Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 23

அம்மையப்பன் 23

 

திருச்செல்வம் ஒரு நிமிடம் அமைதியாக இருத்தவர் மெல்ல பவளத்தின் பாதத்தை தொட்டார்..

 



Advertisement

அதில் சட்டென எழுந்த பவளம் அவர் கரத்தை விலக்கிவிட்டு தன் பாதத்தை சுருக்கிக் கொண்டார்..

 

அழுதழுது அவர் முகமே வீங்கி விட்டது.. கண் இமைகளும் சற்று தடித்து சிவந்திருந்தன.. அதனை வலியுடன் பார்த்த திருச்செல்வம் மெல்ல அவர் கன்னத்தை வருட.. பவளம் முகத்தை திருப்பினார்..

Advertisement

 

Advertisement

அவர் அங்கிருந்து செல்ல முற்பட.. பவளம் பல வருஷமா என் மனசுக்குள்ள நிறைய விசயத்தை போட்டு புழுங்கிக் கிட்டு கிடக்கேன்.. அதையெல்லாம் உன்கிட்ட சொல்லனும்.. கொஞ்சம் எனக்காக கேட்குறீயா.. என கெஞ்சினார் திருச்செல்வம்..

 

பவளம் பதிலேதும் பேசவில்லை.. அமைதியாக அமர்ந்திருக்க.. திருச்செல்வம் சேயாய் அவர் மடி சாய்ந்தார்.. 

Advertisement

 

பல வருடங்களாக தன்னுள் உருத்தி கொண்டிருந்தவைகளை தன் இணையின் மடியில் படுத்து சொல்ல வேண்டும் என்பது, அவரின் ஒவ்வொரு நாளின் கனவு.. அது இன்று தான் நிறைவேற போகிறது..

 

திருச்செல்வத்தின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்து பவளத்தின் மடியை நனைத்து கொண்டிருந்தது..

 

என்னதான் துரோகம் செய்த கணவன் என்றாலும்.. அவரின் அழுகையில் பவளத்தின் விழிகளிலும் கண்ணீர் சொரிய, அவர் விரல்களோ கணவனின் சிகையை வருடி கொண்டிருந்தது.. 

 

பல வருடங்களுக்கு முன்பு நடந்தவைகளை சொல்ல ஆரம்பித்தார் திருச்செல்வம்.. இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் உண்டு.. அவர் தன்னுடைய பக்கத்தை சொன்னார்..

 

இருபது வயது திருச்செல்வமும் இருப்பதியிரண்டு வயது திருநாவுக்கரசுவும் தங்களின் வயலில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்..

 

அண்ணே என்னாச்சுங்க.. கொஞ்ச நாளாவே உங்க மொகம் ரொம்ப வாட்டமா இருக்கு.. என திருச்செல்வம் அண்ணனிடம் கேட்க.. அவர் பதிலேதும் சொல்லாமல் தொடுவானத்தை வெறித்து கொண்டிருந்தார்..

 

அண்ணே என்னாச்சு மதனி கூட ஏதும் பிரச்சனையா..

 

ப்ச் விடுறா அவகிடக்கா கோட்டிக்காரி.. கண்ணாலம் ஆகி ரெண்டு வருசம் தானடா ஆகுது.. அதுக்குள்ள புள்ள இல்லைன்னு என்னென்னமோ உலரிக்கிட்டு கிடக்கா.. பாவம் பரிகாரம்ன்னு சொல்லி என் உயிர வாங்குறா.. என புலம்பினார்.. 

 

அண்ணே நம்ம ஆம்பளைங்க.. புள்ள இல்லாத விசயத்துல நம்மள ஏதும் சொல்ல மாட்டாங்க.. பொண்ணுங்களை தான் ஆயிரம் குறை சொல்லுவாங்க.. மதனி பெருசா என்ன பரிகாரம் சொல்ல போறாங்க.. கோவிலுக்கு போறது தானம் பண்றது இப்படித்தானே, விடு.. நம்மகிட்ட இல்லாத காசா பணமா.. என திருச்செல்வம் அமிர்தத்தின் நிலையிலிருந்தும் யோசித்து பேசினார்..

 

ப்ச் அதெல்லாம் செஞ்சாத்தான் பரவாயில்லயே, இவ அதுக்கும் மேல போறாடா.. என்னால தாங்க முடியல.. அத சொன்னா உன்னோட நிம்மதியும் போயிடும் விடு என திருநாவுக்கரசு சொல்லி கொண்டிருக்கும் போதே..

 

ஐயோ யாராச்சும் வாங்க.. வந்து காப்பாத்துங்க.. ஜமீன் வீட்டு அம்மா கிணத்துக்குள்ள விழுந்துட்டாங்க.. என ஒரு சப்தம் கேட்க.. அண்ணன் தம்பிகள் இருவரும் திடுகிட்டனர்..

 

அய்யா உங்க சம்சாரம் தான் கிணத்துக்குள்ள விழுந்துட்டாக அய்யா.. என ஒருவர் திருநாவுக்கரசுவிடம் சொல்லவும் இருவரும் பதறியடித்து ஓடினர்..

 

அதற்குள் அமர்தவல்லியை அங்குள்ளோர் காப்பாற்றி இருக்க.. கலையரசி அவளின் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்..

 

உள்ளம் படபடக்க திருநாவுக்கரசு தன் மனைவியை நெருங்கி.. அமிர்தம்.. அமிர்தம் என்னாச்சு புள்ள.. என்னாச்சு.. என அவள் கன்னத்தை தட்டவும், மெல்ல விழிகளை திறந்த அமர்தவல்லி, தன் கணவனை அழுகையாக பார்த்தாள்..

 

கலையரசி கூடியிருந்த வேலையாட்களை அங்கிருந்து போக சொல்லிவிட்டாள்.. அமிர்தத்திற்கும் கலையரசிக்கும் ஒரு வயது தான் வித்தியாசம்.. கலையரசியை அவளின் அத்தை மகனிற்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.. ஒருவருடம் ஆகிறது.. இன்று பிறந்த வீட்டினரை பார்ப்பதற்காக வந்திருக்கிறாள்..

 

கலை என்னாச்சு எப்படி மதனி விழுந்தாங்க.. கால் ஏதும் பிடரி விட்ருச்சா.. என கேட்டார்.. திருச்செல்வம்.. 

 

இல்ல, வேணுக்கும்னே விழுந்திருக்காங்க, சாகுறதுக்காக கிணத்துக்குள்ள விழுந்து இருக்காங்க என அழுது கொண்டே கலையரசி செல்ல, ஆண்கள் இருவரும் அதிர்ந்து விட்டனர் 

 

அமிர்தம் ஏன் இப்படி பண்ற.. நீ இல்லன்னா நான்.. என மேற்கொண்டு சொல்ல முடியாது திருநாவுக்கரசு விக்கித்து போனார்..

 

உங்களால தான், உங்களால தான் நான் சாகப் போனேன்.. நான் உங்ககிட்ட எத்தன நாளா கேட்டுட்டு இருக்கேன், அந்த பரிகாரம் பண்ணா குழந்தை பிறக்கும்ன்னு சொல்லியிருக்காங்க.. ஆனா நீங்க வேண்டாம்ன்னு சொல்றிங்க.. அப்பொறம் எதுக்கு நான் உயிரோட இருக்கனும் என அமிர்தம் அழுது கொண்டு கேட்க.. திருநாவுக்கரசு அயர்ந்து போனார்..

 

அண்ணே அப்படியென்ன பரிகாரம்.. என திருச்செல்வம் கேட்க, திருநாவுக்கரசு வருத்தமாக தன் தம்பியின் முகத்தை பார்த்தவர், எதுவும் சொல்லாது அமைதியாக நிற்க..

 

நான் சொல்றேன் ண்ணா.. என்றார் கலையரசி..

 

கலை என திருநாவுக்கரசு அதட்டலாக அழைக்க.. கலையரசி அவரின் முகத்தை பார்க்கவில்லை..

 

அண்ணே போன மாசம் எங்க ஊருக்கு ஒரு மலையாள ஜோசியக்கார் வந்திருந்தாங்க.. அவருகிட்ட நானும் மதனியும் எங்களுக்கு எப்போ குழந்தை பொறக்கும்ன்னு கேட்க போயிருந்தோம்..

 

அப்போ.. அவருதான் 

 

உங்க வம்சத்துக்கு சாபம் இருக்கு.. இன்னும் சில வருஷம் அது ஆட்டி படைக்க போகுது.. அதனாலேயே உங்களுக்கும் புத்திர பாக்கியம் கிட்ட வாய்ப்பு கம்மி.. என அவர் சொல்லவும் இருவரும் அதிர்ந்து போயினர்..

 

அதுக்கு ஏதாச்சும் பரிகாரம் இருக்கா.. என கலையரசி கேட்டார்..

 

சரிம்மா பாக்குறேன்.. உங்க கணவரோட ஜாதகம் கொடுங்க.. என அவர் கேட்கவும், அமிர்தவல்லி திருநாவுக்கரசுவின் ஜாதகத்தை கொடுத்தார்.. அதனை வாங்கி பார்த்தவர்.. முகத்தில் திருப்தியில்லை..

 

இவரோட ஜாதகத்திலும் புத்திர பாக்கிய கட்டம் வலுவா இல்லை.. உங்க கணவரோட கூடபிறந்த ஆண் பிள்ளை யாராவது இருக்காங்களா.. என கேட்கவும்..

 

ஹ்ம்ம் அவருக்கு ஒரு தம்பி இருக்காங்க.. ஆனா அவங்களோட ஜாதகம் இப்போ கையில இல்ல..

 

அது ஒன்னும் பிரச்சனையில்ல.. பிறந்த நேரம் ராசி நட்சத்திரம் மட்டும் சொல்லுங்க நான் கணிச்சுக்குறேன்.. என அவர் சொல்லவும், கலையரசி கூறினாள்..

 

திருச்செல்வத்தின் ஜாதகத்தை கணித்தவர்..

 

இவரால தான் உங்க வம்சத்துக்கு வாரிசு வரணும்.. அப்போதான் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.. என அவர் சொல்லவும் இருவரின் முகமும் மலர்ந்தது..

 

இவருக்கும் என் தங்கச்சிக்கும் தான் கல்யாணம் பேசியிருக்காங்க.. இன்னும் ஒரு வருஷம் கழிச்சு கண்ணாலம் பண்ணலாம்னு இருக்காங்க என அமிர்தவல்லி சொல்ல.. ஜோசியரின் முகம் யோசனையாகியது..

 

அந்த பொண்ணோட ராசி நட்சத்திரம் சொல்லுங்க..

 

அமிர்தவல்லி சொல்லிவிட்டு.. என்னாச்சு ஜோசியரே ஏதாச்சும் பிரச்சனையா..  என பரிதவிப்போடு கேட்டார்.. 

 

ஹ்ம்ம் ஆமாம்மா இவருடைய ஜாதகத்துக்கு, இந்த ராசி இந்த நட்சத்திரம் என ஒரு சில ஒரு ராசி நட்சத்திரம் கூறி, அந்த பெண்ணோட கல்யாணம் பண்ணா, ஒரு பெண் குழந்தை பிறக்கும்.. அந்த குழந்தைக்கு அஞ்சு இல்ல ஆறு வயசு ஆனதுக்கு அப்புறம் தான் உங்க வீட்ல குழந்தை ஜனிக்க வாய்ப்பு இருக்கு..

 

ஆனா அந்தப் பெண்ணால உங்களுக்கு பின்னாடி சில கஷ்டங்கள் வர வாய்ப்பு இருக்கு.. பிறகு கஷ்டங்கள் முடிஞ்சு, பல மகிழ்ச்சியான தீர்வுகளும் கிடைக்கும்.. 

 

ஜோசியரே இதுக்கு வேற வழியே இல்லையா.. இப்படி பண்ணலைன்னாலும் கொஞ்சம் வருஷம் கழிச்சு கண்டிப்பா எங்களுக்கு குழந்தை பிறக்குமா.. என பரிதவிப்புடன் கேட்டார் அமிர்தம்.. 

 

இல்லம்மா உங்களுடைய வம்சம் தழைக்க இது தான் ஒரே வழி.. அப்படியில்லன்னா உங்களுக்கு தனியா குழந்தைகள் பிறக்க வாய்ப்பு ரொம்ப கம்மி.. அந்த பெண் குழந்தை பிறந்தால் தான் உங்களுக்கு சில வருஷங்களுக்கு அப்புறமாவது குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கு.. என அவர் சொல்ல.. அமிர்தம் கலையரசி இருவரும் குழப்பமும் யோசனையுமாக அங்கிருந்து சென்றனர்..

 

இதுதான் ண்ணே நடந்துச்சு.. இப்போ நீ சொல்லு ண்ணே என்ன பண்ணலாம் என கலையரசி திருச்செல்வத்தை பார்த்தவாறு கேட்க.. திருச்செல்வம் மின்சாரம் தாக்கியது போல் நின்றார்..

 

அண்ணே சொல்லு என கலையரசி மீண்டும் கேட்க.. திருச்செல்வம் செய்வதறியாது நின்றார்.. அவர் தமையனை பார்க்க.. திருநாவுக்கரசு தலை குனிந்தார்..

 

அவரால் தம்பியின் சார்பாக பேசமுடியவில்லை.. மனைவி தற்கொலை வரை சென்றது அவரை மிகவும் பயமுறுத்தி விட்டது.. 

 

எனக்கு இதுல விருப்பம் இல்ல கலை.. மொதல்ல நம்ம வூட்டுல உள்ளவங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்லலாம்.. அவங்க ஏதாவது சொல்வாங்க.. என்றார் திருச்செல்வம்.. 

 

என்ன சொல்லுவாங்க, நாங்க நினைக்கிறது தான் சொல்வாங்க தம்பி.. ஆனா நம்ம குடும்பத்துல நீங்க கல்யாணம் பண்ணிக்கிற அந்த பொண்ணு மட்டும்தான் உங்க மனைவின்னு சொல்லிருவாங்க.. என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க முடியாது என அமிர்தவல்லி அவனை பார்த்தவாறு சொல்ல, திருச்செல்வம் அவரை திகைத்துப் பார்த்தார்.. 

 

மதினி சொல்றது உண்மைதான் எப்படியும் நம்ம வம்சத்துக்கு குழந்தை வேணும் அதை உன்னால தான் முதல்ல கொடுக்க முடியும்.. அப்படின்னா இன்னொரு பொண்ணைத்தான் உனக்கு கண்ணாலம் பண்ணி வைப்பாங்க.. அப்போ பவளத்தோட நிலைமை என்ன.. அதுக்கப்புறம் அவ உயிரோட இருப்பான்னா நினைக்குற.. என கலையரசி கேட்க.. திருச்செல்வத்தால் பதில் சொல்ல முடியவில்லை..

 

அதுனால அவங்களுக்கு தெரியாம நம்மலே இதை முடித்துவிடலாம்.. என கலை சொல்ல.. திருச்செல்வத்தால் அதனை ஏற்க முடியவில்லை..

 

நான் கொஞ்சம் யோசிக்கணும்.. என அவர் சொல்லிவிட்டு செல்ல.. அமிர்தமும் கலையரசியும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்..

 

அமிர்தம் வீட்டில் இருக்கும் பொழுது திருச்செல்வத்தை கவனித்துக் கொண்டே இருந்தார்.. பவளத்திடம் ஏதேனும் சொல்லி விடுவாரோ என பயந்து, இருவரையும் தனியாக சந்திக்க விடவில்லை.. 

 

ஒருவாரம் ஓடிவிட்டது.. திருச்செல்வம் இன்னும் முடிவு சொல்லாமல் இருக்க.. அன்று இரவு அனைவரும் கூடத்தில் இருக்கும் பொழுது அமிர்தவல்லியின் புடவையில் தீப்பற்றியது..

 

ஆத்தா அய்யா எல்லாரும் வாங்க.. அம்மா புடவையில தீ பிடிச்சிருச்சு.. என வேலையாள் கத்த, அனைவரும் பதறியடித்து சமையலறைக்குள் நுழைந்தனர்..

 

என்னாச்சுடி உனக்கு, ஒருவாரம் முன்ன கிணத்துல விழுந்த.. இப்போ புடவையை பத்த வச்சுருக்க.. கவனமா இருக்க மாட்டியா என கடிந்து கொண்டார் மரகதம். 

 

யாருக்கும் அது தற்கொலை முயற்சி என சொல்லவில்லை விபத்து என்றே சொல்லியிருந்தார்கள்..

 

அனைவரும் அமிர்தவல்லியை நலம் விசாரித்துக் கொண்டிருக்க, அமிர்தவல்லியோ திருச்செல்வத்தை தான் குறிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்..

 

அதிலிருந்தே இது மற்றொரு முயற்சி என திருச்செல்வத்திற்கு புரிய.. ஆயாசமாய் தன் அண்ணனை பார்க்க.. அவர் அவனைத்தான் கெஞ்சுதலாக பார்த்து கொண்டிருந்தார்..

 

திருச்செல்வத்தை சுற்றி தளைகள் பின்னப்பட்டன.. அதிலிருந்து அவரால் வெளிவர முடியவில்லை.. கோவையின் மற்றொரு கோடியில் உள்ள கிராமத்தில், அவருக்கான ராசி நட்சத்திரம் உடைய மணிமேகலை கண்டறியப்பட்டார்..

 

அவருக்கு தாய் தந்தை இல்லை.. சொந்தம் என ஒரு அத்தையும் அவர் மகனும், மட்டுமே உள்ளனர்..

 

அவர்களிடம் அணைத்து விஷயங்களையும் கூறி, ஓர் நாளில். திருநாவுக்கரசு, அமிர்தவல்லி, கலையரசி அப்பெண்ணின் அத்தை இவர்கள் மட்டும் இருக்க.. யாருக்கும் தெரியாத ஒரு காட்டுகோவிலில் உள்ள அம்மனின் முன்பு, 

 

மனமெல்லாம் பவளம் நிறைந்திருக்க.. அவளிடம் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டவாறு, பக்கத்தில் நின்ற பெண்ணின் முகம் கூட பார்க்காது, அவருக்கு தாலி கட்டினார்.. திருச்செல்வம்..

 

பவளத்தின் விழிகளில் பல அதிர்ச்சிகள்.. அமிர்தமும் கலையரசியும் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள்.. எப்படி அவர்களுக்கு இப்படியொரு தைரியம் வந்தது..

 

அதுவும் சிறுவயதிலிருந்து அவர்களுடன் வளர்ந்த தன் வாழ்க்கையிலேயே இப்படி விளையாடி விட்டார்களே என ஆத்திரமும் ஆதங்கமும் வந்தது..

 

அய்யோ இந்த மனுஷன் என்ன பாடுபட்டாரோ.. என்கிட்ட ஒருவார்த்தை சொல்லிருக்கலாமே.. என அவர் மனதினுள் புலம்ப திருச்செல்வம் மீண்டும் பேசினார்.. 

 

பவளம், நம்ம பொண்ணு அதி பொறக்குறதுக்கு முன்னாடியே இந்த அப்பனோட ஆசைய நிறைவேத்துனவன்னு சொன்னா நீ நம்புவியா..

 

இல்ல அதி பெத்த அந்த மகராசி முகத்த கூட, அவளை விரும்புனவன் கையில பிடிச்சு கொடுத்ததுக்கு அப்பொறம் தான் பாத்தேன்னு சொன்ன நீ நம்புவியா என கண்ணீரோடு கேட்க.. பவளம் அதிர்வாக தன் கணவனை பார்த்தார்..

 

கடவுளே இந்த மனுசன் என்ன சொல்லுறாரு என பவளம் திகைத்தார்.. 

 

திருமணம் முடிந்த பிறகு மணிமேகலையையும் அவரின் அத்தையையும் வேறொரு ஊருக்கு மாற்றிவிட்டனர்..

 

அந்த அத்தையின் மகன் மும்பையில் வேலை செய்து கொண்டிருந்தார்.. அவர்களுக்கு பெரிதாக எந்த சொத்து பத்தும் இல்லாததால் இடம் மாறுதல் அவர்களுக்கு எளிதானதாக இருந்தது..

 

திருமண இரவு.. திருச்செல்வம் வெறுமையாக இருட்டை வெறித்து கொண்டிருக்க.. மணிமேகலை உள்ளே நுழைந்தார்.. சுமார் ஒரு மணிநேரம் இவர் ஒரு பக்கமும் அவர் ஒரு பக்கமும் இருக்க..  சுவற்றில் இருந்த கடிகாரம் பனிரெண்டு முறை அடித்து ஓய்ந்தது.. அதில் சுயம் வந்த திருச்செல்வம்.. மெல்ல திரும்பினார்..

 

அப்பொழுதும் அவர் பெண்ணின் முகத்தை பார்க்கவில்லை, பாதத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.. அப்படியே நின்றவர் மெல்ல அவர் பாதத்தில் விழ, மணிமேகலை திடுக்கிட்டு பின்னால் சென்றாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!