Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்கள் வாடுவதில்லை 23

பிரேமாவும்…. நாச்சியப்பனும் அவர்களது உறவினரின் கல்யாணத்திற்காக என வெளியூர் சென்றிருந்தனர்.  நாளைதான் திரும்புகின்றனர்.   பிரேமா இருந்தால், அவரே சமையல் வேலையை முடித்து விடுவார்.

நிஷாவும் அவருக்கு உதவியாக காய் நறுக்கி தருவது…., துணிகளை மெஷினில் போட்டு காய வைப்பது…, வீடு கூட்டி மாப் போடுவது என மற்ற வேலைகளை செய்து தருவாள்.

மேலே இவளும் அஞ்சனாவும் தங்கியிருந்த வீட்டை வெறுமனேதான் பூட்டி வைத்திருக்கின்றனர்.  இன்னும் யாருக்கும் வாடைக்கு விடவில்லை.  முதலில்கூட அதை சொந்த உபயோகத்திற்குதான் வைத்திருந்தனர்.  வாடகைக்கு எல்லாம் விட்டிருக்கவில்லை.

வேல்முருகன் போன் செய்து நாச்சியப்பனிடம் பெண்கள் தங்குமாறு பாதுகாப்பான இடம் வேண்டும் கேட்கவே…, மேலிருந்த வீட்டை ஒழித்து அவர்களுக்காக  வாடைகைக்கு விட்டிருந்தனர்.



Advertisement

பள்ளிப் பருவத்திலிருந்து  அஞ்சனாவுடன் ஒன்றாகவே சேர்ந்திருந்த நிஷாவுக்கு…, அவளது திருமணத்திற்குப் பின் அஞ்சனா வேலையை மாற்றிக் கொண்டு, சென்னைக்கு சென்றது, மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

அஞ்சனாவை இந்த நிலையில் தனிமையில் விட பயந்து…, நிஷாவும் தன்னுடனேயே பெங்களூரில் வேலைப் பார்க்க சொல்லி…. வற்புறுத்திப் பார்த்தாள்.  அஞ்சனா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.  பிடிவாதமாக தன்னுடைய ஜாகையை சென்னைக்கு மாற்றிக் கொண்டாள்.

நிஷா கடிகாரத்தின் சத்தத்தில்…, அதனைத் திரும்பி பார்த்தாள்.  இரவு இரண்டு மணி.  இன்னும் உறக்கம் வரவில்லை.  முழித்துக் கொண்டிருக்கிறாள். அறைக்கு செல்லப் பிடிக்காமல், உமாபதியின் மேல் கோவமாகி…, ஹாலிலேயே அமர்ந்திருக்கிறாள்.

Advertisement

இங்கே மனைவி தன்மேல் கோவம் கொண்டிருப்பதையோ, அறைக்குள் வரப் பிடிக்காமல், ஹாலில் உட்கார்ந்திருப்பதையோ… எதையும் அறியாமல்… அவன் ஆழ்ந்த சயனத்தில் ஆழ்ந்திருந்தான்.

Advertisement

ஆம், அவன்தான் ஸ்மரனையே இல்லாமல் படுக்கையில் கிடக்கிறானே.

காலையில் திட்டமிட்டபடி… இருவரும், மாலை அலுவலகத்தில் இருந்து முன்னதாகவே வந்து தயாராகி… சந்தோஷமாகவே பார்ட்டிக்கு சென்றிருந்தனர்.

உமாபதியின் நண்பர் குழுவில் இருந்த நண்பன் ஒருவனுக்கு திருமணம் முடிந்ததற்குதான் இந்த பார்ட்டி… கொண்டாட்டம்… எல்லாம்.

Advertisement

நண்பனின் மனைவியும் இவர்களது தோழிதான்.  எல்லோரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள்.  இது காதல் கல்யாணம்.  நண்பனின் காதலுக்கு… அவனது வீட்டில் இத்தனை நாட்கள் மறுப்பு தெரிவித்திருந்த பெற்றோர்கள்…, மகனின் பிடிவாதத்தை பார்த்து வேறு வழியில்லாமல் திருமணம் செய்து வைத்து விட்டனர்.  அதற்கான கொண்டாட்டமாகதான் இந்த பார்ட்டி அரேன்ஜ்மென்ட்ஸ் எல்லாம்.

நிஷாவுக்கு இதுபோன்ற பார்ட்டி எல்லாம் பழக்கமில்லை.  ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த பார்ட்டி…, நேரம் ஆக ஆக… டிரிங்ஸ்… டிஸ்கோத்தே என களைகட்டியது.  ஆண்கள் எல்லாம் அவரவர் ஜோடிகளுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு ஆட்டம் சூடு பிடிக்கவும்… தங்களுக்குள் ஜோடிகளை மாற்றியும், சிலர் ஆடிக் கொண்டிருந்தனர்.  நிஷாவால் அந்த இடத்தில் ஒட்ட முடியவில்லை.  கையில் ஜூஸை எடுத்து கொண்டு ஒதுங்கி ஒரு டேபிளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அமைதியாக.

உமாபதி நண்பர்களுடன் இருந்தாலும்… நிஷாவை அவ்வப்போது வந்து பார்த்து…, அவளின் மீதும் பார்வை வைத்திருந்தான்.  ஆரம்பத்தில் அவளின் மீது கவனம் வைத்திருந்தவன் போக போக நண்பர்களுடன் சேர்ந்து டிரிங்ஸ்… ஆட்டம்… என முழுநிலைக்கு சென்றிருந்தான்.

நெடு நாட்களுக்கு பிறகு நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்ததால்… கொண்டாட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.  பார்ட்டி முடிந்து வீட்டிற்கு திரும்பும்போது உமாபதி முழுபோதையில் இருந்தான்.

கார் ஓட்டி வருவதே அவனுக்கு அத்தனை சிரமமாக இருந்தது.  ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.  நிஷா ஏதாவது திட்டுவாளோ… என்ற பயம் இருந்தது உள்ளுக்குள்.  மெல்ல வீடு வந்து சேர்ந்து, உடையை மாற்றுவதற்குள்,.. போதையில் தலை கிறுகிறுத்து… நெஞ்சைப் பிடித்து கொண்டு பாத்ரூம் ஓடியிருந்தான்.

இத்தனை நேரம் அவன் உள்ளே தள்ளியிருந்தது, எல்லாம் வேகமாக வெளியேறத் துவங்கியிருந்தது.  எத்தனை கன்ட்ரோல் செய்தும் வயிற்றைப் பிறட்டிக்கொண்டு வெளியே வந்தது வேகமாக.  மொத்த திரவமும் உட்கொண்டிருந்த உணவோடு சேர்ந்து வெளிவந்தும், தலை கிறுகிறுப்பு தீரவில்லை.  அவயங்கள் அத்துணையும் சோர்ந்து விட்டது உமாக்கு.

நெஞ்சு முழுவதும் எரிச்சல் வேறு தாங்கவில்லை.  தலையெல்லாம் பாரமாக இருந்தது.  இரண்டு கைகளால் தலையை தாங்கிக் கொண்டே பாத்ரூமிலிருந்து தள்ளாடிக்கொண்டு வெளியே வந்தான்.  துணியைக்கூட மாற்ற தெம்பில்லாமல்… தொய்வுடன் தலையை பிடித்துகொண்டு வந்து அப்படியே கட்டிலில் விழுந்துவிட்டான்.

இவ்வளவு நேரம் உமாவை விடாமல் முறைத்து நின்றவள், அவன் படுத்ததும், பாத்ரூம் சென்று எட்டிப் பார்த்தாள்.  அவ்வளவுதான் அதைப் பார்த்து அழுகையும் ஆத்திரமும் ஒருங்கே வந்தது அவளுக்கு.

மூக்கை ஒரு கையால் மூடிக் கொண்டே… பைப்பைத் திறந்துவிட்டு பக்கெட் பக்கெட்டாக தண்ணீர் பிடித்து ஊற்றி…. அவன் வாந்தியெடுத்து வைத்திருந்ததை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு வந்தவள், ஹாலில் வந்து அமர்ந்து கொண்டாள் கோவத்துடன்.

ஏன் இந்த கர்மத்தை எல்லாம் சாப்பிடுவானேன்.  ஒத்துக்காம வந்து வாந்தி எடுப்பானேன்… என ஆத்திரமாக வந்தது அவளுக்கு.

உமாபதி மது அருந்துவான்… என்பதே அவளுக்கு அதிர்ச்சியான தகவல்.  பார்ட்டியில்தான் அதனை அறிய நேர்ந்தது.  இதில் இவன் இப்படி வந்து வாமிட் செய்து வைத்தது…, இன்னும் ஆத்திரத்தை கூட்டியிருந்தது.

சோபாவிலேயே வெகு நேரம் உட்கார்ந்திருந்தவள்… தூக்கம் சொக்கவும்… தன்னை மறந்து அங்கேயே தூங்கியிருந்தாள்.

மறுநாள் காலையில், வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டுதான் விழிப்பே வந்தது.  எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.  தூக்கக் கலக்கத்திலேயே வந்து கதவைத் திறந்த மருமகளைப் பார்த்து, பிரேமாவுக்கு யோசனையாக இருந்தது.

மணி ஒன்பதாவது, இவ்வளவு நேரமா தூங்கிட்டிருந்தா….?  ஒருவேளை இன்னைக்கு சன்டேன்றதால தூங்கிட்டாள் போல…. என நினைத்துக்கொண்டே உள்ளே சென்றார்.

பாத்ரூம் சென்று அவசர அவசரமாக… நிஷா குளித்து முடித்து வருவதற்குள், பிரேமா கிட்சனில் புகுந்திருந்தார்.

வந்தவள் “சாரி அத்தை… நல்லா தூங்கிட்டேன்.  நீங்க உட்காருங்க.  நான் செய்யறேன்…” என்றாள் பிரேமாவிடம்.

அவளைத் திரும்பி பார்த்தவர், “காப்பி வச்சிருக்கேன்.  எடுத்துக்கோ…” என்றார் வேறு எதுவும் சொல்லாமல்.

அடுப்பில் ஒருபக்கம் சாம்பாருக்கு தாளித்துவிட்டு அதிலேயே…., காய்களை போட்டு வேக வைத்துக் கொண்டிருந்தார்.  இன்னொரு பக்கம் பருப்பு குக்கரில் வைத்திருந்தார்.  இட்லியும் வெந்து கொண்டிருந்தது.

நாச்சியப்பனுக்கு நேரத்திற்கு உணவு எடுத்து, மாத்திரை போட வேண்டும் என்பதால்… வந்தவுடனேயே… சமையலை ஆரம்பித்திருந்தார்.  பிரேமா அன்பானவர் என்றாலும்… கண்டிப்பும் உண்டு, அவரிடம்.

எல்லாவற்றிலும் பர்பெக்‌ஷன் எதிர்பார்ப்பார்.  அவருக்கு நேரத்திற்கு எல்லாம் நடக்க வேண்டும்..  வீட்டை சுத்தமாகவும் நீட்டாகவும் வைத்திருப்பார்.  பொருட்களை சேர்த்து வீட்டை அடைப்பதில் அவருக்கு பிடித்தமில்லை.  தேவைக்கு ஏற்ப கனகச்சிதமாக, வீட்டை சிம்பிள் அன்ட் நீட்டாக வைத்திருப்பதில் வல்லவர்.

நாச்சியப்பனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்து… பெரும்பாலும் வீட்டுச் சாப்பாடுதான்.  வெளியிலிருந்து வாங்கும் உணவுகளை தவிர்த்திடுவார், உடல்நலத்திற்காக பயந்து.

நேற்று இரவு ஏழு மணிக்கு இருவரும் சாப்பிட்டது.  பிரயாணம் முடிந்து பசியுடன் களைப்பாக வந்திருந்தனர்.  நீண்ட தூர பயணத்தினால் அசதியாக வந்தவருக்கு…, சற்று நேரம் கூட உட்கார முடியாமல், உடனேயே சமையல் செய்ய வேண்டியிருந்ததை, நினைத்து எரிச்சலாக இருந்தது.

தாங்கள் இன்று திரும்புவது முன்னமே நிஷாவுக்கு தெரியும் என்பதால், தங்களுக்காக காலை உணவு தயாராக இருக்கும் என எதிர்பார்த்து வந்தவருக்கு ஏமாற்றமாக இருந்தது.  மருமகளிடம் அதைக் காட்டவும் முடியாமல், மௌனமாகியிருந்தார்.

“உமா… இன்னும் எழுந்துக்கலையா…?” என்றார் மருமகளிடம் வேலைப் பார்த்துக்கொண்டே.

“தூங்கறாங்க த்தை…”

“ம்ம்.  முதல்ல சோபாவில இருக்க தலைகாணி போர்வைய எடுத்து உள்ள வை…”

அவர் சொல்லவும்தான்.. அச்சோ.. இவங்கள பார்த்த அவசரத்துல… அதை எடுக்க மறந்துட்டேனா…?  போச்சு…  ஏன் வெளியே படுத்தன்னு கேட்கப்போறாங்க….?  நல்லா மாட்னேன்.  எல்லாம் இவனால வந்தது.  எழுந்துருக்கட்டும்.  அவனுக்கு இருக்கு… என நினைத்துக் கொண்டே தலையணை போர்வையை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள்.

அங்கே உமாபதி எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தவன், தலையை குனிந்து இருகையாலும் பிடித்து அழுத்திக் கொண்டிருந்தான்.

ஓஹ்… சாருக்கு இன்னும் தெளியலையா…..? என நினைத்துக் கொண்டாள் உள்ளுக்குள்.  இவள் வந்த அரவத்தில், நிமிர்ந்து இவளைப் பார்த்தவன்..,  “தலையெல்லாம் விண்ணு விண்ணுன்னு தெரிக்குது.  எனக்கு ஒரு லெமன் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா நிஷாமா….” என்றான் மெல்லிய குரலில்

அவன் மேல் இருந்த கோவத்தில், தலையணை, போர்வையை கட்டிலில் எறிந்தவள்… அவன் பேசியதற்கு எந்த பதிலும் சொல்லாமல், அவனைக் கண்டுகொள்ளாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

எட்டி அவளது கையைப் பிடித்து இழுத்து கட்டிலில் உட்கார வைத்தவன்…, “இங்க ஒருத்தன் பேசிட்டிருக்கேன் இல்ல.., நீ பாட்டுக்கும் கண்டுக்காம போனா என்ன அர்த்தம்… ம்ம்… ?” என்றான் கொஞ்சலாக.

“ஹ்ம்ம்…., பேச விருப்பம் இல்லன்னு அர்த்தம்”.

“ஏன்…. செல்லக்குட்டி….?”

“என்ன ஏன்….?  ஸாருக்கு நைட் நடந்தது எல்லாம் மறந்துடுச்சோ…” என்றாள் அவனை முறைத்துக்கொண்டே.

“என்ன நடந்ததுச்சுடா…?  என்ன பண்ணேன் நான்…? செல்லக்குட்டிய ஏதும் டிஸ்டர்ப் பண்ண மாதிரிகூட தெரியலையே….” என்றான் விஷமமாக புருவத்தை உயர்த்தி.

“ம்ம்… அதுல்லாம் நல்லா ஞாபகம் இருக்கும்”. என அவனைத் தலையில் ஓங்கி கொட்டியவள்  “நிஜமாவே… எல்லாம் மறந்துபோச்சா……?  இல்ல நடிக்கறீங்களா…? என்கிட்ட…” என சீறினாள்.

“என்னடி… என்னமோ…. மறந்துடுச்சா….?  மறந்துடுச்சான்னா…?  என்ன நடந்துச்சுன்னே முழுசா சொல்லாம?  முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு…”

“நாம இரண்டு பேரும் நேத்து எங்க போயிட்டு வந்தோம்….?  அதுவாவது ஞாபகம் இருக்கா….?” என்றாள் சந்தேகப் பார்வையுடன்.

“பார்ட்டிக்கு…. போயிட்டு வந்தோம்.  அதுக்கென்ன….?”

“அங்க ஸார்… என்ன பண்ணீங்க…?”

“என்ன பண்ணேன்…?  என்னடி நீ…?  ஏதோ… தப்பு பண்ணவன் மாதிரி கேள்வி கேட்டுட்டு…” என அலுத்தவன், “பிரண்ட்ஸ்ங்களோட பேசிட்டிருந்தேன்…” என்றான்.

“ஓஹோ… பேசமட்டும்தான் செஞ்சீங்களா….?  அவங்களோட சேர்ந்து தண்ணியடிச்சுட்டு ஆட்டம் போடல….?”

“ச்சீ.. ச்சீ… டீசன்டா பேசு.  தண்ணி… ஆட்டம்னு…”

“பின்ன குடிச்சுட்டு ஆடறதுக்கு பேர் என்னவாம்….?”

“ஏய்…. மறுபடியும் அதையே சொல்லிட்டு.  நான் என்ன டெய்லியுமா சாப்பிடறேன்.  எப்பவாவது…. இந்த மாதிரி பார்ட்டில… பிரண்ட்ஸோடதான  சாப்பிடறேன்.  டெய்லி சாப்பிடற பிரண்ட்ஸ்லாம் இருக்காங்க தெரியுமா…?  இன்னும் நீ அவங்கள பார்த்தா என்ன சொல்லுவ…?”

“இதுல வேற பெருமையா…. உங்களுக்கு…?  வயிறு முட்ட குடிச்சுட்டு வந்து…, இராத்திரி பாத்ரூம்ல வாந்தியெடுத்து வச்சதகூட தெரியாம, அப்படியே வந்து படுத்தாச்சு”.

“எப்பவும்… கொஞ்சமாதான் எடுப்பேன்டா.  நேத்து என்னமோ… பிரண்ட்ஸ் எல்லாம் கம்பெல் பண்ணவே, கொஞ்சம் அதிகமாயிடுச்சு.  அதான் வந்தவுடனே தலைய சுத்திடுச்சு…”

“வாமிட் பண்ணது கூட தெரியல.  ம்ம்…  பாத்ரூம் உள்ள கால வைக்கவே முடியல.  அந்த அளவுக்கு ஸ்மெல்.  அதை எல்லாம் கழுவிவிட்டுட்டு வந்து பார்த்தா…., ஸார் டிரஸ்கூட மாத்தாம அப்படியே உருண்டாச்சு பெட்ல…. அழுக்கோட…”

“ஸாரிடா… தலையெல்லாம் விண் விண்ணுன்னு ஒரே வலி.  ஏதோ கல்லை தூக்கி தலையில வச்சமாதிரி ஒரே பாரமாயிருந்தது.  அதான் அப்படியே வந்து படுத்துட்டேன்.  கஷ்டப்படுத்திட்டனா செல்லக்குட்டி…” என அவளது தாடையை பிடித்து கொஞ்சினான்.

“கைய எடுங்க முதல்ல.  உங்ககிட்ட பேசவே கூடாதுன்னு இருந்தேன்.  யாராவது குடிச்சுட்டு பக்கத்துல வந்தாலே…. எனக்கு பிடிக்காது.  அந்த ஸ்மல் தாங்காம மூக்கை பொத்திட்டு தூரமா போயிடுவேன்.  இப்ப நீங்களே இப்படி குடிச்சுட்டு வந்தத பார்த்ததும்… நைட் அவ்ளோ கோவம் உங்க மேல….. விடுங்க…. என்னை”.

“எப்பவோதானடா…..?  நான் என்ன டெய்லியுமா… சாப்பிடறேன்?  இதுமாதிரி பிரண்ட்ஸ்ச மீட் பண்ணும்போது மட்டும்தான்….”

“ஓ… அப்படிங்களா….?  இன்னிக்கு உங்க அப்பா அம்மாகிட்ட இதைபத்தி பேசறேன்.  அவங்க சொல்லட்டும்…  எப்பவோதானன்னு….”

“ஏய்…..  அவங்களுக்குலாம் தெரியாதுடி.  நீ பாட்டுக்கு எதையாவது ஒளறி வைக்காத…  எல்.கே.ஜி குழுந்தையாடி நீ….?  அப்பா அம்மாகிட்ட கோல்மூட்டுவேன்னு…. பயமுறுத்திட்டு…”

“எதுவாயிருந்தாலும்…., நமக்குள்ளயே பேசி சால்வ பண்ணிக்கனும்டா செல்லம்.  நம்ம மேட்டர் எதுவும் வெளிய போகக்கூடாது…  சரியா…”

“ஏன்…?  அப்பதான் இன்னும் உங்களுக்கு வசதியா இருக்கும்னா…..?”

“அடியேய்… நமக்கு கல்யாணம் ஆகி இவ்வளவுநாள்ல…. எப்பவாவது டிரிங் பண்ணி பார்த்திருக்கியாடி…?  நேத்து பார்ட்டிக்கு போனோம்றதால டிரிங் பண்ணேன்….”

“எனக்கு நீங்க டிரிங் பண்ணக்கூடாது…”

“அம்மாதாயே…. நீ எந்த காலத்துல இருக்கே…..?  இப்பல்லாம் இது கேசுவல் டி….”

“இருக்கட்டும்.  ஆனால் நீங்க டிரிங் பண்ணக்கூடாது.  இல்லன்னா… அத்தை மாமாகிட்ட சொல்லிடுவேன்…”

“அய்..யோ…. இவளோட…” என்று தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டான் உமாபதி.

அவனது கையை அகற்றிவிட்டு அங்கிருந்து எழுந்து நடந்தவளைப் பார்த்து…, கெஞ்சலாக “லெமன் ஜூஸ் எடுத்துட்டு வா நிஷா….  தலைய வலிக்குது…” என்றான்.

“முதல்ல பிரஷ் ஆகிட்டு வெளியே வாங்க. இராத்திரி நீங்க பண்ண கலாட்டால, நானும் சரியா தூங்கல.  காலையில அத்தை மாமா வந்து பெல் அடிச்சதுக்கு அப்புறம்தான் நானே எழுந்தேன்…”

“அதுக்கே அத்தை என்னை முறைச்சிட்டு இருக்காங்க.  நீங்க இன்னும் வெளியே வராம இருந்தீங்கனா…., அதுக்கும் கேள்வி கேட்பாங்க….?”

“அம்மா…. அப்பா…. வந்துட்டாங்களா…….?”

“ஹ்ம்ம்… எப்பவோ…”

“அதை முதல்ல சொல்லவேண்டியதுதானேடி…..” என வேக வேகமாக எழுந்தான்.

“ஆங்…..”

“என்னடி முறைப்பு…?  கண்ணை நோண்டிடுவேன் பார்த்துக்கோ.  ஆந்தை மாதிரி முழிச்சிட்டு நிக்கறத பாரு…  குளிச்சிட்டு வந்து உன்னை வச்சிக்கறேன்டி. போ… இப்ப…” என சிரித்துக்கொண்டே பாத்ரூமுக்குள் சென்றுவிட்டான்.

“அய்ய…” என அவனுக்கு பழிப்பு காட்டியவள் “ஆளப்பாரு…. என்னை எல்.கே.ஜி குழந்தைன்னு கிண்டல் பண்ணிட்டு…, அம்மான்னதும் எழுந்து குளிக்கறதுக்கு ஓடுறான்…  தொடை நடுங்கி…” என முணுமுணுத்துக் கொண்டே வெளியே சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!