Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்கள் வாடுவதில்லை 2

அங்கு கியூ பெரிதாக இருந்ததால்தான், அஞ்சனா இவளிடம் பில்லைக் கொடுத்துவிட்டு சென்றிருந்தாள்.  இது அஞ்சனாவின் தாய்மாமா செல்வதுரையின் கடை.  அவர்தான் அங்கு நின்று தங்கை மகளை பார்த்துகொண்டிருந்தது.

ஆம்.  ரோகிணியின் கூடப் பிறந்த அண்ணன்தான் செல்வதுரை.  அஞ்சனா பிறந்து ஒருசில வருடங்கள் வரை ஒன்றாக இருந்த அவர்களது உறவு, அதன்பிறகு பிரிந்திருந்தது.

பெரியசாமி காந்திமதி தம்பதியருக்கு பிறந்தவர்கள்தான் செல்வதுரையும், ரோகிணியும்.  ரோகிணிக்கும் செல்வதுரைக்கும் பத்து வயதுக்குமேல் வயது வித்தியாசம் இருந்தது.

ரோகிணி தன் பதின்ம பருவத்தில் இருக்கும் போதே, செல்வதுரைக்கு திருமணம் முடிந்திருந்தது.  செல்வதுரையின் மனைவியின் பெயர் மீனா.  செல்வதுரை ரோகிணி குடும்பத்தைப் போலவே, மீனாவின் குடும்பமும் செல்வந்தர்கள்.



Advertisement

மீனாவின் பெற்றோருக்கும் இரண்டு பிள்ளைகளே.  மீனாவும், அவரது தம்பி திருநாவுக்கரசுவும்.  ரோகிணி நல்ல அழகி.  திருநாவுக்கரசு என்று ரோகிணியை பார்த்தாரோ….., அன்றிலிருந்து அவரை மனதார விரும்ப ஆரம்பித்திருந்தார்.

ஆனால். அவரது ஆசையை வீட்டில் யாருக்கும் சொல்லவில்லை.  ஏன் ரோகிணிக்குகூட தெரியப்படுத்தவில்லை.  மனதிற்குள்ளேயே பூட்டி வைத்திருந்தார்.  சமயம் வரும்பொழுது வீட்டில் சொல்லி திருமணம் செய்துகொள்ளவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தார்.

திருநாவுக்கரசு வியாபார விஷயமாக வெளிநாடு சென்று வருவதற்குள், இங்கு ரோகிணிக்கு வரன் பார்த்து நிச்சயமே முடிந்திருந்தது.  வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து இந்த செய்தியை கேட்ட திருநாவுக்கரசுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

Advertisement

உடனே வீட்டில் தனது விருப்பத்தை கூறி, தனது அக்கா மீனாவிடமும் பேசி ரோகிணியின் பெற்றோரிடம் வந்து பெண் கேட்டனர்.  ரோகிணியின் பெற்றோருக்கு ஒன்றும் சொல்ல முடியா நிலை.  அவர்களுக்கு திருநாவுக்கரசுவைப் பற்றி நன்கு தெரியும்.  நல்ல பையன்.  அவனுக்கு தங்களது பெண்ணை கொடுப்பதற்கு அவர்களுக்கும் சந்தோஷமே.  ஆனால் இன்னொரு இடத்தில் நிச்சயம் செய்தாகிவிட்டதே என தயங்கினார்கள்.

Advertisement

மீனாதான் மாமனார் மாமியாரை சரிகட்டி, இப்பொழுது நிச்சயம் செய்த மாப்பிள்ளை வீட்டில் நிலைமையை எடுத்து சொல்லி பேசினால் புரிந்து கொள்வார்கள்.  ரோகிணியை திருவுக்கே கட்டிக் கொடுத்துவிடலாம் என பேசி வீட்டினரை சம்மதிக்க வைத்து, ரோகிணிக்கு நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளை வீட்டிலும் பேச முயன்றார்.

இவர் எத்தனை பிரயத்தனப்பட்டாலும், ரோகிணி திருவை கட்டிக்கொள்ள வேண்டுமே.  அவருக்கு வீட்டினரின் செய்கையில் குழப்பமே.

திருநாவுக்கரசு முன்னமே வீட்டில் தனது விருப்பத்தை சொல்லாததற்கு காரணம் இருந்தது.  ரோகிணிக்கு அப்பொழுது இருபது வயதுதான் நடந்து கொண்டிருந்தது.  எனவே ரோகிணியின் வீட்டினர் அவரது திருமணத்திற்கு, இன்னும் இரண்டு வருடம் போகட்டும் என பேசிக் கொண்டிருந்தனர்.

Advertisement

ஆதலால்தான் திருவும் பொறுத்திருந்தார்.  எதேச்சையாக நெருங்கிய உறவினரின் திருமணத்தில் ரோகிணியைப் பார்த்து பெண் கேட்கவே, இவர்களும் வரும் நல்ல சம்மந்தத்தை ஏன் தவறவிட வேண்டும் என முடித்திருந்தனர்.

மீனா மாப்பிள்ளை வீட்டில் பேசி, அவர்களுக்கு புரிய வைக்க விழைந்தாலும், ரோகிணி திருவைக் கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்ளவில்லை.

ஏற்கனவே ஒரு மாப்பிள்ளையுடன் நிச்சயம் முடிந்தபிறகு, அதை நிறுத்த அவருக்கு விருப்பமில்லை.  அதுமட்டுமில்லாமல் இதுவரை திருவை உறவினர் என்ற ஸ்தானத்தை தவிர, அவர் மனதில் வேறு எந்த எண்ணமோ.. ஆசையோ.. இருந்ததில்லை.

ஒருவேளை, இந்த நிச்சயம் நடந்திராமல் வீட்டினரே திருவை அவருக்கு மணமகனாக கைகாட்டியிருந்தால் சம்மதித்திருப்பாரோ… என்னவோ…?  ஆனால் இப்பொழுது வேறு ஒருவருடன் நிச்சயம் முடிந்த பிறகு, திருவை கணவனாக வரிக்க மனம் ஒப்புக்கொள்ள மறுத்து, தடுமாறி குழப்பி தவித்தது அவருக்கு.

அவருக்குள்ளேயே முன்னுக்கு பின்னுக்கு முரணான காரணங்களை கற்பித்து குழம்பி தடுமாறியவர்,  இறுதியில் திருவுடனான திருமணத்தை ஏற்கவில்லை.

பெற்றவர்களிலிருந்து, அண்ணன் அண்ணியிலிருந்து, திரு, திருவின் குடும்பம் வரை எத்தனை எடுத்து சொல்லியும் அவர் திருவைக் கட்டிக் கொள்ள சம்மதிக்கவில்லை.

திருவும் ஓரளவுக்கு மேல் ரோகிணியை வற்புறுத்த வேண்டாம் என்று விட்டார்.  ரோகிணியின் விருப்பப்படியே அவருக்கு நிச்சயித்திருந்த மாப்பிள்ளை வேல்முருகனுடனேயே திருமணமும் முடிந்தது.

ஆனால் ரோகிணி திருவைக் கட்டிக்கொள்ள சம்மதிக்காதது…., மீனாவுக்கு அவமானமாக இருந்தது.  ரோகிணியின் மேல் கோவத்தையும் வருத்தத்தையும் தந்தது.  நாளடைவில் அது ஆறாத காயமாக மாறியிருந்தது.

___________________

அஞ்சனாவும் நிஷாவும் பள்ளிப்படிப்பை ஒன்றாகவே முடித்தவர்கள், கல்லாரியிலும் சேர்ந்து படிக்க விரும்பி ஒரே மாதிரி அப்ளை செய்து, அங்கேயும் ஒன்றாகவே படித்து முடித்தனர்.  இருவரும் சென்னையில் தான் ஹாஸ்டலில் தங்கி கல்லூரி படிப்பை முடித்தனர்.  தற்போது இருவருமே பெங்களூரில் இருக்கும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்கு கேம்பஸில் செலக்ட் ஆகியிருந்தனர்.

இன்னும் சில நாள்களில் பெங்களூரில் வேலையில் சேர இருக்கிறார்கள். அவர்களுடன் பள்ளியில் ஒன்றாக படித்த தோழி அனுவுக்குதான் திருமணம் நடக்க இருக்கிறது.  அதற்காகதான் இருவரும் கிஃப்ட் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பியிருந்தனர்.

நிஷா, “என்னடி….? உங்க வீட்ல சத்தம் பயங்கரமா இருக்கு.  நமக்கு வரவேற்பு பலமாயிருக்கும் போலவே”.

அஞ்சனாவுக்கும் கேட்டது லஷ்மி போடும் சத்தம்.  “பேசாம வாடி……. உள்ள”.

“நா… வரல.. ப்பா…. எனக்கு பயமாயிருக்கு”.

“ரொம்ப பயந்தவதான்….. கம்னு வா…..” என நிஷாவின் கையை பிடித்து உள்ளே இழுத்து போனாள் அஞ்சனா.

ஹாலில் நின்று ரோகிணியிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்த லஷ்மி இவர்களைப் பார்த்ததும் அமைதியாகி சோபாவில் சென்று அமர்ந்து கொண்டார்.  அங்கே நின்றிருந்த ரோகிணியும் மகளைப் பார்த்ததும் ஏதும் பேசாமல், கிட்சனுக்குள் சென்றுவிட்டார்.

அஞ்சனா ஏதும் பேசாமல், நிஷாவை அழைத்து கொண்டு தனது அறைக்கு சென்றாள்.  நிஷாவை உட்காரவைத்துவிட்டு, பாத்ரூம் சென்று  கைகால் அலம்பி வந்தவள், நேராக கிட்சன் சென்றாள்.

அங்கு ரோகிணி அப்பளம் பொறித்துக் கொண்டிருந்தார்.  அவரருகில் சென்று இடுப்பில் கைவைத்து, அவரையே சில கணம் விழியெடுக்காமல் பார்த்து நின்றாள்.  அவளது பார்வையை உணர்ந்து திரும்பி பார்த்த ரோகிணி ‘’என்னடா……….’’ என்றார்.

“என்ன பிரச்சினை……?  ஏன்.? அப்பத்தா கத்தறாங்க….?”

“ம்ப்ச்……, ஒன்னும் இல்ல.  நிஷாவை கூப்பிட்டு வா சாப்பிடலாம்”.

“அவ சாப்பிட அவங்க வீட்டுக்கு போறாளாம்.     … ம்மா.  முதல்ல நீ என்ன பிரச்சினை சொல்லு….?”

ஒன்னும் இல்லம்மா…..?  போன வேலை முடிஞ்சிதா…..?  கிஃப்ட் வாங்கிட்டீங்களா….? என அவளை திசை திருப்பினார்.

“ஹ்ம்ம் வாங்கியாச்சு.  மாமா கடைக்குதான் போனோம்.  அவரும் என்னை பார்த்தார்…… ஆனா பேசல….”

மகளை திரும்பி சில நொடிகள் பார்த்தவர், ஏதும் பேசாமல் வேலையை கவனித்தார்.

“நீ இப்படியே………. பேசாம எல்லாத்துக்கும் வாய மூடிட்டு இருக்கறதால தான் மேல மேல குட்டிட்டே இருக்காங்க.  எதா இருந்தாலும் வாயை திறந்து பேசு ம்மா….”

……………….

இதற்கு மேல் ரோகிணி எதுவும் பேச மாட்டார் என அறிந்தவள், “நீங்களாம் சாப்பிட்டீங்களா…..?” என்றாள்.

“அப்பாவும்,  அப்பத்தாவும்  சாப்பிட்டாங்க, வா எனக்கு பசிக்குது சாப்பிடலாம்” என பொறித்த அப்பளத்தை எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்தார்.

“அப்பா வந்துட்டாங்களா…..?”

“ஹ்ம்ம் வந்து சாப்டுட்டு ரைஸ்மில்லுக்கு போயிருக்காங்க”.

அஞ்சனா தனது அறைக்கு வந்து நிஷாவை சாப்பிட அழைத்தாள்.

“எதுக்குடி உங்க அப்பத்தா இந்த கத்து கத்துனாங்க…?”

“ம்ப்ச்…….. எனக்கே தெரியலை நிஷா…., கேட்டாலும் அம்மா சொல்ல மாட்டேன்றாங்க”.

“ஹ்ம்ம்.  அத்தை எதுக்கும் வாயை திறக்காம போறதாலதான் உங்க அப்பத்தா இந்த ஆட்டம் போடுது.  என்னா சத்தம் போடுது.  ரோடு வரைக்கும் கேட்குது, இங்க போடற சத்தம்”.

“என்னை மாதிரி ஆளுங்க, உங்க அப்பத்தாவுக்கு மருமகளா வந்திருக்கனும்.  அப்ப தெரிஞ்சிருக்கும்….”

அஞ்சனா இடுப்பில் கை வைத்து நிஷாவை முறைத்தாள்.

“உங்க அப்பத்தாவை பேசினா, உனக்கு பொறுக்காதே.  உங்கம்மாவ ஏன் பேசினாங்கன்னு, அங்க போய் கேள்வி கேட்க வேண்டியதுதானே”.   என்னை முறைக்கிறாள்.   நான் மட்டும் உங்க அப்பத்தாவுக்கு மருமகளா வந்திருந்தா…  ‘’அது முதுகெலும்ப எண்ணி மாலையா…… போட்டிருப்பேன்னாக்கும்’’.   ஏதோ உங்க அப்பத்தா பண்ண புண்ணியம்…, அத்தை மாதிரி பொறுமையான ஆளா மாட்டிட்டாங்க.

“ஹா… ஹா…., ஒரு படம் பாக்கி இல்லையாடி…..”

“பின்ன, லீவ்ல என்ன பண்ண சொல்ற.  சின்னகவுண்டர்ல இருந்து சிங்கார வேலன் வரைக்கும் ஒரு படம் பாக்கி இல்லாம பார்த்து முடிச்சாச்சு”.

“அது என்னடி…?  திடீர்னு ஓல்டு மூவீஸ்க்கு தாவிட்ட….”

“மாற்றம் ஒன்றே மாறாதது.   இப்பல்லாம் ஓல்ட் மூவீஸ்தான் என்னை கட்டி இழுக்குது”.

“ஒன்னு பாக்கி இல்ல.  சரி… சாப்பிட வா…, அம்மா உன்னை சாப்பிட கூப்பிட்டாங்க” என இருவரும் பேசி சிரித்துக்கொண்டே வெளியே வந்தனர்.  லஷ்மி இவர்களை முறைத்து பார்த்தவர், “அங்க என்னாடி சிரிப்பு…” என்றார் கோவமாக.

“அச்சோ நாம பேசினது உங்க அப்பத்தாவுக்கு கேட்டுடுச்சோ….. என அஞ்சனாவிடம் கிசுகிசுத்தவள், அது ஒன்னும் இல்ல அப்பத்தா…….., உங்களுக்கு முத்துமாலை போடலாமா……., இல்ல, ஒட்டியானம் போடலாமான்னு பேசிட்டிருந்தோம்”.

அவளது பதிலில் குழம்பி புருவங்களை நெறித்தவர், கேள்வியாக அஞ்சனாவைப் பார்த்தார்.  அஞ்சனா லஷ்மியின் மீது கோவமாக இருந்ததால், முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

நிஷா, “அது ஒன்னும் இல்ல அப்பத்தா………., எங்க பிரண்டு கல்யாணத்துக்கு கிஃப்ட் வாங்க போயிருந்தோம் இல்ல, அங்க அழகழகா முத்துமாலை, ஒட்டியானம் எல்லாம் இருந்தது”.

“உங்களுக்கு வாங்களாமேன்னு அஞ்சுகிட்ட சொன்னேன்.  அவள்தான், எங்க அப்பத்தா இதையெல்லாம் போடமாட்டாங்கன்னு சொல்லிட்டா…….”   அதைதான் பேசிட்டிருந்தோம் என சமாளித்தாள்.  இவளது சமாளிப்பில் அஞ்சனாக்கு சிரிப்பு வந்தது.

“ம்க்கும்……., இப்பதான் எனக்கு இளமை திரும்புது…. ஒட்டியானம் போடறதுக்கு” என நொடித்துக் கொண்டார்.

“கிழவிக்கு ஆசைய பார்த்தியாடி………., இந்த வயசுல ஒட்டியானம் வேணுமாம்…….” என கிசுகிசுத்தாள் அஞ்சனாவின் காதில்.

“ஏய் சும்மா இருடி…. அதுக்கும் ஏதாவது பேசுவாங்க……”

ரோகிணி இவர்களுக்காக சாப்பிடாமல் உட்கார்ந்திருந்தார்.

ரோகிணி, “சாப்பிட வாடா……….., உனக்கும் சேர்த்துதான் சமைச்சிருக்கேன்”.

அவரருகில் சென்ற நிஷா, டேபிளில் இருந்த அப்பளத்தை எடுத்து வாயில் வைத்து கடித்துக் கொண்டே, “நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கறேன் த்தை.  அம்மா போன் பண்ணிட்டாங்க.  நீங்க சாப்பிடுங்க” என அவளது வீட்டுக்கு சென்று விட்டாள்.

அஞ்சனாவும் ரோகிணியும் அவர்களே பரிமாறிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர்.  அஞ்சனாவுக்கு சாப்பாட்டில் கவனம் வைக்க முடியவில்லை.  இன்னும் அவள் காதில் லஷ்மியின் குரல் ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது.  ரோகிணியை நிமிர்ந்து பார்த்தவள் மெல்ல,  “ஏன் ம்மா… அப்பத்தா சத்தம் போட்டாங்க….” என்றாள் மனம் பொறுக்காமல்.

மகளை நிமிர்ந்து பார்த்தவர், அவளது கலங்கிய முகத்தைக் கண்டு ஒன்னும் இல்லடா…. நீ சாப்பிடு என பேச்சை மாற்றிவிட்டார்.

இதற்கு மேல் அவரிடமிருந்து எந்த வார்த்தையும் வராது என  புரிந்ததால் அஞ்சனாவும் வேறு பேசாமல் அமைதியாக அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.

_______________

செல்வதுரை மீனா தம்பதியருக்கு மூன்று மகன்கள்.  முதல் மகன் கார்த்திக், அவனது மனைவி காஞ்சனா, அவர்களுக்கு ஏழு வயதில் யஷ்வந், இரண்டு வயதில் தீபிகா என இரண்டு பிள்ளைகள்.

இரண்டாவது மகன் விவேக், அவனது மனைவி கீர்த்தி.  அவர்களுக்கு நான்கு வயதில் ஆசிஷ் என்று ஒரு மகன் இருக்கிறான்.

மூன்றாவது மகன் தேவநாதன் அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.  சிவில் இன்ஜியனியரிங் முடித்துவிட்டு, தனியாக கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கிறான்.

மூன்று மகன்களும் தந்தைக்கு தொழிலில் உதவியாக இருந்தாலும், தேவநாதன் தனித்து செயல்பட விரும்பி, தான் படித்ததற்கு ஏற்ப அவன் விரும்பிய துறையிலேயே தொழில் செய்து கொண்டிருக்கிறான்.

குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  அன்று ஞாயிறு என்பதால் குடும்பம் முழுவதும்  வீட்டில்தான் இருந்தது.  பெரும்பாலும் காலை உணவை சேர்ந்து அமர்ந்துதான் உண்பார்கள்.

செல்வதுரை, “நேத்து சைட்ல என்ன……. பிரச்சினை தேவா….?”

தேவநாதன், “பெருசா ஒன்னும் இல்லப்பா…….., சின்ன இஸ்யுதான்”.

“எது நீ அடிச்ச அடில ரமேசுக்கு அடிப்பட்டு, ஏழு தையல் போட்டிருக்கு.  அது உனக்கு சின்ன விஷயமா…?”

மீனா, “என்னது ஏழு தையலா……?  ஏன்…?  என்னாச்சு……?” என்றார் பதட்டமாக கணவரைப் பார்த்து பரிமாறிக்கொண்டே.

“ம்ம்… உன் செல்லப் பிள்ளையைக் கேளு.  அவரோட வீர தீரசெயலைப் பத்தி…” என தேவாவை கண்காட்டினார் மனைவியிடம் செல்வதுரை.   அதை எதையும் கண்டும் காணாமல், தலையை குனிந்து மௌனமாக கைக்கும் வாய்க்கும் வேலை கொடுத்து கொண்டிருந்தான் தேவநாதன்.

“ஏதாவது சண்டையா தேவா….?”

“ம்ப்ச்….., சண்டைலாம் இல்லமா…….”

செல்வதுரை தேவாவின் வார்த்தையில் கோவம்வந்து நிமிர்ந்து அவனை முறைத்தார்.

அவரது முறைப்பை கவனித்தவன், வாய் பேசாது அமைதியாகி சாப்பிட ஆரம்பித்தான்.

“என்னதாங்க நடந்தது……….?  நீங்களும் சொல்ல மாட்டேன்றீங்க……   அவனையும் சொல்ல விடமாட்டேன்றீங்க”.

“விவேக், நீங்க பதட்டபடற அளவுக்கெல்லாம் ஒன்னும் இல்லம்மா.  நம்ம கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனிக்கு பொருள் வாங்கற இடத்தில எல்லாம், இவ்வளவு நாள் கமிஷன் அடிச்சிருக்கான் அந்த ரமேஷ்”.

“இந்த தடவை வாங்கின மெட்டீரியல் குவாலிட்டியா இல்லைன்னு, தேவா சப்ளையர கூப்பிட்டு விசாரிக்கும் போதுதான், விஷயம் தேவாவுக்கு தெரிய வந்திருக்கு”.

“அதை தேவா அவனை கூப்பிட்டு கேட்டப்ப, கொஞ்சம் கூட அலட்டிக்காம தெனாவெட்டா…   பேசியிருக்கான்.  அவன் இல்லைனா பிஸ்னசே பண்ண முடியாது.  அவனை பகைச்சிகிட்டா வேலைக்கே ஆளுங்க வரமாட்டாங்கன்னு, திமிரா வேற வார்த்தைய விட்டிருக்கான்.   அதான் தேவா இரண்டு தட்டு தட்டியிருக்கான்”.

“அப்பா அவனுக்கு ஏழு தையல் போட்டிருக்குன்னு சொல்றாரு.  நீ என்னமோ, சாதாரணமா…. இரண்டு தட்டு தட்டினான்னு சொல்றே.  அவன் செய்றது பிடிக்கலன்னா வேலைய விட்டு அனுப்பிட வேண்டியதுதானே.  அதைவிட்டுட்டு எதுக்குடா இந்த அடிதடியலாம்…..”

விவேக் “ம்மா……… பயபடற மாதிரிலாம் ஒன்னும் இல்லம்மா.  இந்த மாதிரி ஆளுங்கள கண்டிக்கலன்னா,  என்ன வேணா செய்யலாம்னு… பயம் இல்லாம போயிடும்”.

“உன் பிள்ளைக்கு வாய் பேசறதுக்கு முன்னாடி கைதான்பேசுது.  சொல்லிவை அவன்கிட்ட, தொழில்ல பொறுமையும், நிதானமும் ரொம்ப முக்கியம்.  தொழில் செய்யனும்னு வேகம் இருந்துட்டா மட்டும் போதாது.  எங்க எப்படி நடந்துக்கனும்னு விவேகமும், விவரமும் இருக்கனும்”, என பொரிந்துவிட்டு கை கழுவி எழுந்து சென்றார் செல்வதுரை.

“ஏன்டா அப்பாவ வீனா டென்ஷன் பண்ற………..?” என்றார் தேவாவைப் பார்த்து.

சாப்பிட்டு எழுந்து கைகழுவி வந்தவன், அவரது முந்தானையில் கையை துடைத்துகொண்டே, “எல்லாரும் உன் புருஷன் மாதிரியே நல்லவங்களா… இருக்க முடியாது ம்மா.  அவரை மாதிரியே நான் சாஃப்ட்டா இருந்தா என்னை ஏமாத்திட்டு போயிடுவானுங்க.  அவர் தொழில் வேற.  என தொழில் வேற” என்றான் தாயிடம்.

“அவர் கோவப்படற மாதிரி நடக்காதன்னு, உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.  எப்பப்பாரு அவரை டென்ஷனாக்கறதே உனக்கு வேலையா இருக்கு போ…டா” என்றார் சலிப்பாக.

“கோவப்படும்போதுகூட நீ அழகாதான் இருக்க …ம்மா” என்றான் அவரது தாடையை பிடித்து கொஞ்சிக்கொண்டே.

“ச்சீ……… போடா…….. போக்கிரி.  ஏதாவது சொல்லி பேச்சை மாத்த வேண்டியது” என எழுந்து உள்ளே சென்றார்.  தங்களது அறைக்குள் முகம் முழுவதும் புன்னகையுடன் நுழைந்த மனைவியை பார்த்த செல்வதுரை, “என்ன….?  உன் மவன் ஐஸ்கட்டியை தூக்கி தலையில வச்சிட்டானா………?” என்றார் நமுட்டுச் சிரிப்பாக.

“நீங்கதான் கொஞ்சமாட்டேன்றீங்க… என் மவனாவது கொஞ்சட்டுமே.  அதுகூட உங்களுக்கு பொறுக்கலையா……..?”

ஹா… ஹா…  “உன்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கான் அந்த பய.  அதுசரி மீனம்மாவ நான் கொஞ்சாமதான் மூனு பசங்க வந்துட்டாங்களா…..” என்றார் கலகல என சிரித்துக்கொண்டே.

“அச்சோ……. மெதுவா சிரிங்க.  பசங்க காதுல விழப் போகுது.  பேரன் பேத்தி எடுத்ததுக்கு அப்புறம் பேச்சை பாரு… “என அழகாக வெட்கப்பட்டார்.

“ஹ்ம்ம்…, இதுலதான்…….. அந்த பையன் உன்கிட்ட சொக்கிபோய் கெடக்கான்” என மீசையை முறுக்கிகொண்டே  தேவாவைக் கூறியவர், இன்னைக்கு சாயந்திரம் கல்யாணத்துக்கு போகனும் ஞாபகம் இருக்கா… என்றார் மீனாவைப் பார்த்து.

கணவனது வார்த்தையில் மேலும் வெட்கப்பட்டவர், அவரது கேள்விக்கு பதிலாக, “ம்ம்….. இருக்குங்க.  பசங்ககிட்ட சொல்லிட்டே….ன்.  கல்யாணத்துக்கு எல்லாரும் வருவாங்க”.

சரி நான் கடை வரைக்கும் போயிட்டு வரேன் என கடைக்கு கிளம்பிவிட்டார்.  ஞாயிறுகளில் பெரும்பாலும் மகன்கள் வீட்டில்தான் இருப்பர்.  ஏதாவது அவசரம், முக்கிய வேலை இருந்தால் மட்டுமே கடைக்கு செல்வார்கள்.

மேல் வேலைகளுக்கு வீட்டில் ஆட்கள் இருந்தாலும், சமையல் எல்லாம் வீட்டுப் பெண்கள்தான்.  அதுவும் ஞாயிற்று கிழமைகளில் ஆண்கள் வீட்டில் இருப்பதால், அன்று அசைவ சமையல் ஸ்பெஷலாக இருக்கும்.

 

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!