Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கள்ளி காட்டு காதலியே!

கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 16

கள்ளி காட்டு காதலியே!…

அத்தியாயம் 16

        அப்போது தான் ஒரு செம்பு எடுத்து நீரை மோக்க கீழ குனிந்தாள். படார் என்று முதுகில் சுள்ளென்று ஒரு அடி விழுக, “அம்மா..” துடித்து போய் இடுப்பை பற்றி கொண்டாள் பிரபா.

  செத்து தொலைடி. மானம், மரியாதை இழந்து வாழ்றதுக்கு சாகுறது தான் நல்லது…



Advertisement

        அம்மா அடித்தது அதிர்ச்சி என்பதை விட பயம். பின் பக்க வலியை விட காளி மாதிரி முன் நின்ற தாயை கண்டு அவ்வளவு பயம்.

  “அம்மா…” என்று பின்னே நகர,

  செல்வி அடுத்து அடிக்க கையை ஓங்கினார். அனிச்சையாக பயந்து இரு கைகளையும் வைத்து தடுக்க, கையிலே படார் என்று ஒரு அடி விழுந்தது.

Advertisement

    நல்ல விறகு கட்டை, கையை கிழித்து இரத்தம் வர, “அம்மா…” என்று கத்தி விட்டாள் பிரபா.

Advertisement

   செல்வி விட வில்லை. ஊர் ஒரு வார்த்தை சொல்லும்படி வந்து விட்டதே, பின்ன என்ன இருக்கு… அடி எங்கே விழுந்தது என்றே தெரியவில்லை. மெளனமாக வாங்கும் பெண் வலி பொறுக்க முடியாமல் அலற தொடங்கினாள்.

 “ அம்மா, வலிக்குது விடும்மா…” என்று கத்தியும் விட வில்லை.

   அக்கம் பக்கம் என்று யாரை குறித்தும் கவலை இல்லை. பிரபாக்கு மயக்கம் வந்தது. நேற்று இரவில் இருந்து சாப்பிட வில்லை. கண் சொருகியது. செல்வி கையில் பிரபா முடி கொஞ்சம் கொத்தாக வந்தது. பெற்றவள் காலடியிலே மகள் சுருண்டு விழுந்தும், செல்வி கோபம் குறைய வில்லை. அவளின் ஒரு பக்க நைட்டி கிழிந்தது, கால் உறைந்து இரத்தம் கொட்டியது.

Advertisement

         “சொல்லுடி இனி அவன் நினைப்பு உனக்கு வருமா.. ஹான்! வருமாங்குறேன். பின்னாடியே தார் வச்ச மாதிரி தான் உன்னை வளத்தேன். அப்படி இருந்தும் உனக்கு தெனவெடுத்து போய் ஆம்பளை தேடி போயிருக்க…” என்றவர், தன் முடியை கொண்டையாக முடிந்து கொண்டு,

   பின் பக்க வாசலை திறந்து உட்கார்ந்தார்.

   “மிலிட்டரிகாரர் அப்படின்னு ஒத்த வார்த்தை தவிர வேற ஒன்னும் சொல்லாத ஊர் முன்னாடி எங்களை தலை குனிய வச்சு பிட்டையே… இனி நாங்க என்னா சீரும் சிறப்புமாக வாழ்ந்தும் பயன் இல்லை. ஒத்த பிள்ளையை ஒழுங்கா வளர்க்க தெரியாதவன்னு ஊரே காரி துப்ப போகுது. இம்புட்டு நாள் ரோசத்தோடு வாழ்ந்த வாழ்க்கை பேச்சே, மானம் தாண்டி பொட்டச்சிக்கு வாழ்க்கை. அதை இழந்து ஒரு பொம்பளை பொழைக்கணுமா…” என்று அவர் பாட்டுக்கு பேசி கொண்டிருக்க,

பிரபா அரை மயக்கத்தில் இருந்தாள். செல்வியும் வாசல் கதவிலே தலை சாய்த்து கொண்டார். நேரம் போனதே தவிர, இருவரும் எழுந்து கொள்ள வில்லை. பசி, தூக்கம், உணவு என்பதை மறந்து போய் இருவரும் கிடந்தார்கள்.

      நீண்ட நேரம் சென்று வந்த தமிழ் செல்வம் தான் தாயிம், மகளும் இருக்கும் நிலை கண்டு பதறி போய் மகளை தூக்கினார்.

      அரைகுறை தூக்கத்தில் வலியோடு முனங்கி கொண்டு கிடந்தாள். மகளை மெல்ல தூக்கி கட்டிலில் படுக்க செய்தவர், வெளியே வந்து மனைவியை பார்க்க, கணவன் முகம் பார்க்காமல் எழுந்து நின்றார் செல்வி.

    “என்ன பண்ணி வச்சு இருக்க நீ? மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சு இருக்க. உனக்கு என்ன பேயா புடிச்சு இருக்கு. சின்ன பிள்ளை, கொஞ்சம் கூட மனசு உறுத்தல… செஞ்சது தப்பு தான். நம்ம பெத்த மக, எடுத்து சொன்ன கேட்டுக்க போகுது. எனக்கும் கோபம் தான். நானும் கை நீட்டினேன் தான். ஆனாலும், அது அந்த நேர ஆத்திரம். ஆனா, நீ பண்ணது? உண்மையை சொல்லுடி, சாகடிக்க பார்த்தியா?…” என்று கோபத்தில் கத்த,

      “இன்னைக்கு கோவில்ல எப்படி பேசினாங்க பார்த்தீங்களா?… வாழ்ந்த வாழ்க்கை பேச்சே. நாளைக்கு இந்த ஊருக்கும், சொந்ததுக்கும் தெரிஞ்சா என்ன ஆகும். யார் முகத்தையும் நிமிந்து பார்க்க முடியாது. அசிங்கம், கேவலம், சொந்தம் யாரும் பேச மாட்டாங்க. என் அண்ணன், தம்பிக கூட ஒதுக்கி வச்சிருவாங்க. பிள்ளையை ஒழுக்கமா வர்க்கலன்னு ஊர் முன்னாடி அசிங்க படனும்…” என்று ஆத்திரமாக செல்வி சொல்லி கொண்டிருக்க,

    மனைவி வார்த்தைகள் பொறுக்க முடியாமல் பொங்கி ஒரு அறை விட்டார் செல்வம்.

    “என்னங்க?…” அதிர்ந்து போய் கணவனை பார்க்க,

   “ஊர் ஆயிரம் சொல்லும். ஏத்தி விட அவனவன் என்னவும் பேசுவான். நீ என் மாமா மக தான, என்னை ஆசைப்பட்டு தான கட்டிகிட்ட…”

    “அதுவும், உங்க மக ஊர் மேஞ்சதும் ஒன்னா?…” அடி வாங்கிய கன்னத்தை தடவி கொண்டு செல்வி பேச,

      “செல்வி, இப்பவும் பாப்பா செஞ்சது சரின்னு சொல்லல. ஏதோ நேர காலம்… நாம தான் நல்லது, கெட்டது புரிய வைக்கணும். வேணாம்மா, இது ஒத்து வராது. உன்னை பெத்தவங்க உனக்கு கெடுதல் நினைப்பாங்களா, நாங்க சொல்றத கேளுன்னு நாம தான் எடுத்து சொல்லணும். அதை விட்டு இப்படி அடிச்சு வச்சு இருக்க, நீயெல்லாம் மனுசியா…”

   “ஆமா, கண்ணே, மணியேன்னு கொஞ்சுங்க… அவளை பத்தி உங்களுக்கு சரியா தெரியலை. பிரபாக்கு எல்லா விவரமும் தெரியும். துணிஞ்சு தான் அந்த சிறிக்கி இறங்கி இருக்கா… நேத்து நீங்க எம்புட்டு பேசினிங்க, நான் அம்புட்டு சொன்னேன். ராத்திரி முழுக்க யோசிச்சவ, காலையில என்ன பண்ணி இருக்கணும். அப்பா, நான் பண்ணது தப்பு தான். இனி பண்ண மாட்டேன்.உங்க பேச்சை கேக்குறன்னு நல்லவ சொல்லி இருக்கணும் தான… இன்னைக்கு நான் அம்புட்டு அடிக்கிறேன்,பேசாம வாங்கிகிறா… இவ, அந்த பையல தான் நினைச்சு கிடக்கா. நம்மளை சந்தி சிரிக்க தான் விட போறா…”

உன்கிட்ட பேசி புரிய வைக்க முடியாது என்றவர் மகளை காண உள்ளே செல்ல, பிரபா உடல் முழுவதும் கன்றி சிவந்த, இரத்தம் கட்டி போய் இருந்தது.

    பார்க்கையில் பெற்றவருக்கு கண்ணீர் நிரம்பியது. மகள் தான் தமிழ் செல்வத்திற்கு உயிரே… மகள் பிறந்த பொழுது கையில் வாங்க வில்லை. பிரபா பிறந்து ஒரு மாதம் சென்று தான் ஊருக்கே வந்தார். அடுத்து வருடத்தில் இரண்டு முறை மட்டுமே… சிறு பிள்ளையாக தன்னை பார்த்து அடையாளம் தெரியாமல் பயந்து ஓடும் மகளை கண்டு மனதுக்குள்ளே நொந்து கொள்வார். பிரபாவின் ஒன்பது வயதில் தான் ராணுவத்தில் இருந்தே வந்தார். பிரபாகரன் கூட அவர் கையில் தவழ்ந்து இருக்கிறான். பிரபாவின் சிறு பிள்ளை பருவம் தந்தைக்கு கிட்ட வில்லை.

   செல்வம் தன் பணியில் இருந்து முழுதாக வீடு வந்த பொழுது, பிரபா பெரிய பெண்ணாக வளர்ந்து நின்றாள். அடுத்து பெண் பிள்ளைக்கே உரிய குணத்தில் தள்ளி வளர, மகள் மீது தனி பாசம் தந்தைக்கு. அவள் கேட்டது எல்லாம் கிடைக்கும் படி தான் பார்த்து கொள்வார்.

     எங்கு அடி பட்டது, உள்ளே எங்கும் பெரிய அடியா என்று தெரிய வில்லை. இனி மகளை, மனைவி கையில் விட முடியாது என்று நினைத்தவர், உடனே ரேவதிக்கு அழைத்து விட்டார்.

     “என்னவாக இருக்கும், உடனே வான்னு மாமன் சொல்றாக…” என்று நினைத்த படியே வந்த ரேவதி, பிரபா இருந்த கோலம் பார்த்து கதறி விட்டார்.

  “ஆத்தே, என்ன பண்ணீங்க எம் புள்ளையா… இப்படி பாதியிலே கருவருக்கவா நெஞ்சிலும், கையிலும் தூக்கி வளர்த்தீக மாமா… பேச்சு, மூச்சு இல்லாம கிடக்கே. கடைசில உங்க புத்திய காட்டி புட்டீங்களே…” என்று அழுக,

   “ரேவதி சத்தம் ஓடாத, வெளியே யாருக்கும் கேட்க போகுது. பிள்ளைக்கு எங்க நோவுன்னு தெரியல… நீ என்னான்னு பாரு கண்ணு…” என்று செல்வம் சொல்ல,

   தண்ணிய கொண்டு வாங்க மாமா என்றவள், பிரபா முடியை ஒதுக்கி ஈர துணி கொண்டு முகத்தை துடைத்து விட்டு லேசாக எழுப்பினாள். செல்வம் தண்ணி கொண்டு வந்து தர,

   அரைகுறையாக கண்ணை திறந்தவள் வாயில் மெல்ல நீரை புகட்டினார்கள். தண்ணி பிரபா தொண்டையை நனைக்க, விழித்து பார்த்தவள், குமட்டி கொண்டு வெளியே நீரை துப்ப, ரெண்டு பல் வந்து விழுந்தது. துடித்து போனார் செல்வம். பல் விழும் அளவுக்கா அடிப்பது,

  வேகமாக வெளியே வந்த ரேவதி, வாசல் படியில் முதுகு காட்டி அமர்ந்து இருந்த செல்வியின் முதுகில் ஓங்கி ரெண்டு அடி போட்டவர்,

   “ பைத்தியகாரி, ராட்சசி நீ சாவுடி, செத்து தொலை. பெத்த பிள்ளையை கொள்ள பார்த்தியே… அப்படியா உனக்கு மானம், மரியாதை வந்து ஆடுது. நாளைக்கு அதுவா உனக்கு சோறு போட போகுது, போடி வீட்டை விட்டு, எங்கேயாவது ஓடி போ… நீயெல்லாம் ஒரு தாய்…” என்று ரேவதி கத்த,

     “ஆமா, ரொம்ப ஒழுக்கமானவ வந்துட்டா எனக்கு கோளாறு சொல்ல… வம்ச புத்தி அதான், உனக்கப்புறம் கெட்டு சீரழிய வந்து பிறந்து இருக்கா…” என்று அசராமல் பேச,

   “சீ… உன்கிட்ட நியாயம் பேச முடியுமா…” என்றவள் தங்கள் ஊருக்கு வரும் டாக்கரை வர சொன்னாள்.

    பெண் பிள்ளை காரியம் என்பதால் விசயம் வெளியே தெரியாமல் பார்த்து கொண்டார்கள். அந்த டாக்டர் பிரபாவை பார்த்து விட்டு பேசிய அத்தனை பேச்சுக்களையும் ரேவதி, தமிழ் செல்வம் வாங்கி கொண்டார்கள்.

    இங்கே இப்படி என்றால் விக்ரம் வீட்டில் விசயம் வெளி வந்து விட்டது. விக்ரம் துணிந்து நிற்க, ஆளாளுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார்கள். நிலவரம் போர் களம் தான்.

  பெரிய மகள், அவள் கணவன், சின்ன மகள், அவள் கணவன், அருண், மதன் என்று அனைவரும் அங்கு தான் இருந்தார்கள். விக்ரம் விசயம் கடை பரப்ப பட்டது.

     “ஒத்த ஆம்பிளை பிள்ளைன்னு தூக்கி வச்சு வளத்தியே திலகா. உன் மகன் பண்ணிட்டு வந்திருக்கிற காரியத்தை பாரு… எம் வம்சமே தலைகுனிஞ்சு போச்சு. முறுக்கி விட்ட மீசை, தோல்ல போட்டு இருக்குற துண்டு, கட்டுன வெள்ளை வேஷ்டிய தூக்கி போட்டு மூலையில உட்கார்ந்த மாதிரி இருக்கு…” என்று நீதிபதி பேச,

    “ஐயா! சாமி, என்னப்பா இது. உங்க அப்பரு என்னென்னவோ சொல்றாரு… எனக்கும் மனசு ஒப்பல. இதெல்லாம் நடக்காத கதை. விட்டுரு விக்ரமா… நான், நம்ம ஆளுகல்ல உனக்கு ஏத்த படிச்ச, அழகான பிள்ளையா பார்ப்போம். அந்த பிள்ளையை மறந்துடு சாமி…” என்று தாய் வருந்தி கேட்க.

    “முடியாது ம்மா, என்னைக்கா இருந்தாலும் அவ தான் என் பொண்டாட்டி. நான் ஒன்னும் வயசு கோளாறுல அவ பின்னாடி சுத்தல, உறுதியா என்னைக்கும் அவ மட்டும் தான்னு நினைச்சு தான் அவ மனசுல என்னை விதச்சேன். யார் என்ன சொன்னாலும் ஜெய விக்ரமன் கிட்ட கதையாகாது , அவளை மருமகளா பாருங்க…”

“விக்ரம்…” என்று நீதிபதி கத்த.

   “நெசம் தான்ம்மா. இன்னைக்கு ரொம்ப வில்லனா நடந்துக்க வேணாம்ன்னு சொல்லு, அப்புறம் நாளைக்கு உங்களை யார் பாக்குறது, அவ தான் பாக்கணும். அப்புறம் என்கிட்ட குறை சொல்ல கூடாது…” எகத்தாளம் குறையாமல் பேசினான் விக்ரம்.

  அருணுக்கு சிரிப்பு வரும் போல இருந்தது, மற்ற எல்லார் முகமும் தீவிரமாக இருக்க, வாயை மூடி கொண்டான்.

    நீதிபதி திரும்பி தன் பெண், மாப்பிள்ளைகளை பார்த்தார். செல்வ குமார் வாயை திறக்க மாட்டேன் என்பது போல அமர்ந்து இருந்தான். இந்திராவும் அப்படி தான். இந்த காதல் விவகாரம் எல்லாம் முன்பே தெரியும்.

      ஏதோ அந்த பெண்ணை மறக்க தான் தங்கள் வீட்டுக்கு வந்துள்ளான் என்று நினைக்க, அவன் கணக்கு வேறாக இருந்தது. அவனை கட்டாய படுத்தி எல்லாம் ஒரு விசயத்தில் தலையாட்ட வைக்க முடியாது என்று புரிந்து அமைதியாக இருந்து கொண்டார்கள்.

    நீதிபதி தன் சின்ன மகள், மருமகனை பார்க்க,

 “மாமா, விக்ரம் பத்தி உங்களுக்கு நல்லா தெரியும். முரடன் யார் சொல்லியும் கேட்க மாட்டான். அவனை கட்டு படுத்தவும் முடியாது. இதுக்கு முன்னவே நாங்க பேசி பார்த்தோம், கொஞ்சமும் பிடி கொடுக்க மாற்றான். சின்ன பையனா அடிச்சு திருத்த…” என்று தன்மையாக மகேந்திரன் பதில் சொல்ல,

  “அப்ப என்ன மாப்பிள்ளை சொல்றீங்க. இவன் காதலுக்கு நான் சரி சொல்லனுமா?… அது எப்படி என்னால முடியும். என் சொந்தமா இருந்தா மட்டும் தான் வீட்டு படியை கூட மிதிப்பேன். என்னா நல்ல பழக்கமா இருந்தாலும் அடுத்த வீட்டுல பச்சை தண்ணிய கூட தொட மாட்டேன். நான் போயி எப்படி மாப்பிள்ளை. என் உசுரு ஆடி போகும். சும்மா பழக்க வழக்கத்துக்கே தராதரம் பாக்குற எனக்கு, எவனோ ஒருத்தன், அவன் பொண்ண எப்படி என்னால எடுக்க முடியும். அந்த பிள்ளை என் வீட்டுக்கு வந்து சகஜமா புழங்குறத என்னால ஒரு நாளும் ஏத்துக்க முடியாது…” என்று நீதிபதி சொல்ல,

   “மாமா… நாம ஒன்னும் பொண்ணு குடுக்கல பொண்ணு தான் எடுக்கிறோம்…காலம் எவ்வளவோ மாறிடுச்சு…”

  “ஆனா, நான் மாற மாட்டேன் மாப்பிள்ளை. மானத்தை இழந்து எப்படி நான் வெளிய தலை காட்டுவேன்…”

 “மாமா, நீங்க தான் பட்டாபட்டி டவுசர், வெள்ளை வேஷ்டி, சட்டை, துண்டுன்னு சும்மா ஜம்முன்னு இருக்கீங்க. உங்க மானம் எங்க போச்சு…” என்று அருண் நக்கலாக கேட்க.

  “டேய், என்னடா கிண்டலா, பேசாம போயிரு… நான் எதை சொல்றேன்…” கடுப்பாக நீதிபதி சொல்ல,

 “அதான் மாமா நானும் சொல்றேன். மானம் தான வேஷ்டி சட்டை, மத்ததெல்லாம் வாழ மட்டை. அதனால் உங்க மானத்தை வேஷ்டி சட்டையில் மட்டும் வைங்க, மத்த வாழ மட்டையை தூக்கி போடுங்க…” என்று அருண் திரும்பவும் சொல்ல,

  மற்றவர்களுக்கு லேசாக சிரிப்பு வந்தது.

  நீதிபதிக்கு கடும் கோபம். எவ்வளவு முக்கியமான விசயம், இவன் என்னவென்றால் நக்கல், நையாண்டி பண்றான்.அதுக்கு குடும்பமும் சிரிக்குது.

   “என்ன?… என்னை பார்த்த எப்படி தெரியுது?… எல்லாரும் ரொம்ப சாதரணமா இருக்கீங்க. டேய், உன்னை அக்கா மகன்னு உள்ள விட்டது தான் மொத தப்பு. இங்க பாரு விக்ரம், நான் உசுரோட இருக்குற வரைக்கும் நீ நினைக்கிறது நடக்காது…” காட்டமாக நீதிபதி சொல்ல,

  “ஐயோ மாமா! அப்படியெல்லாம் இவனை நம்பி ஒரு வார்த்தை சொல்லாதீங்க. உங்க மவன் உங்களை மாதிரி எமகாதகன். உங்களை அவனே போட்டு தள்ளிருவான். ஏன்னா, நம்ம அலப்பரையும் கொஞ்ச நஞ்சமில்லை. போன தலைமுறையில் இருந்து இந்த தலைமுறை வரைக்கும் ரொம்ப தான் ஆடிட்டு இருக்கோம். அதனால், அடக்கி வைக்க தான் பார்ப்பாங்க…” என்று அருண் விடாமல் நீதிபதியை ரவுண்ட் கட்ட,

   அவருக்கு தான் பொறுக்க முடியவில்லை. எப்படி பேசினாலும் சரி கட்டி விடுகிறான். என்ன சொல்லியும் அடக்கி வைக்க முடியவில்லையே. தன் சொந்த வீட்டிலும் பெரிதாக எதிர்ப்பு கிளம்பாமல் இருப்பதே அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒற்றை தம்பி என்று அக்காக்கள் இருவரும் சப்போர்ட் வேறு… பிள்ளைகள் ஒற்றுமை என்றெல்லாம் சந்தோச பட முடியவில்லை. தன் வீடு தன்னை தாண்டி எப்படி இயங்கும்…

  “விக்ரம், அப்பா சொல்றத கேளுப்பா. உனக்கு அந்த பிள்ளை வேணாம்…”

  “எனக்கு அந்த பிள்ளை தான் வேணும்ப்பா, பிளீஸ்…” என்று மகன் கேட்க.

  “ஊர் உலகத்துல யாரும் ஏத்துக்க மாட்டாங்கடா. காறி துப்புவாங்க… சொந்தமேல்லாம் ஒதுக்கி வைக்கும். ஊரே பேசும், என்னால அவமான பட முடியாது, பேச்சு கேட்கவும் முடியாது. நீ யாரையும் பாரு, எம்புட்டு படிச்சு இருந்தாலும் எல்லாரும் அவங்கவங்க வட்டதுக்குள்ள தான் நிக்கிறாங்க. நான் ஊர் தலைவர்டா, நானே மோசமான உதாரணமா இருக்கலாமா? நீ சொல்லு, யாரும் சரின்னு சொல்ல மாட்டாங்க…” கடைசியில் மகனையே சரிகட்டும் வேலையில் இறங்க,

  “எல்லோரும் ஏத்துப்பாங்க. யார் ஏத்துக்க மாட்டாங்கன்னு நீங்க சொல்றீங்கப்பா… உங்களுக்கு தான் உலகம் புரியல, மக்கள் மனசும் புரியல. இப்போ எவ்வளவோ உலகம் மாறி போச்சு…”

  “ஆனா, மக்கள் மாறல விக்ரம். அவங்கவங்களுக்குன்னு தனி தனியா வாழும் முறை, கொள்கை, கோட்பாடு நிறைய இருக்கு…” என்று அடித்து பேசினார் நீதிபதி. மற்றவர்கள் அப்பா, மகன் வாதத்தை வேடிக்கை தான் பார்த்தார்கள்.

  “முப்பது வருசத்துக்கு முன்னால அலைகள் ஓய்வதில்லைன்னு ஒரு படம் வந்துச்சு. அந்த படத்தோட கான்செப்ட் என்ன? காதல் ஒரு வரைமுறையில வராதுப்பா… அந்த படம் நூறு நாள் ஓடுச்சாம். அதை மக்கள் ஏதுக்கலையா. அதையும் தாண்டி சேரன், பாண்டியன், முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை எல்லா படத்திலையும் உங்களை மாதிரி ஒரு ஆள் தான் வில்லன். நான், என் கோட்பாடுன்னு பேசுற ஒருத்தன் தான் கெட்டவன், வில்லன். எல்லாரும் சமம்ன்னு பேசுற ஒருத்தன் தான் ஹீரோ. அதை மக்கள் ஆதரிச்சாங்க தான. நம்ம மாதிரி கிராமங்கள் தான் ரொம்ப நாள் ஓடிச்சு…” என்றவன்,

  “நீங்க தலைவரா?… மொத இந்திய அரசியலை கொஞ்சம் திரும்பி பாருங்க. ஜனநாயகம், சமத்துவம், பொதுவுடைமையை தூக்கி பிடிக்கிற, எல்லாரும் சமம்ன்னு சொல்ற ஒருவர் தான் மக்களோட தலைவரா வாழ்ந்து இருக்காங்க. உங்களை மாதிரி நான், அப்படின்னா கொள்கை உடையவங்க யாரையும் மக்கள் ஆதரிக்கல. நானும் உங்களை ஆதரிக்க மாட்டேன்…” நீதிபதி முகம் கடுப்பை காட்டியது.

  “அப்பா, நான் படிச்சு இருக்கேன். என்னோட அறிவு உங்க வழியை தப்புன்னு காட்டுது. நாம வாழ்ற சமூகம் ரோஜா கூட்டம் கிடையாது, முட்கள் நிறைந்த தோட்டம். அங்க ஒருத்தன், ஒரு பெண், ஒரு குழந்தைன்னு யாரும் பாதிக்கபட்டா எல்லாரும் சேர்ந்து நின்னு தான் நீதி கேட்கணும். பாதிக்கபட்ட ஒரு ஆணோ, பெண்ணோ, குழந்தையோ யாரு, எந்த ஊரு, என்ன ஆளுன்னு பார்த்தா குரல் கொடுக்குறாங்க. நம்மளை மாதிரி மனுசன், நம்ம வீட்டுல இருக்குற மாதிரி தான் ஒரு பெண், ஒரு குழந்தைன்னு தான் நினைப்பாங்க. அது தான் சமத்துவம். அதை ஒன்னா தான் இங்க இருக்குற எல்லாரும் ஆதரிக்கிறாங்க…”

  “அப்பா நீங்க பேசுனது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா!… இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மொத இருக்கிறதே, எல்லாரும் சமம்ன்னு தான். நீங்க பேசுறது நம்ம நாட்டோட கோட்பாடுகளுக்கே எதிரானது. சட்டபடி தப்பு. இங்க நீங்க பேசுறத, பொது வெளியில பேச முடியாது தெரியுமா!… உங்களோட உயிற்பில்லாத கோட்பாடுகள் என்னை என்னைக்கும் கட்டு படுத்தாது. அது ஒரு நாள் உங்களுக்கு புரியும்…” என்றவன் வெளியேறி விட,

  அவனை தொடர்ந்து மதன், அருண் இருவரும் வெளியேறி விட்டார்கள்.

   கலை செல்வி, பிரபாவை கண்டு கொள்ள கூட இல்லை. பிரபா உடன் இருந்து கவனித்து கொள்வது எல்லாம் ரேவதி தான்.

 விக்ரம் இரவு வரை காத்திருந்து நேர சென்றது பிரபா வீட்டுக்கு தான். மூணு நாளாக அவளை பார்க்க முடியவில்லை. இப்போது தான் விசயம் தெரிந்து இருக்கு, உடனே போய் சங்கட படுத்த கூடாது என்று தான் தள்ளி நின்றான். ஆனால், பிரபா சும்மா கூட வீட்டுக்கு வெளியில் வர வில்லை என்றதும் அவனுக்கு பெருத்த சந்தேகம் வந்தது.

   பகலில் சென்றால் அக்கம் பக்கம் பேச்சு அடிபடும். அதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். அதனால் தான் ராத்தியில் சென்றது.

   வண்டியில் வந்தவன், மெதுவாக கேட்டை திறந்து உள்ளே செல்ல, கூடத்தில் அமர்ந்து இருந்தது தமிழ் செல்வம் தான். அவனை பார்த்ததும் அப்படி ஒரு கோபம்.

 “எங்கடா வந்த?…” தம்பி என்ற மரியாதையெல்லாம் எப்போதோ காணாமல் போயிருந்தது.

  “சார், அது வந்து….” என்று ஆரம்பித்தவனை கை நீட்டி தடுத்தவர்.

 “என் வீட்டுக்கு நீ வர எந்த அவசியமும் இல்லை, வெளிய போ…”

  “சார். நான் சொல்ல வந்ததை மொத சொல்கிறேன். எனக்கு உங்க மக பிரபாவதியை பிடிச்சு இருக்கு, ரொம்ப பிடிச்சு இருக்கு. கல்யாணம் செய்துக்க ஆசை படுறேன். நான் ஜெய விக்ரமன். பக்கத்து ஊர் தான். ஊர் தலைவர் நீதிபதி மகன். ரெண்டு அக்கா, ஒரு அம்மா இருக்காங்க. ரெண்டு அக்காக்கும் கல்யாணம் முடிச்சாச்சு, ஓரளவு வசதியும் இருக்கு. மூணு வீடு, ரெண்டு தோட்டம், தோப்பு, டவுன்ல கடை கட்டி வாடகைக்கு விட்டு இருக்கோம். வயசு இருவத்தியேழு, நான் மூணாவது பையன். என்னை பத்தி நாலு பக்கமும் நல்லா விசாரிங்க. அடுத்து நாள் சொல்லுங்க, அப்புறம் வாரேன்…” என்று தெளிவாக, சீரியசாக விக்ரம் பேச,

    தமிழ் செல்வத்திற்கு வந்ததே கோபம்.

  “என்ன எகத்தாளமா? மரியாதையா ஓடி போயிட்டு… எனக்கு, உம் மேல இருக்குற கோபத்துக்கு அடிச்சு துவைக்க தான் தோணுது. ஆனா, பொண்ணை பெத்தவன், உம் மேல கை வச்சு, எம் மக பேரை வெளிய விட எனக்கு விருப்பம் இல்லை… நான் மிலிட்டரிகாரன் என் ஒரு அடிக்கு நீ தாங்க மாட்ட…”

  “என்ன சார், இப்படி சொல்றீங்க. முறையா தான் நான் பொண்ணு கேட்டு வந்து இருக்கேன். வெளில எப்படி மாப்பிள்ளை பார்ப்பீங்களோ, அப்படி தான் என்னையும் தயார் செஞ்சு இருக்கேன். நான் ஏன் வேணாம், காரணம் சொல்லுங்க சார்…”

  “காரணமா? மொத யாரடா நீ? எனக்கு சொந்தமா? எம் பொண்டாட்டிக்கு சொந்தமா? எங்க வகையறாவா? யார் நீ? எந்த தைரியத்தில என் வீட்டு படி ஏறி வந்து பொண்ணு கேக்குற… உனக்கு என்ன தகுதி இருக்கு?…” நீதிபதி மீதுள்ள கோபம் விக்ரம் பக்கம் திரும்பியது.

  “என்ன பெரிய தகுதி. நீங்க ஒரு பெண்ணை பெத்து வச்சு இருக்கீங்க. நான் ஒரு ஆண். அதுதான் பொண்ணு கேட்டு வந்தேன். என்ன பெரிய வகை? நான் ஒரு ஆண் வகை, அவ ஒரு பெண் வகை. அதான், கல்யாணம் செய்ய கேட்டு வந்தேன். ஏன்னா, நான் பார்த்த வரைக்கும் ஒரு ஆண் தான் பெண்ணை கல்யாணம் செய்றான்…” விக்ரமின் பேச்சு தமிழ் செல்வத்துக்கு அப்படி ஒரு கோபத்தை கொடுக்க,

   ஒரு பெருமூச்சு விட்ட விக்ரமும், “சார், ஒரு பெண்ணை பெத்த தகப்பனா உங்க நிலை எனக்கு புரியுது. ஆனா, எங்களையும் கொஞ்சம் யோசிங்க சார். நாங்க ஒருத்தர் மேல் ஒருத்தர் விருப்ப பட்டோம். உண்மை தான். காதல்னா ஒதுக்கி தான் வைக்கணுமா? அது தப்பா தான் இருக்கும்ன்னு எப்படி நினைக்கிறீங்க. நம்ம பிள்ளைக விருப்பத்தில் கொஞ்சமாவது நியாயம் இருக்கும்ன்னு யோசிக்கலாம் தான சார்…”

  “சார், நீங்க உங்க பொண்ணை எனக்கு கட்டி தர மாட்டேன்னு சொல்றதுக்கு… டேய் விக்ரம் நீ ஒரு பொறுக்கி, படிக்காதவன், ஒழுக்கமில்லதவன், குடிகாரன், கோபக்காரன், வேலை இல்லாதவன், சரியில்லாதவன், வசதி இல்லை, நடத்தை சரியில்லை. இப்படி எதையும் சொல்லுங்க… சரியான காரணம் இருந்தா நான் ஏத்துகிறேன். அதை விட்டு ரொம்ப பழமைவாதியா நீங்க சொல்ற காரணமெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. அது என்னை தடுத்தும் நிறுத்தாது…” என்றவன்,

  தன் பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து “இது பிரபாக்காக மட்டும் தான் சார். அவளுக்கு அரசு வேலையில் இருக்குற மாப்பிளை பாக்குறீங்கன்னு தான் நானும் கவர்மெண்ட் எக்ஸாம் படிச்சு பாஸ் பண்ணேன். எப்படியும் ஒரு வருசத்துல வேலை வந்துரும். நிச்சயம் உங்க மகளை நான் நல்லா வச்சுப்பேன். என்னை நம்பி பொண்ணு குடுங்க… ரெண்டு குடும்பத்திலும் ஒதுக்கல, அதனால் வா பிரபா வீட்டை விட்டுன்னு சொல்லாம, உங்க கிட்ட வந்து தான் எங்க நியாயத்தை சொல்றேன். நீங்க நேர்மைவாதி யோசிங்க சார்…” என்று எழுந்து கொண்டவன் கண்கள் பிரபாவை தேட, அவள் அகப்பட வில்லை.

   ஒரு யோசனையோடு தான் வெளியே சென்றான் விக்ரம். பெத்தவர்களுக்கும் அவகாசம் கொடுக்க வேண்டுமே… அவன் கண்கள் பிரபாவை காண ஏங்கியது. அவனின் அவள், தன்னவன் பேசியதை எல்லாம் கேட்டு கண்களில் நீர் பொங்க கேட்டு இருந்தாள்.

  தற்போது அவன் முன்னே போய் நின்றால், தன்னுடைய உடலின் காயங்களே நடந்ததை காட்டி கொடுத்து விடும். அடுத்து என்ன, விக்ரமுக்கு இப்போது இருக்கும் பொறுமை அடுத்து இருக்காது. முழு முரடனாக, கோபக்காரனாக நிற்பான். வேண்டாம், வெண்ணெய் திரண்டு வரும் போது பானை உடைந்த கதையாகி விடும்.

   சண்டை போட்டால் சண்டை போடலாம், இவ்வளவு பொறுமையாக நிதானமாக பேசுபவனிடம், நியாயமற்ற சண்டை போல தோன்ற வில்லை.

  “அவன், அவ்வளவு பேசுறான். எதிர்த்து ஒரு அடி வைக்காம பேசாம கேட்டு அமைதியா இருக்கீங்க…” என்று செல்வி கோபமாக கேட்க.

   “அந்த தம்பி மேல என்னக்கா தப்பு. நியாயமா, நேர்மையா, பொறுமையா வந்து பொண்ணு கேட்கிறான். அவன் கிட்ட என்னன்னு சண்டை போட…” என்று ரேவதி மறுத்து நிக்க,

  “நீயெல்லாம் பேசாத… அவளுக்கு நிச்சயம் பண்ணிட்டோம்ன்னு அவன் கிட்ட சொல்ல வேண்டிய தான…” தன் கணவனை பார்த்து செல்வி கேட்க.

  “மாமா, நான் மொத உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்…” என்று ரேவதி தொடங்க.

  “என்ன ரேவதி…” என்று தமிழ் செல்வம் கேட்க.

  “எனக்கு புரியல. கரண் எனக்கும் அண்ணன் மகன் தான். ஆரம்பத்துல நம்ம பிள்ளையை அவனுக்கு கட்டி தாரதா பேச்சு விடலையே, வெளியே தான பார்த்தோம். இப்போ என்ன?…” என்று ரேவதி கேட்க.

  தமிழ் செல்வம் மெளனமாக இருந்தார்.

  “எங்க அண்ணன் வீடு வசதி இருந்தாலும், நல்லா படிச்சு இருந்தாலும், கரணுக்கு குடி பழக்கம் இருக்குன்னு தான் நாம பொண்ணு தரல. இப்போ ஏன் அது மாறனும்…”

  “ஏன்னா, உம் மக ஒழுக்கம் அப்படி…” என்று கலை செல்வி கோபமாக சொல்ல,

  “ஒருத்தன் மேல விருப்ப பட்டதால மட்டும் ஒரு பெண் ஒழுக்கம் கெட்டவளா போவாளா?… அதுனால ஒரு பெண்ணோட மதிப்பு குறைஞ்சு போகுமா. மனசுல ஒருத்தனுக்கு இடம் கொடுத்தால மனம் கெட்டவள், மானமும் கெட்டு போனவள்ன்னு பெத்தவங்களே முடிவு செய்றீங்க…” என்று ரேவதி கேட்க.

வார்த்தை தமிழ் செல்வத்தை சுட்டது.

 “அதானே, நீ யாரு?… உன் வரலாறு என்ன? அப்புறம் உம் பேச்சு வேற எப்படி இருக்கும்…” என்று செல்வியே பதில் சொல்ல,

  ரேவதி தன் மாமனை பார்த்தவள், “வேண்டாம் மாமா, நீங்க பெரிய பாவம் பண்ண போறீங்க. நம்ம பிள்ளைக்கு என்ன குறைச்சல், ஏன் அவசரம். நான் அந்த தம்பி விசயத்துக்கே வரல. அது வேணாம். நம்ம பிள்ளையை மட்டும் யோசிங்க…” என்றவள்,

  “பிரபா மனசுல வேற ஒருத்தன் இருக்கான்னு தெரிஞ்சும், உங்க வீரத்தை காட்டி அந்த அப்பாவி பொண்ணை அடிச்சு, ஓடச்சு, மூலையில முடக்கி, கட்டாயபடுத்தி ஒருத்தனுக்கு கழுத்தை நீட்ட வைக்கிரீங்க. அது எல்லாம் எது வரைக்கும்… பெத்தவங்க, நீங்களே உங்க பொண்ணை புரிஞ்சுக்காம இருக்கும் போது, யாரோ ஒருத்தன் தாலி கட்டி சொந்தமானவன் மட்டும் எப்படி புரிஞ்சுப்பான்…”

  “ஒருத்தன் கைல பிடிச்சு கொடுத்து, யார் என்னன்னு தெரியாத குடும்பத்துல தள்ளி விட்டு வாரீங்களே. அடுத்து அவ நிலமை என்ன?… அவளை வச்சு அவன் என்ன பூஜையா பண்ணுவான். மனசுல வேற ஒருத்தன நினைச்சுட்டு, வேற ஒருத்தன் கூட தாம்பத்திய வாழ்க்கை வாழணும். அது எவ்வளவு பெரிய கொடுமை. வலியோடு தான் அவள் கடக்கனும். அடுத்த ஒரு வருசத்துல ஒரு பிள்ளையை பெத்துட்டா, நம்ம மக சந்தோசமா தான் இருப்பான்னு நீங்களா நினைச்சுபீங்க. அடுத்து உங்க இடம் எல்லாம் வீட்டுக்கு வெளிய தான். அவ படுக்கயறை வரைக்கும் நாம போய் பார்க்க முடியுமா? எப்படி சந்தோசமா இருக்கான்னு கணிக்க முடியுமா?…”

  “அடியே வெட்கம் கெட்டவளே… அக்கா புருசன் கிட்ட என்ன பேசணும்ன்னு விவஸ்தை இல்லை…” செல்வி கத்த

  “நீ மொத வாய மூடுடி. இப்படி எல்லாரும் மூடி மறைக்கிறது தான் பிரச்சனையே… சீ… இதெல்லாம் அண்ணன், தம்பி கிட்ட பேசுவாங்களா…. பெத்தவங்க கிட்ட சொல்ல முடியுமா! அசிங்கம், கேவலம். அந்தரங்கத்தை சொல்ல கூடாதுன்னு மூடி மறைக்கிறது. நீங்களும், கல்யாணம் ஆகி, ஒத்த பிள்ளையும் பொறந்தாச்சு. இனி என்ன? இது தான் வாழ்க்கை. ஏத்து கிட்டு கடந்து போக வேண்டிய தான். புருசன், பிள்ளைன்னு வந்த அப்புறம் வேற என்ன ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை. அது தான், அவ்வளவு தான். அதோடே வாழ்ந்து சாக வேண்டிய தான். இது தான் நீங்க தேடி குடுக்க போற வாழ்க்கை…”

   “அப்புறம், புருசன், பிள்ளை தாண்டி பொம்பளைக்கு வாழ்க்கை…” என்றது செல்வி தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!