Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 04 – PART 01

 

 

வெற்றிச்செல்வனின் குழப்பம் அதிகரித்தது. ‘எதையாவது தெளிவா சொல்லறாளா?’ என முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டான்.



Advertisement

 

‘சரி எப்படியோ சரின்னு சொன்னாளே! ஆனா, இந்த பெண்ணை எப்படி எனக்கு பிடிச்சது? அவளுக்கு பிரச்சனைன்னதும் அவளை கட்டிக்கிறேன்னு பெரிய முடிவை, யார்கிட்டேயும் கலந்துக்காமல் எடுத்து வெச்சு இருக்கேன். இந்த முடிவுல எந்த மாறுதலும் இருக்கக் கூடாது கடவுளே!’ என்று மெலிதாக படபடப்பானான்.

Advertisement

 

Advertisement

கூடவே இந்த விஷயத்தை தன் தாயிடமும், தம்பியிடமும் தெரிவிக்க வேண்டுமே என்ற எண்ணமும் அவனுக்கு எழுந்தது. ஆனால், அவர்கள் இவனை எப்பொழுதோ தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்கள். எப்படியும் இவனிடம் பேச மாட்டார்கள் என்று புரிய வேறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

 

Advertisement

சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கி இருந்தவனைக் கலைத்தது வீரமணியின் குரல். “ஐயா, அந்த மாரியப்பன் அண்ணனோட கையாளு ஒருத்தன் விடாம கூப்பிடறான். எடுக்கவா? வேணாமா?”

 

அவனது குரலில் களைந்தவன், “உனக்கு ஏன் கூப்பிடறாங்க?” என்று நெற்றியைத் தட்டினான்.

 

“ஐயா விவகாரம் பெருசா இருக்குமோன்னு தோணுது” என்று கூறியவனின் முகத்தில் அத்தனை கலவரம்.

 

வெற்றிச்செல்வனோ நிதானமாக, “பெரிசு தான்” என்றான் மெல்லிய புன்னகையை உதிர்த்தபடி.

 

“ஐயா, நீங்க இன்னும் கொஞ்சம் நிதானமா…” என்று தொடங்கியவனின் சொற்கள் வெற்றிச்செல்வன் பார்த்த பார்வையில் அந்தரத்தில் தொங்கியது.

 

“மறுபடியும் போன் வந்தா எடுத்து என்ன விஷயம்ன்னு கேளு” என்றதோடு பேச்சு முடிந்தது என்று அங்கிருந்து வெளியேறி விட்டான்.

 

வெற்றிச்செல்வன் எதிர்பார்த்தது போல மீண்டும் அழைப்பு வந்தது. மாரியப்பனின் ஆளும் அவனுக்கு தெரிந்தவரையில் மிரட்டி, வீரமணியின் பயத்தை மேலும் அதிகரித்தான்.

 

வீரமணியின் முகத்திலிருந்த கலவரத்தையும், தன்னிடம் சொல்லக் கூட முடியாமல் தவிக்கும் தவிப்பையும் கவனித்த வெற்றிச்செல்வன், “பாண்டி வண்டியை குடிசைக்கு விடு” என்று பணித்தான்.

 

அதில் வீரமணி மீண்டும் கலவரமாகி, “ஐயா அவனுங்களை நிறையவே அடிச்சுட்டீங்க. இப்போ மறுபடியும் அங்க எதுக்கு?” என்று வெகுவாக தயங்கிக் கேட்க,

 

“எதுவும் செய்ய மாட்டேன் வீரா” என்று மென்னகையோடு உறுதியளித்தான்.

 

சொன்னபடி தான் நடந்தும் கொண்டான். அவர்களை மீண்டும் சந்தித்து கை வைக்காமல் தான் விசாரித்தான். ஏனென்றால் அவனும் அறிவான் அவர்களால் இதற்குமேல் அடி தாங்க முடியாதென்று!

 

“நீங்க மாரியப்பன் ஆளுங்க இல்லைன்னு தெரியும். யாரோட ஆளுங்க?” நிதானமாக வெற்றிச்செல்வன் கேட்ட கேள்வியில் அந்த தடியன்கள் கலவரமானார்கள்.

 

“நாங்க கூலிக்காரங்க. யாருக்கிட்டயும் வேலை செய்ய மாட்டோம்” என்று ஒருவன் அவசரமாக மறுக்க,

 

“அப்படியா? அப்போ போலீஸ் உங்களை தேடணுமே… இதுவரை பண்ணுன தப்புல எவ்வளவு கேஸாகி இருக்கு” அமர்ந்த வாக்கிலேயே நெட்டி முறித்தபடி அவர்களிடம் கேட்டான்.

 

யாரையும் உள்ளே வர வேண்டாம் என்று வெற்றிச்செல்வன் கூறிவிட்டிருந்தபடியால், வெளியிலிருந்த அனைவருமே சற்று கலவரமாகத் தான் குடிசை வாயிலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

“அதெல்லாம் எதுவும் ஆனதில்லை. தடயமே இல்லாம காரியத்தை செஞ்சுதான் எங்களுக்குப் பழக்கம்” என்று வேகமாக மறுப்பைப் பதிவு செய்தான் ஒருவன். ஆனால், உண்மையோ இவர்களின் மேலிடம் சற்று செல்வாக்கானது. அதனால் இவர்கள்மீது இதுவரை எந்த கேஸ்களும் பதிவானதில்லை.

 

அதை சரியாகக் கணித்த வெற்றிச்செல்வனும், “பார்த்தா அப்படித் தெரியலையே, நீங்க விட்டுட்டு வரத் தடயத்தை எல்லாம் சரிக்கட்ட ஆளுங்க இருக்கிற மாதிரி தானே தெரியுது” என்றான்.

 

வெற்றிச்செல்வன் விசாரிக்கும் விதமே வேறு மாதிரியாக இருந்தது. உண்மையைத் தெரிந்து வைத்துக் கொண்டு கேட்கிறானா அல்லது தோராயமாகக் கேட்கிறானா என்றே அவர்களுக்கு விளங்கவில்லை. ஆனால், இவன் மிகவும் ஆபத்தானவன் என்று மட்டும் புரிந்தது. இவனிடம் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்ற பயம் அவர்களுக்குள் அதிகரித்தது.

 

ஆனால், வெற்றிச்செல்வன் விசாரித்தது, இவர்களிடம் உண்மையை வாங்க இல்லை. தன் அனுமானம் சரியா என்பதை அவர்களது உடல்மொழியைக் கொண்டு தெரிந்துகொள்ள. இப்பொழுது அவனுக்கு சில விஷயங்கள் தெளிவாகி இருந்தது.

 

அதனால் அவர்களிடம்,”சரி நீங்க கூலிக்கு வேலை செய்யறவங்க. உங்களை அடைச்சு வெச்சு நான் என்ன செய்ய போறேன். உங்களை எங்க விடணும் சொல்லுங்க. விட்டுட சொல்லறேன்” என்று அவன் சட்டென்று சொல்லிவிட, அதை நம்பமுடியாமல் அவனை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

 

“என்ன நம்ப மாட்டீங்க போலயே! உண்மைதான் பா” என மெலிதாக வெற்றிச்செல்வன் சிரிக்க, காலையில் அத்தனை உக்கிரமாய் இருந்தவனா இவன் என்னும் ஆச்சரியம் அவர்களுக்கு.

 

“சரி முதல்ல கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல சேர்க்க சொல்லிடறேன். அங்கிருந்து உங்க பொழப்பை பார்த்துக்கங்க. போலீஸ் விசாரிச்சா என்ன சொல்லுவீங்க?” என்று கேட்டு நிறுத்தினான்.

 

“அது… குடும்ப தகராறு எங்களுக்குள்ள அடிதடின்னு சொல்லிக்கிறோம் ஐயா” என்று ஒருவன் வேகமாகப் பதிலளித்தான்.

 

மெலிதாக புன்னகைத்துவிட்டு வெற்றிச்செல்வன் வெளியேறிவிட்டான். இன்னமுமே அந்த தடியன்களுக்கு நடப்பதை நம்ப முடியவில்லை.

 

வெளியில் வந்த வெற்றிச்செல்வனை, “ஐயா…” என்று அழைத்து பரிதாபமாக வீரமணி பார்க்க,

 

“எதுவும் செய்யலை வீரா” என்றான் அவனது கவலைக்கான விடையாய். உடை கசங்காமலிருந்ததும், உள்ளிருந்து சத்தம் எதுவும் வெளிவராமல் இருந்ததும் அவனுக்கு அதையே உறுதி செய்தது. மேற்கொண்டு அவர்களை என்ன செய்ய வேண்டும் என்ற விவரத்தை வேறு கூற, வீரமணிக்கு ஆச்சரியம். இவர்களை மாலையே விடுவதற்கு எதற்கு அடைத்து வைக்க வேண்டும் என்று குழம்பினான். ஆனாலும் சொன்ன விஷயம் உவப்பானதாக இருக்க, உற்சாகமாக உடனேயே வேலையைத் தொடங்கினான்.

 

இரவு உணவை முடித்துவிட்டு, தன் அறையில் தீவிர சிந்தனையுடன் உலாவிக் கொண்டிருந்தான் வெற்றிச்செல்வன். அவனது சிந்தனையைக் கலைக்கும் வண்ணம் அவனது கைப்பேசி மெலிதாக அதிர்ந்தது. செந்தாமரை அவளுடைய கைப்பேசி எண்ணை குறுஞ்செய்தி மூலம் உறுதி செய்திருந்தாள்.

 

‘அடிக்கடி நான் ஊர் தலைவர்ன்னு என்கிட்டேயே அறிக்கை விடற, ஊருக்கு புதுசா, தனியா வந்த உன்னோட போன் நம்பர் கூடவா தெரிஞ்சுக்காம இருப்பேன். நீ அநியாயத்துக்கு அறிவா இருக்க போ!’ என்று கைப்பேசியைப் பார்த்து அவளிடம் நேரில் பேசுவது போல பேசிக்கொண்டான்.

 

அவன் வெகுநேரமாகச் சிந்தனையோடு சுழல்வது, அவனது நெருங்கிய தோழி ஒருத்திக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பதை எண்ணித்தான். அவளிடம் திருமண விஷயத்தைப்பற்றிக் கூறினால், மிகவும் மகிழ்வாள் என்பதோடு தன்னம்பிக்கையும் தருவாள். ஏன் அவள் மூலம் திருமண விஷயம் அவன் வீட்டிற்குப் போகும் வாய்ப்புகளும் அதிகம்.

 

ஆனால், அவளிடம் எப்படி பேச்சைத் தொடங்க என்றுதான் அவனுக்குத் தயக்கம். கேலி செய்கிறேன் என்று வறுத்தெடுத்து விடுவாளே! சரி எப்படியும் எதிர்கொண்டு தானே ஆக வேண்டும் என்று அவளுக்கு அழைப்பு விடுத்தான்.

 

“என்ன அதிசயமா இருக்கு. எனக்கெல்லாம் போன் பண்ணி இருக்க?” என்று போலி ஆச்சரியத்துடன் எதிர்புறம் ஹிந்தியில் பேசியது சிமிர்தி சிசோடியா.

 

‘இவளுக்கும் கோபம் தான் போலயே!’ என நொந்தவன், அவளை வழிக்குக் கொண்டுவரும் விதமாக, பாடத் தொடங்கிவிட்டான்.

  

“மேரே மாஹி மேரே மாஹி

து ஆஜா மேரே மாஹி…

துஜ்ஹே மில்கே லஹா ஹேய்…

யே துஜ்ஹே துந்த் ரஹா தா மெயின்”

  

(என் அன்பே! என் அன்பே!

நீ வா என் அன்பே!

உன்னைப் பார்த்ததும் காதல் கொண்டேன்…

உன்னை நான் தேடி அலைகிறேன். நீ எங்கே இருக்கிறாய்?)

  

என காதல் ரசம் சொட்ட அவன் பாட, அந்த பாடலைக் கேட்டாலே அவளுக்குச் சிரிப்பு வந்துவிடும். அதிலும் அவன் பாடி கேட்டு விட்டால் விழுந்து விழுந்து சிரிப்பாள். அவள் வடமாநில பெண் என்பதால் இருவரின் பேச்சு வார்த்தைகளும் ஹிந்தியில் தொடர்ந்தது.

 

இப்பொழுதும் மூச்சு முட்டுமளவு சிரித்தவள், “வெற்றி… உனக்கு ஒரு மாஹியும் இல்லை போ” என்று கேலி பேச,

 

“அதெல்லாம் பார்த்துட்டேன்” என்று அவளை அதிரச் செய்தான்.

 

“என்ன? என்ன? என்ன சொன்ன?”

 

“உண்மைதான் சிமி. கல்யாணமே பேசியாச்சு” என்று அடுத்த குண்டை போட,

 

“என்னை நம்ப சொல்லறியா?” என்றாள் கேலியாக.

 

“உன் போனுக்கு போட்டோ அனுப்பி விடறேன் பாரு” எனச் செந்தாமரையின் புகைப்படத்தை அனுப்பி விட்டான்.

 

“உண்மையா தான் சொல்லறியா?”

 

“ஹ்ம்ம்… இதுல பொய் சொல்ல என்ன இருக்கு”

 

“அப்படின்னா ஆன்ட்டியை இதை வெச்சு சமாதானம் செஞ்சு பார்க்கலாம். நீ ஏன் அவங்க சொல்பேச்சு கேட்காம கிளம்பி போன, அவங்க எவ்வளவு வருத்தப்பட்டாங்க தெரியுமா?”

 

“இங்கே நிலைமை அதைவிட மோசம்”

 

“நீ போய் தூக்கி நிறுத்திட்டியா? அங்கிள் போயே எதுவும் செய்ய முடியலை. அதுக்குள்ள அவங்களை எப்படியோ இழந்துட்டோம். இப்ப நீயும் அங்க இருந்தே ஆகணுமா? உன் பியூச்சர் கூட பார்க்காம?”

 

“சிமி இங்க வந்தாச்சு. இனி அதைப்பத்தி பேசி என்ன பிரயோஜனம்? இது அப்பாவோட ஆசை. அதை அப்படியே விட என்னால முடியாது. அம்மாவும் சீக்கிரம் புரிஞ்சுப்பாங்க” என்றான். அவளுக்குச் சொன்னானா, இல்லை அவனுக்கு அவனே ஆறுதலாகச் சொன்னானா என்று தான் தெரியவில்லை.

 

“எங்கே? இத்தனை மாசம் ஆச்சு. இன்னும் ஆன்ட்டி கோபமா தான் இருக்காங்க”

 

“ஹ்ம்ம் தெரியும் தினமும் கூப்பிட்டுப் பார்ப்பேன். என் நம்பர் பிளாக் ல போட்டு இருக்காங்க” என்றான் சோர்வாக.

 

“ஏன் அங்க வேற போன் இருக்காதா? வேற யாராவது நம்பர்ல இருந்து கூப்பிட வேண்டியது தானே?” என யோசனை தந்தாள்.

 

“இல்லை அது சரியா வராது. அவங்களுக்கு என்கிட்ட பேச விருப்பம் இல்லை. அதோட இது ஒரு வகையில அவங்க எனக்குத் தந்திருக்க தண்டனை. அதை சரியா அனுபவிக்கணும்”

 

“வெற்றி… ஏன் இப்படி பேசற? சரி வருத்தப்படாத விடு. அவங்க சீக்கிரம் சரியாகிடுவாங்க. அதோட இது அவங்களுக்கும் தண்டனை தான்னு நான் உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை”

 

“அவங்க பாராட்டி சீராட்ட ஒரு பையன் கூடவே இருக்கான். ஆனா, எனக்கு அம்மா…”

 

“வெற்றி என்ன ஆச்சு முத்து கூட போட்டி போடறியா?”

 

“அவனைப்பத்தி பேசாத, அவனும் என் நம்பரை பிளாக் ல தான் போட்டு இருக்கான்” என்றான் எரிச்சலாக.

 

“ஹாஹாஹா… அதான் ரெண்டு பேரையும் சமாதானம் செய்ய, இத்தனை நாளா கல்யாண பேச்சை எடுக்க விடாதவன், இப்போ அவசரமா பொண்ணு தேடி இருக்கியா?” என்று சிரித்தாள்.

 

“இப்படித்தான் அவங்களை சமாதானம் செய்யணும் நினைச்சிருந்தா இத்தனை மாசம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லையே!” என்றான் ஆழ்ந்த குரலில்.

 

“வெற்றி…”

 

“இது யாரோ ஏற்பாடு செஞ்ச கல்யாணம் இல்லை சிமி. நான் தான் இவளைத் தேர்ந்தெடுத்தேன்” என்று அவன் கூறியதும், அவளுக்கு அத்தனை ஆச்சரியம்.

 

“எப்படி?”

 

“அதெல்லாம் எனக்கே புரியலை. ஆனா, இதான் நிஜம்” என்று மெலிதாக புன்னகைத்தவன், “உனக்கு தெரியுமா நான் அவளை ‘மாஹின்னு’ கூப்பிட்டேன்” என்று கூற,

 

“ஹே எங்ககிட்ட போட்ட பந்தயத்துக்காக கூப்பிட்டயோ?”

 

“தெரியலை… அவளை அப்படித்தான் கூப்பிட தோணுச்சு. அதுவும் அவளுக்கு ‘மாஹி’க்கு அர்த்தம் வேற தெரியலை. அதான் அதைச் சொல்லியே வம்பு பண்ண தோணுது”

 

“நீ வம்பு செய்யிறயா? அச்சோ ஒரே நாளுல எத்தனை அதிர்ச்சி தருவ? சின்ன ஹார்ட் தாங்குமா சொல்லு”

 

“ஹே நானே பெரிய அதிர்ச்சியில தான் இருக்கேன். நீ வேற? சரி அப்படியே பேச்சு வாக்குல எங்க அம்மாகிட்டயும், அந்த தடிமாடு முத்துக்குமார் கிட்டயும் இந்த விஷயத்தை சொல்லிடேன். ஐ வான்ட் டு நோ தேயர் ரியாக்ஷன்” என்றான் பாவமாக.

 

“பிரீயா விடு. இந்த ஒரு விஷயம் போதும். நான் சமாதானம் பேசிடுவேன்” என்று சிமிர்தி தந்த நம்பிக்கை அவனுக்கும் தேவையாய் இருந்தது. சற்றே பாரம் விலகி நிம்மதி அடைந்தது போல உணர்ந்தான்.

 

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!