Skip to content
Post Views: 2,842
மதிய உணவிற்கு முன்பு பூர்வியை அவளது ப்ளே ஸ்கூலிலிருந்து அழைத்து வரும் பொறுப்பு வீட்டின் மூன்று ஆண்களுக்கு சொந்தமானது. பெரும்பாலும் ஸ்ரீனி தான் அழைத்து வருவான். அவளும் மாமனோடு வரவே அதிகம் விரும்புவாள்.
தாத்தாவோடு வந்தால் தின்பண்டங்கள் கிடைக்கும், ஆனால் சாக்லேட் ஐஸ்கிரீம் கிடைக்காது. மாமனோடு வந்தால் எதுவும் கிடைக்கும். வீட்டின் முதல் குழந்தையாக இருக்க செல்லமும் அதிகம் தான்.
தந்தையோடு வந்தால் எதுவும் அளந்து பார்த்து பார்த்து தான் கிடைக்கும். ‘கேட்ட ஒடனே வாங்கி குடுத்தா அப்றம் பணத்தோட மதிப்பும் பொருளோடு அருமையும் தெரியாது. இந்த வயசுல இருந்தே எல்லாம் பூர்வி தெரிஞ்சு வச்சிருக்கணும்’ என ஸ்ரீனிக்கு கூறும் சாக்கில் மாமனாருக்கும் சேர்த்தே கூறுவான்.
அதெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதே இல்லை, ‘பொறுப்பு, சிக்கனம் எல்லாம் தகப்பன் நீயே சொல்லி குடு, நாங்கள் இப்படி தான்’ என அவர்கள் வகையிலே இருந்தனர்.
Advertisement
இரண்டு நாட்களுக்கு முன் ஆரபி கணவனுக்கு அழைத்து, “உங்க பொண்ணுக்கு நேத்தே இருமல் வந்துத்துன்னா ஸ்ரீனி வேணாம், நீங்களே கொஞ்ச நாள் அழைச்சிட்டு வாங்கோ” என்றாள்.
அதனால் இந்த மூன்று நாட்களாக பார்த்திபன் தான் அழைத்து வருவது. அதுவும் குழந்தைக்கு அளவற்ற மகிழ்ச்சி தான். ஏதேதோ கதைகள் பேசுவாள். மாமன், தாத்தாவிடம் குறும்பாக இருப்பவள் தந்தையிடம் கேள்வி கேட்டு கேட்டு புத்திசாலியாக காட்டிக்கொள்வாள்.
அவனும் மகள் கேட்கும் அர்த்தமற்ற கேள்விகளுக்கு கூட சலிக்காது விளக்கம் அளிப்பான். இன்று மகளுக்காக வெளியில் காத்திருந்தவன் ஒரு அழைப்பில் மூழ்கியிருக்க வந்த மகளிடம் பையை வாங்கி உள்ளே அமர வைத்தவன் தானும் உள்ளே அமர்ந்து இன்னும் கைபேசியில் பேசிக்கொண்டிருக்க,
Advertisement
மகள், “ப்பா ப்பா” என அழைத்து பார்த்தாள்.
Advertisement
அவனோ கண்களால் கெஞ்சி ஒரு நிமிடம் என கேட்டு பார்க்க மகளும் அசையவில்லை தகப்பனும் அசையவில்லை.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மகள், “ப்ப்பாா” சத்தமாக அழைத்து அவன் நாடியை பிடித்து காரின் பின் பக்கம் திருப்பி காட்ட, எதற்கு இந்த அவசரம் என திரும்பி பார்த்தவன் வசந்தை அங்கு சுத்தமாக எதிர்பார்க்க வில்லை.
குழந்தைக்கு குஷி வானை தொட்டது, “சிப்பா சிப்பா” என முன்னிருக்கையில் குதித்து உற்சாகிக்க என்ன செய்வதென தெரியாத நிலை பார்த்திபனுக்கு.
Advertisement
அவன் கண்கள் மொத்தமும் குழந்தை மேல் தான் இருந்தது. இவளுக்காகவே காத்திருப்பது போல். தந்தை பார்க்கும் வரை பொறுத்த வண்டு இனி மாட்டேன் என கதவை திறக்க முயல பார்த்திபன் அவள் ஏறவும் சைல்ட் லாக் செய்திருந்த காரணத்தால் அவளால் இறங்க முடியவில்லை.
“ப்பா ஓபன்… ஓபன்” என தந்தைக்கு உத்தரவிட அவன் பார்வை வசந்த்திடம் தான்.
குழந்தை இறங்க முயற்சிப்பதை பார்த்து வசந்த் வாகனத்திலிருந்து இறங்கி நின்றான். பார்த்திபனிடம் அசைவில்லாமல் போக கதவை திறப்பதில் தோற்று போன அவன் மகள் அழுகை என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துக்கொண்டாள்.
அதன் பிறகே பார்த்திபன் கதவை திறந்து விட்டு தானும் இறங்கி நின்றான். குட்டி குடும்பி ஆட சித்தப்பனை நோக்கி ஓடியவள் கீழே இருந்த கல்லை கவனிக்காமல் கால் இடறி விழ போக பதறி பார்த்திபன் ஓரடி எடுத்து வைக்கும் பொழுதே வசந்த் மண்டியிட்டு வேகமாக மகளை தாங்கி பிடித்திருந்தான்.
பூர்வி அவன் கையில் அடைக்கலமானதும் தாவி அவள் கழுத்தை கட்டிக்கொள்ள, பல நாட்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் யோசிக்காமல் கன்னத்தை நனைத்தது. பிஞ்சு அவளை பிரிந்திருக்க முடியாமல் பைத்தியம் போல் திரிந்தான்.
பூர்வி இரண்டு நாள் வீட்டில் இல்லை என்றாலும் காணொளி மூலம் அவளிடம் பேசி அன்பை வளர்ப்பவன் வார கணக்கில் அவளை பார்க்காது பேசாது எதையோ பெரிதாய் இழந்தது போல தவித்து தான் போனான்.
“சித்தப்பாவை மிஸ் பண்ணியாடா?”
அவள் முகம் பார்த்து கன்னத்தை வருடி கேட்க அழகாய் குடும்பி ஆட தலை அசைத்தவள், “ம்ம்ம் ரொம்ப” என பெரிதாய் கையை விரித்து காட்டினாள்.
“சிப்பா இது நானு ஸ்கூல்” என பள்ளியை காட்டினாள்.
“ஸ்கூல் போற அளவு என் பூர்வி வளந்துட்டீங்களா?”
அதற்கும் ஆமாம் என தலை அசைத்து சிரித்தாள், “நானு பிக் கேர்ள்”
“இல்லடா, என் குட்டி எப்பவுமே குட்டி பாப்பா தான்”
“நானு சாகி வேது, வா டுர்ர்ர்ர் போதாம்” அவள் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டவன் அவளை தூக்கி வாகன இருக்கையில் அமர வைத்து தயங்கி நின்றான்.
பார்த்திபனால் அவனது இந்த பாசத்தை போலி என கூறிட முடியாது. இவர்களை பார்த்து நின்றவன் காரில் சாய்ந்து நின்றுவிட வசந்த் பூர்வி பயணம் துவங்கியது.
பள்ளியில் நின்றது நடந்தது ஆடியது என முதலில் இருந்து கதையை கூற ஆசையாக கேட்டு வந்தான். அவள் கேட்டது பார்த்தது என அனைத்தையும் வாங்கி அடுக்கியவன் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்தான் அரை மணி நேரம் பிறகே.
“சிப்பா ஸ்கூல் வேதா, வா வீத்டுக்கு போதாம்” பள்ளி வந்ததுமே வாடிய வசந்த் முகம் அவள் வீட்டிற்கு அழைத்து செல்ல கூறவும் கருத்து போனது.
“சித்தப்பா உன்ன இன்னொரு நாள் கூட்டிட்டு போறேன்டா. பாருங்க அப்பா வெயிட் பன்றாங்க” என்றான்.
தந்தையை பார்த்ததும் சரி என்றவள் கையில் அவளை உயரத்திற்கு பெரிய பையில் உண்பதற்கு விளையாடுவதற்கு என வாங்கி கொடுத்திருந்த பையை அவளிடம் ஒப்படைத்தான்.
“தேங்க் யூ”
குட்டி உதடுகள் அசைய அழகாய் நன்றி உரைத்தவளை பிரிய மனமே இல்லாமல் ஆரத்தழுவி கன்னத்தில் முத்தமிட்டு, “சாரிடா பூர்வி. சாரி” என்றான் மீண்டும் அழுகையோடு.
“எதுக்கு சாரி?” என அந்த பெரிய பெண் கேட்கவும்,
“எல்லாத்துக்கும்” என்றான் பார்வையை பார்த்திபன் மேல் வைத்து.
சிரியவளுக்கு எதுவும் புரியவில்லை.
சித்தபினின் கன்னத்தில் முத்தம் கொடுத்து விளையாட்டு பொருட்களை வீட்டில் சென்று கடை பரப்பும் ஆவலில் தன் உயரத்திற்கு தூக்கி பிடித்து நடக்க முடியாமல் நடக்க அவர்கள் அன்பில் இடையிடவே இல்லை பார்த்திபன்.
குழந்தையிடம் எதையும் வாங்கி வராதே என கூறினால் அடம் பிடிக்க தான் மாட்டாள், ஆனாலும் அவன் மேல் அவளுக்கு எந்த வித வித்தியாசத்தையும் உருவாக்க பிடிக்காமல் விட்டான்.
வாகனத்தில் ஏறி அமர்ந்தும் பின்னல் திரும்பி நின்றவள் வசந்த் கண்ணிலிருந்து மறையும் வரை டாடா காட்ட நிறுத்தவில்லை.
வீட்டிற்கு வந்ததும் அவள் கையிலிருந்த பையை பார்த்த ஸ்ரீனி பார்த்திபனை கேலி செய்ய, அவன் அமைதியை பார்த்த ஆரபிக்கு கணவன் இதனை வாங்கி கொடுக்கவில்லை என புரிந்து போனது.
அறைக்குள் வந்த கணவனிடம், “யார் வாங்கி குடுத்தா?”
“வசந்த்” என்றான் சட்டையை தளர்த்தி.
“அவா ஒரு வாரமா வந்துட்டு தான் இருக்கலாம், ஸ்ரீனி சொன்னான். கோவத்துல அழைச்சிண்டு வந்துட்டான் போல” என்றாள் ஆரபி.
மனைவியை இப்பொழுது தான் இதை கூறுவாயா என்னும் விதமாக பார்த்தவன், “அவன் வந்தா பூர்விய விட சொல்லிடு மாமி. வீட்டுல அவனை ஏற்கனவே வில்லன் மாதிரி பாக்குறாங்க, மூணு நாள் சாப்பிடாம இருந்து ஒரு நாள் மயக்கம் போட்டு விழுந்துருக்கான். எனக்கு தெரிஞ்சவங்க சொன்னாங்க”
“ஐயையோ என்னாச்சுன்னா பயப்புடுற மாதிரி ஒன்னும் இல்லையே”
“ஒன்னுமில்ல. ஜஸ்ட் பசி மயக்கம் தான். ட்ரிப்ஸ் போட போன இடத்துல தான் என்னோட கிளைன்ட் பாத்து சொன்னார். ஆளே ரொம்ப இளைச்சு போயிருக்கான். பூர்வி மேல அவன் காட்டுற அக்கறை பொய் இல்ல. சோ அவன் டெய்லி வந்தாலும் விட சொல்லு”
கணவன் அருகே அமர்ந்தவள், “இன்னும் ஒரு மாசத்துல வசந்த் தம்பி கல்யாணம். அத்தமா ஆத்துக்கு வர சொன்னா” தயங்கி தயங்கி பேசினாள்.
பார்த்திபன் மனைவியிடம் இது நாள் வரை அன்று நடந்த சண்டையை பற்றி பேசவில்லை. அவன் காயத்தை கிளறி வேடிக்கை பார்க்கும் தைரியம் அவளுக்கில்லை.
இதுவே வித்யா பல நாள் இவளிடம் கேட்டுக்கொண்டது. அதன் பொருட்டே இப்பொழுது இந்த தகவல்.
“எனக்கு எந்த எண்ணமும் இப்போ இல்ல ஆராமா” அவள் மடியில் அப்படியே படுத்தவன் மேடிடாத அவள் வயிற்றில் முகம் புதைத்து இடையை கட்டிக்கொண்டான்.
அவன் சிகைக்குள் ஆரபி விரல்கள் கோத, பெரிய மௌனம் அங்கு நடனமாடியது.
“உனக்கு வருத்தம் இருக்கா மாமி?”
“எதுக்கு?”
“எனக்கு யாருமே இல்லனு, நான் உண்மைய உன்கிட்ட சொல்லலனு?”
“அப்போ நான் பூர்வி நோக்கு உறவில்லையா?”
விழுக்கென அவள் முகம் பார்த்தான், கோவமாக இருந்தது, “ஏய் என்னடி பேச்சு இது” கடிந்தான் காரமாக.
“அப்றம் உம்ம பேச்சு அப்டி தான் இருக்கு. நேக்கு நீங்க சொல்லனு எல்லாம் தோணவே இல்ல. இன்னொருவாட்டி இப்டி பேசுனேள் அப்றம் உங்க கூட பேசவே மாட்டேன் சொல்லிண்டேன்”
பார்த்திபன், “நான் வேணும்னு எல்லாம் பேசல மாமி. மனசுல அடிக்கடி அந்த எண்ணம் வருது”
“வர்றது தப்புன்னா. உங்கள யாரும் உறவு வேணாம்னு தள்ளி வக்கலையே”
“வார்த்தையால மட்டும் தான் தள்ளி வைக்கணும்னு இல்ல மாமி. ஆக்ஷன்ஸ் தான் எல்லாமே. எனக்கு ஒரு இடத்துல கூட ஹெல்ப் பண்ணல”
“அவா உதவிய எதிர் பாத்துண்டு தான் இருக்கேளா, இல்ல உங்க உழைப்பை நம்பி இருக்கேளா?”
பார்த்திபன், “உழைப்பை மட்டுமே வச்சு ஒரு ஆணியும் புடுங்க முடியாதுடி. எவ்ளோ அறிவு இருந்தாலும் மூலகாரணம் பணம் தான்”
“சரி நீங்க என்ன சொல்ல வர்றேள்? உங்க தோப்பனார், அம்மாகிட்ட சண்டை போடணுமா?”
“சண்டை போட்டாலும் கெடைக்காது, கெஞ்சுனாலும் கிடைக்காது அங்க. நான் தான் அவங்க புள்ளையே இல்லையே” என்றான் ஏதோ போல்.
“சரி உங்க கணக்குபடியே வர்றேன். வசந்த் கல்யாண செலவை மொத்தமா அப்போ அத்தை மாமா ஏத்திருப்பாளே, ஏன் பண்ணல?”
பார்த்திபனிடம் அமைதி.
“நீங்க உங்க இடத்துல இருந்து மட்டும் தான் யோசிக்கிறேள். அவாளால அப்டி இருக்க முடியாது பார்த்தி, உமக்கு குடுத்தா நாள பின்ன வசந்த் கேட்டாலும் எடுத்து குடுக்குற அளவு பணம் இருந்திருக்கணும், அதே மாதிரி உங்க அண்ணன் கேட்டாலும் செய்ற திடம் அவாகிட்ட இருக்கனும்.
இருந்திருக்குமானு யோசிச்சு பாருங்கோ அவா நிலைமை புரியும். அதே நேரம் நீங்க இன்செக்யூரா பீல் பன்றாப்ல யாரும் உம்மை நடத்தல, ஒரு வார்த்தை வித்யாசமா பேசிருப்பாளா இல்ல நடத்திருப்பாளா.
சில விஷயம் என்ன தான் பாத்து பாத்து செஞ்சிருந்தாலும் பிள்ளைங்களுக்குள்ள பாகுபாடு வந்துடும். அதுக்கு பயந்து ஆத்துல ஒரு குழந்தையோட ஆசை நிராகரிக்கப்படுறது சகஜம் தானே”
“சரிடி ஒரு தடவையா போகட்டும்னு விட, இது ரெண்டாவது நிராகரிப்பு”
“அவா ரெண்டு பேரும் சரி சொன்னா வாங்கிக்கோனு தானே அத்தமா சொன்னா? ஆரம்பத்துலையே இதுல நேக்கு பங்கு வேணாம்னு ஒதுங்கி வந்தது நீர் தான் நினைவிருகோனோ?”
“அப்போ என் பக்கம் தான் தப்புனு சொல்றியா?”
“பார்த்தி, தப்பு ரெண்டு பக்கமும் தான் இருக்கு. ஆனா கம்ப்ளீட் மிஸ்டேக் இவா தான்னு சட்டுனு சொல்லிட முடியாது. ஒருத்தர் பார்வைல மத்தவா தப்பு தான். மெயின் தப்பு வசந்த் தம்பி தான். அவாளோட சிந்தனை எண்ணம் எல்லாம் மாத்துனா தான் அவா குடும்பத்துக்களையே பிரச்சனை வராது”
“அவன் ஏதோ ஒரு வேகத்துல பண்ணிருப்பான்” என்றான் பார்த்திபன் உடனே தம்பிக்கு பரிந்து.
“மிஸ்டேக் எந்த வயசானாலும் மனுஷா பண்றது தான்ன்னா. இவா அவானு இல்ல”
“சரி விடு. என்ன சாப்பாடு”
“உருண்டை கொளம்பு அம்மா பண்ணிருக்கா”
“ச்ச போடி எப்ப பாரு சைவம் தான்” சலிப்பாக கூறினான்.
“உங்க அத்தைகிட்ட கேளுங்கோ” என்றாள்.
“இதெல்லாம் நான் கேட்கணுமா? இந்த வீட்டு மாப்பிள்ளை, கெத்தா தான் இருப்பேன். நீ தான் உன் ஆம்படையாளுக்கு எது தேவை, எது புடிக்கும்னு உன் அம்மா அப்பாகிட்ட சொல்லணும்”
“ம்ம்ம் நோக்கு என்ன தான் புடிக்கும், கடிச்சு சாப்பிடுறேளா?”
முகம் பிரகாசிக்க அவளை பார்த்தவன், “கரெக்ட். சிக்கன் மட்டன் எல்லாம் என்ன சுவை, என் மாமி பக்கத்துல நிக்க முடியாதே, அதுவும் உன் இயர் பட்ஸ்ல…”
பட் பட்டென அவன் வாயில் அடித்தாள், “பேசாதேள் போதும். சேட்டை சேட்டை” செல்லமாக அவள் அதட்டியதில் மெல்ல குலுங்கி சிரித்தான் பார்த்திபன்.
“பார்த்தி…”
“ம்ம்”
அவள் விரல்களோடு விளையாடிக்கொண்டிருந்தவன் ம்ம் கொட்ட, “ஏன்னா…”
“சொல்லுங்க என் செல்ல மாமி”
“நீங்க இனிமேல் மதியத்துக்கு மேல ஆபீஸ் போகாதேள்”
“ஏனாம்?”
“ஆத்துகார் மேல அதிகம் பாசம் உள்ளவாளுக்கு ஆம்பள புள்ளையா பிறக்குமாம். என் சித்தி பொண்ணு கூட உம்மை பாத்துட்டே இருக்க சொன்னா”
“அதுக்கு நான் வீட்டுலயே இருக்கணுமா?” அட்டகாசமாக சிரிக்கும் கணவனை மேலும் மேலும் ரசிக்க தான் தோன்றியது.
அவள் மடியிலிருந்து எழுந்தவன், “இனி நீ நைட் தூங்குன பிறகு தான் வீட்டுக்கு வருவேன், நீ எந்திரிக்க முன்ன கெளம்பிடுவேன்” என்றான் விடாமல் பெண் பிள்ளை வேண்டும் என்கிற ஆசையில்.
“போங்கோ…”
“யாருக்கு எந்த குழந்தை பிறக்கணும்னு இருக்கோ அது தான் மாமி பிறக்கும். சும்மா ஆளுக்கு ஒரு கதை சொல்லிக்குவாங்க அவ்ளோ தான். எந்த பேபியா இருந்தாலும் சந்தோசமா வளர்க்கிறோம்”
ஆரபி சிரிப்போடு தலை அசைக்க மீண்டும் அவள் விறல் பிடித்து முத்தம் கொடுத்து உணவுண்ண அழைத்தான்.
*****
தாமோதரனால் அனாயாவின் செயலை உடனே திருத்த முடியவில்லை. இரண்டு நாட்களாக அவரும் ஏதாவதொரு காரணம் கூறி நிலையை மாற்ற எண்ண, அவள் அனுமதியின்றி எதுவும் செய்ய விடாமல் மில்லிலும் சரி அலுவலகத்திலும் சரி, அவர் பேச்சே ஈடுபடாதவாறு மாற்றியிருந்தாள்.
இரண்டு நாட்களிலும் வீட்டில் சண்டை வெடிக்கும். அனாயா மசிவதாய் இல்லை, தாமோதரனின் கோவம் நாளுக்கு நாள் பேத்தியின் மேல் அதிகரிக்க அவளுக்கு நேரடியாகவே பல மிரட்டல் விடுத்தார்.
“இன்னைக்கு நைட் மட்டும் தான் உனக்கு டைம். நாளைக்கு பத்து மணிக்குள்ள இதெல்லாம் சரி பண்ணலன்னு வை, அப்றம் என்னோட இன்னொரு முகத்தை நீ பாக்க வேண்டி வரும் அம்மணி”
“ஓ, உங்க இன்னொரு முகத்தை காட்டுறதுக்கு முன்னாடி இந்த விஷயம் கேட்டுட்டு போங்க மிஸ்டர் தாமோதரன்” அவளை முறைத்து பார்த்து நின்றார்.
“நீங்க ரொம்ப வருசமா இங்க இருக்குற எங்க யாருக்குமே தெரியாம பண்றிங்களே ஒரு இ-காமர்ஸ் சர்வீஸ்? அதை நான் கண்டு புடிச்சு பல மாசம் ஆகுது”
“இப்போ அதுக்கென்ன?”
“அதுக்கு ஆயுள் கம்மி போல மிஸ்டர் தாமோதரன். அங்க பிராண்டட் ப்ராடக்ட்ஸ் பேர் போட்டு ரொம்ப மட்டமான உங்கள மாதிரி பார்ட்ஸ் வச்சு எலக்ட்ரானிக் ஐட்டம்ஸ் விக்கிறதா நியூஸ். சந்தேகமே வேணாம்.
நான் தான் நியூஸ் விட்டேன். ப்ச் இன்டர்நெட் உலகம், ரொம்ப வேகமா இருக்கு. பார்ட்னர்ஸ் பின்வாங்குறாங்களாம், சரி இனி கெட்ட பேர் வாங்குனா நம்ம தாமோதரன் ரொம்ப வருத்தப்படுவாரேனு சரி பண்ண முடிவு பண்ணிட்டேன்” போலியான பயந்த சுபாவத்தோடு அவருக்கு அடிபணிந்து வருத்தப்பட்டாள்.
“கரெக்டான பில்ஸ் இருந்தா மனி கிளைம் பண்ணிகாலம்னு அனௌன்ஸ்மென்ட் பண்ணேன். அவ்ளோ தான் எவ்ளோ மெயில்ஸ் தெரியுமா? ப்பா இவ்ளோ கிஸ்டமர்ஸ் இருக்காங்க, பெரிய பிசினஸ் மேன் தான் நீங்க”
சம்பாதித்த கால்வாசி பணம் மட்டும் செல்லாது, அந்த தொழில் மொத்தத்தையும் மூடும் நிலை இது. ஒரு முறை நம்பிக்கை போய்விட்டால் அதன் பிறகு அவ்வ்ளவு தான் குப்புற விழுந்தாலும் எழுந்து நிற்க முடியாத அடியாக நிற்கும்.
“இதுல ஒரு சின்ன மிஸ்டேக், உங்க பேர் வெளிய வந்துடுச்சு. யாரோ சதி பண்ணிட்டாங்க. கண்டிப்பா நான் இல்லப்பா… அதை மட்டும் உங்க பவர் வச்சு அழிச்சிடுங்க” என்றாள் மிகவும் சாதாரணமாக.
அவர்கள் திட்டமே இது தான். அதாவது விஷ்ணு, பார்த்திபன், அனாயாவின் திட்டம்.
தாமோதரன் கவனத்தை கொஞ்சம் திசை திருப்ப வேண்டும். அதற்கான வேலை தான் துணி ஆலை மற்றும் அவரது தொழில்நுட்ப அலுவலக பிரச்சனை.
அதிலே கவனம் வைத்திருந்தவர் நிதானிக்கும் முன்பு மொத்த தொழிலையும் ஒரு தொழிலை வைத்து அடித்து வீழ்த்துவது. தொழில் போனால் வருமானம் இல்லை, அப்படியெல் பணம்?
மீண்டும் கீழிருந்து ஆரம்பிக்கும் அளவு வயது இல்லாதவர் கொதி நிலைக்கு சென்று பேத்தியை கை ஓங்கி அடித்திருந்தார்.
“பொட்ட கழுதை, என்ன தைரியத்துல தொழிலையே அழிச்சிட்டு வந்து அமைதியா நிக்கிற நீ?”
“அப்பா என்ன பண்றீங்க நீங்க?” அவர் மகள் வந்து பதறி நிற்க இருவரும் வழக்கம் போல் அவரை சட்டை செய்யவில்லை.
“ஏரியிதா உனக்கு? உன் பணம் உழைப்பு அதுவும் முக்கால்வாசி திருட்டு பணம் அதுக்கே ஏரியிதா? அப்போ எத்தனை குடும்பத்தை அடிச்சு பணம் பறிச்சிருப்ப அவங்களுக்கு எப்படி எரியும்? நல்லா கதறு. உன் உயிர் போகுற வரை கதறு”
“ஓ…” அவள் எண்ணம் புரிந்தது போனது அவருக்கு, “இன்னும் உன் குடுமி என் கைல தான் இருக்குன்னு மறந்துட்டு பேசுற. நாளைக்கு இதே நேரம் நீ என்கிட்ட கதறுவ பாரு”
மூச்சு வாங்க ஆத்திரத்தில் சூளுரைத்தவர் வெளியே நடக்க, “போயா” என அசட்டையாக சிரிப்போடு நகர்ந்தாள் அனாயா.
அவள் எண்ணியது ஒன்றாக இருக்க, நடக்க போவது வேறாக இருந்தது. அது தாமோதரன் வார்த்தைகளை நிஜமாக்குவது போல் அனாயாவை மொத்தமாய் அடித்து வீழ்த்த தான் போகிறதென தெரியவில்லை பாவம்.
error: Content is protected !!