Skip to content
Post Views: 13,632
இரண்டு வாரங்கள் முடிந்திருக்க, உச்சபட்ச கொதிநிலையில் இருந்தான் திவாகர். காவ்யாவிடமிருந்து சுத்தமாய் இதனை எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே மறுகல்யாணம் செய்து வைக்க முயன்று கொண்டிருந்தார் திவாகரின் அன்னை.
தற்போது காவ்யாவின் விவாகரத்து முடிவு இவர்களுக்கு மேலும் மகிழ்வை கொடுக்க, “அவளுக்கே அவ்வளோ இருந்தா நமக்கு எவ்வளோ இருக்கும்? அந்த கழுதையை அத்துவிட்டுடு. அவளை விட நூறு மடங்கு நல்ல பொண்ணா பார்த்து ஒரே மாசத்துக்குள்ள உன் கல்யாணத்தை முடிக்கிறேன்” என்றார் திவாகரின் அன்னை.
“வாய மூடும்மா” என்று கத்தினான் ஆத்திரமாக.
“நோட்டீஸ் அனுப்பினது அவ. நான் எதுக்குடா வாய மூடனும்? கஷ்டப்பட்டு பெத்து வளர்த்திருக்கேன், உன்னை வேணாம்னு சொன்னவளை இனி நீ நினைக்கவே கூடாது” என்றார் பிடிவாதமாக.
Advertisement
“அவளை நினைக்காம என்னால இருக்க முடியாதும்மா, அவ இடத்துல வேற யாரும் வர முடியாது. உன் பிள்ளை இப்படியே இருக்கனுமா? இல்ல பொண்டாட்டி பிள்ளைனு வாழனுமானு யோசிச்சு பேசு” என்றான் இவனும் பிடிவாதமாகவே.
“ஆனா அவளுக்கு அந்த நினைப்பு இல்லையேடா… இத்தனை வருசம் கழிச்சு என்ன நினைப்புல நோட்டிஸ் அனுப்பியிருக்கானு நீ யோசி”
“அப்படின்னா?” என்றான் அதிர்வோடு.
Advertisement
“அப்படின்னா… அதான். அவங்க வீட்டுல வேற கல்யாணம் செய்ய முடிவெடுத்துருப்பாங்களா இருக்கும்” என்றதும் “ம்மா” என்று கத்தினான் கோபமாக.
Advertisement
“ஏண்டா கத்துற? மறுகல்யாணம் செய்யும் எண்ணமில்லைனா எதுக்கு இந்த நோட்டீஸ்ன்றேன்? நீ ஏத்துக்கிட்டாலும் இல்லைனாலும் இதான் உண்மையா இருக்கும்” என்றார்.
திவாகர் காவ்யாவிற்கு அழைத்தான். ஒருமுறையல்ல, அரைமணி நேரம்வரை அழைத்துக்கொண்டேயிருந்தான் கணக்கில்லாமல். காவ்யா அழைப்பை ஏற்கவேயில்லை. அதில் இன்னும் மகிழ்ந்தார் திவாகரின் அன்னை.
திவாகர் வீட்டை விட்டு வெளியேற, “போய் நல்லா விசாரிச்சுட்டு வா. நான் சொன்னது உண்மையா இருந்தா அவளை தலை முழுகிடனும்” என்றார் உயர்ந்த குரலில்.
Advertisement
திவாகர் வீட்டின் வேலையாட்களில் ஒருவர் விஷ்ணுவிற்கு அழைத்து நடந்ததை சொன்னார் விஷ்ணுவின் கட்டளைக்கு பயந்து.
தந்தைக்கு அழைத்தவன் விசயத்தை சொல்லி, “அப்பா காவ்யா ஹாஸ்டல்லதான இருக்கா?” என்றான்.
“ஆமாம் விஷ்ணு”
“எக்காரணம் கொண்டும் திவாகரை சந்திக்கவே கூடாதுனு சொல்லிடுங்க. போனும் அட்டன் பண்ணக்கூடாது. அவன் காவ்யாவை பார்க்கனும்னா நம்ம வீட்டுக்குத்தான் வந்தாகனும்” என்றான் கட்டளையாக.
“சரிப்பா, நான் சொல்லிடறேன்” என்றார் கோபாலன்.
“எனக்கும் இங்க முக்கிய வேலை முடிஞ்சதுப்பா, இந்த வாரம் வீட்டுக்கு வரேன்” என்று தகவல் சொல்லி இணைப்பை துண்டித்தான்.
ஒரு வாரத்திற்கு பிறகு இன்றுதான் சற்று ஓய்வு கிடைத்தது விஷ்ணுவிற்கு. காலை பதினொரு மணி என்பதால் ‘க்ளாஸ்ல இருக்கியா?’ என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.
‘எஸ் புருஷரே’ என்று பதில் செய்தி அனுப்பினாள்.
சிரித்தவன் அவளின் டி.பியை பார்த்தான். நினைத்த மாதிரியே மாற்றியிருந்தாள். திருமணமாகி இரண்டு வாரத்திற்குள் நான்காவது முறையாக டிபியை மாற்றியிருந்தாள்.
இதற்கு முன்பெல்லாம் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைதான் வைத்திருந்தாள். ஆனால் இன்று விஷ்ணு அவளுக்கு பழம் கொடுப்பதை வைத்திருந்தாள்.
திருமணம் முடிந்து விஷாலினி வீட்டிற்கு வந்தபின்னே மேகலை பால் பழம் உண்ண கொடுத்தபோது எடுத்தது. விஷ்ணுவின் சித்தப்பா மகன்தான் படமெடுத்திருந்தான். அவனிடமிருந்து வாங்கியிருக்கிறாள் என்று புரிய, விஷாலினியை பார்க்கும் ஆவல் அதிகமானது விஷ்ணுவிற்கு.
‘ஈவ்னிங் கால் பண்ணு’ என்று செய்தி அனுப்பிவிட்டு படுத்துறங்கினான்.
*** *** ***
மதியம் போல் காவ்யா படிக்கும் கல்லூரிக்கு வந்த திவாகர் அவளின் தோழிகளிடம் விசாரித்தான். காவ்யா காலேஜ்க்கு வந்து ஒருவாரம் ஆகுது. என்று காவ்யா சொல்லிக்கொடுத்ததை போலவே சொன்னார்கள்.
‘பிக்கப் மை கால் காவ்யா’ என்று குறுஞ்செய்தி அனுப்பினான். ஆனால் அதை பார்த்ததற்கான அறிகுறியே இல்லை.
‘வேறவன் கிடைச்சிட்டானா? அதான் நோட்டீஸ் அனுப்பியிருக்கியா?’ என்று செய்தி அனுப்பினான். அதை பார்த்தவள் மனம் உடைந்து போனது. ஆனால் இதற்கும் பதிலளிக்கவில்லை. தான் பார்த்ததற்கான அறிகுறி தெரியாவண்ணம்தான் செய்தியைப் பார்த்தாள்.
இவளை எப்படி சந்திப்பது? நிச்சயம் பெற்றோர் வற்புறுத்தலால்தான் இதை செய்திருப்பாள். ஆனாலும் இப்படி செய்யலாமா? என்னைத் தெரியாதா என்று நினைத்தவன் மனம் உலையாய் கொதித்தது. அப்போ அவங்க சொன்னா வேறவனை கட்டிப்பியா? என்று நினைத்து நினைத்து மருகினான்.
என்றைக்கானாலும் தன்னோடு வாழ வந்திடுவாள் என்ற கர்வமெல்லாம் காணமல் போயிருக்க, தற்போது காவ்யா அழைப்பையும் ஏற்காமல், குறுஞ்செய்திக்கும் பதிலளிக்காமல் போகவே, எங்கே தன்னை விட்டு மொத்தமாய் விலகிடுவாளோ என்ற பயம் வந்தது திவாகருக்கு.
அடுத்தடுத்த நாளும் கல்லூரிக்கு வந்தான். ஆனால் தோழிகள் சொன்ன பதிலையே சொன்னார்கள். தனது அழைப்பையும் ஏற்கவில்லை. விவாகரத்து கோரி நீதிமன்ற வளாகத்திற்கும் செல்லும் நிலையை ஏற்கவே முடியவில்லை திவகரனால். வேறு வழியே இல்லாமல் காவ்யாவின் வீட்டிற்கு செல்லலாமா என்று யோசித்தான்.
அடுத்தமாதம் வழக்கை சந்திக்க நீதிமன்றம் சென்றாக வேண்டும். அப்படியொன்றும் உடனே விவாகரத்து செய்திட முடியாதுதான். தனக்கு விருப்பமில்லை என்று சொல்லலாம். ஆனாலும் தன் வீட்டில் நடந்ததை நினைத்து பிரிவுதான் வேண்டும் என்று அவள் பிடிவாதமாய் நின்றால் என்று யோசிக்க யோசிக்க திவாரகனின் நிம்மதி மொத்தமாய் பறிபோனது.
மேலும் நான்கு நாள்கள் முடிந்த நிலையில் சரியான தூக்கம் இல்லை திவாகருக்கு. ஒருவேளை அன்னை சொன்னது போல மறுமணம் செய்ய நினைத்திருப்பாளோ? அவளின் பெற்றோர் சொல்லுக்கு கட்டுப்பட நினைத்திருப்பாளோ என்று யோசனை வர, சிறு தாமதமும் இன்றி காவ்யா வீட்டிற்கு கிளம்பினான்.
விஷ்ணு வீட்டில்தான் இருந்தான். அசுரனின் ஓயாத சத்தத்தில் கோபாலன் கதவை திறக்கவே, திவாகரனைப் பார்த்ததும் விஷ்ணு முன்பே சொல்லிக்கொடுத்ததை போல, “யார்ப்பா நீ?” என்றார்.
“முதல்ல இந்த நாயை பிடிச்சு கட்டிவைங்க” என்று அசுரனை காண்பித்தான்.
“எங்க நாயை நாங்க எப்படி வேணும்னாலும் விடுவோம். உனக்கு யார் வேணும்னு சொல்லு” என்றார் கோபாலன்.
“என் பொண்டாட்டி காவ்யாவை பார்க்க வந்தேன், அவளை கூப்பிடுங்க”
“உன் பொண்டாட்டி காவ்யா இங்க இல்ல, என் பொண்ணு காவ்யாதான் இருக்கா. என் பொண்ணை நீ பார்க்குறதுல எனக்கு விருப்பமில்ல. கிளம்பு. எங்க பார்க்கனுமோ அங்க பார்க்கலாம்” என்று பதிலளித்து உள்ளே சென்றார் கோபாலன்.
“ஓ… நான் யாருனு தெரிஞ்சேதான் கேட்டை கூட திறக்காம பேசுறிங்களா? என்னைக்கா இருந்தாலும் நான்தான் உங்க மாப்பிள்ளை” என்றான் கர்ஜனையாக.
தந்தையோடு வெளியே வந்த விஷ்ணு, “ஏண்டா நாய் மாதிரி கத்துற?” என்று திவாகரை அதட்டி, “அசுரா அமைதியா இரு. அவன்தான் அறிவில்லாம கத்துறான்னா அவனுக்கு சரியா நீயும் கத்துற” என்று நாயை அதட்டினான் திவாகரை பார்த்தவாறே.
“யாரைடா சொன்ன நாய்னு?” என்று திவாகர் கத்த, “உன்னைத்தான் சொல்றேன்னு இன்னும் புரியலையா?” என்றான் விஷ்ணு.
வெளியே வந்த பிரபாவதி, “விஷ்ணு, எதுவானாலும் பேசித் தீர்க்கலாம். உள்ள கூப்பிடு” என்றார் தவிப்போடு.
“இதை நாம பேசி தீர்த்தா சட்டம் ஒத்துக்காதும்மா. கோர்ட் தீர்த்து வச்சாதான் சரி வரும்”
“வேண்டாம் விஷ்ணு” என்று பிரபாவதி மன்றாட, திவாகருக்கு சின்ன தெம்பு வந்தது. “என்னை டிவோர்ஸ் பண்ணிட்டு காவ்யா நிம்மதியா இருக்கமாட்டா, அவளைப் புரியாம உங்க மகன் ஆடுறான்” என்று முறையிட்டான் பிரபாவதியிடம்.
“காவ்யா நிம்மதியைப் பத்தி கவலைப்பட நாங்க இருக்கோம். எங்க பேச்சை மீறி இனி எதுவும் செய்யமாட்டா. இப்போகூட உள்ளதான் இருக்கா. நாய் மாதிரி நீ கத்தியும் வெளில வந்தாளா? இல்லையில்ல? இதுலயே புரியலையாடா உனக்கு?” என்றவன், “எதுவானாலும் கோர்ட்ல பேசிக்கோ. இங்க வந்து கத்திட்டிருந்த நியுசன்ஸ் கேஸ்ல உள்ள தள்ளிடுவேன்” என்றான்.
“காவ்யாவை பார்க்காம நான் நகரமாட்டேன்” என்று திவாகர் பிடிவாதமாய் சொல்ல, சித்தார்த்தின் அப்பா கான்ஸ்டபிள் நாகநாதனுக்கு அழைத்தவன், “அங்கிள், இன்ஸ்பெக்டர் இருக்காரா? போனை அவர்கிட்ட கொடுங்க” என்றான்.
விஷ்ணு டி.எஸ்.பி என்றெல்லாம் திவாகருக்கு தெரியாது ஆதலால், பயம் காட்ட நினைக்கிறான் என்று அங்கேயே நின்றிருந்தான். பத்து நிமிடத்தில் இன்ஸ்பெக்டர் வரவே, காக்கி சீருடையைப் பார்த்ததும் பயந்துதான் போனான் திவாகர்.
விஷ்ணு வீட்டின் கேட் அருகே வந்த இன்ஸ்பெக்ட்டர் விஷ்ணுவிற்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்த, தலையசைத்து மரியாதையை ஏற்றவன், விசயத்தை சுருங்க சொல்லி, “கோர்ட்ல பார்த்துக்கோனு சொன்னா கேட்கமாட்டேங்கிறான். ஒருமுறை நல்லவிதமா சொல்லிப்பாருங்க, இல்ல ஸ்டேஷன்கு கூட்டிட்டு போய் நம்ம பானியில சொல்லி புரிய வைங்க” என்றான்.
“எஸ் சார்” என்ற இன்ஸ்பெக்ட்டர் திவாகரைப் பார்க்க, இன்ஸ்பெக்ட்டர் விஷ்ணுவிற்கு கொடுக்கும் மரியாதையில் மேலும் பயந்தவனாய் “நா… நான் கிளம்பறேன்” என்று கிளம்பினான்.
பிறகு இன்ஸ்பெக்டருக்கு நன்றி சொல்லி அனுப்பி வைத்தான். “ரொம்ப பயந்துட்டான் விஷ்ணு, எதாவது விபரீத முடிவெடுத்துட போறான்” என்று மனைவிக்கு கேளாதபடி கிசுகிசுத்தார் கோபாலன்.
“அப்படி ஆகாதுப்பா” என்றவன், “ம்மா டீ போடு” என்றான்.
“டீ போடத்தான் நானா? எதுக்கும் என் பேச்சை கேக்குறதில்ல. காவ்யா வீட்டுல இருக்கானு அந்த பையன் நினைச்சிருப்பான். காவ்யா மேல பாசமாத்தான் இருப்பான் போல. விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினதும் பயந்துட்டான். பேசாம சேர்த்து வச்சிடலாம் விஷ்ணு” என்று கோபமாய் ஆரம்பித்து கெஞ்சலாய் முடித்தார்.
“ஹாஹா… நீ டீ போடலைனா என் மாமியார் போட்டு தருவாங்களே” என்றான் சிரிப்போடு.
“நீ வந்தது விஷாலினிக்கு தெரியுமா?” என்றார் கோபாலன்.
திவாகர் வந்தது அப்பா மகன் இருவருக்கும் ஒரு பொருட்டாகவே இல்லை என்பதாய் நடவடிக்கைகள் இருக்க, “ஏங்க நீங்களும் இப்படி பண்றிங்க, இது நல்லதுக்கில்லைங்க” என்றார் தவிப்போடு.
“இதுதான் நல்லது பிரபா. இப்போவும் மரியாதையா பேசினானா பார்த்தியா? நாம பெத்த பொண்ணு காவ்யா. என்னவோ வானத்துலயிருந்து இவனுக்கு பொண்டாட்டி கிடைச்சதை போல பேசிட்டு போறான். இப்படிபட்டவன் நம்ம காவ்யாக்கு வேண்டாம்” என்றார்.
“காவ்யாக்கு தெரிஞ்சா நொடிஞ்சிடுவாங்க, இவனை பழிவாங்குறதா நினைச்சு நம்ம பொண்ணை இழந்திடுவோமோனு எனக்கு பயமாயிருக்கு” என்றார்.
“ம்மா அப்படி ஏதும் ஆகாது. என்னை நம்பு” என்றான் தன்மையாக.
“அவ அழுது கரையிறது எனக்குத்தான்டா தெரியும்”
“அழட்டும், நல்லா அழட்டும்” என்றபடி கிச்சன் சென்றவன், தானே டீ வைக்க ஆயத்தமானான்.
“விடு நான் வச்சி தரேன்” என்று கோபத்தோடே அடுப்பை பற்ற வைத்தார் பிரபாவதி.
ஹாலில் வந்தமர்ந்தவன், “காவ்யாக்கு போன் செய்திருப்பானேப்பா” என்றான்.
“ம் செய்தானாம், ஆனா காவ்யா அட்டன் பண்ணலயாம்” என்றார் மகிழ்வோடு.
“பரவால்லையே” என்று விஷ்ணு மெச்சுதலாய் சொல்ல, “எப்படி எடுப்பா? இனி அந்த பையன்கிட்ட பேசினேன்னா அவமானத்துலயே என் உயிர் போய்டும்னு மிரட்டில்ல வச்சிருக்கார் உன் அப்பா” என்றார் ஆற்றாமையோடு.
“பால் பொங்கிடப்போகுது, போம்மா” என்றான் இலகுவாக.
“மருமக போன் செய்துச்சா விஷ்ணு? கனவு கல்யாணம் மாதிரி இருக்கு, நீ கூட்டிட்டு போய் விட்டதுக்கப்புறம் வீட்டுக்கே வரல” என்றார் ஏமாற்றமாக.
“நீங்க போய் பார்க்கவேண்டிதுதானேப்பா?”
“எனக்கும் விஷாலினிக்குமா பிரச்சனை? உனக்கும் மருமகளுக்கும்தான பிரச்சனை? நீதான சமாதானம் செய்யனும்?”
‘ஓ… எனக்கும் அவளுக்கும் சண்டைனு நினைச்சிட்டிருக்காரா?’ என்று நினைக்க, “காவ்யா பிரச்சனை முடியாம என் மருமக இவனோட பேசமாட்டா” என்றபடி டீயை நீட்டினார் பிரபாவதி.
“பார்டா… இது வேறயா?” என்றபடி டீயை பருகினான் சிரிப்போடு.
“எத்தனை நாள் இங்க இருப்ப?”
“ஏன்ம்மா? நான் போனபின்ன அவன் வந்தா சமாதானம் பேசப்போறியா?” என்றான் அன்னையை கணித்தவனாய்.
“இ… இல்ல” என்று பிரபாவதி தடுமாற, “அவன்கிட்ட இறங்கி பேசுலைனா கூட டிவோர்ஸோட போய்டும். வீட்டுலயிருந்து யாராவது ஒருத்தர் அவன்கிட்ட இறங்கி பேசினாலும், வரதட்சனை கொடுமைனு அவனோட சேர்த்து மொத்த குடும்பத்தையும் உள்ள தள்ளிடுவேன்” என்றான்.
பிரபாவதி அதிர்ந்து விழிக்க, கோபாலன் “இங்க வா” என்று மனைவியை அழைத்துப்போனார் சமாதானம் செய்ய.
‘வீட்டுக்கு வந்துருக்கிங்களாம், சொல்லவேயில்ல’ என்று கோபம்போல் விஷாலினியிடமிருந்து செய்தி வந்தது விஷ்ணுவிற்கு. பார்த்தவன் முகத்தில் புன்னகை மிளிர, மனைவிக்கு அழைத்தவன், “சொல்லியிருந்தா?” என்றான்.
“நானும் வந்திருப்பேன்”
“வந்து”
“அன்னைக்கு எதோ வாழ்க்கை காணாம போச்சுனு என்கிட்ட கம்ப்ளைன் பண்ணுனிங்கள்ல? அதை கண்டுபிடிச்சி வச்சிருக்கேன். நேர்ல பார்த்தாதான கொடுக்க முடியும்?” என்றாள் கிண்டல் சிரிப்போடு.
“ஃபோனை வைடீ” என்று இணைப்பை துண்டித்தான் புன்னகையோடு.
error: Content is protected !!