Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedவசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்கள் வாடுவதில்லை 13

ரோகிணிக்கு உள்ளூர தன் மகள் தன்னுடைய பிறந்த வீட்டிற்கு மருமகளாக செல்ல வேண்டும் என்ற அவா நெஞ்சு ஆசை நிறைய இருந்தது.

அதை வெளிப்படையாக  மகளிடம் சொல்லவோ…. கேட்கவோ பயமாக இருந்தது.  ஏனெனில் மகளுக்கு விருப்பமில்லாத எதையும் தான் கட்டாயப்படுத்த விடகூடாது எனபதில் தெளிவாக இருக்க முயன்றார்.

தன் திருமணத்தின்போது மீனாவின் தம்பி திருநாவுக்கரசை கல்யாணம் செய்து கொள்ள சொல்லி தனது குடும்பம் முழுவதும் கேட்டும்…. தனக்கு விருப்பமில்லால், தான் அதை மறுத்ததை நினைத்துப் பார்த்துகொண்டார் மனதினிலேயே.

அஞ்சனாவுக்கு அவளது வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்கான முழுவுரிமையும் அவளைச் சார்ந்ததே.  அதில் தனது விருப்பத்தை திணித்து அவளைக் கட்டாயப்படுத்தக் கூடாது என எண்ணினார்.



Advertisement

மகளை தேவநாதனுக்கு கட்டிக் கொடுக்க கணவருக்கு விருப்பம் இல்லை என்பது ரோகிணிக்கு தெரிந்ததே.  ஆதலால் தனது ஆசை எங்கே கணவருக்கு மகள் மூலமாக தெரிய வந்துவிடுமோ என கலங்கினார்.  அப்படி நடந்தால் குடும்பத்துக்குள் வீணான பூகம்பம் வெடிக்கும் என பயந்தே நினைத்ததை வெளியே சொல்லாமல் விழுங்க முயன்றார் உள்ளுக்குள்ளேயே.

தனது அண்ணன் பெண் கேட்டதற்கு… இன்னும் இரண்டு மூன்று வருடம் திருமணம் செய்யப் போவதில்லை மகளுக்கு, என சொல்லிய…. கணவன் இப்போது மகளுக்கு துரித கதியில் திருமண ஏற்பாடுகளை செய்ய முனைவதை பார்த்து… ரோகிணிக்கு ஏமாற்றத்தை மட்டுமல்ல வேதனையையும் சேர்த்தே கொடுத்தது உள்ளுள்.

எதுவும் தன் கையில் இல்லை என தன்னை தேற்றிக் கொள்ள ரோகிணி விழைந்தாலும், அவரது மனத்தின் வெளிப்பாடு அவரையும் மீறி சில சமயங்களில் முகத்தில் பிரதிபலிக்கத்தான் செய்தது.

Advertisement

அவரது முகத்தை வைத்தே…. தாயின் அலைபுறுதலையும், வெளியில் தைரியமாக அவர் பகிர முடியாமல் உள்ளுக்குள் தவிப்பதையும் பார்த்தவளுக்கும் ஏதும் சொல்லவும் முடியவில்லை.  தந்தையை மீறி பேசவும் துணிவில்லை.

Advertisement

பெங்களூர் வந்தும் அதையே நினைத்து மனதை போட்டு குழப்பிக் கொண்டிருந்தவளுக்கு. அதன் வீரியத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தின்  தாக்கமோ என்னவோ பயங்கரமான கனவு கண்டிருந்தாள்.

கனவில் இவளுக்கு தேவா அல்லாது வேறொருவருடன் திருமணம் நடப்பது போலவும்…, அதை  ரோகிணி தாங்க முடியாமல், மண்டபத்திலேயே மயங்கி சரிந்து உயிரை இழப்பது போலவும் கனவு கண்டு பதறி எழுந்து உட்கார்ந்திருந்தாள் அஞ்சனா.

கண்ட கனவையே திரும்ப திரும்ப நினைத்து நீண்ட நேரம் குழப்பத்தில் தவித்தவள், எப்போது உறங்கினாள் என அவளுக்கே தெரியவில்லை.  காலையில் நிஷா அவளை உலுக்கி எழுப்பும் போதுதான் கண் விழித்து பார்த்தாள், எதிரே பத்ரகாளி வேடத்தில் முறைத்து கொண்டிருந்த நிஷாவை.

Advertisement

நிஷா இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு வேர்த்து விறுவிறுக்க நின்றிருந்தாள் அஞ்சனாவின் எதிரே.  இவள் ஏன் இப்படி நின்னுட்டுருக்கா என கண்ணை கசக்கி கொண்டே திரும்பி கடிகாரத்தைப் பார்த்த அஞ்சனா  அடிபிடித்து எழுந்து உட்கார்ந்தாள்.

“எ..ன்ன…?  பத்தா…யிடுச்சா….?  ஏன்டி என்னை எழுப்பியிருக்கலாமில்ல…? மணி பத்தாகுது…” என தலைமுடியை அள்ளி சுருட்டி கிளிப்பிற்குள் நுழைத்தவாறே எழுந்து நின்றாள் அஞ்சனா.

“ஏன் சொல்லமாட்டீங்க அம்மணி.  போனா போகுது.  இராத்திரி முழுக்க பிள்ளை ஏதோ பயந்து தூங்காம இருந்தாளேன்னு பாவம் பார்த்து தூங்கவிட்டா…. என்னையே திட்றயா… நீ?”

“நவுந்து போடி…. காலையிலே வரிஞ்சி கட்டிகிட்டு வந்துட்டா….  உன்கிட்ட சண்டை போட எனக்கு இப்ப நேரமில்ல.  டைம பாரு.   நவுரு…” என்ற அஞ்சனா நிஷாவின் கையைப் பிடித்து தள்ளி நிறுத்தியவள், பாத்ரூமுக்குள் புகுந்திருந்தாள் அவசரமாக..

“அடிப்பாவி…. நைட்டெல்லாம் பேய் மாதிரி முழிச்சிட்டிருந்துட்டு, இப்ப என்கிட்ட பாயறத பாரு.  வரட்டும் பக்கி…” என முனகிக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றாள்.

குளித்துவிட்டு வந்த அஞ்சனா அவசர அவசரமாக கிட்சனுக்குள் நுழைந்தாள்.  அங்கு ஸ்டவ்வை ஒருவழியாக்கி வைத்திருந்தாள் நிஷா. அதன் பக்கத்தில் இறைத்து வைத்திருந்ததை… எல்லாம் பார்த்த அஞ்சனாவுக்கு தலையே சுற்றியது.

நின்ற இடத்தில் இருந்தே “நிஷா…..” என்று உச்சஸ்தாயில் குரல் கொடுத்தாள் அஞ்சனா.

“ஏன்டி….?  எதுக்கு இப்படி கத்தற…..” என நிதானமாக ஆடி அசைந்து மெல்ல நடந்து வந்தாள் நிஷா.

அவளை முறைத்து பார்த்த அஞ்சனா கண்களாலேயே அங்கு அவள் செய்து வைத்திருந்த கோலத்தை யெல்லாம் சுட்டிகாட்டி, “இது என்ன….?” என்றாள் ஒற்றை புருவத்தை உயர்த்தி.

அஞ்சனாவின் பார்வையை ஒட்டி அலட்சியமாக தனது பார்வையை திருப்பி அஞ்சனா சுட்டிக்காட்டிய இடத்தை அதே மிதப்புடன் பார்வையிட்ட நிஷா,  திரும்ப அஞ்சனாவிடமே என்ன….? என லுக் கொடுத்தாள்.

நிஷாவின் திமிரான பார்வையை பார்த்த அஞ்சனாவுக்கு உள்ளுக்குள் காண்டானது.  இருந்தும் பொறுமையாகவே “நான் என்ன கேட்க வரேன்னு…? உனக்கு நிஜமாவே தெரியலை…..? ம்ம்…” என்றாள் முறைத்துகொண்டு..

“ஏன்… தெரியாம….? சமைச்சா கிட்சன் இப்படிதான் இருக்கும்.  அதுக்கென்ன இப்ப…?” என்றாள் அசால்ட்டாக

“அடியே….. உன்ன…,” என பல்லைக்கடித்த அஞ்சனா “ஒருவேளை சமைச்சதுக்கா…டி இப்படி பண்ணி வச்சுருக்கே…..?”

“ஹேய்…… சும்மா குதிக்காத.  நான் சமைச்சனேன்னு சந்தோஷப்படாம…, குத்தம் சொல்லிட்டேயிருக்கே. போ… இனி நான் கிட்சன் பக்கமே வரமாட்டேன்…” என கோவித்துகொண்டு முகத்தை திருப்பி நின்றாள் நிஷா.

“அடியே….. இந்த அளவுக்கு கிட்சன் குப்பையாகற அளவுக்கு, அப்படி என்னத்தம்மா சமைச்சீங்க… நீங்க…” என கிண்டலாக கூறிக்கொண்டே அங்கிருந்த பாத்திரத்தை திறந்துப் பார்த்தவளுக்கு சிரிப்பு பொங்கியது.

ஹா….. ஹா….. என வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டாள் அஞ்சனா.

அஞ்சனாவின் சிரிப்பில் கடுப்பாகிய நிஷா…, “ஏய்…. வேணாம்…டி… சிரிக்காத.  அப்புறம் எனக்கு கோவம் வந்துரும் பார்த்துக்கோ.  ஏதோ எனக்கு தெரிஞ்சதை, என்னால முடிஞ்சதை…. பண்ணி வச்சேன்  என்னடி இப்ப அதுக்கு” என நின்றாள்.

ஹா….. ஹா……

“சொல்ல சொல்ல கேக்காம இளிச்சுட்டே இருந்தேன்னு வச்சுக்கோ…, பிரண்டுன்னு கூட பார்க்கமாட்டே…ன்டி.  காண்டாகிடுவேன்.  நானே இவ்வளவு நேரம் கிட்சன்ல இருந்து வேலை பார்த்ததுல, மேலெல்லாம் வேர்வையா கச கசன்னுயிருக்கே. மறுபடியும் ஒருதடவை குளிக்கனுமோன்னு கடுப்புல நின்னுட்டிருக்கேன்”.

அஞ்சனாவுக்கு  நிஷா பேச பேச மேலும் சிரிப்புதான்…

சொல்ல சொல்ல கேட்காமல் அஞ்சனா சிரித்துக்கொண்டே இருப்பதைப் பார்த்து கடுப்பாகிய நிஷா, “நானும் சொல்லிட்டே இருக்கேன்… சிரிச்சிட்டே இருக்கே…” என அவளை அடிப்பதற்காக கையை ஓங்கி கொண்டு அஞ்சனாவை எட்டிப் பிடிக்க முயன்றாள்.

அஞ்சனா இவளிடம் சிக்காமல் ஆட்டம் காட்டிக் கொண்டு கிட்சனிலிருந்து வெளியே வந்து,  ஹாலை சுற்றி ஓட ஆரம்பித்தாள்.  அவளைப் பிடிக்க வந்த நிஷாவோ சோபாவில் கால் தடுக்கி, அதன் மேலேயே விழுந்து வைத்தாள்.

இதைப்பார்த்த அஞ்சனாவுக்கு இன்னும் அதிகமாக சிரிப்பு வந்தது.

அஞ்சனா சிரிப்பதை பார்த்து பொறுக்க முடியாத நிஷா,  வேகமாக எழுந்து மறுபடியும் துரத்த முற்பட்டாள்.  இவள் வருவதற்குள் அஞ்சனா சிட்டாக பறந்திருந்தாள் வீட்டை விட்டு.  வீட்டிற்கு வெளியே ஓடி வந்த நிஷா வீட்டிற்கு வெளியே  அஞ்சனாவைக் காணாமல், அவளை தேடி கீழே செல்ல வேகமாக படிகளில் இறங்க ஆரம்பித்தாள்.

அஞ்சனாவின் மீதிருந்த எரிச்சலின் உச்சத்தில் எதிரில் வரும் உமாபதியைகூட பார்க்காமல் தட தட என இறங்கிய வேகத்தில் அவன் மீது இடித்து… தடுமாறி… கீழே விழுந்துவிடாமல் இருக்க…, அவன் சட்டையையே இறுகப் பிடித்து கண்மூடி அவன் மேலேயே சாய்ந்துவிட்டாள் பயத்தில்.

நிஷா வேகமாக ஒடி வருவதைப் பார்த்து சுதாரித்து நகர்வதற்குள் மேலே வந்து மோதியிருந்தாள் ணங்கென்று.  நெஞ்சோடு முன்பக்கமாக அவள் மோதிய வேகத்திற்கு விட்டிருந்தால் இருவரும் படியிலேயே உருண்டிருக்க வேண்டியதுதான்.  ஏதோ சுதாரிப்பாக அவன் சுவற்றை ஒரு கையாலும் அவளை மறுகையாலும் தாங்கியிருந்ததால் தப்பியிருந்தனர்.

நல்லவேளை அவன் டக்கென்று சுதாரித்து அவளை அணைவாக அவனோடு சேர்த்து இறுக்கமாக பிடித்திருந்தான் விழாமல் இருக்க.

விழுந்தே விட்டோம் என முடிவு செய்து பயத்தில் எதிரில் வந்தவனை பற்றுகோலாக இறுக்கிப் பிடித்தவளுக்கு இன்னும் பயம் தெளியவில்லை மனதில்.

விழ போகும் பயத்தில் கண்களை இறுக மூடியவள், தன்னையறியாமலேயே அவனது டீசர்ட்டையும் தன்னோடு சேர்த்து இறுக்கி நெருக்கமாக பிடித்திருந்தாள்.

இன்னும் அவளது நெஞ்சுகூடு  பயந்ததில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது பெண்ணவளுக்கு.  இத்தனை நெருக்கத்தில் முதன்முதலாக பெண்மையின் சுவாசத்தை உணரந்தவனின் நிலைமையோ கட்டுக்குள் இல்லை.

இருவருக்கும் இருக்கும் நிலைமை பிடிபட சில நொடிகள் ஆனது.  சட்டென மின்னலடித்ததுபோல புத்தியில் ஸ்மரணை வந்து எதிரில் நிற்பவனை நிமிர்ந்து பார்த்து, தன்னை உணர்ந்து, சுதாரித்தவள்…. “ஸாரி…” என அவனிடம் இருந்து விலகி, மேலே அவர்கள் குடியிருந்த வீட்டிற்குள் ஓடி மறைந்துவிட்டாள்.

உமாபதிக்கும் அதற்குமேல் அங்கு நிற்க முடியவில்லை.  கீழே இறங்கி விட்டான்.  அவன் மேலே இரண்டாவது தளத்தில் இருக்கும் வாட்டர் டேங்கை பார்த்து வருவதற்காக பிரேமா அவனை அனுப்பியிருந்தார்.

அதில் ஏதோ லிக்கேஜ் இருக்கிறது என பிரேமா ஒரு மாதமாகவே அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.  அவனுக்கும் நேரமில்லாததால் தள்ளிப் போட்டுக்கொண்டேயிருந்தான் அந்த வேலையை.  சரி இன்று ஞாயிறு விடுமுறை தினமாயிற்றே.  சென்று பார்த்து வரலாம் என எண்ணிதான் மேலே வந்தான்.  அதற்குள் நிஷா வரவும், பாதியிலேயே திரும்பிவிட்டான்.

இரண்டாவது தளத்தில் அஞ்சனா நின்றிருந்தாள்.  நெடு நேரமாக நின்று பார்த்தவளுக்கு… நிஷா வராமல் போகவும்… அச்சோ… கோச்சுகிட்டாளோ…  என மெல்ல இறங்கி வந்தாள் வீட்டிற்கு.

வந்து பார்த்தவளுக்கு, போர்வையை இழுத்து. முகத்தைக் கூட வெளியில் காட்டாமல் மூடி படுத்திருந்தவளைப் பார்த்து சிரிப்பு வந்தது.   மெல்ல முகத்தை மூடியிருந்த போர்வையை விலக்கினாள் அஞ்சனா.

அஞ்சனாவைப் பார்த்ததும், அவளது கையைப் பற்றி இழுத்து கட்டிலில் சரித்து… அவள் தோள்பட்டையை அழுத்தமாக பிடித்துக்கொண்டு… அஞ்சனாவை தலையணையால் மொத்த ஆரம்பித்துவிட்டாள் நிஷா.

“பக்கி… பக்கி… எல்லாம் உன்னாலதான்டி.  உன்னைப் பிடிச்சுடனும்னு வேகமா… ஓடிவந்ததால, உமா ஸார பார்க்காம, அவர் மேல மோதிட்டேன்.  அவர் என்னை என்ன நினைச்சிருப்பாரு…? எல்லாம் உன்னாலதான்….?  நீ தான்டி….?  நீ தான் காரணம். உன்னால தா…ன்டி” என விடாமல் தலையணையால் அடித்துகொண்டியிருந்தாள்.

“அட்ரா…சக்கை…னா..னா… இதுவேறையா… இன்னைக்கு?  அட…டா நான் இல்லாம போயிட்டனே… அந்த அரும்பெரும் காட்சிய கண்ணால… பார்க்க.  இன்னிக்கு அம்…மணி நரி முகத்துல முழிச்சியாடி…?” என கிண்டல் செய்ய துவங்கிவிட்டாள் அஞ்சனா நிஷா பகிர்ந்த செய்தியை கேட்டதிலிருந்து.

“ஆமாம். நரி… முகத்துலதான் முழிச்சேன்.  இதோ… இந்த வெள்ளப்பன்னி முகத்துல…தான் முழிச்சேன்” என அதற்கும் தலையணையால் மொத்தினாள்.

“சரி விடு தெரியாமதான மோதின….  அவர் ஒன்னும் நினைக்கமாட்டாரு”.

“நிஜமா…. ஒன்னு நினைக்க மாட்டாருல்ல….”  ஆன்ட்டிகிட்ட சொலிட்டா…”

“ச்ச.. ச்ச… தப்பால்லாம் நினைக்க மாட்டாரு.  ஆனா…..லும் எனக்கு ஒரு டவுட்டு” என கண்சிமிட்டி ராகமாக இழுத்தாள் அஞ்சனா படுத்த வாக்கிலேயே.

“என்ன………?”

“இல்ல இரண்டு பேரும் மோதுனதுல….. இந்த கெமிஸ்ட்ரி ஃபிசிக்ஸ் எல்லாம் வேலை செஞ்சுடுச்சுனா….”

“மவளே…. உன்னை கொன்னே போட்டுடுவேன் பாத்துக்கோ…. அப்படியே. ஏன்டி நீ வேற பயத்தை உண்டு பண்ணுற.  அப்படி மட்டும் ஏதாவது ஆச்சு, அதோட எங்க ஆத்தா…., அதான் என் அம்மா என்னை வெசம் வச்சே கொன்னுடும்.  பொண்ணே வேணாம்னு…..” என்றாள் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு.

ஹா…. ஹா…. “டவுட்ட கிளியர் பண்ணேன்டி.  அதுக்கேன் இந்த லுக்கு.  சரி பொழைச்சு போ…” என எழுந்தவள் கிட்சனுக்கு சென்று, அங்கிருந்த குப்பையையெல்லாம் அகற்றி…. சுத்தம் செய்தாள்.

பின்னாடியே வந்து நின்ற நிஷா, “அஞ்சு எனக்கு சூடா… ஒரு கப் காபி குடேன்…” என்றாள்.

“ம்ம்…. நீ இங்க பண்ணி வச்ச வேலைக்கு காபி வேற கேக்குதா…?  பேசாம போடி, வாய மூடிட்டு.  ஒன்னும் கிடையாது…..  ஒரு மேகி கிளறி வைக்க இந்தப் பாடாடி பண்ணி வைப்ப.  அடுப்ப சுத்தி எவ்வளவு குப்ப?  இதுல இவளுக்கு காபி வேறயாம்…”

“ஹேய்… அதுல கேரட், பீன்ஸ், பச்சபட்டாணி, தக்காளி எல்லாம் போட்டிருக்கேன் பாரு…. சும்மா ஒன்னும் இல்ல…” என்றாள் பெருமையாக நிஷா.

“ம்…. பார்த்தேன், பார்த்தேன்… நீ வெட்ன காயில பாதி குப்பையிலதான் இருக்கு.  ஏன்டி… தோல் எடுக்கிறேன்ற பேர்ல, பாதி காயை குப்பையில போட்டு வச்சிருக்கே…?”

“போடி.. எனக்கு அவ்வளவுதான் தெரியும்.  சும்மா…. சும்மா… குறை சொல்லாத….”

“ஹ்ம்ம்.  அம்மணி, நான் சமைச்சு வச்சா மட்டும்…, நல்லா நாக்கை ஒன்றரை முழம் நீளத்துக்கு சப்புகொட்டி சாட்டுட்டு…. உப்பு பத்தல…. உரப்பு பத்தலன்னு குறை சொல்ல முடியுதுல்ல.” அப்ப எனக்கும் இப்படிதான இருக்கும்.

“அது உன்னை இன்னும் கரெக்ட் பண்றதுக்கு, ஹெல்ப் பண்றேன்டி… நீ பெரிய சமையல் எக்ஸ்பர்ட்டா மாற வேணாமா…. அதான்… அதை ஏன் நீ குறையா எடுத்துக்கறே….?”

“அய்ய வாயைப் பாரு…. இந்த வாய் மட்டும் இல்லேன்னா…, உன்னை நாய் தூக்கிட்டு போயிடும்டி….”

“சரி… சரி…. என்னை கழுவி ஊத்தனது போதும்.  ஒரு காபி குடு அஞ்சு…, தலையெல்லாம் வலிக்குது”.

“முதல்ல எனக்கு தான்டி காபி வேணும்….., உன்னோட இப்படி மல்லு கட்டறதுக்கு…”

“அப்ப இரண்டு பேருக்கும் போட்டு எடுத்துட்டு வா” என இலகுவாக சொல்லிவிட்டு நிஷா வெளியே சென்றுவிட்டாள் கிட்சனைவிட்டு.

“இவளை…” என பல்லைகடித்துகொண்டே இருவருக்குமாக பாலை ஊற்றி காய்ச்ச ஆரம்பித்தாள் அஞ்சனா.

நிஷாவைப்போல்  உமாபதியால் சாதாரணமாக இருக்க முடியவில்லை.

திரும்ப திரும்ப அதே நினைவில் தத்தளித்துக் கொண்டிருந்தான்.  அழுந்த மோதியதில் பெண்மையின் வளைவு நெளிவுகளை அறிய நேர்ந்தவனுக்கு உள்ளுக்குள் இம்சைதான்.

அதுவும் நிஷா பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு அவனது டீசர்ட்டைப் பிடித்து கொண்டு தொங்கிய காட்சி அவனது கண்ணைவிட்டு அகல மறுத்து நர்த்தனம் ஆடியது.

இருவரது உடலும் ஒட்டி உரசிய நிலையில், அவளது நெற்றியில் அவனது கண்ணும், இவனது நாசியின் நுனியில் அவளது உதடும், நூலிழை இடைவெளியில் இழைந்திருந்த அந்த சில நொடிகளிலேயே உணர்வு பிறழ்ந்து மூச்சடைத்திருந்தது ஆண்மகனுக்கு.

நிஷா அவனைப் பிடித்திருந்த அந்த காட்சி இன்னும் கண்ணைவிட்டு அகலமாட்டேன் என அடம்பிடித்து காந்தம் போல ஒட்டிகொண்டது அவன் மனப் பெட்டகத்துக்குள்.  என்ன… மனதை அடக்கியும் அந்த பிம்பம் கண்களை விட்டு மாற மறுத்தது.

ஒத்த நொடியில் பெண்ணின் மொத்த உருவத்தையும் இமை தூரிகையால்… இதயத்திற்குள் பதித்து… பதியம் போட்டிருந்தது கண்கள்.   கண்டதே காட்சி.  கொண்டதே கோலம் எனும்படி, அவளது நெற்றியிலிருந்து நாசி வரை கோடு போல வழிந்த வேர்வை துளியிலிருந்து, வேர்வையில் நனைந்து நெற்றியில் ஒட்டியிருந்த சிறு சிறு முடிகள், காதோரத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்த கூந்தலிழைகள், கன்னத்தில் சிவந்து பழுத்திருந்த பருக்கள், உதட்டின் கீழ் தாடையில் இருந்த கரிய மச்சம் வரை என ஒன்று விடாமல் அவனது கண்கள் படம் பிடித்து, உள்ளக்கிடங்கில் சேமித்துகொண்டது அந்த க்ஷண நேரத்தில்.

அலைபாய்ந்த மனதை அடக்கும் வழியறியாமல் மௌனமாகிவிட்டான் அமைதியாக.  கிண்டல் வேறு உள்ளுக்குள்ளே.  ஓவர்டா நீ…  அவளுக்கு மட்டும் தெரிஞ்சுது அவ்வளவுதான் உன்னை… கொன்னுடுவா…  என தனக்குத்தானே நகைத்துக் கொண்டிருந்தான்.

இங்கு இவனை பிதற்றவிட்டவளோ… அதைப்பற்றியெல்லாம் எந்த நினைப்பும் இல்லாமல் அஞ்சனா போட்டுக் கொடுத்த காப்பியை ரசித்து குடித்துக்கொண்டு கதையடித்துக் கொண்டிருந்தாள் அவளுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!