Skip to content
Post Views: 9,409
கள்ளி காட்டு காதலியே!
அத்தியாயம் 14
பிரபாக்கு ஒன்றும் ஓட வில்லை. இந்த ஊர், அதன் பாதை என்று எதுவும் தெரியாதே… விக்ரமும் அறிய வில்லை. பிரபா அரண்டு பயந்து போய் நிக்க, ரேவதி அதிர்ந்து நெஞ்சில் கை வைத்தவள் தான். அவளுக்கும் ஒன்றும் ஓட வில்லை.
நிலமை புரிந்தது, விக்ரம் தான் சமாளிக்க வேண்டும். காணிக்கை கேட்டு நிற்பவர்களுக்கு, பணத்தை கொடுத்தவன்,
Advertisement
“அக்கா, அது வந்து…” என்று தொடங்கும் போதே,
“எதுவும் பேச வேணாம் தம்பி. இவளை கூட்டிட்டு போங்க. நேர போய் முக்குல திரும்புன மொத வீடு எங்க வீடு தான். அங்க இருங்க வாரேன்…” என்றவள், பிரபாவை நிமிர்ந்தும் பார்க்க வில்லை, நகர்ந்து விட்டாள்.
விக்ரமன், பிரபா முகம் பார்க்க, அங்கு இரத்த பசையே இல்லை. மயக்கம் வரும் போல இருந்தது. மிக அமைதியாக இருந்தாள்.
Advertisement
“பிரபா…” என்று அழைக்க, பதிலில்லை.
Advertisement
‘பிரபா, விடு நான் பார்த்துக்கிறேன்…” என்று சமாதான வார்த்தை சொல்லியும் பதில் வராமல் போக, விக்ரம் அமைதியாகி கொண்டான்.
அடுத்து இருவரும் வந்தது ரேவதி வீட்டுக்கு தான். மாட்டியாச்சு, சமாளிக்க வேண்டும். தங்களை புரிய வைக்கவும் வேண்டும்.
அடுத்த கால் மணி நேரத்தில் புயல் மாதிரி வந்தாள் ரேவதி. கூடத்தில் எதிர் எதிரில் தான் இருவரும் அமர்ந்து இருந்தது. முகம் பார்த்து கூட பேசவில்லை. பிரபா முகத்தில் அவ்வளவு கலக்கம்.
Advertisement
கதவு திறக்கும் சத்தத்தில் விக்ரம் நிமிர, வேகமாக வந்தவள், பிரபா அருகில் இருந்த வாசல் கூட்டும் கட்டை விளக்குமாறு எடுத்து, மடார் மடாரென ரெண்டு அடி போட, அடுத்து கை ஓங்கும் போதே வேகமாக வந்து தடுத்து விட்டான் விக்ரம்.
சித்தி அடிப்பாள் என்று பிரபா எதிர்பார்க்கவே இல்லை. அனிச்சையாக கை வைத்து தான் தடுத்தாள். சிவந்த நிறம், கை ரெண்டும் தியாக எரிந்தது. அவ்வளவு காட்டம்.
விக்ரம் எதிர்பார்க்கவே இல்லை. ஏற்று கொள்ளவும் முடியவில்லை. அவ்வளவு கோபம். தான் நிற்கும் போதே ரெண்டு அடி தான் என்றாலும் அடித்து விட்டாரே… வயதில் மூத்தவரை, ஒரு பாவப்பட்ட பெண்ணை எதிர்த்து பேசி, கோபிக்கவும் முடியவில்லை.
“என்ன தான் தப்பா இருந்தாலும், வாய்ல பேசுங்க. ஏன் கை ஓங்குறீங்க…” என்று விக்ரம் கத்த
“ நீ பேசாத தம்பி. நான், உன்னை என்னவோன்னு நினைச்சு இருந்தேன். கடைசில இப்படி பண்ணிட்டியே… உனக்கு இது அடுக்குமா?… எங்க வீட்டு பொம்பளைகன்னா அவ்வளவு இளக்காரமா?…” என்றவள்,
“உனக்கு எல்லாம் தெரியும் தான. எதுவும் தெரியாதுன்னு மட்டும் சொல்லாத… எம் மக வெட்டியா போகணுமா? உன் குடும்ப புத்தி தெரிஞ்சும், அவளை ஏன் இழுத்து விட்ட தம்பி…” என்று விக்ரமிடமும் கத்த,
“அக்கா, நாங்க ரெண்டு பேரும் உண்மையா நேசிக்கிறோம். நாங்க ஒருத்தர் விட்டு ஒருத்தர் போக மாட்டோம். நீங்க பயப்படுர மாதிரி எதுவும் நடக்காது. நிச்சயம் நாங்க சேருவோம். எங்க வீட்டுல, பிரபா வீட்டுல நான் பேசுவேன். எல்லாத்தையும் அனுசரிச்சு தான் போவேன்.” என்று விக்ரம் சொன்னான் தான்.
“சரி தம்பி, நீங்க வீட்டுக்கு போங்க. இவளை நான் கூட்டி போறேன்…” என்று ரேவதி சொல்ல,
இப்போது ரொம்பவும் பயந்து போனாள் பிரபா. விக்ரம், அவள் முகம் பார்த்தவன்.
“நான் தான் கூட்டிட்டு வந்தேன். நானே கொண்டு போய் விடுறேன் அக்கா. உங்களுக்கு, எங்களை எப்படி புரிய வைக்கன்னு தெரியல. ஆனா, நாங்க மாற மாட்டோம். நீங்க, உங்களை யோசிச்சு பயப்படாதீங்க. எனக்கு பிரபாவ தாண்டி எதுவும் முக்கியமில்லை. அப்படியெல்லாம் யாரை பார்த்தும் பயந்து நான் ஓடி போக மாட்டேன். என்னைக்கு இருந்தாலும் அவ தான் எனக்கு…” தெளிவாக விக்ரம் சொல்ல,
ரேவதி, மகள் முகம் தான் பார்த்தார். அவளை அடித்தது வேறு வலித்தது. தன்னை போலவே வந்து விட்டாளே என்று ஆதங்கமும், கோபமும் தடுமாற செய்து விட்டது. தன் இடத்தில் வைத்து நொடி கூட பிரபாவை நினைக்க முடியாதே…
இப்போதைக்கு எந்த விவாதமும் வேண்டாம் என்று நினைத்தவள். மெளனமாக விக்ரம் உடன் பிரபாவை வெளியேற அனுமதித்தாள். வாதாடியோ, சண்டை போட்டோ விலக செய்ய முடியாது. ஆண், அவனுக்கு என்ன வீரம் வந்து வாய் பேசுவான். பெண், அவள் தான் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும். தன் பேச்சு, தன் மகளோடு தான். விக்ரமிடம் இல்லை. வீணாக ஆண் மகனை சீண்ட கூடாது என்று உணர்ந்து, அமைதியாக நின்று விட்டாள்.
“அக்கா,பிரபா படிப்பு முடிய மூணு மாசம் தான் இருக்கு. அது முடியவும் வீட்டுல பேசுற முடிவுல தான் இருக்கோம். அதுவரைக்கும் நீங்களும்..” என்று விக்ரம் இழுக்க, அமைதியாக தலையசைத்தாள் ரேவதி.
விக்ரம், பிரபாவோடு கிளம்ப… தளர்ந்து போய் சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள் ரேவதி. தன் கடந்த கால வாழ்க்கை கண் முன் வந்து போக, கண்ணீர் அருவியாக கொட்டியது. கடைசியில் விதி தன் மகளையும் வஞ்சித்து விட்டதே…
அந்த ஊர் எல்லை வரை அமைதியாக வந்தவன். அந்த ஊரை தாண்டியதும் வண்டியை நிறுத்தி இறங்கினான். வேப்ப மரம் நல்ல நிழல் தந்தது. மெல்ல பிரபா கையை தொட்டு பார்த்தான். நல்லா சிவந்து இருந்தது.
“எரியுதா பிரபா…” என்று விக்ரம் கேட்க. இல்லை என்று தலையசைத்தாள்.
“பயமா இருக்கா…” என்று கேட்க.
“இல்லைங்க, இதை எல்லாம் எதிர்பார்த்தது தான். எங்க சித்தி ரெண்டு அடியோடு விட்டுட்டாங்க. எங்க அம்மாக்கு தெரிஞ்சா…” என்று பிரபா நிறுத்த,
“அதுக்கு முன்னவே நான் எல்லாத்தையும் சரி பண்ண பார்ப்பேன்…”
“சித்தி என்னவோ சொல்றாங்க. உங்களுக்கு எல்லாம் தெரியும்ன்னு வேற சொல்றாங்க…”
விக்ரம் மறைக்க வில்லை. எல்லாம் சொல்லி விட்டான். முன்பு சொல்ல வில்லை. பிரபா பயந்து விட கூடாதென்று தான். இன்று சொல்லி விட்டான். கொஞ்சம் சங்கடம் தன் தந்தையை பற்றி சொல்ல… ஆனாலும், மறைக்க வில்லை.
பிரபாக்கு நம்பவே முடியவில்லை. தன் சித்தியா?… ஏதோ கல்யாணம் ஆச்சு, குழந்தை இருக்கு, கணவர் இறந்து விட்டார். அவ்வளவு தான் தெரியும். அவருக்கு ஒரு காதல் இருந்தது, அது தோல்வியில் முடிந்தது என்று எதுவும் தெரியாது. வயதானவரை ஏன் கட்டி வைத்தார்கள் என்று நினைத்த போதும் கேட்டு கொள்ள வில்லை.
பிரபாக்கு இப்போது பயம் இன்னும் அதிகமாகியது. தன் அப்பா, அம்மா என்று யோசித்தாளே தவிர, நீதிபதியை பற்றி பெரிதாக நினைக்க வில்லை. அதையெல்லாம் விக்ரம் பார்த்து கொள்வான் என்று தான் நினைத்தாள். இன்று, விக்ரமின் அப்பாவை குறித்து ஒரு பயம் வந்தது. அவ்வளவு எளிதில்ல என்று நினைத்து இருக்கிறாள். ஆனால், ஒரு நாளும் கூடாதது என்று நினைக்க வில்லை.
அவள் முகத்தையே தான் பார்த்து இருந்தான் விக்ரம். நிறைய குழப்பம் தெரிய, யோசிக்கட்டும் என்று அமைதியானான். அவர்கள் ஊர் நுழைவு வாயிலில் வரும் மினி பஸ்ஸில் ஏற்றி விட்டு, கனத்த மனதுடன் வீடு வந்து சேர்ந்தான்.
மனம் முழுக்க கலக்கம் இருக்க, நிமிர்ந்து தந்தை முகம் பார்க்கவே முடியவில்லை.
“முகம் ஏண்டி ஒரு மாதிரி இருக்க?…” செல்வி கேட்க.
“ஒன்னுமில்லைம்மா பஸ்ல வந்த அலைச்சல்…” என்று சமாளித்தாள் பிரபா.
இரவு முழுக்க பொட்டு தூக்கம் இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்று யோசித்தாலே நெஞ்சில் பயம் கவ்வியது.
மறுநாள் காலையே ரேவதி வந்து விட்டாள். அவள் நேர வந்தது பிரபா வீட்டுக்கு தான். சித்தியை கண்டதும் நடுங்கி போனாள் பிரபா. என்ன சொல்ல போகிறாள் சித்தி?…
“வா ரேவதி. என்னவாம்?…”
“மகளை பார்க்க வந்தேன். ஆத்தா சொல்லுச்சு மாப்பிள்ளை பாக்ககுறாராம் மாமன். எதுவும் தகையுதா?” என்று கேட்க.
“நிறைய வருது. நாம நெனச்சா மாதிரி தான் ஒன்னு கூட இல்லை. ஒத்த பிள்ளை, நல்ல இடமா பார்க்கணும். நாலும் சரியா இருக்கனும். ஒன்னும் குறைய கூடாது…”
தாய் பேச பேச பிரபா தலை நிமிரவே இல்லை.
“ பிள்ளை எங்க? எப்போ ஊருக்கு போவ?…” என்று செல்வி கேட்க.
“பாப்பாக்கு லீவு தான். ரெண்டு நாள் ஆகும்…”
“அப்ப வீட்டுல இரு. மடப்புரம் வரைக்கும் நானும், உங்க மாமனும் போயிட்டு வந்திடுரோம்…” என்று செல்வி சொல்ல, இதற்கு தானே ரேவதியும் வந்தது.
சரிக்கா என்று ரேவதி மகளுக்கு துணை இருந்தாள். செல்வமும், செல்வியும் கிளம்பிய பின் நேர ரேவதி சென்றது பிரபா அறைக்கு தான்…
“ பிரபா…” என்று கேள்வியாக மகளை பார்க்க.
“சித்தி, எனக்கு அவங்களை பிடிச்சு இருக்கு. நான் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தேன். இது ஒத்து வராது, யாரும் விரும்ப மாட்டாங்க, வேணாம் மறந்திட்டுன்னு என்ன சொல்லி என்னை தேத்தி வச்சாலும், என்னையும் மீறி தான் அவங்க மேல நினைப்பு வந்துருச்சு…” என்று அழுகையோடு சொல்லியவள்,
“அவங்க ரொம்ப நல்லவங்க சித்தி. அவங்க அப்பா மாதிரி கிடையாது. எம் மேல ரொம்ப பாசம், அக்கறை. என்னை அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். நிச்சயம் விட மாட்டாங்க…” உறுதியாக பிரபா சொல்ல,
அவளை மன வலியோடு பார்த்து இருந்தாள் ரேவதி. இப்படித்தான், இதே மாதிரி தான் சில ஆண்டுகளுக்கு முன் நம்பிக்கையோடு ரேவதி சொன்னது. அதை ஒரு கணம் நினைத்தாலும் நெஞ்சில் தீ வைத்தது போல இருக்கும். பிரபா கண்ணில் சுமந்த அதே காதலையும், நம்பிக்கையும் தான் ரேவதி செல்வ குமார் மீது வைத்தது. இன்று எல்லாம் வெறும் நினைவு மட்டுமே.
காதலையும் இழந்து, நம்பிக்கையும் போய், வாழ்க்கையும் போய் சுவற்றில் அடித்த பந்து போல திரும்ப வந்து விட்டாள். தன் முகத்தை அழுந்த துடைத்த ரேவதி, நிமிர்ந்து கண்களில் கண்ணிரோடு இருக்கும் மகளை பார்த்து,
“விடு பிரபா, பிரச்சனை வரும், சமாளிப்போம்…” என்று சொல்ல,
தன் சித்தியை அதிர்ந்து போய் பார்த்தாள் பிரபா.
“என்ன சொல்றீங்க சித்தி. உங்களுக்கு சரியா…”
“எனக்கு சரியா இருந்தா என்னை, தப்பா இருந்தா என்ன? விருப்ப பட்டது நீங்க ரெண்டு பேரும் தான். நீங்க உறுதியா இருந்தா போதும், மத்த எல்லாம் பார்க்கலாம்…” மேலும் நம்பிக்கையாக ரேவதி பேச, ஆச்சர்யம் தாங்க வில்லை பிரபாக்கு…
“சித்தி நீங்களா சொல்றது. உங்களுக்கு விருப்பம் இருக்காதுன்னு நினைச்சேன்…” என்றவள்,
“அவங்க, உங்களை பத்தி எல்லாம் சொல்லிட்டாங்க…” என்றாள் தயங்கி,
புரிந்து கொண்ட ரேவதி, “எனக்கு என்ன பிரபா?… ஓ, என் காதல் தோத்து போனதால, காதல் மேல எனக்கொன்னும் அவநம்பிக்கை கிடையாது. என் விதி வேற, உன் வாழ்க்கை வேற… உனக்காவது மாற்றம் வரலாம் தான…” என்றவளை பிரமிப்பாக பார்த்தாள் பிரபா.
“நேத்து உன்னை அந்த தம்பி கூட பார்த்ததும் என் உசுரே ஆடி போச்சு. ஒரு நிமிசம் என் இடத்துல உன்னை வச்சு யோசிச்சேன். அது குடுத்த தாக்கம், உன்னை கை நீட்டி அடிச்சுட்டேன். அப்புறமும் இதெல்லாம் ஒத்து வராதுன்னு தான் நினைப்பு எனக்கு… ஆனா, ராத்திரி முழுக்க உட்கார்ந்து யோசிக்கும் போது தான், நான் தெளிவு கண்டேன். என்னை போலவே நீயும் அடுத்த ஊர் பையனை விரும்புனதால என் வாழ்க்கை மாதிரியே, உன் வாழ்க்கையும் போகுமா என்ன? அந்த கடவுள் உனக்கு நல்ல எழுத்து எழுதி இருக்கலாம்”
“நீயும் படிச்சு இருக்க. தப்பான ஆள தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லை. உன் வாழ்க்கைக்கா நீ போராட போற… போராடி கூட நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை பிடிச்சுக்கோ, விட்டுடதா. அப்புறம் வாழ்க்கை முழுக்க அழுகணும். ஏன்னா, நம்ம பொம்பளை மனசு அப்படி…” என்றவள்,
“நீ எனக்கு மக முறை. உன் கிட்ட சில விசயங்களை உடைச்சு பேச முடியாது. ஆனாலும் சில விசயம் சொல்றேன் கேட்டுக்கோ… விக்ரம் தான்னு நீ நினைச்சா அதுல உறுதியா நில்லு… என்னைக்கும் பின் வாங்க கூடாது. எப்படி வேண்டாலும் நடக்கும், என்ன வேன்னாலும் பேசுவாங்க. உன்னை சரிகட்ட பார்ப்பாங்க. நாலு பேரு ஒரு விசயத்தை அழுத்தி திரும்ப, திரும்ப சொல்லும் போது அது தான் சரியானதுன்னு மனசு நம்ப தொடங்கும்…”
“நம்ம உறுதி தளரும். வர பிரச்சனையை பார்த்து மனசு பின் வாங்கும். இங்க நாம பாக்குற பலருக்கும் காதல்னா, அந்த வயசுக்கான தேவையா மட்டும் தான் பார்ப்பாங்க. அதுக்கு தீர்வு கல்யாணம் தான்னு நினைப்பாங்க…” என்ற ரேவதியின் கண்கள் கலங்கியது, மகள் வயது பெண்ணிடம் சொல்ல கூடாது என்று நினைத்தாலும், வார்த்தை தன்னை மீறி வெளி வந்தது.
“பிரபா, என்னோட காதலும் அவங்களுக்கு வயசுக்கான தேவையா மட்டும் தான் தெரிஞ்சது. காலாகாலத்தில ஒருத்தன் கையில பிடிச்சு கொடுத்து இருந்தா, நான் வேற ஒருத்தனை தேடி போயிருக்க மாட்டேன்னு சொன்னாங்க… உன்னை போல தான் நானும், முழுசா செல்வத்தை நம்புனேன்…”
“வீடு, தோட்டம், என் வீட்டு ஆட்கள் அதை தாண்டி எனக்கு ஒன்னும் தெரியாத. படிச்ச, அழகான ஒரு ஆள் என்னை சுத்தி வரவும், முதல்ல பயந்து தான் ஓடினேன். எனக்காக அவர் மெனக்கெட்டதும், எதிர்பார்ப்பில்லாம அன்பு வச்சதும் என் மனசை மாத்திடுச்சு. அவங்க மேல எனக்கு ஒரு பைத்தியம்கார தனமான அன்பு. என்ன சொன்னாலும் தலையாட்டினேன். ரேவதி, இது ஒத்து வராது. என்னை நம்பி நீ வீட்டை விட்டு வான்னு சொல்லும் போது கண்ணை மூடி வெளியேறினேன்…” என்றவள் கண்கள் கண்ணீரை பொழிந்தது. நீண்ட நாள் அழுத்தம் போல,
“எதையும் யோசிக்கால பாவி. அவங்க சொன்னதை தான் செஞ்சேன். இது தான் ரேவதி நாளைக்கு நான் உன் கழுத்துல கட்ட போற தாலின்னு காட்டும் போது என் மனசுல வந்த பரவசம். இப்போ நினைச்சாலும் சிலிர்த்து போகும். நிறைய கனவு, ஆசை. புதுசா வீடு பார்த்தாங்க, பொருள் கூட வாங்கினோம். குழந்தை வரைக்கும் பேசி இருக்கோம். எம் மனசுல அம்புட்டு ஆசை, கனவு. அடுத்த நாள்…” ஒரு பெருமூச்சு விட்டு தன்னை சமாளித்தாள் ரேவதி.
அவளை வலியோடு பார்த்து இருந்தாள் பிரபா.
“வாழ்க்கையே தலை கீழ போச்சு. கற்பனைல கூட நினைச்சு பார்க்கல. காதலிக்க சம்மதம் கேட்ட மனுசன், தாலி கட்ட சம்மதம் கேட்ட மனுசன், என்னை விட்டுட்டு போக கேட்கல. ரேவதி நீ என்ன சொல்றன்னு ஒரு வார்த்தை, ஒத்த வார்த்தை கேட்டு இருந்தா… செத்தாலும் உங்க கூட தான்னு கதறி இருப்பேன். என் விதி நட்டாத்துல போகும்ன்னு தெரிஞ்சு இருந்தா செத்தும் போயிருப்பேன்…” முழுதாக உடைந்தாள் ரேவதி.
“கல்யாணம் வரைக்கும் கூட்டி வந்து, கைல தொட்ட தாலி, என் கழுத்தை தொடல. அரைகுறை உசுரோட வீட்டுக்கு கொண்டு வந்து போட்டாங்க. என் ஒரு பக்க கால்ல சொரணை இல்லை. ஒரு வருசம் ஆச்சு, நிமிர்ந்து உட்காரவே… செல்வம் எங்கன்னு மனசும் தேட, ஒரு நம்பிக்கை ஒத்த நாள் தோட்டத்துக்கு வரலன்னா சைக்கிள்ல பெல் அடிச்சுட்டு என் வீட்டவே சுத்தி வார மனுசன் வரலன்னவும் வேற என்னமொன்னு பயம். ஆனா, விசயம் வெளி வந்துடுச்சு…” நெஞ்சை நீவி கொண்டாள்.
“நான் கைல தொட்டு தடவி பார்த்த தாலி வேற ஒருத்தி கழுத்துல ஏறிடுச்சுன்னு… என்னால நம்பவே முடியல. ஆனா, உண்மை அதை மாத்த முடியாதே. ஊர் வாயும் மூட முடியாது. நடத்தை கெட்டவ, ஆம்பளை தேடி போனவ, ஊர் மேஞ்சவ, நாலு நாள் வச்சு இருந்து அழுத்து போய் துரத்தி விட்டான்னு அவ்வளவு பேச்சு. சொந்த வீட்டுல பசின்னு சாப்பாடு கேட்க கூட பயப்படுற அளவு வாழ்க்கை கொடுமையா போச்சு. என் கிட்ட பேசினாலே என் புத்தி வந்திடும்ன்னு ஒதுங்கி போனாங்க…” என்று விரக்தி சிரிப்பில் ரேவதி சொல்ல, பிரபா கேட்டே விட்டாள்.
“இவ்வளவு கஷ்டம் பார்த்த பின்னும்மா காதல் மேல நம்பிக்கை சித்தி…”
“ஆமா, அப்ப தான் இன்னும் இறுகி போனேன். நான் வீட்டுல இருக்கிறதே அவங்களுக்கு ஒரு அவமானம். என் கல்யாணம் தான் அவங்க கௌரவம். வேற ஒருத்தன் கூட ஓடி போய் நாலு நாள் கழிச்சு வந்த பொண்ணுக்கு யார் வாழ்க்கை கொடுப்பா… ஒன்னும் அமையல. வந்த வரனுக்கு கழுத்தை நீட்டுற நிலமை தான். என்னென்னவோ பேசினாங்க. நாங்க பார்ப்போம், உனக்கு துணை நிப்போம், காலத்துக்கும் உன்னை தாங்கி பிடிப்போம். அப்படி, இப்படின்னு…”
“அப்படி பேசி என்னை சரிகட்டி அந்தாளுக்கு என்னை கட்டி வச்சாங்க. ஆனா, நாலு சுவத்துகுள்ள திண்டாடி போனேன். அம்புட்டு பேச்சு, பேசுன எல்லாரும் அந்த அறைக்கு வெளில தான். அன்னைக்கு ராத்திரி நான் துடிச்சு போனேன். அம்பத்தி மூணு வயசு, என்னால புருசன்னு யோசிக்க முடியல. மிரண்டு போனேன், பல நாள் வெளிய கேக்குற மாதிரி கூட கத்தி இருக்கேன். என் வாழ்க்கையே கேலி கூத்தா போச்சு. நடத்தை கெட்டவன்னு பேரோட தான் ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டினேன். அதான் அந்தாளுக்கு என் மேல நம்பிக்கை இல்லாம போச்சு…”
“பிரபா, ஊர் ஆயிரம் சொல்லும், ஆனா வாழ்க்கை வாழ போறது நாம தான். மஞ்சள் கயிறு மாயம் எல்லாருக்கும் ஒத்து வராது. வெளில நின்னு தீர்ப்பு சொல்ற யாரும், நம்ம படுக்கையறையை எட்டி பார்க்க முடியாது. அங்க வார ஒவ்வொரு ராத்திரியும் நாம தான் கடக்கணும். காதல் இல்லாம, புரிதல் இல்லாம வாழ்ற தாம்பத்திய வாழ்க்கைக்கு அர்த்தமில்லை. எங்க வீட்டுல எனக்கு என்ன சொன்னாங்க தெரியுமா! ரேவதி, நாங்க காட்டுற வாழ்க்கைக்கு போ, உனக்கு நாங்க துணை நிப்போம். எந்த பிரச்சனைனாலும் நாங்க வருவோம்ன்னு… நானும் சொன்னேன், குடிக்கிறாங்க, அடிக்கிறாங்க, சந்தேக பட்டு பேசுறாங்கன்னு, அவங்களும் ஒவ்வொரு சண்டைக்கும் வந்தாங்க. ஆனா, அதெல்லாம் எம்புட்டு நாளைக்கு?… ஒரு வருசம் போகலாம், மூணு வருசம் கூட, கோவிச்சுட்டு அம்மா வீட்டுக்கு போகலாம், அவங்களும் வரலாம். சரியில்லாத புருசன் கிட்ட கடைசி வரை நாம போராட தான் வேணும் முடிவு வராது. ஒரு கட்டத்துக்கு மேல நான் வீட்டுல எதுவும் சொல்லல, எத்தனைய சொல்ல முடியும். ஒரு பிள்ளையும் வந்து வாழ்க்கையும் ஓடி போச்சு…” என்று பிரபா அருகில் அமர்ந்தாள்,
“நான், என் கௌரவம்ன்னு கட்டி வச்ச எங்க அப்பாவும் போய் சேர்ந்தாச்சு, உனக்கு ஒன்னுன்னா நாங்க வருவோம்ன்னு எங்க அண்ணனையும் காணோம், நான் பாக்குறேன்னு சொன்ன எங்க அம்மை படுத்த படுக்கையாக கிடக்கு…”
“சரி தான். என்னை நடத்தை கெட்டவன்னு சொன்ன ஊர் எங்கன்னு பார்த்த, அவங்கவங்களுக்கு பொழப்பு இருக்காம். அதை பார்க்கணுமாம். அப்ப நான் அப்படின்னா … உன் விதி அவ்வளவு தான். முப்பது முடியல நான் விதவையா, ஒரு பிள்ளையை வச்சு நிக்கும் போது அய்யோ பாவம், கடவுள் உனக்கு இப்படியா எழுதணும். இனி இந்த பிள்ளையை வச்சு காலத்தை ஓட்டு. உன் பிள்ளை இருக்கு, உனக்கு பொழப்பு ஓடும்ன்னு முடிச்சுட்டு போய்ட்டாங்க. இன்னைக்கு அது தான் நெசம். அந்த பிள்ளை தான் வாழ்க்கைன்னு ஓட்டிட்டு இருக்கேன்…”
“பல நாள் நெனச்சு இருக்கேன். எது என் வாழ்க்கை, எது என் விருப்பம்ன்னு… ஒன்னு கூட இல்லை. புருசன் இல்லாதவ எப்படி இருக்கணுமோ அப்படி தான் இருக்கேன். என் மன வலி, ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் பொதச்சுட்டு ஒரு வாழ்க்கை வாழ்றேன்…” என்று தலை குனிந்து அமர்ந்து இருந்த ரேவதி,
“நான் ஏன் இதெல்லாம் சொல்றேன் தெரியுமா… நமக்கு வழி யார் வேனா காட்டலாம். ஆனா, வாழ்க்கை நாம தான் வாழணும். என் வாழ்க்கையோட முடிவு உன் பிரச்சனைக்கு தீர்வு இல்லை பிரபா. ஆனா, உனக்கு ஒரு தெளிவு. இதுவா என் விதி, இல்லையே என்னால என் விதிய மாத்தி எழுத முடிஞ்சுருக்கும் தான. அப்ப உன்னலையையும் மாத்த முடியும்…”
“பிரபா, இங்க கஷ்டப்படாத மனுசன் யாருமே கிடையாது. கடைசி வரை பிரச்சனையில்லாம செத்தவங்க யாருமே கிடையாது. ஒரு சந்தோசமான வாழ்க்கைக்கு போராலடாம். நான் ஆசை பட்ட வாழ்க்கை, கஷ்ட பட்டாலும் நல்லா இருப்பேன்னு நினைச்சா எவ்வளவு வலியும் தாங்கலாம். நமக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை கிடச்சா மட்டும் தான் கஷ்டத்தையும் தாண்டி கரையேற முடியும். உன் வாழ்க்கை எதுன்னு நீ தான் முடிவு பண்ணனும்…”
“ஆத்துல நிக்கிற யாரும் கரை தேடலாம். கடல்ல நிக்கிறவங்க கரை காண முடியாது. நான் கடல்ல நிக்கிறேன். நீ அத்துல நிக்கிற. உனக்கு நீ தான் முடிவு பண்ணனும். என் வாழ்க்கை மாதிரி உன் வாழ்க்கை அமையும்ன்னு சொல்லல. ஆனா, நான் சந்திச்ச பிரச்சனைகளை நீயும் சந்திக்க வேண்டி வரும். இது நான் ஆசை பட்ட வாழ்க்கை போராடுறேன்னு நின்னாலும் சரி தான். இல்லன்னு நினைச்சா, இப்பவே ஒதுங்கி போ. வேற வாழ்க்கையை ஏத்துக்க நேரம் இருக்கு. நீ முடிவெடுத்து விக்ரமுக்கு சொல்லு… எதுன்னாலும் உங்க வாழ்க்கை தான். முடிவெடுத்தா பின் வாங்க கூடாது. இந்த சமுதாயம் வாழ விடாது. நான் பல நாள் நெனச்சு இருக்கேன். இந்த வாழ்க்கைக்கு, அன்னைக்கு அசை பட்டவன் கூடவே செத்து போயிருக்கலாம்ன்னு… இப்படி ஒரு நினைப்பு உனக்கு என்னைக்கும் வர கூடாது. உன் வாழ்க்கை, உன் முடிவு…” என்று தன் போனை ரேவதி வைத்து விட்டு வெளியேற,
நொடி கூட யோசிக்க வில்லை பிரபா. விக்ரமுக்கு அழைத்து விட்டாள். நேத்து முதல் தூக்கம் இல்லாமல் இருந்தவன், பிரபா குரல் கேட்டு தான் நிம்மதியே வந்தது. நீண்ட நேரம் பேசி கொண்டார்கள். எது வந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்து தான் என்பதில் தெளிவாக இருந்தார்கள்.
ரேவதியிடம் இப்படி ஒரு பேச்சை விக்ரம் எதிர்பார்க்கவே இல்லை. அவன் செல்வ குமார் போல தான் ஏதாவது சொல்லுவார் என்று நினைத்து இருக்க, ரேவதி பேசியது முற்றிலும் வேறாக இருந்தது.
அதை அப்படியே ரேவதியிடம் கேட்கவும் செய்தான்.
ஒரு சின்ன சிரிப்பு சிரித்த ரேவதி, “உங்க மாமா பார்த்தது காதல் தோல்விக்கு அப்புறம் ஒரு நல்ல கல்யாண வாழ்க்கையை. அதுனால காதல் அந்த வயசுல வார ஈர்ப்பு மட்டும் தான். அத்தோட வலி கடக்க கூடியது. ஆனா, எனக்கு கடக்கவே முடியாதது. காதல்ல தோத்து வாழ்க்கைல ஜெயிச்சவங்க அவங்க… நான் காதலும் போய், வாழ்க்கையும் போய் நிக்குறவ. இழப்போட வலி தெரியும். அதான், உங்களுக்காக நீங்க போராடுங்கன்னு சொன்னேன்…” என்று முடித்து கொண்டாள்.
பிரபா படிப்பு முடியும் வரை விசயம் வெளியேறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். விக்ரமுக்கு என்னவோ தட்டு பட்டது. எதுவோ சரியில்லை. தான் கண்காணிக்க படுவதாக உணர்ந்தான். அது என்னவென்று தான் புலப்பட வில்லை.
அன்றும் ஒரு யோசனையில் இருக்கும் போதே, திலகா ஒரு ஆட்டை பிடித்து இழுத்து வருவதை கண்டான் விக்ரம்.
“என்னம்மா…” என்றவன், ஹே… கண்டு கொண்டான்.
“இது என்ன ஆடு, யாரது? நம்ம வீட்டுல இல்லையே…” என்று கேட்க.
“கெடா வெட்ட, அப்பா புடிச்சு வந்தது சாமி…” என்று தாய் சொல்ல,
“கெடா வெட்டவா? பிரபா ம்கூம், மிலிட்டரிகரார் வீட்டு ஆடு தான சொல்லி வச்சு இருந்தோம்…” என்று விக்ரம் கேட்க.
“ ஆமா சாமி. அங்க தான் சொன்னோம். நீங்களே வளர்த்து தாங்க, கெடா வெட்டுற அப்ப பிடிக்கலாம்ன்னு பேசி இருந்தோம். என்னவோ, உங்கப்பருக்கு தான் வெளிச்சம். திடீர்ன்னு கள்ளி காட்டு ஆடு வேணாமாம். நம்ம ஊர் ஆடு தான் வேணுமாம்…” என்று தாய் சொன்னதும், விக்ரம் மனதில் ஒரு யோசனை.
தந்தை கண்டு கொண்டாரோ. ஆனால், ஏன் அமைதியாக இருக்கிறார். நேரடியாக கேட்போமா என்று நினைத்த போதும் சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுக்க வேணாம் என்று நினைத்தான். பிரபா படிப்பு முடியும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்தோடு அடுத்து என்ன?…
அடுத்தடுத்து பிரபாவை பார்க்க விக்ரம் போக வில்லை. பெங்களூர் சென்றான், தனக்கு ஏதேனும் வேலை கிட்டுமா என்று பார்த்தான். தந்தையின் அமைதி சரியில்லை. அவர் முந்தும் முன், இவன் முந்தி கொள்ள நினைத்தான்.
ஊர் ஊராக அலைந்தான். நாளை பிரபாவோடு வெளியேறும் போது எல்லாம் பார்க்க வேண்டும் என்று…
பிரபா, “உங்களை பார்க்கணும் பிளீஸ்…” என்று கட்டாய படுத்திய பின் தான் மறைமுகமாக சென்று பார்த்து வருவான்.
இப்போதெல்லாம் பிரபா தானாகவே விக்ரம் கைகளை பிடித்து கொள்வாள், தோல் சாய்ந்து கொள்வாள். அவளுக்கு பரீட்ச்சை நெருங்கியது. அதன் பின் என்ற பயம், அவளை விரட்டியது. விக்ரம் யாருக்கும் தெரியாமல் தனக்கு வேலை தேடினான். தெரிந்த, அறிந்த இடங்களை விட்டு வெளியே தான் பார்த்தான்.
பிரபா பரீட்சை முடிந்த அடுத்த நாள் முதல் ஊர் திருவிழா களை கட்டியது. ஆல மரத்து ஐயனாருக்கு தான் கெடா வெட்டு. மூன்று ஊரும் சேர்ந்து கூடும் ஒரே கோவில் இது தான்.
விக்ரமை பார்க்க ஆவலாக காத்து கொண்டிருந்தாள் பிரபா. வெளியூர் போனவன், காலையில் தான் வந்தான். தனக்கு போனும் பண்ண வில்லை.
இன்று மாலை கரகம் எடுக்க முன் பெண்கள் பால் குடம் கொண்டு வர வேண்டும். பிரபா பால் குடம் சுமந்து வந்தாள், படிப்பு முடிந்து விட்டதால் வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.
மாம்பழ வண்ண அடர் மஞ்சளில் பிங்க் பார்டர் போட்ட சேலை அணிந்து வந்தாள். விக்ரம் பார்வை முழுக்க அவளிடம் தான். நீண்ட நாள் சென்று பார்க்கிறான். வரும் பிரச்சனை மறைந்து, கண்களில் ரசனை வந்தது.
பிரபாக்கும் வெட்கம் லேசாக தலையை திருப்பி கொண்டாள். நிறைய கூட்டம், பதை கரடு முரடாக இருந்தது. விக்ரம் பொதுவாக வருவது போல பிரபா துணைக்கு நின்றான்.
மூன்று ஊர் சுத்தி வர வேண்டும். உடம்புக்கு மஞ்சள் நீர் ஊற்றுவார்கள். இவர்களுக்கு தான் என்றெல்லாம் கிடையாது, சாமிக்கு பூஜை என்று நினைத்து யாரும், யாருக்கும் செய்யலாம் தான். ஆனால், இங்கு அவரவர் மக்களுக்கு மட்டும் தான் செய்வார்கள். அப்படி இல்லாவிட்டால் அதிகமான பழக்க வழக்கம் இருக்க வேண்டும்.
கலை செல்வி மகளோடு தான் கூடவே வந்தார். வயது பெண் , நகை வேறு போட்டு இருந்தாள். குளத்து கரை கடந்து கோவில் போக வேண்டும். இந்த ஊர் வழி செல்லும் போது பிரபாக்கு மஞ்சள் நீர் ஊற்ற சந்திரா வந்து விட்டாள்.
குடத்தில் மஞ்சளும், வேப்பில்லையும் கரைத்து உரிமையாக பிரபா தலையில் ஊற்றியது சந்திரா தான். அத்தோடு பிரபாக்கு என்று குட்டி மல்லிகை பூ மாலையை சந்திரா தான் அவள் கழுத்தில் போட்டாள். அதை தொடர்ந்து மதன், அருண் என்று இருவருமே மாலை வாங்கி வந்து பிரபாக்கு போட்டார்கள்.
கலை செல்வி அதிர்ச்சியில் நம்ப முடியாமல் பார்த்தார். தன் மகளுக்கு இவர்கள் ஏன் செய்ய வேண்டும். சாமிக்கு என்றாலும் இத்தனை பேர் இருக்கையில் பிரபா மட்டும் என்ன?… அப்படி என்ன பழக்கம். வாய் விட்டு கேட்க முடியாது. சாமிக்கு நேர்த்தி கடன், வரமாக தான் நினைக்க வேண்டும் என்று மனதை சமாதான படுத்தினார்.
விக்ரம் சற்று இடைவெளி விட்டு பிரபா உடன் தான் சேர்ந்து வந்தான். மற்றவர்களுக்கு தெரியாமல் தான். காட்டு கோவிலை நெருங்கும் போது மூணு ஊர் மக்கள் என்று நல்ல கூட்டம், நெருக்கி அடித்தார்கள்.
கூட்டத்தில் கலை செல்வியை நகர்த்தி விட்டார்கள். அவருக்கு பிரபா எங்கு நகர்ந்தாள் என்பதே தெரிய வில்லை. பிரபா நல்ல கூட்டத்தில் மாட்டி கொள்ள, சேலை அணிந்து இருந்ததால் ரெண்டு கை கொண்டு பானையை பிடிக்க முடியவில்லை. கையில் ஈரம் வேறு, நழுவும் போல இருக்க பட்டென்று விக்ரம் வந்து பிடித்து கொண்டான்.
தங்கள் குடம் தான் முதலில் கோவிலில் இடம் பிடிக்க வேண்டுமென்று முண்டி அடித்தார்கள் மக்கள்.
பிரபா, அவனுக்கு கீழ கண்ணை காட்ட, குனிந்து பார்த்தான் விக்ரம். ஈரம் பட்டதால் பின் பக்க சேலை கால் வரை நன்றாக தூக்கி இருந்தது. ஒரு நொடி பார்த்தவன், யாரும் கவனிக்க வில்லை என்றவுடன் வேகமாக குனிந்து அவள் சேலையை சரி செய்து விட்டு, வேகமாக ஒதுங்கி கொண்டான்.
அவன் யாரும் பார்க்க வில்லை என்று நினைத்தாலும், மகளையே தூரத்தில் நின்று பார்த்து கொண்டு வந்த செல்வி கண்களில் காட்சி தெளிவாக விழுந்தது.
error: Content is protected !!