Skip to content
Post Views: 8,953
அத்தியாயம் – 2
சந்தியா ஸ்கூட்டியை பிரேக் போட்டதும் கௌரி அவளிடம், “என்ன ஆச்சு சந்தியா? பாம்பா, பல்லியா ? என்ன குறுக்கால போச்சு”
“ஏண்டி. நா முத முதல்ல சைட் அடிச்சவருக்கு கல்யாணம் ஆயிடுச்சேன்னு அதிர்ச்சில வண்டிய நிறுத்துனா, நீ என்ன கேள்வி கேட்டுட்ருக்க.”
முத முதல்லவா என்று யோசித்தபடியே “ஆதி அண்ணாக்கு டைவர்ஸும் ஆயிடுச்சு” என்று அசால்ட்டாக அடுத்த வெடியை வீசினாள் கௌரி.
Advertisement
“என்ன டைவர்ஸா. ஏன் கௌரி ?”
“காரணம்லாம் தெரியல சந்தியா. பெரியவங்களுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்” என்று கௌரி சொன்னதும் பெருமூச்சுடன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள் சந்தியா.
“சரி, உன் பெரியப்பாக்கு ஒரு பையன் தானா?”
Advertisement
“இல்ல சந்தியா. இன்னொரு பையன் இருக்கான். அருண். அவன் கூட உன்னோட கிளாஸ் தான். நான்தான் உனக்கு இன்ட்ரோ குடுக்க மறந்துட்டேன்”
Advertisement
இப்பொழுதுதான் அவள் கிளாசில் பாய்ஸ் அவளிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வதற்கான காரணம் சந்தியாவிற்கு தெரிந்தது. நான்காவது வருடமாக இருந்தாலும், முதல் நாள் வருவதால் ராகிங் எதும் செய்வார்களோ என்று நினைத்து கொண்டேதான் கல்லூரிக்கு வந்தாள் சந்தியா. ஆனால் பெண்கள் அவளிடம் நட்பாகவும், ஆண்கள் மரியாதையாகவும் நடந்தனர்.
என்னடா இது. தமிழ்நாட்டு பசங்க இவ்வளவு நல்லவங்களா என்று சந்தியா கூட ஆச்சரிய பட்டு கொண்டிருந்தாள். இன்னும் சில விஷயங்கள் பற்றி கௌரியிடம் கேட்டு தெரிந்து கொண்டாள்.
காலேஜ் வந்ததும் அருணும் அவன் நண்பர்களும் மரத்தடியில் அமர்ந்திருப்பதை பார்த்த சந்தியா, “கௌ அங்க பாரு. என் கிளாஸ் பசங்க இருக்காங்க. அதுல அருண் இருக்கானா”
Advertisement
“ம் ப்ளூ செக்ட் ஷர்ட் போட்டிருக்கான் பாரு. அவன்தான்”
“சரி வா. பேசிட்டு வரலாம்”
“ஐயையோ. பசங்க கும்பலா உக்காந்து அரட்டை அடிச்சிட்டு இருக்காங்க. இப்ப போனா திட்டுவான்”
“அடச்சீ. இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு. வாம்மா” என்று அவளை இழுத்து போனாள் சந்தியா.
அவர்கள் தங்களை நோக்கி வருவதை பார்த்த அருண் எழுந்து வந்து “என்ன கௌரி? என்றான்.
“சந்தியா உன்ன யாருன்னு கேட்டுட்டு இருந்தா. அதான் இண்ட்ரோடியுஸ் பண்ணிவிடலாம்ன்னு கூட்டிட்டு வந்தேன்”
“ஏ குள்ள கத்திரிக்கா. அதுக்கு இங்கதான் வரணுமா. வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கலாம்ல “
அதற்கு சந்தியா “உங்களை மட்டும் பாக்க வரல அருண். உங்க பிரன்ட்ஸோடையும் அறிமுகம் ஆகிக்கலாம்னுதான் இங்க வந்தேன்” என்றவளை ஒரு மாதிரி பார்த்தவன் “அதுக்கு கிளாஸ் ரூம்ல பாத்து பேசிக்க. இப்ப கிளம்புங்க”
“ஏன் கிளாஸ் ரூம்ல பேசறத இங்க பேசுனா என்ன. நீங்களும் சும்மா பேசிட்டுதான இருக்கீங்க அதும் காலேஜ் கேம்பஸ்ல. என்னமோ நீங்க கள்ள கடத்தல் பண்ற இடத்துக்கு நா வந்த மாதிரி பில்ட் அப் கொடுத்துட்ருக்கீங்க”
“ஓ தாராளமா நீ போய் பேசிக்க. என் தங்கச்சிய எதுக்கு கூட்டிட்டு வந்த ” என்றான்.
“அவ உனக்கு மட்டும் தங்கச்சி கிடையாது. எனக்கும் அத்தை பொண்ணுதான்”
“தோடா. நேத்து வந்துட்டு அத்தை பொண்ணுன்னு சொந்தம் கொண்டாடிட்டு இருக்கிறத”
“ஹலோ. நேத்து வந்த சொந்தம் கிடையாது. எங்க அப்பாவும் அவ அம்மாவும் ஒண்ணா பொறக்கும்போதே வந்த சொந்தம். இன்னும் சொல்லப்போனா நீதான் லேட்டா வந்த சொந்தம்”
அட கெரகம் புடிச்சவிங்களா. ரெண்டும் இடையில என் தலைய உருட்டிட்டு கிடக்குதுங்களே. இந்த அருணு என்ன அப்படி போட்டு குட்டி வைப்பான். பெரியம்மா எனக்கு ஒன்னு செஞ்சிட்டா போட்டிக்கு கிளம்பி வந்துடுவான். இன்னைக்கு பாத்தியா பாசத்தை, என்று நினைத்து கொண்டே “ரெண்டு பெரும் முதல்ல நிறுத்துங்க. பாத்த அன்னைக்கே இப்படி சண்டை போட்டுகிறீங்க” என்றாள்.
அவளை பார்த்த சந்தியா “நீ கிளாசுக்கு போ கௌ” என்று சொல்லிவிட்டு நேராக அருண் நண்பர்கள் அமர்ந்த இடத்திற்கு சென்றாள்.
கௌரியும் விட்டால் போதும் என்று கிளம்பிவிட்டாள். அருணும் இவ என்ன பேசறான்னு பாப்போம் என்று சந்தியாவின் பின் சென்று நின்றான்.
“ஹாய் பிரெண்ட்ஸ். நா சந்தியா. இப்பதான் புதுசா உங்க கிளாஸ்ல ஜாயின் பண்ணிருக்கேன். அதான் உங்ககிட்ட இண்ட்ரோடியுஸ் பண்ணிக்கிலாம்ன்னு வந்தேன்” என்றதும் முதலில் முழித்தவர்கள் பிறகு நார்மலாக தங்களை அறிமுக படுத்தி கொண்டார்கள்.
அதில் கௌசிக் என்று தன்னை அறிமுக படுத்தி கொண்டவனை பார்த்து “கௌசிக் பத்து நாள் நா லேட்டா ஜாயின் பண்ணதால எனக்கு நோட்ஸ்லாம் தேவைப்படும். உங்க நோட்ஸ் நீட்டா இருக்கும்ன்னு பிரண்ட்ஸ்லாம் சொன்னாங்க. கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா” என்றாள்.
“ஷ்யூர் சந்தியா. இன்னைக்கு கைல இருக்க நோட்ஸ் ஈவினிங் தரேன். பேலன்ஸ் நாளைக்கு எடுத்து வந்து தரேன்”
“ஓகே கௌசிக். தேங்க்ஸ். பை பிரண்ட்ஸ்” என்று கிளம்ப போனவளிடம் சரத் என்பவன்
“ஏனுங் சந்தியா. கௌசிக்கோட மட்டும்தேன் பேசுவிங்கலாங்?”
“என்ன இப்படி கேட்டுட்டீங்க. நா எல்லார்க்கிட்டையும் நல்லாத்தான் பேசுவேன். நீங்கல்லாம்தான் என்னட்ட பேசவே இல்ல. சரி கோயம்புத்தூர் பசங்க ரொம்ப அமைதியான பசங்க போலன்னுதான் நா பேசல”
“அட என்ன இப்படி சொல்லி போட்டிங். புதுசா வந்த புள்ள பயந்து போட கூடாதேன்னுதான் நாங்கல்லாம் பொட்டாட்ட இருந்தோம்ங். இனிமேட்டு பாருங். எப்படி பேசறோம்ன்னு”
“ஓகே சரத். ரொம்ப சந்தோஷம். கிளாஸ்ல பாக்கலாம்” என்று கிளம்பியவளிடம் கௌசிக் “உன் பெர்ஸன்டேஜ் என்ன சந்தியா?” என்றான்.
சந்தியா கூறியதும் “ஓ என்னோட த்ரீ பெர்ஸன்டேஜ் கூட”
“அதுக்கு”
“இதுவரை நம்ம கிளாஸ்ல எனக்கு போட்டி இல்ல. இப்ப போட்டிக்கு நீ வந்துட்ட” என்று சிரித்தவனை பார்த்து சிரித்து கொண்டே “ஆல் தி பெஸ்ட் கௌசிக்” என்று கிளம்பினாள்.
அவளோடு சேர்ந்து நடந்த அருண் “ஏன் என்னட்டலாம் நோட்ஸ் வாங்கி எழுத மாட்டியா”
“நீ நிறைய அரியர் வச்சுருக்க. உன் ஹேண்ட் ரைட்டிங் மகா மட்டம் அப்படின்னு கேள்வி பட்டேன். அதான் உன் நோட்ஸ் வாங்கல”
“யாரு அந்த குள்ள கத்திரிக்கா கௌரி சொன்னாளா”
“யாரு சொன்னாங்கிறது முக்கியம் இல்ல தம்பி. உண்மையா இல்லையா?”
“ஏய் என்ன தம்பிங்கற . நா உனக்கு மச்சான் முறையாகணும்” என்று சட்டை காலரை தூக்கி விட்டவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவள்,
“நீ அந்த அளவுக்கு ஒர்த் இல்ல அருண்” என்று சொல்லிவிட்டு வகுப்பறைக்கு சென்று விட்டாள்.
அன்று முழுவதும் அவளை முறைத்து கொண்டே சுற்றி கொண்டிருந்தவன், வீட்டிற்கு சென்றும் கடுப்பிலேயே திரிந்தான்.
டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்தவன் ஹாட் பேகில் இட்லி இருப்பதை பார்த்து “அம்மா அம்மா” என்று அலறினான்.
அடுப்படியிலிருந்து வந்த அவன் அம்மா சிவகாமி “என்ன கண்ணு” என்றபடி அவன் பக்கத்தில் அமர்ந்து இட்லியை தட்டில் எடுத்து வைத்தார்.
“என்னங்ம்மா. இன்னைக்கும் இட்லி தானா. ஒரு தோசையாவது செய்யலாம்லங்ம்மா”
இரவில் இட்லி, இடியாப்பம் என்று எளிதில் செரிக்க கூடிய உணவுதான் செய்ய வேண்டுமென்பது ஆதியின் ஆர்டர். காலையில் சிறுதானியங்களில் டிபன், மதியம் தீட்டாத பாரம்பரிய அரிசி வகை சாதம். இதெல்லாம் அவ்வப்பொழுது சமைக்க பட வேண்டும் என்பது ஆதியின் விருப்பம்.
“அந்தியானா உன்ர கூட ஒரே ஓரியாட்டம்தேன் கண்ணு” என்று சிவகாமி கூறி கொண்டிருக்கும் போதே ஆதி மேலிருந்து கீழே இறங்கி வந்தான்.
இரண்டு அடுக்குகளை கொண்ட பெரிய மாளிகை அது. காம்பவுண்ட் கேட்டை திறந்து உள்ளே சென்றால் வீடு வாயிலின் இருபுறமும் தூண்களை கொண்ட நீண்ட தாழ்வாரம். நிலைவாசலை தாண்டி உள்ளே சென்றால் பெரிய ஆசாரம். அடுத்த கட்டில், ஒரு திருமணம் நடக்குமளவுக்கு பெரிய முற்றம். அதை சுற்றிலும் பெரிய வராண்டாக்கள், அதில் ஒருபுறம் சோஃபாக்கள், இன்னொருபுறம் ஊஞ்சல். அங்கிருந்தே மாடிக்கு செல்ல மரத்தாலான படிகள். வராண்டாக்களின் பின்புறம் வரிசையாக அறைகள். அடுத்த கட்டில் அடுப்பங்கரை, அதை ஒட்டிய டைனிங் ஹால்,ஸ்டோர் ரூம். பின்புறம் பெரிய மாட்டு தொழுவம்.
அதில் காங்கேயம், புளிங்குலம் காளைகள், உம்பளச்சேரி மாடுகள் என நாட்டு மாட்டு வகைகளை தேடி பிடித்து வாங்கி வளர்த்து வருகிறான் ஆதி. கலப்பின வகைகளும் அங்கு உண்டு.
அம்பலவாணன் ரங்கநாயகி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள். முதலில் ஈஸ்வர மூர்த்தி அவரின் மனைவி சிவகாமி. அவர்களின் மூத்த மகன் ஆதித்யன், இளைய மகன் அருண்.
அடுத்தது பரிமளவல்லி அவரின் கணவர் தில்லைநாயகம். அவர்களுக்கு இரு மகள்கள் சுதா மற்றும் சுகந்தி.
அடுத்தது சுந்தர மூர்த்தி அவரின் மனைவி சித்ரா. அவர்களுக்கு ஒரே மகள் கௌரி.
வயதானவர்கள் இருந்தவரை ஒரே வீட்டில்தான் அண்ணன், தம்பி குடும்பத்தினர் வசித்து வந்தனர். அவர்கள் இறந்ததும் சித்ரா தனியே இருக்க ஆசைப்பட்டதால் பக்கத்து தெருவில் இருக்கும் வீட்டில் தங்கி கொள்ள சொல்லி விட்டனர்.
பரிமளவல்லி அத்தையை பொள்ளாச்சி அருகில் உள்ள கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். அவரின் மூத்த மகள் சுதாவைத்தான் ஆதிக்கு திருமணம் செய்தனர். அதுவும் இரண்டே வருடங்களில் முடிவுக்கு வந்துவிட்டது. இப்பொழுது ஆதிக்கு இருபத்தொன்பது வயதாகிறது.
ஆதியின் முடிவைத்தான் அவர்களின் வீட்டில் பெரும்பாலும் செயல்படுத்துவது. அவனின் படிப்பு, அருண் கௌரியின் படிப்பு, கல்லூரி அனைத்தும் ஆதியின் முடிவுதான். குடும்பம் பிரிய கூடாது என்று அவனின் தந்தையும், சிறிய தந்தையும் பிடிவாதமாக இருந்த போது, சிற்றன்னையின் ஆசைக்காக சிறிது காலம் தனியாக இருக்கட்டும் என்று அவர்களை தனியாக வைத்தான்.
மெடிசின் கிடைக்குமளவுக்கு பிளஸ் டூவில் மதிப்பெண் எடுத்திருந்தவன், விவசாய கல்லூரியில் சேர்ந்து அக்ரி படித்தான். அப்பொழுதே அவன் தந்தையிடம் இருந்து சிறிது நிலத்தை வாங்கி இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டான்.
விவசாயத்தில் பி.ஹெச் டி வரை முடித்தவன், இப்பொழுது அவர்கள் நிலங்களில் முழுவதுமாக இயற்கை விவசாயம் தான் செய்கிறான்.
நிறைய பாரம்பரிய அரிசி வகைகளை மீட்டெடுத்திருக்கிறான். அந்த விதைகளை இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கி பயிற்சியும் கொடுக்கிறான். அதுபோக அரிசி ஆலை , சர்க்கரை ஆலை வைத்திருக்கிறான்.
சுற்றியுள்ள ஊர்களில் இவன் பிரபலம். இவனை மீறி இவன் ஊரில் யாரும் நிலங்களை விற்கவோ, பிளாட் போடவோ முடியாது. இப்படி மக்களுக்கும், இயற்கைக்கும் பயனுள்ள வகையில் வாழும் ஆதித்யனுக்கு, அவன் திருமண வாழ்வுதான் முதல் சறுக்கல்.
மாடியில் இருந்து இறங்கி வந்த மூத்த மகனை வருத்தத்துடன் பார்த்து கொண்டிருந்தார் சிவகாமி. ஏற்கனவே அமைதிதான் ஆதி. திருமண வாழ்வின் சறுக்கலுக்கு பிறகு முற்றிலும் இறுகி விட்டான்.
சேரில் வந்து அமர்ந்தவன் “என்ன அருண். ஏதோ சத்தம் கேட்டுச்சு” என்றான்.
“ஒண்ணுமில்லீங்ண்ணா . இட்லி நல்லாருக்குன்னு அம்மாட்ட சொல்லிட்டுருந்தேனுங்”
அருணை பார்த்து சிரித்து கொண்டே ஆதிக்கு இட்லி எடுத்து வைத்தார் சிவகாமி. அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான் ஆதி. இன்னொருபுறம் இட்லியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த சின்ன மகனிடம்
“என்ன கண்ணு. சாப்புடாம என்ன பண்ணிட்ருக்க. டீச்சர் எதும் அடிச்சு போட்டாங்களா”
“ம்மா…..”
“பின்ன என்ன கண்ணு. நானும் பொழுதோட பிடிச்சு பாக்குறேன். சடவு பிடிச்சு திரிஞ்சுட்ருக்க”
“இல்லிங்ம்மா. இந்த குள்ள கத்திரிக்காவோட மாமன் பொண்ணுன்னு ஒரு புள்ள ஊருக்குள்ள வந்துருக்குதுள்ளங்”
“ஆமா. புள்ள நல்லா லட்சணமா இருக்குமாட்ருக்கு. சித்ரா சொன்னா. ஏன் கண்ணு?”
“லட்சணத்துக்கு ஒன்னும் கொறச்சல் இல்லிங்ம்மா. ஆனா நெம்ப திமிருங்ம்மா” என்று இன்று கல்லூரியில் நடந்ததை சிவகாமியிடம் கூறினான்.
“புள்ள நல்ல வெவரமாட்டமிருக்கு” என்று கூறியவரை முறைத்தான் அருண்.
“பின்ன என்ன சாமி. அது பெங்களூர்ல பிறந்து வளந்த புள்ள. எல்லார்டையும் சரிக்கு சமமா பேசுது. அப்புறம் நீ எழுதுனது சமயத்தில உனக்கே புரியாதில்லோ. அதான் உன்ரகிட்ட நோட்டு வாங்காம நல்லா படிக்கிற புள்ளையா பாத்து கேட்ருக்கு ” என்றவரை முறைத்தான். இது எதையும் கண்டு கொள்ளாமல் ஆதி சாப்பிட்டு எழுந்து சென்றான்.
இது அவர்கள் வீட்டில் அன்றாடம் நடப்பதுதான். அருண் சிவகாமிக்கு மிகவும் செல்லம். சிறு வயதிலிருந்தே வெளியில் நடந்ததை ஒன்று விடாமல் தாயிடம் ஒப்பித்து விடுவான்.
எப்பொழுதும் ஆதி பெரிய மனித தோரணையில் இருப்பான். அவனை நெருங்க முடியாது. அதனால் அருணும் கௌரியும் எல்லோருக்கும் செல்லம். ஆதியை விட இருவரும் ஏழு, எட்டு வயது இளையவர்கள் என்பதும் ஒரு காரணம்.
இப்பொழுது ஆதி சென்றதும் அருண் சிவகாமியிடம் “என்ன மச்சான்னு கூப்பிட மாட்டேன்னுட்டுங்ம்மா” என்றான். அவனின் தலையில் கொட்டி ஒழுங்காக சாப்பிட சொன்னார்.
பிள்ளைகள் சாப்பிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த வீட்டின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி வீட்டிற்கு வந்தார். பகலில் தோப்பு துரவுகளை பார்ப்பவர் மாலை நேரங்களில் ஊரின் பஞ்சாயத்துக்களை பார்ப்பது, கோயில் நோம்பு, நல்லது கெட்டதுகளை பொறுப்பெடுத்து நடத்துவது என்று வெளியில் சென்று வருவார்.
error: Content is protected !!