Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedவசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்கள் வாடுவதில்லை 13

அந்த வாரம் முடிவில் வேல்முருகன் போன் பண்ணியிருந்தார் அஞ்சனாவுக்கு.  “இந்த வாரம் வந்துட்டு போகமுடியுமா…டா…..”

“எதுக்குப் ப்பா….?”

“அ….து மாப்பிள்ளை வீட்டுல இருந்து உன்னை பார்க்க வராங்க மா…”

“அதான் முன்னமே பார்த்துட்டு போனாங்களே ப்பா….”



Advertisement

“மாப்பிள்ளையோட அப்பா அம்மாகூட பொறந்தவங்க எல்லாம் வராங்க ம்மா.  அவங்க எல்லாருக்கும் உன்னையும் நம்ம வீட்டையும் பார்க்கனுமாம்.  அதான் நமக்கு எப்ப வசதிபடும்னு கேட்டாங்க…”

“பார்க்கிறேன் ப்பா……. அல்ரெடி நிறைய லீவ் போட்டுட்டேன்.  இனிமே போய் லீவ்ன்னு, ஆபிஸ்ல கேட்கவே முடியாது.  நான் சொல்றேன் ப்பா….”

“ஆபிஸ்ல கேட்டுட்டு… நாளைக்கு போன் பண்றியாமா….?”

Advertisement

“ஏன் ப்பா… இவ்வளவு அவசரம்?  சேர்ந்தா மாதிரி என்னைக்கு லீவ் வருதுன்னு பார்த்துட்டு போன் பண்றேன் ப்பா…..”

Advertisement

“அதுவரைக்கும் அவங்க வெயிட் பண்ண மாட்டாங்க மா….  பெரிய இடம்.  மிஸ் பண்ண கூடாதேன்னுயிருக்கு….” என்றார் தவிப்பாக

ம்ப்ச்… இவர் கிட்ட என்ன சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டார்.  இது என்ன ஆபிஸா…? வேற ஏதாவதா….?  இவர் நினைச்ச நேரம் எல்லாம் லீவு போட்டுட்டு போறதுக்கு… என அஞ்சனாவுக்கு எரிச்சலாக வந்தது.

மகள் ஏதும் பதில் பேசாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்த வேல்முருகனுக்கோ கோவம் வந்தது.  “இதுக்குதான் நான் அங்க வேலை வேணாம்.  வந்துடுன்னு சொல்லிட்டேயிருக்கேன்.  கேட்க மாட்டேன்ற.  இங்கயே… சென்னையில இல்லாத வேலையா….? இங்கிருந்து அவ்வளவு தூரம், பெங்களூர்ல போய் உட்கார்ந்திருக்க.  நினைச்ச நேரத்துக்கு, ஒரு நல்லதுக்குன்னா….. பொசுக்குன்னு வர முடியுதா…?” என எகிற ஆரம்பித்துவிட்டார் மகளிடம்.

Advertisement

“ப்பா….” என அடிக்குரலில் கண்டனமாக அழைத்தவள்… “எத்தனை தடவை உங்களுக்கு சொல்லியிருக்கேன்.  இதமாதிரி பேசாதீங்கன்னு…” என கண்டித்தாள் தகப்பனை.

“ஆமா… எது சொன்னாலும் என் வாய அடைச்சுடு…. சீக்கிரம் போன் பண்ணு….. என கோவமாகவே கட் செய்துவிட்டார் போனை.

வேல்முருகன் போனை வைத்ததும் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்.

“என்னடி…..? தலையில கை வச்சு உட்கார்ந்துட்ட…..?”

நிஷாவை திரும்பி பார்த்த அஞ்சனா “ம்ப்ச்… அப்பா போன் பண்ணியிருந்தாரு…….”

“அதுக்கேன் இப்படி உட்கார்ந்திருக்கே…..  என்னவாம்…?”

“லீவ் போட்டு வரச் சொல்றாரு…..”

“எதுக்கு…?”

“இப்ப பொண்ணு பார்த்துட்டு போனாங்க இல்ல…., அவங்க வீட்ல இருந்து… மாப்பிள்ளையோட அத்தை….. மாமா.., பெரியப்பா… சித்தப்பான்னு….. எல்லாரும் என்னை பார்க்க வராங்களாம்”.

“எப்போ……?”

“தெரியல.  நான் சொன்னாதான்…. அப்பா அவங்களுக்கு போன் பண்ணி பேசுவாரு.  ஆபிஸ்ல லீவ் கேட்கனும்.  என்ன சொல்லுவாங்களோ…?  ஏற்கனவே என்மேல கடுப்புல இருக்காங்க… நிறைய லீவ் போடுறேன்னு”.

“ம்ம்…. வரவங்க மொத்தமா……. வந்து முன்னாடியே பார்த்துட்டு போயிருக்க வேண்டியதுதானே. ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு முறை வந்து பார்ப்பாங்களா….?  எத்தனை தடவை இங்கைக்கும் அங்கைக்கும் அலையறதாம் நீ…?”

“இதை யார் புரிஞ்சுக்கறாங்க.  இதை சொன்னா…… வேலையே வேணாம் விட்டுட்டு வான்னு கோவப்படறாரு அப்பா… என்றாள் அஞ்சனா”

“இவங்கள எல்லாம்….” என பல்லை கடித்த நிஷா, “ச்ச…….. நம்ம கஷ்டம் அவங்களுக்கு புரியவே மாட்டேன்னுது.  நாம என்ன பொம்மையா…?    இதெல்லாம் என்னைக்கு தான் புரிஞ்சுப்பாங்களோ…?”

“எல்லாம் நம்ம வீட்டு ஆளுங்கள சொல்லனும்.  என்னவோ படிக்க வச்சதே பெரிய தியாக செயல் மாதிரி பெருமையா தம்பட்டம் அடிச்சுக்குறாங்க நம்மை பெத்தவங்க.  இதுல இதையெல்லாம் எங்க நம்மாள தைரியமா பேச முடியுது.  ஓபனா பேச முடியுதா எதையும்.

எதுனா பேசினா… உடனே அவங்கள மதிக்கல,   எதிர்த்து பேசறோம், மரியாதை தெரியலன்னு விலாச ஆரம்பிச்சுடுவாங்க.  என்னைக்குதான் இதுக்கெல்லாம் விடிவுகாலம் வருமோ….?” என முனகிக்ண்டிருந்தாள் அஞ்சனா வலியுடன்.

“உலகமே மாறுனாலும் நம்ம வீட்டு ஆளுங்க மாறாதுங்க….” என அலுத்துகொண்டாள் நிஷா.

“என்ன பண்ண சொல்ற நிஷா……?  நம்மள எப்படி லாக் பண்றதுன்னு… சரியா தெரிஞ்சு வச்சிருக்காங்க.  ஆனா…. ஊனா………… வேலை வேணாம். விட்டுட்டு வந்துடுன்றாங்க”.

“அவங்களுக்கு இந்த வேலை அவ்வளவு சாதாரணமா போச்சா.  இது கிடைக்க நாம எவ்வளவு ஹார்ட் வொர்க் போட்டோம்னு நமக்குதான் தெரியும்.  அவங்கள பொறுத்த வரைக்கும் கல்யாணம் கட்டி வச்சுடனும்.  அவங்க கடமை முடிச்சுடனும்னு நினைக்கிறாங்க”.

“விடுடி… இவங்கள எல்லாம் மாத்த முடியாது.  சரி எப்ப ஊருக்கு போகப்போற….”

“தெரியல. இனி லீவும் கேட்க முடியாது.  பேசாம வர சாட்டர்டே போயிட்டு, சன்டேவே வர ட்ரை பண்ணனும்.  நீயும் வரியா… என்கூட…?”

“நம்மால முடியாது தாயி.  எனக்கு டையர்டாகிடும்….. ஒரே நாள்ல போயிட்டு திரும்ப வரதுன்னா…”

அஞ்சனா முடிவு செய்ததுபோல அந்த வார இறுதியில் அவளது ஊருக்கு சென்றிருந்தாள்.  நிஷா இங்கேயே தங்கிக் கொண்டாள்.

உமாபதி வீட்டிற்கு வெளியே, போர்டிகோவில் இருந்த நிழலில் நின்று போன் பேசிக் கொண்டிருந்தான்.  தூரத்தில் நிஷா வருவது தெரிந்தது.  எங்க போயிட்டு வரா…… என யோசனையாக அவளையே பார்த்திருந்தான்.

நிஷா குனிந்த தலையுடன், ஏதோ சிந்தனையுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள்.  கையில் பை இருந்தது.  ஏதோ கடைக்கு சென்று வந்திருப்பாள் போல.

அவள் அருகில் வருவதைப் பார்த்தவன் தொண்டையைக் கனைத்தான் தன் இருப்பை அவளுக்கு உணர்த்த.  இவனது சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவளை பார்த்து முறுவலித்தவன், “எங்க போயிட்டு வரே….?” என்றான் உரிமையாக.

“சும்மா…. வெளியில ஒரு வாக்…. போயிட்டு வரேன்”.

“கையில பை இருக்கு…..” என்றான் அவளது கையில் இருந்த பையின் மீது பார்வையை வைத்து.

“அப்படியே கடைக்கும் போயிட்டு வந்தேன்….”

“என்ன ஸ்பெஷல்…..?”

புரியாமல் அவனைப் பார்த்தாள்.

“இல்ல…. அஞ்சனா இல்லன்னு தெரியும்.  இன்னைக்கு உன் சமையல் தானே….”

ஆமாம் என தலையாட்டினாள்.

“கடைக்கெல்லாம் போயிட்டு வந்திருக்கியே…… இன்னைக்கு என்ன ஸ்பெஷலா சமைக்கப் போறேன்னு கேட்டேன்…..”

“ம்ம்….. கொத்துப் பரோட்டாவும்…. கோழி கறியும்……” என்றாள் அவனது உரிமையில் கடுப்பாகி.

அவள் கூறியதை நிஜம் என நம்பியவன், “ஓஹ்…. நிஷாவுக்கு கொத்துப் பரோட்டா… கோழிக்கறின்னா….. பிடிக்குமோ….” என்றான்…. மையலாகப் பார்த்து.

அடக் கெரகத்துக்கு பொறந்தவனே.  நான் நிஜமா சொல்றேனா…. இல்ல, கடுப்புல சொல்றேனா..ன்னுகூட இவனால கண்டுபிடிக்க முடியல.  இவனெல்லாம்….. என பல்லைக் கடித்தவள், சரியான அசமஞ்ஜமா…. இருப்பான்போல…. என மானசிகமாக தலையில் தட்டிக் கொண்டாள்.

அவள் பதிலே சொல்லாமல் நிற்பதைப் பார்த்தவன். ‘’என்னாச்சு… நிஷா…?’’ என்றான்.

ஒன்னும் இல்லை….. என தலையசைத்தவள், “வரேன் ஸார்…. வேலையிருக்கு” என மாடிக்கு செல்ல ஆரம்பித்தாள்.

அவள் படி ஏறும்வரை பார்த்திருந்தவன் “நிஷா…”. என அழைத்தான்.

அவனது குரலில் திரும்பி பார்த்தவளை சில நொடிகள் பார்த்து நின்றவன் ஒன்னும் இல்லை என தலையசைத்து, “போ..” என சைகை யாலேயே கூறினான்.

நிஜமாவே இவன், லூசுதான் போல. “அரைவேக்காடு…” என முணுமுணுத்தவளுக்கு…. சட்டென்று அவனது பார்வையின் மாற்றம் கண்ணுக்குள் பளிச்சிட்டது போல் வந்து நின்றது.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!