Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vinmeengalin Sathiraattam

விண்மீன்களின் சதிராட்டம் – 2

அத்தியாயம் – 2

“விக்ரம், சிந்துவ எழுப்பு…”, என்ற அவன் அம்மாவின் அழைப்பில், அந்த பெயர் தெரியா பெண்ணின் முகம் தந்த மயக்கம் தெளிந்தான்.

வீடு கட்டிக்கொண்டிருப்பதால், அருகிலேயே இரு படுக்கையறை கொண்ட வீடு வாடகைக்கு எடுத்திருந்தனர். ஒரு அறையில் விக்ரமும் சிந்துவும் மெத்தையில் படுக்க, அவன் தாய் கீழே ஒரு மெத்தை விரித்து படுத்துக்கொள்வார். மற்றொரு அறை, ராகவன், மாலினி, சித்துகுட்டிக்கு. அவர்கள் இருந்த வீட்டைவிட இதுவே பெரியதுதான்.

விக்ரமிற்கு வழக்கம்போல் சென்றது வாழ்க்கை, அடுத்த இரண்டு நாட்கள். இன்னும் இன்டெர்வியு முடிவு ஒன்றும் தெரியவில்லையே என்ற ஒரு வருத்தம் தவிர்த்து, பெரிதாக ஒன்றும் இல்லை.



Advertisement

வெள்ளிக்கிழமை மாலினி, பிள்ளைகளுடன் பர்வதம் கோவிலுக்கு சென்றிருந்தார். தரிசனம் முடித்து, கோவில் சுற்றி வருகையில், திடீரென்று சிந்து முன்னே ஓடிச்சென்று, “ஹாய் அக்கா..” என்று ஒரு பெண்ணைப் பிடித்தாள். உடன் அவள் அம்மா போல் ஒரு பெண்மணி. அந்தப் பெண்ணும், இவளிடம் சிரித்துப் பேசிவது தெரிந்தது.

இவர்கள் அருகே செல்லவும், “அம்மா, அண்ணைக்கு சித்தா கூட வந்தபோது ஒரு அக்கா பார்த்தேன் சொன்னேனே. இவங்க தான். அக்கா, இவங்க என் அம்மா, அது பாட்டி, அப்பறம் என் தம்பி சித்து.”, என்று சமர்த்தாய்ச் சொன்னாள்.

“வெரி குட். அழகா அறிமுகம் செஞ்ச”, என்று மகளைப் பாராட்டிவிட்டு, “நான் மாலினி, இவங்க என் மாமியார் பர்வதம்” என்றாள்.

Advertisement

“ரொம்ப கயுட், கா உங்க பொண்ணு”, என்று சிரித்தவள், “என் பேர் வேதா, என் அம்மா,கோமதி”, என்றாள்.

Advertisement

அதற்குள், பெரியவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் அளவெடுத்திருந்தார்கள்.

“நடந்துட்டே பேசலாம் வாங்க”, என்று மாலினி வேதாவுடன் நடக்க, பெரியவர்கள் பின்னே பேசியபடியே வந்தனர். மீண்டும் சன்னிதான முகப்பை அடையும் நேரம், சீனு ஐய்யர் வந்தார்.

‘அடடே, நீங்களே பார்த்துடீங்களா, அறிமுகப்படுத்தலாம்னுதான் நானே வந்தேன்.  “, என்றவர் வேதாவிடம் திரும்பி, “செத்த நாழி, குழந்தைகளை, மண்டபத்தில் விளையாடவிடும்மா, இவாகிட்ட பேசிட்டு அனுப்பிடறேன்”, என்றார். அவளும், சிந்துவையும் சித்துவையும் அழைத்துச் சென்றாள். அக்கா இருந்ததால், சித்துவும் சமர்த்தாக சென்றான்.

Advertisement

மாலினிக்கு ஏதோ பொறி தட்டியது, ஆனாலும் நடப்பதை கவனிக்கலானாள்.

சீனு ஐய்யர்,” நான் நேரவே சொல்லிடறேன், அண்ணைக்கு அம்மன் சன்னிதானத்தில் சிந்து, உங்க பொண்ணைக் காட்டி, இவங்க சித்தியாக ஒக்கேவான்னு கேட்டது, எனக்கு என்னவோ அந்த அம்பாளே சொன்னதுபோலதான் பட்டது. இவங்களும் உங்களவாதான். ரெண்டு குடும்பமும் நேக்கு பழக்கம்தான். பொண்ணு, பிள்ளை, ரெண்டு பேர் ராசியும் நல்லாப் பொருந்தறது. அதான் உங்களை அறிமுகப்படுத்தி, பேசச் சொல்லலாமேன்னு பார்த்தேன்.” என்று நிறுத்தினார்..

திடீரென்று, இப்படி சொல்லவும், “இன்னும் பொண்ணுக்கு ஒரு வருஷம் படிப்பு இருக்குங்களே..” , என்று கோமதியும்,

“அவனுக்கு 27 தான் ஆகுது, இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும் நெனச்சோம்”, என்று பர்வதமும் இழுத்தார்கள்.

“உடனே சொல்லணும்னு இல்லை. இரண்டு பேருக்குமே அவசரமில்லை. நீங்க யோசிச்சு, ஜாதகமெல்லாம் பொருந்தி வந்து, எல்லாம் ஒத்துவருதா பாருங்கோ. சில சமயம், வரன் சட்டுன்னு எதிர்பாராம தகஞ்சிடும். சிலருக்கு, வருஷ கணக்குல இழுக்கறதும் பார்க்கறோம். நேக்குப் பட்டதைச் சொன்னேன். அம்பாள் அனுக்ரஹம் ரெண்டு பேருக்குமே இருக்கும்.”, என்று கும்பிட்டு கிளம்பிவிட்டார்.

பழுத்த பழமான சீனு அய்யர், இப்படிச் சொல்லிவிட்டுப் போனது இரு அம்மாக்களின் மனதிலும் ஓடியது. அப்படியெல்லாம் லேசில் வந்து சொல்பவரில்லை சீனு அய்யர். அதனால் உடனே ஒதுக்க முடியவில்லை. பெண்ணும் நல்ல நிறமாக, திட்டமான அளவில் அழகாகத்தான் இருந்தாள். விக்ரமும் மா நிறம் என்று சொல்ல முடியாத அளவிற்கு கொஞ்சம் கலராகத்தான் இருப்பான். அவனைப் போல இவளும் படித்தவள். மொத்ததில்,  விக்ரமுக்கு பொருத்தமாக இருப்பாள். இருக்கும் பணப்பிரெச்சனையில் இப்போது எப்படி திருமணம் செய்வது என்று எண்ணம் ஓடியது பர்வதம்மா மனதில்.

கோமதிக்கும், “பிள்ளை நன்றாகத்தான் இருந்தான், நல்ல படிப்பும் கூட. அப்போ வேலையும் அதற்கேத்தாற்போலதான் இருக்கும். நம்மது மாதிரியே சின்ன குடும்பம் போல. இவ படிப்ப முடிக்கறவரைக்கும் இருப்பாங்க போலவே, உடனே அவங்களுக்கும் செய்யற எண்ணம் இல்லை.” என்று எண்ணம் ஓடியது.

கோமதியே, “ஐய்யர் இப்படி சொன்னதும், தட்ட மனசு வரலை. நாம ஜாதகம் வேணா பாக்கலாமா ?, பொண்ணு படிப்பு முடிஞ்சதும், நாள் குறிச்சிக்கலாம் ”, என்று முதல் காயை நகர்த்தினார்.

பர்வதமோ, பொருந்தி வந்தால், பொருத்தும் வருவார்கள் என்பது தன் எண்ணத்திற்கும் பொருந்தி வருவதால் மகிழ்ச்சி அடைந்தவர், அதனை முகத்தில் காட்டாமல்,

“அதான் நானும் யோசிக்கறேன். நீ என்ன சொல்ற மாலினி ? “, என்று மருமகளை பேச்சில் இழுத்தார். பர்வதம்மாவின் எண்ணம் எப்படிப் போகும் என்று அறிந்த மாலினியும், “ உங்க பெரிய பிள்ளையை கேக்கணுமே அத்தை”, என்று வாய்தா வாங்கினாள். ராகவனைவிட, விக்ரமிற்கு தெரியவேண்டும் என்று நினைத்தாள். கோமதியம்மாவிற்காகவே அவன்  வேண்டாம் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

கோமதியோ, “ஆமாம், நானும் என் வீட்டுக்காரரையும், பிள்ளையையும் கேக்கணும்.” என்று, தானும் சளைத்தவரில்லை என்று காண்பித்தவர், தன் அலைபேசியை மாலினியிடம் தந்து, “உன் நம்பரை இதுல சேவ் பண்ணி, என்னுதையும் நீ எடுத்துக்கோமா.  நான் போய் ஐய்யரைப் பார்த்து, ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்து வந்தா, எண்ணைக்கு ஜாதகம் எடுக்கறதுன்னு கேட்டுட்டு வரேன், என்று ஐய்யரைத் தேடிச் சென்றார்.

அதற்குள், பர்வதம், தன் மனதில் ஓடியதை மாலினியிடம் கூறினார். அதைத்தான் அவள் ஏற்கனவே கணித்திருந்தாளே. “அவசரப்படவேண்டாம் அத்தை. விக்ரமுக்கு பிடிக்கணும். வேதாவுக்கும் பிடிக்கணும். பார்த்து செய்யலாம்”, என்றாள், அவள் அலைபேசியிலும், கோமதியின் அலைபேசியிலும் நம்பர்களைப் பதிவு செய்தவாறே.

தன் இரெட்டை நாடி சரீரத்தை தூக்கியபடி திரும்பி வந்த கோமதி, “ இரெண்டு பக்கமும் சரின்னா, வர ஞாயிறு பத்துமணிக்கா வந்தா, இரெண்டு ஜாதகத்தையும் அம்மன் பாதத்தில் வெச்சி பூஜை பண்ணிடலாம்னு சொன்னார். நம்ம வீட்ல பேசுவோம். மாலினி, சனிக்கிழமை சாயந்திரமா நீ போன் பண்ணுமா. சரின்னா, ஐயர்கிட்ட அப்பறம் சொல்லிக்கலாம் என்றார்.

இது ஒரு வகையான ப்ரொடொகால். அரசாங்க ப்ரொடொகால் தோற்றுவிடும் இதன் முன்னால். நான் சென்று ஐய்யரிடம் பேசி வந்து என் ஆர்வத்தைக் காட்டிவிட்டேன். அடுத்தது உங்கள் முறை என்று சொல்லாமல் சொன்னார். அவள் கல்யாணத்தில் இதையெல்லாம் அனுபவப்பட்டதில், அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டாள்.

வீட்டுக்குப் போனதும், ஐய்யருக்கு போன் போட்டு, குடும்பத்தைப்பத்தி விசாரிக்கணும் என்று இரு அம்மாக்களும் ஒரே மாதிரி யோசித்தார்கள்.

சனிக்கிழமை காலை, கணவனும் மகளும் அலுவலகம், பள்ளி என்று சென்றபின், பொறுமையாக மாமியாருடன் காலை உணவருந்த அமர்ந்தாள் மாலினி. அவளுக்கு சனிக்கிழமை அலுவலகம் இல்லை. விக்ரம் சில நேரம் வேலையைப்பொருத்து செல்வான். இன்று, சிந்து பள்ளி முடிந்து, அவனே கூட்டி வருவதாக இருந்ததால், அந்த வேலையும் மிச்சம். மெதுவாக சமையல் ஆரம்பித்தால் போதும்.

“நேத்து பேசினியா மாலினி ராகவங்கிட்ட ? என்ன சொன்னான் ?”, என்று ஆரம்பித்தார். நேற்று, விக்ரம் சீக்கிரமே வீட்டிற்கு வந்ததால் அவன் எதிரில் பேசவேண்டாம் என்று மாலினியை விட்டு ராகவனிடம் இரவு பேசச் சொல்லியிருந்தார்.

தரையில், பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த மகனின் மேல் ஒரு கண் வைத்தவாரே, “சொன்னேன் அத்தை. விக்ரம்கிட்ட சொல்லாம எதுவும் செய்யக்கூடாதுங்கறார். ஜாதகம் பொருந்தி வந்தா சொல்லலாம்னு நீங்க சொல்றதை அவர் ஒத்துக்கலை. ஜாதகம் பொருந்தி, இவன் வேணாம்னு சொல்லிட்டா, அது எல்லாருக்கும் வருத்தமாயிடும், அந்த ரிஸ்க் வேணாம். இப்பவே அவன் முடியாதுன்னா, இல்லை யோசிச்சி பார்த்தோம், முடிவு பண்ணிட்டு ஒரு வருஷம் கழிச்சி பண்றதெல்லாம் சரிப்படாதுன்ற மாதிரி முடிச்சிடலாம்னார். மதியம் சாப்பிட்டதும் அவனையும் வெச்சி பேசுவோம்னார்.” என்று முடித்தாள் மாலினி.

“ம்ம்..அதுவும் சரிதான். சீனு ஐய்யர், அவங்க குடும்பத்தை பத்தி சொன்ன தகவல் எல்லாம் சொன்னியா ?”, அடுத்த கேள்வியைத் தொடுத்தார்.

“வேதா அப்பா BSNLல சீனியர் ஜி.எம்மா இருந்து வாலன்டரி ரிடயர்மென்ட் வாங்கினத சொன்னதும், இவருக்கு தெரிஞ்சவர் BSNLல இருக்காராம். விசாரிக்கறேன்னார். அவ அண்ணண் இராஜேந்திரன், பில்டிங் மெடெரியல்ஸ் சப்பிளை பண்ற கடை பேர சொன்னதுமே அவருக்கு தெரிஞ்சது. இவர் பிரண்டு ப்ரவீண் பில்டர் தானே, அவருக்கு இராஜேந்திரனோட தொழில் பழக்கமாம். விக்ரம் சரின்னா மேற்கொண்டு விசாரிச்சு சொல்றேன்னார். “

“சரி, மத்தியானம் வரட்டும் பேசுவோம்.” என்று முடித்தார்.

மதியம் ஆடிட்டர் ஆபிஸிலிருந்து கிளம்பி, சிந்துவின் பள்ளி வாசலில் அவளுக்காகக் காத்திருந்தான் விக்ரம். மனதிற்குள், நேற்று சிந்து அவள் கோவிலில் அக்காவைப் பார்த்து அவளோடு விளையாடிக்கொண்டிருந்ததைப்பற்றி பேசியது அவன் மனதில் ஓடியது.

அண்ணியும் அவன் அம்மாவும் வேறு அவள் அம்மாவோடும் சீனு ஐய்யறோடும் பேசிக்கொண்டிருந்தார்களாம். மீண்டும் எதுவும் பஞ்சாயத்தோ என்று பயந்தான். ஆனால் அவன் அம்மாவோ, அண்ணியோ இவனை எதுவும் கேட்கவில்லை. இவனாகப் போய் விசாரிக்கவும் தயக்கமாக இருந்தது.

சிந்து பயங்கர குஷியாக ஓடி வந்தாள். “சித்தா, இண்ணைக்கு மாத்ஸ் டெஸ்ட் வெச்சாங்க, நான் எல்லாம் கரக்டா எழுதினேன். மிஸ் எனக்கு ஸ்டார் குடுத்தாங்க. நீ எனக்கு என்ன தருவே ?”, என்று கேட்டாள். “

அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றியவன், “ சூப்பர் குட்டிமா..ஐபாக்கோ போலாமா?”, என்று கேட்டான்.

இரட்டிப்பு சந்தோஷம் அவளுக்கு. ஆவலுடன், விக்ரமின் பைக்கில் அமர்ந்துகொண்டாள்.

கடைக்குள் நுழையும்போதும் சலசலத்துக்கொண்டே வந்தாள். உள்ளே வந்ததும், சிந்து நேரே ஐஸ் கிரீம் வகைகளைப் பார்க்கப் போக, இவன் பொறுமையாக பின்னே வர, மூலையில் இருந்த ஒரு பெண் கண்ணில் பட்டாள். அவன் கோவிலில் பார்த்த அந்தப் பெண் ஒரு டேபிளில் அமர்ந்து போனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மனது பரபரத்தது.

“ஆஹா, இங்க தனியா என்ன பண்றா ? யாருகோ காத்திருக்கா போலவே ? பேசுவோமா ?”, என்று எண்ணம் ஓடியது. சிந்துவோ, கவனம் முழுதும் கண்ணாடிப் பேழைக்குள் இருக்கும் வகைகளை பார்ப்பதிலேயே இருந்தது.

“ம்க்கும்…அரை மணி  நேரம் யோசிச்சாலும் கடைசில, எப்பவும் வாங்கற அதே ஸ்ட்ராபெர்ரிதான் சொல்லுவா. இதுக்கு எதுக்கு இவ்ளோ சீனு ? இப்ப இந்த வாலு அந்த பொண்ண பார்த்தாதான், நாம பேச முடியும். நாம பார்த்து இவளுக்கு காட்டினா, வீட்ல போய் போட்டுகுடுத்தாலும் குடுத்துடும்.. என்ன பண்ணலாம் ? ”, என்று தீவிரமாக யோசித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!