Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ09_2 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  09_2

 

வயது பெண் கண்ணிலும் கொஞ்சம் கனவு எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. மாப்பிள்ளை எப்படி இருக்கவேண்டும் என்ற கனவில் ஒருவனைக் கொண்டுவரும் முன்.. அவனை பார்த்தாள். பார்த்தவள் பார்த்துக்கொண்டே நின்றாள்.

 



Advertisement

பின்னால் கட்டிப் போட்டிருந்த காங்கேயம் சிலிர்க்க… இவன், வழியில் கட்டி கிடந்த மழை நீரைத் துள்ளலோடு தாண்டி குதித்துக்கொண்டே இடது காலால் வேட்டியை பின்னால் தட்டி விட.. அதன் நுனி தானாய் பறந்து வந்து அவன் வலக்கை நுனியில் மாட்ட… பேசிக்கொண்டே இடக் கையாய் மீசையைப் படு ஸ்டைலாக மேல் தூக்கி முறுக்க..

 

முழு ஆண்மகன்.. ஆறடி உயரத்தில், பட்டு வேட்டி சட்டையில்.. முழங்கை வரை ஏற்றி விட்டிருந்த சட்டையும்.. முறுக்கேறியிருந்த வலது கையில் ஐம்பொன் காப்பும்.. கம்பீரத்தின் முழு உருவமாய்,  அப்படியே அவளுக்குள்  பதிந்து போனான். இன்று வரை அவனை நினைத்தால் இந்த தோற்றம் தான் அவள் கண் முன்.

Advertisement

 

Advertisement

யாரோ ஒருவரோடு பேசிக் கொண்டே வந்து கொண்டிருந்தான். அந்த ஒருவர் இவள் கண்ணில் பட்டால் தானே.. அவன் மட்டும் தான் தெரிந்தான். சிரித்த வசீகர முகம்.. கண் கூட சிரிக்குமா? அவன் கண்ணும் சிரித்தது. கண் அவளையா பார்த்தது? அப்படி தான் தோன்றியது. ஒரு நிமிடம் அவன் புருவம் சுருங்கி நீண்டது. இதழ் சிரிக்க, இடது கன்னத்தில் சின்ன குழி.. அதில் விழுந்து எழவும்.. என்னைப் பார் என்றது அவன் முறுக்கி விட்ட மீசை. மீசை அழகா இல்லை அதை முறுக்கி விட்ட ஸ்டைல் அழகா? இரண்டுமே தான்! சுண்டி இழுத்துக் கொண்டான் அவளை, ஒற்றை புன்சிரிப்பில்.

 

கண்ணை பறிக்கும் அழகோடு வாசலில் நின்றிருந்தவளை அவன் கவனிக்கவே இல்லையா? அப்பொழுது பார்த்தானே..? இல்லையோ? அவளைக் கூடவா ஒருவன் திரும்பிப் பார்க்க மாட்டான்? கிறங்கித் தான் போனாள் பெண். விழிவிரித்து அவனை பார்த்துக்கொண்டே நிற்க அவன் கடந்து போனான்…

Advertisement

 

அவளை அவன் தாண்டி செல்ல… காற்றோடு குட்டிகோரா மென்மையாய் அவள் நாசியை வருட.. கண் ஒரு வித மயக்கத்துக்குள் செல்ல.. வாய் தன்னால் முணுமுணுத்தது.

 

“பார்த்துக்கோ சுந்தரி… நான் முடிவு பண்ணிட்டேன். இவர தான் எனக்குப் பாக்க சொல்ல போறேன். உன் சின்னத்தான பார்த்துக்கோ..” என்றாள் அவனைப் பார்வையால் விழுங்கிக் கொண்டே.

 

“ஏன் டீ எரும… அவர் போற வரைக்குமாது வாய மூட மாட்டியா? மனுஷன் காதில கண்டிப்பா விழுந்திருக்கும்!”

 

“ரொம்ப நல்லது.. அப்போ அவரையே வந்து பேச சொல்லு தாத்தாட்டையும் சித்தப்பாட்டையும்! கடைசி பரீட்சைக்கு அடுத்த நாள் எங்க கல்யாணம்.”

 

அவன் காதில் விழுந்ததா? அவள் பேச்சு அவன் செவிப்பறையைத் தீண்டயிருக்க வேண்டும்! உதடு அழகாய் விரிந்ததே. வசீகரன் இன்னும் வசீகரித்தான்.

 

அவளுக்கு போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

 

[the_ad id=”6605″]

 

“நீ சொன்னா போதுமாடி கோ..மூ?” என்ற கேள்வியோடு வந்து நின்றது போட்டி, சுந்தரியின் அத்தை மகள் ரத்தினம், சுஜாதா உருவில்! “பேர பாரு பேரு… கோமு!”

 

“அவள இங்கிருந்து கிளம்ப சொல்லு சுந்தரி… அவ பேச்சுக்கே நாம தான் போறது இல்லியே இப்போ எதுக்கு நம்மட்ட பேசுறா?” முறுக்கிக் கொண்டாள் நாயகி.

 

சண்டை மெல்லப் பற்றிக் கொள்ள ஆரம்பித்தது. ஏதோ அவன் மணமேடையில் நிற்பது போலவும் இருவரில் ஒருவர் மாலையிட்டு அவனை மணாளன் ஆக்கிக் கொள்ளப் போவது போலவும் ஆரம்பித்த பேச்சு.. வாக்குவாதமாய்.. சண்டையாய்… சவாலாய் மாறி நின்றது.

 

“சரி சுந்தரி.. சொல்லு இந்த கூஜா-ட்ட.. இங்க இருந்து அவர் போகத்துக்குள்ள என்னைப் பார்த்து அவர் சிரிச்சிட்டா, அவர் எனக்கு தான்னு! அதே தான் அவளுக்கும். அவர் சிரிச்சதும் அடுத்த ஆள் விலகிக்கணும்..”

 

சுந்தரி, “நாசமா போனவளுங்களே மனுஷன் பின்னாடி தான் உக்காந்து அத்தட்ட பேசிட்டு இருக்கார்… இந்த அலறு அலறணுமா? கண்டிப்பா கேட்டிருக்கும். உங்க கூட நின்னா என் மானமே போய்டும்” தலையில் அடித்துக் கொண்டு “வந்து தொல டீ கோம்ஸ்சு.. உனக்கு அம்மா மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்குன்னு இன்னைக்கு தானே சொல்லிச்சு.. இப்போ இந்த பேச்சு பேசணுமா? அத்தை காதில விழுந்துது.. நேரா அம்மாட்ட சொல்லிடும். வாய மூடு டீ” என்று இழுத்துச்  சென்றாள். ஆனால் சுந்தரி பேச்சு காற்றோடு கரைந்தது தான் மிச்சம்!

 

இப்படி தான் சவால் ஆரம்பமானது. அவளும் மான ரோஷத்தை எல்லாம் விட்டு விட்டு அவன் கண் நோக்கும் திசை எல்லாம் சென்று நின்று விட்டாள். மனிதன் பெண் பிள்ளைகளைப் பார்க்கவே மாட்டாரா? இரு பெண்களுக்குமே மூச்சு முட்டியது.

 

முன் வைத்த காலை பின் வைக்க முடியாதே… அவளுக்கு என்னமோ அவன் சுஜாவை தான் பார்ப்பது போல் தோன்றியது. பீதி கிளம்பியது.

 

“யாரு டி இவர்? பாக்க கூட மாட்டேன்றார்? என்ன(னை) பார்த்து சிரிக்கலைனா கூட பரவால சுந்தரி.. தாங்கிக்குவேன். ஆனா இவள மட்டும் பார்த்து சிரிச்சிட்டார்ன்னு வை.. என்னால தலை  நிமுந்து இந்த ஊர்ல வாழவே முடியாது.”

 

இந்த பேச்செல்லாம் குடிகாரன் பேச்சு போல் விடிந்தால் போய் விடுமே.. பாவம் இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் அந்த ஆன்மாவிற்கு இந்த விஷயம் தெரியுமா?

 

“அடி லூசு! உன்னையே பார்க்கல.. அவள பார்த்துட்டு தான் மறுவேலை!” வாடிய பயிருக்கு நீர் பாச்சினாள் சுந்தரி!

 

“அப்டியா சொல்ற?” முகம் மலர்ந்து போனது.

 

சுந்தரி, “சரி.. அவர் சிரிக்காட்டி என்ன டீ பண்ணுவ?”

 

“அப்புறம் கணக்கு வாத்திய கட்டிகிட்டு காலம் பூரா கொட்டோ.. கிள்ளோ வாங்கி வாங்கி வீட்டைப் பெருக்கி கூட்டணும்! வேற என்ன?” என்று மத்தாப்பாய் கிளுகிளுத்தாள்.

 

என்னன்வோ கிறுக்கு வேலை எல்லாம் செய்து பார்த்தாயிற்று. அவன் திரும்பினானில்லை. வேண்டுமென்றே தவிர்கிறானோ? ‘என்னவோ செய்.. இதற்கு மேல் முடியாது டா சாமி’  என்று வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.

 

நீ கவனிக்காத பொழுதெல்லாம் அவன் பார்வை உன்னைத் தான் வருடிச் செல்கிறது பெண்ணே!! யார் அவளிடம் உரைப்பது? அவன் வரும்போதே வாசலில் தரிசனம் கொடுத்தவளைப் பார்த்து விட்டான்.

 

அவனோடு கூட வந்த பாண்டியனின் அப்பா இவளைப் பற்றி அவன் காதில் கடிக்க.. முதல் தரம் பார்ப்பது போல்.. புது பார்வை தான் பார்த்தான். இரண்டு பெண்பிள்ளைகளையும் பார்த்தவன் கண் இவளில் நிலைக்க.. பார்த்ததும் முகத்தில் தன்னால் ஒரு புன்முறுவல். அவன் ஒரு வாரமாகப் பார்த்து கொண்டிருக்கும் குட்டி பரட்டையா இது? இதயத் துடிப்பு ஏற.. முகம் பூரித்துப்போக,  மடந்தை.. அரிவையாக தெரிந்தாள். உடலிலும் உள்ளத்திலும் புது சாரல்.. இதமாய்.. மயிலிறகாய் வருடியது.

 

அவன் கண்ணையே அவனால் நம்ப முடியவில்லை. இப்பொழுது அவனுக்கு அவள் குட்டி பரட்டையாகவும் தெரியவில்லை… பதினாறு பதினேழு வயது சின்ன பெண்ணாகவும் தெரியவில்லை. தேவதை.. அவனுக்காகவே படைக்கப்பட்ட சிறகில்லா தேவதையாகத் தான் தெரிந்தாள்.

 

‘இவர் தான் எனக்கு’ என்று வாயிலில் அவள் பேசியதைக் கேட்டதுமே… அவனுக்கு அவர்கள் ஜோடிப் பொருத்தம் தான் மனக்கண்ணில் தோன்றியது.

அவன் மாநிறத்தில் இரண்டு சொட்டு டார்க் சாக்கலேட் சிரப் ஊற்றி.. பர்மா தேக்கைக் கொண்டு வடித்த கிரேக்கச் சிற்பம் என்றால், அவள் வெண்பனியில் பன்னீர் ரோஜா ஊற்றிச் செய்த அனிச்ச மலர் ஓவியம்..

 

அவள் நிமிர்ந்து நின்றால் அவள் உச்சந்தலை அவன் நாடியை உரசும்..

 

அவன் சூரியன் என்றால் இவள் சந்திரன்.. இருந்தும் எல்லாம் அவனுக்குப் பொருந்தித் தான் வந்தது.

 

‘அம்மா பதிநான்கு வயதிலெல்லாம் மணம் முடித்துக் கொண்டாராமே… ஒரு வருடம் போகட்டும் பதினெட்டில் தாலி கட்டிவிடலாம்’ என்பது வரை யோசித்துவிட்டான்.

 

[the_ad id=”6605″]

 

அவன் மனம் முழுவதும் ஆட்கொண்டாள். அவள் அவனைச் சிரிக்க வைக்கச் செய்த குரங்குச் சேட்டையில் சிரிக்காமல் இருக்கவே பெரும் முயற்சி எடுக்க வேண்டியதாய் போனது.

 

‘இவள சமாளிக்கிறதுக்கே மூச்சும் முட்டும் போல இருக்கே… பிறக்கிறது எல்லாம் இவள மாதிரி வாலா பொறந்தா..’ நினைப்பே கண்ணில் நட்சத்திரத்தைத் தெறிக்கச் செய்தது. இதயம் மேகம் போல் பஞ்சாய் மாற ஏதோ ஒரு இனம் புரியாத இன்பமும் குதூகலமும் ஆட்கொண்டது. காதலோ? ஒரு வாரம் வராத காதலா இன்று? இன்று தான் முளைத்தாலும் ஒரு வாரம் கண்டதெல்லாம் வரிசையாய் வந்து ஆஜர் ஆக.. காதல் உள்ளுக்குள் கொழுந்து விட்டு எரிந்தது. அதுவும் அவள் அவனையே சுற்றிச் சுற்றி வர அவனுக்கோ அவளை அள்ளிக் கொள்ளும் ஆசை. இவை எல்லாம் மனதளவில் மட்டுமே.. முகத்தில் அதே மென்மையும் புன்சிரிப்புமாய் வலம் வந்தான்.

 

‘இனி மேல் இவனிடம் மாரடிக்க முடியாது’ என்ற எண்ணத்தில் வேதாளம் தன் முயற்சியைக் கைவிடும் நேரம் சுஜா வந்து நின்றாள்.

 

“அவர் யாரையும் பார்த்தும் சிரிக்க மாட்டார் அங்க பாரு” என்று இவளைக் கூட்டிச் சென்றாள் சுஜா.

 

ஆனால் கூட்டிச் சென்ற இடத்தில் அவனில்லை. “என்ன?” என்றவளிடம்..

 

சுஜா, “இங்க தான் அவர் பாப்பாவோட இருந்தார். அதுக்குள்ள எங்க போனாரோ?”

 

அவனுக்கு பாப்பாவா? நமக்கு தெரியாமலா? அவனுக்கே தெரியாத போது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை!

 

“அவர் பொண்டாட்டி செத்து போச்சாம். அவருக்கு ஒரு பாப்பா இருக்காம். எனக்கு ஒன்னும் அவர் வேண்டாம். எனக்கு செக்கண்ட் ஹேண்ட் எல்லாம் பிடிக்காது… நீயே கட்டிக்கோ.. அவர் அவ நினைப்பில உன்ன திரும்பிக் கூட பாக்க மாட்டார்! அந்த பாப்பாக்கு ஆயா வேலை பாரு! அவர் இந்த ஜென்மத்தில உன்னைப் பார்த்துச் சிரிக்க மாட்டார். நீ தனியா சிரிச்சுட்டே லூசு மாதிரி சுத்து” என்றாள். நீயே வச்சுகோ என்று பிச்சை போடுகிறாளாம்!

 

“போ டீ கூஜா.. ஓடிடு இங்க இருந்து. இன்னும் ஒரு நிமிஷம் நின்ன.. பல்ல பேக்க போறேன் பார்த்துக்கோ. அவர் என்ன பழைய துரு பிடிச்ச வண்டியா? செக்கண்ட் ஹேண்ட் அது இதுன்னு? மனுஷன் டி! பொண்டாட்டி இறந்தா அதுக்கு அவர் என்ன பண்ணுவார்…”

 

பேச்சு மீண்டும் நீள… வாக்குவாதமும்.. சபதமும்!

 

“நான் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ கூஜா… அவர் இன்னைக்கு சிரிக்காட்டி போறார். ஆனா அவர் தான் என் புருஷன். அவர் பாப்பாக்கு நான் தான் அம்மா. அவள என் பாப்பாவா செல்லமா வளப்பேன். நீ மூக்கு மேல விரல் வைக்கிற அளவுக்கு அவருக்கு நான் வரிசையா ஒம்பது பசங்கள பெத்துப் போட தான் போறேன்… அவர் என்னைப் பார்த்து சிரிச்சுட்டே இருக்கத நீ பாக்க தான் போற! இது.. இது.. இந்த கோம்ஸ்-சோட சபதம்! உன் தலை மேல சத்தியம்!”

 

‘இந்த பேச்சை எல்லாம் ஒட்டுக் கேட்டு சிரித்துக் கொண்டிருக்கும் தம்பி… ஓடி போ… பூரித்துப் போகாதே. நாளை இவளுக்கே இதெல்லாம் நினைவில் இருக்காதே.. அடுத்த ஒன்றரை வருடம் இதையே நினைத்து உருகும் அளவு இதில் வொர்த் இல்லையடா..’

 

அதன் பின் சித்தி வர.. மீண்டும் இரண்டு பெண்களும் ‘நொங்’கென்று மண்டையில் இரண்டு வாங்க… மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு  மேடையில் பஞ்சவர்ணம் அருகில் போய் நின்றுகொண்டனர்.

 

‘உனக்கும் என்னை பிடிச்சிருக்கா துளசி..? உனக்கும் காதலுக்கும் ஏணி வச்சா கூட எட்டாது போல இருக்கே.. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு. நீ தான்.. நீ மட்டும் தான் நம்ம பாப்பாக்கு அம்மா.. உனக்கு பதினெட்டு முடியட்டும்.. நானே வந்து என் மனசை உன் கிட்ட சொல்றேன்.. அது வரைக்கும் ஒழுங்க படி!’

 

அன்று மனதோடு பேச ஆரம்பித்தவன் தான்… அன்று அவனுக்குத் தெரியவில்லை அதுவே தொடர்கதையாய் போகும் என்று!!

 

பந்தி பரிமாற அவன் சென்றுவிடவே, அவள் வீட்டுக்குச் செல்லும் முன், அன்று கடைசியாக ஒரு முறை அவனைப் பார்த்தாள், மேடையில் அவன் புகைப்படம் எடுத்துக் கொள்ள நின்ற நேரம்! அவள் பொல்லாத நேரம்.. அப்பொழுது தான் நிற்க முடியவில்லை என்று மேடையிலிருந்து கீழே இறங்கி இருந்தாள்.

 

 

[the_ad id=”6605″]

 

“கோமு-மா.. கண்ணு, பஞ்சு முகமே சரி இல்ல பாரு.. கொஞ்சம் பூவ சரி பண்ணி.. முகத்த தொடைச்சு விட்டுட்டு வா மா..” என்று மேடைக்கு அனுப்பி விட்டார் பாண்டியனின் தாயார்.

 

புகைப்படம் எடுக்கும் நேரம் நடுவில் வந்தவளை புகைப்பட வல்லுநர் நகர்ந்து நிற்கச் சொல்ல… அவர் நிற்க சொன்னதோ.. அவள் காங்கேயம் அருகில்.

 

சுந்தரி கீழிருந்து ‘நடத்து நடத்து..’ என்று சிரித்துவிட்டு சென்றுவிட.. இவளுக்கும் முகம் புன்னகையில் மலர.. தயங்கித் தயங்கி கொஞ்சமாய் அவனை கடைக்கண் வழி பார்த்து முடியும் முன்… படம் எடுத்து முடித்துவிட்டனர் போலும்.. அனைவரும் நகர ஆரம்பித்திருந்தனர்.

 

அவள் கவனித்திருந்தால்.. அன்றே தெரிந்திருக்கும், அவன் அவள் முகம் பார்த்துச் சிரித்தது. அவன் மனம் உரைத்ததைப் புகைப்படக் கருவி கூட படம் பிடித்துவிட்டது.. ஏனோ அவளுக்கு அவன் மனம் தெரியவில்லை.

 

அவன் அவளைக் குனிந்து பார்த்தது கூட பெண்ணுக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் கண்ட நரியோடு சென்றிருக்கவும் மாட்டாள்.. அவனிடம் கருப்பு மணியும் வாங்கி இருக்க மாட்டாள்.. இப்படி நாசமாய் போயிருக்கவும் மாட்டாள்.

 

எத்தனை ‘மாட்டாள்’கள்.. அவனின் ஒற்றை சிரிப்பில் மறைந்திருந்தது?!! அன்றே தெரிந்திருந்தால் அவள் மனம் குளிற சிரித்திருப்பானே… பதினேழு வயதியேலே சட்டத்தைப் பற்றி எண்ணாமல் தாலி கட்டியிருப்பானே..

 

அதன் பின் கோமல் அவனைக் காணவே இல்லை. என்றாவது சித்தி வாத்தியார் மாப்பிள்ளை பற்றிப் பேசும் பொழுது நினைவில் வருவான். படிப்பு  முடியவும் பரிசம் போடுவதாய் மாப்பிள்ளை வீட்டார் கூறிவிட்டனராம். பதினெட்டு முடிந்ததும் திருமணமாம்.

 

தாத்தா படுக்கையில் விழவும்.. அவள் வாழ்வில் எல்லாம் நின்று போனது. அவன் நினைவும் தான்! அவர் இன்னுயிர் பிரிந்தபின் அவள் வாழ்வும் பட்ட மரமாய் மாறிப்போனது!

 

கோமலுக்கு அப்பா என்று ஒருவர் இல்லாமல் போயிருந்தால்… சித்தியின் சிறகடியில் வாழ்ந்து, சுந்தரியோடும் அவள் கருப்பனோடும் பறந்து திரிந்து.. கணக்கு வாத்தியாரை மணந்து.. இன்று சுந்தரி போல், இவளும் வயிற்றிலோ, இடுப்பிலோ கணக்கு வாத்தியார் மகனையோ மகளையோ ஏந்தியிருப்பாள்.. இல்லையேல் வாத்தியார் கல்லூரியிலாவது சேர்த்திருப்பார்! வாத்தியார் கண்டிப்பாகப் படிக்க வைத்திருப்பார் என்பது அதிகப்படியான தகவல்!

 

அவள் வாழ்வும், அவளும் முற்றிலும் மாறிபோயிருக்க… அவள் எதிரில் நின்றிருந்தவன் அப்படியே இருந்தான், அன்று பார்த்த அதே முரட்டுக் காங்கேயம் காளைப் போல்.. சிலுப்பிக் கொண்டு! உள்ளுக்குள் உடைப்பெடுத்து காட்டாற்றைப் போல் பொங்கி வரும் காதலைக் கண்ணில் காட்டாமல் அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்!

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!