Skip to content
Post Views: 8,559
கள்ளி காட்டு காதலியே!
அத்தியாயம் 13
அடுத்தடுத்த நாட்களில் விக்ரம் ஊருக்கு வர வில்லை. சில நாள் பிரபா மட்டும் தனியாக சென்று வந்தாள். பார்த்து கொள்ள வில்லையென்றாலும் போனில் பேசி கொண்டார்கள்.
பிரபா விடுதியில் இருக்கும் போனில் சனி, ஞாயிறு பேசி விடுவாள். விக்ரம்க்கு என்ன வரும், என்ன தெரியும், என்னென்ன பிடிக்கும் என்று கேட்டு தெரிந்து கொண்டாள். அவளாக பேச்சை ஆரம்பித்தால் போதும் விக்ரம் பிடித்து கொள்ளுவான்.
Advertisement
பிரபா ஒவ்வொன்றாக அவனின் அம்சங்களை ரசிப்பாள். ஆழ்ந்து உள் வாங்குவாள். விக்ரம் பேசும் விதம், நையாண்டி, கோபம், ரசனை, ஒவ்வொரு வார்த்தைக்கும் விடும் இடைவெளியில் இருந்து போன் எடுத்ததும் தொண்டையை செருமி பின் தான் ஹலோ சொல்லுவான், உட்கார்ந்து பேசும் பொழுது ஒரு கால் ஆட்டி கொண்டு தான் பேசுவான், யோசனையில் இருக்கும் போது அவனின் வலது கை தாடியை நீவி விடும், நின்று கொண்டு பேசும் பொழுது அவனின் இரண்டு கையும் பேண்ட் பாக்கெட்டில் தான் விட்டு இருப்பான். அதிகமாக உடுத்தும் உடை வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட். லைட் கலர் சேர்ட் தான் அதிகம் போடுவான். பிஸ்தா கிரின் பிடிக்கும் போல… அவன் போனில் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ் படங்கள் இருக்கும். முக்கால்வாசி நேரம் அவனின் முன் சட்டை பட்டன் போடமாட்டன். பிரபாவை பார்க்க வரும் போது அதுவும் லேடிஸ் ஹாஸ்டல் என்பதால் மட்டுமே, முழுதாக சேவ் செய்து இருக்க மாட்டான், கொஞ்சம் லேசாக தாடி எப்போதும் இருக்கும், வேஷ்டி கட்டும் போது மீசையை முறுக்கி விட்டு கொள்வான்.
விக்ரம் சம்மந்தப்பட்ட அவ்வளவு விசயங்களும் அவளுக்கு அத்து படி. அவனிடம் கேட்டோ, பேசும் போது கண்டு பிடித்தோ, கூட இருக்கும் போது பார்த்தோ என்று நிறைய, நிறைய சேமித்து வைத்து கொள்ளுவாள். அவற்றை அசை போடுவதே ஒரு சுகமாக இருக்கும்.
கல்யாணத்துக்கு பின் தங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கனவு கூட இப்போதெல்லாம் காண்கிறாள். விக்ரம், அவனின் காதல் எல்லாம் வார்த்தையாக, அக்கறையாக வெளிப்பட்டு விட. பெண் தன் மனதின் காதலை ஆசையாக, ரசனையாக, கனவுகளாக மனதில் பூட்டி கொண்டாள்.
Advertisement
விக்ரம், அவன் நிச்சயம் தன்னை விட மாட்டான். கல்யாணத்துக்கு பின், செயலாக தன் காதலை கொட்ட காத்திருந்தாள்.
Advertisement
அன்று காலை விக்ரமோடு போன் பேசும் போதே கொஞ்சம் சோர்வாக தான் இருந்தாள். லேசான காய்ச்சல் இருந்தது. டிரெய்னிங் முடியும் சமயம் என்பதால் லீவ் எடுக்க வில்லை. ஒரு மாத்திரை போட்டு கொண்டு படுத்து விட்டாள். அன்று எந்த வேலையும் பார்க்க வில்லை.
நல்ல தூக்கத்தில் இருந்தவளை அடித்து எழுப்பினாள் சித்ரா.
“என்னடி? பிரையர் போகணுமா?…” என்று பிரபா கேட்க.
Advertisement
“இல்லை, கீழ உன் மதுரகார மாமன் உன்னை பார்க்க வந்து இருக்கார்…” என்று தகவல் சொல்ல,
அடித்து பிடித்து எழுந்து கீழ செல்ல, “சாதாரண காய்ச்சல், எல்லாருக்கும் தான் புது மழைக்கு வருது. அதை சொல்லி அவ்வளவு தூரம் இருந்து வர சொல்லனுமா பிரபா.,.” கடிந்து கொண்டாள் ஜெனி.
பின்ன அவர்கள் ஊரில் இருந்து வரவே மூனு மணி நேரம் ஆகும். இதில் விக்ரம் இருப்பது திருச்சியில், அங்கு இருந்து வர குறைந்தது அஞ்சு மணி நேரத்துக்கு மேல் ஆகும். ஐயோ! ஏன் இப்படி… பதறி போய் ஓடி வந்தாள்.
விக்ரம், அவன் எப்போதும் அமரும் கல் மேடையில் தான் அமர்ந்து இருந்தான். பிரபா யூனிஃபார்ம் சேலை கூட மாற்ற வில்லை, வந்ததும் படுத்தவள் தான். இப்போது தான் எழுந்து வருகிறாள். காலையில் போட்ட கொண்டையை கூட கழட்ட வில்லை.
“ரொம்ப முடியலையா பிரபா?…” எழுந்து நின்று விக்ரம் கேட்க.
“ஒரு சாதாரண காய்ச்சல் தான். இங்க பாதி பேருக்கு வந்து இருக்கு… டிரெய்னிங் அலைச்சல் வேற, அதான் கொஞ்சம் சோர்வா இருந்தேன். அதுக்கு இவ்வளவு தூரம் வருவீங்களா?…” அழுகை வரும் போல இருந்தது பிரபாக்கு… தன்னை ஏன் இவ்வளவு நேசிக்கிறான்.
“காலைல பேசும் போது உன் வாய்ஸ் ரொம்ப டல்லா இருந்துச்சு. காய்ச்சல்ன்னு வேற சொன்ன, மனசு கேட்கல… நீ எப்படி இருக்க, என்ன பன்றன்னு யோசிச்சுட்டே இருக்குறத விட, வந்து பார்த்திட்டு போயிட்டா எனக்கு நிம்மதி… இப்பவும் முகம் ஒரு மாதிரி இருக்கு, லீவு போட்டு ஊருக்கு வாரய்யா?…”
“ம்கூம், அட்டனன்ஸ் போகும். இனி லீவு எடுக்க கூடாது. நான் நல்லா தான் இருக்கேன். இவ்வளவு தூரம் பஸ்ல வரணுமா என்ன?…”
“பஸ்ல நான் உட்கார்ந்து தான் வந்தேன், ஓட்டிட்டு வரல. ஒரு கஷ்டமும் கிடையாது…”
“ஆனாலும், நீங்க திரும்ப போகணும் தான…”
“ அதிலென்ன கஷ்டம், கண்ணை மூடி படுத்தா, காலையில் அஞ்சு மணிக்கு அக்கா வீட்டுக்கு போயிடுவேன்…” என்றவன், தன் கையில் இருந்த பார்சலை கொடுக்க,
“சும்மா வர மாட்டீங்களா? காய்ச்சல் வேற நான் என்னத்த சாப்பிட போறேன்…”
“காய்ச்சல், அதான் வாங்கி வந்தேன். இன்னைக்கு வியாழக்கிழமை உங்க மெஸ்ல சப்பாத்தி தான. வாய்க்கு நல்லா இருக்காது. அதான் கொஞ்சம் நெய் பருப்பு புட்டும், இடியாப்பம், தேங்காய் பால் வாங்கி வந்தேன். இந்தா… இதுல மாத்திரை இருக்கு. சாப்பிட்டு போட்டு படுத்துக்க…” என்றவன் கிளம்ப,
பிரபாக்கு என்ன பேச என்று தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் இரு என்று சொல்ல ஆசை தான். அப்புறம் விக்ரம் அங்கு செல்ல நேரமாகி விடும். அத்தோடு இது விசிட்டர்ஸ் நேரமும் கிடையாது…
விக்ரம் சொன்ன அறிவுரையை கேட்டு, தலையசைத்து விடை கொடுத்தாள்.
அடுத்த வாரம் பிரபா ஊருக்கு சென்ற போது விக்ரம் வர வில்லை. அவள் மட்டும் தான் வந்து இருந்தாள். பிரபா பொதுவாக அசைவம் விரும்பி உண்ண மாட்டாள். பிரியாணி, சிக்கன் வகை மட்டும் தான் பிடிக்கும்.
விக்ரம் மூன்று நேரமும் கறி சோறு சாப்பிடும் பரம்பரை. அவனுக்காகவாது அசைவம் சமைக்க கற்று கொள்ள வேண்டும். காலையில் ஆசையாக அம்மாவிடம் கேட்டாள்,
“அம்மா, இந்த மண்டை கறி குழம்பு வைக்க சொல்லி கொடுங்க…” என்ற மகளை அதிர்ச்சியாக பார்த்தார் செல்வி.
பின்ன ஆட்டுக்கறியே பிடிக்காது என்பவள், மண்டை கறி கேட்டால். ஆனாலும், மகளுக்கு செய்முறை சொல்ல, காலையில் இருந்து போராடி கொண்டிருக்கிறாள்.
“இந்த விக்ரம் என்ன விதம். நமக்கெல்லாம் ஆடு என்றால் அதன் கறி மட்டும் தான். இவன் என்னவென்றால் குடல் குழம்பு, மூளை வறுவல், ஆட்டு கால் சூப், எலும்பு குழம்பு, ஈரல் சுக்கா என்று வகை வகையாக கேட்கிறான்…” என்று புலம்பி கொண்டே ஒவ்வொன்றாக கற்று கொண்டாள்.
ஒரு மாதிரி முகத்தை சுளித்து கொண்டு தான் சமையல் செய்தாள். அதே போல உங்களுக்காக தான் செய்தேன் என்று முகத்தை தூக்கி வைத்து போனில் சொல்லும் போது,
“அட, பார்டா… மேடம் இவ்வளவு ஐட்டம் கத்துகிட்டையா… பரவாயில்லையே, எனக்காகவா பிரபா. நான் ரொம்ப ஹேப்பி போ… தாய்க்கு பின் தாரம்ன்னு இதை தான் சொல்லுவாங்க போல… எங்க அம்மா மட்டும் தான் எனக்காக இவ்வளவும் செய்யும். அடுத்து இருக்கே, எங்க அக்காங்க ரெண்டு கறி குழம்பு, மீன் குழம்பு தான். வேற சொன்னாலும் “போட உனக்கு உங்கம்மா தான் லாயக்கு, நாளைக்கு வரவளை பார்ப்போம்ன்னு சொல்லுவாங்க. இனி சட்டமா நானும் சொல்லுவேன், பாருங்க என் பொண்டாட்டியன்னு…” விக்ரம் சிரிப்போடு சொல்ல,
பத்து தடவை கையை கழுவி வாசம் வருகிறதா என்று மோந்து பார்த்து கொண்டிருந்தவள், விக்ரம் வார்த்தையை கேட்டதும் முகம் பூவாக மலர்ந்து போனது. இந்த வார்த்தைக்காக, திரும்பவும் ஒரு முறை கேட்க வேற என்ன செய்யலாம் என்று யோசிக்கும் நிலைக்கு சென்று விட்டாள் பிரபா.
விக்ரம்க்கு அடுத்து குரூப் எக்ஸாம் இருக்க, அன்று பிரபா விரதம். அவளுக்கு தெரியும் விக்ரமிடம் நிறைய தோட்டம், வயல், தோப்பு இருக்கு. ஒற்றை வாரிசு வேறு… ஆனால், இவள் வீட்டில் கேட்பது கவர்மெண்ட் மாப்பிள்ளை. அத்தோடு இரு வீட்டிலும் ஒப்பு கொள்ளா விட்டால், அவர்களுக்கு கை கொடுப்பது படித்த கல்வி மட்டுமே. அதை உணர்ந்து தான் விக்ரம் அவ்வளவு மெனக்கெட்டு உள்ளான்.
காலையிலே குளித்து முடித்து விளக்கு வைத்தவள், பிங்க் கலர் காட்டன் சேலையில் கோவிலுக்கு கிளம்பி விட்டாள். ரெண்டு தூக்கு இருந்தது, ஒன்றில் பச்சரிசி, சர்க்கரை, தேங்காய் பூ தூவி வைத்தவள், மற்றொன்றில் ரவா லட்டு பிடித்து வைத்தாள்.
விநாயகருக்கு வைத்து சாமி கும்பிட்டு, எல்லோருக்கும் கொடுத்தாள். அருண், மதன் அங்கு தான் இருந்தார்கள். அவர்களுக்கும் பரீட்சை இருந்தது.
ஒரு பெரு மூச்சு விட்ட அருண், “நமக்கும் ஒரு காதலி இருந்தா, இப்படி ஆசை ஆசையா சாமி கும்பிடும். கழுதை, ஒரு அயித்த மக, மாமா மக கூட திரும்பி பார்க்க மாட்டாது…” என்று புலம்ப,
“நம்ம வள்ளல் அப்படிடா… அந்த வாயாடி வாயிலே வடை சுட்டு, நல்லா இருந்த பிள்ளையை கெடுத்துட்டான். காதல் சொல்ற வரைக்கும் இவன் சுத்துனான், இந்த பிள்ளையை சரின்னு சொன்ன நிமிசத்துக்கு பறந்துட்டான். பாவம், இது தான் அவனை நினைச்சுட்டு இருக்கு…”
பிரபா, அவர்கள் அருகே வந்தவள். அவர்களுக்கு உரியதை கொடுத்துட்டு, வாழ இலையில் மடித்து தனியாக வைத்து,
“அண்ணா, நாளைக்கு உங்க ப்ரெண்ட் வருவாங்க. அவங்க கிட்ட குடுத்துடுங்க…” என்று சொன்னவள் நகர்ந்து விட,
“சரிம்மா…” என்று மதன் வாங்கி கொண்டான். அருண் உடனே விக்ரமுக்கு வீடியோ கால் செய்ய,
“என்ன மச்சான்?…” அந்த பக்கம் விக்ரம் கேட்க.
கேமராவை திருப்பி கோவிலில் நின்று இருந்த பிரபாவை காட்ட. என்னவோ என்று பார்த்தவன் முகம் நொடியில் பிரகாசமாகியது.
“என்னவாம்?…” என்றான் முகம் முழுக்க புன்னகையோடு.
“ம்ம், நீ பாஸ் பண்ணனுமாம். உனக்காக பார்சல் வேற வந்திருக்கு…” என்று விக்ரமின் மலர்ந்த முகத்தை பார்த்தவன், அடுத்து போனை கட் செய்து விட்டான்.
“ஏண்டா? கோவில், மாட்டன பிள்ளையாருக்கு சேத்தாடி வேசம் போட்டுருவ…” என்று மதன் சொல்ல,
“விடு மச்சான். அவன் எல்லாத்தையும் விட்டு அங்க போய் கிடக்க யார் காரணம்? பார்த்தா சந்தோசபடுவான் நம்ம மாப்பிள்ளை…” என்றான் அருண்.
பிரபா இன்று மதியமே ஊருக்கு செல்ல, நாளை காலை தான் விக்ரம் ஊருக்கு வருகிறான். பார்க்க முடியாது. ஆனால், எக்ஸாம் முடிஞ்சதும் நிச்சயம் அவளை வந்து பார்த்து தான் செல்லுவான். அது அவளுக்கு நன்கு தெரியும், அதனால் எந்த சங்கடமும் இல்லாமல் கிளம்பி விட்டாள்.
மதன், பிரபா கொடுத்து விட்டு போனதை மறக்காமல் மறுநாள் காலை விக்ரம் கையில் சேர்த்தான். ஒரு சிரிப்போடு வாங்கி கொண்டவன், அதை கடித்து பார்க்க, இறுகி போய் இருந்தது.
“இந்த கல்லுருண்டை கூட என் மாப்பிள்ளை மல்லு கட்டிட்டு கிடக்கான்…” என்று மதன் சொல்ல,
“நீ தாண்ட காத்துல வச்சு இறுக விட்டுட்ட. அந்த பிள்ளை எம்புட்டு ஆசையா குடுத்துச்சு…” அவனை சாடினான் அருண்.
“நேத்தே அப்படி தாண்ட இருந்துச்சு. ரைஸ் மில்ல குடுத்த கூட அறைக்க முடியாது. என் மாப்பிள்ளை காதலுக்காக அந்த கல்ல உடைக்கிறான்…”
நீண்ட நாள் சென்று நட்பு வட்டம் கலகலப்பாக இருந்த போதும், விக்ரம் தீவிரமாக இருந்தான். இது அவனுக்கு கடைசி வாய்ப்பு. பிரபாவை விட இந்த ஊர் பழக்க வழக்கம் அவனுக்கு நன்றாக தெரியுமா. வெவ்வேறு சமூகத்தில் ஒரு நாளும் ஒப்பு கொள்ள மாட்டார்கள்.
விக்ரம், அவனுக்கு தன் படிப்பு மட்டுமே வழி. அது மட்டுமே அவனை எல்லோரிடமும் வெளிப்படுத்தும். இந்த முறை விட்டுவிட கூடாது. முறையாக பேசவும், என் உரிமை என்று சொல்லவும் நிச்சயம் ஒரு நல்ல படிப்பும், வேலையும் இருக்க வேண்டும்.
அப்படி இல்லை இது சரிவராது. ரெண்டு பேரும் தங்கள் வாழ்க்கையை தாங்களே பார்த்து கொள்ளலாம் என்றாலும் பிரபாவோடு தனித்து நிற்க, அவனுக்கு வேலை வேண்டும். தன்னை மட்டும் நம்பி வரும் பெண்ணின் நம்பிக்கையை உடைக்க கூடாது.
முன்பெல்லாம் அவ்வாறு நினைத்தது இல்லை. சொத்து இருக்கு, பணமும் இருக்க ஏதோ ஒரு தொழில் என்ற எண்ணம் தான் இருந்தது. தற்போது அப்படி முடியாது. கண்டிப்பாக வேலை வேண்டும். அதற்காக தான் பிரபாவை விட்டு தள்ளி நின்று, முழு மூச்சாக படித்தது.
அந்த ஞாயிறு பிரபா மாம்பழ வண்ண சேலை அணிந்து கொண்டாள். அவளுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது, விக்ரம் எப்படியும் தன்னை காண வருவான் என்று… அதனால் தான் காலையிலே தயாராகி நின்றாள்.
“சண்டே ஆனா படுக்கையை விட்டு டிபன் சாப்பிட கூட வெளிய வாராத பொண்ணு, இன்னைக்கு ஆறுமணிக்கே கிளம்பி நிக்குது. என்ன விசயம், மதுரைகார மாமன் விஜயமா?…” கேலி குரலில் ஜெனி கேட்ட போதும், ஒரு சிரிப்போடு நிறுத்தி கொண்டாள்.
பிரபா நினைத்தது போல மதியம் விக்ரம் வந்து விட்டான். அவளை பார்த்து சிரித்தவன்,
“நான் வருவேன்னு தெரியுமா?…”
“நெனச்சேன், எப்படியும் நீங்க என்னை பார்க்காம போக மாட்டீங்கன்னு…” என்றவள், அவன் கையில் இருந்ததை பார்க்க,
“உனக்கு தான் பிரியாணி. சந்திரா கொடுத்துச்சு. உன் கிட்ட கூட பேசணும்ன்னு சொல்லுச்சு…” என்றான் விக்ரம்.
அவளுக்கு தான் சந்திராவை தெரியுமே. இந்திரா, அவளை விட நிறைய வயது மூத்தவர் என்பதால் அவளை பற்றி ஒன்றும் தெரியாது.
அவன் அருகில் அமர்ந்தாள், “எப்படி எழுதி இருக்கீங்க…”
“ம்ம், உனக்கு டிரெய்னிங் முடிஞ்சதா?…”
“ஆமா, முடிஞ்சது. இன்னும் மூணு மாசம் தான் இருக்கு…” என்றாள் பாரமான மனதோடு,
படிப்பு முடிந்த பின் வெளியில் செல்ல முடியாது, மேலே படிக்கவும் முடியாது. அடுத்து கல்யாணத்துக்கு தான் பார்ப்பார்கள். அவர்களுக்கான நேரம் அவ்வளவு தான். அடுத்த பெரிய பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். அதை நினைத்தாலே மனம் நடுங்கியது.
சந்திரா போன் செய்து விட்டாள். அவளுக்கு பிரபாவோடு பேச ஆசை. விக்ரம் எடுத்து பேசியவன், அவள் கையில் கொடுத்தான்.
“இந்தா, எங்க ரெண்டாவது அக்கா?…”
“ம்கூம், என்னங்க பேச, எனக்கு தயக்கமா இருக்கு?..”
“சும்மா நல்லா இருக்கீங்களா? சாப்பிடீங்களா? குழந்தைக என்ன பண்றாங்கன்னு என்னத்தவாது கேட்டுவை. அப்புறம் வீட்டுக்கு போன, என்னை தான் குத்தம் சொல்லும்…” என்று விக்ரம் போனை நீட்ட.
ஒரு தயக்கத்தோடு தான் கை நீட்டி வாங்கினாள்.
“ஹாலோ அக்கா!… நல்லா இருக்கீங்களா?…” என்று பிரபா ஆரம்பிக்க,
“உன்னை கொள்ள போறேன் பாரு…” என்று சந்திரா தொடங்கவும், பயந்து போனாள் பிரபா.
“என்னாச்சு…” என்று பிரபா கேட்க.
“பின்ன, ஒன்னு சித்தின்னு சொல்லு, மதினி, அண்ணின்னு கூட சொல்லு… அது என்ன அக்கா. நான் என்ன உனக்கு அக்காவா? விக்ரமுக்கு தான் நான் அக்கா, உனக்கில்லை. புரியுதா?…” என்று சந்திரா கேட்ட பின் தான் பிரபாக்கு உயிரே வந்தது. பின், அவனின் அக்காவை பகைத்து கொள்ள கூடாதே.
“சரிங்க அண்ணி, நல்லா இருக்கீங்களா? பாப்பா எப்படி இருக்காங்க…” என்று மலர்ந்த முகமாக பிரபா பேச்சை தொடங்க.
“நாங்க எல்லாம் நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்க. படிப்பு எப்படி போகுது. என்ன சொல்றான் எங்க வீட்டு சண்டியர்?…”
முகம் மலர்ந்தவள் , “அவங்களுக்கு என்ன, என்னென்னவோ சொல்றாங்க. எனக்கு தான் பயம்…”
“என் தம்பி இருக்கும் போது உனக்கென்ன பயம். நாங்களும் நேரடியாக இல்லாட்டியும் மறைமுகமாக உங்களுக்கு தான் ஆதரவு தருவோம். கொஞ்ச நாளைக்கு பெருசுக கத்த தான் செய்யும். அடுத்தடுத்து காலம் போன எல்லாம் மாறி போகும்… ஆனா, என் தம்பி தான் கோபக்காரன், முரடன், பட்டுன்னு கை நீட்டுவான். உன்கிட்டையும் அப்படி தான, வாய் பேசுறான்…”
பிரபா நிமிர்ந்து விக்ரம் முகம் பார்க்க, அவன் எழுந்து கொண்டான். என்னவோ பேசுங்கள் என்று…
“இல்லை அண்ணி, அவங்க ரொம்ப நல்லவங்க. ரொம்ப நல்லா பார்த்துபாங்க. நான் கேட்காமவே எனக்கு எல்லாம் செய்வாங்க…” பிரபா அவனின் அக்காவிடம் அவனுக்கே ஆதரவாக பேச, சந்திராக்கு முகம் மலர்ந்தது.
மேலும் பேசி அவளிடம் விக்ரம் பத்திய நினைப்பு என்ன என்று தெரிந்தும் கொண்டாள். பரவாயில்லை, தம்பி அவசரப்பட வில்லை. நல்ல பெண் தான் என்று நினைக்கவும் தோன்றியது.
பேசி முடித்த போது பிரபாக்கும், சந்திரா மீது ஒரு நல்ல எண்ணம் தான். பின் காலத்தில் தன்னால் அனுசரித்து செல்ல முடியும் என்றும் தோன்றியது. விக்ரம் வந்த உடன் சொல்லி விட்டாள்.
“உங்க அக்கா, ரொம்ப நல்லவங்க போல, நல்லா பேசுறாங்க. என்ன நினைப்பாங்கன்னு எனக்கு பயமா வேற இருந்துச்சு. ஆனா, நல்ல டைப்…”
“எங்க அம்மா கிட்ட நீ பேசலை. அவங்க, எங்க அக்காக்கும் மேல, ரொம்ப நல்லவங்க. நான் என்ன கேட்டாலும் செய்வாங்க. நம்ம வீட்டுல நான், அம்மா, எங்க சின்ன அக்கா எல்லாம் ஒரே மாதிரி. எங்க அப்பா, பெரிய அக்கா மட்டும் கொஞ்சம் முசுடு…” என்று சொன்னவனை பார்த்து மலர்ந்து சிரித்தவள்,
“திருச்சி எப்போ?…”
“இனி கிடையாது…”
“ஏன் என்னாச்சு…”
“அங்க போக தேவையில்லை. கொஞ்ச நாள் உன் கூட இருக்கேன். உனக்கும் படிப்பு முடிய போகுது. இனி நான் இங்க தான் இருக்கணும். அடுத்த வாரம் நீ ஊருக்கு வார தான. நானே வந்து கூட்டி வாரேன்…” என்றவன் கிளம்ப, பிரபா விடை கொடுத்தாள்.
கொஞ்சம் பயமாக இருந்தது. மூணு மாதம் தான். அடுத்து?… என்னென்ன பார்க்க வேண்டி வரும். விக்ரம் வீடு போல மிரட்டி, சண்டையெல்லாம் போட மாட்டார்கள். அப்பா ஒரு பார்வை பார்த்தாலே போதும், அடுத்து பேச்சே வராது.
தமிழ்செல்வம் எப்போதும் அப்படி தான். திட்டி, அடித்து என்றெல்லாம் பிள்ளைகளை வளர்க்க மாட்டர். கலை செல்வி தான் கத்தி கொண்டே இருப்பார். செல்வம் அமைதியாக ஒரு பார்வை தான் பார்ப்பார், அந்த பார்வைக்கு அவர் பிடியில் தான் நிற்பார்கள் பிள்ளைகள் இருவரும்…
தந்தையை எதிர்த்து தன்னால் விக்ரமுடன் நிற்க முடியுமா? பதில் இல்லை அவளிடம்…
விக்ரம் திரும்ப தன் வீட்டுக்கு வரும் போது முகத்தை தூக்கி வைத்து இருந்தாள் சந்திரா.
“என்னக்கா…”
“அக்கா சொல்லாத, இனி நான் அக்காவும் இல்லை, நீ தம்பியும் இல்லை…”
“ஏன் என்னாச்சு… நீ தான பிரபாக்கு பிரியாணி எல்லாம் செஞ்சு குடுத்த. இப்போ என்ன கோபம்?…”
“சொல்லுடா நல்லவனே… பாப்பாக்கு இடுப்பு வலில நான் அழுதுட்டு நிக்கிறேன். நீ என்ன சொன்ன?…”
“என்ன சொன்னேன்…”
“பிள்ளை பொறந்தா சொல்லுங்கன்னு சினிமாக்கு போய்ட்ட. இன்னைக்கு அந்த கள்ளி காட்டுகாரிக்கு காய்ச்சல் வந்ததும், அஞ்சு மணி நேரம் அடிச்சு புடிச்சு ஓடி வாரையாம்…” என்றாள் எகத்தாளமாக.
“சொல்லிட்டாளா, என்ன பேசணும்ன்னு விவஸ்தை இல்லை” என்று முனங்கியவன்,
“அக்கா, அது பாவம் அப்புராணி, புள்ளை பூச்சி. நீ ஒரு சத்தம் விட்ட அழுதுரும். நாளைக்கு கல்யாணத்துக்கு பின்ன பாரு நீ சொல்றத தான் கேட்கும்…” என்று என்னவோ சமாளிக்க.
“நல்லா சமாளி. நாங்க தான் உன்னை கடைக்குட்டி சிங்கம்ன்னு தூக்கி வச்சிருக்கோம் போல… உனக்கு நினைப்பில்லை…” என்று புலம்ப, அவளை சமாதானம் செய்வதற்குள் ஓய்ந்தான் விக்ரம்.
அந்த வாரம் ஊருக்கு போகும் போது நீல வண்ண சுடிதார் அணிந்து கொண்டாள். மெஸ்ஸில் உண்ண வில்லை. வெளியில் போகலாம் என்று விக்ரம் சொல்லி இருந்தான். அவள் தயாராகி நிற்க, வந்து விட்டான் விக்ரம்.
பிரபா என்னவோ ஆட்டோ கூட்டி வந்திருப்பான் என்று தான் நினைத்தாள். ஆனால், அவன் வந்ததோ பைக்கில்.
“என்ன, பைக்கா…”
“ஆமா, எனக்கும் ஆசை இருக்கு பிரபா. உன்னை என் வண்டியில் கூட்டிட்டு போகணும்…” என்று விக்ரம் சொல்ல,
“ஆனா, எங்க சொந்தமெல்லாம் இங்க தான் இருக்கு…” பயந்தாள் பிரபா.
“பை பாஸ் இல்லை. இது சார்ட் கட், கிராமம் வழி. சாயங்காலம் அஞ்சு மணிக்கு உன்னை ஊருல விடுவேன். வீட்டுல சொல்லிட்டா தான…”
“ ம்ம், ஃப்ரெண்ட்ஸ் கூட வெளிய போயிட்டு வருவேன்னு சொல்லிருக்கேன்…”
“அப்புறம் என்ன வா வா… இந்த பக்கம் ஊர் எல்லாம் செம்மையா இருக்கும். நெல்லு போட்டு இருக்காங்க, நல்ல வாசம். வெயில் அதிகமில்லை, ரிலாக்ஸ்ஸ போகலாம்…” என்று ஆசை காட்ட
பிரபாக்கும் ஆர்வம் வந்தது. இதுவரை அவனோடு வண்டியில் எல்லாம் போனதில்லை. தயக்கம் இருந்த போதும் அவனோடு கிளம்பி விட்டாள்.
கொஞ்சம் தயங்கி, பயந்து, ஆசையும், ஆர்வமாக தான் அவன் வண்டியில் பின் புறம் ஏறினாள். விக்ரம் மெல்ல தான் வண்டி ஓட்டினான். அவள் பேசுவது நன்றாக கேட்டது.
ஏதேதோ பேசி, சிரித்து வழியில் இருக்கும் சின்ன, சின்ன கடைகளில் ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட்டு என்று ரம்மியமாக சென்றது பொழுது… விக்ரம் கொஞ்சம் அவளை உரசி உட்கார்ந்தான்.
பிரபா எதார்த்தமாகவே அவன் தோலில் கை போட்டு கொண்டாள். மாலை மூன்று மணிக்கு மேல் வெயில் நன்றாக குறைய, இதமான காற்று வீசியது. பிரபா,அவனின் வயிற்றில் கை போட்டு முதுகில் சாய்ந்து கொள்ள, விக்ரம் முகம் மலர்ந்து சிரித்தது. திரும்பி அவள் முகம் பார்க்க முனைய, பிரபா நிமிரவே இல்லை. அவன் முதுகில் இருந்து தலையை நிமிர்த்தவே இல்லை.
விக்ரம் பறந்தான் என்று தான் சொல்ல வேண்டும். மனம் துள்ளியது.
அங்கிருக்கும் நெல் வயலில் நடவு நடும் பெண்கள் சிலர், நெல் நாத்தை வைத்து ரோட்டில் வரும் வண்டியை மறிக்க,
சிரித்த முகமாக வண்டியை நிறுத்தியவன், நிமிர்ந்து பார்க்க, பிரபாவும் நேராக அமர்ந்தாள். அங்கிருக்கும் பெண்களில் நாலில் ஒருவராக நின்று இருந்த ரேவதி, இவர்களை பார்த்து அதிர்ந்து போய் நெஞ்சில் கை வைத்தாள்.
விக்ரம் இதை எதிர்பார்க்க வில்லை. பிரபா பயந்து போய் இறங்க, கால் எல்லாம் நடுங்கியது.
“எங்கக்கா குடிய கெடுத்துபிட்டையே பாவி…”
error: Content is protected !!