Skip to content
Post Views: 13,537
அத்தியாயம் 13
சிறு தயக்கத்தோடு விஷ்ணு வீட்டின் வாயிற்படியில் வந்து நின்றாள்.
“உள்ள வா” என்று தனக்கு எதிரேயிருக்கும் சேரை காண்பித்தான்.
Advertisement
உள்ளே வந்தவள் “அம்மா டீ வச்சிட்டிருக்காங்க” என்றவள் என்ன பேசனும் என்பதாய் பார்த்தாள்.
“நீ நின்னுட்டிருந்தா எனக்கு எதோ குற்றவாளியை விசாரணை பண்ற மாதிரி இருக்கும். உக்காரு” என்றான் கட்டளையாக.
அமர்ந்தவள் அத்தை மாமாவை தேடினாள். அவசர அழைப்பை பேசி முடித்து வந்த கோபாலன், “என்னடாம்மா?” என்றார்.
Advertisement
“கூப்பிட்டாங்க மாமா” என்றாள் விஷ்ணுவை காண்பித்து.
Advertisement
கோபாலன் மகனை பார்க்க, “நீங்களும் உக்காருங்கப்பா, கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவா” என்றான் வசீகர சிரிப்போடு.
“சீக்கிரம் பேசி அனுப்பு, ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று தானும் அமர்ந்து, “பிரபா டீ போடு” என்றார்.
“விஷாலினி… இப்போதான அங்கயிருந்து வந்த? டீயை குடிச்சிட்டு போனா ஆகாதா?” என்று உயர்ந்த குரல் கொடுத்தார் மேகலை.
Advertisement
எழுந்தவன், “நான்தான் ஆன்ட்டி கூப்பிட்டேன்” என்க, “எப்போ தம்பி வந்திங்க? நல்லாயிருக்கிங்களா?” என்றார் மேகலை.
“ம் நல்லாயிருக்கேன் ஆன்ட்டி, இப்போதான் வந்தேன், காலேஜ்லாம் எப்படி போகுதுனு விசாரிச்சுட்டு அனுப்பிவிடறேன் ஆன்ட்டி”
“சரி தம்பி” என்று மேகலை கிளம்பிட, “ம்மா எனக்கும் சேர்த்து டீ போடு” என்று விஷாலினி எதிரே வந்தமர்ந்தவன், “ஹம்… ஸ்டடீஸ்லாம் எப்படி போகுது?” என்றான்.
“நல்லா போகுது”
“ஜடை ஆன்ட்டி போட்டுவிட்டாங்களா?”
“இல்ல, நானேதான் போட்டுக்கிறேன். இப்போ நல்லா போட பழகிட்டேன்”
“ம் குட்” என்றவன், “ஆட்டோ டிரைவர்லாம் பழகி வச்சிருக்கியாம். ஆள் எப்படி? நல்ல கேரக்டரா? ஒன்னும் பிரச்சனையில்லையே” என்றான்.
“ம் ரொம்ப நல்ல அண்ணா”
வேறு என்ன கேட்பது என்று யோசித்திருக்க, பிரபாவதி டீ எடுத்து வந்தார். வாங்கியவன், “ம்மா இன்னொரு டம்ளர் எடுத்து வா” என்றான்.
“இல்ல எனக்கு வேணாம், அம்மா வச்சிருக்காங்க”
“பரவால்ல, இங்க குடி, உன்னை பார்க்க வச்சிட்டு குடிக்க முடியாது” என்று தனதில் பாதியை ஊற்றிக்கொடுத்தான்.
விஷாலினி குடித்து முடித்ததும் “ரெஸ்ட் எடுக்கனுமா?” என்றான்.
“இல்ல டையர்ட்லாம் ஒன்னுமில்ல, அம்மாக்கு பூ கட்ட ஹெல்ப் பண்ண நினைச்சேன்”
“சரி போ” என்றான்.
விஷாலினி கிளம்பியதும், பிரபாவதி மகனுக்கான விருந்தை தயாரிக்க சமையலறை சென்றார்.
மனைவிக்கு கேளாதபடி “டிரைவரை ஏற்பாடு செய்து வச்சிட்டு, ஒன்னும் தெரியாத மாதிரி அந்த புள்ளைகிட்ட கேள்வி கேக்குற?” என முணுமுணுத்து முறைத்தார் கோபாலன்.
சிரித்தவன், “என்னதான் ஏற்பாடு செய்திருந்தாலும், இவகிட்ட எப்படி நடந்துக்கிறானு தெரிஞ்சிக்கனும்லப்பா?” என்றான் இன்முகத்தோடு.
“விஷ்ணு… எனக்கு உன்மேல சந்தேகமா இருக்கு, எதுவானாலும் பட்டுனு உடைச்சி சொல்லு” என்றார் தவிப்போடு.
“ஹாஹா… எதைப்பா உடைக்கிறது?”
முறைத்தவர், “உன் மனசு கஷ்டப்படக்கூடாதேனு மறைச்சி கேட்டேன், இப்போ நேரடியா கேக்குறேன்” என்றதும் தந்தையை வெளியே அழைத்து வந்தான் விஷ்ணு.
கோபாலனுக்கு தற்போதுதான் இன்னும் படபடப்பானது. தந்தை முகம் பார்த்தவன் “ப்பா ரிலாக்ஸ்… எதுக்கு இவ்வளோ டென்ஷன் ஆகுறிங்க?” என்றான் அக்கறையாக.
“உன்கிட்ட எதோ சரியில்ல, அப்போ டென்ஷன் ஆகாம எப்படியிருக்கும்?”
“ஹம்… உங்க சந்தேகம் சரிதான். ஆனா நான் சரியாத்தான் இருக்கேன்” என்றான் புன்னகையோடு.
“புரியற மாதிரி பேசுடா” என்று இறுதியாக கெஞ்சலில் இறங்கினார் கோபாலன்.
“அன்னைக்கு அந்த பொறுக்கியும் அவன் அம்மாவும் இங்க வந்தாங்கள்லப்பா? அன்னைக்கு விஷாலினி பேச்சுல பிரம்மிச்சேன். அதுக்கப்புறம் அவ அப்பா வந்திருந்தார்னு அவளை பார்க்கப் போனேனே… அன்னைக்கு முழுசா எனக்குள்ள வந்துட்டா போல” என்றான் இதமான மனநிலையில்.
“விஷ்ணு” என்று கோபாலன் அதிர, “ஏன்ப்பா? விஷாலினியை உங்களுக்கும் அம்மாக்கும் பிடிக்கும்தானே? எதுக்கு இவ்வளோ அதிர்ச்சி?” என்றான்.
“விஷாலினியை குழந்தைலயிருந்து எனக்கு பிடிக்கும். ஆனா உன் விருப்பம் உண்மையானு எனக்கு அதிர்ச்சியா இருக்கு, சின்ன வயசுலயிருந்தே அவளை பிடிக்காது உனக்கு.
காவ்யா நமக்கு துரோகம் செய்திருக்கா. அந்த நேரம் விஷாலினி அவங்கம்மா வலியை புரிஞ்சி பேசவும் ஒரு ஈர்ப்பு வந்திருக்கும். இது காதல்னு நினைக்காத”
“அட்ராக்ஷனுக்கும் காதலுக்கும் வித்யாசம் தெரியாம இருக்க நானென்ன சின்ன பையனாப்பா? எனக்கு இப்போ இருபத்தியொன்பது வயசு” என்றான் சிரிப்போடு.
“இருபத்தியொன்பது வயசுனா எல்லாம் தெரிஞ்சிடுமா?” என முறைத்து, “அதுசரி… உனக்கு விஷாலினியை பிடிச்சா போதுமா? அந்த பிள்ளைக்கு பிடிக்க வேணாமா?” என்றார்.
“பிடிக்காம போக எனக்கு என்ன குறையிருக்கு?” என்று முறைத்தான்.
“விஷாலினியை உனக்கு பிடிக்காதுனு அந்தபுள்ள மனசுல நீ பதிஞ்சிருக்கிறதே பெரிய குறைதான், அவங்க வீட்டையையே வேணாம்னவன் இப்போ பொண்ணை பிடிச்சிருக்குனா யார் நம்புவா?” என்றார் தானும் முறைப்பாக.
“அப்போ சிட்டிவேஷன் வேற, இப்போ வேறப்பா”
“இப்போ கம்பி கட்டி பிள்ளை அழகானதும் பிடிச்சிருச்சோ?” என்றதும் கோபமாய் முறைத்தவன், “வெளித்தோற்றத்தை பார்த்து மயங்குறதுனா எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க, உங்க பிள்ளை அவ்வளோ கேவலமானவனு நினைக்கிறிங்களா?” என்றான் இவனும் கோபமாக.
“டேய்… டேய்.. இப்போ எதுக்கு இவ்வளோ கோபம்? லவ் பண்றதே தப்பு, இதுல என்கிட்டயே கோபமாவேற பேசுறியா?” என்றார் கோபமில்லாமல்.
தந்தையின் இலகுத் தன்மையில் விஷ்ணுவின் முகமும் இலகுவாக, “மேகலை அது வாழ்க்கையை தொலைச்சு இந்த பிள்ளையை வளர்த்திருக்கு விஷ்ணு. எந்த கோவிலுக்கு போனாலும் உனக்கும் காவ்யாக்கும் என்ன வேண்டிக்குவேனோ அதையேத்தான் விஷாலினிக்கும் வேண்டிக்குவேன்” என்று கரகரத்தவர், “விஷாலினிக்கு உன்னை பிடிக்குமா விஷ்ணு?” என்றார் கவலையாக.
மகன் மீண்டும் முறைக்க, “டேய்… நீ அழகன்தான், ஒரே நேரத்துல பத்து பேர் வந்தலும் அடிச்சி நொறுக்கும் வீரனும்தான். அதுக்காக விஷாலினிக்கு பிடிக்கனும்னு என்ன இருக்கு? நீ அது குணத்தை பார்த்து விரும்பின, அந்த புள்ளயும் உன் குணத்தை யோசிச்சா? அதாவது மூனு வருசம் முன்ன உள்ள உன் குணத்தை சொல்றேன்” என்றார்.
“மூனு வருசம் முன்னாடி மட்டும் என்ன எனக்கு குணம் கெட்டு போய்டுச்சு?” என்றவன், சிறு இடைவெளிவிட்டு, “கவலைப்படாதிங்கப்பா பிடிக்க வச்சிடலாம்” என்றான் இலகுவாக.
“உன் அம்மாகிட்ட சொல்றேன்” என்றார் மகிழ்வோடு.
“அப்பா… வேணாம்” என அவசரமாய் தடுத்து, “அவ படிப்பு முடியட்டும். என்னை பிடிக்குதோ பிடிக்கலயோ… படிக்கிற பிள்ளைகளுக்கு இப்படி ஃபீலிங் நல்லதில்ல. அதனாலதான் நானே இன்னும் அவகிட்ட சொல்லாம இருக்கேன்” என்றான் அக்கறையாக.
“வேற ஒருத்தரா இருந்திருந்தா அண்ணானு கூப்பிட வேணாம்னு சொன்னதுக்கே விஷாலினி பேச்சை கட் பண்ணியிருப்பா. நீ என் மகன்றதால உன்னை தப்பா யோசிக்காம இருக்கா. பார்த்து நடந்துக்கோ… சின்ன துணுக்கு கிடைச்சாலும் கண்டுபிடிச்சிடுவா, விஷாலினி முன்னை விட இப்போ ரொம்ப ஷார்ப்” என்றார் பெருமையாக.
“ம்… பார்த்தாலே தெரியுது” என இவனும் பெருமையாக சொல்லி, “இன்னும் என்னப்பா பார்த்து நடந்துக்கிறது? அதான் மூனு வருசம் பார்க்காமலே இருந்தேனே” என்றான்.
“அந்த பயம் இருக்கட்டும் DSP சார்” என்றார் சிரிப்போடு.
“உங்களுக்கு சந்தோசம்தானப்பா?”
“மாமா மாமானு என்மேல உசிரா இருக்க பொண்ணே என் வீட்டு மருமகள்னா சந்தோசமில்லாம இருக்குமா? விஷாலினி படிப்பை முடிச்சதுக்கப்புறம் எல்லாம் நல்லபடியா நடக்கனும்” என்றார் மகிழ்வோடு.
“அவளை சம்மதிக்க வச்சிடுவேன், ஆன்ட்டி சம்மதிப்பாங்கதானப்பா?” என்றான் சந்தேகமாக.
“நான் கேட்டு எதையும் மறுக்காது மேகலை. நீ விஷாலினிகிட்ட அக்கறை எடுத்துக்கிறதுக்கே மேகலைக்கு அவ்வளோ சந்தோசம். உனக்கு பொண்ணு கேட்டு இல்லைனுடுமா?” என்றார் நம்பிக்கையோடு.
“அம்மாகிட்ட சொல்லிடாதிங்கப்பா, அடுத்த நிமிஷமே ஆன்ட்டிகிட்ட சொல்லிடுவாங்க. அம்மாவும் ஆன்ட்டியும் அவகிட்ட சொல்லலைனாலும், இவங்க ஆட்டிட்யூட் வச்சு அவளே ஸ்மெல் பண்ணிடுவா” என்றான் விஷாலினி தற்போதே யோசிக்க ஆரம்பித்தது அறியாமல்.
பிறகு எட்டு மணிபோல் உணவுண்டு காஞ்சிபுரம் கிளம்பியிருந்தான் விஷ்ணு. கிளம்பும் போது அவள் வீட்டு ஜன்னலை பார்த்தான். அங்கே அவளில்லாமல் போக அழைக்கலாமா என்று யோசித்தான். வழக்கத்திலில்லாமல் கிளம்பும்போது சொல்லிச் சென்றால் யோசிக்க ஆரம்பித்திடுவாள் என்று பெற்றோரிடம் மட்டும் சொல்லி கிளம்பியிருந்தான்.
காவ்யாவைப் பற்றி விஷ்ணுவிடம் பேச மிகுந்த ஆசை பிரபாவதிக்கு. ஆனால் அவனாக விசாரிக்காமல் விஷ்ணுவிடம் காவ்யாவைப் பற்றி பேசக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தார் கோபாலன்.
தனது முதுகலை படிப்பை முடித்த காவ்யா தற்போது பி.ஹெச்.டி படித்துக் கொண்டிருக்கிறாள். தந்தையின் உதவியின்றி அரசாங்கம் கொடுக்கும் ஊக்கத்தொகையில் படிக்கிறாள்.
மகள் செய்த துரோகம் மனதை வருத்தினாலும் தற்போதைய மகளின் நடத்தையில் மனதை தேற்றிக்கொண்டார் கோபாலன். சிறு வயதிலிருந்து மகளை பி.ஹெச்.டி படிக்க வைக்க வேண்டும் என்ற கணவனின் ஆசையை காவ்யா நிறைவேற்றுவதில் பிரபாவதிக்கு அத்தனை சந்தோசம்.
காலை ஆறு மணிக்கு கிளம்பினால் மாலை எட்டு மணிக்கு மேல்தான் வருவாள் காவ்யா. இவளின் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களுக்கு புகழ்பெற்ற யுனிவர்சிட்டியில் இடம் கிடைத்திருக்கும். வாழ்க்கையில் அடிபட்டதாலும், விஷ்ணுவும் தற்போது வீட்டில் இல்லை என்பதாலும் தாய் தந்தையோடு இருக்க விரும்பி சென்னையிலேயே பிரபல கல்லூரியில் சேர்ந்திருந்தாள்.
காவ்யா முதுகலை படிப்பில் சேர்ந்ததும் திவாகர் தன்னோடு வரசொல்லி கேட்டான். காவ்யா மறுத்திருக்க, கடந்த மூன்று மாதம் முன்பு மீண்டும் காவ்யாவை சந்திக்க வந்திருந்தான்.
அன்று விஷாலினியின் தந்தை அவளை பார்க்க வந்ததையும், அதற்கு விஷாலினியின் பதிலையும் பிரபாவதி காவ்யாவிடம் சொல்லியிருந்தார். அன்னைக்காக இத்தனை யோசிக்கும் விஷாலினி, காவ்யா மனதில் உயர்ந்து நின்றதோடு, எங்கே விழிக்க வேண்டுமோ அங்கே விழிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் கொடுத்திருந்தாள் அவளையறியாமல்.
உன்னை நம்பி வந்ததுக்கு நல்ல பாடம் கத்து கொடுத்துட்ட, இனி உன்னை நம்பமாட்டேன், நான் வேண்டுமென்றால் என் பெற்றோரிடம் உன் பெற்றோர் வந்து மரியாதையோடு பேசி முறைப்படி அழைத்துச் செல்லவேண்டும். அப்படியில்லையென்றால் வரமாட்டேன் என்றுவிட்டாள் உறுதியாக.
‘நாமதான் காதலிச்சோம், கல்யாணம் செய்தோம். என் அப்பாம்மா உன் அப்பாம்மாகிட்ட பேச வேண்டாம், உன் அப்பாம்மாவும் என் அப்பாம்மாகிட்ட பேச வேண்டாம். தனியா இருந்துக்கலாம்’ என்றிருந்தான் திவாகர்.
‘தனியா போன பின்ன உன் அப்பாம்மா என் மகன் வீடுனு வருவாங்க. திரும்பவும் என்னை அவமானம் செய்வாங்க. ஆனா என் அப்பாம்மா நீ இறங்கி வந்து பேசாம நம்ம வீட்டுக்கு வரமாட்டாங்க. ஒருவேளை மனசு கேட்காம என் அம்மா வந்தாலும் உன் வீட்டு ஆளுங்க மரியாதை கொடுக்க மாட்டாங்க. நீயும் அட்ஜஸ்ட் பண்ண சொல்வ.
இந்த கதையே வேண்டாம். என் அப்பாம்மாகிட்ட வந்து பேசி அவங்க சம்மதத்தோட என்னை அழைச்சிட்டு போறதுனா வரேன். இல்லனா நீ வேணாம் எனக்கு’ என்றுவிட்டாள்.
‘நான் வேணாம்னா என்ன அர்த்தம்? நான் வேற பொண்ணு பார்த்துக்கட்டுமா?’
‘உன் விருப்பம்’
‘அப்போ டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பறேன், கையெழுத்து போட்டுடு’
‘கட்டினவளோட தன்மானத்தை பத்தி யோசிக்காதவனோட வாழ்றதுக்கு, அன்பை கொட்டி உசிரா வளர்த்த அப்பாம்மாவோட வாழ்றது எவ்வளவோ மேல். டிவோர்ஸ் வேணும்னா கண்டிப்பா கொடுக்குறேன். குட் பை’ என்று நிமிர்வாய் சொல்லியிருந்தாள்.
திவாகர் வந்ததையும் பேசியதையும் அன்றே பிரபாவதியிடம் சொன்னாள் காவ்யா. எத்தனை படிப்பிருந்தாலும் வாழ்க்கையும் முக்கியம் அல்லவா? அவனை மறந்து இன்னொரு கல்யாணம் செய்துக்க முடியுமா மகளால்? அப்படி செய்தாலும் சமூகம் தவறாகத்தானே பார்க்கும் என்று பெரும் கவலை கொண்டார் பிரபாவதி.
தன் கவலையை கணவனிடம் சொல்ல, ‘கட்டினவளை மதிக்காதவன் மனுஷனாவே இருக்க முடியாது. திருந்தி வந்தா வரட்டும், இல்லைனா என்ன பண்ணலாம்னு பின்னாடி யோசிக்கலாம். இப்போதைக்கு காவ்யா படிக்கட்டும்’ என்றுவிட்டார் கோபாலன்.
விஷ்ணுவிற்கு வேலை கிடைத்த பின்னே, காவல்துறையில் உயரிய பதவியிலிருக்கும் மகனுக்கு பயந்தாவது மகளை நன்றாக வைத்துக்கொள்வார்கள் என்று ஆசைகொண்டார். ஆனால் அதற்கு விஷ்ணு இவள் விஷயத்தில் தலையிட வேண்டும். இன்று வரை விஷ்ணு காவ்யா இருக்கும் திசையை கூட பார்ப்பதில்லை.
பிரபாவதியின் ஒரே நிம்மதி இன்றுவரை திவாகரிடமிருந்து விவாகரத்திற்கான ஓலை வராமலிருப்பதுதான்.
இதோ மேலும் ஐந்து மாதங்கள் ஓடிவிட்டது.
error: Content is protected !!