Skip to content
Post Views: 7,318
லஷ்மி, “நீ ஏன்டியம்மா…. ஈ…ன்னு வாய பார்த்துட்டே நின்னுட்டிருக்க, வந்தவங்களுக்கு காப்பி தண்ணி ஏதாவது போட்டு குடுக்க வேண்டியது தான…”
“இதோ… அத்த…” என ரோகிணி…. கிட்சனுக்குள்…. ஓடினார்”.
ஆண்கள் இருவரும் பரஸ்பரம் குடும்ப நலனை பற்றி அலசியவர்கள், தங்களது தொழிலைப்பற்றின பேச்சில் ஈடுபட்டிருந்தனர். நெடுங்காலம் சென்று பார்ப்பதால் பேசுவதற்கு நிறைய செய்திகள் இருந்ததுபோல.
பிடிக்கவில்லை என்றாலும் வீடுதேடி வந்தவர்களிடம், முகம் திருப்ப மனமின்றி வேல்முருகனும், தான் எண்ணி வந்த விஷயம், எந்த தடையும் இல்லாமல் ஈடேறவேண்டுமே என செல்வதுரையும் தங்களை தாங்களே வலுக்கட்டாயப்படுத்தி பேச்சில் இழுத்துகொண்டிருந்தனர் போல. இது அங்கிருந்தவர்களுக்கும் கொஞ்சம் புரிந்தது. இருந்தும் தலையிடாமல் பார்த்திருந்தனர் பெண்கள்.
Advertisement
ரோகிணி அவர்களுக்கு டீ வைத்து எடுத்து வந்து கொடுத்தார். செல்வதுரைக்கு எப்போதும் இஞ்சியும் ஏலக்காயும் தட்டிப்போட்ட டீ தான் பிடித்தம் என்பதால்… அவருக்கு பிடித்த மாதிரியே டீ வைத்து எடுத்து வந்து எல்லாருக்கும் கொடுத்தார்.
பேசிக்கொண்டிருந்தாலும் மனம் முழுவதும் செல்வதுரைக்கு வந்த விஷயத்தைப்பற்றியே இருந்தது. எப்படி ஆரம்பிப்பது என குழம்பி தவித்தார் உள்ளுக்குள்ளேயே. எப்படியும் பேசிதானே ஆகவேண்டும் என தைரியத்தை கூட்டி, ஒருவழியாக பேச ஆரம்பித்தார்.
“அ…து மா…ப்பிள்ளை உங்க…கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்னு வந்தோம்”.
Advertisement
என்னவாக இருக்கும் என்ற கேள்வி மனதில் எழுந்தாலும், எதையும் வெளிக்காட்டாமல், சாதாரணமாக தலையசைத்தார் சொல்லும்படி வேல்முருகன்.
Advertisement
செல்வதுரை, “முத இரண்டு பசங்களுக்கும் கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி பார்த்துட்டேன். அப்படியே தேவாவுக்கும் கல்யாணம் முடிச்சிட்டேன்னா… என் கடமை முடிஞ்சிரும்”.
“அவனுக்கும் வயசாவுது இல்லையா. சொந்தத்திலேயே பொண்ண வச்சிட்டு… ஏன் அசல்ல பார்க்கனும்னு எண்ணம் எனக்கு”.
வேல்முருகனுக்கு செல்வதுரை சொல்ல வருவது இலேசாக புரிய ஆரம்பித்தது. முழுவதுமாக அவர் சொல்லி முடிக்கட்டும் என மௌனமாக உட்கார்ந்திருந்தார்.
Advertisement
“உடைச்சு வெளிப்படையாவே கேட்டுடறேன் மாப்பிள்ளை. எங்க பையன் தேவாவுக்கு… உங்க மகளை பொண்ணு கேட்டு வந்திருக்கோம்….” என பட்டென்று கேட்டுவிட்டார் செல்வதுரை.
லஷ்மி, “ம்ம்…. சோழியன் குடுமி சும்மா ஆடாதாம்…. இதுக்குதான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா…?” என்றார் லட்சுமி வெளிப்படையாகவே.
வேல்முருகன், “ம்ப்ச்….. ம்மா சும்மா இருக்க மாட்டியா… நீ”.
“கல்யாண வயசுல வீட்டுல பொண்ணு இருந்தா… நாலு பேரு வந்து கேட்கதான் செய்வாங்க. அதுக்கு ஏதாவது பேசிட்டு இருப்பியா…?” என அவரை அடக்கினார் வேல்முருகன்.
இதென்னடா… பதில் என பார்த்திருந்தனர் மற்ற மூவரும்.
இருந்தாலும் ரோகிணிக்கு முகம் சட்டென்று மலர்ந்துவிட்டது செல்வதுரையின் வார்த்தைகளில்.
அண்ணன் வீடேறி வந்து தனது மகளை மருமளாக்கி கொள்ள கேட்டது, அவரது மனதுக்குள் மகிழ்ச்சியை தூவியிருந்தது.
ஆனால்… அது நடக்குமா..? மாமியார் விடுவாரா…..? கணவர் சம்மதிப்பாரா…..? இதையெல்லாம் மீறி அஞ்சனா இதற்கு ஒத்துக் கொள்ளவாளா….? என எல்லாத்துக்கும் ஆனால்தான்… அவர் மனதில். எதற்கும் பதிலில்லை.
ஆமாம். அஞ்சனா இதற்கு சம்மதிப்பது கஷ்டம். தாய்மாமன் மீதும் அவர்களது குடும்பத்தின் மீதும் கோவத்திலும், மனவருத்தத்திலும் இருப்பவளை, என்ன சொல்லி சமாதானப்படுத்துவது? தாய்மாமனிடம் பேசவே யோசிப்பவள், அவரது வீட்டிற்கு மருமகளாக வாழ்க்கைபட சம்மதம் சொல்வாளா…? ம்கூம்…. சந்தேகம்தான்.
லஷ்மியை அடக்கிய வேல்முருகன், செல்வதுரையிடம் தன்மையாகவே பேசினார்.
“அஞ்சனாவுக்கு… இப்ப கல்யாணம் பண்ற ஐடியா… இல்ல மச்சான். நீங்க தப்பா நினைச்சுக்க வேணாம். உங்க மகனுக்கு வெளியே பாருங்க” என்று விட்டார், நேரடியாகவே.
இப்படி டக்கென்று முகத்தில் அடித்தார்போல… வேல்முருகன் பேசுவார் என எதிர்பாராத மீனாவும் செல்வதுரையும் திகைத்துபோய்… அமர்ந்திருந்தனர்.
அவர்களது திகைப்பை பார்த்த வேல்முருகன், “தப்பா எடுத்துக்காதீங்க. நான் உங்களை கஷ்டப்படுத்தவோ… வேற எதையோ மனசுல வச்சிட்டோ… பேசறேன்னு தப்பா நினைக்காதீங்க”.
செல்வதுரை, “இன்னும் நீங்க பழசெல்லாம் மறக்கலையா… மாப்பிள்ளை. இன்னுமே என் மேல கோவத்துலதான் இருக்கீங்களா…?”
வேல்முருகன், “அத பேச வேணாங்க. பழசெல்லாம் கிளற வேணாம். முடிஞ்சு போனத பேசி இப்ப என்ன ஆகப் போகுது. பேசினா வருத்தந்தான் மிஞ்சும். நமக்குள்ள மனக்கசப்புதான் வரும்…” என சுவற்றைப் பார்த்து பொறுமையாகவே பேசினார் வேல் முருகன்.
செல்வதுரை, இல்ல மாப்பிள்ளை… கொஞ்சம் யோசிச்சு பாருங்க. எனக்கும் உங்கள விட்டா யாரு இருக்கா…? இது விட்டு போற உறவா… கூடப்பொறந்த பொறப்புன்னு வேற யாரு இருக்கா ரோகிணிய தவிற…? இந்த பந்தம் என்னோட முடிஞ்சுடுமோன்னு… நெஞ்சுக்குள்ளே கெடந்து தவிக்க வேண்டியதா இருக்கு… சில சமயம்” என்றார் கரகரப்பான குரலில்.
ஆனால் வேல்முருகனோ… செல்வதுரை பேச வந்த எதையும் மனதில் வாங்கிக் கொள்ளவில்லை. “எனக்கு இருக்கறது ஒரே பொண்ணு. இப்பதான் அவள் வேலையில சேர்ந்திருக்கிறாள். அடுத்து அவளுக்கு பாரின்லாம் போய் வேலை பார்க்கனும்னு ஆசை இருக்கு. அவள் விருப்பத்துக்கு மாறா என்னால எதையும் செய்ய முடியாது. பொறுமையா பார்த்துதான் அவளுக்கு பிடிச்ச மாதிரி பண்ணனும்னு நினைச்சிட்டிருக்கேன்”, ஆனால்… அது நீங்க இல்லை என்ற மாதிரி சொல்லாமல்… சொல்லிவிட்டார் மறைமுகமாக.
அது என்னவோ உண்மைதான். மற்ற விஷயத்தில் எப்படியோ…? அஞ்சனா விஷயத்தில் வேல்முருகனும் லஷ்மியும் அவளுக்கு எதிராக எதையும் செய்ய மாட்டார்கள். மகள் மீது தந்தைக்கு அவ்வளவு பாசம் என்றால் பாட்டிக்கு பேத்தி என்றால் கொள்ளை பிரியம்.
………………………
வேல்முருகன், “அதுமட்டுமில்ல, நம்மள மாதிரி தொழில் பண்றவனே வேணாம். வேலைக்கு போற மாப்பிள்ளைதான் வேணும்னு மனசுல முடிவு பண்ணி வச்சிருக்கேன். அவளுக்கும் அதுதான் விருப்பம்னு நினைக்கறேன். கல்யாணத்துக்கு அப்புறமும் அவள் வேலைக்கு போகனும்னுதான் ஆசைப்படறாள்”.
…………………………
வேல்முருகன், “அந்த காலத்து பிள்ளைங்க மாதிரி கிடையாது, இப்ப இருக்க பிள்ளைங்க எல்லாம் ரொம்ப தெளிவாயிருக்காங்க. நாம ஏன் அவங்க ஆசைய கெடுக்கனும்”.
செல்வதுரை, “நீங்க சொல்றது எல்லாம் சரிதான்… மாப்பிள்ளை… கல்யாணம் பண்ணிட்டு வேலைக்கு போகட்டுமே… நாங்க என்ன மறுக்கவா… போறோம்…”.
வேல்முருகன், “வேணாங்க. இந்த பேச்சை இதோட விட்டுடுங்க. சரிவரும்னு தோணலை”.
செல்வதுரை ஏதோ பேச வாயெடுத்தார். மீனா அதற்குள் அவரது கையை பிடித்து எதையும் பேசாதீங்க… என கண்களால் ஜாடை காட்டி நிறுத்தி விட்டார்.
மனைவியின் சமிஞ்சையை புரிந்து கொண்ட செல்வதுரை மேற்கொண்டு எதுவும் பேச முயலவில்லை.
அதற்கு மேல் யாருக்கும் என்ன பேசுவது என தெரியவில்லை. அமைதியாகவே சென்றது சில நிமிடங்கள்.
வேல்முருகனின் பேச்சைக் கேட்டதும், ரோகிணிக்கு முகமே விழுந்து விட்டது. பிரிந்த உறவு மீண்டும் சேருவதற்கு சந்தர்ப்பமாக… இவ்வளவு காலம் பேசாமல் இருந்த அண்ணன் தானே வீடு தேடி வந்து பெண் கேட்டும் கணவர் மறுத்ததை எண்ணி மனம் வருந்தியது. அவரது அகத்திலிருந்த உணர்வுகள் கண்ணாடி போல முகத்திலும் பிரதிபலித்தது.
வேல்முருகன் மனைவியைப் பார்த்தாலும் ஏதும் பேசவில்லை. “வரா….தவங்க வந்திருக்….காங்க சமையலுக்கு எதாவது ஏற்பாடு செய்யேன்…மா…..” என்றார் சிறு நக்கல் கலந்த தொனியில் ரோகிணியிடம்.
அது புரிந்துவிட்டதோ… என்னவோ… செல்வதுரைக்கும் மீனாவுக்கும், பட்டென்று எழுந்துவிட்டனர்.
ரோகிணி, “ஏன்.. ண்ணா….? இவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்கீங்க…. சாப்பிட்டு போகலாமே” என ரோகிணி வற்புறுத்தியும், மீனாவும், செல்வதுரையும் பிடிவாதமாக சாப்பிடாமல் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டனர்.
செல்வதுரை, “இருக்கட்டும்…..மா. நீ வேலையைப் பாரு… இன்னொரு நாள் சாவகாசமா வரோம்…” என கூறி கிளம்பியிருந்தனர்.
ஆனால் ரோகிணிக்குதான் அவர்கள் உடனே கிளம்பியதை நினைத்து வேதனையானது. அது அவரது முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது. “அண்ணா… மனசுல எதையும் வச்சுக்காத…” என அண்ணனின் கையைப் பிடித்துகொண்டார் கண்ணீர் பூத்த விழிகளுடன்.
செல்வதுரை, “ம்ப்ச்… என்னடா நீ. இப்ப என்ன…? அதான் அண்ணன் உன்ன பார்க்க வந்துட்டனே. இன்னொரு தட சாப்பிட்டா போச்சு. இதுக்கு போய் கண்ணை கசக்குவியா…” என ரோகிணியின் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு, தலையை வருடி கொடுத்தார் ஆதுரமாக.
“அவர் மேல இருக்க கோவத்துல, என்னை பார்க்க வராம இருந்துடாத …ண்ணே. இனி நீ அடிக்கடி அண்ணிய அழைச்சிட்டு வர போக இருக்கனும்”.
“ம்ம்… சரிடா. நீயும் மாப்பிள்ளைய… பிள்ளைய… எல்லாம் அழைச்சிட்டு நம்ம வீட்டுக்கு வரனும். அண்ணன் எதுவும் தப்பு பண்ணியிருந்தா… மன்னிச்சுடு டா… மனசுல எதையும் வச்சுக்காத…டாம்மா”.
இது எல்லாம் வெளி தாழ்வாரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர் அண்ணனும் தங்கையும்.
வேல்முருகனும் லஷ்மியும் உள்ளேயே உட்கார்ந்துவிட்டனர். வழியனுப்பும் சாக்கில் ரோகிணி இவர்களுடனே வந்திருந்தார்.
அவர்களை வாசல்வரை வந்து வழியனுப்பிய ரோகிணிக்கு இன்னும் சமாதானமாகவில்லை போல. “ஏன் ண்ணே…? இப்படி வந்துட்டு அரக்கபரக்க கிளம்பறீங்க. ஆற அமர இருந்து சாப்பிட்டு போகலாமில்ல….” என்றார் அவர்கள் கார் ஏறும்போதும்.
“இருக்கட்டும் டா…”
“அவர் மறுத்து பேசினதால.., கோச்சுகிட்டு கிளம்பறியா… ண்ணா..?”
“ச்ச ச்ச…. அதெல்லாம் இல்லடா… கண்டிப்பா… இன்னொரு நாள் வரேன் மா…” என தங்கையை சமாதானப் படுத்திவிட்டு புறப்பட்டு விட்டார்.
மீனா அமைதியாக அண்ணம் தங்கை உரையாடலை பார்த்திருந்தவர், போகும் போது ரோகிணியிடம் தலையசைத்து கண்களாலேயே விடைபெற்றிருந்தார்.
செல்வதுரை என்ன சமாதானப்படுத்தியும்….. ரோகிணிக்கு மனதே ஆற வில்லை. எவ்வளவு வருடங்கள் ஆயிற்று பிறந்த வீட்டு உறவென்று சொந்தம் கொண்டாடி.
இப்படி பிறந்தகத்து சொந்தங்கள் இருந்தும் ஒட்டாமல் தள்ளி இருப்பது எத்தனை கொடுமை. அதை அனுபவிக்கும் அவரைக் கேட்டால்தானே அதன் வலியும் வேதனையும் புரியும்.
அவர்கள் சென்றதும் லட்சுமி ஆரம்பித்துவிட்டார். “என்னடா………. வராத மகராசன் வந்திருக்கானேன்னு நினைச்சேன். நான் நினைச்சது சரியா…ல்ல போச்சு. கடைசியில பொண்ணு கேட்டுல்ல வந்திருக்காங்க…”.
“என்னமோ… சீமையில இருந்து வர மாதிரி… சீன போட்டுட்டு வந்துட்டான் வக்கத்தவன். தோ இருக்க ஊருல இருந்துட்டு இவ்வளவு காலம் எட்டிகூட பார்க்கல”.
“இத்தனை நாள் கூடப் பொறந்தவ… எங்க இருக்கானே திரும்பி பார்க்காதவனுக்கு, இன்னைக்கு மட்டும் பாசம் பொத்துகிட்டு வந்திடுச்சாம்…”
“எல்லாம் காரியக்காரன்கதான். இத்தனை நாள் இல்லாத அக்கறை எல்லாம் இப்போ தங்கச்சி பொண்ண பார்த்ததும் வந்துடுச்சு போல… ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு கருவேப்பிலை கொத்துமாதிரி ஒத்த பிள்ளைய நம்ம தங்கச்சி பெத்து வச்சிருக்காளே. அத வந்து பார்ப்போம்னு இவ்வளவு காலம் தோணுச்சா… அவனுக்கு”.
“வந்துட்டான் பெரிய… இவன் மாதிரி சம்மந்தம் பேசறதுக்கு. என் பேத்தி காதுகுத்துக்கு வந்து சண்டைய இழுத்துட்டு… அப்படியே பொட்டிய கட்டிட்டு போனவங்கதான. அதுக்கப்புறம் இருக்கமா… செத்தமான்னுகூட திரும்பி பார்க்கல”.
“தங்கச்சி உறவு விட்டுப் போயிடக்கூடாதுன்னு வந்தாங்களாம். யார்கிட்ட காது குத்தறாங்க…? எனக்கேவா…?”
“என் பேத்தி பெரிய மனுஷியானதுக்கு கூட தாய்மாமனா வந்து எட்டிபார்க்கல. இப்ப என்ன புதுசா…? அப்படியே உறவு விட்டுட கூடாதுன்னு தவிக்கிறானாம். பாசத்தை பிழியறான்”.
“பொண்ணு கேட்டு வரா…..னாம் பொண்ணு. கேட்கறவன் கேனையனா இருந்தா…. கேப்பையில நெய் வடியுதுன்னு சொல்வாங்க…. அந்த கதையாயில்ல இருக்கு. இத்தனை காலம் இல்லாத பா…..சம் இப்ப மட்டும் எங்க இருந்து வந்துச்சாம். உங்கள விட்டா யாரு இருக்கா…. எனக்கு? என்னா நடிப்பு…? காரணம் சொல்றான் பாரு…”
“நல்லா தங்க சிலை கணக்கா என் பேத்திய பார்த்ததும் வளைச்சு போடலாம்னு முடிவு பண்ணிட்டான் போல”.
“பொண்ணு கேட்க வந்துட்டான் வெக்கமேயில்லாம. அன்னைக்கு அவ்வளவு சட்ட நியாயம் பேசிட்டு… சண்டைய போட்டு உறவு அத்துகிட்டு போனவன்… எந்த மூஞ்சை வச்சிட்டு வந்தான் இங்க”.
“எல்லாம் கணக்கு போட்டுதான் வந்திருப்பாங்க புருஷனும் பொண்டாட்டியும். பொண்ணு மட்டுமா….? பொண்ணோட சேர்ந்து சொத்துபத்தும் இல்ல வருது”.
“ஒத்த பொண்ணாச்சே, ஆம்பள வாரிசு இல்லாத வீடாச்சேன்னு மொத்தத்தையும் ஆட்டய போடலாம்னு பார்க்கிறாங்க போல…” என வறுத்துக் கொண்டிருந்தார் உச்சஸ்தாயில்.
ரோகிணிக்கு மாமியாரின் பேச்சில் ஆத்திரம் வந்தாலும், ஏதும் எதிர்த்து பேச முடியாத நிலைதான். எது பேசினாலும் சண்டை வெடிக்கும். கூடவே வேல்முருகன் லஷ்மிக்கு ஆதரவாக வந்து நின்றுவிடுவார். ஆதலாலே மாமியார் பேசினால் பதில் பேசுவதை நிறுத்தியிருந்தார்.
வேல்முருகனும் லஷ்மி பேசுவதை எல்லாம் உள்ளே படுத்துகொண்டு காதில் வாங்கி கொண்டிருந்தார். தாய் பேசுவதில் ஏதும் தப்பிருப்பதாக அவருக்கு தெரியவில்லை. மனைவிக்கு வலிக்க செய்தாலும் அது எல்லாம் உண்மைதானே.
அன்று அவருடைய சொந்த பந்தங்களின் முன் தன்னையும் தன் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி சென்றவர்கள்தானே என பேசாமல் படுத்திருந்தார். இன்னும் அவர் மனதில் அன்றைய நிகழ்வின் தாக்கம் மிச்சம் மீதியிருந்தது போல.
மாமியார் வீட்டிலிருந்து மாப்பிள்ளைக்கான மரியாதை கிடைக்காததில் அவுரும் கோவத்தில் இருந்தார் போல.
திருமணம் ஆன புதிதில் மாமியாரின் பேச்சுக்களை பொறுக்க முடியாமல் ரோகிணியும் திரும்ப பதிலுக்கு பேசுவதுண்டு. லஷ்மியின் மீது தவறிருந்தாலும்ம் மனைவியின் முன் தாயை விட்டு தரமாட்டார் வேல்முருகன். ஆதலால் ரோகிணிதான் அடங்கி போக வேண்டியிருக்கும்.
அவரே சில சமயம் மனைவியிடம் சொல்வதுண்டு. அம்மா வயசானவங்க, அவங்க பேசுனா… கூட கூட பதிலுக்கு நிக்காத. விட்டுட்டு அடுத்த வேலைய பாரு, என ஒரே வரியில் முடித்துவிடுவார்.
அப்பொழுதெல்லாம் ரோகிணிக்கு ஆத்திரமாக வரும். ஏன் உங்கம்மாவுக்கு மட்டும்தான் சூடு… சுரணை… ரோஷம்… எல்லாம் இருக்கா? எங்களுக்கு எல்லாம் இருக்காதா…? என மனதில் ஆத்திரம் எழும்.
ஆனால் என்ன புரயோஜனம்…? எது பேசியும் அங்கு எடுபடாது…? “செவிடன் காதில் ஊதிய சங்கு போல’’…. என தெரிவதற்கு அவருக்கு சில காலம் பிடித்தது. அதன்பிறகு அவரிடம் இருந்து எந்த எதிர்வினையும் எழுவதில்லை. எல்லாவற்றையும் தனக்குள்ளேயே போட்டு முழுங்கி… வெந்து பேசாமல் இருந்துவிடுவார்.
அதற்காக வேல்முருகன் தப்பானவர் என்றும் கணித்திட முடியாது. தந்தையை சிறு வயதிலேயே இழந்து தாயால் வளர்க்கப்பட்டவர். வசதிக்கு குறைவில்லையென்றாலும், வாழ்க்கையின் நிதர்சனங்களை… அன்னையின் கஷ்ட நஷ்டங்களை அவருடன் இருந்து பார்த்தவர். ஆதலால் தாயை யாரிடமும் விட்டுதரமாட்டார். அது மனைவியாக இருந்தாலும் சரி… மகளாக இருந்தாலும் சரி.
லஷ்மியின் தவறுகளை தனிமையில் கண்டிக்க முயலுவாரே இன்றி அடுத்தவர் எதிரில் விட்டுக் கொடுக்க மாட்டார். அத்தனை பாசம் அன்னையின் மீது. மரியாதையும் கூட லஷ்மியின் மீது.
அதற்காக லட்சுமி கொடுமைக்காரர்… தவறானவர் என ஒதுக்கவும் இயலாது. மருமகளின் மீதும், குடும்பத்தின் மீதும் பாசமானவர்தான். என்ன கொஞ்சம் சுயநலவாதி. தான்… தனக்கு என்ற எண்ணம் கொண்டவர். எல்லாம் அவர் தலைமையில் அவர் விருப்பத்தின் பேரில் நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர். எதிலும் அவரை முன்னிறுத்தி பார்த்து பழக்கப்பட்டவர்.
அவரை புரிந்து கொண்டதால்தான் ரோகிணியின் வாழ்க்கை அங்கே நிலைபிசகாமல் சென்று கொண்டிருக்கிறது என கூட சொல்லலாம்.
அப்பப்போ முட்டிக் கொண்டாலும்…. விட்டுக்கொடுத்து சென்றுவிடுவார் மாமியாரிடம்.
இல்லையென்றால் வீண் சண்டைகளும்… சஞ்சலங்களுமே மிஞ்சும் என்பதை அவர் அனுபவத்தால் புரிந்திருந்தார்.
இப்போதும் லட்சுமி பேசிய பேச்சுகளுக்கு கோவம் வந்தாலும் ஏதும் பேசாமல்… கிட்சனுக்குள் புகுந்துவிட்டார் மௌனக் கண்ணீருடன்.
மீனாவிற்கு அத்தனை கோவம் வந்தது. “இது தேவையா உங்களுக்கு..? நான் சொன்னது சரியா போச்சா… எதுக்கு இப்படி அசிங்கப்படனும்…” என்று கணவரை வறுத்தெடுத்தார் வார்த்தைகளால் வரும் வழியிலேயே.
செல்வதுரையாலும் ஒன்றும் பேசமுடியவில்லை. அவர் நினைத்தது… ஒன்று. நடந்தது… ஒன்று.
தங்கையின் மகளை மகனுக்கு கட்டினால், கடைசிவரை கூடப்பிறந்தவளின் உறவு நிலைக்கும் என எண்ணினார். ஆனால் அவர் நினைத்ததற்கு எதிர்பதமாக நடந்து முடிந்திருந்தது.
இருந்தும் மனதில் இன்னும் நம்பிக்கை இருந்தது. அதனால் மனைவியிடம் விட்டுக்கொடுக்காமல்…… வாதாடிக் கொண்டிருந்தார்.
“இப்ப என்ன……? பொண்ணு தரமாட்டேன்னா சொன்னாங்க. அவள் படிச்சு முடிச்சு வேலைக்கு போகனும்னு விருப்பப்பட்டிருக்காள். அதனால இரண்டு மூனு வருஷம் ஆகும்னு சொன்னாரு… மாப்பிள்ளை”.
“அதையேன் நீ தப்பா… எடுத்துக்கற….?”
மீனா, “ஓஹோ….. இதுதான்…… கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலன்னு சொல்றதா… முகத்துக்கு நேரா மூக்கறுத்த மாதிரி பேசியும்… உங்களுக்கு புத்தி வரலையே…” என அங்கலாய்த்தார் மீனா.
“ஏய் சும்மா இருடி…, இதை நாம எதிர்பார்த்துதான போனோம். இத்தனை நாள் ஒட்டும் இல்லாம, உறவும் இல்லாம இருந்தோமே…”
“வீட்டுக்கு உள்ளயாவது கூப்பிடு வாங்களான்னு….. தான போய் நின்னோம். என்னமோ….. நம்மளை அசிங்கப்படுத்தி அனுப்புன மாதிரி……யில்ல குதிக்கற”.
மீனா, “இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தா… அதுதான் நடந்திருக்கும்…”
செல்வதுரை, “அதெல்லாம் இல்ல. இன்னும் கொஞ்சம் நேரம் பேசி நான் மாப்பிள்ளைக்கு புரிய வச்சிருப்பேன். நீதான் அதுக்குள்ள… பேச வேணாம்னு இழுத்துட்டு வந்துட்ட”.
மீனா, “அப்படியா சங்கதி. இப்ப பழியெல்லாம் தூக்கி என் மேல போட்டாவதா…? அங்க அவங்க பேசினது எல்லாம் உங்களுக்கு அசிங்கமா… தெரியல. நான் பேசாதீங்கன்னு சொன்னதுதான் உங்களுக்கு தப்பா தெரியுதா…” என மூக்கை சிந்த ஆரம்பித்துவிட்டார் மீனா.
“அடியே…. ஆரம்பிச்சுடாத…”
மீனா, “தங்கச்சிய பார்த்துட்டு வந்ததுக்கே… என்னை வேண்டாதவளா ஆக்கிட்டீங்க. இன்னும் தங்கச்சி பொண்ணு, இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா… என் நிலைமை அவ்வளவுதான் போலருக்கு…” என்றார் கணவர் பேசிய கடுப்பில்.
“அடியே… இதெல்லாம் அநியாயம்…டி. உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல. எதுக்கு எதடி கூட்டு சேர்க்கற…. ஓஹோ இப்பதான் எனக்கு சேதி புரியுது. உனக்கு என் தங்கச்சி பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வரது பிடிக்கலன்னு சொல்லு…”
மீனா, “அடப்பாவி மனுஷா….. பிடிக்காமதான் உங்ககூட ஜோடி போட்டுட்டு பொண்ணு கேட்க வந்தேனா…?”
“அதான் தெரியுதே….. நீ வந்த லட்சணம்… எப்படா வேணாம்னு சொல்வாங்கன்னு பார்த்து இழுத்துட்டு வந்துட்ட. இப்ப உனக்கு சந்தோஷம்தான…”
மீனா…….. செல்வதுரை பேசியதில் வாயடைத்து அப்படியே அமர்ந்திருந்தார்.இப்படி மொத்த பழியையும் தன்மீது கணவர் திணிப்பார் என எதிர்பாராதவர் பேச்சற்று போனார். இந்த மனுஷன் கோவத்துல பேசறாரா…? இல்ல நிஜமாவே என்னை குத்தம் சொல்றாரா… என குமைந்து போனார் மனதினிலேயே.
என்கூட இத்தனை வருஷம் குடும்பம் நடத்தியும், என்னை புரிஞ்சிட்டது இவ்வளவுதானா…. இவர்? என ஆற்றாமையாக இருந்தது நெஞ்சுக்குள். செல்வதுரை மேல் எழுந்த ஆத்திரத்தில் எதுவும் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டார்.
மீனாவை கொண்டுவந்து வீட்டில் இறக்கிவிட்ட செல்வதுரை, இதற்கு மேல் இங்கிருந்தால் வார்த்தை தடிக்கும் என எண்ணி கடைக்கு கிளம்பிவிட்டார்.
தொடரும்.
error: Content is protected !!