Skip to content
Post Views: 2,031
விடாமல் வீறிட்டு அழுகும் குழந்தையை என்னென்னவோ கூறி சமாதானம் செய்ய தான் பார்த்தனர் வீட்டினர் எல்லாம். ஆனால் அசையவே இல்லை பூர்வி.
மகளின் அழுகையை அறிந்த பார்த்திபனும் உடனே அலுவலகத்திலிருந்து இல்லம் வர தந்தை கைக்கு மாறிய பிறகும் அழுகை நிற்கவே இல்லை.
“ஒடம்பு எதுவும் பண்ணுதோ ம்மா, நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகவா?” என்ன செய்வதென புரியாமல் கலங்கிய பார்த்திபன் அன்னையிடம் கேட்டு நின்றான்.
“எங்க போனாலும் இப்டி தான் அழுவா. அவ ஆரபிய தேடுறா தம்பி. எத்தனை நாள் குழந்தையை அம்மாகிட்ட இருந்து பிரிச்சு வச்சிட்டு முடியும்?”
Advertisement
அதன் பிறகு ஒரு நொடி கூட யோசிக்கவில்லை உடனே மனைவி வீட்டில் நின்றான். வீட்டினர் அனைவரும் மாப்பிள்ளையை உபசரிக்க அவன் யாரை எதிர்பார்த்து வந்தானோ அவள் அவன் முன்பு வந்தே நிற்கவில்லை.
குழந்தை வந்த உடனே அன்னையை தேடி அவள் அறைக்கு சென்றிருக்க உள்ளே குழந்தையின் சிரிப்பு சத்தமும் மனைவியின் குரலும் கேட்டுக்கொண்டே தான் இருந்தது.
ஆரபி தந்தையும் அங்கு தான் இருந்தார்.
Advertisement
“இன்சூரன்ஸ் பணம் எதிர் பாக்குற அளவு வரலன்னு ஸ்ரீனி சொல்லிட்டு இருந்தான். என்ன பண்ண போறீங்க மாப்பிள்ளை?”
Advertisement
“வெளிய கேட்ருக்கேன்” என்றான் எப்பொழுதும் வரும் இரண்டு வார்த்தை பதிலாக.
“நான் வேணா ஏற்பாடு பண்ணவா?”
“வேணா ப்பா. அவா மேல ஊருக்கே நம்பிக்கை இல்லாதபோவே சாதிச்சவா, இப்போ முடியாதோனோ?”
Advertisement
இவ்வளவு நேரம் உள்ளிருந்தவள் திடீரென வந்து இவ்வாறு பேசவும் குடும்பமே அவளை அதிசயமாக பார்க்க, பார்த்திபனோ அவளை ரசிக்கவா முறைக்கவா என சிந்தனையில் இருந்தான்.
“ஆரபி” பார்த்திபன் கண்களை உருட்டி அதட்டினான்.
“இப்ப என்ன உன் தோப்பனார் தப்பா கேட்டுட்டா, உன் ஆம்படையாலும் எங்களுக்கு ஒரு ஸ்ரீனி தானே. அவாளுக்கு செய்ய கூடாதா நாங்க” என்றார் ஆரபி அன்னை.
“அத்தை அவ ஏதோ பேசுறா” என்றவன் மாமனாரிடம், “வெளிய கெடைக்கலனா அப்பா இப்போ ஒரு எல்.ஐ.சி எடுக்குறாங்க அதை கொஞ்சம் வாங்கலாம்னு இருக்கேன்” என்றான்.
இதை கேட்டு ஆரபி மீண்டும் அறைக்குள் சென்று ஒடுங்கிவிட்டாள். அவளை பார்த்து பேசி மூன்று நாட்கள் ஆகியது. எப்பொழுது எப்பொழுது என காத்திருந்தவனுக்கு குழந்தையே வழி ஒன்றை கொடுக்க அதனை பிடித்துக்கொண்டு வந்துவிட்டான்.
அவள் இல்லாமல் அங்கு அமரவும் சங்கடமாக இருந்தது. மாமனார் மாமியார் இருவரிடமும் கூறி எழுந்தான்.
“தப்பா நினைக்காதிங்கோ, உங்களுக்குள்ள என்ன மன கஷ்டம்னு தெரியல. இதுனால குழந்தை தான் அதிகம் பாதிக்கப்படுறா. இதுநாள் வர ஒத்த வார்த்தை ஆத்துகாரிய பேசாதவா நீங்க, அப்போ தப்பு எங்க பொண்ணு மேல தான்னு நேக்கும் புரியிது.
பேசி புத்திமதி சொல்லிண்டேன். பிள்ளையும் ரொம்ப அழுதுண்டே தான் இருக்கா, இனிமேலும் இவா ரெண்டு பேரையும் விட்டுண்டு தான் போறேள்னு பாக்குறப்போ மனசு கேக்கல” என்றார் தயங்கி தயங்கி.
“கிருஷ்ணா மாப்பிள்ளைக்கு தெரியும். நீ செத்த அமைதியா இரு” என்றார் ராஜ்கோபால் மனைவியிடம் கண்டிப்பாக.
“இல்ல அத்தை, தப்பு ஆரபி மேல இல்ல. என்னோட ஒர்க் டென்ஷன நான் அவ மேல இறக்க பாத்தேன். பாவம் அவளும் என்ன செய்வா? அவங்க இங்கையே இருக்கட்டும் இன்னும் ஒரு வாரம்”
பார்த்திபன் பார்வை மீண்டும் ஒரு முறை மனைவியின் அறையை பார்த்து வெளியேறியது. தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அமர்ந்தவனுக்கு மனம் மனைவியை விட்டு அகல மாட்டேன் என பிடிவாதம் பிடித்தது.
ஒருவாறு அதனை சமாதானம் செய்து வந்தவனுக்கு கண்களை மூடினாள் அவள் நினைவு தான். அதிக வாகன நெரிசல் நிறைந்த சிக்னலில் நின்றவன் ஹெல்மெட்டை அவிழ்த்து முகத்தை அழுத்தமாய் கண் மூடி துடைக்க விடைத்த மூக்கு சிவக்க வந்து தந்தையிடம் பேசிய மனைவி முகம் நினைவினில் வந்து நின்றுவிட இவன் அசைவுகளும் அப்படியே நின்று போனது.
அதற்கு மேலும் தாமதியாமல் வந்த வேகத்திற்கு முற்றிலும் மாறான அதீத வேகத்தில் மீண்டும் மாமனார் வீட்டினில் இருந்தான்.
சென்ற ஐந்தே நிமிடத்தில் வந்து நின்ற மருமகனை வியந்து பார்த்த க்ரிஷ்ணாம்பாள், “எதையாவது மறந்து போய்ட்டேளா மாப்பிள்ளை?” என்றார்.
சங்கடமாக போனது பார்த்திபனுக்கு, ஆனாலும் சமாளித்தான், “இல்ல அத்தை குழந்தைக்கு தடுப்பூசி பத்தி ஆரபிக்கிட்ட பேசணும்” என்றான். அவரும் அவனுக்கு வழிவிட மனைவி அறைக்குள் மின்னல் வேகத்தில் வந்து தாழிட்டவன் எறும்பு ஊரும் வேகத்தில் மனைவியை கண்களாலே அலசினான்.
திடீரென உள்ளே நுழைந்த கணவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்தவளும் எதுவும் பேசாமல் உறங்கும் பூர்வி அருகே படுத்திருந்தவள் எழுந்து நின்றாள்.
மூன்று நாட்கள் முன்பு பார்த்த அதே அழகு மனையாட்டி தான். அன்றை விட இன்று முகம் கருத்து தெரிந்தாள். போதாததற்கு இப்பொழுதும் அழுத்திருப்பாள் போல கண்கள் சிவந்து இருந்தது.
“ஆராம்மா…” பூக்காற்றை போல் மெல்ல வருடிய கணவனின் குரலில் முகத்தை திரும்பியவள் கண்ணீர் பார்த்திபனை அடித்து சாய்த்திருந்தது.
“மாமி மூக்கு சிவந்திருக்குடி” என்றான் அவளை நெருங்கி.
அவள் பேசவே இல்லை கணவனிடம். அவளை நெருங்க நெருங்க அவன் இல்லம் சேரும் நிம்மதி மனதினில் பார்த்திபனுக்கு.
‘இருந்துட்டு போகுது’ என்றாள் இன்னும் கோவமாய் முணுமுணுப்பாய்.
தன்னை பார்க்காத அந்த முகத்தை பூவை போல் மெல்ல இருக்கைகளில் ஏந்தி தன்னை பார்க்க செய்தவன் அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் ஒன்றை வைத்தான்.
அவனது இச்செயலில் சினம் கொண்டவள் அவனது நெஞ்சத்தினில் அடிக்க, “மூக்குத்தி எங்க மாமி?” கேட்டான் கண்களை மூடியபடியே அவள் நெற்றியில் நெற்றி முட்டி.
“போட்ருக்கேன்ல” என்றாள் இன்னும் கோவமாக.
“இது இல்ல ஆராம்மா. அந்த கொஞ்ச நேரம் முன்னாடி வேற மூக்குத்தி போட்ருந்தியே அதை கேட்டேன்” என்றான் ஆசையாக.
அவன் மார்பினில் கை வைத்து இருவருக்கும் இடையே இடைவெளி உருவாக்கியவள் முகம் கோவத்தில் சிவந்தது.
“போங்கோ, அப்போ என்ன பாக்க நீங்க வரல” திமிறி நகர்ந்தவள் இடை வளைத்து அருகே இழுத்தவன் தன்னுடைய நேசத்தை மனைவியின் இதழை சிறை செய்து காட்டியிருந்தான்.
மூன்று நாட்கள் முகம் பாராமல், ஒரு வாரம் ஆசை பார்வை கூட இல்லாமல் தவித்தவனுக்கு இந்த ஒரு முத்தம் இதனை சீர் செய்திடுமா?
ஒரு காவியத்தையே மன காகிதத்தில் எழுதிவிட்டது ஆசை கொண்ட காதல் உள்ளம்.
ஆரபி முதல் முறை கர்பமாக இருந்த பொழுது பார்த்திபன் அவள் தாய்மைக்கு அழகு சேர்க்க அதிகம் தேடி வாங்கியது அந்த மூக்குத்தி. பூ வடிவ நவரத்தினங்கள் பதிக்கப்பட்டிருக்கும் மூக்குத்தியில் அழகாய் மூன்று முத்துக்கள் தொங்கும்.
அவளை அதிகம் சங்கட படுத்த கூடாதென்றே பிரத்யேகமாக சிறியதாக நுண்ணிய வேலைப்பாடுகளோடு செய்து வாங்கியிருந்தான்.
பூர்வி பிறந்ததும் அதனை போடாத மனைவியிடம், “அழகா இருந்துச்சு மாமி” என குறைப்பட்டான்.
“ரொம்ப க்ராண்டா இருக்கு ன்னா” தன்னுடைய சங்கடத்தை கூற, தலை அசைத்து சரி என்றான்.
அவனது வாடிய தலை அசைப்பில், “அடுத்த கொழந்தை வர்றப்போ போட்டுக்குறேன் போதுமா, இப்போ சிரிங்கோ”
அன்று கொடுத்த வாக்கு இன்று நிறைவேற்றி மனைவி வந்து நின்றதை கூட அந்த நொடி கணவன் கவனிக்கவில்லை.
சிக்னலில் அவளை நினைத்து கண் மூடிய சமயம் தோன்றியவளின் அழகு வதனத்தில் டாலடித்த அந்த மூக்குத்தி அவனை மீண்டும் இழுத்து வந்திருந்தது.
ஆரபியின் இதழிலிருந்து பிரிந்து வந்தவன் அவள் கன்னம், கண், நாசி என கிடைக்கும் இடமெல்லாம் முத்தமிட்டான்.
இறுதியாக தரையில் மண்டியிட்டு தங்கள் காதலின் அடுத்த அடையாளமாய் உருவாகியிருக்கும் இளம் தளிரை ஆசையாக மனைவியின் இடையோடு அணைக்க கணவனின் முகத்தை வயிற்றோடு கட்டி அவன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினாள்.
“அப்பா உன்னையும் அம்மாவையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல டா?” எதுவும் உணராத பிஞ்சிடம் அவன் கேட்டுக்கொண்டிருக்க,
“ம்ம் இப்போவும் உங்களுக்கு உங்க குழந்தை தானே முக்கியமா இருக்கு” கணவனின் சிகை இழுத்து தன்னை பார்க்க செய்த ஆர்பி ஏகத்திற்கும் முறைத்தாள்.
“எத்தனை குழந்தை வந்தாலும் நீ தான் எனக்கு முதல் முக்கியம்னு முத்தத்தோட வருசையே உனக்கு சொல்லும் மாமி”
“பேச்சுக்கு மட்டும் குறை இல்ல. போறேன்னு சொல்லவும் குழந்தை தனியா எப்படி இருப்பானு தான் கேக்குறேள். அப்போ நோக்கு என்ன பத்தி கவலையே இல்ல”
“கவலை இல்லாம தான் நீ போன கேப் பின்னாடியே வந்தேனா?”
“ரொம்ப பெரிய விஷயம் தான் பண்ணிருக்கேள். பின்னாடி வந்தவா கைய புடிச்சிண்டு விட மாட்டேன்னு சொல்ல எவ்ளோ நாழிகை ஆகியிருக்கும். எப்போடானு இருந்துருக்கேள்”
“என்னடி இப்டி எல்லாம் பேசுற. நான் கோவத்துல பேசிட்டேன். ஏன் இதுக்கு முன்னாடி நமக்குள்ள சண்டையே வந்தது இல்லையா, என்ன இப்போ புதுசா இப்டி பொட்டிய தூக்கிட்டு?”
“எல்லாம் என்னால தான்னு குத்தி காமிச்சேளே. அப்போ அதுக்கு என்ன விளக்கம் தர போறேள்”
“ரொம்ப ஸ்ட்ரெஸ் மாமி. எங்க போனாலும் பிரச்சனை. வந்த பெரிய பெரிய டெக்கரேஷன் ஆர்டர் எல்லாம் கை மாறி போச்சு. எங்க பணம் கேட்டாலும் கிடைக்கல. அதை தான் என்ன பன்றேன்னு எனக்கே தெரியாம உன் மேல இறக்கி வச்சேன்” என்றான் தளர்வாக.
“அப்டி எல்லாம் இறக்கி வைக்க கூடாது. உங்களோட பிரச்சனை என்னனு தெரிஞ்சுக்குற விவரம் குழந்தைக்கு இல்ல. இப்டி சிடுசிடுனு ஏதாவது சொல்லிட்டே இருந்தேள்ன்னா குழந்தை எப்படி உம்மை நெருங்கும்?
அந்த டிஸ்டன்ஸ் அதிகமாகிடும். இதை புரிஞ்சு நான் அவளை உம்ம நெருங்க விடாம பண்ணாலும் சார் அவா குழந்தையை அவாகிட்ட இருந்து பிரிக்கிறேன்னு குறை வேற பாடுறேள்”
தன்னையே நொந்துகொண்டான் பார்த்தவன், “பெரிய வார்த்தை சொல்லிட்டேன்ல ஆராம்மா? என்ன பேசுறேன்னு தெரியாம பேசிட்டேன் மாமி. ரொம்ப வருத்தப்பட்டேன். மன்னிச்சிரு ஆராம்மா” மனைவி கையை பற்றி கெஞ்சினான்.
“அதெல்லாம் நீங்களே வச்சுக்கோங்கோ” பார்த்திபன் கையை உதறியவளுக்கு அழுகையாக வந்தது,
“மூணு நாள் ஒரு வார்த்தை பேசல, குழந்தை அழுதானு வந்தேள், இப்போ மறுபடியும் இன்னொரு குழந்தையை கேக்க வந்துருக்கேள். நேக்கு தான் ஒவ்வொரு ராத்திரியும் உறக்கமே அண்ட மாட்டிக்கிது நீர் இல்லாம”
ஆரபியை இறுக்கமாக அணைத்திருந்தான் பார்த்திபன் அவள் அழுகையை பார்க்க முடியாமல்,
“கனவுலயும் அப்டி நினைக்காத மாமி. உன்ன பாக்க பாப்பா ஒரு சாக்கு. நான் வந்து உன்ன தேடுவேன்னு தெரிஞ்சும் நீ ஏன்டி ரூம்ல இருந்து வரல அந்த ஏமாற்றத்துல தான் போனேன்.
தினமும் நெய் சாம்பிராணினு உன்னோட வாசனையை எனக்கு பழக்கி விட்டுட்ட, நான் மட்டும் எப்படி ஒழுங்கா தூங்கிருப்பேன். கண்ணை பாரு” கண்ணை காட்டினான். கருவளையம் இருக்க தான் செய்தது.
ஒருநாளும் இப்படி பேசியிராதவன் தான் அவள் பார்த்திபன், அவன் மனநிலையும் புரிந்தது, அவனும் தவறை உணரவும் பெரிதாக வீம்பு பிடிக்க விரும்பவில்லை.
“சரி மன்னிச்சிடுறேன்” என்றாள் அவன் கன்னத்தில் முத்தம் வைத்து.
“எப்போ கணபார்ம் பண்ண?” கணவன் விரல்கள் ஆசையாக அவள் புடவையை ஒதுக்கி இடையை வருடியது.
“நான் வீட்டை விட்டு வந்த அன்னைக்கு”
அதிர்ந்தான், “தெரிஞ்சும் ஏன் ஆரா வந்த?”
“ம்ம் உமக்கு என்னோட அருமையா புரிய வைக்க”
“நல்லா புரிய வச்ச போ” என்றவன் ஆசையாய் மனைவிக்கு அவ்வவ்வபொழுது முத்தத்தை கொடுத்துக்கொண்டே இருந்தான்.
“வீட்டுக்கு வா மாமி” அவனுக்கு அவள் இல்லாமல் அங்கு இருக்கவே முடியவில்லை.
அவன் ஆசையாக உண்ணும் உணவோ பிடிக்காத உணவோ அவன் விருப்பத்திற்கு ஏற்று பரிமாறி, அருகிலே நின்று அந்நாளின் கதை பேசுவது, காலை எழுந்தவுடன் நாளினை அழகாக்கும் சிரிப்பை தரும் அவன் மாமி இல்லாமல் எதுவுமே ஓடவில்லை.
அவளோ முறுக்கிக்கொண்டாள், “போங்கோ நான் வர மாட்டேன், நேக்கு எப்போ தோணுத்தோ அப்போ தான் வருவேன். என்ன பேசுனத்துக்கு இது தான் தண்டனை” என்றுவிட்டாள்.
“ஆராம்மா”
“அவ்ளோ தான் முடிவு” இன்னும் அழுத்தி கூறி அவள் முகம் திருப்ப, திருப்பிய முகத்தை பற்றி அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் ஒன்றை வைத்தான்.
“சரி இரு. ரெண்டு நாள் பொறுத்துக்கோ வெள்ளிக்கிழமை நான் வந்து செக்க்கப் கூட்டிட்டு போறேன்” என்றான்.
அவளும் சரி என்க கிளம்ப போனவன் கை பற்றி, “சாப்ட்டேளா?” கேட்டாள்.
உதட்டை பிதுக்கினான், குழந்தைக்காக தான் வீட்டிற்கே அவன் வந்தது. இப்பொழுதே மணி நான்கை தொட்டிருந்தது.
“நீ இல்லாம வீட்டுக்கு போகவே மனசு வரல ஆராம்மா”
உண்மையை சிரிப்போடு கூறியவன் கை பிடித்து இழுத்து சென்றவள் அவனுக்காக பதினைந்தே நிமிடத்தில் சுட சுட சாதம் வைத்து பருப்பு பொடி மற்றும் உருளை வறுவலை வைக்க எப்பொழுதும் உண்பதை விட அதிகம் உண்டு எழுந்தான்.
அவ்வளவு பசியை வைத்தா சுற்றிக்கொண்டிருக்கிறான் என கணவனையே ஆரபி பார்வை தொடர்ந்தது.
ஆரபி அறைக்குள் சென்று வந்தவன் குழந்தையை ஒரு முறை பார்த்துவிட்டு ஆரபி கையை இறுக்கமாக பற்றி, “வீட்டுல இன்னைக்கு பேசலாம்னு பாக்குறேன், கொஞ்ச மாசத்துக்கு பணம் கேக்க போறேன்”
அவன் கூற தலை அசைத்து ஆரபி அனுமதி கொடுக்க, வெளியே சென்றான். எனோ மனம் இதமாக இருந்தது. மனைவியை அணைத்து அவள் கையால் உணவு உண்டதா, இல்லை தன்னுடைய இரண்டாவது வாரிசு வரும் புத்துணர்ச்சியா தெரியவில்லை.
இறகாய் மனம் பறக்க அலுவலகம் சென்றவன் கைகள் வேகமாக வேலையை செய்தது. இரவு உணவிற்கு முன்பே வீட்டினரிடம் பேசிவிட வேண்டும் என்கிற வேகம் அது.
error: Content is protected !!