Skip to content
Post Views: 14,270
விஷ்ணுவிற்கு வேலை முதலில் திருச்சியில். தற்போது ஆறு மாதத்திற்கு முன்தான் காஞ்சிபுரத்திற்கு மாற்றியிருந்தது அரசாங்கம். காஞ்சிபுரத்திற்கு மாற்றிய பின்னே மாதம் இரண்டு அல்லது மூன்று முறையாவது வந்து போவான் வீட்டிற்கு.
ஆனால் இவன் வரும் நேரம் விஷாலினி வீட்டில் இருக்கமாட்டாள். விஷ்ணுவிற்கு அரசாங்கத்தில் கொடுத்த குடியிருப்பிற்கு சென்று பத்து நாள்களுக்காவது தங்கி வர கோபாலனிற்கும் பிரபாவதிக்கும் ஆசைதான். ஆனால் மகளை அழைத்துச் சென்றால் விஷ்ணுவிற்கு பிடிக்காதென்று செல்லவில்லை.
விஷ்ணுவும் பெற்றோர் மனமறிந்து அழைக்கவும் இல்லை. திருச்சியில் இருந்தபோது ஒருமுறை சென்று பார்த்து வந்தனர். காக்கி சீருடையில் கம்பீரத்தோடிருக்கும் மகனை பார்த்து பூரித்து போனார் கோபாலன். ஆனந்தத்தில் கண்கலங்கினார். வாழ்க்கை பரிபூரணமானது போன்று உணர்ந்தார்.
ட்ரைனிங்கில் இருந்த ஒரு வருடமும் விஷ்ணுவால் விஷாலினியை பார்க்க முடியாமல் போனது. பரிட்சை விடுமுறையில் விஷாலினி வீட்டிற்கு வரும் நேரம் விஷ்ணு வீட்டில் இருப்பதில்லை.
Advertisement
பணி மாறுதலில் காஞ்சிபுரத்திற்கு வந்த பின்னே கல்லூரிக்கு சென்று பார்த்து வரலாமா என்று பலமுறை நினைத்திருக்கிறான். ஆனால் நேரில் பார்த்தால் தன்னுள் இருக்கும் அவள்மீதான காதல் வெளிப்பட்டுவிடும், இன்னும் ஒன்றரை வருடம்தானே? படிப்பை முடிக்கட்டும் என்று நேரில் சென்று பார்க்கும் எண்ணத்தை கைவிட்டான்.
அதோடு திருச்சியில் இருந்த போது இவனின் முதல் பணியே போதை கும்பலை கைப்பற்றுவது. பள்ளி மாணவன் சம்மதப்பட்டிருந்தான், அவனிடம் விசாரித்ததில் கல்லூரி மாணவன் ஒருவனும் சம்மதப்பட்டிருந்தான், அவனிடம் விசாரிக்க மேலும் ஒருவன், இப்படியாக தொடர, இதற்கிடையே மற்ற குற்றத்திற்கான விசாரணைகளும் இருக்க, விஷாலினி நினைப்பை தள்ளி வைப்பது சற்று எளிதாக இருந்தது.
காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் இருப்பதாலோ என்னவோ, காஞ்சிபுரம் வந்ததிலிருந்து அவளை பார்க்கும் ஆவல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டேயிருந்தது.
Advertisement
அதிலும் வெகு நாள்களுக்குப் பிறகு இன்று மாலை நான்கு மணிக்கே இருப்பிடத்திற்கு வந்துவிட்டான். நாளை காலை பத்து மணிக்குத்தான் அலுவலகம் செல்ல வேண்டும்.
Advertisement
தந்தைக்கு அழைத்து பேசினான். அன்னையிடம் பேசினான். மேகலையின் நலனையும் விசாரித்தான்.
பிறகு IPS க்கான பயிற்சி முடித்து தற்போது உத்திரபிரதேசத்தில் ASP ஆக இருக்கும் நண்பனும், நாகநாதன் மகனுமான சித்தார்த்திற்கு அழைத்து பேசினான். முக்கிய பணியில் இருப்பதாகவும், பிறகு பேசுவதாகவும் சொல்லி அழைப்பை துண்டித்திருந்தான் சித்தார்த். நேரம் பார்க்க மாலை ஐந்துதான் ஆனது.
ஹம்… காலேஜ் முடிஞ்சிருக்குமா? ஹாஸ்டலுக்கு வந்திருப்பாளா? என்ற யோசனையோடு வாட்ஸாப் சென்றான்.
Advertisement
மதியம் ஒரு மணிக்கு பிறகு ஆன்லைன் வரவில்லை எனப்புரிய, பொறுக்க முடியாமல் அழைத்துவிட்டான். விஷாலினி அழைப்பை ஏற்கவில்லை. காலேஜ்ல இருப்பாளோ என நினைத்தவன் ஆறு மணிபோல் மீண்டும் அழைத்தான்.
அழைப்பை ஏற்றவள் “ம்” என்றாள்.
“என்ன ம்? போன் அட்டன் செய்தா ஹலோ சொல்றது… தெரிஞ்சவங்களா இருந்தா நலம் விசாரிக்கிறதெல்லாம் வராதா உனக்கு?” என்றான் கடுப்பாக.
“நல்லாயிருக்கிங்களா?” என்றாள்.
சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளைபோல் இவள் கேட்டதில் எரிச்சலாகிட “நல்லாவேயில்ல” என்றான்.
“ஏன்? வேலை அதிகங்களா?” என்றாள் அக்கறையாக.
“வாங்க போங்கனு பேசக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல?”
“எனக்கு அப்படி சட்டுனு பேரை சொல்ல வரமாட்டேங்குது” என்றாள் சன்னக்குரலில்
“என்ன பஸ் சத்தம் கேட்குது? வெளில இருக்கியா?”
“ம்… வீட்டுக்கு போய்ட்டிருக்கேன், அம்மாக்கு தெரியாது. வீட்டுக்கு போய் ஒரு மாசத்துக்கு மேல ஆகுது. பத்து நாளா அம்மா வர சொல்லிட்டே இருந்தாங்க, எனக்கு எக்ஸாம்னால போக முடியல. இப்போ போய் சர்ப்ரைஸ் கொடுக்கப்போறேன், ஒரு வாரத்துக்கு லீவ்” என்றவள் குரல் சற்றே உற்சாகமாய் வந்தது.
“முன்ன போன் செய்தேன், ஏன் அட்டன் பண்ணல?”
“ஓ… செய்திங்களா? நான் பார்க்கல, காலேஜ்விட்டு வந்ததும் குளிக்க போய்ட்டேன், போன் வந்தது தெரியாது, சாரி”
“ஓகே… ஓகே…” என்றவன், “எப்போ கிளம்பின?” என்றான்.
“இப்போதான், நீங்க கால் பண்ணும்போதுதான் ஆட்டோல உக்கார்ந்தேன்”
“சரி பத்திரமா போ” என்று இணைப்பை துண்டித்தவன், சென்னை கிளம்பினான்.
விஷாலினி ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்திருந்தாள். விஷாலினி வந்து ஒருமணி நேரத்திற்கு பிறகு விஷ்ணு வீட்டிற்கு வந்தான். “கொஞ்சம் முன்ன பேசும்போது கூட வரேனு சொல்லல” என்று செல்லமாய் கோபித்து, மகனின் திடீர் வருகையில் பரபரத்தார் பிரபாவதி.
“ம்மா இப்போலாம் அடிக்கடி வரேன்தான? ஏன் இப்படி எக்ஸைட் ஆகுற?” என்றவன் பார்வை விஷாலினி வீட்டு ஜன்னலை நோட்டமிட்டது.
கோபாலன், “நீயும் இரண்டு நாளைக்கு இருக்கப்போறியா விஷ்ணு? பைக்ல வந்திருக்க?” என்றார் ஆர்வமாக.
“இல்லப்பா, நாளைக்கு காலைல பத்து மணிக்கெல்லாம் ஆஃபீஸ்ல இருக்கனும், முக்கியமான மீட்டிங் இருக்கு” என்றவன் “அதென்ன? நீயும் இரண்டு நாளைக்கு இருப்பியானு கேட்குறிங்க?” என்றான்.
விஷாலினி விடுமுறையில் வந்ததால் தந்தை இப்படி கேட்டிருப்பார் என்று விஷ்ணு அறிந்திருந்தான். விஷாலினியை வரவழைக்க இப்படி கேட்டான்.
“இல்ல, ஆட்டோல வரும்போது விஷாலினிகிட்ட பேசுனியாம்” என்று மகனை ஆழம் பார்த்தார் கோபாலன்.
இதையும் சொல்லிட்டாளா? என சலிப்பாய் நினைத்தவன், “க்கும்… ஆமாம்ப்பா பேசினேன், ரொம்ப நாளாச்சு எப்படி இருக்கானு விசாரிச்சேன்” என்றான் இயல்பாக.
டீ சர்ட்டும் லோயரும்தான் அணிந்திருந்தான் விஷ்ணு. மகனின் டிசர்ட் காலரை மேலேற்றிவிட்டு, DSP டியூட்டியோட சேர்த்து வேறயும் பார்க்குற மாதிரி தோணுதே. என் நினைப்பு நிஜமா விஷ்ணு?” என்றார் மிக தன்மையாக.
“அப்பா” என்று விஷ்ணு வியந்து பார்க்க, கோபாலன் மகனை ஊன்றிப்பார்க்க, தந்தைக்கு சந்தேகம் வந்ததை உறுதி செய்து, “என்ன நினைப்புப்பா?” என்றான் இலகுவாக.
“வேலை கிடைச்சிடுச்சுனு சொன்ன அன்னைக்கு விஷாலினியை பார்க்க போனது எனக்கு அதிசயமாத்தான் இருந்தது. தப்பாலாம் நினைக்க தோணல. ஆனா இன்னைக்கு விஷாலினி சொன்னதெல்லாம் யோசிச்சி பார்த்தா உன்மேல சந்தேகம் வருதே” என்றார் நேரடியாக.
அப்பொழுதும் பதட்டமில்லாமல், விஷாலினி என்ன சொல்லியிருப்பாள் என்றறியும் நோக்கத்தோடு “அப்படி என்னப்பா சொன்னா?” என்றான் இயல்பாகவே.
“உன்னை குற்றம் சொல்லனும்ன்ற நோக்கோட ஏதும் சொல்லல” என்றவர், “விஷாலினி வரும்போது நான், உன் அம்மா, மேகலை எல்லாரும் வெளில உக்கார்ந்து பேசிட்டிருந்தோம். எல்லாரையும் நலம் விசாரிச்சிட்டு, அவங்க கால் பண்ணினாங்கம்மானு மேகலைகிட்ட சொன்னுச்சு.
நான் யாரோனு நினைச்சு, யார்ம்மா கால் பண்ணினாங்கனு கேட்டேன், உங்க மகன்தான் மாமானு சொல்லுது. என்னம்மா இப்படி சொல்ற? அண்ணானு சொல்லுனு சொன்னேன். நீதான் அப்படி சொல்லக் கூடாதுனு சொன்னியாம்?” என்றார் ஆராய்ச்சிப் பார்வையோடு.
சிரித்தவன், “அது சின்ன வயசுல சொன்னதை இன்னும் பிடிச்சிட்டிருக்காப்பா” என்றான் இயல்பாகவே.
“சின்ன வயசுல கோபத்துல சொன்னது எனக்கும் நியாபகம் இருக்கு… உன் அம்மா என் அப்பாவை அண்ணனா நினைக்கிறாங்க, நீயும் என் அப்பாவை மாமானு கூப்பிடற, மாமன் மகன் எப்படி அண்ணனாக முடியும்? விஷ்ணுனு கூப்பிடுனு சொன்னதை எப்படி எடுத்துக்கட்டும்?”
சிரித்தவன், “விஷாலினி அப்போ ரொம்ப அப்சட்டா இருந்தா. அவ மைன்டை மாத்த ஏதேதோ சொன்னேன். அதுல இதுவும் ஒன்னு. இதுக்காகவெல்லாம் என்னை சந்தேகப்படுவிங்களா?” என்றான் அலட்டாமல்.
எத்தனை சாதாரணமாக சொல்கிறான் என அயர்ந்தவர், “சரி அது போகட்டும். இன்னைக்கு விஷாலினியை விட வந்த ஆட்டோ டிரைவர், கிளம்பும்போது கால் பண்ணுங்கம்மானுட்டு போனான், டிரைவருக்கு நாற்பது வயசிருக்கும்.
ஆனாலும் இந்தளவுக்கு யாரையும் நம்பக்கூடாதேனு டிரைவர் நம்பர் உன்கிட்ட இருக்காம்மா? இந்த டிரைவரை எப்படி தெரியும்? நம்பர் வாங்கிக்கிற அளவுக்கு எப்படி பழக்கமானனு கேட்டேன்.
ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போது ஒருமுறை ஊருக்கு வர இந்த ஆட்டோல வந்துச்சாம். அதுக்கப்புறம் விஷாலினி காலேஜ் விட்டு வெளில வரும்போதெல்லாம் கரக்ட்டா இவன் பிக்கப்பண்ணினுடுவானாம். எப்படிண்ணா நான் வரும்போது சரியா வந்துடுறிங்கனு கேட்டுச்சாம்.
ஆட்டோல ஏற காத்திருக்கவங்களை பார்த்தாலே கண்டுபிடிச்சிடுவோம். உன்னையும் அப்படித்தான் கண்டுபிடிக்கிறேனு சொல்லிட்டு, ரொம்ப கஷ்டப்படுற ஃபேமலி, எப்போ வீட்டுக்கு போகனும்னாலும் எனக்கே கால் பண்ணும்மா, பத்திரமா கூட்டிட்டு போய் விடறேன், பணமும் மீட்டருக்கு மேல வாங்கமாட்டேனு சொன்னானாம்.
சொன்னது போலவே மூனு வருசமா நடந்துக்கிறானாம். அதனால பழக்கமாகிட்டார் மாமானு சொன்னுச்சு” என்றார். தற்போது கூட அசராமல் புன்சிரிப்போடு தந்தை சொல்வதை கேட்டிருந்தான் விஷ்ணுவர்தன்.
“அப்படிலாம் யாரையும் நம்பிடக்கூடாதும்மா, அவன் நம்பரை எதுக்கும் எனக்கும் கொடு. தேவைப்படும்னு கேட்டு வாங்கி, டிரைவருக்கு போன் செய்தேன்” என்றதும்தான் கண்களை அகல விரித்தான் விஷ்ணு.
“விஷாலினியோட மாமா பேசுறேனு விசாரிச்சப்போ விஷாலினிகிட்ட என்ன கதையை சொன்னானோ அதையேத்தான் சொன்னான். விஷ்ணுவர்தனோட அப்பா பேசுறேனு சொன்னதும் சார்னு சொல்றான். உன் பேரை சொன்னதும் இவன் எதுக்கு தடுமாறனும்? அதுவும் நீ வேலை செய்தது திருச்சிலயும், காஞ்சிபுரத்துலயும், இவன் இருக்கிறது சென்னைல” என்றார் முறைப்பாக.
“அதானே… சென்னையில இருக்கிறவன் எதுக்கு தடுமாறனும்?” என்றான் சிரிப்பை உள்ளடக்கி.
“டிரைவர்கிட்டயே விசாரிச்சிருப்பேன், அது உனக்கு அசிங்கம்னு விட்டுட்டேன்” என்று கோபாலன் முறைக்க, “நானே சொல்லிடறேன்ப்பா. விஷாலினியோட அப்பா, தங்கை மகன் யாராவது திரும்ப வந்தா இவ படிப்பு ஸ்பாயில் ஆகும்னு நான்தான் விஷாலினியை வாட்ச் பண்ண சொன்னேன். வெளில போகும்போது நீயே கூட்டிட்டு போனு சொன்னேன்” என்றான்.
தற்போதும் தன்னை முழுதாய் வெளிப்படுத்தாத மகனை முறைத்தவர், “உன் பதவி அதிகாரத்தை சொந்த விருப்பத்துக்கு யூஸ் பண்ணியிருக்க” என்றார் குற்றச்சாட்டாக.
“அதிகாரம்லாம் பண்ணலப்பா. ஹெல்ப்பாதான் கேட்டேன். நான் சொன்னேனு காசு வாங்காம இருக்கக்கூடாதுனும், நான் சொன்னதாலதான் விஷாலினியை பாத்துக்கிறேனும் அவளுக்கு எக்காரணத்தை கொண்டும் அவளுக்கு தெரியக்கூடாதுன்றதை மட்டும்தான் மிரட்டி சொன்னேன்.
அதுவுமே அவன் பிழைப்புல மண்ணப் போடக்கூடாதுனும், விஷாலினி பயந்திடக் கூடாதுனும்தான் மிரட்ட வேண்டியதாகிடுச்சு” என்றான் நல்லபிள்ளையாக.
தான்தான் தவறாக நினைக்கிறோமோ என்று கோபாலனுக்கே சந்தேகமாகிட, “அப்போ விஷாலினிக்கு பாதுகாப்பா இருக்க… அவ்வளோதான். ஆமாவா?” என்றார்.
“இதுல என்னப்பா சந்தேகம்? பாதுகாப்புக்காக மட்டும்தான் இத்தனையும் பண்ணினேன்” என்றான் புன்னகையோடு.
கோபாலன் முகம் குழப்பத்தை காண்பிக்க “அவளை கூப்பிடுங்க. பார்த்து இரண்டு வருசமாகிடுச்சு” என்றான் இலகுவாக.
“கூப்பிடமாட்டேன். இவ்வளோ நேரம் என்னோட பேசிட்டிருந்து இப்போதான் போனா. ரெஸ்ட் எடுக்கட்டும்” என மறுத்தவருக்கு அழைப்பு வர, தனதறையில் உள்ள மொபைலை தேடிச்சென்றார்.
“மாமா காவ்யாக்கா எப்போ வருவாங்க?” என்று விஷாலினி ஜன்னலிலிருந்து கத்த, அவள் முன்னே வந்தவன் விஷாலினியின் முகமாற்றத்தில் பிரமித்து நின்றான்.
சற்றே தூக்கியிருந்த சந்துப்பல் தற்போது முத்துக்கள் கோர்த்தாற்போல் அழகாய் பொருந்தியிருந்தது அவளின் செவ்வாயோடு. நீண்டு அடர்ந்திருக்கும் புருவங்கள் சீர் செய்யப்பட்டு, வில்லாய் வளைந்திருந்தது. அன்றுபோல் அல்லாமல் நேர்த்தியாக பின்னிய பின்னலை முன்னே போட்டிருந்தாள்.
விஷாலினி நல்ல நிறம்தான். ஆனால் காலை பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கலைந்த தோற்றத்துடன்தான் இருப்பாள். எப்பொழுதும் வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதவள் என்று விஷ்ணு அறிவான். தற்போதும் பெரிதான ஒப்பனையெல்லாம் இல்லைதான்.
சீர்திருத்தப்பட்ட பற்களும், புருவங்களுமே அவளின் முகவடிவை மொத்தமாய் மாற்றியிருக்க விஷ்ணுவின் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தாள்.
விஷாலினிக்கும் விஷ்ணுவைப் பார்த்தது எதிர்பாராத ஆச்சர்யமாக இருக்க, “எப்போ வந்திங்க? நல்லாயிருக்கிங்களா?” என்றாள். அவளின் குரலில் தன்னுணர்விற்கு வந்தவன், “வீட்டுக்கு வா” என்று ஹாலில் வந்தமர்ந்தான் அவளின் வருகையை எதிர்பார்த்து.
error: Content is protected !!