Skip to content
Post Views: 9,338
சென்னை செல்ல முடிவான பிறகு ஊருக்குச் செல்லத் தேவையானதை எடுத்துவைத்தாள் துளசி, பெரிதாக ஒன்றுமில்லை நல்லதாக ஐந்து சுடிதார் தாவணி அவ்வளவே, மூன்று உடை வாங்கினால் மூவரும் அதேயே மாற்றி மாற்றிப் போட்டுக்கொள்ள வேண்டும்.
Advertisement
துர்க்கா திருமணம் முடிந்து சென்றுவிட்டதால் அவளுடைய பழைய துணிகள் இவர்களுக்கு வந்து சேர்ந்தது, இரவு ட்ரெயின் கஜனூரிலிருந்து பதினாறு கிலோமீட்டர் இருக்கும் சிவமோகா போக வேண்டும் அங்குதான் ரெயில் நிலையம் உள்ளது.
Advertisement
Advertisement
Advertisement
சிவமோகா ஒரு சுற்றுலாத்தலம் பழமையான சிவன் ஆலயம் உள்ளது மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது சுற்றுலாவுக்கு வருபவர்களை ஊக்குவிக்கப் புதிதாக விமானநிலையம் திறக்கப்பட்டுள்ளது, இவர்கள் எபோழுதும் ரெயிலிலே பயணம் செய்வது இரவு ஏறினால் காலைச் சென்னையை அடைந்துவிடலாம்.
அக்காவின் வீட்டிற்கு போகிறார்கள் என்றதும் தன்னால் முடிந்தமட்டும் அனைத்தையும் பைகளில் அடைந்துவிட்டார் சாந்தா பெரிய கண்ணாடி குடுவையில் வைக்கோல் நிரப்பிக் கோழிமுட்டைகளை உடையாமல் அடுக்கி வைத்தார் இருபது தேங்காய், வீட்டில் விளைந்த காய்கறிகள் பலகாரங்கள் சுத்தமான நெய் என்று நான்கு கட்டை பைகளை நிரப்பி விட்டார்.
“அடியே நான் என் பொண்ணை சென்னைல விடப் போறேனா இல்ல தெரு தெருவா பையைத் தூக்கிட்டு வியாபாரம் செய்யப் போறேனா… உன் அக்கா ஊர்ல இதெல்லாம் கிடைக்காதா எப்படிடி இத்தனையும் தூக்கிட்டு போறது” என்றவரை பார்த்த சாந்தா.
“நீங்களா சொமக்க போறீங்க ரெயில் தான சுமக்குத்து” என்க.
“ஆமா நம்ம வீட்டு வாசலுக்கு ரெயில் வந்து ஏத்திக்கிட்டு போவும் கூறுகெட்டவளே, இங்கேயிருந்து கூட்ரோடு வரைக்கும் போய் டவுன் பஸ் பிடிச்சு அங்கேயிருந்து சிவமோகம் போய் ரெயில் ஏறிச் சென்றல்ல இறங்கி திரும்பப் பஸ் பிடிச்சு முகப்பேர் போகணும் சொல்லும்போதே மூச்சு முட்டுது, அந்தப் பிள்ளைதான் எவ்ளோ தூக்கும் இல்ல நான்தான் எவ்ளோ தூக்க முடியும் எனக்கு என்ன பதினாறு வயசுன்னு நினைப்பா உனக்கு” என்றார் இப்படி புரிந்துகொள்ளாமல் பேசுகிறாளே என்று.
“வயசு பிள்ளைக்கு என்ன கேடு ரெண்டு பையைத் தூக்க மாட்டாளா அங்க போய் அவங்க வீட்டில தங்கி மூணு வேலை ஓசி சாப்பாடுதானே சாப்பிட போறா அப்போ கொஞ்சம் அவங்களுக்கு வேலையும் செய்யலாம் ஒன்னும் தப்பில்லை” என்ற சாந்தாவை அடிக்கக் கை ஓங்கிவிட்டார் விஜயகுமார்.
“அப்பா” என்று அவரைத் தடுத்துவிட்டாள் துளசி.
“பெத்தவளாடி நீ? பிள்ளையை அந்த வீட்டுக்கு வேலைக்காரியா அனுப்புறியா அப்பன் நான் என்ன செத்தா போய்ட்டேன்” என்றதும் “என்னங்க” அன்று சாந்தாவும் “அப்பா” என்று பிள்ளைகளும் அவர் கையைப் பிடித்துக்கொண்டனர்.
“தெரியாத ஊர்ல தனியா ஹாஸ்டல் போகவேண்டாமேன்னு உங்க அக்கா வீட்டில தங்க சரி சொன்னேன் நீ என்னன்னா என் பிள்ளையை அவங்களுக்கு சேவகம் செய்ய அனுப்புற, தேவையில்லை… நான் சென்றல்ல இறங்கி அங்கேயே ஹாஸ்டல் பாத்து சேத்துட்டு அப்படியே வந்திடுறேன்” என்றவர் கோபமாக வெளியில் சென்றுவிட அனைவரும் கையைப் பிசைந்துகொண்டு நின்றனர்.
சாந்தா மகளைக் கொஞ்சம் நயமாகப் பேசியும் அதிகம் மிரட்டியும் பெரியம்மா வீட்டிலே நிற்க அப்பாவிடம் கேட்கச் சொன்னார் “இங்கபாருடி பெரியம்மா வீட்டிலே நிக்குறேன்னு உங்க அப்பாகிட்ட சொல்ற வெளில ஹாஸ்டல் எவ்ளோ செலவாகும் வேலை இனிமேதான் தேடணும் உனக்கு வேலை கிடைக்குற வரைக்கும் இங்கேயிருந்து காசு அனுப்புனும், தங்க சாப்பிடன்னு எவ்ளோ ஆவும் அதோட பாதுக்காப்பு இருக்குமா”.
“அங்கன்னா செலவே இல்லாம முடிஞ்சிடும் அதோட பெரியப்பாவும் அண்ணனும் தெரிஞ்ச எடத்துல சொல்லி வைப்பாங்க வேலைக்கு, நீ அவங்கள மதிக்காம உங்க அப்பாரு பேச்சைக் கேட்டு வெளில தங்குனா அவங்க எப்படி உனக்காக நிப்பாங்க இந்த மனுஷனுக்கு முணுக்குன்னா கோபம் மட்டும் வந்துடும்” என்று துளசியை சரிகட்டிவிட்டார்.
அவளே பொறுமையாகத் தந்தையிடம் வேலை கிடைக்கும்வரை அங்கேயே தாங்கிக்கொள்கிறேன் என்று பேசிச் சம்மதம் வாங்கிவிட்டாள், ஒரு வழியாகச் சென்னை புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
விஜயகுமாருக்கு சுத்தமாக விருப்பம் இல்லை அந்த வீட்டில் தங்க வைக்க என்றாலும் தெரியாத ஊர் தலைநகரம் ஒரு சிறிய வட்டத்திற்குள்ளே வளர்ந்துவிட்ட பெண் வேலை கிடைத்து கொஞ்சம் வெளியுலகம் புரியும் வரைக்கும் அங்கு இருப்பது பாதுக்காப்பு என்ற எண்ணத்தில் மனதை தேற்றிக்கொண்டார்.
சென்ட்ரலில் இறங்கி பஸ் பிடித்து முகப்பேர் இறங்கிக்கொண்டனர் அங்கிருந்து நடக்கும் தூரம் தான் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் வாழும் இடம், நல்ல அகலமான வீதி சுத்தமாகவும் இருக்கும்.
ஜெயந்தியின் வீடு என்பது கார் நிறுத்தும் இடம் அதைக் கடந்தால் ஹால் இரண்டு படுக்கையறை கிட்சேன், கிச்சனை ஒட்டிக் கழிவறை மற்றும் குளியலறை அதுமட்டும் எப்பொழுதும் துளசிக்கும் அவள் வீட்டினருக்கும் பிடிப்பதில்லை.
“சாப்பாடு சமைக்கிற இடத்துக்குப் பக்கத்துல என்னக்கா இது” என்று முதன் முதலில் இந்த வீட்டை வாங்கியபோது சாந்த்தா கூடக் கேட்டிருந்தார்.
என்ன செய்ய வீட்டை அப்படித்தான் அதன் உரிமையாளர்கள் கட்டியிருந்தார் பத்து வருடங்கள் அந்த வீட்டில் வாழ்ந்தபிறகு அதை விற்றுவிட்டு சென்றுவிட்டனர் வீட்டை வாங்கவே நிறைய பணம் செலவழிந்துவிட்டது அதோடு புதிதாகக் கட்டுவதோ சீர்செய்வதோ முடியாது என்று அப்படியே விட்டுவிட்டனர்.
மேலே ஒரு ஹால் மற்றும் ஒரு படுக்கையறை இருக்கிறது ஆனால் அதை மொத்தமாக ஜெயந்தி ராகவன் தம்பதியரின் செல்வப்புதல்வி ப்ரியதர்ஷனி எடுத்துக்கொண்டாள், அந்த வீட்டின் இளவரசி அவள்தான் அவளுடைய மூத்தவன் பிரேம் திருமணம் முடிந்து மனைவி அனிதாவை அழைத்துக்கொண்டு தனிக்குடித்தனம் சென்றுவிட்டான்.
அவனும் அவன் மனைவியும் வேலை செய்கிறார்கள் வாரத்தில் ஒருமுறை வந்து எட்டி பார்ப்பதோடு ஓடியே விடுவார்கள் இருவரும், ஜெயந்தியின் கணவர் அரசு வேளையிலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதால் நல்ல தொகை பென்ஷன் வந்தது அதோடு மகனின் கடமையை ப்ரேமும் சரியாகச் செய்வான் மாதாமாதம் ஒரு தொகையைத் தாயிடம் கொடுத்துவிடுவான் அதற்கெல்லாம் அவன் மனைவியும் ஒன்றும் சொல்வதில்லை.
ப்ரியதர்ஷினியின் அதிகாரமும் திமிர் பேச்சும் அவளால் சகித்துக்கொள்ள முடியாது அதனால் ஒதுங்கியே இருப்பாள், மகளைத் தலையில் தூக்கி வைத்திருக்கும் மாமியார் ஒன்றும் பேசாமல் இருப்பதும் இவளை மட்டும் வேலை செய்யச் சொல்வதும் அவளுக்கு எரிச்சலை கொடுக்கத் திருமணம் முடிந்த ஆறு மாதத்தில் பிரேமை அழைத்துக்கொண்டு தனியாகப் போய்விட்டாள்.
விஜயகுமாரும் துளசியும் வந்தபோது வீடே அமைதியாக இருந்ததது நேரம் காலை ஏழு மணியைக் கடந்திருந்ததது ஒரு வழியாகப் பைகளைத் தூக்கிவந்து உள்ளே வைத்தார்கள் இருவரும் “வாங்க வாங்க” என்ற ஜெயந்தி சமையல் அறையிலிருந்து வெளியில் வந்தார் ராகவனும் அப்பொழுதுதான் எழுந்து வந்தார் “வாங்க” என்றவர் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தார்.
“சரி குளிச்சுட்டு வாங்க சாப்பிடலாம்” என்றார் ஜெயந்தி, துளசி சங்கடமாகப் பார்த்தாள் அந்தக் குளியலறைக்கு உள்ளே நுழையவே அவளுக்குப் பிடிக்காது இவரும் ஒழுங்காகக் கழுவ மாட்டார் வேலைக்கு ஆலையும் வைக்கமாட்டார் அவளுக்கு எப்பொழுதும் பஸ்ஸ்டாண்ட் டாய்லெட் போய் வந்த உணர்வுதான் இங்கு.
துணியை எடுத்துக்கொண்டு அவள் முதலில் சென்று குளித்துவர விஜயகுமாரும் குளித்துவந்தார் இருவருக்கும் டீயோடு காலை உணவாக இட்லி உப்மா பரிமாறினார் ஜெயந்தி, இரவு இட்லிகளை அதிகம் ஊற்றிவைத்து காலை அதை உதிர்த்து உப்மா செய்துவிட்டார் இவர்களோடு சேர்ந்து ராகவனும் ஒன்றும் பேசாமல் உணவை விழுங்கி வைத்தார்.
எட்டுமணியை கடந்த பின்னும் அந்த வீட்டின் இளவரசி எழுந்துவரவில்லை “நானும் துளசியும் டி நகர் போயிட்டு வரோம் கொஞ்சம் பொருள் வாங்கணும்” என்ற விஜயகுமார் “மத்தியானம் சாப்பாடு வேண்டாம் வரச் சாயந்திரம் ஆகும்” என்க “சரி” என்றார் ஜெயந்தி.
அந்த நேரம் ஈவா ஸ்வீட் பெர்பியும் வாசத்தை காற்றில் பரப்பி உள்ளே நுழைந்தாள் ப்ரியா “வாங்க” என்றாள் பொதுவாக இருவரையும் பார்த்து, இறுக்கிப்பிடித்த ஜீன்ஸ் இடுப்புக்கு கொஞ்சம் கீழே வரை இருந்த ஒரு உடுப்பு என்று நின்றிருந்தாள் பெரும்பாலும் அவள் உடை அதுதான்.
மகள் வந்தவுடனே அவளுக்கான உணவை எடுத்து வந்தார் ஜெயந்தி நிறைய பால் அதன் உள்ளே குளித்துக்கிடந்தது கார்ன் பிளக்ஸ் அதோடு முந்திரி, பாதாம், பதப்படுத்திய கிரான்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அனைத்தும் மிதந்தது சோபாவில் அமர்ந்தவள் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே உண்ணத்தொடங்கினாள், ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறாள்.
மகளின் கையைப் பிடித்த விஜயகுமார் “அப்போ நாங்க போயிட்டு வரோம்” என்று வெளியேறினார், டி.நகர் சென்று நல்லதாக ஆறு சுடிதார் வாங்கிக்கொண்டாள் பெரிதாக விலை எல்லாம் இல்லை வேலை தேடி போகும் இடங்களில் கொஞ்சம் நல்லதாக உடுத்தி செல்லவேண்டுமே, மதியம் நல்ல கடையில் மகளுக்குப் பிரியாணி வாங்கி கொடுத்தார் இனி தான் வரும்போது மட்டுமே மகளுக்கு நல்ல உணவு கிட்டும் என்று அவருக்குத் தெரியும்.
அப்படியே சுற்றி இன்னும் சில பொருட்ட்களையும் வாங்கிக்கொண்டு மாலை மயங்கும் நேரம் வீட்டிற்கு வந்தனர், மறுநாள் இரவு வண்டிக்கு விஜயகுமார் ஊர்க்கு செல்ல வேண்டும் இரவே சாந்தா அழைத்துவிட்டார் மகளுக்கு.
“சீக்கிரமா எழுந்து பெரியம்மாவுக்கு அடுப்படில உதவி பண்ணு நமக்கு வடிச்சு கொட்டறது ஒன்னும் அவங்க வேலை இல்ல, வீட்டைக் கூட்டி பெருக்கு பாத்திரம் கழுவி வை அப்படியே சமையலையும் பாரு, ப்ரியா வேலைக்குப் போறா அவளால எல்லாத்தயும் செய்ய முடியாது உனக்குத் தான் வேலை இல்லையே அது செய், வாழ வந்த மகராசி மாமியாரை மதிக்காம ஒத்த ஆம்பிளை பிள்ளையையும் தனியா கூட்டிட்டு போய்ட்டா” என்றார்.
பிரியா வேலைக்குப் போகவில்லையென்றால் மட்டும் வீட்டில் வேலை செய்துவிடுவாளா, காலைச் சாப்பிட மட்டும் கீழிறங்கி வருபவள் இரவு எட்டு மணிக்கே வீட்டுக்கு வருவாள் நேரே மேலே சென்று குளித்து வந்து உணவுண்டு மேலே சென்றுவிடுவாள் சாப்பிட்ட தட்டைக்கூட இப்படி அப்படி நகர்த்தாதவள் ப்ரியா இதையெல்லாம் சாந்தாவிடம் பேசிவிட முடியாது.
காலையே எழுந்துவிட்டாள் துளசி அவளே பாத்ரூமை நன்றாகக் கழுகிவிட்டுவிட்டு குளித்தாள் இனி கொஞ்சம் காலம் இங்கேயே இருக்கப்போகிறோம் எழுந்ததும் உபயோகிப்பதே பாத்ரூம்தான் அதுவே சுத்தமாக இல்லை என்றால் அந்த நாளே வீணாகப்போய்விடும் என்பது அவளின் வாதம்.
குளித்துவிட்டு வந்தவள் “பெரியம்மா என்ன சமையல்” என்க.
“உப்மா செஞ்சிடலாம்” என்றார் ஜெயந்தி.
“மீண்டுமா” என்று ஆயாசமாக இருந்ததது அவளுக்கு, அவள் வீட்டில் உப்புமா என்றால் பீன்ஸ் கேரட் பட்டாணி போட்டு நன்றாக நெய்விட்டு தேங்காய் சட்னியோடு சாப்பிடுவர் அதுவும் மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இங்கு வெங்காயத்தை தவிர அந்த உப்புமாவில் வேறு எதுவும் இருக்காது.
ஜெயந்தியின் குடும்பம் காஜனூருக்கு வந்தால் மூன்று வேலையும் தடல்புடல் விருந்துதான் நடக்கும், காலை உணவுக்கே ஒருநாள் இட்லி பொங்கல் சாம்பார் சட்னி என்றால் மறுநாள் கிச்சடி பூரி… இப்படி மூன்று வேலையும் உணவு அமர்க்களப்படும் விஜயகுமாரும் சலிக்காமல் அனைத்தையும் வாங்கிக்கொடுப்பார்.
தந்தையை பார்க்க அவளுக்கு வருத்தமாக இருந்தது சாந்த்தா இல்லாமல் விஜயகுமார் இங்கு வருவதில்லை இதுவே முதல்முறை மகளுக்காக மனைவி இல்லாமல் வந்திருக்கிறார் சாந்தா இருந்தால் கதையே வேறு ஜெயந்திக்கு காத்திருக்காமல் உரிமையாக அவரே அனைத்தையும் செய்து கணவனை நன்றாகக் கவனித்திருப்பார்.
துளசியால் அது முடியவில்லை பெரியம்மாவிடம் அது வேண்டாம் வேறு செய்கிறேன் என்று கேட்கத் தன்மானம் இடம் கொடுக்கவில்லை, இதுவரை அப்படி உரிமையோடு பேசியதுமில்லை மகளுக்கு மதியம் உணவு கொடுத்தனுப்ப வேண்டும் என்பதால் அவர் அதைத் தயார் செய்யத் தொடங்க துளசி தானே அதை வாங்கி செய்தாள்.
தக்காளி சாதம் உருளை வறுவல் முட்டை மசாலா என்று அனைத்தும் காலையே முடிந்துவிட்டது வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கும் அதுவே… அவளே அனைத்தையும் முடித்துவிட்டு வெளியில் வர ப்ரியா வேலைக்குச் செல்லத் தயாராகி வந்து நின்றாள்.
“துளசி நெட்ல தேடிப்பாரு நிறைய இடத்துல வேக்கன்சி போட்ருப்பாங்க உன் படிப்புக்கு எது செட் ஆகுதோ அதுக்கு போய் அன்டன் பண்ணி பாரு, உடனெல்லாம் கிடைக்காது கொஞ்சம் நாள் ஆகும் அப்புறம் இங்கிலிஷ் இங்க ரொம்ப முக்கியம் பேசாம கிளாஸ் ஏதாவது போ” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க பிரேம் அவன் மனைவியுடன் உள்ளே நுழைந்தான்.
“எப்படி இருக்கீங்க சித்தப்பா” என்றவன் துளசியையும் விசாரிக்க அவன் மனைவி “நல்லாயிருக்கீங்களா மாமா” என்றாள் மரியாதையாக “எப்படியிருக்க துளசி” என்றவள் அவள் கையில் ஒரு பாத்திரத்தை வைத்தாள்.
“காலைல வெண்பொங்கல் சாம்பார் செஞ்சேன் நீக்க வந்திருக்கீங்களே அதான் கொண்டுவந்தேன்” என்றாள், தாராளமாக மூன்று பேர் சாப்பிடும் அளவில் இருந்ததது.
“நேத்து வரமுடியல சித்தப்பா நான் வேலை விஷயமா வெளில போயிருந்தேன், இவளே எல்லா வேலையும் பாத்துட்டு கொழந்தையையும் கூட்டிட்டு வந்து பாக்கணும் நேரமே கிடைக்கல அதான் இன்னைக்கு காலைலயே வந்துட்டோம்” என்றவன் “சாயந்திரம் பாப்பாவை அழைச்சுட்டு வரோம், இப்போ நேரமாவுது” என்று வந்த வேகத்தில் வெளியில் சென்றனர்.
மாலை கொஞ்சம் நேரத்தோடு வந்துவிட்டார்கள் இருவரும் உடன் அவர்களின் ஐந்து வயது மகள் நயனி, இரவு பத்துமணிக்கு சென்ட்ரலிலிருந்து ட்ரெயின் விஜயகுமாருக்கு இந்த டிராபிக்கில் சென்று சேரவேண்டுமென்றால் எட்டு மணிக்குள் கிளம்புவது நல்லது என்று பிரேம் கூற அவரும் தயாரானார்.
அவருக்கு இடியாப்பம் செய்து கொடுத்தாள் துளசி மகளைத் தனியே அழைத்துச் சென்ற விஜயகுமார் அவள் கையில் சில ஆயிரங்களை வைத்து “போக வரச் செலவுக்கு வெச்சுக்கோ துளசி எதுனாலும் ஒரு போன் போடு உன் அம்மாவுக்குப் பயந்துகிட்டு சொல்லாம இருக்காத பாத்து சூதனமா இருந்துக்கோ சாப்பாடு சரியில்லைன்னா வெளில வாங்கி சாப்புடுத்தா பட்டினியா கிடக்காத” என்றவர்.
“வேலை தேடுறேன்னு அதிகமா அலைய வேண்டாம் உடம்ப பாத்துக்கோ” என்று மனத்தே இல்லாமல் மகளை விட்டுச்சென்றார், அவளுடைய ஆசை வேலைக்குச் செல்ல வேண்டும் என்று எப்படியும் நல்ல சம்மந்தம் வந்தால் கட்டிக்கொடுத்துவிடுவோம் அதுவரை போகட்டும் வேளையில் உள்ள பெண் என்றால் அதும் ஒரு மதிப்புதானே என்று எண்ணிக்கொண்டார்.
பிரேம் அவரைப் பஸ் ஏற்றிவிட்டு வந்தான் நயனியுடன் விளையாடி நேரம் போனது துளசிக்கு ப்ரேமும் ஆனந்தியும் தெரிந்த இடத்தில் வேலைக்குக் கேட்டுப்பார்ப்பதாகச் சொல்லிச் சென்றனர்.
ப்ரியதர்ஷனிக்கு மும்முரமாக மாப்பிளை தேடிக்கொண்டிருந்தனர் “பெருசா வசதியில்லாத சித்தப்பாவே துர்காவுக்கு காலேஜ் ப்ரொபெஸரை கட்டி வெச்சுருக்கார் பாக்க நல்லாவும் இருக்கார் நல்ல சம்பாத்தியம் கார் வீஎடுன்னு இருக்கா அவளைவிட கொறச்சிலா எனக்குப் பாக்க கூடாது” என்பதுதான் ப்ரியாவின் முதல் நிபந்தனையே.
வரன்கள் வந்துகொண்டுதான் இருந்ததது அவளுக்குத்தான் ஒன்றும் பிடிக்கவில்லை ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு குறை இருந்தது அவளுக்கு, அப்படியே இரண்டுவருடமாகக் கல்யாணம் முடிவாகாமல் தள்ளித் தள்ளிச் சென்றது.
மறுநாள் ஞாயிறு விடுமுறை மத்தியான சமையலுக்கு காய் நறுக்கிக்கொண்டிருந்த துளசியிடம் நறுக்கிய வெள்ளரிக்காய் மற்றும் பப்பாயா தேன் சேர்த்து அடித்த கலவை இரண்டையும் கொடுத்த ஜெயந்தி “மேல அக்காவுக்குக் குடுத்துட்டுவா வீட்டில இருக்கும்போதுதான் இதுக்கெல்லாம் அவளுக்கு நேரமே இருக்கும்” என்க.
இவளும் எடுத்துக்கொண்டு மேலே சென்றாள் பப்பாயா பேஸ்டை முகத்தில் தடவிக்கொண்டவள் வெள்ளரிக்காயை கண்களின் மீது வைத்துக்கொண்டு சேரில் சாய்ந்து அமர்ந்துகொண்டே “துளசி அப்படியே அந்தப் பாத்திரத்தை எடுத்துட்டு போய்டு இங்கேயிருந்தா எறும்பு வரும்” என்றாள்.
“அடி பாவி உனக்கு முகத்துக்குப் போடறதுக்கு கூட நான் எடுத்துட்டுவந்து தரணுமா மஹாராணி இதைக் கீழே வந்து எடுக்கமாட்டாங்களா” என்று மனதில் எண்ணியவள் அப்படியே கீழிறங்கி செல்லப் பிரேம் வந்திருந்தான்.
“என்ன துளசி அவளுக்கு நீ எதுவும் எடுத்துட்டு போனியா” என்றான் அவள் கையில் இருந்தத பாத்திரத்தைப் பார்த்து, அவள் என்ன சொல்ல என்று தெரியாமல் முழிக்க.
“ஒண்ணுமில்லடா முகத்துக்குப் பப்பாயா அடிச்சு குடுத்தேன் அதுதான் எடுத்துட்டு போனா” என்றார் ஜெயந்தி.
“என்னம்மா செய்றீங்க நீங்க அவ வந்து எடுத்துட்டு போகமாட்டாளா இவ்ளோ நாள் அப்பாவைச் செய்ய வெச்சீங்க இப்போ துளசிகிட்ட செய்யச் சொல்றீங்க, இதுவே நீங்கச் சித்தி வீட்டுக்குப் போனா ஒக்காந்த இடத்துல கைக்கழுவ தண்ணி வரைக்கும் கொண்டுவந்து தருவாங்க நீங்க என்னன்னா அவளை வேலை வாங்குறீங்க” என்றான் சத்தமாக.
“இப்போ என்னடா சொல்லிட்டேன் இதைக் கொண்டுபோய் மேல குடுத்ததுக்கா இவ்ளோ பேச்சு” என்றார் ஜெயந்தியும் கோபத்தோடு.
“அதேதான் நானும் சொல்றேன் இந்தச் சின்ன விஷயத்துக்குக் கூட உங்க பொண்ணுக்கு ஒரு ஆள் வேணுமா” என்றவன் “துளசி போய் ரெடி ஆகு அப்பட்டியே ரெண்டு செட் டிரஸ் எடுத்துக்கோ நைட் நம்ம வீட்டிலேயே தங்கிட்டு நாளைக்கு காலைல வரலாம்” என்றான்.
அவள் பெரியம்மாவை திரும்பிப் பார்க்க முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டே “போ” என்றார் அவர்.
அவள் உடைமாற்ற அறைக்குள் நுழையும்போதே தாய்க்கும் அழைத்துவிட்டாள் இதுபோல அண்ணாவுடன் போகட்டுமா என்று இல்லையேல் ஜெயந்தி தங்கைக்கு அழைத்துக் கதையைத் திரித்துக் கூறி துளசி தன்னை மதிக்கவில்லை என்று பற்றவைப்பார்.
பிரேமின் வீட்டில் ஆனந்தி பிரியாணி செய்திருந்தாள் நன்றாக உண்டு சினிமாவுக்கு போய் அப்படியே பீச்சுக்கு சென்றுவிட்டு இரவுணவையும் வெளியில் சாப்பிட்டு வீடு வந்தனர் காலை ஆனந்திக்கு துளசியும் உதவி செய்ய வேலை சீக்கிரம் முடிந்தது, ஆனந்தி மகளை அழைத்துக்கொண்டு செல்லப் பிரேம் துளசியை வீட்டில் கொண்டு வந்து விட்டான்.
அதோடு “துளசி ஆனந்தியோட பிரென்ட் வேலை செய்ற ஹாஸ்ப்பிட்டல்ல பில்லிங் செக்க்ஷன்ல வேலை ஒன்னு இருக்கு நாளைக்கு போய்ப் பாரு, அண்ணியும் சொல்லி வெச்சுருக்கா” என்றான் பிரேம்.
அங்கேயே வேலையும் கிடைத்தது மாதம் இருபதினாயிரம் அதுவே அவளுக்குப் பெரிய தொகையாகவே தெரிந்தது சாந்தாவுக்கும் சந்தோஷமே, துளசியின் நாட்கள் கொஞ்சம் நிம்மதியாகச் சென்றது ப்ரியதர்ஷனி என்ற புயல் அவளைச் சுழற்றி அடிக்கும்வரை.
error: Content is protected !!