Skip to content
Post Views: 1,383
விருப்புக்கும், வெறுப்புக்கும் இடையில் ஊசலாடும் காதல் உண்மைகளை ஏற்றுக் கொள்வதில்லை.
Advertisement
அரவிந்தும், ராகாவும் இத்தனை வருடங்களில் ஒரு நாள் கூட பேசாமல் இருந்ததே இல்லை, ஆனால் இப்போது அவனின் வழியில் அவள் எதிர்பட்டால் கூட அவன் வெறும் புன்னகையுடன் கடந்து விடுகிறான்.
ஆனால் காதல் நிரம்பி வழியும் இதயத்தை கொண்ட ராகாவால் அதை கூட செய்ய முடியவில்லை. அவளது உதடு துடித்து காதலின் வலியை சுமந்தது.
Advertisement
Advertisement
ஓரிரண்டு முறை அவனது எதிரில் வந்தவள், அவனது அதே பிடிவாத பதிலால் உடைந்து தான் போனாள். அரவிந்தை இறுக்கிப் பிடிக்கும் வழி எது என்று புரியாமல் தவித்தாள்.
வெறும் பார்வையால் மட்டுமே அவனைத் தழுவிக் கொண்டாள். அவள் கண்கள் சிந்தாத கண்ணீரை இதயம் சிந்திக் கொண்டிருந்தது.
Advertisement
இந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது நிகழ்ச்சி பதிவு. இரவும் பகலும் நடந்த நிகழ்ச்சியில் மதுரா, அரவிந்தை கண்களால் விழுங்கிக் கொண்டே இருந்தாள். அவளது தயக்கமும் வெகு தூரம் சென்றிருந்தது. ஒவ்வொரு சிறிய இடைவேளைக்கும் அவள், அவனின் அருகில் இருக்க எதாவது ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டாள்.
சினேகப் புன்னகைகளை அவ்வப்போது இருவரும் பரிமாறிக் கொண்டனர். வெறும் சினேகமா.. அதையும் தாண்டி புனிதமான எதாவது இருக்கிறதா என்ற மனதிற்குள் கேள்விக்கணைகளால் தன்னையே கேட்டுக் கொண்டிருந்தாள் மதுரா.
அவளை பொறுத்தவரை நிராகரிக்கப்பட்ட ஒரு வசந்தம் மீண்டும் கையில் கிடைத்தது போன்று இருந்தது. ஏதோ ஒரு சமாதானம் அரவிந்தின் விழிகளிலும், அவனின் செயல்களிலும் அவளுக்கு கிடைத்துக் கொண்டே இருந்தது.
அன்று எண்பதுகளின் காதல் பாடல்கள் சுற்று.
மதுராவும், சென்ற நிகழ்ச்சியின் வெற்றியாளருமான ஜான் மைக்கேலும் பாட வந்தனர்.
“வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு”
ஜானின் தேன் சிந்தும் குரலில் அரங்கம் அமைதியானது.
“பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது..சிறகை விரித்தது.. வலம் வரத்தான்..” மதுராவின் கண்கள் நேருக்கு நேராக அரவிந்தை பார்த்துக் கொண்டு இருந்தது. அவளின் அத்தனை சுத்தமான உச்சரிப்பு அங்கிருந்தவர்களுக்கு ஆச்சர்யம் தான்.
அதைவிட ஆச்சர்யம் அவள் பார்வை விழுந்த இடம் தான். ஒருங்கிணைப்பாளர்களுக்கு வெறும் வாயிற்கு மெல்வதற்கு வெல்ல அவல் கிடைத்தது.
அதுவும் இந்த பாடல் அதிகம் கம்பி வாத்தியங்களான வயலினிற்கோ, கிடாருக்கோ வாய்ப்பில்லாததால், அரவிந்த் அவனது நண்பனான பிலிப்பின் கீபோர்டிற்கு துணையாக அவ்வப்போது வாசித்தான். மீதியான நேரங்கள் பாடியவர்களின் மீது கவனம் இருந்தது.
“போதும் போதும் தீர்ந்தது வேதனை..”
பாடிய ஜானின் மீது பார்வை பதித்து,
“வண்ண மானும் தான் சேர்ந்தது நாதனை..” அரவிந்தை பார்த்து முடித்தாள் மதுரா. கேமிராக்கண்கள் அழகாக உள்வாங்கியது அந்த காட்சிகளை.
இயக்குனரோடு அமர்ந்திருந்த ராகா விழுங்க முடியாத சோகத்தை தொண்டைக்கும் இதயத்துக்கும் இடையில் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாள்..
அவளை இன்னும் உடைத்து எறிய, மானிட்டரில் அங்கு பதிவாகும் காட்சிகள் ஓடிக் கொண்டு இருந்தது.
“விரலைக் கண்டதும் மீட்ட சொன்னது வீணை..” ராகாவின் அதரங்கள் துடிப்பது வீணையில் நாதமொன்று துடிப்பது போல் இருந்தது.
உண்மையில் பாடலின் ராகத்தில் அங்கிருந்த அனைவரும் தங்களை தொலைத்துக் கொண்டு இருந்தனர். அதே போல் தான் இருவரின் இனிய கீதத்தில் தன்னை மறந்து அவர்களை பார்த்து இருந்தான் அரவிந்த்.
ஆனால் அது ஒரு காதல் கதையாக அவர்களுக்கே தெரியாமல் பதிவாகிக் கொண்டு இருந்தது.
“மீனமேஷம் பார்ப்பதோ காதல் தோன்றும் போது..” ஜான் கேள்வியாக கேட்க,
“காலை மாலை ஏங்கினேன் ஏங்கினேன்..” மதுரா குரல் அத்தனை தாபமாக ஒலித்தது. அந்த தாபம் அரவிந்தை பதிலாக காட்டியது.
“நீயும் நீயுல்ல நானும் நானல்ல கண்ணா……” அவள் அந்த வார்த்தையை இழுத்து நிறுத்தும்போது அத்தனை பேரும் கைத்தட்ட, அரவிந்த் இருந்த இடத்தில் இருந்து எழுந்து கைத்தட்டினான்.
காட்சிகளை காண இயலாது கண் மூடியவள் படபடவென்ற சத்தத்தில் மீண்டும் கண் திறந்து பார்த்தாள். ராகாவின் கண்களில் மதுராவை பார்த்து அரவிந்த் நின்றிருந்தது தான் பட்டது.
ஒரே பாடல் ஒருவளின் இதயத்தின் வாசலை திறந்தது.
இன்னொருத்தியின் இதய வாயிலை கருணையே இன்றி அடைத்து தாளிட்டது.
கீரவாணி என்றும் தியானத்தில் இருப்பதை போல் மன நிறைவைத் தரக்கூடிய ராகம்.
ஆனால் இரு பெண்களின் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்தி இருந்தது இன்று அது..
உருகி உருகி அழைத்த குரல்களுக்கு விடாது பாராட்டு மழை கிடைக்க, ராகாவின் விழிகள் கண்ணீரில் மிதந்தது. மதுராவின் விழிகளோ காதலில் மிதந்தது.
இருவருக்கும் தேவையான அரவிந்தோ ஜானுடன் இருவர் மனநிலை எதுவும் தெரியாமல் பேசிக் கொண்டு இருந்தான்.
ராகாவிற்கு அவனது சட்டையை பிடித்து உலுக்கி கேள்வி கேட்க கைகள் துடித்தன. அதற்குள் இயக்குநர், எடிட்டரிடம் அன்றைய நிகழ்ச்சியில் தேவைப்படும் விஷயங்களை சொல்லி குறிப்பெடுக்க ராகாவை அழைத்தார்.
கடமை அழைக்கும்போது காதல் தாமதப்படத்தானே வேண்டும்.
ராகா அவருடன் சென்றாள். அப்போதே மணி இரவு ஒன்றை நெருங்கி இருந்தது.
பாடகர்களின் பெற்றோரோ, நண்பர்களோ உடனிருந்து அவர்களை அழைத்துச் செல்ல, மதுரா விழித்துக் கொண்டு நின்றாள்.
அரவிந்த் அவனது பொருட்களை எடுத்துக் கொண்டு, பார்க்கிங்கில் காரையும் எடுததுக் கொண்டு வாசல் வந்தான். அங்கே நின்றிருந்த மதுராவை பார்த்து விட்டு சுற்று முற்றும் பார்த்தான்.
“இங்க என்ன பண்ணிட்டு இருக்க. எல்லாரும் போய்ட்டாங்க. நீ போகலையா..”
“இல்ல.. எப்படி போறதுன்னு தெரியல..”
“ஏன் உன் வீட்டுல இருந்து யாரும் வரலையா..”
“ம்ப்ச்..” என்று தலையை ஆட்டினாள்.
கேள்விக்குறியாக அவளைப்பார்த்தான்.
“இல்ல. வழக்கமா லேட்டானா ஆனந்தி மேடத்தோட போவேன். அவங்க இறக்கி விடுவாங்க. இன்னிக்கு அவங்க வரலையே.. கேப் பிடிச்சு போக பயமா இருக்கு..”
“ஓ. அதுக்காக இங்கேயே நிப்பியா காலைல வரைக்கும்..”
திரும்பி உள் அரங்கை பார்த்தான். ராகாவும் இன்னும் கிளம்பவில்லை. அவளையும் அழைத்துச் செல்லலாம் என்று யோசித்தவனுக்கு பின்புறம் ஹார்ன் சத்தம் கேட்டது.
அந்த பக்கம் பார்க்கவும் நந்தா தான் ராகாவிற்காக காரில் இருந்தான்.
ஒரு நிம்மதி வந்தது. அவனுக்கு கைகளை ஆட்டி கிளம்புவதாக சொல்லி விட்டு, மதுராவை அழைத்தான்.
“வா.. ஏறு. நான் டிராப் பண்றேன்.” என்று கதவை திறந்து விட்டான். அவள் சரியாக அவனது காரில் ஏறவும் அவர்களுக்கு பின்னால் ராகா வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
அவர்களை பார்த்துக் கொண்டே நந்தாவின் காரில் ஏறினாள் ராகா.
அவள் மனம் பின்னோக்கிய நாட்களை நினைவுப்படுத்தியது. அவளுக்கு முன் அரவிந்தும் மதுராவும் சென்றுக் கொண்டிருந்தனர்.
வாய் ஓயாமல் பேசும் மகள் அழுத்தமாக இருப்பதை பார்த்து நந்தாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“ராகா.. என்னடா ஆச்சு. அமைதியா வர. டயர்டா இருக்கியா..”
“ம்ம்.. இல்லப்பா. அரவிந்தை பத்தி யோசிச்சிட்டு வரேன்.”
“ஏம்மா.. அவன் முன்னாடி தானே போறான். அவனை பத்தி யோசிக்க என்ன இருக்கு..”
“அவனுக்கு என்னை பத்தி கவலையே இல்லையேப்பா. அந்த பொண்ணு மேல தான் கவனம் இருக்கு..”
“அட.. அந்த பொண்ணு எப்படி போறதுன்னு கொஞ்ச நேரமா நின்னு பாத்துட்டு இருந்தது. வயசு பொண்ண எப்படி தனியா அனுப்பறதுன்னு அவளை டிராப் பண்றான் அரவிந்த். உனக்காக வெயிட் பண்ணி தான் திரும்பி திரும்பி பார்த்தான். நான் தான் ஹார்ன் அடிச்சு நான் இருக்கேன்னு சொன்னேன்.”
“ஓ.. அந்த அளவுக்கெல்லாம் அவனுக்கு என் மேல் அக்கறை இன்னும் இருக்கா..”
“ஏன்ம்மா.. உனக்கும் அரவிந்த்க்கும் எதாவது பிரச்சினையா..”
“அவனுக்கு இப்போ நான் ஜஸ்ட் ஃப்ரெண்ட் தான் ப்பா. அப்படி இருக்கறப்ப பிரச்சினை எங்க வரப்போகுது?. அதான் அந்த பொண்ணு இப்போ நெருங்கி இருக்காளே..”
“ம்ம்.. இந்த வயசுல இதெல்லாம் சகஜம் தான்ம்மா.
ஒன்னை விட ஒன்னு பெட்டரா தான் தோணும். என்ன தான் அரவிந்த் நல்ல பையனா இருந்தாலும், ஒருத்தவங்க குணம் வளர்க்கற விதத்துல தான் வரும். ஆதி வளர்த்தவன் உருவத்தில் மட்டும் இல்ல, குணத்திலேயும் அவனைப் போல இருக்கறது அதிசயம் இல்லையேம்மா..”
“அப்பா. என்ன பேசறீங்க. அரவிந்த் கண்மணி அத்தை வளர்ப்பு. எப்போவும் தப்பா போக மாட்டான்.”
“ஓ.. இப்போதான் அவனை அந்த பொண்ணோட சேர்த்து வச்சு சொன்ன.. அப்பா சொன்னதும் கோபம் வந்துச்சா? அவனுக்கு சப்போர்ட் பண்ற?. அப்ப உன் உள் மனசு அவன் நல்லவன்னு தானே சொல்லுது. காதலிச்சா மட்டும் போதாது. அந்த காதல்ல பிடிவாதம் வேணும். கைவிட்டிட கூடிய காதல் எப்படி சிறந்த காதலா இருக்கும்?. உன் மாளவிம்மா மாதிரி எந்த சூழல்லயும் காதலையும், காதலிச்சவனையும் கைவிடாம இருக்கனும்..”
“அப்பா.. தேவா சித்தப்பா மாளவிம்மாவை உலகத்தில எதை விடவும் அதிகமா நேசிச்சார்ப்பா. ஆனா அரவிந்த் எங்களுக்குள்ள நட்பு போதும்.. எந்த உறவும் வேணாம்னு என்னை கை கழுவிட்டு போக பார்க்கிறான்ப்பா.. நான் மட்டும் காதல்ல பிடிவாதமா இருந்து என்ன பிரயோஜனம்ப்பா?.”
“ஒரு தலைக் காதல் எப்பவும் ஜெயிக்காதுன்னு யார் சொன்னா? இங்க இன்னொரு பக்க காதல் ஏதோ குழப்பத்துல இருக்கு. அதுக்கு காரணம் என்னன்னு கண்டுபிடி. அதை சரியாக்கு. அப்போ ரெண்டு கை ஓசை உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒலிக்கும்.”
“அப்பா..” என்று அவன் கைகளின் மேல் சாய்ந்துக் கொண்டாள். நந்தாவுக்கு சரித்திரம் மீண்டும் திரும்ப போகிறது என்று தோன்றியது. ஆனால் அன்று நீலகண்டன் காதலுக்கு எதிர் பக்கம் நின்றார். நந்தா காதலுக்கு அருகில் நிற்கிறான்.
மாலை நேர சூரியன் இளம் சிவப்பான கதிர்களால் வானத்தை ரம்மியமாக்கி கொண்டிருந்தான்.
நந்தியாவட்டையும், செண்பகமும், மனோரஞ்சிதமும், அந்திமல்லியும், பாரிஜாதமும் அந்த இடத்தையே மலர்வனமாக மாற்றி தந்திருந்தது. மிதக்க வைக்கும் அந்த நறுமண தோட்டத்தில் இணைப்பறவைகளை போல் நுழைந்தனர் ஆதியும், கண்மணியும்.
கைத்தடி இப்போது காணாமல் போயிருந்தது. ஆதியின் மொத்த எடையும் தாங்குபவளாக, தோளுக்கு தோள் கொடுத்து ஒரு தோழியாக நின்றாள் கண்மணி.
மெல்ல மூச்சை இழுத்து அந்த ரோமம் சிலிர்க்கும் வாசனைகளை அனுபவித்தான் ஆதி.
“எத்தனை வருஷம் கழிச்சு இப்படி இந்த வாசனைகளை அனுபவிக்கிறேன் கண்மணி..”
“இனி வசந்த காலம்னு சொல்லாம சொல்லுது இந்த பூக்கள்லாம்..”
“ம்ம்..மிக நெருக்கமா காதலி இருக்கறப்ப.. அவ பூவா.. பூவெல்லாம் அவளான்னு தோணும்..”
“அட.. ஆதி எப்போ கவிஞர் ஆனார்..”
“எப்பவும் இதெல்லாம் வரும்.. படங்களுக்கு ப்ரொட்யூசரா இருக்கறப்ப, பாட்டுக்கு ட்யூன் கேட்கறப்ப எனக்கும் சில விஷயங்கள் தோணும்.. ஆனா மத்தவங்க தொழிலை நாம கெடுக்க கூடாதுன்னு விட்டிருவேன்.. “ சத்தமாக சிரித்தான்.
“ஆஹான்..” என்றாள் கண்மணி.
“அதுவுமில்லாம பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும்னு சொல்வாங்க இல்ல.. தேவா டைரி படிச்சப்ப அவ்ளோ ஆசையா இருந்துச்சு. ஒரு மனுஷன் இப்படியெல்லாம் உருகி உருகி காதலிக்க முடியுமா.. இவ்ளோ கவிதையா வாழ முடியுமான்னு தோணுச்சு.. அப்ப இருந்து நிறைய படிக்க ஆரம்பிச்சேன்..அதான் இந்த உளறல் எல்லாம்.”
“பார்ரா..உளறல்னு நீங்களே சொல்லிப்பீங்களா? எனக்கு நீங்க இப்படி இருக்கறது ரொம்ப பிடிச்சிருக்கு.. போதும் நடந்தது.. உட்காருங்க இங்க..”
“ம்ம். தேவையில்லாத பிடிவாதம் எத்தனை வருஷங்களை வீணாக்கிருச்சு இல்ல..”
“ஆமா.. பழசெல்லாம் விடுங்க. இனி புதுசா வாழ்வோம்..”
“ம்ம்.. செம ரொமாண்டிக்கா இருக்கு இல்ல இந்த கிளைமேட்..” சொல்லிக் கொண்டே அவளின் இடையில் கைக்கோர்த்தான். அவனுக்கு மிக அருகில் வந்தாள் கண்மணி..
இதழ்களால் அவளது வாசத்தை முகர்ந்தான் ஆதி.
சிலிர்க்கும் மயிர்க்கால்கள் அவளுக்கு திருமணத்திற்காக முதன் முதலில் ஆதியை பார்த்த பொழுதை நினைவுப்படுத்தியது. அப்போதும் இப்படித்தானே வார்த்தை வராது அவளை முத்தங்களால் மூர்ச்சையாக்கினான்.
இந்த நெருக்கத்தை இழந்த வருடங்களின் மொத்த நிமிடங்களை கணக்கிட்டு அவளுக்கு முத்தங்களாக திரும்ப தந்தான்.
“போதும்.. விடுங்க..” என்று அவனை நகர்த்தினாள்.
அவளது கைகளை கோர்த்துக் கொண்டு, “கண்மணி.. எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. நீ படங்கள்ல பாட ஆரம்பிச்ச பிறகு.. ஒரு சபால நீ பாடனும். அவ்ளோ பெரிய அரங்கத்துல நான் மட்டும் உட்காந்து அந்த கச்சேரியை கேட்கனும்.. மெய்மறந்து நான் உன்னை பாக்க, நீ வெட்கப்பட்டு கன்னம் சிவந்து, மோகத்தை திரையாக்கி, அப்புறம் நீயே அதை கொஞ்சம் கொஞ்சமா விலக்கி, என்னை ஆசையாய் பாத்து பாடனும்.. உன் பக்கத்துல நெருங்கி வந்து, அந்த வெட்கத்தையும், பாட்டையும் நான் ரசிக்கனும்..”
மனோரஞ்சிதத்தை கையில் எடுத்து அவள் மேல் அதை மயிலிறகால் தடவுவதை போல் தடவினான். அவள் உள்ளம் கூட சிலிர்த்தது.
“நாம எந்த பூவை நினைச்சு முகந்து பாக்கறோமோ அந்த வாசனையை தருமாம் இந்த பூ. அது மாதிரி உன்னை நான் நினைச்சப்படி ஆட்டி வைக்கணும்னு நினைச்சேன் கண்மணி. ஆனா நீ தான் இப்போ என்னை முழுசா ஆட்டி வைக்கிற சோ கால்ட் கடவுளா இருக்க. உன் கையில் இப்போ நான் ஒரு பொம்மலாட்ட பொம்மை.. காலம் எவ்ளோ வேகமா மாறுது இல்ல..”
அவன் வாயை பொத்தினாள்.
அவனுக்கு எதிரில் தரையில் அமர்ந்தாள்.
சிம்மேந்திர மத்தியமத்தில் ஆலாபனையை ராகம் தானம் பல்லவியில் விலாவரித்துப் பாடி,
“என்னை என்ன செய்தாய் வேங்குழலே..” அவள் பாட ஆரம்பித்ததும் ஆதியின் விழிகள் மூடின. அவன் இவ்வளவு நேரம் சொல்லிய அத்தைனையும் நிஜமாவதை போல் அவன் கண்முன் காட்சியாக ஓடியது.
“எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே.. நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய் இந்த இள மனம் இயங்கிடவே..” ஆதியின் கண்கள் திறந்தது. அவளை வைத்த கண் வாங்காமல் காதலால் ஆனவனைப்போல் பார்த்தான்.
கண்மணியின் கன்னங்களில் சூரியனின் இளம் ரோஜா வண்ண கதிர்கள் பட்டுத் தெறித்தது.
ஒற்றைக்கல் வைரம் சூரியனுக்கு இணையாக மின்னியது. அதன் ஒளி ஆதியின் கண்களை நிறைத்தது.
“வேறு ஞாபகங்கள் வருடாமல் நானிருந்தேன்..யாரோ அவன் யாரோ.. யமுனா நதி தீரத்தில் அமர்ந்தொரு இசை கலையால்
.என்னை என்ன செய்தாய்…”
அவள் நாணத்தால் குரல் கனிந்து பாட, அவளை குனிந்து தன் நெஞ்சோடு அணைத்து உச்சி முகர்ந்தான். கன்னத்தில் மட்டுமல்ல, நெற்றியிலும் இதழ் பதித்தால் கள் வெறி தோன்றும் என்று இவர்களை பார்த்தால் பாரதி பாடியிருப்பார்.
ஒருவர் கண்ணில் ஒருவர் மிதந்தனர்.
கண்களை மூடி கண்மணி தன் முகத்தை அவன் முகம் நோக்கி உயர்த்தினாள்.
“புல்லாங்குழலின் துளைகளில் இசை இல்லை. ஒவ்வொரு துளையிலும் விளையாடும் விரல்களின் மாயத்தில் மூச்சு செய்வது தான் இசை.” சொல்லிக் கொண்டே மெல்ல அவனின் விரல்கள் அவளின் இதழ், கண், நாசி, காது என்று ஊர்வலம் போனது. அவளது சிணுங்கல் ஒலி சிருங்கார ஒலியாக ஒலித்தது.
கூடவே அலைபேசியின் ஒலியும். கண்மணி பாடிய ஒரு திரைப்பாடல் தான் அதில் ஒலித்தது. அவர்களின் கவனம் சிதறியது.
ஆதி அதை எடுக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்த ஒலி அவனை எடுக்க வைத்தது.
சுந்தர் அழைத்திருந்தார்.
“சொல்லுங்க சுந்தர் அண்ணா..”
“தம்பி.. ரத்னா வந்திருக்கார். கீழ அப்பாக்கிட்ட பேசிட்டு இருக்கார். உங்களை பாக்கனும்னு கேட்கறார்..”
ஆதி அமைதியாக இருக்க, செய்கையில் யாரென்று கேட்டாள் கண்மணி.
“ரத்னாவா.. ஆச்சர்யமா இருக்கே சுந்தர் அண்ணா.. காத்தில காகிதம் பறந்து தப்பான இடத்துக்கு வந்திருக்கே..”
அவளை பார்த்துக் கொண்டே அவன் பேசியதும் அதிர்ந்தாள் கண்மணி. போகும் உயிரை சாவித்திரி போல் இழுத்துப் பிடித்து நிறுத்தி இருக்கிறாள். யமன் மீண்டும் காரில் ஏறி வீடு நோக்கி வந்தால் அவள் எப்படி தாங்குவாள்?
error: Content is protected !!