதோ நீ பிச்சை கேக்குற மாதிரி கேக்குறனால விட்றேன். ஆனா ஊருக்கு வந்து பெருசா கவனிக்கணும் சொல்லிட்டேன்” கேப்டன் விஜயகாந்த் போல் கார்த்தி கூற…
“அதுக்கு மொத நாம பொண்ண தூக்கணும்ல. நாம தான் அங்க நம்ம கல்யாணத்துக்கு ரெடி பண்ண போறோமே” என்று ஹரி கூறி கை தட்டி சிரிக்க அவனுடன் இணைந்து கார்த்தியும், ப்ரேமும் சிரித்தனர்.
“சார் கேன் யு ப்ளீஸ் டேக் யுவர் சீட்ஸ்” ஒரு விமானப் பணிப்பெண் வந்து கூற அவர்களுக்கு அருகிலே இருந்த இருக்கையில் ப்ரேமும், சிவமும் அமர்ந்தனர்.
சீட்டில் அமர்ந்த உடனே கண்களைக் கட்டிக்கொண்டு சிவா சாய்ந்தான் இருக்கையில்.
“மாப்பிள்ளை ஏண்டா தூங்குற, வா பேசலாம்” எதிரில் இருந்த அந்த சின்ன திரையில் ஹிந்தியும், ஆங்கில படங்களுமே இருக்க அதைக் கைவிட்டு நண்பனைக் கலாய்க்கத் திட்டமிட்டிருந்தான் ஹரி.
கண்ணில் கட்டி இருந்த துணியை ஓரக்கண்ணில் இருந்து எடுத்து, “இனி தூங்க முடியும்னு தோணல, அது தான் இப்பயே கொஞ்சம் தூங்கிக்கிறேன்”
அதற்கும் சிரித்த ஹரி தன் நண்பர்களிடம், “ஓஓ பர்ஸ்ட் நைட்டுக்கு ரெடி ஆகுறத இப்டி கூட சொல்லலாமோ”
கோவத்தில் சிவா கையிலிருந்த அலைபேசியை அவன் மீது எரிந்து, “நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்கடா. சாத்தியமா திருந்த மாட்டீங்க. உங்கள எல்லாம் கூட வச்சிட்டு நான் கல்யாணம் பன்னுறதே சந்தேகம் தான். இதுல எங்க இருந்து பர்ஸ்ட் நைட்டு கொண்டாட. போடா பேச வைக்காத”
அவனுக்கு யமுனாவை அவள் தந்தையிடமிருந்து இவர்கள் உதவியுடன் எப்படி மீட்போம் என்றே சந்தேகம் வரத் துவங்கியது. ஏர்போர்ட் வாசலில் இருந்த நம்பிக்கை இரண்டு மணி நேரம் கூட இவர்கள் பேச்சிலிருந்து காணாமல் போனது. ஒருவழியாகச் சிவா உறங்கிவிட, ஹரியை அழைத்தான் ப்ரேம்.
“ஹரி…”
தன் கைபேசியில் எதையோ மும்முரமாகப் பார்த்துக்கொண்டிருந்தவன், “சொல்லுடா” என்றான் கண்களைத் திரையிலிருந்து அகற்றாமல்.
“ஏண்டா நெடுஞ்சேரன் பொண்ண தூக்க வந்துருக்கோம்ன்னு தெரிஞ்சா அந்த ஆளு நம்மள என்ன பண்ணுவாரு?”
அசால்டாக, “அந்த ஆளுக்கு அவர் சொந்த ஊர்ல ஒரு செங்க சூலை இருக்காம். அதுல போட்டு உருக்கி, செங்கல்லோட செங்கலா ஆக்கிடுவான்”
வாயைப் பிளந்த ஹரி, “என்னடா பன்னு செய்ற மாதிரி சொல்ற… என் மம்மிக்கு நான் ஒரே புள்ள” சிறு பிள்ளையாய் முகத்தை வைத்து விழித்தான் ஹரி.
“நாங்க என்ன கோவிலுக்கு நேத்து விட்ட ஆடா? யார்ரா இவன்” என்றான் கார்த்தி மிதப்பாய்.
“அப்ப எப்பிடிடா அந்த ஆளுக்கு தெரியாம பாத்துக்குறது? ஒரு பிளான்னும் இல்லாம ஊருக்கு கிளம்பிட்டோம். இவன் யாருக்கு வச்ச விருந்தோன்னு தூங்குறான்” சலிப்பாய் ப்ரேம் கூறி ஹரியைத் தான் பார்த்தான்.
அவனோ சுத்தமாகப் பிடிகொடுக்காமல் இன்னும் அலைபேசியில் தான் இருந்தான்.
“டேய் பாரேன் அமேசான்ல ஆபர் போட்ருக்காண்டா. நான் அலெக்சா வாங்க போறேன்… ஹே அலெக்சா ப்லே ராத்திரி நேரத்து பூஜையில்… அப்டின்னு சொன்ன ஒடனே கடகடன்னு பாடும்”
அவன் சொல்லி முடிக்கும் முன் தனக்கு முன் இருக்கையிலிருந்து அந்த பாட்டுச் சத்தம் அமைதியாய் இருந்த மொத்த விமானத்திற்கும் கேட்டது.
🎶
ராத்திரி நேரத்து பூஜையில்
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹான் ஹான் தினம் ஆராதனை
🎶
“கடவுளே என்னோட வேண்டுதலை கேட்டுத்தான் போல” ஹரி உல்லாசமாய் சிலாகித்தான்.
அருகிலிருந்த சிலர் அந்த இருக்கையை ஒரு மாதிரி பார்க்கத் துவங்கினர். உடனே சத்தம் நிற்க அந்த இருக்கையிலிருந்து ஒரு தலை பின்னால் எட்டிப் பார்த்தது.
அந்த முகத்தைப் பார்த்ததுமே கார்த்தி அணைத்து பற்களையும் காட்ட, ஹரியோ உதட்டைச் சுளித்துப் பார்த்தான் விருப்பமே இல்லாமல்.
“டேய் கேனை பயலே, அறிவில்ல இப்டியாடா பாட்டு சொல்லுவ” வெட்டவா குத்தவா என்ற ரீதியில் தான் அவள் பார்வை வந்தது அவன் மேல்.
“யாரை பாத்து கேனைன்ற… வாய கிழிச்சிடுவேன் அடுத்து நீ பேசவே முடியாத மாதிரி. என் இஷ்டத்துக்கு தான் நான் பாட்டு சொல்லுவேன். டான்ஸ் கூட ஆடுவேன். உன்ன யாரு அத ஆன் பண்ணி வைக்க சொன்னது?” விட்டால் இருக்கையிலிருந்து எழுந்து சண்டைக்குச் சென்றிருப்பான், சட்டை கையை கூட மடக்கி விட்டு எகிறத் துவங்கினான்.
“ஓஓ நான் என்னோட திங்ஸ் யூஸ் பண்ண கூட உன்கிட்ட அனுமதி கேக்கணுமோ. ஊருக்கே கேக்குற மாதிரி பேசுனது நீ தாண்டா பாடிசோடா”
“நான் அப்டி தான்டி பேசுவேன் என் வாய் இது…” என்றான் அவளை மேலும் மேலும் எரிச்சலூட்டும் பொறுப்பை கைகளில் எடுத்து.
“டேய் சத்தமா பேசுனது நம்ம தப்பு, இதுல மத்தவங்கள நாம குறை சொல்லலாமா? அதுவும் இந்த மாதிரி சாந்தமான பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ண கூடாது ஹரி” சந்தடி சாக்கில் ஒரு பெரிய எரோப்லேனையே ஓட்டி இருந்தான் கார்த்தி.
அபர்ணாவும் அவன் பேச்சில் சிரித்து, “கேட்டுக்கோ. உனக்கு தான் அறிவில்லாம பட்டிக்காட்டான் பஞ்சு மிட்டாய் பாத்த மாதிரி இங்க டங்கு டங்குன்னு குதிக்காம உன் பிரன்ட் பேச்ச கேட்டு ஒரே இடத்துல ஒக்கார பாரு” ஒருவழியாகச் சண்டை முடிந்தது என்று நினைத்தால் அவளோ மீண்டும் பிள்ளையார் சுழியைப் போட்டாள்.
“இவளுக்காகவா நீ என்ன சொல்ற… பாத்தியா?” அமைதியாக இருந்த கார்த்தியிடம் குதித்தான், “நான் காசு போட்டு டிக்கெட் புக் பண்ணிருக்கேன், இந்த சீட்ல குதிப்பேன், கிழிப்பேன் என்ன வேணாலும் பண்ணுவேன். நான் என்ன உன் மடிலயா வந்து உக்காந்தேன்”
“டேய் நீ ரொம்ப ஓவரா பேசுறடா” பல்லைக் கடித்துக்கொண்டு அவனை முறைத்தாள்.
“நீயும் தான்டி ரொம்ப ஓவரா பேசுற சவுண்ட் சரோஜா”
“டேய் சும்மா இருடா. ஏங்க திரும்புங்க அங்குட்டு. தெரியாம தான நடந்துச்சு அதுக்கு எதுக்கு இப்டி பேசணும்?” ப்ரேமுக்கும் அவளை பிடிக்கவில்லை. அவள் பேச்சும், கோவமும் சில இடங்களில் அவசியமே இல்லை என்றே தோன்றியது.
“தெரியாம நடந்தாலும் தப்பு உங்க மேல இருக்கறப்ப சாரி சொல்லணும்ல நாட்டாமை சார். இங்க யாருமே அதைச் சொல்லலையே” உதட்டில் ஏளனமும் கண்கள் அவர்கள் மூவரையும் ஆராய்ந்து.
“அதெல்லாம் இப்டி பேசுனத்துக்கு அப்றம் சாரி கேக்க முடியாதுடா… நீ அப்டி பாத்தா நான் சாரி கேட்கணுமா?” பாவமாய் பார்த்த கார்த்தியை முறைதான்… போலியான முறைப்பு தான். ஹரிக்கு கோவம் அந்த பெண் மீது மட்டுமே. நண்பனிடம் இல்லை.
“அப்ப எம்.பி பொண்ண கடத்துறதுக்கு நீங்க பிளான் போடுறத வெளிய சொல்லுவேன்னு சொன்னாலும் இப்டி தான் இருப்பிங்களா மிஸ்டர்…” என்றவள் நிறுத்தி கார்த்தியைப் பார்த்து, “இவர் பேர் என்னங்க?” முற்றிலும் குரலை மாற்றி இனிமையாய் வைத்து கேட்டாள்.
அவனோ எச்சிலை விழுங்கி தயக்கத்துடன், “ஹரி” என்றான்.
“ஆஹ்… மிஸ்டர் சொறி…” ராகத்தோடு இழுத்தாள்.
அவனோ அமர்க்களமாய் சிரித்து, “மிஸ்…” என்று தானும் இழுக்க, “அபர்ணா” என்றாள் ஆர்வமே இல்லாமல்.
“ஒருத்தன் பேர ஒருத்தன் தெரிஞ்சுக்க என்னமா சீன் போடுறாங்கடா சாமி” தலையை உலுக்கி எரிச்சலுற்றான் ப்ரேம்.
ப்ரேமை திரும்பிப் பார்த்து கண் சிமிட்டி, மீண்டும் அபர்ணாவிடம் வந்தவன், “மிஸ் சோத்துமூட்டை…”
“டேய்…” தான் கூறியதன் பலன் என்று அறியாமல் அவள் எகிற, அவளைப் பார்த்துச் சிரிப்பு கொஞ்சமும் மாறாமல், “நாங்க கடத்துறது எம்.எல்.ஏ பொண்ண. நீங்க உங்களால முடிஞ்சத பண்ணிக்கோங்க மிஸ் சரோஜா”
இவ்வளவு நேரம் எரிச்சலை வைத்திருந்த அவள் இதழ்கள் இப்பொழுது சிரிப்பை எடுத்து மூவரையும் முழிக்க வைத்தது. “டேய் முட்டாப்பயலே. நெடுஞ்சேரன் எம்.பி டா. இது தெரியாம பொண்ண கடத்த கெளம்பிட்டாய்ங்க”
மனதில் ஒரு தானோஸ் வந்து அவர்கள் நால்வரையும் ஒரே சொடக்கில் மாயமாக்கியது போல் இருந்தது.
அவர்கள் கணிப்பு, திருமணத்திற்கு முதல் நாள் தான் நிச்சயம் காவல்துறையினர், வி.ஐ.பிகள் வருவார்கள் அப்படியெனில் இரண்டு நாள் முன்னரே சென்று பெண்ணை கடத்தி விட வேண்டும் என்று. இப்பொழுது அவள் தந்தை எம்.பி என்றவுடன் காவலுக்கு எப்பொழுதும் ஆட்கள் மொத்த வீட்டையும் சுற்றி இருப்பார்களே என்ற பயம் மூவரையும் தொற்றிக்கொண்டது. எந்தவித யோசனையும் இல்லாமல் கிளம்பிவிட்டனர் ஆனால் இப்பொழுது அது தவரோ என்ற எண்ணம் தான் ப்ரேமுக்கு. மரண பயத்தை அந்த நொடி மூவரும் ஒரே நேரத்தில் உணர்ந்தனர், ஏதோ சிவாவை தவிர மற்ற மூவரும் சொர்கத்திற்கு விமானத்தில் பறப்பது போன்ற உணவு.
“டேய் அவனை எழுப்பு” ஹரி கூற, சிலை போல் மாறி இருந்த ப்ரேம் சிவாவை திரும்பிப் பார்க்க அவனோ அவன் வருங்கால மனைவியுடன் டூயட் ஆடிக்கொண்டிருந்தது போல் சிரிப்புடன் உறங்கிக்கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் எங்கிருந்து தான் உயிர் வந்ததோ அவன் தலையில் ஓங்கி ஒரு அடி அடிக்க, பதறிக்கொண்டு எழுந்தான் சிவா.
“உன் மாமனார் என்ன வேலை பாக்குறாரு”
“எம்.பி. ஏண்டா இத கேக்க தான் எழுப்பிவிட்டியா?”
இங்கு கார்த்திக்கு ஈரக்குலையே நடுங்க துவங்கியது, “என்னடா ஸ்டேட்ல கை வைக்கிறோம்ன்னு நினச்சா, இவன் சென்ட்ரல் வரைக்கும் போய் நம்மள தீவிரவாதி ஆக்கிடுவான் போல”
அவன் பக்கம் திரும்பிய ஹரி புன்னகையோடு, “எங்களுக்கும் பதட்டமா தான இருக்கு நான் சிரிக்கல? பல் எல்லாம் நடுங்குது பாரு. பயத்தை முழுங்கிட்டு சிரி பாப்போம்”
அவனோ சிரிக்க முயற்சி செய்து தோற்க, “வகுந்துடுவேன் இவ முன்னாடி என் மானத்தை பறிச்சா”
“இந்த சிரிப்பு போதுமா பாரு” அணைத்து பற்களையும் காட்டி சிரிக்க,
“கொஞ்சம் குறை, ஓவர் பெர்ஃபாமன்ஸ் மாதிரி இருக்கு” சற்று குறைக்க போதும் என்று கை காட்டி சிவா பக்கம் திரும்பினான்.
“எம்.எல்.ஏ ன்னு நாங்க சொன்னப்ப வாய மூடிட்டு நின்ன இப்ப எம்.பி ன்னு சொல்ற? என்ன மேன் இதெல்லாம்?”
“ஆமாடா அஞ்சு வருஷம் முன்னாடி அவர் எம்.எல்.ஏ, இப்ப தான் சென்ட்ரல் எலெக்ஷன் வந்ததுல, எம்.பி ஆகிட்டாரு” அவனுக்கு அது பெரியதாகத் தெரியவில்லை, ஆனால் இவர்களுக்கு எலியைத் தான் அடிக்கப் போகிறோம் என்றெண்ணிக் கிளம்பினால் அவனோ யானையைக் காட்டி இது தான் எலி என்கிறான்.
“என்னடா கவுன்சிலர் ஆன மாதிரி அசால்ட்டா சொல்ற. எம்.பி டா”
“இருக்கட்டும் மச்சான். ப்ரைம் மினிஸ்டர் பொண்ணாவே இருந்தாலும் கடத்த போறேம் தானே” அவன் முகத்தில் எந்த விதமான பரபரப்பும் தெரியவில்லை.
ஹரி இருக்கையில் சாய்ந்து அமர்ந்து, “மதுரை வந்ததும் என்ன எழுப்பி விடுங்க… எனக்கு நெஜமாவே மயக்கம் வருது… அப்டியே ஆன்லைன்ல அடியாட்கள் மதுரையிலிருந்து தேவைன்னு ஒரு விளம்பரத்தை போடுங்க, பொண்ண கடத்துறோமோ இல்லையோ முதல்ல வேலைக்கு ஆள் எடுக்குறோம்”
அவன் பேச்சைக் கேட்டு அபர்ணாவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை, அவள் சிரிப்பை கண்ணை மூடிக்கொண்டே இருந்த ஹரி கேட்டு, “அந்த கோயம்பேடு மார்க்கெட்ட திரும்பி சிரிக்க சொல்லு… காண்டாகுது”
“மிஸ்டர் சொறி, மதுரை வந்துடுச்சு” என்று அவள் தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு எழுந்து நின்றாள்.
“அட பாவிகளா இவ்ளோ செலவு பண்ணி ஒரு சிக்கன் பீஸ் கூட பிலைட்ல சாப்புட விடலையேடா நீங்க”
இவன் எல்லாம் என்ன மாதிரி கலவை என்று தெரியாமல் அபர்ணா அவனை வியப்பாய் பார்த்தாள். ஆம் அவனைப் பீதியடைய வைக்கவே பேசியது, ஆனால் அவனோ எதை நினைத்து வருந்துகிறான்….!!??
நால்வரும் விமானத்திலிருந்து இறங்கி ஏர்போர்ட் உள்ளே அமர்ந்திருந்தனர். அப்பொழுது ஹரியும், கார்த்தியும் ஏதோ பேசி, கழிவறை சென்று ஒரு அரை மணி நேரம் கழித்தே வந்தனர்.
“டேய் இவனுக பின் கேட் வழியா ஓடிட்டாங்களானு பாரேன்” நகத்தை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் பதட்டத்தோடு.
“சேம் டவுட். ஆனா மச்சி நான் இப்டி பின் வாசல் வழியா எல்லாம் போக மாட்டேன், முன் வாசல் வழியா தான் போவேன் இன்னும் அந்த ரெண்டும் அஞ்சு நிமிசத்துல வரலைனா”
இருவரும் கழிப்பறையையே நீண்ட நேரம் வைத்த கண் எடுக்காமல் பார்க்க அங்கிருந்த வெளி வந்தவர்கள் சிலர் அவர்களை விசித்திரமாகப் பார்த்துச் சென்றனர்.
“டேய் அப்டி போய் நிக்கலாமே, வர்றவன் போவரவன் எல்லாம் ஒரு மாதிரி பாக்குறான்” என்றான் சிவா.
“இல்லடா கொஞ்சம் இப்டி கண்ண அந்த பக்கம் திருப்புனா கூட இவிங்க எஸ்கேப் ஆகிடுவாங்க. ஏன்னா நீ குடுத்த ஷாக் அப்டி. இப்ப கூட கீழ குனிஞ்சு பாரு, என் கால் நடுங்கிட்டே இருக்கும்”
சிவா கீழே குனிந்து பார்த்தல், ஆம், அவன் அணிந்திருந்த ஜீன்ஸ் பாண்ட் தாண்டி அவன் நடுக்கம் தெரிந்தது.
“டேய் நான் இருக்கேண்டா நீ கவலை படாத” தைரியமாய் நண்பனைத் தேற்ற முயன்றான் அவன் தோளில் கை போட்டு.
அவன் கையை உதறி, “நீ இருக்குறது தானே எனக்கு பயமே, மாட்டிக்கிட்டா உன்ன காப்பாத்த யமுனா வருவா, நீங்க குடும்பமா சேந்து என்ன டீல்ல விட்டுட்டா?” சிவா ஏதோ பேச வர வாயை மூடுமாறு சைகை செய்தான் ப்ரேம்.
அதே நேரம் கழிப்பறை சென்ற ஹரியும் கார்த்தியும் வெளியில் வந்தனர். ஆனால் தோற்றம் முற்றிலும் மாறுபட்டு. செல்லும் பொழுது சாதாரண டீ-ஷர்ட்டில் போனவர்கள் இப்பொழுது தலை வாரி, முகம் சற்று பளிச்சிட, ப்ளூ ஜீன்ஸ், லீலாக் நிற டீ-ஷர்ட் அதற்குமேல் பட்டன் போடாமல் வெள்ளை நிற செக்ட் ஷர்ட்டில் கார்த்தியும், லெமன் எல்லோ ஷர்ட் மற்றும் ப்ளூ ஜீன்ஸில் என்று அமர்க்கலாமாய் கண்ணில் ஒரு கூலர்ஸும் அணிந்து வந்து நின்றனர்.
“என்னடா இது?” என்றான் ப்ரேம் சந்தேகமாக.
“பொண்ணு பாக்க ரெடி ஆகிட்டோம் மச்சி… பாரு உள்ளேயே ஒரு குளியல் போட்டு கூட வந்துட்டோம்…” ப்ரேம் அவர்களை முறைத்துப் பார்க்க, “நம்பலையா இந்த கைய நக்கி பாரு சோப்பு ஸ்மெல் வரும்” தன் கையை நீட்டி காட்டினான் ஹரி.
“ச்சீ அசிங்கம் புடிச்சவிங்களா நாம பொண்ண கடத்த வந்துருக்கோம், உங்களுக்கு பொண்ணு பாக்க இல்ல”
“மதுரைக்கு வந்து மீனாட்சியை பாக்காம போக முடியுமா மச்சி சொல்லு? அதுவும் இன்னும் மூணு நாள்… என்னால எல்லாம் நல்ல பையன் வேஷம் போட முடியாது, என் அம்மா வேற, பொண்ணு பாக்கவான்னு கேட்டுட்டே இருக்காங்க. எதுக்கு பெத்தவங்கள கஷ்ட படுத்தனும்? நாமே பாத்துக்கலாம்னு ஹரிகிட்ட சொன்னேன்” சட்டையை நொடிக்கொரு முறை சரி செய்துகொண்டே கூறினான், ஆனால் அவன் நேரம், அவன் என்ன செய்தாலும் அவனுக்கு அது வசீகரமாகவே இருந்தது.
“அது எப்பிடிடா முக்கியமா செய்ய எவ்ளோ மேட்டர் இருந்தாலும், மேட்டர் மட்டும் தான் முக்கியம்ன்ற மாதிரியே பேசுறீங்க?”
“மாப்பிள்ளை தப்பா பேசாத… ஒன்லி பாசிட்டிவ் வைப்ஸ் (Only positive vibes). சரி பேச்சு இனி நோ, ஒன்லி ஆக்ஷன். அட்ரஸ் தா போட்ருக்க பிராண்டட் டிரஸ் கசங்குறதுக்குள்ள மதுரையை ஒரு கலக்கு கலக்குறோம் பொண்ணு இருக்குற ஏரியால” தான் அணிந்திருந்த கண்ணாடியை ஒரு ஊது ஊதி மீண்டும் கண்ணில் அணிந்துகொண்டான் ஹரி.
“பொண்ணு இருக்குற ஏரியால இருக்க பொண்ணுகளை நீங்க இம்ப்ரெஸ் பண்ண பிராண்டட் ஷர்ட் தேவ இல்ல மிஸ்டர் சொறி முத்து அய்யனார், ஒரு கைலியும், கிழிஞ்ச பனியனும் போதும்”
“இவ இன்னும் போகலையாடா?” ஒரு எரிச்சலுடன் ஹரி கார்த்தியைப் பார்க்க, அவனோ அபர்ணாவைப் பார்த்த மகிழ்ச்சியில் ஹரியின் முகத்தைக் கூட பார்க்கவில்லை.
“ஹாய்ங்க… ஏதாவது ஹெல்ப் வேணுமா. தயங்காம கேளுங்க” நண்பர்களை மறந்து அந்த பெண்ணிடம் சென்று.
அவளோ சிரிப்புடன், “இல்லங்க தேங்க்ஸ். எல்லாரும் ஒரே இடத்துக்கு தானே போறோம், சரி ஒண்ணா போகலாமேன்னு தான் சொன்னேன். அதுவும் இல்லாம அந்த ஊருக்கு பஸ் வசதி அடிக்கடி எல்லாம் இல்ல, உங்களுக்காக மட்டும், உங்களுக்காக மட்டும் தான் கூட இருந்து கூட்டிட்டு போகலாம்னு வெயிட் பண்றேன்” கார்த்திக்கு ரெக்கை கட்டி பார்ப்பது போன்ற உல்லாசம் தான்.
“ஏங்க அந்த ஆளு எம்.பி-ன்ற விசியம் எங்களுக்கு தெரியாம இருக்கலாம், அதுக்குன்னு மதுரைக்குல்ல அட்ரஸ் கேட்டு போக கூட தெரியாதுன்னு நெனச்சீங்களா?” தங்கள் அணைத்து பையையும் எடுத்துக்கொண்டு, “என்னடா பாக்குறீங்க, வாங்க” என்றான் ப்ரேம், நண்பர்களிடம்.
அவனுக்கு முன்னாள் வந்து நின்ற அபர்ணா, “உங்க தோளர்கிட்ட பொண்ணு எந்த ஊர்னு கேளுங்க”
“அவன்கிட்ட ஏன் கேக்கணும் மதுரை தானடா?” என்றான் ஹரி நண்பனைப் பார்த்து.
சிவாவோ சிக்கியதில் திருடனைப் போல் முழிக்க மற்ற மூவருக்கும் புரிந்துவிட்டது, “மச்சி மதுரை இல்லையா?” இறங்கிப் போன குரலில் ஹரி பயத்துடன் கேட்டான்.
“மதுரை தாண்டா ஆனா மதுரைல இல்ல, வயலூர்னு ஒரு கிராமத்துல தான் கல்யாணம். தெரியாது? அது தான் யமுனா அப்பா சொந்த ஊரு”
அவனை அப்படியே கை பிடித்து விமான நிலையத்தை விட்டு வெளியில் அழைத்து வந்தவன் எவரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று, “பஸ் கூட போகாதுன்னு அந்த பொண்ணு சொல்லுது மச்சி, என்ன அந்த ஊருல பத்து தெரு இருக்குமா?”
“ச்ச ச்ச அப்டிலாம் சொல்லாதடா” அப்பாடா என்று ஒரு நிமிடமே நிம்மதியாக மூச்சு விற்றிருப்பார்கள் நண்பர்கள், “எண்ணி வச்ச மாதிரி பதிமூணு தெரு இருக்குமாம். அதுவும் நாம ரொம்ப அலையவே தேவ இல்ல அந்த ஊர்ல போய் யமுனான்னு சொன்னவே அங்க இருக்குற குட்டி குழந்தை கூட அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுமாம். அவ்ளோ பேமஸ் என் ஆளு” பெருமை ஆறாய் ஓடியது அவன் பேச்சில்.
“டேய் கூறுகெட்டவனே, இதுல பெருமை பீத்திக்க ஒண்ணுமில்ல, அந்த பதிமூணு தெரு மட்டுமே இருக்குற ஊர்ல போய், அதுவும் ஊருக்கே தெருஞ்ச உன் ஆள எப்பிடிடா தூக்க முடியும்? கிராமம் வேற, எடுத்த ஒடனே எல்லாரும் கழுத்துக்கு தான அருவாளை வைப்பாங்க. சாமி நான் வரலடா இவன் ஊருக்கு” தன்னுடைய பையை எடுத்து மீண்டும் ஏர்போர்ட் நோக்கி நடந்த கார்த்தியைப் பிடித்து ஹரி நிறுத்தி.
“கார்த்தி என் மேல நம்பிக்கை இருந்தா வாடா” என்று அவர்களுக்கு பின்னால் வந்து நின்ற அபர்ணாவை ஜாடை காட்டினான்.
அவன் மொழியைப் புரிந்த கார்த்தி விஷம பார்வையுடன், “சரி வர்றேன்” என்றான் மனமே இல்லாதது போல் பாவனை செய்து.
“ஆனா ஒன்னுடா இந்த கடத்தல் வேலை முடிஞ்சதும் நீ யாரோ நாங்க யாரோ, உன் மாமனார் கூட நீ சமாதானம் ஆனதும் தான் அடுத்து நமக்குள்ள பேச்சு வார்த்தை வரும்” சிவா யாருக்கு வைத்த விருந்தோ என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் நிற்பதைப் பார்த்துக் கடுப்பான ப்ரேம், “ஏண்டா இவ்ளோ வயசாகுது ஒரு வண்டி புடிக்கையுமா சொல்லணும் உனக்கு? கேப் புக் பண்ணுடா”
“மச்சி பெரிய வண்டியா புக் பண்ணுடா 5 பேர் போற மாதிரி” இடையில் புகுந்து கார்த்தி கூறினான்.
“அஞ்சா, நாலுபேர் தாண்டா” என்று மீண்டும் அலைபேசியில் மூழ்கப்போக, “டேய் அவங்கள யாருமே பாக்கலயா?” என்று அபர்ணாவைக் காட்டினான்.
அவளோ கார்த்தியை ‘நீ என்ன ரகம்’ என்ற பார்வையில் பார்த்தாள்.
“டேய் நமக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்காங்க” ஹரி ஏதோ வாய் பேச வர அவனை நிறுத்தி, “எனக்கு தெரியும், எம்.எல்.ஏ இல்ல எம்.பி னு சொன்னது உனக்கு பெரிய விசயமா தெரியாம இருக்கலாம் ஆனா யோசிச்சு பாரு, எம்.எல்.ஏ பொண்ணுன்னு நாம அசால்ட்டா போயி பாத்தா ப்ரைம் மினிஸ்டர் வாராருன்னு செக்கிங், பிளாக் காட்ஸ்-னு ஒரு பெரிய செக்யூரிட்டி டீம் இருந்தா என்ன பண்ணுவோம்? இப்ப கூட இவங்க வில்லேஜ்-னு சொன்னதுக்கு அப்றம் தான் நமக்கு இவன் பண்ற திருட்டு தனம் எல்லாம் தெரியுது அப்ப நாம இவங்களுக்கு ஒரு ட்ராப் வசதி கூட பண்ணலைனா என்ன பண்றது? மனுசனா பொறந்தா கொஞ்சமாவது விஸ்வாசம் வேணும், இப்டி பிக்காளிப்பயலுக மாதிரியா நடந்துக்குறது” சாதாரணமாகத் தான் துவங்கினான் ஆனால் செல்ல செல்ல உணர்ச்சிவசப்பட்டுப் பேசத்துவங்கிவிட்டான் பாவம், இறுதியாக இருமல் வேறு அதிகம் வந்தது.
“எதுக்குன்னு ஒரு கேள்வி தானடா கேட்டான், அதுக்கு எதுக்கு கோனார் நோட்ஸ் மாதிரி இவ்ளோ பெருசா பதில் சொல்ற?” புரியாமல் கேட்டான் ஹரி.
தண்ணியைக் குடித்துக்கொண்டே கார்த்தி, ‘கொஞ்சம் ஓவரா தான் போறோமோ? போவோம்… என்ன பண்ணிடுவாங்க’ மனதில் யோசித்துக்கொண்டே மீண்டும் பேச வர, இப்பொழுது அவளைத் தடுத்தாள் அபர்ணா.
“இல்லங்க எனக்கு நீங்க லிப்ட் தர வேணாம். எங்க வண்டி என்ன பிக்கப் பண்ணிக்க வருது, நீங்களும் வாங்களேன்”
உள்ளுக்குள் ஒரு பெரிய ஐஸ் கட்டியைப் போட்டது போல் சில்லென்று இருந்தது ஆனாலும் வெளியில் காட்டாமல், “ஐயோ நான் எப்படிங்க என் உயிர் நண்பர்களை விட்டு… ச்ச ச்ச இல்லங்க வேணாம். நீங்க போயிடுவாங்க” இந்த பூனையும் பால் குடிக்குமா தோற்றம் தான் அது.
“போடா இதுக்கு தான அப்ப இருந்து செம்பு தூக்குன. போ. டேய் நீ இன்னும் கேப் புக் பண்ணலயா?”
சிவா ஹரிக்கு பதில் கூறும் முன், “ஏங்க உங்க உயிர் தோழர்கள் எல்லாரையும் வர சொல்லுங்க அதெல்லாம் எங்க வண்டி பெருசு தான். இடம் எல்லாம் இருக்கும்” என்றாள் இறுமாப்புடன்.
“உங்களுக்கும் எங்களுக்கும் ஆரம்பத்துல இருந்தே செட் ஆகல நீங்க போங்க நாங்க பாத்துக்குறோம்” ஏதோ அவளைப் பார்த்து அபாயமணி ப்ரேமிடம்.
“என்னடா செட் ஆகல? ஆஹ் என்ன செட் ஆகல?” எகிறிவந்த கார்த்தியை ஒரே குறைப்பில் நிறுத்தினான் ப்ரேம்.
“அந்த பொண்ணு தான் சொலுத்துல அந்த ஊருக்கு பஸ் கூட இல்லனு, இன்னும் எதுக்கு இப்டி பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு, அந்த பொண்ணு சொல்றத பாத்தா அந்த ஊருல நமக்கு தங்க இடம் கூட கிடைக்கும் இல்லனா என்னனு சொல்லி நாம அந்த ஊர்ல தங்குறது?” சிவாவின் வார்த்தை யோசிக்க வைக்க ஹரியும் சரி என்றான்.
ஒருவழியாக இவர்கள் ஐவரும் பார்க்கிங் ஏரியா செல்ல, “வண்டி வெளிய இருக்காம்” என்றாள் அலைபேசியில் பேசி முடித்து. சரி என கடினப்பட்டு கொண்டு வந்த பை அனைத்தையும் தூக்கி நால்வரும் வெளியில் நடக்க, அங்கு அவள் குறிப்பிட்டது போல் எந்த வண்டியும் இல்லை.
“என்னங்க வண்டி இன்னும் வரலையா?” இரண்டு பக்கமும் பார்த்துக் கேட்டான் கார்த்தி.
“அந்தா நிக்கிது பாருங்க” என்றாள் ஒரு வண்டியைக் காண்பித்து.
அதைப் பார்த்தவன், “ஓஓ இந்த குட்டி யானை பின்னாடி வண்டி நிக்கிதா? வண்டி நிக்கிறது தெரியவே இல்ல” என்று அபர்ணாவிற்கு முன்னாள் நடந்தவன் அந்த டாடா ஏஸ் வண்டியில் முன்னாள் அமர்ந்திருந்த டிரைவரை பார்த்து, “ஏன்யா ஏர்போர்ட்ல இருந்து எவ்ளோ பெரிய ஆளுங்க எல்லாம் வருவாங்க நீ வாட்டுக்கு உன் தகரடப்பாவை இப்டி நடு ரோட்டுல நிறுத்தி வச்சிருக்க, வண்டிய எடுயா” என்று திட்டி பின்னால் பார்த்தால் அங்கு எந்த வண்டியும் இல்லை.
கோவையில் அபர்ணாவை அப்படி விலையுயர்ந்த ஆடி காரில் பார்த்து இப்பொழுதும் அது போன்ற ஒரு பெரிய வண்டியை எதிர் பார்த்துத் தான் சென்றான்.
“இது தாங்க நம்ம வண்டி எங்க போறீங்க நீங்க?” சிரித்துக்கொண்டே கேட்டாள் கார்த்தியிடம்.
அதற்குள் வண்டியிலிருந்து இறங்கி வந்த இருவர், “யார் பாப்பா இவன், ஓவரா துள்ளுறான்… உங்கள எதுவும் சீண்டுனானா?” சீட்டின் அடியிலிருந்து ஒரு அருவாளோடு வந்தான் ஒருவன், நன்கு கருத நிறம், உடலே கூறியது அவன் பலத்தை.
ஒரு பரிதவிப்போடு நண்பர்களைப் பார்க்க அவர்கள் மூவரும் வயிற்றைப் பிடித்துச் சிரித்துக்கொண்டிருந்தனர்.
“ஐயோ அண்ணா அப்டி எல்லாம் இல்ல, அவரு நல்லவரு தான். என்ன கொஞ்சம் குறும்பு அதிகம்” என்றாள் அவனை காக்கும்பொருட்டு.
கார்த்தியை பார்த்து நாக்கை மடித்து அரிவாளை காட்டியவன், “அந்த குறும்பெலாம் நாம ஊருக்கு சரி வராது பாப்பா, அத அப்டியே விட்டுட்டு வண்டில ஏற சொல்லுங்க இல்லனா அறுத்துடுவேன்” என்றவன் பார்வை கொஞ்சம் கீழ் இறங்க பதறிவிட்டான் கார்த்தி.
“ஐயையோ இது கொலைகார கூட்டமா இருக்கே, சாமி நான் வரலப்பா இவிங்ககூட” என்று எங்கோ தப்பித்து ஓட சென்றவனை அடக்கமுடியாத சிரிப்புடன் நண்பர்கள் மூவரும் அந்த டாடா ஏஸ் பின்னால் தள்ளி அவன் மீதே சாய்ந்து விடாமல் சிரித்துக்கொண்டிருந்தனர்.
இவர்கள் சிரிப்பை பார்த்து தானும் சிரித்துக்கொண்டே வந்த அபர்ணா அந்த பந்தல் போட்ட வண்டியின் பின்னால் அமர்ந்தாள். அபர்ணாவை விட்டு தள்ளியே அமர்ந்த கார்த்தியை பார்த்து அபர்னாவுக்கே சிரிப்பு தான்.
“மச்சான் இந்த குட்டி யானை விலை ஒரு அறுவது லட்சம் இருக்குமா?” கிண்டலாக ஓரக்கண்ணால் அபர்ணாவை பார்த்துக்கொண்டே கேட்டான் ஹரி.
“கார்த்தி உங்க ஃப்ரன்ட கொஞ்சம் மெதுவா பேச சொல்லுங்க. முன்னாடி இருக்கவங்களுக்கு கேட்டுச்சு அருவா தான் பேசும். அப்றம் நான் அதுக்கு பொறுப்பு இல்ல”
“ஏண்டா இவிங்க ஊருல வாய் எல்லாம் பேசாதாம் கொஞ்ச நேரம் அமைதியா தான் இரேன் டா” இன்னும் பயத்திலிருந்து மீளாமல் தான் இருந்தான் கார்த்தி.
“இது நாங்க பர்ஸ்ட் வாங்குன வண்டி, ரொம்ப செண்டிமெண்ட். இதுக்கு அப்றம் தான் தொழில்ல வளர்ச்சி அதிகம் ஆச்சுன்னு அப்பா அடிக்கடி சொல்லுவாங்க. இப்ப கூட இளநி லோட் ஒன்னு மதுரைல இறக்கி வச்சிட்டு தான் வந்துருக்கு, எனக்கும் இப்டி பிரீயா காத்து வாங்கிட்டே போகணும்னு ஆசை அது தான் இந்த வண்டிய வர சொன்னேன்” ஒரு வண்டிக்கு இவ்ளோ பெரிய பின் கதையா என்னும் பார்வை தான் நால்வர் கண்ணில்.
“சரி நான் உங்கள கூட்டிட்டு போற ரீசன் சொல்றேன்” என்றவள் அவர்களை நோக்கி ஒரு அடி முன் நகர்ந்து அமர்ந்து அவர்களையும் அருகில் அழைத்தாள்.
ஹரியை தவிர மற்ற மூவரும் குனிந்தனர். ஹரியை பார்த்து முறைத்து மற்றவர்களிடம் மெதுவான குரலில் பேச துவங்கினாள், “எங்க குடும்பத்துக்கும் அந்த குடும்பத்துக்கும் பரம்பரை தகராறு. நாங்களா அவங்களானு போட்டி இருந்துட்டே இருக்கும். ஆனா என்னவோ அந்த குடும்பத்துல இருந்து முதல் கல்யாணம்ன்ற காரணத்துக்காக எங்களுக்கு பத்திரிகை வச்சிருக்காங்க.
அதுக்கு தான் நான் போறேன். நேத்து தான் எங்க அப்பா சொன்னாரு, ‘என்ன பிரச்சனைன்னு தெரியலடா அந்த நெடுஞ்சேரன் ஊர் முழுக்க ஆளுங்கள நிறுத்தி வச்சிருக்கான்’-னு சொன்னாங்க. இன்விடேஷன் இருந்தா மட்டும் தான் ஊருக்குள்ள விடுவாங்க. அதுக்காக தான் உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ண வந்தேன்”
“இந்த டகால்டி வேலை தான வேணாம்ங்கறது. அந்த பொண்ணுக்காக இவ எதுக்கு நமக்கு உதவி பண்ணனும்? ஏதோ பெருசா பிளான் போட்ருக்கா. இவகிட்ட நம்ம பிளான் பத்தி மட்டும் வாய திறக்காதிங்க” என்று எச்சரிக்கை விட்ட ஹரியை மூவரும் ஒரே நேரத்தில் ஆச்சிரியமாக பார்த்தனர்.
‘நாம பிளான் போட்டோம்?’ என்று ப்ரேம் மெதுவாக வந்து கேட்க, சிவாவோ, “என்ன விட்டுட்டு பிளான் போட்டுட்டீங்களா” என்று காதை கடித்தான்.
இருவரையும் தள்ளி நிறுத்தியவன் கண்ணாடிக்க இருவருக்கும் புரிந்தது. “யமுனா என்னோட ஸ்கூல் ஃப்ரன்ட், அவளுக்காக நான் இது கூட பண்ண மாட்டேனா? உங்க பிளான் என்னனு தெரிஞ்சு ஹெல்ப் பண்ணலாம்னு நெனச்சா ரொம்ப தான் ஓவரா பண்றீங்க. என்னமோ போங்க. டேய் சொறிமுத்து நீ என் லைன்ல ரொம்ப கிராஸ் பண்ற நல்லதுக்கு இல்ல சொல்லிட்டேன்” என்று ஹரியை எச்சரிக்கை அவனுக்கோ பொய் கோவம் தான் வந்தது, கோவம் அவனுக்கு வருவதே அரிது தானே.
“டேய்-னு சொன்ன வாய ஒடச்சிடுவேன். வாத்துக்கு பாண்ட் சட்டை போட்ட மாதிரி இருந்துட்டு நீ என்ன சொல்றியா? எங்களுக்கு எங்க வழிய பாத்துக்க தெரியும்” என்றான் கைகளை நீட்டி குத்துவது போல் செய்து.
ஹரியின் கையை பிடித்து கீழே இறக்கிய கார்த்தி, “ஐயோ அவன் சொல்றது எல்லாம் காதுல போடுக்காதிங்க, நாங்க பிளான் போடவே இல்ல, நாங்க பிளான் போட்டா எங்களுக்கு சரி வராது அது தான் ஸ்பாட் பிளானிங் பண்ணுவோம்”
அவனை தொடர்ந்து சிவாவும், “சத்தியமா அவன் வாங்கி குடுக்குற டீகாக சொல்லலங்க, கார்த்தி சொல்றது தான் உண்மை, அவனை மாதிரி நல்லவனை, நேர்மையானவன் நீங்க தேடுனாலும் கிடைக்காது”
அவனை ஓங்கி எத்திய ஹரி, “பத்து ரூபா டீக்கு எப்படி பேசுறான் பாரு. சம்மதமே இல்லாத நேரத்துல எதையோ பேசுறது”
“டேய் மூணு பேரும் கொஞ்சம் சீரியசா இருங்க டா. உங்க பெருமை பத்தி பேச இதுவா நேரம்?”
அபர்ணாவிடம் திரும்பி, “நீங்க சொல்றது உண்மை தான? நம்பலாமா உங்கள?” என்றான் தீவிரமாக.
“உங்களுக்கு ஹெல்ப் பண்ற எண்ணம் இல்லாம தான் உங்களுக்காக இவ்ளோ ரிஸ்க் எடுத்து என்னோட ஃப்ரன்ட்ஸ்ன்னு உங்கள எதுக்கு ஊருக்குள்ள கூட்டிட்டு போகணும்? இப்ப தெரிஞ்சோ தெரியாமலோ நீங்க நாளைக்கு நீங்க ஏதாவது பிரச்சனை பண்ணி இங்க மாட்டிக்கிட்டா என…”
“என்னடா அலிபாபா குகைக்குள்ள போற மாதிரி இவ்ளோ சீன் போட்றாய்ங்க, எனக்கு என்னமோ உன் ஆளோட அப்பனவிட இவ தான் பெரிய பூதம் மாதிரி இருக்கா, ஊருக்குள்ள விட சொல்லு அப்றம் நாம பாத்துக்கலாம்” ஹரியை பார்த்து அவன் நண்பர்கள் மூவரும் முறைத்தனர், ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில்.
“ஹரி ஈகோ பாக்குற நேரம் இது இல்ல. அந்த ஊர் பத்தியோ அங்க இருக்குற மனுசங்க பத்தியோ நமக்கு ஒண்ணுமே தெரியாது. என்னமோ என் நல்ல நேரம் யமுனா ஃப்ரன்ட் நமக்கு எதேச்சையா கிடைச்சிருக்கா, ஒழுங்கா யூஸ் பண்ணிக்கனும்டா” அபர்ணா தான் அவர்களுக்கு இப்பொழுது ஒரே வழி.
“எனக்கு முழுசா எல்லாம் விருப்பம் இல்ல, ஏதாவது பாதுகாப்பான இடமா பாத்து விட சொல்லுடா. உதவி செய்றான்னு ரொம்ப இறங்கி போகாதீங்க” என்ற எச்சரிக்கையோடு நிறுத்திக்கொண்டான்.
அவனையே பார்த்து முறைத்த அபர்ணா, “உன்ன எல்லாம் ஒரு மனுஷன்னு மதிச்சு பேசுறாங்கல்ல இவங்கள சொல்லணும். ஏங்க நீங்க தான் இவன் இல்லாம வேலைய முடிக்க வேண்டியது தான. டேய் சாத்தியமா சொல்றேன் நீ எல்லாம் உறுப்புட மாட்ட உன்ன சுத்தி இருக்கவங்களையும் உறுப்புட விட மாட்ட”
கார்த்தியிடம் திரும்பி, “இன்னைக்கே நைட் ஒரு பிளானோட வர்றேங்க. இவன நம்பாதீங்க… போறபோக்குல மாட்டு தொழுவத்துல தான் உங்கள படுக்க வைப்பான். உங்க நம்பர் தாங்க” கார்த்தியின் எண்ணை வாங்கி, “ஏதாவது தெரிஞ்சா உங்ககிட்ட சொல்றேன். ஆனா ஒன்னு என்னால க்லூ மட்டும் தான் குடுக்க முடியும் மத்த வேலை எல்லாம் நீங்க தான் பாத்துக்கணும்” கார்த்தியும் சிவாவும் மணி கட்டிய மாடாய் தலையை ஆட்டினர்.
சரியாக அந்த நேரம் ஒரு இடத்தில் வண்டி நிற்க அபர்ணா கூறியது போல் தான் அந்த இடத்தில் ஆங்காங்கு ஆட்கள் நின்றனர்.
“ஊருக்குள்ள எந்த வண்டி வந்தாலும் பெருசா விசாரணை நடக்கும் போல… அங்க பாருங்க” ப்ரேம் காட்டிய இடத்தில் பார்க்க, அவர்களுக்கு பின்னால் வந்த இருசக்கர வாகனத்தை கூட சோதித்துக்கொண்டு இருந்தனர்.
“ஊருக்குள்ள வந்தாச்சு. நீங்க இங்கையே இறங்கிக்கோங்க” என்க நால்வரும் இறங்கினர்.
கார்த்தி அபர்ணாவிடம் சிரித்துக்கொண்டே, “அபர்ணா நீங்க கர்ணன் பரம்பரைன்னு உங்கள பாத்ததுல இருந்து எனக்கு தோணிட்டே இருக்கு. உங்க மனசு இருக்கு பாருங்க மனசு அது சுத்த தங்கம்”
அவன் சட்டையை பிடித்து இழுத்த ஹரி, “இந்த டயலாக் முகத்தை கூட மாத்தாம இதோட 273 வது பொண்ணுகிட்ட சொல்லிட்ட, அத கூட நான் ஒதுக்குவேன் ஆனா இவ கிட்ட இத சொல்றப்ப தாண்டா எனக்கு கோவம் வருது”
“டேய் சொறி…”
“ஏய் சோத்துமூட்டை நானும் பாக்கறேன் அப்ப இருந்து தண்ணி தெளிச்ச எண்ணை சட்டி மாதிரி பொரிஞ்சிட்டே இருக்க, ஒரேடியா கவுந்தி விட்ருவேன்” எச்சரிக்கையோடு ஹரி அங்கிருந்து நகர அவனை தாக்க கூட தன்னிடம் ஒரு பொருளும் இல்லையே என்ற கோவம் தான் அபர்ணாவுக்கு.
தூக்றோம்
– Bookeluthaporen