Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்கள் வாடுவதில்லை 24

ஜன்னல் கம்பிகளை பிடித்துகொண்டு… வெளியே தெரிந்த ஆகாயத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் அஞ்சனா.  இருட்டின் கருமையில்… வைரக்கற்கள் சிதறியது போல்… வானத்தில் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரக் கூட்டத்தை கண்களால் வெறித்துக் கொண்டிருந்தாள்.

கண்கள் வானத்தைப் பார்த்தாலும், மனது முழுவதும் சஞ்சலங்கள் அப்பியிருந்தது.  விரும்பியவனை கைப்பிடித்திருந்தாலும்… மனதில் சந்தோஷமில்லை.  தந்தையின் இறுக்கமும்…. மீனாவின் பாராமுகமும் அதிருப்தியை தந்தது.

புகுந்த வீட்டில் யாரிடமும் ஒட்டமுடியவில்லை.  இங்கு வந்ததிலிருந்து அறையிலேயே தஞ்சம் புகுந்திருந்தாள்.  திருமண வீட்டிற்கான கலகலப்போ…, சந்தோஷமோ யாரிடமும் இல்லை.  எல்லாம் கடமையாக நடந்து முடிந்திருந்தது.

இரவு உணவு முடிந்து…, வெளியில் இருக்க முடியாமல் அறைக்கு வந்திருந்தாள்.  எத்தனை நேரம் வெறுமனே படுத்திருப்பது.  அலுப்பைத் தந்தது மனதுக்கு.  திரும்ப வெளியில் செல்லவும் தயக்கமாக இருந்தது.  வெளிக் காற்றுக்காக ஜன்னலைத் திறந்தவள்…, வானத்தில் தெரிந்த பிறைநிலவையும், நட்சத்திரங்களையும் வேடிக்கை பார்த்து நின்றிருந்தாள்.



Advertisement

பின்னால் அரவம் கேட்டு திரும்பினாள்.  தேவநாதன் நின்றிருந்தான்.  காலையில் கட்டியிருந்த அதே பட்டு வேஷ்டி சட்டையில்தான் இன்னும் இருந்தான்.  இவளும் இன்னும் அதே பட்டுப் புடவையில்தான் இருக்கிறாள்.  இருவருமே உடையை மாற்றியிருக்கவில்லை.

மனதால் நினைக்காமலும் இருக்க முடியவில்லை.  என்ன முயன்றும், காலையிலிருந்து பலமுறை இந்த எண்ணம் அவளுள் மின்னிக்கொண்டுதான் இருந்தது.

இதுவே இந்நேரம் எல்லோரும் மனமொத்து சந்தோஷமாக…, எங்க கல்யாணம் நடந்திருந்தா…,  இப்படியா… இருக்கும்?   எத்தனை சாங்கியங்கள்…, சடங்குகள்…, சம்பிரதாயங்கள்… என களைகட்டியிருக்கும்.

Advertisement

திருமணமான புதுப்பொண்ணுக்கான எந்த பொலிவும் அவளிடம் இல்லை.  தேவநாதனுக்கும் அப்படிதான்போல.  அவனும் சாதாரணமாகதான் இருந்தான்.

Advertisement

காலையில் கோவிலில் திருமணம் முடிந்ததும் நேராக இங்கே அழைத்து வந்திருந்தனர்.  இன்னும் அஞ்சனாவின் வீட்டிற்கு செல்லவில்லை.

“தூக்கம் வரலையா…. உனக்கு?”

இல்லை என தலையசைத்தவள்… திரும்பவும், திரும்பி நின்று, வெளியே வானத்தைப் பார்க்க ஆரம்பித்தாள்.

Advertisement

“ஓய்…. ஏசி ஓடிட்டிருக்கு… ஜன்னலை திறந்து வச்சிருக்கே….” என வந்து ஜன்னல் கதவை இழுத்து மூடினான்.

“ம்ப்ச்… புழுக்கமாயிருக்கு…” என்றவள் அங்கிருந்து நகர்ந்து வந்து கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.

“டிரஸ் சேஞ்ச் பண்ணலையா…?  அப்படியே உட்கார்ந்துட்ட…” என நின்றான் அவளைப் பார்த்து.

எழுந்து தனது ட்ராலியிலிருந்து மாற்றுப் புடவையை கையில் எடுத்தவள், அங்கிருந்த பாத்ரூமிற்குள் சென்று மாற்றிவிட்டு வந்தாள்.

இவளுக்காக காத்திருந்தது போல…., இவள் வெளியே வந்ததும்… கையில் துண்டுடன் பாத்ரூம் சென்றான் தேவநாதன்.  குளித்துவிட்டு துண்டோடு வெளியே வந்தவனுக்கு, அஞ்சனா இவனுக்கு முதுகுகாட்டி… கட்டிலில் ஒருபக்கமாக, ஒருக்களித்து படுத்திருப்பதை பார்த்து குறுநகை வந்தது. அமைதியாக ஷார்ட்ஸ், டீ ஷர்ட் அணிந்து கொண்டு வந்தவன், சத்தமில்லாமல் விளக்கை அணைத்துவிட்டு, படுத்துவிட்டான்.

மெல்ல அஞ்சனாவை நெருங்கி படுத்தவன்…, அவளது இடுப்பில் கைபோட்டு, அவளது முதுகு புறத்தை, தன் மார்போடு சேர்த்து இறுக்கிக்கொண்டான் முகம் முழுவதும் புன்னகையுடன்.  இதனை சற்றும் எதிர்பாராதவளுக்கு சங்கோஜமானது.

அவன் இப்படி சட்டென்று வந்து இழுத்து இறுக்கியதும், சொல்லொணா உணர்வுகள், கூச்சத்தில் சிலிர்த்து அடங்கியது அவளுள்.  மேலும் அவனின் உடல் தன் முதுகு புறத்தில் தொடர்ந்து உரசி கொண்டிருந்ததில், பெண்ணுக்குள் எதிர்பாராத இன்ப ஆர்ப்பரிப்பு.  இன்னும் அவன் யூஸ் செய்த சோப் ஸ்மெல், அவள் நாசிக்குள் புகுந்து மூச்சு காற்றை  நிறைத்து இம்சை செய்து கொண்டிருந்தது அவளை.

இருந்தும் இன்னும் இதையெல்லாம் ஏற்க மனம் தயாராகவில்லைபோல பெண்ணுக்கு.  அவனது கையை தன்னிடமிருந்து பிரித்து எடுத்துவிட முயன்றாள்.

“கையை எடுங்க….”

“ஏன் எடுக்கனும்….?  நமக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு.  நீ என் பொண்டாட்டிதான.  இன்னிக்கு நமக்கு என்ன நாள்னு தெரியுமில்ல…..?” என்றான் அவள் காதில் இன்னும் நெருங்கி உரசலாக.

“ம்ப்ச்…  எனக்கு அன் ஈசியா… இருக்கு.  முதல்ல கைய எடுங்க.  ப்ளீஸ்…”

“ம்ம்…  புருஷன் கைபட்டா…, உனக்கு அன் ஈசியா இருக்கா….?  பர்ஸ்ட் டைம் அப்படிதான் இருக்கும்.  போக போக பழகிடும்….” என்றான் கிண்டலாக

அவள் நெளிந்துகொண்டே இருந்ததைப் பார்த்தவன், “ம்கூம் நீ இதுக்கெல்லாம் சரி வரமாட்டே…” என, அவளோடு இன்னும் நெருங்கி படுத்து, அவள் பின்னங்கழுத்தில் முகம் புதைத்தான்.  அவனது இந்த திடீர் ஸ்பரிசம் அவளை மேலும் மேலும் தடுமாற செய்து கொண்டிருந்தது.

சில நொடிகள் மௌனமாக முகத்தை அவளது கழுத்தில் அழுந்த புதைத்து வைத்திருந்தவனுக்கும், அவளின் மனது புரிந்ததுபோல.  மெல்ல அவளை விடுவித்து நகர்ந்து படுத்தான், அவளைப் பார்த்து கொண்டே.

“செத்துப் பொழைச்சு வந்தானே… ஒருத்தன்.., அவனை எப்படி இருக்க…., என்னன்னு கேட்டியா… நீ…?” என்றான் ஆதங்கமாக.

இப்பொழுது அஞ்சனா அவனை நன்றாக திரும்பி பார்த்து படுத்தாள்.

“என்ன பார்க்குறே….?  நான் எப்படியிருக்கேன்னு நீ விசாரிச்சியா… முதல்ல…?  அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல, என்னை அப்படியே அம்போன்னு விட்டுட்டு போனதுதான்.  அதுக்கப்புறம் நான் என்ன ஆனேன்னு… உனக்கு அக்கறை இல்லல்ல.  நான்  இருக்கனா… செத்தனான்னு… நீ திரும்பிகூட பார்க்கல…”

“அட்லீஸ்ட் போனாவது… பண்ணி விசாரிப்பேன்னு… நினைச்சேன்.  எத்தனை நாள் போன் பண்ண மாட்டியான்னு…, நான் எதிர்பார்த்திருந்தேன்… தெரியுமா…?  என் மேல உனக்கு பாசமேயில்ல…?” என்றான் வருத்தமாக முகத்தை வைத்துக்கொண்டு.

“அதான்.. எங்க அப்பாகிட்ட சொன்னீங்களே.  எனக்கு வேற மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கதான்…, என்னை விட்டு விலகி இருந்தேன்னு.  அப்புறம் நான் மட்டும் எப்படி உங்களை வந்து பார்க்கனும்னு…, விசாரிக்கனும்னு, எதிர்பார்த்தீங்க….?” என்றாள் ரோஷமாக.

“ஹேய்… அதுவேற…. அது உன்மேல இருந்த அக்கறையில நினைச்சது.  என்ன அப்படி பார்க்கற….?  நிஜம்தான்…..  அப்ப இருந்த என்னோட மைன்ட்செட்  அது.  இருந்தாலும் என்னை தேடி…. நீ வருவேன்னு எதிர்பார்த்தேன்….”

“ஏன்…?  உங்க அம்மா அங்க வச்சு பேசுனது எல்லாம் போதாதா…?  இன்னும் ஏதாவது பேச்சு வாங்கனும்னு எதிர்பார்த்தீங்களா….?”

அவளது புருவத்தை ஆட்காட்டி விரலால்…., வருடிக்கொண்டே…. “அம்மா பேசுனது தப்புதான்.  எனக்கே அன்னைக்கு அவ்வளவு கஷ்டமாயிருந்தது.  அதுக்கு நான் ஸாரி கேட்டுக்கறேன்மா.  அன்னைக்கு அவங்க பேசுனது எல்லாம் அதிகம்தான்.  பட், அவங்கள தடுக்காததுக்கான ரீசனும் உங்க அப்பாகிட்ட சொன்னதுதான்.  அதுல எந்த பொய்யும் இல்ல.   ஸாரி மா…” என்றான்

“ரொம்ப சீக்கிரம் ஸாரி கேட்டுட்டீங்க…  இதுல உங்கள வந்து விசாரிக்கனும்னு, எதிர்பார்ப்பு வேற….”

“போடி… நீ நேரடியா என்னை விசாரிக்கலன்னா என்ன….?  அதான் நான் எப்படியிருக்கேன்னு கேட்டு சொல்ல, ஆள் செட் பண்ணிருந்தியே…..” என்றான் ஒற்றைக் கண்ணை சிமிட்டி சிரித்துக்கொண்டே.

“ஆங்…”

“ஹா… ஹா….. என்ன முழிக்கறே…..?  இவனுக்கு எப்படி தெரியும்னா…..? அதைகூட புரிஞ்சுக்க முடியாதளவு தத்தியா நான்…. ம்ம்….” என அவளது மூக்கை பிடித்து ஆட்டினான் செல்லமாக.

“முதல்ல இரண்டு மூனு தடவை எனக்கும் பெரிசா தோணலை.  அதுக்கப்புறம்தான் லைட்டா… டவுட் வந்துச்சு.  இந்த பொண்ணு, என்ன இத்தனை அக்கறையா…., வாரத்துக்கு ஒரு கால் பண்ணிட்டிருக்காளேன்னு?  யோசிச்சு பார்த்தேன்.  அப்புறம்தான் தோணுச்சு…  ஓஹ் இது நம்ம ஆள் வேலையான்னு…” என்றான் விரிந்த சிரிப்புடன்

கடவுளே… கண்டுபிடிச்சிட்டானா….? என கண்களை அகல விரித்து பார்த்தாள் அவனையே.

“என்னடி முழுங்கற மாதிரி பார்க்கிற மாமன.  அச்சோ… பாவம் பிள்ளைய கஷ்டப்படுத்த வேணாமேன்னு, மாமன் செம கன்ட்ரோல்ல இருக்கேன்.  இந்த மாதிரி என்னைப் பார்த்து முழிச்சனா, மாமன் மெல்ட் ஆயிடுவேன்.  பரவாயில்லையா…” என்றான் அவளது உதட்டை ஆட்காட்டி விரலால் வருடிக்கொண்டே.

“கைய எடுங்க முதல்ல.  பெரிய கண்டுபிடிப்பு.  இதுல இவர வந்து பார்க்கலன்னு வேற கோவம் வருது…” என அவனது வார்த்தைகளில் தனக்குள் எழுந்த நமுட்டுச் சிரிப்பை அவனுக்கு காட்டாமல் சமாளித்தாள்.

“நீ வரலன்னா என்ன….?  போடி.  அதான் நானே உன்னை தேடி வந்துட்டேனில்ல.”

“அப்பா பர்ஸ்ட் உன்னைப்பத்தி விவரம் சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டப்ப… சாதாரணமாதான் சரின்னு சொன்னேன்”.

“உன்னை கல்யாண மண்டபத்துல மீட் பண்ணி பேசனப்பகூட, பெரியவங்க ஆசைக்காக… என் குடும்பமும், உன் குடும்பமும் சேரனும்ற நல்லெண்ணத்துலதான் உன்கிட்ட பேசுனது எல்லாம்”.

“உனக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்துட்டாங்கன்னு… கேள்விப்பட்டதும், வருத்தம் இருந்ததுதான்.  கோவமும் வந்தது”.

“ஆனால்…. நீ அன்னைக்கு, ஹாஸ்பிட்டல்ல இருந்து அழுதுகிட்டே போனப் பார்த்தியா…?  அப்பதான் எனக்குள்ள என்னமோ பண்ண ஆரம்பிச்சுது.  ஏதோ என் உடம்புல இருந்த ஒரு பார்ட்ட… யாரோ பிச்சு எடுத்துட்டு போறமாதிரி ஒரு பீலிங்.”

“என்னால வெளிய சொல்லிக்க முடியாதளவு சுருக்… சுருக்குன்னு… ஊசியால குத்தற மாதிரி, நெஞ்சுக்குள்ள ஒரு வலி.  ஏதோ மனசெல்லாம் யாரோ அழுத்தற மாதிரி ஒரு பாரம்.  அன்னைக்கு முழுக்க துடிச்சுபோயிட்டேன்… உன்னை நினைச்சே”.

“சொல்லப்போனா… அன்னைக்குதான் என் மனசை நானே புரிஞ்சுகிட்டேன்.  நீ எனக்குள்ள எவ்வளவு ஆழமாயிருக்கன்னு தெரிய வச்சே.  அதுவரைக்கும் பெரிசா எதையும் நான் பீல் பண்ணி, அலட்டிகிட்டது இல்ல.  ஆனால் அதுக்கப்புறம் கடந்த ஒவ்வொரு நாளும், எனக்கு மனசுக்குள்ளயே… ரணவேதனைதான், நீ எனக்கு கிடைக்கனுமேன்னு என்று அவள் கையைப் பிடித்து நெஞ்சுக்குள் அழுத்திக்கொண்டான் இறுக்கமாக”.

“பெரிசா வீராப்பா… உனக்கு நல்ல வாழ்க்கை அமையனும்ற எண்ணத்துல, நான் அம்மா பேசும்போது சும்மாயிருந்தாலும், மனசுக்குள்ளயே… எங்க உன்னை வேற யாருக்காவது, உங்கப்பா கட்டி வச்சிடுவாரோன்னு, நான் தவிச்ச தவிப்பிருக்கே…  ப்பா…” என நெஞ்சை நீவிவிட்டு, “ம்ஹ்….” என பெரு மூச்சை இழுத்து விட்டவன், “அந்த கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்.  என்னோட மனசும், நான் பட்ட வேதனையும்…” என கண்களை மூடிக்கொண்டான்.  இன்னும் அந்த வேதனையின் சுவடு, அவன் முகத்தில் தெரிந்ததுபோல அஞ்சனாவுக்கு.  அதன் அடையாளமாக ஆண்மகனின் கண்களில் இருந்தும் துளி நீர் வெளியே வந்திருந்தது.

அவளுக்கும் வேதனைதான், மன்னவனின் இந்த பரிணாமம் பார்த்து.  இதுவரை தனக்கு மட்டும்தான் அவன் மேல் விருப்பமிருக்கிறது என உருகிக் கரைந்தவளுக்கு, அவனது இந்த வார்த்தைகள் எல்லாம் இன்ப சாரலாக இதயத்தை நனைத்தது உண்மைதான்.  கூடவே வருத்தமும் இருந்தது.  அவனது துயரத்தில் தான் பங்குகொள்ள முடியவில்லையே என்று.  எப்போதும் போல இப்போதும் அவளது நெஞ்சுக்குள் இதயத்தை அழுத்தும் துக்கம்தான்… வெளியில் பகிரமுடியாமல்.

அவனுக்கு மட்டுமா…?  அவளும் தானே அந்த நாட்களில் சோதனைக்குள்ளானது.  வெந்து மடிந்தது எல்லாம்.  இருவருக்கும் அது ஒரு கடினமான நேரம்தான்.  என்ன சொல்ல முடியும்…?  சூழ்நிலைகளையும், காலங்களையும் கடந்து வந்துதானே ஆகவேண்டும்.  அங்கேயே தேங்க முடியாதே.

உலகில் யாருக்குதான் இல்லை வேதனையும் சோதனையும்.  அப்படி பார்த்தால் யாரும் இந்த உலகில் வாழ்வதற்கில்லை.  பெரியவர்களின் வாக்குப்படி, எத்தனை வேதனைகள் வந்தாலும், எத்தனை சோதனைகள் வந்தாலும், அதையெல்லாம் தாண்டி வந்தால்தானே சாதனைகளாகும் இந்த சரித்திரத்தில்.  அப்படிதான் இருந்ததுபோல தேவநாதனுக்கும்.  இந்த இடைப்பட்ட காலத்தில், அவன் அனுபவித்த துயரங்கள், அவனை அத்துணை பதம் பார்த்திருந்தது.  ஏக்கங்களும், ஏமாற்றங்களும், அவனை கொன்று குவித்திருந்தன.

இருந்தும் தனக்கு தானே, தன்னை உரமேற்றி, வலுவேற்றி, வைராக்கியதுடன், திரும்ப பழைய நிலைக்கு, தன்னை மீட்டு கொண்டு வந்ததில் அவன் சித்ரவதைப் பட்டிருந்தான்… உடலிலும், மனதிலும்.

அவனின் வலிகளை சொல்லில் வடிப்பதைவிட அதை அனுபவித்தால் மட்டுமே புரியுமென்பது அவனது கூற்று.

உண்மைதானே அவரவர் நியாயம் அவரவருக்கு.  அவன் கடந்து வந்த பாதை அவனை புடம் போட்டிருந்ததுபோல.

சொல்லில் வடித்திட முடியுமா…?  இல்லை உணர்வுகளில் புரிய வைக்க இயுலுமா…? எதிராளியின்  கட்ட நட்டங்களை.  அந்த பாதையை கடந்து வந்தால் மட்டுமே, அதன் வேதனைகளின் தாக்கம் அறிய வரும்.  இங்கும் அப்படிதான் இருந்தது மணாளனின் மனது உலைகளனாக.

இன்று தன்னை தன் மனைவியடம் ஒப்புகொடுக்க உருகிக்கொண்டிருந்தான் போல  மொத்தமாக.  இருவருமே பேச்சற்று கடந்துவந்த பாதைகளை உருபோட்டு தவித்து நின்றனர் உள்ளுக்குள்ளேயே.  பெண்ணின் கையைப் பிடித்தவன் இன்னும் விட்டபாடில்லை.  என்னவோ அவளை மொத்தமாக தன் நெஞ்சுக்குள் இறுக்கி, புகுத்தி கெட்டியாக பிடிக்க நினைத்தான்போல.  அதுமுடியாமல் அந்த கைகளை மட்டும் இறுக்கியிருந்தான், அழுத்தமாக விட்டுவிடாதே என்று.

அஞ்சனா தனது இன்னொரு கையினால் அவனது கண்ணீரை துடைத்துவிட்டாள்.  அவளது தொடுதலில் கண்களைத் திறந்து பார்த்தவன், அந்த கையையும் பிடித்து, தனது நெஞ்சின் மேல் வைத்து அழுத்திப் பிடித்துகொண்டான் அணைவாக.

“போரடிக்கறனா….?” என்றான் மல்லாந்துப் படுத்துக்கொண்டிருந்தவன் அவளைப் பார்த்து.

இல்லை என தலையசைத்தாள் அவனையே  பார்த்துகொண்டு ஒருகளித்துப் படுத்துக்கொண்டிருந்தவள்.

“இன்னைக்கு என் மனச மொத்தமா உன்கிட்ட ஷேர் பண்ணிடனும்னு துடிச்சிட்டிருந்தேன் மனசுக்குள்ளயே.  அதான்….  நீ வேணா… தூக்கம் வந்தா… தூங்கு…”

“இல்லல்ல.  நீங்க சொல்லுங்க….”

“ம்ம்…” என அவளது கைகளை விட்டு அவளைப் பார்த்தபடியே ஒருகளித்து படுத்துகொண்டவன், அவளது கன்னத்தை கைகளில் ஏந்தி, “அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல நடந்த இன்சிடென்டுக்கு அப்புறம்தான், என் மனசையே எனக்கு புரியவச்ச நீ….  எப்ப நான் கண்ண மூடுனாலும், நீ ஹாஸ்பிட்டல கண்ணெல்லாம் தவிப்போட…, என்னைப் பார்த்துட்டே, அழுதுட்டு போன பார்த்தியா…?  அது மட்டும்தான் திரும்ப திரும்ப… வந்து என் ஞாபகத்துல நிக்கும்”.

“நீ அந்த அளவு எனக்குள்ள ஸ்ட்ராங்கா இருக்கேன்றதையே அப்பதான் நானே புரிஞ்சுகிட்டேன்.  அது வரைக்குமே எதையும் சீரியசா எடுக்காம இருந்த எனக்கு, அதுக்கப்புறம்  வாழ்க்கையே உன்னை சுத்திதான்ற மாதிரி ஆயிடுச்சு.  நீயில்லாம எதுவுமேயில்லன்ற மாதிரி பையத்தியம் பிடிக்க வச்சிட்டடி என்னை”.

“சாதாரணமா அப்பாவோட ஆசைக்காகதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சேன்”.

“ஆனால்… எப்போ எப்படின்னு தெரியல…  எனக்கே தெரியாம என் மனசுல ஆழமா உட்கார்ந்துட்ட நீ”.

“என் வாழ்க்கையிலே நான் ரொம்ப நொந்துபோன கஷ்டமான காலகட்டம் அது.  கடவுள்கிட்ட எத்தனைநாள் சண்டை போட்டு அழுதிருக்கேன் தெரியுமா…?  உன்னை எனக்கு கண்ணுல காட்டிட்டு இப்படி… பறிச்சுகிட்டாறேன்னு”.

“இதுவே கல்யாணத்துக்கு அப்புறம், எனக்கு இப்படி நடந்திருந்தா… நீ என் பக்கத்துல இருந்து பார்த்துகிட்டிருப்பே…. இல்லன்னு, ஏங்கியிருக்கேன்.   நான்…. மனசுக்குள்ளயே.  சுயநலந்தான்.  ஆனால் அப்படி நினைக்காம என்னால இருக்க முடியல”.

“உடம்பு முழுக்க வலில… உயிர் போகும்.  அதைவிட மனசுல நீ உட்கார்ந்து, என்னை ஆட்டிப்படைப்பே.  ரண வேதனைடி… அதெல்லாம்.  உன் குரல கேட்க மாட்டேன்னா…?  உன் முகத்தை ஒரு தடவை பார்க்க மாட்டேனான்னு… ஏங்கி தவிச்சு போயிருக்கேன் தெரியுமா…?  எத்தனை இராத்திரி தூங்காம, இதோ இந்த கட்டில்லதான், முழுச்சு கிடந்திருக்கேன் தெரியுமா…?  இதையே நினைச்சு… நினைச்சு… சில நேரம் என் நெஞ்சே வெடிச்சிடும்போல இருக்கும்.  என்னடா வாழ்க்கையிதுன்னு வெறுப்பாயிடும் எனக்கு”.

“அட்லீஸ்ட், நீ போன்லயாவது கூட்டு பேசமாட்டியான்னு, உன் போனுக்காக மனசு ஏங்கி தவிக்கும்.  ஆனால், அதுலயும் ஒரு சின்ன ஆறுதல் உன் பிரெண்ட் போன் பண்ணி என்னை விசாரிச்சதுதான்”.

“நீ சொல்லிதான், அந்த பொண்ணு போன் பண்றான்னு… புரிஞ்சதுக்கப்புறம்தான், ஒரு சின்ன ஆசுவாசம் மனசுல.  உங்கப்பா வேற மாப்பிள்ளைய கட்டிக்க சொல்லி வற்புறுத்தியும், நீ யாரையும் கல்யாணம் பண்ணிக்காம இருந்ததவச்சே உன் மனுசுலயும் நானிருக்கேன்னு தெரிஞ்சுகிட்டேன்”.

“இப்படியே மத்தவங்களுக்காக நம்ம வாழ்க்கைய அழிச்சுக்க முடியாதுன்னுதான், அப்பாவ அழைச்சிட்டு வந்தேன்… உன்னைப் பார்க்கலாம்னு.  உன்னைப் பார்த்து உன் சம்மதம் தெரிஞ்சதுக்கப்புறம், உங்கப்பாகிட்ட போய் பேசலாம்னு முடிவுபண்ணிதான் அங்க வந்தது நானும், அப்பாவும்”.

“ஆனால், உங்க அப்பாவும், அம்மாவும் அங்க இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கல.  அதுவும் நல்லதாவே போச்சு.  அதனாலதான் இதோ என் பொண்டாட்டி என் பக்கத்துல படுத்திருக்கா…. என அவளை இறுக தழுவிக்கொண்டான்”.

சரியாக அந்த நேரம் சுவற்றின் மேல் இருந்த பல்லி ஒன்று  இனியாவது உங்க வாழ்க்கையில வசந்தங்கள் திரும்பட்டும் என சத்தமிட்டு நகர்ந்து போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!