Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்கள் வாடுவதில்லை 23

தொண்டையை கனைத்து தன்னை சமன்படுத்தியவன், ‘உங்க பொண்ணை என்னை நம்பி தைரியமா குடுக்கலாம் மாமா…  என் பொண்டாட்டிய கண்கலங்காம பார்த்துக்குற தகுதி எனக்கிருக்கு…” என்றான் கம்பீரமாகவே.

இப்போது அவனை நேராக திரும்பிப் பார்த்தார் வேல்முருகன். “அன்னைக்கு உங்க அம்மா பேசனப்போ, நீயும் வாயை மூடிட்டுதான இருந்தே….?”

“அதுக்கு காரணம் இருந்தது மாமா.  அப்ப இருந்த நிலைமையே வேற.  நானே பொழைப்பனான்னு எனக்கு நிலையில்ல.  அப்படியே குணமானாலும்…, எந்த சேதாரமும் இல்லாம, கைகால் முன்ன மாதிரி சரியாகுமா….? எழுந்து நடப்பனா….? பழைய மாதிரி திரும்ப என்னால வேலை பார்க்க முடியுமான்னு…? ஆயிரம் கேள்வி எனக்குள்ள”.

“இதுல என்னோட சேர்ந்து அஞ்சனாவோட வாழ்க்கையும் ஏன் வீணாக்கனும்னு நினைச்சேன்.  நினைச்சு பாருங்க.  அப்படி எனக்கு ஏதாவது ஆகியிருந்தா நீங்க எல்லாரும் உங்க பொண்ணை முழுமனசா எனக்கு கல்யாணம் பண்ணி குடுத்திருப்பீங்களா….?” என்றான் ஸ்திரமாக அவரைப் பார்த்து.



Advertisement

இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்… அவரால்…?  இதுவும் உண்மைதானே.  அவன் சொல்வதுபோல் ஏதேனும் நடந்திருந்தால், மனதாற அவனை அந்த நிலையில் தன்னால், மருமகனாக, தன் பெண்ணுக்கு கணவனாக ஏற்றிருக்க முடியுமா…?  ம்கூம் பதிலில்லை அவரிடம்.

“அம்மா பேசும்போது அவங்களை தடுக்காததுக்கு அதுதான் காரணம்.  என்ன பார்க்கறீங்க…?  நீங்க கிண்டலா பார்த்தாலும், அதுதான் உண்மை”.

“எப்படியும் அம்மா மேல இருந்த கோவத்துல அஞ்சனாவுக்கு வேற நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்டி வைப்பீங்கன்னு நினைச்சேன்.  அதுதான் என் எண்ணமும்”.

Advertisement

“இவளும் என்னையே நினைச்சிட்டிருக்காம வேற கல்யாணம் பண்ணிக்கனும்னு, அமைதியா இருந்தேன்”.

Advertisement

இதனைக் கேட்டு நக்கலாக சிரித்த வேல்முருகன், “என்ன அப்பாவும் பையனும் வீட்டிலே எப்படி பேசனும்னு முடிவு பண்ணிட்டு வந்து இங்க… வேஷம் போட்டுட்டு இருக்கீங்களா….?” என்றார்.

அவரைப் பார்த்து புன்னகைத்தவன், “நீங்க எப்படி வேணா நினைச்சுக்கோங்க.  இதுதான் உண்மை….”

“இவ்வளவு பேசற நீங்க…. ஏன்…, இன்னும் உங்க பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்க்காம இருக்கீங்க….?” என்றான் சிரித்துக்கொண்டே.

Advertisement

“அ…து….” என தடுமாறியவர் “அவளும் பழசெல்லாம் மறக்க வேணாமா…?  அதான், கொஞ்ச நாள் போகட்டும்னு…. தள்ளிப்போட்டிருக்கேன்…..” என்றார் விட்டுக்கொடுக்காமல்.

அவரைப் பார்த்து சிரித்தவன், “இப்ப நீங்கதான் பொய் சொல்றீங்க… மாமா.  வேற மாப்பிள்ளைய கட்டிக்க உங்க பொண்ணு சம்மதிக்கலன்னு சொல்லுங்க.  அதான காரணம்…..” என்றான் இறுமாப்பாக.

அதுதான் உண்மை.  வேல்முருகன் வேறு மாப்பிள்ளையை பார்ப்பதற்கு அஞ்சனா இடம் கொடுக்கவேயில்லை.  அதை சரியாக கணித்து தேவநாதன் கூறியதும் வேல்முருகன் பேசமுடியாமல் திணறினார்.

“என்…னையில்லாம வேற யாரையும்… கட்டிக்க, உங்க பொண்ணுக்கு சம்மதம்னு வாயைத் திறந்து சொல்லச் சொல்லுங்க?  நான் போயிடுறேன்… என்றான் அவளைப் பார்த்துகொண்டே கர்வத்துடன்.  சட்டமாக சாய்ந்து உட்கார்ந்து நேராக வேல்முருகனை நிமிர்ந்து பார்த்து… கூறியவனைப் பார்த்து அவளுக்கும் உஷ்ணம்தான்.  ஆனால், வாயைத்திறக்க முடியாதே.

இப்பொழுது தந்தைக்கு கொதி நிலையானது.  நிமிர்ந்து மகளை முறைத்தார்.  பார் இவன்லாம்… என்னை வந்து கேள்வி கேட்கற மாதிரி வச்சிட்டியே… என குத்தீட்டி இல்லாமல் கூர்ந்து தாக்கியது தகப்பனின் பார்வை மகளை.

தந்தையின் பார்வையை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள் அஞ்சனா.

தேவநாதனின் பார்வை இன்னும் வேல்முருகனின் மேல்தான்.

வேல்முருகனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.  அவமானமாக இருந்தது அவருக்கு.  சின்ன பையன்.  நேத்து பொறந்தவன்.  அவன் முன்னால என்னை அசிங்கப்படுத்தி, தலைகுனிய வைச்சுட்டளே… என மாய்ந்துபோனார் உள்ளுக்குள்.

மனதே விட்டுப்போனது தந்தைக்கு.  அதற்குமேல் அங்கு உட்கார முடியாமல் எழுந்து உள்ளே சென்று விட்டார்.

தந்தை அறைக்குள் செல்வதைப் பார்த்த அஞ்சனா, அவர் பின்னாடியே சென்று, அவரது கைகளைப் பிடித்து கொண்டாள் இறுக்கமாக.

தளர்ந்துபோய் கட்டிலில் அமர்ந்தவர் முன் மண்டியிட்டு… கண்களில் நீர் வழிய, “ப்பா…. ஸாரி ப்பா.  என்னை மன்னிச்சுடுங்க.  ப்ளீஸ்… ப்பா.  இப்படி இருக்காதீங்க.  என்னால பார்க்க முடியல உங்கள இப்படி…” என உடைந்தவள்… குரல் வெளியில் வராமல் “நான்….. நான்…..” என பேச முடியாமல் தேம்பினாள்.

………………………..

“நான் உங்களை மீறி எதுவும் பண்ணமாட்டேன் ப்பா….  ஆனால் என்னால வேற யாரையும் கல்யாணம் செஞ்சுக்க முடியாது.  ப்ளீஸ் ப்பா…… என்னை புரிஞ்சுக்கோங்க…” என அவர் மடியிலேயே தலையை வைத்து அழுதாள்.

ரோகிணியும், லஷ்மியும்கூட உள்ளே வந்திருந்தனர், அவர் பின்னாடியே.  லஷ்மிக்கு பேத்தி கதறுவதைப் பார்த்து கண்கள் கலங்கியது.  மகனும், பேத்தியும் அவரவர் எண்ணத்தில் நின்று தடுமாறுவதை, வருந்துவதை நினைத்து அவரும் மருகினார்.

ரோகிணிக்கும் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.  கலங்கிய கண்களை துடைத்துகொண்டே மகனை நெருங்கிய லஷ்மி, “வேலு பிள்ளை அழுது பாரு…” என்றார் மகனை தேத்தும் பொருட்டு.

“அவள் வாய் விட்டு அழறா….  என்னால அழமுடியல……”

“அப்படி சொல்லாதப்பா….  நீரடிச்சு நீர் விலகுமா… சாமி?  போகும்போது… என்னத்த கொண்டுபோகப் போறோம்.  இந்த கோவம்… ரோஷம்… எல்லாம் கட்டையில உசுர்  இருக்கவரைக்கும்தான் சாமி”.

“வயசுபிள்ளைங்க…. வாழ வேண்டாமா…?  உன் முடிவுதான்….பா  நல்லா யோசிச்சு முடிவெடு….”

“அதான் சொல்லாம…. சொல்லிட்டாளே….  அவனைத்தான் கட்டிப்பேன்னு…  இதுல நான் என்ன முடிவு பண்ண வேண்டியிருக்கு…..?”

“கோவத்துல எது பேசுனாலும் தப்பாயிடும் வேலு.  வார்த்தைய விடாத…. அவள் ஆசைப்பட்டாலும்…, உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டுதான இருக்கா….? உன்னை மீறி எதுவும் அவள் பண்ணதில்லையே?  அதை நீ புரிஞ்சுக்கனும்.  அவள் உனக்கு மதிப்பு குடுக்கறதுபோல, நீயும் அவள் மனசப்பாரு… வேலு.  நம்ம பிள்ளைடா… அவள்.  அவளை இன்னும் மேல… மேல… ஆளாளுக்கு கஷ்டப்படுத்தாதீங்க..பா…” என கண் கலங்கினார்.

வேல்முருகனும் மகளைத்தான் பார்த்திருந்தார்.  அவளுடைய விருப்பத்திற்கு மதிப்பு குடுத்துதானே நிச்சயம் வரைக்கும் வந்தது.  அதன்பிறகு… நடந்ததெல்லாம்… யார் பொறுப்பு…?  யாருமே எதிர்பார்க்கவில்லையே இதெல்லாம்.

மகளின் அழுகையை காண பொறுக்காமல் அவள் தலையை மெல்ல வருடிவிட்டார் தந்தை.

தந்தையின் தொடுதலை உணர்ந்ததும், கண்ணீருடன் நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.  அழாத என தலையை இடமும் வலமும் ஆட்டி கண்களாலேயே சைகை செய்தார்.

மகளின் கண்களை துடைத்துவிட்டு… எழுப்பி பக்கத்தில் உட்கார வைத்தவர், அவளது கையைப் பிடித்து கொண்டார் ஆதுரமாக.  சில நொடிகள் அப்படியே மௌனமாக இருந்தவர், “நீங்களே பார்த்துக்கங்க ம்மா…  நடந்த எதையும் என்னால சட்டுன்னு மறக்கமுடியாது.  பழைய மாதிரி எல்லாத்தையும் மறந்து, முன்ன நின்னு  செய்யற அளவுக்கு, எனக்கு பெரிய மனசும் இல்ல.  இதுகூட என் பொண்ணுக்காக….தான்” என்றார் லஷ்மியைப் பார்த்து.

“சரி ப்பா.  நீ மருகாத…  நான் பார்த்துக்கறேன்…..”

முக்கியமான சொந்தங்களை மட்டும் அழைத்து கோயிலில் வைத்து சிம்பிளாக திருமணத்தை முடிக்கலாம் என முடிவு செய்தனர்.  இதில் வேல்முருகனோ…, ரோகிணியோ… எதிலும் தலையிடவில்லை.

லஷ்மியும் செல்வதுரையுமே எல்லாவற்றையும் பேசி முடிவு செய்தனர்.  திருமணத் தேதியை  உறுதி செய்துவிட்டுதான் செல்வதுரை அவரது வீட்டிற்கே தெரிவித்தார்.

மீனாவால் எந்த எதிர்ப்பும் காட்ட இயலவில்லை.  மனதில் இந்த திருமணத்திற்கு விருப்பம் இல்லையென்றாலும்… தன்னை முயன்று கட்டுப்படுத்தி கொண்டு அமைதியாக இருக்க முயன்றார் கணவருக்காக.

ஏற்கனவே கணவர் தன்னிடம் பேசாமல் ஒதுங்கி இருந்தது, மனதளவில் அவருக்கு பயத்தைக் கொடுத்திருந்ததால்… எதிலும் மூக்கை நுழைக்கவில்லை.  செல்வதுரையும் அவரை எதற்கும் எதிர்பார்க்கவில்லை.

சுபயோக சுபதினத்தில்… இரு வீட்டினரும் நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்து…, மயிலம் முருகன் கோவிலில் வைத்து, திருமணத்தை நடத்தி  முடித்திருந்தனர்.

செல்வதுரை எல்லோரையும் அழைத்து வரவேற்பு, நடத்தலாம் என கேட்டதற்கு… லஷ்மி மறுத்துவிட்டார்.  அதற்கு ஒத்தாற்போல தேவநாதன் அஞ்சனாவும் அதை விரும்பவில்லை.  செல்வதுரைக்கும் அதனை மீறி வற்புறுத்த முடியவில்லை.

திருமணத்தை முடித்ததே அவருக்கு சந்தோஷமாக இருந்தது.  பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அமைதியாகிவிட்டார்.  இதில் மீனாவுக்குதான் வருத்தம்.  தான் மறுத்தும் கணவரும்… மகனும் சேர்ந்துகொண்டு, இந்த திருமணத்தை நடத்தி முடித்தது, உள்ளுக்குள்ளே புகைச்சலை கிளப்பியிருந்தது.  வெளியில் எதையும் அவரால் காட்ட முடியவில்லை.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!