Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 16

கள்வன் – 16

 

கதவு திறந்திருக்க வேகமாக உள்ளே நுழைந்தவள் தன் கைக்கடிகாரத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டாள். நேரம் ஒன்பதை தாண்டியிருக்க, தன் வண்டி சாவியை அதன் இடத்தில் மாட்டியவள் மேலும் உள்ளே நடக்க அனைவரும் கூடத்தில் தான் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அவசர ஹை சொன்னவள் அவள் அறைக்குள் நுழைய எத்தனிக்க,

 



Advertisement

“பாப்பா ஏன்டா லேட்?” தந்தை குரல் தடுத்தது.

 

“புது ப்ராஜெக்ட் போய்ட்டு இருக்கு அப்பா…” என்றாள் தணிவுடன்.

Advertisement

 

Advertisement

“வந்து சாப்பிடுடா…” என்றவரின் பரிவான குரல் அவளின் குற்றவுணர்ச்சியைத் தூண்டியது. பெற்றவர்கள் தனக்காக காத்திருக்க அப்படியென்ன மனம் போன போக்கில் சொல்லாமல் கொள்ளாமல் இன்னொருவர் வீட்டிற்கு சென்று உறவாடுவது… உண்மையை சொல்லிவிடுவோமா என்று நா வரை வந்த வார்த்தைகளை மூளையின் கட்டுப்பாட்டின் பேரில் ஒதுக்கியவள்,

 

“நான் அங்கேயே சாப்டுட்டேன்பா… நீங்க சாப்பிடுங்க நான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்றேன்,” என்றவள் யாரையும் ஏறிட்டும் பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்தாள். 

Advertisement

 

ஒரு நாள் சென்றதை மறைத்ததற்கே மனம் நெருடுகிறதே இனி எப்படி இதயன் வீட்டிற்கு  தினமும் சென்று வருவது? வீட்டில் என்ன காரணம் சொல்லுவது? பேசாமல் உண்மையை சொல்லிவிடலாமா? என்று தோன்றினாலும் என்னவென்று சொல்லுவாள்? அப்படியே சொன்னாலும் ஏற்கக் கூடிய காரணமா அது? உனக்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை, இனி இதெல்லாம் செய்யாதே என்றே கூறுவார்கள். அதை செயல்படுத்த முடியுமா? அவன் சரியாவதை பார்க்காமல் மனம் ஓயப்போவதில்லை. இப்போதைக்கு உண்மையை சொல்லாமல் இருப்பது தான் நலம் என்று தனக்கு தானே சப்பை கட்டு கட்டிக்கொண்டாள்.

 

மையல் கொண்ட மனது கள்ளத்தனம் செய்யவும் தயங்காதோ?

 

… 

 

“நான் என்ன சொன்னேன் நீங்க என்ன செய்றீங்க? மணி ஒன்பதரை  ஆகிடுச்சு… இவ்ளோ லேட்டா வராதேன்னு தானே சொல்ல சொன்னேன்… நீங்க கமுக்கமா இருக்கீங்க…” இனியா அறைக்குள் நுழைந்தவுடன் ரமேஷை ஒரு பிடிபிடித்தார் கீதா.

 

“அவளே சோர்வா வரா… விடு நாளைக்கு பேசிக்கலாம்…” 

 

“நீங்க சாப்பிட சொல்லவும் அவள் முகமே மாறிப்போச்சு. என்னனு கூப்பிட்டு கேளுங்க… எதையோ மறைக்கிறாளோனு சந்தேகமாக இருக்கு… போய் பேசுங்க…” என்று கீதா நிமிண்ட அசையவில்லை ரமேஷ்.

 

“அதெல்லாம் தூங்கி எழுந்தா சரியாகிடுவா… நீ சும்மா ஏதேதோ போட்டு குழப்பிக் கொள்ளாதே…” என்றவர் சத்தமின்றி அவ்விடத்தை காலி செய்தார்.

 

“பொண்ணை ஏதாவது சொன்னால் அப்படியே நழுவிடுவீங்களே…” என்று அங்கலாய்த்துக் கொண்டே வீட்டை பூட்டிவிட்டு மகனை உறங்க சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார்.

 

அத்தனை நேரம் அமைதியாக இருந்த இனியன் மெல்ல எழுந்து இனியா அறைக் கதவு சாற்றி இருக்கவும் அதை தட்டினான். 

 

“கதவு லாக் போடல உள்ள வா…” என்று பதில் வந்ததும் இனியன் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான். கட்டிலில் படுத்திருந்தவள் எழாமலேயே, “என்னடா?”

 

தீர்க்கமான பார்வையை அவள் மேல் செலுத்தியவன் அவள் அருகில் வந்து அமர்ந்து, “எங்க போயிட்டு வந்த இனியா?”

 

“இதென்ன கேள்வி? ஆபீஸ் தான்,” என்றாள் சலனமின்றி.

 

 

[the_ad id=”6605″]

 

“டோன்ட் ஆக்ட் ஸ்மார்ட்… நீ பொய் சொல்ற இனியா. இதற்கு முன்னெல்லாம் இப்படி இருந்ததில்லை… இரண்டு நாளாகவே ஏதோ ஒரு யோசனையில் இருந்த அண்ட் இப்போ ஏதோ வித்தியாசம் தெரியுதே… அப்பா உன்னை சாப்பிடச் சொல்லும் போது உன் முகமே சரியில்லை…” தம்பி தமையனாக , தந்தையாக முயல அதை வளரவிடாமல் கத்தரித்தாள் இனியா.

 

“நீ என் தம்பிடா… அது மாதிரி நடந்துக்கோ. நீயே ஏதேதோ கற்பனை பண்ணிக்கிட்டு என்னை தேவையில்லாமல் நோண்டாத…” என்று கறாராய் சொன்னவள் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு முகத்தை மூடிக்கொண்டாள்.

 

“என்னவோ என் வாயை அடைக்கிற… ஒரு நாள் தெரியாமலா போய்டும்…” என்றுவிட்டு வெளியேறினான். அவன் வெளியே சென்றுவிட்டானா என்பதை உறுதி செய்துகொண்டு போர்வையினுள் இருந்து மெல்ல எட்டிப் பார்த்து ஆசுவாசபட்டுக் கொண்டாள்.

 

◆◆◆

 

“ரொம்ப நாள் கழித்து நம் வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்டுச்சு இன்பா… மனசு நிறைஞ்சி போச்சு…”

 

“ம்ம்… இதயன் கூட சிரிச்சிட்டே இருந்தான்மா… நம்ம தப்பு பண்ணிட்டோம் அம்மா… எல்லோரையும் போலவும் தான் இல்லை, தன்னால எதுவும் செய்யமுடியாதுன்னு வருத்தப்படுவானு நினைத்து அவனை ரூமுக்குல்லேயே முடக்கிட்டோம்…” என்று வருந்தி பேச,

 

தன் மடியில் இருந்த இன்பனின் சிகை கோதியவர், “நான் கூட அவன் இப்படி ஆகிட்டானேன்னு கவலைப்பட்டேன் ஒழிய அவனை தேற்றுவதற்கான முயற்சி எடுக்கவில்லை. வெறும் மருந்து மாத்திரையையே நம்பி இருந்து விட்டோம்…”

 

“உடலுக்குத் தான் அந்த மருந்தெல்லாம்… அவன் மனசுக்கான மருந்தை நாம் கொடுக்கலமா…”

 

“போனது போகட்டும்… இப்போது தான் நமக்கு ஏதோ ஒரு வெளிச்சம் வந்தது போல இருக்கு. இதை தக்க வைத்து அவனை எப்படியாவது குணப்படுத்திடனும் இன்பா…”

 

“சரியா சொன்னமா… நீ கல்யாணம் பண்ணிக்க சொன்ன போது திருமணம் எப்படி நமக்கு மாற்றத்தை தரும் என்று யோசித்தேன். ஆனால்… இப்போ எனக்கு மனசு நிறைஞ்சு இருக்கு. இதயன் சரியாகிடுவானு நம்பிக்கை வந்திருக்கு…”

 

“ரெண்டு பெண்களுமே நல்ல பொண்ணுங்கடா… யுக்தா தான் கொஞ்சம் தயங்கி தயங்கி பேசுறா… ஆனாலும் நம்ம வீட்டுக்கே வந்துட்டா எல்லாம் சரியாகிடும்…” தாய் மனம் திறக்க அமைதியாக அதை செவியில் வாங்கிக் கொண்டான் மகன்.

 

சற்று நேர நிசப்தத்திற்கு பின், “இதயனுக்கு இனியா இங்கே வருவது பிடிக்கலைனு நினைக்கிறேன்மா… வெளில தூக்கிட்டு வரச்சொன்னது இனியான்னு சொன்னதும் அவன் முகமே மாறிடுச்சு…”

 

“புதுசா யார் வீட்டிற்கு வந்து அவனிடம் பேசினாலும் தான் அவனுக்கு பிடிக்குறது இல்லை… காலப்போக்கில் எல்லாம் சரியாகிடும்டா… இனியா நாளைக்கு காலையிலேயே வரேன்னு சொல்லிட்டு போய் இருக்கா…” சிவகாமி செய்தி சொல்ல இனியனோ,

 

“காலையிலா ஏன்?” என்ற குரலில் சந்தேகம் கலந்த வியப்பு.

 

“ஏதோ ஒரு பை குடுத்துட்டு காலையில் வந்து அந்த வேலையை செய்றேன்னு சொல்லிட்டு போய் இருக்கா…”

 

“பை? என்ன இருக்கு அதில்?”

 

“தெரில… அவளுக்கு வேண்டியது ஏதாவது இருக்கும்.” என்று சிவகாமி முடித்துக்கொள்ள அவன் விடுவதாய் இல்லை.

 

“அதுல என்ன இருக்குனு பாருமா… இனியாவோடதுனா அவங்க வீட்டிற்கு எடுத்துட்டு போய் இருப்பாங்க… இன்னைக்கே இவ்வளவு பொருள் வாங்கிட்டு வந்து இருக்காங்க… எவ்வளவு செலவு ஆச்சுன்னு தெரில… அதுல என்ன இருக்குனு பாரு நான் யுக்தாகிட்ட கேட்டு பணம் கொடுத்துடுறேன்…”

 

“அப்படி எதுவும் பண்ணிடாதடா லூசு பயலே… அதெல்லாம் யுக்தா வாங்கியதாம். நம்ம வீடுன்னு நினைச்சி தான் வாங்கி இருக்கா நாமே பணத்தை கொடுத்து அவளை அந்நியப்படுத்தி விடக்கூடாது… அவள் விருப்பப்பட்டா அவளே செய்யட்டும். நீ எதுவும் கேக்காத…”

 

ம் போட்டவன் மானசீகமாக அவளுக்கு நன்றி தெரிவித்து அவ்விரவை நெகிழ்ச்சியுடன் கழித்தான். அன்று மாலை நடந்த நிகழ்வுகளே அவனை நெகிழ்த்த போதுமானதாக இருந்தது. அந்த நெகிழ்ச்சி இனியாவின் உரிமையான செயல்களால் எழுந்த நெருடலையும் புறந்தள்ளியிருந்தது.

 

◆◆◆

 

காலை காபி அவனின் மெலிதான ரோமங்களை மிகைப்படுத்தி மீசையாக காண்பிக்க அதை துடைத்துக் கொண்டே கீதாவை கேள்வியாய் ஏறிட்டான் இனியன், “இவ்வளவு சீக்கிரமா எங்கம்மா போறா அவ?” 

 

“யுக்தா வீட்டுக்கு போய்ட்டு அப்படியே ஆபிஸ் போறாளாம்.”

 

புருவங்கள் கேள்வியில் முடிச்சிட, “இவ்ளோ காலையிலா? எப்போதும் அவளுக்கு ஏழு மணிக்கு தானே விடியும் இன்று என்ன ஆறு மணிக்கே ஆள் எஸ்கேப்?” 

 

“நீ என்னடா இவ்வளவு கேள்வி கேட்டு இன்வெஸ்டிகேஷன் பண்ற? போய் கிளம்புற வழியைப் பார். உன் காலேஜ் பஸ்க்கு நேரமாகிடும்…” என்க, யோசனையுடனே அங்கிருந்து நகர்ந்த இனியனின் அகத்தில் சந்தேக மேகங்கள் விஸ்வரூபமெடுத்தன. அவளின் செயல்கள் ஏனோ விசித்திரமாய் பட்டது அவனுக்கு. பெற்றோர் பெண்ணின் மீதும், அவள் சொல்லின் மீதும் அசைக்க முடியா நம்பிக்கை வைத்திருந்தாலும், இனியனால் ஏனோ அவளின் வார்த்தைகளை, காரணங்களை நம்பமுடியவில்லை.

 

அதை அறியாமல் துள்ளலுடன் இதயன் வீட்டினுள் ஆன்ட்டி என்று கூவிக்கொண்டே நுழைந்தாள் இனியா. அதே உவகையுடன் வரவேற்ற சிவகாமி அவளை உபசரிக்க இனியாவின் கவனம் முழுக்க இதயன் அறை புறமே… அவளின் ஏக்கம் புரிந்ததோ என்னவோ அந்த அறையின் கதவை திறந்துகொண்டு இன்பன் வந்தான். அவனைப் பார்த்து கடமைக்காக புன்னகைக்க அவளின் விழியும், அகமும் அவனைத் தாண்டி அறை வாயிலில் பதிந்தது.

 

“குட் மார்னிங்…” என்ற இன்பனின் வாழ்த்தை புறந்தள்ளியவள் நேற்று அவள் வைத்துவிட்டு சென்ற பையை எடுத்துக்கொண்டு, “வாங்கியதை இன்னும் முழுதாக அடுக்கவில்லை அதனால் காலையிலேயே வந்துவிட்டேன்.” என்க இன்பன் தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். அவன் எப்போது நகர்வான் என்று காத்திருந்தாலோ என்னவோ மின்னலென இதயன் அறைக்குள் நுழைந்தாள். 

 

[the_ad id=”6605″]

 

ஏசி அறையின் குளுமையில் இதயன் ஆழ்ந்த நித்திரையில் சயனித்திருக்க, எப்போதும் ஒருவித அலைப்புறுதலுடன் கவலை தாங்கிய அவனின் முகம் தற்போது நிர்மலமாய் இருக்க, மெல்ல அடியெடுத்து வைத்து அவன் அருகே கட்டிலை நெருங்கியவள் அதில் அமரலாமா  வேணாமா என்று தயங்கியபடி நின்று அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் விழிகள் அவனை மொய்க்க, அவள் விரல்களோ அவன் நெற்றியை மறைத்திருக்கும் கேசத்தை ஒதுக்கிவிடத் துடித்தது. யோசித்தால் தானே குழப்பமும், தயக்கமும் என்று நினைத்தாளோ என்னவோ… யோசியாமல் மெல்ல கையை உயர்த்தி அவன் நெற்றியில் விழுந்திருந்த கேசத்தை ஒதுக்கி அவனின் தேகத்தை முதன்முதலாய் தன் மேனியில் உணர்ந்து சிலிர்த்தாள். அந்த சிலிர்ப்பை தூக்கத்தில் அவனும் உணர்ந்தது போல புருவங்களை சுருக்கினான். அவளின் தொடுகையை அவன் உணர்ந்தது அவளுள் பரவசத்தை கிளப்ப மனம் துள்ளிக்குதித்து ஆட்டம் போட்டது. விரல்கள் நிலையில்லாமல் பரவசத்தில் நடுங்க, இதயம் தடதடத்தது. அதரங்களின் நடுக்கத்தையும் மீறி அதை மெல்ல பிரித்தவள்,

 

“காலை வணக்கம்” என்க, அவளது வாழ்த்தில் அவனது கருவிழிகள் உயிர் பெற்று மூடிய இமைகளுக்குள் நர்த்தனமாடியது.

 

இதோ விழித்து விடுவான் என்ற ஆவலுடன் அவனையே பார்த்து வைக்க அவளை ஏமாற்றாமல் கண்களை மெல்ல திறந்தான் இதயன். அவனிடம் அசைவு தெரியவும் சுதாரித்து பட்டென்று தன் கையை தன்னிடம் இழுத்துக் கொண்டாள் பெண்.

 

தெளிவற்ற பிம்பமாய் தன் விழிகளில் தென்பட்ட இனியா அவனின் உறக்க நிலையை அசைத்துப் பார்த்தாள். அவள் எங்கே தன் அறைக்கு வரப்போகிறாள்… தான் ஏதோ கனவு காண்கிறோம் என்று எண்ணிக்கொண்டு கண்களை இறுக்க மூடி பின் திறந்து பார்த்தான் இதயன். அப்போதும் அவள் உருவம் கண்களில் நிற்க, கனவா நனவா என்றதொரு போராட்டம் அவனுள். இடையில் இவள் எதற்கு என் கனவில் வரவேண்டும் என்ற குழப்பம் வேறு… 

 

“நீங்க கனவெல்லாம் காணல… ஐ அம் ரியல்…” என்றாள் அவன் அகம் படித்தவளாய்.

 

இளையவனுக்கு நேற்று அதிர்ச்சி கொடுத்திருக்க, இன்று இதயனின் இதயத்தை எகிறச் செய்திருந்தாள் இனியா. அவளின் வருகையை எப்படி எடுத்துக்கொள்வது என்றே விளங்கவில்லை அவனுக்கு. தனக்காக ஒருவள் வருகிறாள்; தன் நலம் பேணுகிறாள் என்ற நினைப்பு மனதிற்கு ஒருபுறம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், மறுபுறம் கோபத்தையும் வரவழைத்தது. அவளின் பரிதாபம் எனக்குத் தேவையில்லை என்றதொரு வீம்பு அவனிடத்தில்… மங்கையவள் பரிதாபத்தை தாண்டி வேறொரு உணர்வில் பயணித்துக் கொண்டிருக்கிறாள் என்று பாவம் அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஏன் அவளுக்கே தெரியவில்லை… தெரியவரும் போது?

 

“இப்போ எதற்கு முகத்தை இப்படி உர்ருன்னு வச்சி இருக்கீங்க? நேற்று எவ்வளவு அழகாய் சிரிச்சீங்க… அதே மாதிரி ஒரு ஸ்மைல் குடுங்க பார்க்கலாம்…” அவன் எதிர்த்து பேசமாட்டான் என்ற நிதர்சனம் நிரம்பவே அவளுக்கு தைரியம் கொடுத்திருந்தது. 

 

சலனமற்ற விழிகளே அவளுக்கு பதிலாய் கிடைக்க,

 

“இப்போ என்ன கோபம் உங்களுக்கு?” என்று கேட்டவள் ஏதோ புரிந்தவளாய் பதிலையும் கேள்வியாக்கினாள், “ஓ… இவள் எதற்கு தேவையில்லாமல் என் மேல் பரிதாபம் காட்டுகிறாள்னு நினைக்கிறீங்களோ?”

 

தன் உணர்வுகள் குறித்த அவளது கணிப்பை மெச்சிக்கொண்டவன், விழித்திருந்தால் தானே அவள் தன்னை ஆராய முடியும் என்றெண்ணி படக்கென்று கண்களை மூடிக் கொண்டான். அவனின் செய்கையை வாய் பிளந்து அதிர்ச்சியுடன் பார்த்தவள் அவன் கன்னத்தை தட்டினாள், “கண் திறந்திருந்தால் தான் இவள் நோண்டி நோண்டி கேள்வி கேப்பானு கண்ணை மூடிகிட்டீங்களா? நேற்று தான் பிரண்ட்ஸ் ஆனோம் நீங்க அதுக்குள்ள என்னை கழட்டிவிடப் பாக்குறீங்களா?”

 

பிரெண்ட் என்றதும் கண்களைத் திறந்து அவளை முறைத்து வைத்தான். 

 

“ஹீ… ஹீ… நீங்க என்ன பிரெண்டா நினைக்கல என்றாலும் நீங்க எனக்கு பிரெண்ட் தான்.” 

 

முறைப்பு இன்னும் பலமாகியது.

 

“சரி சரி முறைக்காதீங்க கண் வலிக்கும்… நான் சிலது வாங்கிட்டு வந்திருக்கேன்… உங்களுக்கு ஓகேவான்னு பார்த்து சொல்லுங்க… ஓகே இல்லனாலும் மாத்த முடியாது…” என்றவள் தான் எடுத்துவந்த பையினுள் இருந்து வீட்டினுள் வைக்கும் சிறிய செடிகள் அடங்கிய செராமிக் தொட்டிகளை எடுத்து ஒன்றை அவன் அருகில் இருந்த மேசையிலும், மற்றவற்றை அங்கிருந்த இரு சன்னல் கட்டைகளிலும் வைத்தாள்.

 

‘முறைத்தால் கண்ணு வலிக்குமா? ஓகே இல்லைனாலும் மாத்த முடியாதாம் பின்னர் எதற்கு அதை ஒரு கேள்வியாய் கேக்கணும். இவள் என்ன டிசைன்ல பேசுறானே புரியல?’ இதயன் மனம் அவளின் பேச்சுக்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தது.

 

[the_ad id=”6605″]

 

“இது காற்றை சுத்தப்படுத்துவதோடு, மனஅழுத்தத்தையும் குறைக்கும்… இப்படி நீங்க ரூமிலேயே இருந்தால் தேவையில்லாமல் குழப்பிக்கொண்டு தேவையில்லாததிற்கு  எல்லாம் கோபப்படுவீர்கள்…” என்று தன்பாட்டிற்கு பேசிக்கொண்டே சென்றவள் இன்பனின் வரவை கண்டு பேச்சை நிறுத்தினாள்.

 

“என்னங்க ஒரே நாளில் எங்க வீட்டோட மனநிலையையே மாத்திட்டீங்க… இப்போதும் ஏதேதோ செய்றீங்க… ஏன் இதெல்லாம்?” என்று இன்பன் கேள்வியுடன் இதயன் அருகில் அமர்ந்து தன் கையோடு கொண்டுவந்திருந்த சுடுநீரில் இதயன் முகத்தை துடைத்து சுத்தப்படுத்த துவங்கினான்.

 

“நேற்று ஒரு நாள் மட்டும் மனநிலை மாறியிருந்தால் போதுமா? இதுவும் ஒருவித சிகிச்சை தான்… அரோமேட்டிக் டிரீட்மென்ட் கேள்விபட்டு இருக்கீங்களா? அதுமாதிரி தான் இதுவும்… இது ஒருவிதமான ஸ்டரெஸ் ரிஃலீப்…” பதில் அளித்தவள் திரைசீலையை ஒதுக்கி சன்னல் கதவுகளை திறந்துவிட்டாள். திறந்தவுடனே காலைத் தென்றல் ஒருவித புத்துணர்ச்சியையும் சேர்த்து உள்ளே தள்ளிக்கொண்டு வந்தது.

 

“இந்த பையில் சில விதைகள் இருக்கு… வெளியே வராண்டாவை தாண்டி இருக்கும் இடத்தில் விதைச்சிடுறீங்களா?” இன்பனிடம் தன் வேண்டலை வைக்க,

 

“ஸ்யூர்… ரொம்ப வேகமா இருக்கீங்க இனியா…”

 

“பாராட்டுறீங்களா? கவலைப்படுறீங்களா?”

 

“ரெண்டுமே இல்லை… உங்களை சந்தித்ததில் பெருமைப்படுறேன்… நீங்களும், யுக்தாவும் சேர்ந்து இந்த வீட்டையே உயிர்ப்பாக்கிடீங்க.”

 

“ம்க்கும்… நீங்க தான் பெருமைப்படுறீங்க… உங்க அண்ணன் நம்ம ரெண்டு பேரையும் முறைச்சு முறைச்சு பாக்குறாரு…” 

 

இன்பன் திரும்பி தமையனைப் பார்க்க மெய்யாகவே அவர்கள் இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தான் இதயன். அவனே எப்போதுடா இனியா வெளியேறுவாள் என்று காத்துக் கொண்டிருக்க தம்பி அவளை பெருமையாய் பேசி அவளுக்கு ஒத்தூதுவது அவனை கடுப்பாக்கியது.

 

“டேய் ஏன்டா உர்ருனு இருக்க… இப்போ என்ன ஆச்சு? கொஞ்சம் சிரிச்சா தான் என்ன?” 

 

என்றும் இல்லாமல் இன்று இன்பன் அவனைத் தன்மையாய் கடிந்து கொள்ள, அவனை வெட்டும் பார்வை பார்த்தான். வேறென்ன செய்ய முடியும் அவனால்?

 

வீட்டில் எல்லோரையும் அவள் வசமாக்கிக் கொண்டிருக்க, எங்கே தானும் அவள் வசமாகிவிடுவோமோ என்ற அச்சம் அவனை பிடித்துக்கொள்ள, அவளையும் பிடிக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.

 

*^*^*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!